Friday, August 18, 2006

கற்பகதரு!


ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை;அதன் முழுப் பயன் கருதி "கற்பகதரு" என்பர். இப் போர்ச்சூழலிலும் ,பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி இணையச் சமுதாயமாகிய எமது இளைய தலைமுறையில்; அறியாதிருக்கும் சிலர் அறிய ;எனக்குத் தெரிந்ததை;அறிந்ததை;அனுபவித்தை, பகிர்வதே இப்பதிவின் நோக்கம்."கடகத்தின்" பின் இளையோர் மாத்திரமன்றி; நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட; அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும்;பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும்; எம் போன்றவர்களுக்கான ஓர் மீட்டலாகவும் இதைப் பதிவிடுகிறேன்.இதில் நான் தவறவிட்டவற்றைத் தெரிந்தோர் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.இம்மரத்தில் பெறும் உணவு; ஓலையின் பயன்;மரப்பகுதியின் பயன் என பிரித்துத் தரவுள்ளேன். இவை பற்றிப் பலர் தெரிந்திருக்கலாம்.உணவாக குருத்து; கள்; பனங்கட்டி;நுங்கு;பழம்;பூரான்;கிழங்கு என்பவற்றை உண்பர்.
குருத்து:- பனை தறிக்கும் போதோ;ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர்; இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.
கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள்; முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பநி அல்லது கருப்பனியெனவும்;தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பிடாதிறக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும்;இதைக் குடித்தால் வெறிக்கும்;அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.
பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம்;பனங்கருப்பட்டி;எனவும் கூறுவர். கருப்பநியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்க்கொள்ளும் மருந்துகளுக்கு; தேன் கிடைக்காத போது; இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம்.ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும்;செய்பாங்கிலும் பிரபலம்.
நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு.
பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும்.பசியும் அடங்கும்.
பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமைமாச் சேர்த்து; கொதிக்குமெண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும்;சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேச பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்து தட்டுத்தட்டாக வெட்டி மடித்து ஓலை உமலில் கட்டி; அடுப்படிப் பறனில் புகை படக்கட்டி வருடக்கணக்கில் பாதுகாத்து உண்ணும் பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் மிக அருமையாக இருக்கும்; இது காலை;மாலை உணவு.
சீக்காய்:- இது பனங்காயின் செங்காய்ப்பதம்; இதன் தோலைச் சீவி,மஞ்சள்சதைப் பகுதியை அரிந்து தட்டுத்தட்டாக சப்பிச்சாறையுறிஞ்சி விட்டு, தும்பைத் துப்புவார்கள்; இனிமையான மாலை ஆசைத் தீனி.
பூரான்:- பனம் விதை; கிழங்கிக்குப் பாத்தி போடும்போது; சில விதைகள்;முளைத்து வேர் பாத்தியூடு நிலத்துக்கோட முடியாதநிலையில்; அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அதைப் பிளந்து உண்ண நல்ல சுவையாக இருக்கும்; கிழங்கான விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் "சிதவல்" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும்.
ஒடியல்:- "நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்" என உவமிக்கப்பட்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் பச்சை ஒடியல் என்பர். இதை இடித்தரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை,சேர்த்துப் பிட்டவிப்பர்; கறியுடனோ;சீனி,சக்கரையுடனோ சாப்பிடலாம்.அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவு. அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு;கூழ் இதில் சைவக்கூழ்;மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள்.ஒடியல்மாவுடன் மிளகாய்;உள்ளி;மிளகு;புளி;உப்பு கரைசல்; உழுந்து,பயறு,மரவள்ளிக்கிழங்கு;பூசணிக்காய்;ஈரப்பலாக்காய்;

பலாக்கொட்டை;அவரைக்காய்;முல்லை;முடுட்டை; முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவது; தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு.இது சைவ உணவு உண்பவர்களுக்குத் தயாரிப்பது ,இத்துடன் மீன்;நண்டு,கணவாய்,இறால்;திருக்கை;மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது;மச்சக்கூழ்; இது மச்சப் பிரியர்களுக்கு; முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான்;மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர்.இது தடிமலுக்கு நல்ல கைவைத்தியம்; இதன் சமையல் குறிப்பைப் பின்பு பார்ப்போம்.
அவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் ;இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர்.
கிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்த கிழங்குத்துண்டுகளுடன் பச்சைமிளகாய்,உள்ளி,மிளகு;உப்பு;வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்குவது.;சேமிபாட்டை இலகுவாக்கி;சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும்,சுவையானதும் கூட.
புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு துப்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு காயவைப்பது. இதை நீலமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு; தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும்.பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதை இடித்த மாவுக்கு தேங்காய்த் துருவல்;சீனி;சர்க்கரை,பனங்கட்டி சேர்த்து ;சிறுவர்களுக்கும்;பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பல் பலமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதாகப் கேள்விப்பட்டேன்.
இவையே, நானறிந்த பனை உணவு வகைகள்; மேலும் இருக்கலாம். தெரிந்தோர் சொல்லவும்.அடுத்ததாக ஓலையின் பயனைப் பார்ப்போம்.





Tuesday, August 08, 2006

சுஜாதா-நான்-கடகம்

23.07.06 விகடனில், கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா அவர்கள், தனக்குப்பிடித்த கவிதைப்பகுதியில் சோ. பத்மநாதன் அவர்களின் கவிதையைக்குறிப்பிட்டு, அதிலே கடகம் என்பதற்கு சும்மாடு என விளக்கமிட்டிருந்தார்கள். வாசிக்கும் போது; தவறைக் கண்டால்;அது பற்றிச் சரியாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதித் தெரிவிக்கும் பழக்கம் உண்டு.அன்றைய தபாற் சேவையில் நமது கடிதம்;கிடைப்பதற்குள் மாதங்கள் பல உருண்டுவிடுவதனால்;அவை மறக்கப் பட்டுவிடும்.இன்றோ மின்னஞ்சல் சுடச் சுடப் படித்த சூட்டுடனே எழுத முடிகிறது.அன்று பல எழுதியும் எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.கலைமகளுக்குக் கூட எழுதினேன். வெளியிடவுமில்லை; வெளி விடவுமில்லை.கி வா ஜ - மிகப் பெரிய இடம். (அவ் விடயம் ஒரு நாள் பகிர்வேன்) சுஜாதா அவர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தியதும், சிறியேனின் மடல் பார்த்து; ஏற்றுக் கொண்டு; பிரசுரித்துள்ளார். பிரசுரத்திதற்கு நன்றி!என்னைப் போல் கற்றுக் குட்டிகளுக்கு இவ் அங்கீகாரம் மிகமகிழ்வாக இருக்கிறது.

மரத்தால் ;உலோகத்தால் ;ஓலையால்; நார்களால்;பிரம்பால்,காகிதத்தால்;கண்ணாடியால்; செயர்க்கை இழைகளால் செய்யப்படும் கொள்கலங்களைப் பெட்டி எனும் புழக்கம் உண்டு. அந்த வகையில் இதை கடகப்பெட்டி என்பர்.சாதாரண பனையோலைப் பெட்டிக்கும்; கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் ; கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து; வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண் ;கல் அள்ளுதல்.சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி;சால்வை; முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது.இதை துணிவகையிலேயே செய்வர்.தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும்.பெண்கள் தண்ணீர்க் குடம் தலையில் சுமக்க உடன் தங்கள் முந்தானை நுனியைச் சுற்றிச் செய்வார்கள்.நீத்துப் பெட்டியென்பது; பனை யோலையில் கூம்பு வடிவில் இழைக்கப் படும் ஒரு வகைக் கருவி; இதன் பயன்பாடு பிட்டவித்தல்;மா அவித்தல்; பால் வடித்தல்.குட்டான் என்பது பனையோலையில் இழைக்கப்படும் ஒருவகைப் பொதியாக்கம்; இதன் பயன்பாடு பனங்கட்டியை(பனஞ்சர்க்கரை) பொதியாக்குவதே! இதில் பல அளவு உண்டு.ஒரு அங்குல உயரம் அரை அங்குல வாய் விட்டம் மிகச் சிறியது.(எப்பிடித்தான் அதை இழைக்கிறார்களோ!)!இப்பொழுதும் அது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

வாங்கோ

அன்பு நெஞ்சங்களே!"ஆசை அறுமின்! ஆசை அறுமின் - ஈசனோடாயினும் ஆசையறுமின்!!!யாரை விட்டது ஆசை! எல்லோரும் தமிழ்மணத்தில் சொந்த வீடு கட்டுறாங்களே! நாமும் ஒன்று கட்டினால் என்ன? என்ற ஆசையே இந்த "என் பார்வையில்"!எனக்கு எதையும் வாசிக்கப் பிடிக்கும்;அறிவு தெரிந்த நாளிலிருந்து;என் அறிவுக்கெட்டியவரை வாசிக்கிறேன். அவற்றில் எல்லோரைப் போலும் "என் பார்வை"யும் உண்டு.அதை உங்களுடன் பகிரவே! இந்த "என் பார்வையில்"இது எப்படி? என வந்து தான் பாருங்களேன்.
வணக்கம் நண்பர்களே!