Friday, May 25, 2007

அழகின் ஜனனம்!!




ண்த்துப் பூச்சி பறக்குது! பார்!!
அழகான செட்டை அடிக்குது! பார்!!
பூக்கள் மேலே பறந்து போய் தேனைக்குடித்துப் பறக்குது பார்!!


இந்தப் பாட்டை சிறுவர்களாகப் படித்துமிருப்பீர்கள். இப்பூச்சியைப் பார்த்தும் ரசித்திருப்பீர்கள்!

பூப்பூவா பறந்து போகும் பட்டாம்பூச்சியக்கா! நீ
பள பளனு போட்டிருப்பது யாரு? கொடுத்த சொக்கா?


இந்தத் திரையிசைப் பாடலும் கேட்டிருப்பீர்கள்.

இந்த அழகின் ஜனனத்துள் ;இவ்வளவு நுட்பம் இருந்ததை என் இளமையறியவில்லை.


அந்த அறியாக்காலத்தில் "மயிர் கொட்டிப் புழுவுக்கு" மண்ணெய் தெளித்துக் கொழுத்தியுள்ளேன்.

இப்போ எவ்வளவு "அழகை" அழித்துள்ளேன். ஊர்பூரா "பூவரசில்" தொங்கும் இதை அழித்தார்கள்!!

என்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.

இந்த நகர் மயமான வாழ்வில்; எப்போதாவது ஒரு நாள் அழையா விருந்தாளியாக என் பலகணிப் பூவை நாடிவரும் பட்டாம் பூச்சியை ஆசையுடன் ; அசையாது பார்த்து ரசித்து; மனதுள் மன்னிப்பும் கேட்பேன்.

இவை மனிதனுக்குச் செய்யும் சேவை!!;மரங்களை விருத்திசெய்யும் மகரந்தச் சேர்க்கை அளப்பெரியது. மகத்தானது..மனிதனால் முடியாதது.

இந்த அழகின் ஜனனத்தைப் பார்த்த போது உங்களுடன் பகிர வேண்டும் போல் இருந்தது.


Wednesday, May 16, 2007

வெறி பிடித்த மிருகங்கள்!!

மதுவின் வெறியால்; அது கொடுக்கும் மயக்கத்துக்கு அடிமையாகி...தன் நிலை இழந்த மனிதர்கள் பலரைப்
பார்த்துச் சிரித்தோ! பரிதாபப் பட்டோ இருப்பீர்கள்.
அதன் தன்நிலை மறக்கச் செய்யும் தன்மையை உணர்ந்தும் பலர் அதை அருந்துகிறார்கள்.
அவலப்படுகிறார்கள்.

இதோ இந்த வெறி பிடித்த மிருகங்களைப் பாருங்கள்.


Thursday, April 12, 2007

புலம் பெயர்ந்த தமிழர்களும் பிள்ளைகளும்...




லகில் தமக்கென ஒரு நாடற்ற தமிழினம்;இன்று விரும்பியோ விரும்பாமலோ...உலகெங்கும் வாழத்தலைப்பட்டுவிட்டது.இதில் ஈழத்தமிழரின் நிலையே குறிப்பிட்டுச் சொல்லும்படியுள்ளது.

ஐரோப்பிய ,அமெரிக்க,ஒஸ்ரேலிய நாடுகளில் வாழும் நம்மவரின் எதிர்காலச் சந்ததியினரின் நிலை என்ன?
என்ற கேள்வி! இப்போ பரவலாக நம்மிடையே ஓர் அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளதெனில் மிகையில்லை.

உலக வளர்ச்சியின் வேகத்துக்கு மொழி,கலை,கலாச்சாரம் ஈடு கொடுக்கிறதா? எமது இளைய
தலைமுறையினர் இதை ஈடேற்றுவார்களா? என்பதே ஆய்வாளர்களுக்கு விடை கிடைக்காத வினாவாகவுள்ளது.

"தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு" அதுதான் ஒற்றுமையின்மை. என்னையும் சேர்த்தே சுயபரிசோதனை மூலம் எழுதுகிறேன்.நாம் எங்கே சென்றாலும் தனித்து வாழப் பழகிவிட்டோம்.

நாட்டில் வேலி,மதில் என்று வாழ்ந்த நாம் இங்கும் எல்லை வகுத்து தண்ணீரில் நெய் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழப் பழக்கப்பட்டு விட்டோம்.

இதை நம் எதிர்காலத் தலைமுறை முற்றாக ஏற்றுக் கொள்வதாகவில்லை.
ஆனால் நம் தனித்துவம் பேணப்பட்டது இதனாலெனில் மறுப்பதற்கில்லை.

இதை மறுப்பதன் மூலம் எமது இளைய சந்ததி நம் தொடர்பிலிருந்து அறுத்தோடப் பார்க்கிறதென்பது உண்மை. ஆனால் அவர்கள் ஓடும் பாதை முற்றாகச் சரியெனக் கூறுமளவுக்கில்லை.

ஐரோப்பிய; அமெரிக்கப் பண்பாடு நேற்றிருந்தது போல் இன்றில்லை. அவர்களே ,அவர்கள் எதிர்காலச் சந்ததி பற்றி அச்சமடைய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந் நிலையில் இன்று புலம்பெயர்ந்த தமிழ்ப் பெற்றோருக்கு மிகப் பெரிய சுமை தம் பிள்ளைகளில் எதிர்காலம். "அவயத்து முந்தி இருக்கச் செயல்" எனும் வள்ளுவன் வாக்கை ;தாம் எவ்வளவு தூரம் தம் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் நிறைவேற்றப் போகிறோம் என்ற அச்சம்.

பிள்ளை வளர்ப்பென்பது" கத்தியில் நடப்பது போல்" என்றார். ஓர் அறிஞர். அன்றைய சூழ்நிலையில் குடும்பத்திற்கு குறைந்தது 5 பிள்ளைகளாவது இருக்கும்; ஒன்றோ இரண்டோ பெயர் சொல்லும் பிள்ளையாகிவிடும்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பல காரணங்களாலும் இரண்டுக்குப் பின் வேண்டவே வேண்டாமென ; நம்மவர்களும் ஆகிவிட்ட நிலையில் எல்லோருமே தம் பிள்ளைகள் அவயத்து முந்தியிருக்க என்ற எண்ணத் துடிப்புடன் செயற்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஆனால் இதற்காக நம் பெற்றோரில் அனேகர் கைக் கொள்ளும் அதரப் பழைய விடயம்; டாக்டர்;எஞ்சினியர், புறக்டர்...என்ற இந்த மூன்றுக்குள்ளும் தம் பிள்ளைகள் வரவேண்டுமென கொப்பாட்டன் காலக் கொள்கையுடன் இன்றும் ;இங்கும் வாழுவது. இது முன்னேறும் நிலையில் உள்ள இந்தச் சமுதாயத்துக்கு ஏற்புடையதில்லை.

ஒரு வைத்தியனாக வரக்கூடிய பிள்ளையை உயிரைக்கொடுத்தும் வைத்தியனாக்க வேண்டியது பெற்றோர் கடன்.
ஆனால் அந்த வழியில்;எந்த வகையிலும் ஆர்வமற்ற பிள்ளையை வைத்தியனாக்குகிறேனெனப் பெற்றோர் உயிரைக் கொடுத்து கடைசியில் ஒன்றுக்குமுதவாமல்; அவன் "லாச்சப்பயில்" (la chapelle-தமிழர்களின் வியாபார நிலையங்கள் சுற்றியுள்ள ;பாதாளத் தொடர் வண்டித் தரிப்பிடம்) நிற்பது; வைத்தால் குடுமி- மழித்தால் மொட்டை எனும் உப்புச் சப்பற்ற கொள்கை; உவப்புடையதில்லை.

எனவே பிள்ளைகளின் ஆர்வமறிந்து ,அத்துறையில் ஊக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை.அது விளையாட்டாக இருக்கலாம்;சங்கீதமாக இருக்கலாம்;கணணியாக இருக்கலாம்; கார் திருத்தலாக இருக்கலாம்; ஏன் முடி திருத்தலாகக் கூட இருக்கலாம்.

பொய் களவின்றி; உடல்;மூளை உழைப்பால் முன்னேறும் எந்தத் துறையானாலும் அவர்கள் ஊக்கமாக உள்ள துறையை ஊக்குவியுங்கள்.

தம் பிள்ளை ஒரு மருத்துவனாக வேண்டுமெனும் ஆசை எல்லாப் பெற்றோரிடமும் உண்டு. ஆனால் தான் ஒரு வைத்தியனாக வேண்டுமெனும் ஆசை எல்லாப் பிள்ளைகளிடமும் இருப்பதில்லை.

இது கசப்பான பொது உண்மை. ஆகவே பிள்ளைகளின் ஆர்வமறிந்து செயற்பட்டு அவர்களைப் பயனுள்ளவர்களாக மாற்ற முற்பட வேண்டியது ;நம் புத்திசாலித்தனத்தில் தங்கியுள்ளது.

நாம் பல மொழி பேசும் நாடுகளில் வாழ்கிறோம்.ஆனால் நாம் தமிழர்கள். இன்றைய மொறீசியஸ் தீவுத் தமிழனுக்கேற்பட்ட மொழி வீழ்ச்சி; இந்த இலங்கைத்தீவுத் தமிழனுக்கு ஏற்படக்கூடாது.

இன்னும் 25 வருடத்தில் உலக வீதிகளில் தமிழ்ப் பெயர்களுடன் தமிழ் தெரியாத தமிழர் உலாவரும் அவலம் இருக்கக் கூடாது.

அதுவும் தனக்கெனத் ஒரு நாடு கேட்ட ஈழத்தமிழரின் சந்ததி உலா வரக்கூடாது. அதற்குப் பெற்றோரே! தம் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவூட்டத் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும்.

எனவே உங்கள் சிறார்களுக்கு வாழும் நாட்டு மொழியுடன் தாய்மொழியையும் ஊட்டுங்கள்.வாழும் நாட்டு மொழியில் இயல்பாகவே முன்னேற வாய்ப்பு அதிகம் எனவே தாய் மொழியில் கூடிய கவனம் செலுத்தவும்.

ஓரளவுக்குத் தாய்மொழிச் சுவையை அவர்கள் உணர்ந்தால்; பின்பு தானே அவர்கள் தொடர்வார்கள்.அந்த ஆரம்ப அறிவை அவர்கள் அறியாத பருவத்தில் அறிய வைப்பதே நீங்கள் தாய்நாட்டுக்கும்; நம் மொழிக்கும் செய்யும் மிகப் பெரிய கைங்கரியம். உங்கள் பிள்ளைகள் அந்நிய மண்ணில் தாய்மொழிப் புலமையுடன் வளர்வது உங்களுக்கே பெருமை.

50 வருடங்களுக்கு முன் என்ன? என அறிந்திராத ஜப்பானிய மொழியை உலகம் தேடி;ஓடிப் படிக்கிறது.நம் தமிழ் மொழிக்குக் கூட இந்த நிலை வரலாம்; எனவே எங்கள் சிறார்களையும் தமிழ் அறிவு பெற்றோராக்குவோம்."

வீதி தோறும் இரண்டொரு பள்ளி" என்றார் பாரதி;நாம் செய்வோம் "உலக நாடுதோறும் நற்றமிழ்ப் பள்ளி" நம் சிறார்க்கு...
நம் தமிழூட்ட இதை மற்ற நாட்டார் நமக்குச் செய்யார். நாமே அதைச் செய்வோம். செய்வோரை ஊக்குவிப்போம்; நம் சிறார்க்காக ;நம் மொழிக்காக..

இவற்றுடன் உலக அரங்கில் எங்கள் இசை,நடனம்;சிற்பம்;ஓவியம் இன்றும் கலாபிமானிகளால் போற்றப்படுவது உண்மை.இந்த ஆர்வமுள்ள உங்கள் பிள்ளைகளின் பொன்னான பொழுதுகளை இப்படியான அழகியல் கலைகளில் லகிக்க வைத்து அவர்களை விற்பன்னர்களாக்காவிடினும்; விசயமறிந்தோராக்குங்கள்.

எல்லோரும் ஜேசுதாஸ் ஆகமுடியாது;சுப்புலெட்சுமியும் ஆகமுடியாது;பொன். சுந்தரலிங்கமும் ஆகமுடியாது; ஆனால் அவர்கள் ஆற்றலை அறிய உணர எல்லோராலும் முடியும்.

அதற்கு விடயஞானம் தேவை. அதை வளர்க்கலாம் அதற்கு நீங்கள் அவற்றில் ஆர்வம் காட்டவேண்டும்.

பாலூட்டும் தாய்; தன் குழந்தையின் மருந்தைத் தானுண்பாள்; ஒவ்வாதவற்றையும் தானுண்ணாள்.

அப்படி; நம் குழந்தைகளைப் பொறுத்தமட்டில் நாம் இருக்கவேண்டும்.நம் வீட்டு வானொலி மூன்று வேளையும் "கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போகலாமா" என அழுதால்; நம் பிள்ளைக்கு நம் இசையின் சரளி வரிசை கூட வராது. பாரிசில் நடந்த "அளவெட்டி பத்மநாதனின் "நாதஸ்வரக் கச்சேரியில் பிரபல வானொலி அறிவிப்பாளர்...விமல் சொக்கநாதன் ;நம் பிள்ளைகள் "கொலம்பஸ் கொலம்பஸ்" ஐ (அந்த நாளில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பாடல்) அறிந்த அளவுகூட பத்மநாதனை அறியவில்லையென ஆதங்கப்பட்டார்.

இது வெட்கப்பட வேண்டிய விடயம்.ஏன் கேவலமும் கூட ;பன்னாடைபோல் நல்லதை வடியவிடும் சமுதாயமாக நாம் மாறி வருவது அருவருக்கத்தக்கது.

கிளிப்பிள்ளை போல் வெறும் சினிமாப்பாடல்களை ஒப்புவிப்பதும்; அந்த நடனங்களென அங்கங்களை அசிங்கமாக வளைப்பதை பார்த்துச் செய்வதுமாக நம் சமுதாயம் மாறிவருவது மிக மிக வேதனை.அதைவிட இதையே பெற்றோரும் இளமை முதல் ஊக்குவிப்பதும் வேதனைக்குரியது.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" கேள்வி ஞானமே பெரிய கொடை. நல்லதை நீங்கள் கேழுங்கள் உங்கள் பிள்ளைகளும் அதையே தேடும்.

நாமே நம் பிள்ளைகளின் முதலாவது பாடப் புத்தகம்; போர்ப்பந்தரில் பிறந்த மோகன்லால் கரம்சந் காந்தி...உலகம் போற்றும் மகாத்மா காந்தியானது; புத்திலிபாய் என்ற கொண்ட கொள்கையில் எந்த நிலையிலும் தளராமை என்ற வீராப்புக் கொண்ட தாய் எனும் ஆரம்பப் பாடப்புத்தகம்.

வீட்டில் சைவ உணவு உண்பவர்களின் குழந்தைகள் இயல்பாகவே!
அசைவத்தை வெறுப்பது போல்; பெற்றோரின் விருப்பு வெறுப்புகளே பிள்ளைகளில் பிரதிபலிக்கிறது.உங்கள் பிள்ளை என்ன விரும்ப வேண்டுமென நீங்கள் விரும்பிகிறீர்களோ!
அதை நீங்கள் விரும்பத் தொடங்குங்கள்.

நீங்கள் தலைக்குமேலே வளையம் வளையமாக புகைவிட்டுக் கொண்டு பிள்ளைகளைச் சிகரட் பிடியாதே? என்றால் இன்றைய 21 நூற்றாண்டு இளைஞன் பிடித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேனெனத் தான் கூறுவான். இளைஞி கூட. எனவே நீங்கள் முன்மாதிரியாக நடவுங்கள்; பிள்ளைகள் பார்த்து நடக்க...

போதைப்பொருட்கள் ;குடி வெறி; கொலை;களவு என ஐரோப்பிய ;அமெரிக்க இளஞ் சமுதாயம் சீரழிவின் விளிம்பில் அல்லற்படுகிறது.

அவர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியவர்களாதலால் இவற்றுக்கு ஈடுகொடுக்கிறார்கள். நம் சமுதாயம் அவர்கள் போல் மாறினால் சில ஆண்டுகளிலே காணாமலே போய்விடுவோம்.

எனவே எந்த நிலையிலும் நம் பிள்ளைகளுக்கு இக் கெட்ட பழக்கங்கள் வராவண்ணம்; எப்போதும் அவற்றின் தீமைகளை அறிவுறுத்தி ;இளமையிலிருந்தே வளர்த்து விடுவோமானால் அதுவே பாதி வெற்றி!

நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு நற்பண்புள்ள அங்கத்தவர்களை உருவாக்குவதே! பெற்றோராகிய நம் மிகப் பெரிய பொறுப்பு.வீரர்களும்; விவேகிகளும் பண்புள்ளவர்கள் மத்தியிலேயே உருவாக முடியும்.எனவே பண்புள்ளவர்களை உருவாக்குவோம். மிகுதி தானே வரும்.


21 நூற்றாண்டுத் தமிழ் இளமைகளே! உங்கள் பெற்ற தாய் மாத்திரமல்ல; தமிழ்த் தாயும் உங்களை நம்பித்தான் உள்ளாள். மறவாதீர்கள் ;அவளைத் தாங்கும் தூண்களே! நீங்கள் தான்...உங்கள் வாழ்வும் வளமும் அவள்தான். எனவே உத்தம புருசர்களாக வளர்வோம்; வாழ்வோமெனச்
சங்கர்ப்பம் பூணுங்கள்.

எந்த துர்ப்பழக்க, வழக்கங்களுக்கும் அடிமையாகாமல்; கல்வியே கருத்தாகக் கொண்டு; உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! வீணே உண்டு களிப்போரை நிந்தனை செய்வோமென்றுணர்ந்து;உங்கள் ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கையில் என்பதைப் புரிந்து வாழ்வீர்கள் என நம்புகிறேன்.

(இக் கட்டுரை பாரிஸ் தமிழர் கல்வி நிலைய 12 ஆண்டு விழா மலரில் 03-01- 1999 ல் வெளிவந்தது

Friday, April 06, 2007

ஆடு பாம்பே!! -KING COBRA - OPHIOPHAGUS HANNAH

ஆடு பாம்பே!!

நான் இங்கே இணைத்திருக்கும், ஒலி ஒளி விவரணச் சித்திரங்கள் , உலகிலே மிகப் பெரிய விசப் பாம்பான "இராஜ நாகத்தினது".



இந்த இராஜ நாகம் இந்தியா;தென்சீனா;மலேசியா,பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்காசியக் காடுகளில்
வசிப்பது.



இது சுமார் 18.5 அடி (5.7 மீ) நீளமும்; 44 இறாத்தல் (20 கிலோகிராம்) எடையும் உடையதாகவும் ;25 வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய பாம்பினமாகும்.

இதன் விசம்; நொடியில் கொல்லக் கூடியது. இது படமெடுத்தாடும் போது இதன் உடலின் முக்கால் பகுதி
நிலத்திலிருந்து மேல் இருக்கும். அத்துடன் மிக மூர்க்கமான சீறும் சத்தத்தையும் உடையது.



இந்த இராஜ நாகத்தின் தனித் தன்மையே! இது ஏனைய பாம்பு வகைகளை உண்பது. மலைப்பாம்பு கூட
தப்பமுடியாது
.



அதனால் தான் கிரேக்கில் " OPHIOPHAGUS " அதாவது "பாம்பு தின்னி "எனும் பெயரில் இதை அழைப்கிறார்கள்.


இந்த இராட்சதப் பாம்பை இவர்கள் கையாளும் விதத்தைப் பாருங்கள்.

பாம்பெனில் படையும் நடுங்கும்; ஆனால் சிலர் நடுங்குவதுமில்லை ஒடுங்குவதுமில்லை. அதை இப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

இக் காட்சிகளை நான் பலதடவை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.

இதை you tube ல் பார்த்தபோது உங்களுடன் பகிர எண்ணினேன்.

Wednesday, April 04, 2007

அதி உயர் வேகம் 574.8 கிலோ மீட்டர்/மணி




பிரான்சின் தொடர் வண்டி சேவை யான "SNCF " தனது "மிக அதி வேகம் " TGV யின், 26 வருட சேவையில் ; மேலும் தனது வேக விரிவாக்கத்தில்; சென்ற வாரம் உலகில் அதிவேகமான சேவையாக மணிக்கு 574.8 கிலோமீட்டர் வேகத்தை வெற்றிகரமாகக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

அதாவது வினாடிக்கு 150 மீட்டர்கள்.

1990 ல் இதன் அதி உயர் வேகம் 513.3 கிலோமீட்டர்/ மணி யாக இருந்தது.
இப்புதிய சேவை கிழக்குப் பிரான்சுக்கு முதலும் பின்பு படிப்படியாக ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் பயண நேரம் வெகுவாகக குறையவுள்ளதால்; பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்புள்ளது.
சமீபகாலங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகளால் ; விமான நிலையங்களில் ஏற்படும் வீண் கால விரயத்துக்குசிறந்த மாற்றீடாகக் கணிக்கப்படுகிறது.

அத்துடன் , ஆரம்ப காலத்திலிருந்து பாரிய விபத்தெதனையும் சந்திக்காது; பாதுகாப்பான சேவை எனப் பயணிகள் மத்தியில் பெயரெடுத்துள்ளதால், மிகுந்த எதிர் பார்ப்புடன் இச்சேவை வரவேற்கப்படுகிறது.

Thursday, March 29, 2007

அவனுக்கு வியரடி!!( Weird )




கொஞ்ச நாளாக சக பதிவர்கள் ஒரே என் வியர் அறிய பெருந்தொல்லை!!

குமரன் தொடங்கி; ஷ்ரேயா வால்..இப்போ செல்லியும் கூப்பிட்டுள்ளா??
இந்தப் பதிவுகளைப் பார்த்த போது இந்த WEIRD ; வியர் ; விசர் எல்லாம் ஒரு தொடர்பான எப்படி?ஆனது என்றும் யோசித்தேன்.


நம் ஊரில் வயது போனோர் விசர் என கூறமாட்டார்கள். " அவனுக்கு வியரடி"...இந்த "ச " வை "ய"வாக்கிப் போடுவார்கள்.


சமீபத்தில் என் அக்கா என்னைப் பற்றிக் கூறியது.


அவனுக்கு "வியர்! (அவவுக்கு என்னைப் புரியும் அடுத்துப் பிறந்தவன்)


அதனால் எனக்கு என்ன ? வியர் என்று யோசித்தேன்.


*இளமையில் வீட்டில் என்னைப்போல் அடி வாங்கி வளர்ந்தவர்கள் இருப்பது அருமை!! அந்த அளவுக்குக் குழப்படி (வீட்டில் மாத்திரம்)இதனால் "சுணை" இல்லாதது ;எனப் பெயரெடுத்தவன்!என்ன? அடி அடித்தாலும் அடுத்த நேரச்சாப்பாட்டுக்கு முதலாளாக குசினுக்குள் நிற்பது!!அதையும் வெட்கமில்லாதவன் ;என வீட்டில் விமர்சிப்பார்கள்; இவற்றைச் சட்டை செய்யாமல்இவர்கள் என்ன ? முதுகில் விழுகிற அடிக்கும்; வயிற்றில் போடுற சோத்துக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் என யோசித்துக் கொண்டே ;சாப்பிட்டு விட்டு அடுத்த நேரச் சாப்பாட்டுக்கிடையில்அடுத்த அட்டூளியம் செய்து அடிவாங்குவது..


*வீட்டை ஒரு மிருகக் காட்சிச் சாலை போல் வைத்திருக்க முயன்றது. ஆடு;மாட்டு; கோழியுடன்;நாய் ;பூனை; கிளி மைனா;முயல்; புறா,கினிக் கோழி.


*இளமை முதல் கோவில்; மேளக் கச்சேரி; பின் சங்கீதக் கச்சேரி;கதாபிரசங்கம் கேட்க அலைந்தது.


*வாசித்தல்; வானொலி....பிரியமானது!.


*வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லால் அதன் வழிக்கே!!இன்றுவரை விட்டுள்ளது.


இந்த வெளிநாட்டு வாழ்க்கை மிகப் பெரிய மாறுதலை என்னில் ஏற்படுத்தா விடிலும்; புதிய சில விசர்ஒட்டிக் கொண்டது.


- எந்த கொடுப்பனவும் (தொலைபேசி;மின்சாரம்;வாடகை போன்றவை)கடிதம் கிடைத்த உடன் காசோலை தயார் பண்ணி வைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போவது."காவயித்துக் கஞ்சியானாலும் ,கடனில்லாக் கஞ்சி என்பதில் விசராக உள்ளேன்.


-காட்டூன்;விபரணச் சித்திரம் பார்ப்பது


-ஒரு பொருளை வாங்குமுன் ; அது பற்றி பல தடவை யோசிப்பது


- OLD IS GOLD என்பதில் மாறாமல் இருப்பது!


- கைக்குழந்தைகளில் வீசும் மணம் பால் மொச்சையை ரசித்து நுகர்வது; வயது முதிர்ந்தவர்களுடன் நானே பேச்சுக் கொடுத்து ;அலட்டுவது..

(கட்டாயம் வைத்தியம் செய்ய வேண்டுமென்னிறீர்களா?)


- சந்தையை சாமான் வாங்காவிடிலும் போய் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவது (சரியான விசர் தான் என யோசிக்கிறீர்களா)


-வருடா வருடம் புதுவருட வாழ்த்து அட்டை உறவினர்;நண்பர்களுக்கு 1979 ல் இருந்து தவறாமல் அனுப்புவது.(நான் சம்பாதிக்கத் தொடங்கியதிலிருந்து)


-காலையும் மாலையும் என் பல்கனி பூந்தோட்டத்தைப் தவறாமல் ஒருதடவையாவது பார்ப்பது!


-என்ன சாப்பாடு இருந்தாலும் காலைச்சாப்பாடாக பாற்கஞ்சி...மதியம் ;இரவு கத்தரிக்காய்..உப்பவியல்..குத்தரிசிச் சோற்றுடன் வெகு பிரியம்...


- ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது (சோவுடன் பல விடயங்களில் ஒத்த கொள்கை இல்லாத போதும்)


- பத்திரிகைக்கு என் கருத்தையும் ;அவர் எந்தக் கொம்பனானாலும் எழுதுவது...


- சைவனாக இருந்த போதும் கடந்த 20 வருடங்கள் ;செவ்வாய் தோறும் "அந்தோனியாரையும்" தரிசிப்பது.


இதை விட பதிவுகளால் பழகி என் பல வியருகள் நீங்கள் அவதானித்திருக்கலாம்.


இவ்வளவும் போதுமா?

*** இப் படம் ...என் அக்கா வழிப் பேத்தி "பூமிகா"

Monday, March 26, 2007

கவியரசர் கவிதை கேட்போமா??




அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசர் கண்ணதாசன் - நகைச்சுவை மன்னன் நாகேஷ்
சம்பத்தப்பட்ட காட்சி.
இதில் கவிஞர் கவிதை கூறுகிறார்.

Friday, March 23, 2007

இன்னிசை வேந்தர்!



மிழிசைக்கும் ; திரைஇசைக்கும் தன் இன்குரலால் புகழ் சேர்த்து;
உலக அரங்குகள் பலவற்றில் தமிழ் இசை ஒலிக்க வைத்து ;
தமிழிசை ஆர்வலர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்று;
தன் வாழ்நாள் எல்லாம் தமிழிசைக்கு வளம் சேர்த்து;
தமிழ்க் கடவுள் முருகன் மேல் மாறாப் பெரும் பக்தியுடன் வாழ்ந்து
மறைந்த இன்னிசை வேந்தர்; கம்பீர கானமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் ; இறை எய்திய தினம் இன்று!!

19 - 01 - 1933 ல்; ஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி எனும் தவப்பூமியில்; சிவசிதம்பரம் - அவயம்பாள் தம்பதியினருக்கு புத்திரராகப் பிறந்து;
சிறுவயது முதலே இசையார்வத்தால் ; நாடகங்களில் நடித்து; பின்
தமிழிசைக் கல்லூரியில் இசைகற்று 1949 ல் "இசை மணி" பட்டம்
பெற்று அதன் பின் திருப்பாம்புரம் சுவாமிநாதன் பிள்ளை எனும் பிரபல வித்துவானிடம்; குருகுல வாசத்தில் இசைகற்றுத் தேறி 1951 - 1952 பல போட்டிகளில் வென்று; சங்கீத வித்துவானாக; இசையரசராகப் பவனிவந்தார்.

இந்நிலையில் திரையுலகும் இவரை இருகரம் நீட்டி வரவேற்க; கல்கியின் "பொன்வயல்" திரைப்படத்தில்"சிரிப்புத்தான் வருகுதையா" என்ற பாடலுடன் மிக வெற்றியாக தன் இசையாட்சியை விரிவாக்கிப் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களையும் பாடி ;பாமரரும் இசை உணர வகை செய்தார்.

சரச மோகன; சங்கீர்தாமிர்த!
அமுதும் தேனும் எதற்கு!
ஆடியடங்கும் வாழ்க்கையடா!
மழை கொடுக்கும்!கொடையுமொரு
அறுபடை வீடுகொண்ட திருமுருகா!
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
!

இவர் பாடிய காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் சில!!

சாத்திரீய சங்கீதத்தை ஒத்த இசையா!! , கூப்பிடு சீர்காழியை என்னும் அளவுக்கு ; தனக்கென ஒரு பாணியை வகுத்துச் சாதித்தார்.இசை ஆர்வலர் உள்ளங்களை வென்றார். அத்துடன் பல திரைபடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இட்ட அகத்தியர், நக்கீரர் வேசங்கள் மறக்க முடியாதவை.

இவர் திறமை கண்டு பட்டங்களும் பதவிகளும் ;தேடிவந்தன . இதில் இந்திய அரசின் "பத்மஸ்ரீ " விருது அன்றைய ஜனாதிபதி திரு. ஜெல் சிங் அவர்களால் 1983ல் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார்.


பதிவிகளாக “தியாகராச உற்சவ சபாக்” காரியதரிசியாகவும்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவு முதல்வராகவும் கடமையாற்றினார்.

எந்த வித சிக்கலிலும் புகாத எல்லோர்க்கும் இனிய பண்பாளராக வாழ்க்கை பூராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

பல பக்தி இலக்கியங்களுக்கு இசைவடிவம் கொடுத்தார். குறிப்பாக கந்தசஸ்டி கவசம்; அபிராமி அந்தாதி ; கந்தரலங்காரம் அவற்றில் பிரபலமானது.

இவர் பக்திப் பாடல்கள் மெய்சிலிற்க வைப்பவை. கேட்போரை உருகவைக்கும்; சொல்லுணர்ந்து அவர் பாடும் பாங்கே அலாதியானது.

என் இளமைக் காலத்தில் ஊரில் கோவில் திருவிழாவெனில்; ஒலிபெருக்கி கட்டி காலை இளங்காற்றுடன் வரும்...விநாயகனே...வெவ்வினையை வேரறுக்க வல்லான்..!என்ற அவர் குரல் என் ஐம்புலனையும் சிலகணம் கட்டிப்போடும்.

அப்படி!! ஓர் உச்ச நிலைக்கு கொண்டு சென்று;பரவசத்திலாழ்த்தும் குரலால் அவர் கோடிக்கணக்கான இரசிகர்களைப் பெற்றார். இதனால் தமிழர் வாழும் நாடெல்லாம் பறந்து;பறந்து அவர் பாடி மகிழ்வித்தார்.

அந்த வகையில் ஈழத்திற்கு 70 க்களில் 2 தடவைகள் புங்குடுதீவு,சுட்டிபுரம் என வந்த போது; சுட்டிபுரத்தில் இவர் கச்சேரி கேட்கும் நல்லூழ் எனக்குக் கிட்டியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி அன்பர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியவர்.அதுபற்றி அவர் அன்று மேடையில் குறிப்பிட்டது.

"சாதாரணமாக தமிழ்நாட்டில் வானொலிக் கச்சேரி 2 மணி; கல்யாணக்கச்சேரி 2 1/2 மணி; தைப்பூசம்; பழனிமலை முருகன் சந்நிதியில் 3 மணி; ஆனால் இன்று உங்கள் அன்பின்; ஆர்வத்தின் முன் 7 மணி நேரம்; என் வாழ் நாளில் மறக்க முடியாத கச்சேரி”

அன்று எங்கள் ஈழத்தில் புகழ் பெற்ற சாகித்ய கர்த்தா "வீரமணி ஐயரின்"..."சுட்டிபுரம் வாழும் சிவசுந்தரியே;கண்ணகியே "எனும் பாடலுக்கு; மேடையிலே இசை உருப்போட்டுப் பாடிச் சிறப்பித்தவர்.

இவர் கச்சேரியை கதம்பமாகத் தருவார். அதுவும் தனது திரையிசைப்பாடல்கள்; பக்திப் பாடல்கள்; தனிப்பாடல்களேன போட்டு நிரப்பி ;;தமிழ்க் கச்சேரியாக அமைப்பார் . தமிழை அவர் உச்சரிக்கும் செழுமை ; கச்சேரியைத் தனித்துவமாக்கும்.

மும்மூர்த்திகளை மதித்து ஆரம்ப சாகித்தியங்களை முடித்துக் கொண்டு; பாசுரம்;தேவாரம்;பாரதி பாடல்; கோதை தமிழ்; திருப்புகழ் எனத் ;தமிழ் வெள்ளம் கரைபுரண்டோடும்; இவர் கச்சேரிகளில்...;

அன்று தமிழில் பாடுவதற்குப் பல பாடகர்கள் கூச்சப்படும் போது ,அதை ஒரு தவம் போல் மேடை தோறும் செய்தவர்!.
அதனால் பாமரர் முதல் படித்தவர் வரை பல கோடிப் பேரை உலகம் பூராகவும் இரசிகர்களாக வரிந்து கொண்டவர்.



அன்றைய இவர் இசைவிழாக் கச்சேரிகள் இந்திய வானொலியில் இரவிரவாக ஒலிபரப்புகையில் ;ஈழத்தில் வீடுதோறும் விழித்திருந்து கேட்டு மகிழ்வார்கள்.

கடைசிக்காலங்களில் அவர் கச்சேரிகளில் பிரதான அம்சமாக ; தனி ஆவர்த்தனங்களுடன் கூடிய பகுதிகளுக்கு புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களை பாடி மகிழ்வித்தவர். இவர் நியூயோர்க் கச்சேரியில்"சரச மோகன " என்ற பிரபல பாடல்; பிரதான இடம் பெற்றதை நீங்கள் இசைத்தட்டிலாவது கேட்டிருக்கலாம்.

இவர் கச்சேரி மேடைகளே பக்கவாத்தியங்களால் களைகட்டும்; வயலின் , மிருதங்கம், கடம்; கஞ்சிரா;மோர்சிங்; தம்புரா..என அத்தனை பக்கவாத்தியங்களையும் அருமையாக சேர்த்துப் இசைக்கவைத்துப் பாடி மகிழ்விப்பார். அன்றைய நாட்களில் மோர்சிங்குடன் பாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய வித்துவான்களில் இவரும் ஒருவர்.

அவர் கச்சேரிகளில் "என் குருநாதர்" எனும் பாடல் இறுதியாக அமையும்; அப்பாடல் அவர் குரு பக்திக்குச் சான்று;

என்குருநாதர் வேன்குழல் வேந்தன்;
இசையமுதூட்டிய ஞான சீலன்
அன்னை தந்தை அதன் பிறகவரே!
அகண்ட உலகில் வாழ்வளித்தவரே!
என் கீத ஞானம் அவர் தந்த வாழ்வு!
என் உள்ளம் என்றும் அவருக்குத் தாழ்வு!
என் குருநாதன் குழல் சுவாமிநாதன்
திருப்பாம் புரத்தான்!
என் குருநாதன்!!

என முடிப்பார்.


இவ்விதம் தமிழை ஒதுக்கக் கங்கணங் கட்டும் காலங்களில்.
மேடையேற்றுவதில் நல்லதொரு முன்மாதிரியாக இருந்தவர்.


"உலகம் வாழ்க" என்னும் தன் உள்ளக் கிடக்கைக்கமைய; இந்திய அரசுக்கு
பல நிதியுதவிக் கச்சேரிகள் செய்து ; தன் சேவையைச் செய்தவர்.

இசைக்கென வாழ்ந்து ; உனைப் பாடும் பணி யொன்று போதும் என முருகனைத்
தினமும் பாடி மகிழ்ந்தவர் ; தன் 55 பராயத்தில்; இளம் வயதிலே எவரும் எதிர் பாராவண்ணம்
24-03 - 1988 ல் ;தன் குடும்பத்தவர்களையும் ;ரசிகர்களையும் ஆற்றாத் துயரில் ஆழ்த்தி"முருகா" என அவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே; மீளாத் துயில் கொண்டு;முருகன் திருவடியில் பாட இறை எய்தினார்.

தமிழும் இசையும் உள்ளவரை எங்கள் சீர்காழியார் புகழ் நிலைக்கும்!!
அன்னார் நினைவை; உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

Sunday, March 11, 2007

நானும் வானொலிகளும்..

பாடல் கேட்பது ; பலரது பொழுது போக்கு; அதுவும் அன்று அதை வானொலியில் கேட்பதென்பதே!
அலாதியானது.
இன்று விரும்பியதைக் கேட்கக்கூடிய பலவசதி; அத்துடன் எத்தனையோ வானொலிகள்...அப்பாடா??

அவர்களும் தங்கள் வானொலியைக் கேட்க என்ன??எல்லாம் செய்கிறார்கள்...அப்படியும் நேயர்களை மடக்குவது கடினமாகத் தான் இருக்கிறது.

அன்று இருந்த வானொலி; நேயர்கள் எல்லோரையுமே திருப்திப்படுத்தத் திணறியது.
அந்தத் திணறலை இலங்கை வானொலிக்குக் கொடுத்தவர்களில் அடியேனும் ஒருவன்.

கடைசிவரையும் நான் கேட்ட ஒரு பாடல்தனையும் ஒலிபரப்பும் பெருமை; அந்த இலங்கை வானொலிக்குக் கிட்டவில்லையென்பதில் எனக்கு இன்றும் வருத்தமே!!

அன்று இலங்கை வானொலியில் பாடல் கேட்பதென்பதில் கூட "சில அரசியல்" இருந்ததென்பதைப் பின் அறிந்தேன். ஆச்சரியப்பட்டேன்.
நானும் என்னைப்போல் பலரும் ஒதுக்கப்பட்டது "அரசியலே"

எதற்குச் செல்வாக்கைப் பாவிப்பதென்றே விவஸ்தையில்லையா?? என எண்ணியதுண்டு.

இப்படி வானொலிக்கு பாட்டுக்கேட்டெழுதும் வியாதி...பாரிஸ்...வரை என்னுடன் தொடர்ந்து வந்தது.

அன்று 1986 அல்லது 1987 ல் ;பாரிசிலும்..ஒரு தமிழ் வானொலி நாளுக்கு ஒரு மணி நேரம் ஒலிபரப்பானது.

அவர்களும் உங்கள் விருப்பம்;இன்றைய நேயர் என ;எழுதுங்கள் ஒலிபரப்புகிறோம். என விளம்பரம் செய்தார்கள்.

விடுவேனா?? பேனையையும் கடுதாசியையும் தூக்கிவிட்டேன்.எழுதினேன். அனுப்பினேன்.

ம்ம்...நான் கேட்டதெதுவும் ஒலிபரப்பவில்லை. இங்கும் "அரசியலே".. அதாவது...இந்த

வானொலியிலறிவிப்பாளராகப் பயின்றவர்களது (சம்பளமற்றவர்கள்) அறிந்தவர்;தெரிந்தவர்கள் பெயர் கூறவே நேரம் சரியானதால்; இங்கும் "அரசியல்"...விளையாடிவிட்டது.

இதையே சம்பளமாக இந்த அறிவிப்பாளர்கள் நினைத்தார்களோ!! தெரியவில்லை.

இப்படியாக என் வானொலி பாட்டுக் கேட்கும் ஆசை தேய்ந்து போனது.

இன்றைய வானொலிக்கு எழுதுவதிலும்; பேசாமல் இருப்பதே!!மேல்.

ஆனாலும் அன்று வானொலிக் எழுதியவற்றின் பிரதிகள் எதோ ஒரு பக்கத்தில் என் கோர்ப்பில் கிடந்தது.

சில வேளைகளில் அதை எடுத்துப் படித்தும் பார்ப்பதுண்டு. அப்போ ஒன்று புரிந்து கொண்டேன்.

என் பாடல்கள் பற்றிய விமர்சனம் அப்படி ஒன்றும்; மோசமில்லை...ஒலிபரப்பானவற்றுடன் ஒப்பிடும் போது!!

இந்த நிலையில்; இப்போ இணையத்தில் எழுதுகிறேன். இதில் கூட பாடல் கேட்கலாம்; போடலாம்; விமர்சிக்கலாம்.
இதன் தொழில் நுட்டம் புரியவில்லையே!!!
இது பற்றி அறிய "சாரல்- சயந்தனிடம்" தொழில் நுட்பம் பற்றிக் கேட்டேன்."செய்தா போச்சுது அண்ணே"
என அதைச் செய்தே தந்தார்.விளக்கமும் தந்தார்
.

இந்த இணைய அறிமுகம்...கூடல் குமரன்....ஒரு குடிலமைச்சுத் தந்தது..மலைநாடர்...அதை "பீற்றா" சிக்கலில் இருந்து மீட்டுவிட்டது..ஊரோடி -பகீ...பின்பு..;தற்போதைய அமைப்பு மற்றும் ஏனைய உதவுகள்
யாவும் "சாரல்- சயந்தன்...இப்படி பலர் வற்றா உதவியால்..நானும் எதோ எழுதுகிறேன்.எனப் பாவனை
காட்டுகிறேன்.

அப்படி!! நான் பாரிஸ் தமிழ் வானொலிக்கு; "இன்றைய நேயர்" நிகழ்ச்சிக்கு எழுதிய பல
பாடல்களின் முதல் பாடலாகத் தெரிவு செய்த "கொஞ்சும் சலங்கை"..படத்தில் இடம் பெற்ற
"சிங்கார வேலனே தேவா" என்ற பாடலைக் கேட்டு...விமர்சனத்தைப் படிக்கவும்
.

**நிகழ்ச்சியின் இறைவணக்கமாகவும்; மங்கல இசையாகவும் இப்பாடலைத் தெரிவு செய்துள்ளேன்.
எனது மாத்திரமல்ல ;பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் செவிகளில் ரீங்காரமிடும்;இந்த ஜானகி அம்மாவும்;காரைக் குருச்சியாரும் என்னால் மறக்கமுடியாதவர்கள்.
நாதஸ்வரம் தமிழர்களின் இசைச் செழுமையின் பிரதிபலிப்பு.எவர் மனதையும் கவரக் கூடியது.
அதிலும் காரைக்குருச்சி அருணாசலம் அவர்கள் இத்துறையில் இறைகடாட்சம் பெற்றவரென்பது என்கருத்துமாத்திரமல்ல; இசை உணர்ந்தோர் கருத்தும் கூட...
இப்பாடலில் ஜானகி அம்மாவின் குரல் நளினங்களுக்கு;அவர் விரல் ஈடு கொடுத்துள்ள லாவகம்
இசைப் பிரியர்களால் மறக்க முடியாதது.
காரக்குருச்சியாரின் அட்சரசுத்தி பிசகாத வாசிப்பு என்னை இன்றும் இப்பாடலுக்கு மயங்க வைத்துள்ளது.
ஜானகி அம்மாவின் குரலும் இப்பாடலுக்கு காத்திரமான ஒரு நளினத்தைக் கொடுத்துள்ளது.
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத ;என் இஸ்ட தெய்வம் சிங்கார வேலன் புகழ் பாடும் இப்பாடலை ஒலிபரப்பவும்.
இப்பாடலை இசைத்தட்டாக உருவாக்கியோரும் நல்லதமிழ் ரசிகர் போலும்;அருமையான வசனத்தை முதலில் சேர்த்து ;இப்படலின் சிறப்புக்கும் வெற்றிக்கும் கைகொடுத்துள்ளார்கள்.ஒலிபரப்புவீர்களா??
என்னை மகிழ்விற்பீர்களா??

எனக்குப் பிடித்த ""சிங்கார வேலனே தேவா"

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

Thursday, March 08, 2007

கோச்சி வரும் கவனம்....கொப்பரும் வருவார் கவனம்...!







**
ழத்தில் மிகுந்த தமிழ்ப்பற்றுடன்,எங்கும் தமிழ் எதிலும் தமிழ்;அதுவும் சரியான தமிழ் எனும் ஆர்வத்துடனும்; நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் கல்லடி வேலுப்பிள்ளை( 1860- 1944) எனும் அறிஞர் வாழ்ந்தார்.

இவரைக் "கல்லடி வேலர்" என மரியாதையாகவும்;செல்லமாகவும் அழைத்தார்கள்.

எங்கே தமிழ்ப் பிழை கண்டாலும் ,திருத்துவார் அல்லது திருத்தவைப்பார்.
அன்றைய புகையிரதக் கடவைகளின் ; அறிவிப்புப் பலகைகளில் "
கோச்சி வரும் கவனம்" எனக் குறிப்பிடுவது வழக்கம்.


அதாவது "COACH-கோச்" எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம் போல் இச் சொல் வழக்கில் இருந்தது.

இதைக் காணும் போது; இத் தவறைச் சுட்டிக் காட்ட "கல்லடி வேலர்"; எங்கெல்லாம் இவ்வறிவிப்பைக்கண்டாரோ; அதிலெல்லாம் கரியினால் ;"கோச்சிவரும் கவனம்" என்பதன் கீழ் ;கொப்பரும் வருவார் கவனம்" என எழுதி விட்டாராம்.

இதன் பின் "புகைவண்டி வரும் கவனம்" எனும் வாசகம் புழக்கத்தில் வந்ததாகக் கூறுவர்.

இன்றும் இந்தக்

கோச்சி,கொம்மா,கொப்பர்;கொய்யா;கொண்ணன்,கொக்கா,கொம்மான்...எனும் முறைச் சொற்கள்; முறையே ஆச்சி, அம்மா,அப்பா,ஐயா;அண்ணன்,அக்கா,அம்மான் (மாமன்) எனும் முறைச் சொற்களுக்குஈடாகப் பேச்சுவழக்கில் உண்டு.

குறிப்பாகப் கிராமப் புறத்துப் பேச்சு வழக்கில்; இது சற்று நெருக்கமான;நட்பு வட்டாரங்களிலும்;அறிமுகம்மிக்கவர்களிடையேயும் வழக்கிலுள்ளது.

உதாரணமாக:

கோச்சி வீட்டில இருக்கிறாவா? (ஆச்சி வீட்டில் இருக்கிறாரா?)

கொம்மாட்ட ஒரு விசயம் கதைக்கவேண்டும். (அம்மாவிடம் ஒரு விடயம் கதைக்க வேண்டும்)

கொப்பருக்கு இப்ப வருத்தம் சுகமோ? (அப்பாவுக்கு இப்போது நோய் குணமாகிவிட்டதா ?)

கொண்ணர் கொழும்பால வந்திட்டார். (அண்ணன் கொழும்பில் இருந்து வந்துவிட்டார்)

கொக்காவுக்கு கலியாணம் முற்றாக்கியாச்சாமே! (அக்காவுக்கு திருமணம் நிச்சயித்தாகிவிட்டதாமா?)

கொம்மானை ஒருக்கா என்னை வந்து சந்திக்கச் சொல் (மாமாவை ஒருதரம் என்னை வந்து சந்திக்கும் படி கூறிவிடு)

இவ் பேச்சு வழக்கம் தமிழகத்தில் இருக்கலாம். கூறுங்கள்.அத்துடன் ஈழத்தவர் யாருக்காவது; கல்லடி வேலர் பாடல்கள் தெரிந்தால்; கூறவும்.

*07 -மார்ச்; கல்லடி வேலர் அவர்களின் பிறந்த நாள்!!
**இப்படம்; கானாப்பிரபாவின் "கல்லடி வேலர் வாழ்வில்" பதிவிலிருந்து;அவர் அனுமதியுடன் இடப்பட்டது.நன்றி

சென்னையில் நாதஸ்வர இசை விழா

சென்னையில் நாதஸ்வர இசை விழா ஒன்று முதல் தடவையாக
நடந்திருக்கிறது.
கனடாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் (முருகதாஸ்)ஒருவரின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த இசைவிழா, தமிழகமெங்கும் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு மிகவும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.
வழமையான மார்கழி மாத இசைவிழாவின் போது நாதஸ்வரக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக பலராலும் கூறப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த நாதஸ்வர இசைவிழா மிகவும் முக்கியமான ஒன்றாக பல இசை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த இசைவிழா குறித்து எமது சென்னை நிருபர் டி. என். கோபாலன் தயாரித்து வழங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/03/070304_nadeswaram.shtml

இது BBC இல் இருந்து எடுக்கப்பட்டது.

இதன் உருவாக்க கர்த்தா ஒரு ஈழத்தமிழர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

Wednesday, March 07, 2007

பாரதியார் பாடல்-தேவாரம்- ஒளி ஒலி -நித்யஸ்ரீ

இது ஒரு பரிசோதனைப் பதிவு!!

எல்லோரும் பாட்டுப் படமெல்லாம் காட்டுராங்களே!!
நாமும் முயன்று பார்ப்போம்.
என ஒரு சிறு முயற்சி!!


நம்மிசை, ஏன் திரையிசையிலும் முத்திரை பதித்த நித்தியஸ்ரீ!!

">

Thursday, March 01, 2007

எலும்பில்....ஓர்..தேவாலயம்!!




உண்மை!சில சமயம் கற்பனைக் கதைகளிலும் அன்னியப்படும்.
அது செக்(Czech) குடியரசின் தலைநகரான பராக்கிலிருந்து(PRAGUE) ;
70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள SEDLEC எனும் கிராமத்தில்
காணலாம்.

இந்தக் கிராமத்திலுள்ள தேவாலயத்தின் உட்புறம்; மனித
எலும்புகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இக்கதை 1218 ல் ஆரம்பமானது. ABBOT HENRY என்பவர் ;
புனிதமண்ணுக்கு யாத்திரை செய்து திரும்பும் போது,
அங்குள்ள
பழமையான இடுகாட்டு மண்ணைக் கொண்டு வந்து இந்தத்
தேவாலயத்தில் தூவியுள்ளார்.

இதன் காரணமாக இத்தேவாலயம் மிகப் புனித இடமானதுடன்;
இடுகாடாகவும் மாறியது.



1318 வரை; 30000 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. 1511 ல்
கட்டாயமாகப் பழைய எலும்புகள்அப்புறப்படுத்தினால் தான் ;
புதிய உடல்கள் அடக்கம் செய்யலாமெனும் நிலை வந்தது.



அப்படிச் சேர்த்த எலும்புகளைக் கொண்டு இத் தேவாலயத்தை அழகுபடுத்தும்படி; 1870 ல் Duke of SHWARTZENBERG அவர்கள்; மரவேலையாளர்களை நியமித்து. அவர்கள் அப்பணியை அழகுற
முடித்தனர்.



இத்தேவாலய உள்புறத்தை சுமார் 40000 உடல்களின் எலும்புகள் அலங்கரிக்கின்றன.அத் தேவாலயத்தின் சில படங்களே இவை.

இத்தனை கால்களா? இதுக்கு!!!




சீனாவின் FUJIAN மாநிலத்திலுள்ள உணவு விடுதியில் சமையலுக்கு
வாங்கிய தவளைக்கு இத்தனை கால்கள் பி. பி. சி யில் பார்த்தேன்.
நீங்களும் பாருங்கள்...

Friday, February 23, 2007

வாகீச கலாநிதி கி.வா.ஜ வும்....மோசம் போதலும்



ழத்திலும்;தமிழகத்திலும் சில தமிழ்ச்சொற்கள்;தொடர்கள் இருவேறு
கருத்துக்களில் புழக்கத்திலுள்ளதை அறிந்திருப்பீர்கள்.

ஈழத்தில் அன்றைய இலக்கிய,சமய விழாக்களுக்கு;தமிழக அறிஞர்களைச்
சொற்பொழிவுக்கழைப்பது வழமை!

அப்படி வருபவர்களில் கலைமகள் ஆசிரியர் வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களும்அடங்குவர்.

"கலைமகள்" சஞ்சிகைக்குஆரம்பகாலத்தில் இருந்து , மறையும் வரை ஆசிரியராக இருந்ததுடன் இன்று வரை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் கலைமகளுக்குத் தனி இடத்தைப் பிடித்துத் தந்த அதன் முன்னாள் ஆசிரியர் மறைந்த தமிழ் இலக்கிய; இலக்கணமேதை;சிறந்த பேச்சாளர் வாகீசகலாநிதி எனப் பட்டமளித்துப் பாராட்டப்பட்ட கி.வா.ஜகந்நாதன் அவர்களாவர்.

இவரை அன்புடன் எல்லோரும் "கி.வா.ஜ " எனவே குறிப்பிடுவார்கள்.

இவரை அன்றைய ஈழத்தில் சமய;இலக்கிய விழாக்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு அழைப்பது வழக்கம்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் பருத்தித்துறைக்குப் பலதடவை அதன்அன்றைய தலைவர் நீதியரசர் சிறீஸ்கந்தராசா அழைத்துள்ளார்.

அப்படி வரும்பொழுது; வட இலங்கைத் தமிழ்ப்பண்டிதர்கள்;அறிஞர்கள்
இவரைச் சந்தித்து உரையாடிச் சந்தேகங்களை நிவிர்த்தி செய்வது வழக்கம்;
இதனால் பல தழிழார்வலர்களை, கி.வா.ஜ வுக்கு; ஞாபகம் உண்டு.

ஒரு தடவை இப்படி,அவர் வந்து தமிழார்வலர்கள் சந்திப்பு நடக்கும் போது; கி.வா.ஜ ;ஞாபகமாக ;அதில் வழமையாகப் பங்கேற்கும்; புலோலியைச் சேர்ந்த பண்டிதர் பற்றி; அவர் ஏன்?பங்குபற்றவில்லை என விசாரித்த போது; அப் பண்டிதர் மகள் சில வாரங்களுக்கு முன் "மோசம் போய் விட்டார்"..... அந்தக் கவலையில் அவர் வரவில்லையெனக் கூற..... கி.வா.ஜ....அதிர்ச்சியுடன் "யார் அந்தச் சண்டாளன் " என்றாராம்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும்; கி.வா.ஜ...தவறாகப் புரிந்ததை;
உணர்ந்து...அவருக்கு விளக்கிக் கூறிய போது.
அவர் விபரத்தை அறிந்து; அந்தப் பண்டிதர் வீடு சென்று ;ஆறுதல் கூறினாராம்.
இதை பின் அவரே! தன் ஈழம் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இப்போதும் தமிழகத்தல் மோசம் போதல் என்பது; ஒரு பெண் ஆணிடம்
கெட்டுப்போதல்(நம்பிக்கை கொடுத்துக் கெடுத்துக் கைவிடுதல்) எனும்
கருத்திலேயே வழக்கிலுள்ளது.

ஈழத்தில் சில பகுதிகளில் இறந்து போதலை; மோசம் போதல் எனக் குறிப்பிடும் வழக்கம் வயதாளிகள் மத்தியில் உண்டு.

இப்படிக் குறிப்பிடும் வழக்கம் தமிழகத்திலுண்டா?

***இயன்றவரை படம் போட்டுப் பதிவு போடவேண்டுமென்று நினைப்பதாலும்; இன்றைய இளைஞர்களுக்கு இவரைப் படத்துடன் அறிமுகப் படுத்துவதற்காகவும். இவர் படத்தை இணையத்தில் தேடி எடுக்கமுடியாமல் இருந்தபோது; நமது பதிவுலகில் விசாரிப்போமென நினைத்துப் சிலருக்கு வேண்டுகோள் விட்டபோது பொறுப்புடன்;பலர் பதில் தந்து தங்கள் இயலாமையை தெரிவித்தார்கள். குறிப்பாகச் சகோதரி செல்வ நாயகி.ஆனால் துளசி அக்கா;சகோதரி வல்லி சிம்ஹன்; தி.ரா.ச அண்ணா(குடும்பப்படத்தை அவர் சகோதரர் மகனிடமிருந்து); சின்னக்குட்டியண்ணர் இந்தப் படங்களைத் தந்துதவினர். அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி!

Wednesday, February 21, 2007

விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது!!






பரபரப்பான காலை வேளை; போக்குவரத்துச் சந்தடி சத்தம்;
இரண்டு நண்பர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"ஏய்!...எங்கேயோ..பூனைக்குட்டி கத்துற சத்தம் கேட்குது பாரு"..என்று சுற்று முற்றும் பார்த்தான். ஒரு நண்பன்.

தூரத்தில் நடைபாதையோரத்தில் கல்லிடுக்கில் பூனைக்குட்டி ஒன்று சிக்கியிருந்தது.

நண்பன் சென்று அந்தக் கல்லை நிமிர்த்திப் பூனைக்குட்டியை விடுவித்தான்.
அடுத்த நண்பனுக்கோ ஆச்சரியம்!!

தெருவில் எத்தனை பேர் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை.

உனக்கு மட்டும் கேட்டிருக்கிறது. உன் காது ரொம்ப சக்தி வாய்ந்தது தான் என்றான்.

"விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது.என்றான் பூனைக்குட்டியைத்
தூக்கிவிட்ட நண்பன்!

"எப்படிச் சொல்கிறாய்?"

"இப்போ பார்" என்று கூறித் தன் பையில் இருந்த சில்லறைக் காசுகளை;
நடை பாதையில் போட்டான்.

உடனே நடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

"பார்த்தாயா இதுதான் மனித இயல்பு.காசு என்றதும் காது திறந்து கொள்கிறது" என்றான் நண்பன்.

**மன்னிக்கவும்!
இதை நான் கற்பனை செய்யவில்லை. காலை என் நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து;
மின்னஞ்சலில் எனக்கு அனுப்பினார்.நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிரலாமே எனப்
பதிவிட்டேன். அதைக் குறிப்பிடத் தவறி விட்டேன்.
பின்னூட்டத்தைப் பார்த்ததும்! அதைப் குறிப்பிட வேண்டிய அவசியம் உணர்ந்தேன்.
என்ன? இந்த ஆள் இப்படியெல்லாம் யோசிப்பதாவது? அப்படியேன நினைக்கிறீங்களா?

***படம் :நீர்கொழும்புக் கடற்கரை மாலைச் சூரியன்!

Friday, February 09, 2007

GRAMMY- கிராம்மி விருதும் -இந்தியா டுடேயும்





2003 ல் "GRAMMY "-கிராம்மியின் 5 விருது; " நோரா ஜோன்ஸ்" எனும் ஜாஸ் பாடகிக்குக் கிடைத்தது. உங்களில் ஒரு சிலருக்காவது ஞாபகம் வரலாம்.

இந்த நோரா ஜோன்ஸ் உலகக் கீர்த்தி மிக்க சித்தார் வித்தகர் ரவி சங்கருக்கு ; அவர் உதவியாளராக இருந்த ஆங்கிலப் பெண்ணுக்கும் பிறந்த பெண்.

இந்தப் பெண்; அன்று விருது வழங்கும் விழா மேடையில் மறந்தும்;
தன் தந்தையைப் பற்றி வாய் திறக்கவில்லை.

தன் இந்த வளர்ச்சிக்குத் தாயே காரணமெனக் கூறியவர். காரணம் இளமையிலே ரவிசங்கருக்கும்; நோராவின் தாயாருக்கும் மனக்கசப்பாகிப் பிரிந்து விட்டனர்.நோரா இசை கற்றுத் தேறினார்.

இந்த நிலையில் விருது பெற்றார். புகழும் பெற்றார்.

அதை இந்தியா டுடே ; கொண்டாடியது.அட்டையில் போட்டு ஆராதித்தது; முழுத் தமிழருமே இதில் மகிழ்வது போல் ஆர்ப்பரித்தது. எனக்கு சரியாகப்படவில்லை.
இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு வந்த காலங்களில் இருந்து படித்தவன்;அவதானித்தவனேனும் வகையில் தமிழ் இசைக் கலைஞர்களைக் கண்டு கொள்ளாத போக்கும்; சினிமாவைத் தூக்கித் தலையில் வைத்தாடுவது; விற்பனை மந்தமாகும் போது; இந்தியர்களில் "செக்ஸ்" வாழ்வு பற்றி; "குஸ்பு" விடம் ஆய்வு செய்து ஆதாயம் கண்டு; நாட்டை அல்லோகல்லப் படுத்துவதுமான பத்திரிகையாகவே இருந்தது. "செக்ஸ்" ஆய்வுக் கட்டுரையென்பது ஆரம்பகாலத்திலே இருந்து இருக்கிறது.ஆனால் குஸ்பு விவகாரத்தின் பின்பே சூடுபிடித்தது.நீங்களும் அவதானித்திருக்கலாம்.
ரவி சங்கர் மகள் என்பதைத் தவிர நாம் அவரைத் தலையில் வைத்தாட என்ன? உள்ளது எனும் கேள்வியும்; தன் தந்தை புகழ் பூத்த
இந்திய இசை மேதை என்று ஒர் இசைக்குப் விருது வழங்கும்
விழாவில் கோடிட்டுக் காட்டாததும்;நோரா நம் எல்லோரையுமே! கேவலப்படுத்தியதாக உணர்ந்ததாலும்;நமது இசைக் கலைஞர்களை
இந்தியா டுடே கண்டு கொள்ளாத போக்கையும் என்ணி; ஆசிரியருக்கு என் மன உணர்வை எழுதினேன்.

அக் கடிதம் மார்ச் 26,2003 இதழில் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது.

அந்த நாட்களில்; நான் "தாரணி சுப்பிரமணியம்" எனும் பெயரிலே தான்; பத்திரிகைகளுக்கு எழுதுவேன்.

ஒவ்வொரு வருடமும் இந்த "GRAMMY" விருது வழங்கல் நடந்தால்; இவர் ஞாபகம்;இந்தியா டுடேக்கு நான் எழுதியதும் ஞாபகம் வரும்.
இவ்வருடம்; 49 வது வருடமாக;இந்த விருது வழங்கும் நாளில் ,அதை உங்களுடன் பகிர்கிறேன்.
*********************************************
1 ம் படத்தில் கிளிக்கினால் கடிதத்தைப் பெரிதாகப் பார்க்கலாம்.
தாரணி சுப்பிரமணியம்
பாரிஸ்13 - 03 - 2003

ஆசிரியர்
இந்தியா டுடே

கனம் அசிரியர் அவர்கட்கு!
தங்கள் மார்ச் 12 இதழில் "நோரா ஜோன்ஸ்" ;விருதுகள் பற்றி எழுதிக் குதூகலித்துள்ளீர்கள்.
இதன் மூலம் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தையும் கேவலப்படுத்தியுள்ளீர்கள்.
அந்தப் "பாடப் பிறந்த குயில்" தவறியும் விருது பெறும் விழாவில் தன் தந்தை "ரவி சங்கர்" பற்றிக் குறிப்பிடவில்லை.
இத்தனைக்கும்அவர் ஓர் இசைமேதை ஆனால்; ஏன்? நீங்கள் குதிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

அவர் "எந்த இந்திய மொழியில் பாடிவிட்டார்?";எந்த இந்திய இசையை இசைத்து விட்டார்?" அவர் பிறக்கஓர் இந்தியர் காரணமாக இருந்த தென்பது தவிர என்ன? இந்தியத் தன்மை அங்கே பளிச்சிட்டதெனக்கூத்தடிக்கிறீர்கள்.உங்களைத் திருத்தவே முடியாதா?

ஆஸ்கார்;கிராமி விருதுக்குழுவில் உள்ளவர்களுக்கு ,இந்தியத் தன்மை பற்றித் தெரியுமா? தெரிய என்றாவது ஆசைப்பட்டர்களா? ஏன் இவற்றுக்கு ஏங்குகிறீர்கள்; அதை ஓர் இந்திய வேர்நுனியோ;துளிரோபெற்றுவிட்டால்,ஏன் ஆட்டம் போடுகிறீர்கள்.

இந்திய இசைக்காகவே வாழ்ந்து மறைந்த நாதஸ்வரச் சக்கரவர்த்திகள்;ஷேக் சின்ன மௌலானா; நாமகிரிப்பேட்டை கிருஸ்ணன் போன்றோர் மறைந்தபோது; மறந்து விட்டீர்களே! அட்டையில் போட்டுஒவ்வொரு இந்தியரும் ஆராதிக்க வேண்டிய " பாரத ரெத்தினங்கள்" அவர்கள்.

உங்களுக்கு இந்திய இசையுணர்வே இல்லையா? அதற்கு நிகரானது..எதுவுமில்லை அவர்களே! ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் நீங்கள் இன்னும் "சுதந்திரம்" பெறவில்லை. அதனால் உண்மையை மறுக்கிறீர்கள்.

திருந்துவீர்களா?

"நெஞ்சு பொறுக்குதில்லையே! உங்களைப்போல் நிலை கெட்ட மனிதரை நினைத்தால்!"

தங்களை மதிக்கும்
தாரணி சுப்பிரமணியம்.
**************************************************************************************

Wednesday, February 07, 2007

பிடிக்காதெனினும்; இது பிடித்தது!!

முதல் வேலை!

என்ன இது வேலை!
எனக்குப் பிடித்தவாறு
உடையணிய உரிமை தர மறுக்கும் வேலை!

என் தாய் மொழி!
என் நாவில்
எட்டிப் பார்க்கக் கூடத் தடை போடும் வேலை!!

போலியான புன்னகையொன்றை
நிரந்தரமாய்
என் முகத்தில்;ஒட்டிவிட்ட வேலை!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய்ப் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்
கம்யூட்டரில் கட்டிப் போட்டவேலை!

காந்தி விரட்டியவெள்ளயன்
இரவில் நித்திரை காண
என் நித்திரை
கலைக்கும் வேலை!

இங்கே கற்றதையும்,பெற்றதையும்
வெளிநாட்டு டாலருக்கு
அடகு வைத்துவிட்ட வேலை!

குவியலாய் இறுகிப் போன
இந்த வெறுப்பையெல்லாம்
சுக்கு நூறாய் சிதறடித்தது
"இரு துளி கண்ணீர்"!

"ரொம்பச் சந்தோசமா இருக்கடா"
முதல் மாத சம்பளத்தை நீட்ட;
தாயின் கண்ணில் தோன்றிய
"ஒரு துளி!!

"ரொம்ப கஸ்டமா இருக்குடா"
வெகு நாளாய் வேலை தேடும்;
நண்பனின் கண்ணில் தோன்றிய
"மற்றொரு துளி!

கெ.கார்த்திக் சுப்புராஜ்



இதை சென்னையிருந்து சிவா எனும் ;நண்பர்
அனுப்பியிருந்தார்.


சொல்லப்பட்டவை! உண்மையே!

சிவா ;இத்துறை சார்ந்தவர் அனுபவித்துள்ளார்.

நீங்களும் சொல்லுங்கள்!

Saturday, February 03, 2007

எம் தமிழும் இத்தாலிய மத குருவும்.

எம் தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ்ச் சான்றோர் பலர்..இவர்கள் தவிர மேல்நாட்டறிஞர்களும் தமிழின் தொன்மையாலும்;இனிமையாலும் கவரப்பட்டு; இலக்கியப்பணி புரிந்து;தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்கள்.இவர்கள் அனைவர்களிடையேயும் அந்நிய நாட்டில் பிறந்து;வளர்ந்து; படித்து தமிழின் செழுமையைக் கேள்விப்பட்டு,தமிழகம் வந்து தமிழைக் கற்று ;தமிழ்ப் பண்பாட்டை அறிந்து;தமிழராக வாழ்ந்து பெருமை சேர்த்தவர் "வீரமாமுனிவர்" எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI) பாதிரியார் எனும் இத்தாலிய கத்தோலிக்க மதகுரு.

4 நூற்றாண்டுகளுக்கு முன் கிருஸ்தவப் பாதிரியாராக ;தமிழகம் வந்த பெஸ்க்கிப் பாதிரியார்; தமிழ்பால் ஈர்க்கப்பட்டு தமிழுக்கும்;தமிழருக்கும் அரிய சேவையாற்றினார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன் ;இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது; இவர் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இத்தாலியில் உள்ள காஸ்திலியோனே எனும் கிராமத்தில் 1680; நவம்பர் 8 ம் திகதி பிறந்த இவருக்குப் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்ட் பெஸ்கி (BESKI). இளமையிலே மிகுந்த அறிவுடையவரான ;இவர் முறையான பள்ளிக் கல்வியில்லாமலே இத்தாலிய மொழியை தவறின்றிப் பேச எழுதக் கற்றுக்கொண்டார். இவர் திறன் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்.

இளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு
மிக்கவராக இருந்து; 18 வயதில் ஜேசு சபையில் சேர்ந்தார்.உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள்; கிரேக்கம்;லத்தீன்;போத்துக்கீச;பிரன்சிய;ஜேர்மன்;ஆங்கிலம்; ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவராகி அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஜேசு சபையில் இருந்ததால் அபாரமான பேச்சாற்றல் மிக்கவராகவிருந்து; தன் அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதால் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் கடமைபுரிந்து; அதிலும் திருப்தியின்றி 4 ஆண்டுகள் கிருஸ்தவ வேதாகமத்தைக் கற்று மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.

வியாபார நோக்கில் பொன்;மணி; கனி,கிழங்கு தேடிவந்த ஐரோப்பியர்;இந்தியா இவற்றுடன் கலையும்,பண்பும்;அறிவும் மலிந்த தேசம் என்ற கருத்தைப் பரப்பினர். "கலை மலிந்த பாரதமென்பது"இத்தாலியரைக் கவர்ந்தது; குறிப்பாக மொழி; கலை ஆர்வமிக்க பொஸ்கிப் பாதிரியாரைக் கவர்ந்ததால்பாரதம் வந்து இவற்றை அறிய வேண்டுமெனத் தீர்மானித்தார்.

இவர் அறிவு ஐரோப்பியர்களுக்குப் பயன்படவேண்டுமென பெற்றோரும்;மதகுருமாரும் விரும்பிப் பட்டங்கள் பதவிகள் கொடுக்க முற்பட்டபோதும்;அவரோ இந்தியக் கலையார்வத்தால் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 யூனில் கோவா வந்து சேர்ந்தார். அந்த நாட்களில் கோவா வெளிநாட்டு வணிகர்கலுடன்; இந்திய மாநில வணிகர்களும் நிறையுமிடமாக இருந்தது.

சில நாட்கள் கோவாவில் தங்கியவர்;எத்தனையோ விதமான இந்திய மக்கள் மொழி,உடை;உணவு என்பவற்றைக் கவனித்து;அவற்றின் வேறுபாடுகளை உற்று நோக்கி; ஒன்றிலிருந்து மற்றதற்கு உள்ளதொடர்பை பல்மொழிப் புலவரான இவர் இலகுவில் உணர்ந்தார்.திராவிட நாகரீகம் ;கலை; பண்பு என்பவற்றையும் புரிந்துகொண்டு; தமிழ்நாடு செல்ல உத்தேசித்து;கோவாவின் சந்தடி மிக்க வணிகச் சூழலிலிருந்து விடுபட ;கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக "அம்பலக்காடு" ஜேசு ஆலயம் வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

தமிழகம் வந்தவர்; தனக்குச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது போலும்; இம் மண் தெய்வீகம் நிறைந்த மண்ணெனவும் உணர்ந்ததுடன்..;தமிழகம் ஒற்றுமையின்மை;அமைதியின்மை;ஏழைகளுக்குத் தகுந்த கல்வி;சுகாதாரமின்மை போன்ற பல இன்னல்களுடன்; மன்னர்கள் பதவிப்பித்தும்;போட்டி பொறாமையும் கண்டு இவ்வவலங்கள் தீரச் சேவை செய்யத் தீர்மானித்து மொழியைப் பேசப் பழக மக்களோடு மக்களாக வாழவேண்டுமெனத் தீர்மானித்தார்.


அதிஸ்டவசமாக சுப்பிரதீபக் கவிராயரின் நட்பேற்படவே;அதுவே இவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவரிடம் இலக்கண;இலக்கியம் கற்று; கவி புனைந்து; அல்லும் பகலும் தமிழ்நயத்தில் மூழ்கி; இறைவனை எண்ணவும்;வணங்கவும் ஏற்றது தமிழ்;பக்தியும்;கனிவும் தமிழின் சிறப்புக்கள் எனக் கூறினார்.பன்மொழிப் வித்தகர் பெஸ்க்கிப் பாதிரியார்.

இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றவர். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள்;தேவாரம்; திருப்புகழ்;நன்நூல்;ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.தமிழ் கற்க ஏதுவாக தமிழ்- லத்தீன் அகராதியை உருவாக்கினார்.அதில் 1000தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். பிற மொழிகளைக் கற்று தாய் மொழியில்லாத மொழிகளுக்கு உறவுப் பாலமமைத்தவர் இவர்.

சுவடிகளுக்குப் புள்ளி வைக்காமலே முன்னாளில் எழுதுவது வழக்கம்.புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும்.மேலும் குறில்; நெடில் விளக்க (அ:அர, எ:எர) என்று "ர" போடுவது வழக்கம்."ஆ" என எழுத 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது.இந்த நிலையை மாற்றி "ஆ,ஏ" என மாறுதல் செய்தவர்.தமிழ் இலக்கிய; இலக்கணங்கள் பண்டிதநடைக் கவிதையாக இருந்தது. மக்கள் அனுபவிக்க முடியவில்லை என்பதனை அறிந்து வசன நடையாக மாற்றியவர்.

1728 ல் ;பாண்டிச்சேரியில் "பரமார்த்த குரு" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது."அதிவிவேகபூரண குருவுக்கு மட்டி;மடையன்;பேதை;மிலேச்சன்;மூடன் என்ற ஐந்து சீடர்கள், "ஆறு தூங்குகிறதா? விழிக்கிறதா? என்று பார்ப்பதும் "குதிரை முட்டை வாங்கச் செல்வதும்" சிரிப்பூட்டும் கதைகள், இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து இவர் எழுதிய கவிதை இதோ!

"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிளுக்க

பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்

வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம் போம் காதம் வழி"...

இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் ;தெலுங்கு;மலையாளம்;கன்னடம் போன்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது.

1738 ல் "தொன்நூல்" என்ற இலக்கண நூலை எழுதியவர்; இதை லத்தீனிலும் வெளியிட்டார்.தமிழ் இலக்கணம் கற்றதால், பண்டைய "நிகண்டுகளை" வரிசைப்படுத்தி, மேல்நாட்டு முறையை மேற்கொண்டு"சதுரகராதி" இயற்றினார்.கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப்பதங்களுக்கு எளிதான விளக்கம் காணமேல்நாட்டு அகராதித் தொகுப்பே சிறந்ததெனக் கருதிய இவர்.சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். பெயர்; பொருள்; தொகை; தொடை என்ற நான்கு பிரிவு கொண்டுள்ள "சதுரகராதியில்" ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நெடில்;கீழெதுகை;தொடைப்பதம்,அனுபந்த் அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழாராச்சி மகாநாட்டின் சிற்பியும், பல உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்து பண்பாட்டு நெறிகளை அறிந்தவரும், ஈழத்தின் தமிழறியருமான தனிநாயகம் அடிகளார்..."தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாகிய பெஸ்கி முனிவர், தமிழ் அகராதியாக்கியதன் மூலம் தமிழகராதியின் தந்தையாகிவிட்டார்.இவரியற்றிய "சதுரகராதி" தமிழகராதிகளுள் முதன்மையானது. இவரது "தொன்நூல்" இலக்கண நூல்களிலே சிறப்புடையது. "தேம்பாவணி"யைப் படைத்ததன் மூலம் திருத்தக்க தேவர்;கம்பர்;இளங்கோவடிகள் போன்ற கவிச்சக்கரவர்த்திகளின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தேம்பாவணியை மத நோக்குடன் பார்க்காமல் தமிழ் நோக்குடன் பார்த்தால் ,இலக்கிய நயங்களைப் புரிந்து மகிழலாம்.பிற நாட்டு இலக்கியக்கருத்துகளைத் தமிழில், வாசமிகு மலர்களாகக் கோர்த்து, கதம்பமாக இணைத்தளித்துள்ளார்.அந்தக் கருத்துக்களைத் தமிழ்ப்பண்புக்கும், கலையுணர்வுக்கும் நகசு செய்து ஒளியேற்றியிருக்கிறார்." என்றார்.

"தேம்பாவணி" ஜேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய சூசை நாதரின் வரலாற்றை விரித்துரைக்கும் காவியம்; 36 படலங்களாலும்; 3615 விருத்தப் பாக்களாலும் ஆன கிருஸ்தவ வரலாற்று நூலான இது; தமிழ்ப்பண்பாடும், மரபும் கொண்ட காவியமாகத் திகழ்கிறது.ஜேசுவும்; மேரியும்;சூசை நாதரும் ஊரை விட்டே விரட்டப் பட்டபோது மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் காணாது கலங்கும் மக்கள் மனநிலையை வர்ணிக்கும் முனிவர்....

"மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள்

குயில்கள் கிளிகாள் கொடிகாள் உரையீர்!

எயில்காள் வனத்தினை யெஞ்சருநலோர்

வெயில் காள மறைந் தென மே விடமே!"

[மயில்களையும்,பல்வகை வண்டுகளையும்;கிளிகளையும் பார்த்துக் கலங்கும் மக்கள் கேட்கிறார்கள்;மேகத்துள் மறையும் சூரியனைப் போல் மறைந்த மூவர் இருக்குமிடத்தைச் கூற மாட்டீர்களா?]

"வரையீர் புனலே மழையீர் வரையே!

விரையீர் அமநாவிரி பூந்தடமே!

கரையீர் மலர்த் கொட சூழ் பொழிலே!

யுரையீர் உயிரின்னுயிருள்ளொளியே!

[மலையை ஈர்த்து விழும் புனலையும்; மேகத்தையீர்த்து மழையாகத் தரும் மலைகளையும்புன்னை முதல் குளிர் பூமரங்கள் சூழ் சோலையே!எம் உயிரிலும் இனியவர்களாகிய மூவர் இருக்குமிடம்சொல்லமாட்டீர்களா?]

இயற்கையை வர்ணிக்கும் இதுபோல் பல பாடல்கள் "தேம்பாவணி" யின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
காணாமல் போன இயேசு பிரான் காட்சி தருகிறார். அந்த ஆனந்தத்தை வர்ணிக்கும் பாடல்...

"தண்டமிழ் சொல்லுநூலும் சால்பொடு கடந்த வண்ணத்
துண்டமிழ்த் துவப்பினுள்ளத் தோங்குமிவ் விருவர் தம்முட்

பண்டமிழுரைத்ததே போற் பயன்பகர்ந்திளபற்காண

மண்டமிழ் துரும வாவின் மகிழ்வினையுரைப் பாரோ!

[வீணையில் எழும் நாதத்தைப் பார்க்கினும் இனிமை மிக்க தமிழ்ச் சொற்களை உச்சரிக்கக் கேட்கும் போதுஎத்தகைய பேரானந்த முண்டாகுமோ!, அதற்குமதிகமான மகிழ்ச்சியை ஜேசுவைக் கண்டதும் மக்கள் கொண்டனர்.என்பது பாடலின் கருத்து.]

'தேம்பாவணி' மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது.பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த இவரை; தமிழ்ப் புலவர்கள்;"எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி;முப்பதிமூன்று லட்டத்து;முப்பதிமூவாயிரத்து;முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள்; சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள் என்றதும்,சபையில் சிரிப்பொலி எழும்பிப்;பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.
"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு "வீரமா முனிவர்" என்ற பட்டம் அளித்து; ராஜரிஷி என்றும் சிறப்பித்தது.

பின், தஞ்சையில் காவிரிக்கரையில் ஏலாக்குறிஞ்சியில் மாதா கோவிலொன்று நிறுவினார். போர்க் காலத்தில் மக்கள் தஞ்சமடைந்ததால் "அடைக்கல மாதா" எனக் கூறப்பட்டார். அந்த மாதாமேல் "அடைக்கல மாலை" எனும் நூல் புனைந்தார்.மதுரையில் பல காலம் வாழ்ந்த வீரமா முனிவரை; மன்னர்கள் அனைவரும் பெருமைப்படுத்தினார்கள்.

ஒரு தடவை புதுக் கோட்டை போர்க்களமானபோது; சந்தாசாகிப்பின் படைகளைப் பற்றி தளபதியிடமே! நேருக்கு நேர் வாக்குவன்மையுடன் நியாயம் கேட்டபோது;தளபதி சேனாதிபதியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.அந்த இடைவெளியில் உருது மொழி பேசப் பழகி சேனாதிபதியுடன் உருதில் பேசினார். முனிவரது புலமையை மெச்சிய சேனாதிபதி;அந்நாளில் 12;000 ஆண்டு வருமானம் வரும் உக்களூர்;மால்வாய்;அரசூர்;நல்லூர் போன்ற கிராமங்களை முனிவருக்கு மானியமாக வழங்கி "இஸ்மதி சந்நியாசி" என்ற சிறப்புப் பட்டமும் அளித்துக் கௌரவித்தார்.

அத்துடன் சேதமடைந்த ஆலயங்களைத் திருத்த ;வேண்டிய பொருளுதவியும் செய்து, தன் பாட்டனார் பாவித்த தந்தப் பல்லக்கைப் புலவருக்குக் கானிக்கையாக்கினான்.அத்துடன் தன் நாட்டின் கௌரவ திவான் பதவியையும் அளித்து; பல்லக்கில் அரச மரியாதையுடன் உலாவர ஏற்பாடு செய்தான். ஆடம்பரம் விரும்பா முனிவர்; நண்பரின் மகிழ்ச்சிக்காக சில தடவை அப்பல்லக்கில் ஏறினாராம்.

ஆடம்பர வாழ்வில் ஆர்வமற்ற முனிவர், நாளும் ஏழை எளிய மக்களுடன் குடிசைகளில் தங்கி ,எவர் எதைக் கொடுத்தாலும் உண்டு. பனையோலைப் பாயில் படுத்து; மக்களோடு மக்களாக ,வட்டாரம் வட்டாரமாகச் சென்று ,பாரசீகம்;இந்துஸ்தானி மொழிகளைக்கற்று; எங்கே தமிழ் விழா நடந்தாலும் அழைப்பின்றிச் சென்ற தமிழ் யோகி "வீரமா முனிவர்" ,சிவந்த மேனியில் காவியும்;காதில் குண்டலமும்;நெற்றியில் சந்தணப் பொட்டும்,கையில் ராஜ ரிஷிகளின் சின்னமான கோடாரியும்;வெண்தலைப் பாகையும் ,சாந்தி தவளும் முகமாகவும் குடிசையிலே எளிமையாக தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து ,கடைசிக் காலத்தில் அம்பலக்காட்டிலுள்ள தேவாலயத்தில் தங்கி அங்கேயே 04 - 02 - 1743ல் இறையடி எய்தினார்.

தமிழ் மண்ணில்,தமிழ்ப் பெயருடன்;தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து ,தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த "வீரமா முனிவரை" அவர் ,நினைவு நாளான இன்று நினைத்துப் போற்றுவோம்.

***ஆவூர்த் தேவாலயத்திலுள்ள வீரமா முனிவர் சிலை***

Wednesday, January 31, 2007

அமிதாப் பச்சனுக்கு பிரான்சின் உயர் விருது!



டெல்லியில் உள்ள பிரான்சின் தூதராலயத்தில் 27 ஜனவரி 2007; சனிக்கிழமை, பிரஞ்சுத் தூதர் திரு. டொமினிக் யிரா(Mr.Dominique Girard) வால்; பிரான்சின் உயர் விருதான "செவலியே"(chevalier de la légion d'honneur) விருது;
இந்தியாவின் உலகப் புகழ் பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற அமிதாப் பச்சன்,"இது முழு இந்தியச் திரைத் துறைக்குக் கிடைத்த மரியாதை" எனக் கூறியுள்ளார்.

இவ் விருது ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.


விருது பெற்ற வித்தகரை வாழ்த்துவோம்!


*படம் BBC இல் இருந்து பிரதி பண்ணியது!