Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Thursday, December 06, 2007

அம்பேத்கர்-அவமானங்கள் உருவாக்கிய அற்புத மனிதர்...



ஒரு மாட்டு வண்டிக்காரன் அச் சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவனது பேச்சொலியின் வட்டாரவழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று அறிந்ததும் மாட்டைக் கழட்டி விட்டு வண்டியைக் குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.

தாகத்துக்கு அந்தச் சிறுவன் தண்ணீர் கோட்கிறான்; அதோ இதுதான் உனக்கான தண்ணீர் எனச் சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைக் காட்டியுள்ளார்கள்...உயர் சாதிக்காரர்கள்.

அவன் மட்டுமல்ல- அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று நோட்டுப் புத்தகத்தைத் திருத்த மறுக்கிறார் ஆசிரியர்.

முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத் தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான். அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறான்.

வடமொழியைப் பாடமாய் எடுத்துப் படிக்க விரும்பிய போது இந்து தர்மம் -கல்விச் சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு.

பதினாறு வயதில் திருமணம் நடக்கிறது; தீண்டத் தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாது எனும் விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய் இரவில் நடக்கிறது அந்த ஏழையின் திருமணம்.

இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவன் தான் இந்திய அரசமைப்பை வடிவமைத்திருக்கிறார்.

அடிமை இந்தியாவில் வெள்ளை ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் ,சுதந்திர இந்தியாவில் இந்து ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.

தீண்டத் தகாத 429 சாதிகளுக்கு யுகவிடுதலை பெற்றுத் தந்திருக்கிறார்.

சேறும் சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமோ??

அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன் "அம்பேத்கர்"

திரு.அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கியவர்; தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து உயர்ந்தவர்;பல தாழ்த்தப்பட்ட இனங்களின் உயர்வுக்கு பாடுபட்டவர் என்பதற்குமேல் ,அவர் வாழ்வில் பட்ட அவமானங்கள் நான் அறியவில்லை.
தற்செயலாக 05 - 12 - 2007 , குமுதம் இதழில் கவிஞர் வைரமுத்து; " அவமானங்களால் ஒரு மனிதன் உருவாக முடியுமா?" எனும் கேள்விக்குக் கூறிய பதிலில் ...அம்பேத்கர் வாழ்வில் பட்ட அவமானங்களைப் படித்தபோது; அது சந்தர்ப்பவசமாக அவர் நினைவு நாளிலும் அமைந்ததால் உங்களுடன் பகிர்கிறேன்.

அம்பேத்கர் , மாமனிதரே...


****அம்பேத்கர் படம் விடாது கருப்பு அவர்கள் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது- நன்றி