Showing posts with label பிரான்ஸ். Show all posts
Showing posts with label பிரான்ஸ். Show all posts

Saturday, October 06, 2007

பிரான்ஸ் கம்பன் விழா....

டந்த செப்டம்பர் மாதம் 29, 30 திகதிகளில் ,பாரிசின்
புறநகர்ப் பகுதியான லா கூர்னோவில், பிரான்ஸ்
கம்பன் கழகத்தின், 6 ம் ஆண்டு விழா வெகு விமரிசையாக
நடைபெற்றது.

சிறப்புப் பேச்சாளராக அருட் சொற்ச் செல்வர் திருமிகு சுகி சிவம் அவர்கள்
கலந்து, தன் திறன் மிகு பேச்சால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இந்த எழில் உற்ற விழாவைக் காணும் பேறு இவ்வருடம் நான் பெற்றேன்.

அதை உங்களுடன் பகிர என் குட்டி NIKON ஆல் காணொளியாகப் படமாக்கினேன். இது என் கன்னி முயற்சி, அதனால் இதில் உள்ள குறைகளைப் பொறுக்க வேண்டும்.

முதற் காட்சி... மலர் வெளியீடு ,இதில் நமது சக பதிவர் திரு மாசிலா மணி
(நாளை நமதே- மாசிலா ) அவர்களையும் மேடையில் பெயர் கூப்பிட்டழைத்து
மலர் வழங்குகினார்கள்.



பட்டிமன்றத் தலைப்பாக 'கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக்கியது

பாத்திறமா? பாத்திரமா?' இடம் பெற்றது அதில் ஒரு பகுதியான மரபின் மைந்தர் வே .முத்தையா, நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல் பேசியதில் சிறு பகுதிகள் சேர்த்துள்ளேன்.





இந்த இரண்டாம் நாள் நிகழ்சிகளில் பாரிசில் இசைகற்கும்

பிள்ளைகள் பங்கேற்றார்கள்.நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

வழக்காடு மன்றத்தில் ' குற்றவாளிக் கூட்டில் தமிழைப் பேணாத தமிழர்கள்

எனும் தலைப்பில் மரபின் மைந்தர் வே.முத்தையா. நகைச்சுவைத் தென்றல்

இரெ. சண்முகவடிவேல் , சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்றார்.(தமிழகத்தில் இருந்து வந்திருந்தார்கள்)

தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலையை நகைச்சுவையுடன் அழகாகச் சுட்டிக்காட்டினார்கள்.

சுகி சிவம் அவர்கள்' தமிழக தமிழ்த் தொலைக்காட்சியில் செய்தி தவிர தமிழ் வாக்கியங்களை முறிக்காத நிகழ்ச்சியே இல்லை எனக் கூறினார்.



இனிதே சிறப்புற நடந்த விழாவில் இரண்டாம் நாள் மண்டபம் நிறைந்தது.

இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது, மகிழ்வே!!

இரு நாளும் காலை முதல் நடந்த விழாவை தடையின்றிக்காண ,அன்பர்களுக்கு உணவு,குளிர்பானம் கொடுத்து அனுசரித்தார்கள்.

இந்த விழாவை சிறப்புற நடத்திய பிரான்ஸ் கம்பன் கழகமும், அதன் தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகமும் எவ்வளவும் பாராட்டத் தகும்.

குறிப்பாக பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் பாவலர் பாரதிதாசன் மிகப் போற்றுதலுக்குரியவர்.

குறிப்பாக என் மனதைக் கவர்ந்தது. சகபதிவர் திரு மாசிலாமணி அவர்களை

மேடையில் அழைத்துக் கௌரவித்தது. அவர் ஆத்மீகத்தை இகழ்பவராக இருந்தாலும், தமிழரின் சீரிய வாழ்வு பற்றிய சிறந்த சிந்தனையுடையவர் என்பதால் இந்தச் சிறப்பைச் செய்தார்களோ தெரியவில்லை.

ஆனால் நல் ஆத்மீக வாதிகளின் சிறப்பே ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' அதைச் செய்து ஆத்மீகத்தைப் பெருமைப் படுத்திய அன்பர்களுக்கு நன்றி!!

பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார்.

நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.

இத்தனைக்கும் நான் மாசிலா அவர்கள் பதிவைப் பார்த்துவிட்டே புறப்பட்டேன்.

இப்படி ஓர் இனிய வாழ்நாளில் மறக்கமுடியாத அறிஞர்கள் பேச்சை நேரடியாகக் கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மிக்க

நன்றி!

கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!

அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.

கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!!