Thursday, January 04, 2007

கனக வாசலிடைக் கொன்றை மரம்...பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை
வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக
வாசலிடைக் கொன்றை மரம்.

பொன் பூச் சொரியும் = பொன்வண்ணப் பூக்களை உதிர்க்கும்
பொலிந்து = உதிர்த்து
செழும் தாது இறைக்கும் = அடர்த்தியான மகரந்தத்தைத் தெளிக்கும்
நன் பூதலத்தோர்க்கு = உலகில் உள்ளோர்க்கு
நன்னிழலாம் = நல்ல நிழல் தரும்
பிரவை = ஒளி
மின்பிரவை = மின்னலைப்போன்ற ஒளி
கனகம் = பொன்
வாசலிடை = வாயிலில் நிற்கும்
((சில சொற்களின் பொருள் விளங்காததால் தமிழகத்தில் ஞானவெட்டியான் ஐயாவுக்கும்; ஈழத்தில் தம்பி "ஊரோடி" பகீக்கும் மின்னஞ்சலிட்டதும், பொறுப்புடன் உடன் பதிலிட்டதைச் சேர்த்துள்ளேன். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி))

இப்பாடலை ஈழத்தவர்கள் தங்கள் இளமைக் காலத்தில் படித்திருப்பார்கள். இதைப் இயற்றியவர் சிறு கவியாகக் புகழப்பட்ட நல்லூர் சின்னத்தம்பி புலவர்.
இவர் நல்லூரில் பிரபலமான ;செல்வந்தரான வில்லவராயன் முதலியார் மகன். இவர் வீட்டில் அன்றைய நாட்களில் பண்டிதர்கள் ஒன்று கூடி சந்தேகங்கள் தீர்ப்பது; பாடம் நடத்துவது எனக் கலாசாலையாக இருந்ததால் சின்னத் தம்பிப் புலவருக்கு இயல்பாகவே கவி புனையுமியல்பு இளமையிலே உருவாகியுள்ளது.
இதை இவர் தந்தை வில்லவராயன் முதலியார் அறியவில்லை. ஒரு நாள் முதலியார் நண்பர் ஒருவர் முதலியார் வீட்டைத் தேடி வழியில் விளையாடுக் கொண்டு நின்ற சிறுவர்களிடம் கேட்ட போது;ஒரு சிறுவன் மேற்படிப் பாடலைக் கூறியதும்; அந்த அடையாளத்தை வைத்து வீட்டைக் கண்டுபிடித்து; முதலியாருடன் அளவளாவும் போது; பாடலையும் கூறி; ஒரு சிறுவன் தான் இதைக் கூறினான் எனச் சொல்லிக் கொண்டிருந்த போது வீட்டுள் வந்த சிறுவனைக் காட்டி இவன் தான் ;அப்பாடலைப் பாடியது எனக் கூறிய போது; தன் மகன் புலமை அறிந்து தந்தை உச்சி மோந்தார்.
அதன் பின் முறையாகக் கற்று ஈழத்து இலக்கிய உலகில் தனி இடம் பிடித்தார்.
இந்தக் கனகவாசலும்; கொன்றை மரமும் எவ்வளவு பொருத்தமாக அமைந்தது.
முதலியார் செல்வம் கொழிக்கும் சீமான்;எனவே அது கனக அதாவது தங்க வாசல் தான்; கொன்றை மரமும் தங்க நிறப் பூச் சொரியும் மரம் தான்...எவ்வளவு பொருத்தம்.
சிறுவனாயினும் பாடலுக்கு எவ்வளவு அழகு சேர்த்துள்ளார்.
இது எங்கள் ஈழத்து இலக்கியம்.
இக் கொன்றைப்பூ சிவனுக்குகந்தது; அதனால் இம்மரத்தைச் சிலர் திருக்கொன்றை எனவே கூறுவர்.

1- நல்லூர்க் கந்தசுவாமி கோவில் முகப்புத் தோற்றம்
2- திருக்கேதீஸ்வர ஆலய வாயிலில் நிற்கும் கொன்றை மரப்பூ 2004 சித்திரையில் எடுத்தவை

26 comments:

சின்னக்குட்டி said...

கொன்றை மலர்களால் மாலை அணிந்த பாண்டிய அரசனே பாட்டு கீட்டு படிப்பினம் ... ஏன் யோகன்.. அரசர்மார் எப்பவும் பார்த்தால் கொன்றைப்பூவோடை சம்பந்தம் வைச்சண்டு இருக்காங்கள்..

உந்த யாழ்ப்பாணத்து முதலியார்மார் டச்சுக்காரன் உருவாக்கிய அதோடை அவை சொன்னதை செய்த காலானித்துவ ஆக்களின்ரை கூலிகள் தானே..பிழை இருக்கலாம் தெரியாமால் கேட்கிறன்

வெற்றி said...

யோகன் அண்ணை,
நல்ல பதிவு.

/* இப்பாடலை ஈழத்தவர்கள் தங்கள் இளமைக் காலத்தில் படித்திருப்பார்கள். */

இல்லை அண்ணை.இப்போது தான் படிக்கிறேன். மிகவும் அருமையான பாடல்கள். சுவையான தகவல்கள். இன்னும் இப்படியான பதிவுகளைத் தாருங்கள். இப் பாடலில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. சொற்களுக்கான விளக்கங்களையும் தந்தால் உதவியாக இருக்கும்.

நன்றி.

Johan-Paris said...

சின்னக்குட்டியண்ணர்!
எல்லா மன்னர்களுக்கு கொன்றைப்பூவுடன் தொடர்புள்ளதோ தெரியவில்லை. ஆனால் மன்னனும் மனிதன் தானே! அதனால் மலரை விரும்பலாம்.
நிற்க!
//உந்த யாழ்ப்பாணத்து முதலியார்மார் டச்சுக்காரன் உருவாக்கிய அதோடை அவை சொன்னதை செய்த காலானித்துவ ஆக்களின்ரை கூலிகள் தானே..பிழை இருக்கலாம் தெரியாமால் கேட்கிறன் //

இப்படிப் பார்த்தால் இதற்கு ஒரு தனிப்பதிவே போடலாம். ஆனால் தடியோட ஓடிவருவோருக்குப் பதில் சொல்லவும் தயாராக இருக்கவேண்டும்.அத்துடன் நம்மிலும் அவர்கள் பரவாயில்லை. உயிருக்குப் பயந்து ஓடிவரவில்லை.அன்றைய இக்கட்டான நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.ஒருவர் வாழ்க்கையை கிளறாமல்;அவர் செய்த நல்லவற்றை பார்க்கவேண்டும். கண்ணதாசன் வாழ்க்கைப் பார்த்தால் அவர் கவிதையை ரசிக்கமுடியாது.
இவர்கள் எந்நிலையிலும் எம் மொழிக்குச் செய்த சேவையை மனதில் கொண்டு மதிக்கிறேன்.
வரவு கருத்துப் பகிர்வுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

பகீ said...

யோகன் அண்ணா நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள்

குறை கூறுவதாக நினைத்துவிடாதீர்கள். சின்னத்தம்பிப் புலவரின் தந்தையார் பெயர் வில்லவராய முதலியார். வில்வராஜ முதலியார் அல்ல. பாடலிலும் அவ்வாறே

ஊரோடி பகீ

Anonymous said...

Read Dr.RamaKi`s article "konRaiyum ponnum" about KonRai and stuff.

-PC

Johan-Paris said...

வெற்றி!
மன்னிக்கவும்! ஈழத்தில் ஒரு காலக்கட்டத்தில் தமிழாசிரியர்கள்; இந்தப் பாடலையும் சம்பவத்தையும் கூறுவார்கள் . அப்படி படித்ததே!!மறக்கவில்லை.
பிற்காலத்தில் இவை கற்பிப்பது தவறப்பட்டிருக்கலாம்.
தங்கள் வேண்டுகோளுக்காக பொருளும் கேட்டுப் போட்டுள்ளேன்.(உதவி ஞானவெட்டியான் ஐயா- நாடோடி பகீ)
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

பகீ!
தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். வேண்டும். இதில் எந்தத் தயக்கமும் கூடாது.தவறைத் திருத்த வயது எல்லை இல்லை.தவறைத் தவறென ஏற்றுக் கொள்ள,நான் தயங்கவில்லை. இப்பாடல் நான் எழுத்தில் படித்ததாக ஞாபகம் இல்லை. இளமையில் தமிழ் வாத்தியார் இந்தச் சம்பவத்தைக் கூறி இப்பாடலையும் சொல்ல அதை நாமே கேட்டெழுதியதைப் படித்ததால் பதிந்ததே!!அதனால் இந்த பெயர்த் தவறு வந்துள்ளது.திருத்தியதற்கும்;கருத்துக்கும்;பொருள் அனுப்பியதற்கும் மிக்க நன்றி!
யோகன் பாரிஸ்

வெற்றி said...

யோகன் அண்ணா,
பாடலுக்குப் பொருள் சொன்னதற்கு மிக்க நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

நல்ல பாடலுக்கான அறிமுகம் ஐயா. நீங்கள் பாடலின் பொருளை இடுவதற்கு முன்னரே பதிவைப் படித்தேன். இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது.

ஞானவெட்டியான் ஐயா சொன்ன விளக்கமும் அடியேன் புரிந்து கொண்டது சரி என்று காட்டியது. நன்றி.

பகீ. வில்வராஜன் என்ற வடமொழிப் பெயர் தமிழில் பலுக்கும் போது வில்லவராயன் என்று ஆகும். தெலுங்கிலும் ராஜன் ராயன் ஆவதை கிருஷ்ணதேவராயர் ராமராயர் என்ற மன்னர்களின் பெயர்களில் காணலாம். அதனால் யோகன் ஐயா அவரின் நினைவிலிருந்து வில்வராஜ முதலியார் என்று சொன்னதும் சரியே. அது பாடலில் வில்லவராயன் என்றே சொல்லப்படும்.

கானா பிரபா said...

சின்ன வயதில் படித்ததை மீள் நினைவாக்கியதற்கு நன்றி அண்ணா

வசந்தன்(Vasanthan) said...

aஇந்தப்பாடல் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தரப்படுகிறது. நாலாம் ஆண்டு தமிழ்ப்பாடப்புத்தகத்தல் வருகிறதென்று நினைக்கிறேன். (நாங்களெல்லாம் ஆண்டுக்கணக்கில் படித்தவர்கள்; வகுப்புக்கணக்கிலன்று;-)) 'விழையும் பயிரை முளையிலே தெரியும்' என்பதுதான் பாடத்தின் தலைப்பு என்பதாக ஞாபகம்.

'ஜ' வுக்குப்பதில் 'ய' பாவிக்கும் பழக்கம் எங்களிடம் இருக்கிறது.
கவிராயர், வில்வராயர் என்று பலபேர்கள் வரும்.
பரராச சேகரன் என்ற மன்னனின் பெயர்கூட சிலஇடங்கிளில் பரராய சேகரன் என்று எழுதப்படும்.
கனகராயன்குளம் இன்னோர் எடுத்துக்காட்டு. இதை 'மண்' திரைப்படம் பற்றிக் கதைக்க வெளிக்கிட்ட சிலர் கனகராஜன்குளம் என்று எழுதுகிறார்கள். யார் அப்படிச் சொல்லிக்கொடுத்ததென்று தெரியவில்லை.

கரிகாலன் said...

நல்ல பாடல்.சின்னனிலை படிச்சதுதான்
ஆனால் இப்ப மறந்து போட்டுது.மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு
நன்றி யோகன் அண்ணா.

நாங்கள்
எல்லாம் வகுப்பு கணக்கில் படித்தவர்கள்
ஆண்டுக்கணக்கில் அல்ல :-)

NONO said...

பற்றி இராம.கி எழுதிய பதிவு ஒண்று (சனவரி 23, 2006 )
http://valavu.blogspot.com/2006/01/1_23.html

Johan-Paris said...

வசந்தன்!
நான் உமா வாசகம்; பின் தமிழ் மலர் இவைதான் தமிழ்ப் பாடப்புத்தகமாகப் படித்தவை.அவற்றில் இருந்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் வாத்தியார் சொல்லித் தந்ததும் அதை எழுதியதும் ஞாபகமாக உள்ளது. அவர் இப்படிப் பல பாடல்கள் புத்தகத்தில் இல்லாததெல்லாம் சொல்லித் தருவார்.
நிற்க இந்த "விழையும்" அல்ல எனக்கு; "விளையும்" தான் வரும் போல் உள்ளது.
இந்த"'ஜ' வுக்குப்பதில் 'ய' பாவிக்கும் பழக்கம் எங்களிடம் இருக்கிறது.
"
இந்தப் புழக்கம் அறிவேன்.
ஆனால் இங்கே பெயரே! வில்வராஜன்;வில்லவராஜன் என்பதே குழப்பமாகவுள்ளது.
பகீ கூறியபடி பெயரில் தவறி விட்டேன்.
வருகை கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

அன்புக் குமரன்!
உங்களுக்குப் பொருள் குழப்பம் இருக்காதென்பது தெரியும் எனக்குத் தாது; பிரவை போன்ற சொற்கள் பிடிபடவிலை. எனினும் யாராவது கேட்டால் பார்போமென இருந்தேன். வெற்றி தட்டிவிட்டார்.
அப்போ தான் ஞானவெட்டியான் ஐயாவும்; பழைய ஈழ இலக்கியப் பாடல்களில் நாட்டம் கொண்ட "நாடோடி பகீ" ஞாபகம் வந்ததும். மின்னஞ்சலிட்டேன்; உடன் பதிலிட்டுதவினார்கள். சேர்த்தும் விட்டேன்.
நிற்க ! இந்தப் பெயர்க் குழப்பம் நான் செவிவழி கேட்ட பாடலே இது.எனினும் தங்கள் விளக்கம் பகீ படிப்பார் என நினைக்கிறேன்.
எனவே வில்லவராஜனை வில்வராஜன் எனலாம் எனக் கூறுகிறீர்கள்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

பிரபா!
சின்னனில படிச்சதுகள் நிக்குதானு பாக்கத்தான்! உந்தப் பின்னோக்கல்!
அயத்துப் போன மூணுநாலு விசயத்த மீட்டுப் போட்டன்.
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

பெயரிலி மற்றும் NONO
இராம கி ஐயாவின் பதிவுத் தொடுப்புத் தந்ததற்கு நன்றி!
என்றாலும் ஐயா எங்கள் பாடலை விட்டு விட்டாரோ?
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

கரிகாலன்!
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். ஆனாலும் கால அலைப்பு பலவற்றை மறக்கத்தான் வைக்கிறது. இதற்குப் புலம்பெயர் சூழலும் ஓர் காரணம்; நாட்டில் இவற்றை அடிக்கடி கேட்க வாய்ப்புண்டு; இங்கே அது இல்லை.
நாமாத் நினைத்துத் தேடினால் உண்டு.

//நாங்கள்
எல்லாம் வகுப்பு கணக்கில் படித்தவர்கள்
ஆண்டுக்கணக்கில் அல்ல :-) //

அப்போ நீங்களும் நம்ம கணக்குத்தான்!
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

சாத்வீகன் said...

அறியாத பாடல்.
அருமையான விளக்கங்கள்.
நன்றி யோகன் பாரிஸ்.

Johan-Paris said...

சாத்வீகன் !
உங்களைப் போன்ற இளம் கவி நாட்டமுள்ளோர் படித்து மகிழ்வது எனக்கும் மகிழ்வாக இருக்கிறது.
கவித்துவத்தில் அழகை நுகர்ந்து; தங்கள் கவிதைகளில் வெளிக் கொணருங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

பகீ said...

உண்மையில் ய பயன்படுத்த வேண்டிய இடத்தில் ஜ பயன்படுத்துவது அழகென்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை.

நிற்க

வில்வராய முதலியார் அல்ல வில்லவராய முதலியார் என்பதே சரி. இந்த பாடலை நான் மூன்று வெவ்வேறு புத்தகங்களில் பார்த்தேன் மூன்றிலும் அவ்வாறே உள்ளது. எனவேதான் துணிந்து சரி என்கின்றேன்.

யோகன் அண்ணா நான் ஊரோடி பகீ தானே ஏன் இடைக்கிடை நாடோடி ஆக்கிறீங்கள்??

ஊரோடி பகீ
http://oorodi.blogspot.com

G.Ragavan said...

இப்படியொரு தமிழ்ப் பதிவை இத்தனை நாள் படியாது படியாதிருந்தேனே. இன்றேனும் படித்தேனே. இப்பதிவும் படித் தேனே!

மிகவும் எளிய பாடல். படிக்கையிலேயே புரிந்து போகும் எளிமை. ஆனால் அந்த எளிமைக்குள்ளே ஒளிந்திருக்கிறது தமிழ்த் திறமை. ஆகா ஆகாவென எத்தனை முறைதான் ரசித்து ரசித்து ருசிப்பது! திகட்டவில்லை ஐயா...பாடலும்...படமும்...அவைகளோடு நீர் தந்த தகவலும்.

Johan-Paris said...

பகீ!
இந்த "ய" வுக்கு "ஜ" ; நீங்கள் கூறுவதுபோல் ;ஓசை நயத்தையொட்டிய உச்சரிப்பாக இருக்கலாம்.
மேலும் நானும் இணையத்தில் தேடினேன். ஆங்கிலத்தில் நீங்கள் கூறுவது போல் வில்லவராஜ முதலியார் எனவே உள்ளது.நான் எந்த மாற்றமும் செய்யவில்லை.
அடுத்து; "ஊரோடி" ஐ ;ஏனோ "நாடோடி" என என்கையெழுதுகிறது.ஊரோடியிலும்;நாடோடியின் அறிபரப்பு அதிகம்..உங்கள் அறிபரப்பும் பழந்தமிழ்ப்பாடல் முதல் நவீன கணனி வரை பரந்து இருப்பதால் ;நாடோடி என எழுதுகிறதோ? தெரியவில்லை.
இனிச் சரியாகப் போடுவேன்.
வரவும் மேலதிக தகவலுக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

யோகன் ஐயா,
கோவிலைப் பர்த்ததும் உள்ளே இருக்கும் ஐய்யனைக் காண ஆவலாக இருக்கிறது.
அதுபோல இந்தப் பாடலும் படமும் அமைந்து இருக்கின்றன.
இன்னும் நிறைய எழுதுங்கள். மிக்க நன்றி.

Johan-Paris said...

//இன்றேனும் படித்தேனே. இப்பதிவும் படித் தேனே!//

ராகவா!
இந்தப் "படித்" தேன்; நன்கு சுவைத்தேன். ஈழத்துப் புலவர்கள் ஆற்றல் நவீன தமிழகத்தைச் சென்றடையவில்லை.எனினும் இப்போ இணையத்தால் சிறுகச் சிறுகப் பரவுகிறது.
தெருவில் விளையாடும் சிறுவனின்(புலவர்) ஆற்றல்;என்னை வியக்கவைத்தது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

Johan-Paris said...

வல்லிசிம்ஹன் வணக்கம்!
எங்கள் நல்லூரான் மூலவர் வேல் ;ஆறுமுகனார் தேரேறுவார்; மஞ்சம் ,திருக்கல்யாணம் முத்துக்குமாரசாமி. என்றும் அலங்காரத்தில் ஜொலிப்பார்கள். படங்கள் கைவசம் இல்லை.
நல்லூரான் புகழும் "மின்பிரவை வீசுபுகழ்" தான்.
வருகை கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்