Friday, February 23, 2007

வாகீச கலாநிதி கி.வா.ஜ வும்....மோசம் போதலும்



ழத்திலும்;தமிழகத்திலும் சில தமிழ்ச்சொற்கள்;தொடர்கள் இருவேறு
கருத்துக்களில் புழக்கத்திலுள்ளதை அறிந்திருப்பீர்கள்.

ஈழத்தில் அன்றைய இலக்கிய,சமய விழாக்களுக்கு;தமிழக அறிஞர்களைச்
சொற்பொழிவுக்கழைப்பது வழமை!

அப்படி வருபவர்களில் கலைமகள் ஆசிரியர் வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களும்அடங்குவர்.

"கலைமகள்" சஞ்சிகைக்குஆரம்பகாலத்தில் இருந்து , மறையும் வரை ஆசிரியராக இருந்ததுடன் இன்று வரை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் கலைமகளுக்குத் தனி இடத்தைப் பிடித்துத் தந்த அதன் முன்னாள் ஆசிரியர் மறைந்த தமிழ் இலக்கிய; இலக்கணமேதை;சிறந்த பேச்சாளர் வாகீசகலாநிதி எனப் பட்டமளித்துப் பாராட்டப்பட்ட கி.வா.ஜகந்நாதன் அவர்களாவர்.

இவரை அன்புடன் எல்லோரும் "கி.வா.ஜ " எனவே குறிப்பிடுவார்கள்.

இவரை அன்றைய ஈழத்தில் சமய;இலக்கிய விழாக்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு அழைப்பது வழக்கம்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் பருத்தித்துறைக்குப் பலதடவை அதன்அன்றைய தலைவர் நீதியரசர் சிறீஸ்கந்தராசா அழைத்துள்ளார்.

அப்படி வரும்பொழுது; வட இலங்கைத் தமிழ்ப்பண்டிதர்கள்;அறிஞர்கள்
இவரைச் சந்தித்து உரையாடிச் சந்தேகங்களை நிவிர்த்தி செய்வது வழக்கம்;
இதனால் பல தழிழார்வலர்களை, கி.வா.ஜ வுக்கு; ஞாபகம் உண்டு.

ஒரு தடவை இப்படி,அவர் வந்து தமிழார்வலர்கள் சந்திப்பு நடக்கும் போது; கி.வா.ஜ ;ஞாபகமாக ;அதில் வழமையாகப் பங்கேற்கும்; புலோலியைச் சேர்ந்த பண்டிதர் பற்றி; அவர் ஏன்?பங்குபற்றவில்லை என விசாரித்த போது; அப் பண்டிதர் மகள் சில வாரங்களுக்கு முன் "மோசம் போய் விட்டார்"..... அந்தக் கவலையில் அவர் வரவில்லையெனக் கூற..... கி.வா.ஜ....அதிர்ச்சியுடன் "யார் அந்தச் சண்டாளன் " என்றாராம்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும்; கி.வா.ஜ...தவறாகப் புரிந்ததை;
உணர்ந்து...அவருக்கு விளக்கிக் கூறிய போது.
அவர் விபரத்தை அறிந்து; அந்தப் பண்டிதர் வீடு சென்று ;ஆறுதல் கூறினாராம்.
இதை பின் அவரே! தன் ஈழம் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இப்போதும் தமிழகத்தல் மோசம் போதல் என்பது; ஒரு பெண் ஆணிடம்
கெட்டுப்போதல்(நம்பிக்கை கொடுத்துக் கெடுத்துக் கைவிடுதல்) எனும்
கருத்திலேயே வழக்கிலுள்ளது.

ஈழத்தில் சில பகுதிகளில் இறந்து போதலை; மோசம் போதல் எனக் குறிப்பிடும் வழக்கம் வயதாளிகள் மத்தியில் உண்டு.

இப்படிக் குறிப்பிடும் வழக்கம் தமிழகத்திலுண்டா?

***இயன்றவரை படம் போட்டுப் பதிவு போடவேண்டுமென்று நினைப்பதாலும்; இன்றைய இளைஞர்களுக்கு இவரைப் படத்துடன் அறிமுகப் படுத்துவதற்காகவும். இவர் படத்தை இணையத்தில் தேடி எடுக்கமுடியாமல் இருந்தபோது; நமது பதிவுலகில் விசாரிப்போமென நினைத்துப் சிலருக்கு வேண்டுகோள் விட்டபோது பொறுப்புடன்;பலர் பதில் தந்து தங்கள் இயலாமையை தெரிவித்தார்கள். குறிப்பாகச் சகோதரி செல்வ நாயகி.ஆனால் துளசி அக்கா;சகோதரி வல்லி சிம்ஹன்; தி.ரா.ச அண்ணா(குடும்பப்படத்தை அவர் சகோதரர் மகனிடமிருந்து); சின்னக்குட்டியண்ணர் இந்தப் படங்களைத் தந்துதவினர். அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி!

31 comments:

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. வீட்டில் யாராவது காலமெய்தினால் (குறிப்பாக கணவன் மறைந்துவிட்டால் மனைவி) 'மோசம் போய்விட்டேனே' என்று அழுவதைக் கேட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் இரு பொருள் என்றவுடன் எனக்கு இரண்டு பொருட்களும் புரிந்தன.

துளசி கோபால் said...

யோகன்,

நான் அனுப்பிய படமும் நான் உதவியாகக் கேட்டுப் பெற்றதுதான். உண்மையான
'நன்றி நவிலல்' நம்ம அண்ணாகண்ணனுக்குத்தான் சேரணும். அவர்தான் நான் கேட்டதுக்கு உடனடியாப்
படத்தை அனுப்பித் தந்தவர்.

இப்போது நீங்கள் பதிவில் போட்ட படம் 'சிறப்பாக'( ராகவன் கவனிக்கவும்) உள்ளது.

கானா பிரபா said...

சிலேடையில் விற்பன்னராக கி.வா.ஜ விற்கும் ஈழத்திற்கும் ஒரு ஆன்மீகத் தொடர்புண்டு. ஆத்மஜோதி நா.முத்தையாவின் நூல்கள் சிலவற்றிலும், இவரது நூல்களிலும் தன் வாழ்வில் நடந்த சிலேடைச் சம்பவங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார். முன்பு வாசித்து அனுபவித்திருக்கிறேன்.

பதிவுக்கு நன்றிகள் அண்ணா

சின்னக்குட்டி said...

..யோகன்... உதே மாதிரியான ஈழத்து தமிழ் சொல்லை தவறாக புரிந்து கொண்ட சம்பவம் ம.பொ.சி என அழைக்கபபடும் ம.பொ சிவஞானம் அவர்கள் யாழ் காங்கேசன்துறைக்கு வந்தபோது நடந்ததாம்

இலவசக்கொத்தனார் said...

என்னால் படங்கள் தர முடியவில்லையே என சங்கடமாகவே இருந்தது. நல்ல வேளை படம் கிடைத்துப் பதிவும் போட்டு விட்டீர்கள்.

இறந்ததை 'மோட்சம் போவது' எனச் சொல்வார்கள். அதுவே மருவி மோசம் போனது என வழங்குகிறது என நினைக்கிறேன். மோட்சம் எய்தினார் என இன்றும் தமிழகத்தில் சொல்வதுண்டே.

இது எனக்குத் தோன்றியது. தவறிருந்தால் மன்னிக்கவும்.

வல்லிசிம்ஹன் said...

யோகன், நல்லதொரு பதிவு.
சிறப்பான பதிலையும் துளசி சொல்லிவிட்டார்கள்:-0)

கி.வா.ஜ அவர்களின் சிலேடையும் பிரசித்தமானதே.
இணையத்தில் தேடினால் இவ்வளவு சேதிகள் காத்து இருக்கின்றன.
அதனாலேயே எனக்குப் பிடித்தமான வேலை செய்ததில் மகிழ்ச்சியே.

ஓகை said...

பதிவுக்கு நன்றி யோகன்.

G.Ragavan said...

கி.வா.ஜவின் தமிழ்ச் சிலேடை மிகவும் அருமையாக இருக்கும். இவர் உ.வே.சாவிடம் தமிழ் படித்தவர். உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தவர். இவர்களிடம் தமிழுக்குக் குறைவிருக்காது.

மோசம் போவது என்பதை இறப்போடு தொடர்பு படுத்தித் தமிழகத்தில் சொல்வதில்லை. ஈழத்தில் அப்படிப் புழங்கப்படுவது புதுச்செய்தி.

இதுபோலத் தமிழிலும் கன்னடத்திலும் உண்டு. மழை கடுமையாக இருக்கிறது என்றால் தமிழில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகின்றது என்போம். மழே கடுமே என்றால் கன்னடத்தில் மழை குறைவு என்று பொருளாகும். சுமார் என்றால் நாம் ஏதோ இருக்கிறது என்ற பொருளில் சொல்வோம். சுமார் என்பது கன்னடத்தில் நிறைய என்பதாக வரும். கார்களு சுமாரிதே என்றால் கார்கள் நிறைய இருக்கின்றன என்று பொருள்.

வைசா said...

யோகன்,

கிவாஜ அவர்களது ஆக்கங்களை விரும்பிப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றிய குறிப்புக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி.

வைசா

செல்வநாயகி said...

முனைவர் சத்தியசீலன் கிவாஜ பற்றி அடிக்கடி நினைவுகூர்ந்து அந்தக்காலத்தில் மேடைப்பேச்சுக்கு எவ்வளவு உழைப்போடு பேசுபவர்கள் வருவார்கள் என்பதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். கூட்டங்களில் மட்டுமின்றி சாதாரணமாகப் பேசும்போதுகூட சிலேடையுடன், நகைச்சுவையாகவும் பேசுபவர் கிவாஜ எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல பதிவு.

Simulation said...

எனது இந்தப் பதிவையும் பார்க்கவும்.

http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_18.html

- சிமுலேஷன்

Anonymous said...

யோகன்,
கிவாஜ அவர்கள் முன்னர் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்த அடிக்கடி இலங்கை வருவார். கொழும்பு ஜிந்துப்பிட்டி கோயில், விவேகானந்த சபை இவற்றில் அவரது பிரசங்கங்கள் இடம்பெறும். அப்போது அவரது பிரசங்கங்களை நேரில் கேட்டிருக்கிறேன். சிறுவர்களுக்கும் விளங்கும் வண்ணம் அருமையாக சொற்பொழிவாற்றுவார்.

கிவாஜ அவர்களின் நினைவுப்பதிவையும் புகைப்படங்களையும் தந்தமைக்கு நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரன்!
எங்கள் பெண்கள் கணவன் இறந்தால் "ஐயோ என்னை அந்தரிக்க விட்டு போயிட்டீங்களே" என அழுது
தான்; நான் கேட்டுள்ளேன்.
நம் தமிழில் எவ்வளவு வேறுபாடான புழக்கங்கள்.இடத்துக் இடம்.
சின்னக்குட்டியண்ணர் சொன்னதைக் கவனித்தீர்களா? "தவறி விட்டார்" என்றாலும்; ஈழத்தில் மரணத்தைக் குறிப்பது.ஆனால் இவை வயதாளிகள் மத்தியிலே தான் புழக்கத்தில் இருக்கிறது.
வரவு கருத்துக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசி அக்கா!
அண்ணா கண்ணனுக்கும் நன்றி சொல்லிவிடுகிறேன். நம் இணைய உலகம் தனித்துவமான உதவும் உலகமே!!
என் புதிய அடைப்பலகை கூட "சாரல்" சயந்தனின் கைவண்ணமே!
"கேட்டதும் கொடுக்கும் இணையக் கிருஸ்ணர்கள்" பலர் !
இந்த மோசம் போதல்" ...நீங்கள் கேள்விப்படவில்லையா???
வரவு கருத்துக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
ஆம்! இவர் ஒரு சிலேடை வித்தகர் என்பதும் அறிவேன். அன்றைய கலைமகளில் அவை துணுக்குச் செய்தியாக அலங்கரிக்கும்.
இவர் கந்தரலங்கார உரை ஈழத்தில் மிகப் பிரபலம்!அந்த வயதில் இவற்றைச் சென்று கேட்கும் வாய்ப்பு அமையவில்லை.ஆத்மஜோதியுடன் தொடர்பில்லாமல் இருக்கமுடியுமா? இருவருமே ஆத்மீகத்தையும் இலக்கியத்தையும் நேசிப்பவர்கள்;சுவாசிப்பவர்கள் ஆச்சே!
நிறைய எழுதியுமுள்ளார்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
ம.பொ.சி க்குப்...புரியாதது... "தவறி விட்டார்" என்பதாக ஆசிரியர் ஒருவர் கூறக் கேட்டுள்ளேன்.
இப்படி சில சொற்கள் பிரதேசத்துக்குப் பிரதேசம்; தமிழராக இருந்தபோதும் புழக்கமின்னையால்
புரியச்சிரமம் இன்று முண்டு.
ஆனால் இணையம் பல புழக்கங்களுக்குத் தெளிவைத் தருகிறது.
வரவு கருத்துக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலவசக்கொத்தனார்!
உங்களுக்கும் தேடித் தரவேண்டுமெனும் ஆவல் இருந்துள்ளதே;அதுவே போதும்!!!நான் அப்படி;யாரை அணுகலாம் என யோசித்தே! வேண்டுகோள் வைத்தேன்.கிடைத்தது பல....
நிற்க ...இப்பதிவை போட்டபின் "மோட்சம்"...மோசமாக மருவியதோ?? என நானும்; சிந்தித்தேன்...நீங்களும் அதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதில் என்ன? தவறுள்ளது...மன்னிக்க என்ன? உள்ளது. எல்லோருக்கும் சிந்திக்குமுரிமை என்றும் உண்டு.
அது தவறானாலும்!!!!
வரவுக்கும்;கருத்துக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி அக்கா!
ஆம்; நான் கி.வா.ஜ...எனத் தேடாமல் கி.வா.ஜகந்நாதன் எனத் தேட!!என் தேவை பூர்த்தியாகவில்லை.
ஆனால் இணைய அன்பர்கள் எத்தனை வழியாகத் தேடுவார்கள்.அனைவர் உதவும் மனநிலை மகிழ்வூட்டுகிறது.
என் பழைய கலைமக(ள்க)ளைக் கைவிட்டுவிட்டேன். அவை இருந்தால் இவர் சிலேடைகளால் பல பதிவிடலாம்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜீவா!
எதோ! அடையாளம் போட்டுள்ளீர்கள்! என்ன? சொல்லியுள்ளீர்களென்றே புரியவில்லை.நமக்கு;(நான் - மக்கு)
இவை புரிவதில்லை. எனினும் படித்துள்ளீர்கள் எனக்கொண்டு; வரவுக்கும் இப்புரியாக கருத்துக்கும்(பகிடிங்க) மிக்க நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஓகை!
பதிவு பிடிச்சிருந்தால் மகிழ்வே!! உங்கள் பக்கம் இப்புழக்கமுண்டா??
வரவுகும் கருத்துக்கும் நன்றி

இராம. வயிரவன் said...

அன்பரே, நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் 'மோசம் போதலுக்கு' அப்படி ஒரு பொருள் இருப்பதால்தான் இந்தப்பதிவிற்கு நீங்கள் போட்ட தலைப்பைப் படித்ததும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. கி.வா.ஜ பற்றி படித்திருக்கிறேன். அவர் தமிழுக்காகவே வாழ்ந்தவர். தமிழ் மொழியால் உலகத்தமிழர்களை ஒன்றிணைக்க முடியும் என நினைத்தவர் எனப்படித்திருக்கிறேன். உங்கள் தலைப்பிலே நடுவிலே புள்ளிகள் இருந்தாலும் ஏற்பட்ட தாக்கத்தைத் தவிர்க்க இயலவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மோசம் போவது என்பதை இறப்போடு தொடர்பு படுத்தித் தமிழகத்தில் சொல்வதில்லை. ஈழத்தில் அப்படிப் புழங்கப்படுவது புதுச்செய்தி.//

ராகவா!
அப்படியா? என் பதிவின் நோக்கமும் அதே!!!; இதைத், முழுத் தமிழகத்திலும் மரணத்துடன் தொடர்பு படுத்தும் புழக்கமின்மையால் தான் ;அவர் அதை கெட்டுப்போதலுடன்; தொடர்புபடுத்தித் புரிந்து கொண்டுள்ளார்.
மேலும் அவர் ஒரு சிலேடை வித்தகர் என்பதறிவேன். இவர் உ.வே.சா மாணவர் என்பது எனக்குப் புதிய செய்தி!
மொழிகளுக்கிடையில் இப்படி பல வினோதனான தொடர்புகள் இருக்கத் தான் செய்கின்றன.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
கிவாஜ வின் கலைமகள் என் பிரியமான சஞ்சிகை" மிக ஆச்சாரமானது".. அவர் காலத்தில். பாடசாலையில் வைத்து வாசித்தாலும் ஆசிரியர்கள் ஏதுமே கூறமாட்டார்கள். வாங்கிப் படிப்பார்கள்.
அவர் கந்தரலங்கார விளக்கம் படித்துள்ளேன்.இங்கே இப்போ எதுமே கிடைப்பதில்லை.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கூட்டங்களில் மட்டுமின்றி சாதாரணமாகப் பேசும்போதுகூட சிலேடையுடன், நகைச்சுவையாகவும் பேசுபவர் கிவாஜ//
செவ்வநாயகி!
ஆம் ;நானும் இச்செய்தியைக் கேள்விப்பட்டுள்ளேன்.அவர் சொல்விளையாட்டில் அறிஞர் தான்.
கலைமகளில் பார்த்துள்ளேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிமுலேசன்!
தங்கள் பதிவு பார்த்தேன். இந்த விடையவன் பதில்கள்; நான் 80 தில் படித்துள்ளேன். யாரோ கேட்கும்
கேள்விகளில் எங்கள் சந்தேகம் தீர்வதுடன்; பல விடயங்களும் தெரியவந்தது.
முதற்தடவையாக வந்துள்ளீகள் என நினைக்கிறேன்.
வரவு கருத்துக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//கிவாஜ அவர்கள் முன்னர் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்த அடிக்கடி இலங்கை வருவார். கொழும்பு ஜிந்துப்பிட்டி கோயில், விவேகானந்த சபை இவற்றில் அவரது பிரசங்கங்கள் இடம்பெறும். அப்போது அவரது பிரசங்கங்களை நேரில் கேட்டிருக்கிறேன். சிறுவர்களுக்கும் விளங்கும் வண்ணம் அருமையாக சொற்பொழிவாற்றுவார்.//

சிறி அண்ணா!
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்; அவர் சொற்பொழிவுகள் நேரே கேட்டுள்ளீர்கள். என் இளமையில் இவர் வருகையை பத்திரிகையில் படித்துள்ளேன். ஆனால் சென்று கேட்குமளவுக்கு வெளிச் செல்லும் அனுமதி வீட்டாரிடம் கிடைக்காது; அந்தப் பயத்தால் ஆசை இருந்தும் கேட்பதில்லை.
வானொலியில் கேட்டுள்ளேன். கலைமகள் மூலம் அவர் புலமை; நேர்த்தி ;சிறப்பு அறிந்துள்ளேன்;
வரவு;கருத்துப் பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

அய்யா,

//மோசம் போவது என்பதை இறப்போடு தொடர்பு படுத்தித் தமிழகத்தில் சொல்வதில்லை.//

எங்கள் (தஞ்சை மாவட்டம்) பகுதி (முஸ்லீம்கள் மத்தியில்)யில், அகாலத்தில் மரணித்தவரின்(மிக) நெருங்கிய உறவை 'மோசம் போய்விட்டார்' என குறிப்பது இன்றும் வழக்கிலுள்ளது!

//"மோட்சம்"...மோசமாக மருவியதோ?//

செத்தவர்தானே மோட்சத்திற்கு போக முடியும்? இங்கே 'மோசம் போவது' என்பது செத்தவரின் பந்தம்தானே? அதனால் இங்கே 'மோசம்' என்பது 'மோட்சம்' ஆக இருக்கவியலாது என நம்புகிறேன்.

பதிவுக்கு நன்றி யோகன் அய்யா.

அன்சாரி, வழுத்தூர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இராம.வைரவன் அண்ணா!
தங்களுக்குத் தலைப்பைப் பார்த்ததும்.."தூக்கிப் வாரிப்" போட்டதற்குக் காரணம் புரியவில்லை.
சில சமயம் இவையோ எனச் சந்தேகப்படுகிறேன்.
1) ஏற்கனவே தமிழகத்தில் உள்ள இச் சொல் வழக்கு தமிழ் வித்தகரான "கிவாஜ" விக்குத் தெரியாமல் போனதா?
2) கிவாஜ... மோசம் போய்விட்டார்...அதாவது இப்போ;இன்றே இறந்துள்ளார் ..எனும் புரிதல்

இரண்டாவதானால்...அவர் எப்போ இறந்தது. அறியாதவராக அவர் பற்றிய பல தகவல்களைக் கூறமுடியாது.
முதலாவதானால்...எல்லோருக்கும் எல்லாமும் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக மீண்டும் கிவாஜ வையே;காட்டுவேன்.
இவர் ஒரு "ஈழத்துப் பழமொழிகள்" எனும் தொகுப்பு வெளியிட்டு;அன்றைய கலைமகளில் அது பற்றி
குறிப்பும் சில உதாரணமும் வெளிவந்தது.
அதில் ஈழத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி "அறிந்தவனிடம் கேட்டவேண்டும் அரியாலைப் பனாட்டை"...எனும் பழமொழிக்கு(ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரியாலை எனும் கிராமப் பனாட்டு் மிகப் பிரபல்யம்) ,பனாட்டு என்பதற்கு விளக்கம்..;சீனியில் செய்த பண்டம்.. எனும்
விளக்கம் கொடுத்திருந்தார்.
70- 80 க்குள் வந்த கலைமகளில் வாசித்து; நான் கலைமகளுக்கு பனாட்டுப் பற்றி ஒரு கடிதம் போட்டேன்.இப்பழமொழி புத்தகம் கிடைத்தால் பார்க்கவும்.
இது சுஜாதாவுக்குக் கடகம் பற்றித் தெரியாததுபோல்.
இவர்கள் அறிஞர்கள் தான்;அதற்காக எல்லாம் அறிந்திருப்பார்கள்; என்பதல்ல!
அதனால் கிவாஜ வின் இந்த மோசம் போதலில் எனக்குத் தூக்கி வாரிப் போடவில்லை!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்சாரி!
அடடா! உங்கள் பக்கத்தில் இந்த "மோசம் போதல்" புழக்கமுண்டா?
எங்கள் ஈழத்து முஸ்லீம் நண்பர்கள்; இறத்தலை "மௌத்" ஆகிட்டார்; எனக் குறிப்பிடுவார்கள். திருமணத்தை "நிக்காஷ்" என்பார்கள். இது பற்றி நண்பரைக் கேட்டபோது,இவை அரபுச் சொற்கள் என்றார்.
அடுத்து "மோசம்" என்பது கெட்டுப்போதலெனும் கருத்துடையதாகவும் கொள்வர். அவன் மோசமானவன் - அதாவது கெட்டவன்,உதவாதவன் எனும் கருத்திலும் ஆகிறது; இறந்துவிட்டால்..அது கெட்டுவிடுகிறது. அதனால் இது
இறந்தவர் சம்பந்தப்பட்டது; என்பதாகவே நான் கருதுகிறேன்.
எனினும் தங்கள் கருத்துப் பரிமாற்றத்தில் இப்புழக்கம் பற்றிய சேதி சொன்னதற்கு நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

திரு யோகன் அவர்களே கி.வா ஜ பற்றிய பதிவு விஷயமுள்ளதாக உள்ளது.படங்களும் ஜோர்.நமக்கு சொந்தம் என்று நம்பியிருந்த பொருள் நம் கைவிட்டுப் போய்விட்டால் மோசம் போய்விட்டேன் என்று கூறுவது உண்டு.அதுபோல்தான் உறவினர்களையும் மற்றவர்களையும் சாஸ்வதம் என்று நினைத்துவிட்டு போய்விட்டால் மோசம் போய்விட்டேன் என்று கூறுவார்கள்.ஆனால் உண்மையில் Life is what death has lent.கடன் கொடுத்தவன் எப்பொதுவேண்டுமானாலும் திருப்பி எடுத்த்க்கொள்வான்.
கி.வா.ஜ ஒருசமயம் நண்பர் வீட்டுக்கு விருந்து உண்ணச் சென்றிருந்தார். விருந்து முடிந்ததும் நண்பர் கி.வா ஜவிடம் கேட்டார்"ஏதாவது பழம் கிழம் சாப்பிடுகிறீர்களா?"
கி வா. ஜ சொன்னார்"நீங்கள் சொன்ன இரண்டில் ஒன்று ஏற்கனவே என்னிடம் உள்ளது(கிழம்) பழத்தைமட்டும் தாருங்கள்" என்றார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தி.ரா.ச. அண்ணா!
தங்கள்" விசயமுள்ள" எனும் பாராட்டுக்கு நன்றி. நான் அவர் விசிறி!! இந்தக் "கிழம்" நானும் படித்துள்ளேன்.
"இரவல் தந்தவன் கேட்கின்றான் ;இல்லையென்றால் விடுவானா?"...கவியரசர் கூறினார்.
நம் முன்னோர் சில பேச்சு வழக்குகள்; சில சமயங்களில் புரியாத புதிரே!
வந்து கருத்துக் கூறியதற்கு நன்றி