Wednesday, January 31, 2007

அமிதாப் பச்சனுக்கு பிரான்சின் உயர் விருது!



டெல்லியில் உள்ள பிரான்சின் தூதராலயத்தில் 27 ஜனவரி 2007; சனிக்கிழமை, பிரஞ்சுத் தூதர் திரு. டொமினிக் யிரா(Mr.Dominique Girard) வால்; பிரான்சின் உயர் விருதான "செவலியே"(chevalier de la légion d'honneur) விருது;
இந்தியாவின் உலகப் புகழ் பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற அமிதாப் பச்சன்,"இது முழு இந்தியச் திரைத் துறைக்குக் கிடைத்த மரியாதை" எனக் கூறியுள்ளார்.

இவ் விருது ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.


விருது பெற்ற வித்தகரை வாழ்த்துவோம்!


*படம் BBC இல் இருந்து பிரதி பண்ணியது!

Tuesday, January 23, 2007

பிரான்சின் மனிதநேயம் மறைந்தது!





Abbé Pierre அபே பியர்! -ஏழைபங்காளன் .
பிரான்ஸ் வாழும் தமிழர்களில் தொலைக்காட்சி பத்திரிகை பார்ப்போர் கட்டாயம் அறிந்திருக்கும் செல்லப்பெயர்.
சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தன் வாழ்வை வசதி குறைந்தவர்களுக்காகவும்;வாழ்வில் அல்லலுறுபவர்களுக்காகவும் செலவு செய்த புண்ணியாத்மா!
05- 08 - 1912 ல் லியோன்(Lyon) எனும் நகரில் மிக வசதிபடைத்த குடும்பத்தில் Henri-Antoine Goués எனும் இயற்பெயருடன் பிறந்து; இளம் பிராயத்தில் அல்ஜீரியப் போர், உலகப் போரில் பங்கேற்று இன்னல்களைக் கண்டு; 1938ல் மதகுருவானவர்.அப்பொழுது; தனக்குக் பரம்பரையால் கிடைத்த சொத்துப் பங்கை ஏழைகளுக்கும்;நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் பரோபரவாழ்வை EMMAUS எனும் இயக்கமாகஆரம்பித்தார்.
1945 - 1951 Meurthe en Moselle தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகி அரசியலிலும் புகுந்து; சேவை செய்தார்.1954 தையில் பிரான்சில் மிகக் கடும் குளிர் தாக்கி வீடற்ற ஒரு தாயும் சேயும் ;தெருவில் - 20 °c ல் உறைந்து இறந்த கொடுமைகண்டு கொதித்து முழுப் பிரஞ்சு மக்களுக்கும் வானொலி மூலம் வேண்டுகோள் விட்டு; பல கோடி பிராங்குகள் சேர்த்து உடன் நடவடிக்கை எடுத்து வாழ்விடமமைத்து; குறிப்பாக குளிர்காலத்தில் இல்லிடமற்றவர்களுக்கு உணவு உறையுள் கொடுத்துக் காத்தார்.
இதைத் தன் முழு நேரப் பணியாக்கினார்.அப்பபோ அரசாங்கக் கதவுகளைத் தட்டிச் செயல்படச் செய்தார். இதனால் பிரான்சில் சகல மக்களும் அரசும் கூட இவர் மேல் மரியாதை வைத்தது. இவர் கேட்ட உதவிகளைச் செல்வந்தர்கள் செய்யத்தயங்கவில்லை. இவர் நேர்மை ;தனக்கென வாழா ,வேண்டா இயல்பு இவரை பிரான்சின் சிறந்த மனிதராகப் பலவருடங்கள் தெரிவாக வைத்தது.
அரசு கொடுத்த மரியாதைப் பதக்கத்தையும் ; மறுத்து ;அரசு பெரிய வீடமைப்புத் திட்டத்துக்கு உதவியபின்னே பெற்றுக் கொண்டவர். அவர் அதைப் பெற்றது அரசு தனக்குக் கிடைத்த மரியாதை எனக் கருதவைத்தவர்.
80 களில் மித்திரன்(Mittrand) ஜனாதிபதியாக இருந்தபோது;பல லட்சக் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வதிவிட உரிமை கொடுக்கக் காரணமான உந்துதல் சக்கியாகவும் இருந்தது இவர் இயக்கமுமே!!90 களில் வீடற்ற,வாழப் போதிய பணவதியற்ற வெளிநாட்டவர்களுக்கு ஆதார சுருதியாக இருந்து அர்பணிப்புடன் செயற்பட்டு;பல நாட்டவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்.
அத்துடன் போதைக்கு அடிமையாகி வீட்டாரால் ஒதுக்கப்பட்ட பலரை; மனிதாபிமானத்துடன் நோக்கி விடுதி அமைத்து அவர்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து; மறு வாழ்வழித்தை சம்பத்தப்பட்ட பலர் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்கள்.
இவர் சேவை பல ஈழத்தமிழர்;பாண்டிச்சேரித் தமிழர்கள் பயனடைந்துள்ளனர்.பெரிதாக வெளியுலகுக்குத் தெரியாவிடிலும்; பிரஞ்சு பேசும் நாடுகளில் பெரு மதிப்புக்குரிய மாமனிதர்.
தனக்கென வாழாச் செம்மல். சேவை என்பது என்ன? எனக் கற்பித்தவர் ;தன் 94 வயதில் 22-01- 2007.காலை இறையடி சேர்ந்து விட்டார்.
"இறத்தல் என்பது ஒளியுடன் கலத்தல்" எனக் கூறும் ;இவர் ஒளியில் கலந்து விட்டார்.
இன்னுமொருவர் இப்படிப் பிறப்பதரிது.
கடந்த 20 வருடங்களாக அவர் நேயத்தை இங்கே பார்த்தவனெனும் வகையில் அவர் பெருமையையும்; வாழ்ந்த சேவை வாழ்வையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
அன்னார் ஆத்மா சாந்தியடையும் இதில் ஐயம் இல்லை.




Thursday, January 04, 2007

கனக வாசலிடைக் கொன்றை மரம்...



பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை
வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக
வாசலிடைக் கொன்றை மரம்.

பொன் பூச் சொரியும் = பொன்வண்ணப் பூக்களை உதிர்க்கும்
பொலிந்து = உதிர்த்து
செழும் தாது இறைக்கும் = அடர்த்தியான மகரந்தத்தைத் தெளிக்கும்
நன் பூதலத்தோர்க்கு = உலகில் உள்ளோர்க்கு
நன்னிழலாம் = நல்ல நிழல் தரும்
பிரவை = ஒளி
மின்பிரவை = மின்னலைப்போன்ற ஒளி
கனகம் = பொன்
வாசலிடை = வாயிலில் நிற்கும்
((சில சொற்களின் பொருள் விளங்காததால் தமிழகத்தில் ஞானவெட்டியான் ஐயாவுக்கும்; ஈழத்தில் தம்பி "ஊரோடி" பகீக்கும் மின்னஞ்சலிட்டதும், பொறுப்புடன் உடன் பதிலிட்டதைச் சேர்த்துள்ளேன். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி))

இப்பாடலை ஈழத்தவர்கள் தங்கள் இளமைக் காலத்தில் படித்திருப்பார்கள். இதைப் இயற்றியவர் சிறு கவியாகக் புகழப்பட்ட நல்லூர் சின்னத்தம்பி புலவர்.
இவர் நல்லூரில் பிரபலமான ;செல்வந்தரான வில்லவராயன் முதலியார் மகன். இவர் வீட்டில் அன்றைய நாட்களில் பண்டிதர்கள் ஒன்று கூடி சந்தேகங்கள் தீர்ப்பது; பாடம் நடத்துவது எனக் கலாசாலையாக இருந்ததால் சின்னத் தம்பிப் புலவருக்கு இயல்பாகவே கவி புனையுமியல்பு இளமையிலே உருவாகியுள்ளது.
இதை இவர் தந்தை வில்லவராயன் முதலியார் அறியவில்லை. ஒரு நாள் முதலியார் நண்பர் ஒருவர் முதலியார் வீட்டைத் தேடி வழியில் விளையாடுக் கொண்டு நின்ற சிறுவர்களிடம் கேட்ட போது;ஒரு சிறுவன் மேற்படிப் பாடலைக் கூறியதும்; அந்த அடையாளத்தை வைத்து வீட்டைக் கண்டுபிடித்து; முதலியாருடன் அளவளாவும் போது; பாடலையும் கூறி; ஒரு சிறுவன் தான் இதைக் கூறினான் எனச் சொல்லிக் கொண்டிருந்த போது வீட்டுள் வந்த சிறுவனைக் காட்டி இவன் தான் ;அப்பாடலைப் பாடியது எனக் கூறிய போது; தன் மகன் புலமை அறிந்து தந்தை உச்சி மோந்தார்.
அதன் பின் முறையாகக் கற்று ஈழத்து இலக்கிய உலகில் தனி இடம் பிடித்தார்.
இந்தக் கனகவாசலும்; கொன்றை மரமும் எவ்வளவு பொருத்தமாக அமைந்தது.
முதலியார் செல்வம் கொழிக்கும் சீமான்;எனவே அது கனக அதாவது தங்க வாசல் தான்; கொன்றை மரமும் தங்க நிறப் பூச் சொரியும் மரம் தான்...எவ்வளவு பொருத்தம்.
சிறுவனாயினும் பாடலுக்கு எவ்வளவு அழகு சேர்த்துள்ளார்.
இது எங்கள் ஈழத்து இலக்கியம்.
இக் கொன்றைப்பூ சிவனுக்குகந்தது; அதனால் இம்மரத்தைச் சிலர் திருக்கொன்றை எனவே கூறுவர்.

1- நல்லூர்க் கந்தசுவாமி கோவில் முகப்புத் தோற்றம்
2- திருக்கேதீஸ்வர ஆலய வாயிலில் நிற்கும் கொன்றை மரப்பூ 2004 சித்திரையில் எடுத்தவை

Saturday, December 30, 2006

PILLCAM..மருத்துவப்படக்கருவி!!















உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.இது ஒரு கூட்டுக் குளிசைவடிவில் ;அளவிலமைந்த படப்பிடிப்பு மருத்துவக் கருவி!
குடல் வருத்தங்களைக் கண்டுபிடிக்க வழமையாகப் புழக்கத்திலுள்ள ENDOSCOPY க்கு பதிலாகக் கண்டுபிடித்து புழக்கத்தில் வந்து வெற்றியும் கண்டுள்ளது.
ENDOSCOPY யின் உதவியால் குடலின் குறிப்பிட்ட சிலபகுதிகளை குறிப்பாக சிறுகுடலின் மடிப்புகள்; நெளிவுகள் உள்ள பகுதியை இக்கருவியால் படமாக்க முடிவதில்லை.
அக் குறை இப் புதிய கருவியால் நிவிர்த்தியாவதுடன். நோயாளிக்கும் சிரமமேதும் இன்றி 20 நிமிடங்களில் தேவையான துல்லியமான தகவல்களை பெறமுடியுமென கூறப்படுகிறது.

கூட்டுக் குளிசை போல் அமைப்புடைய இதன் இரு முனையிலுமுள்ள வெளிச்சத்தைப் பீட்டியடிக்கக் கூடிய அமைப்புடைய படப்பிடிப்புக்கருவிகள்;செக்கனுக்குப் 14 படமாக மொத்தம் 2600படங்களை; வாயினூடு; குடல் மூலம் மலவாசல் வரைச் செல்லும் பாதையை படமாக்கி மின்காந்த அலைகளாக வெளிஉடம்பில் ஒட்டியிருக்கும் SENSORS க்குக் கம்பித் தொடர்பு மூலம் தகவல் பெற்று அதை; பதிவுக் கருவிக்கு அனுப்புகிறது.
அதைக் கணனியின் உதவியுடன் படமாகப் பார்த்து வியாதியைக் கண்டுபிடித்து வேண்டிய வைத்தியம் செய்ய வசதியாகவும்;இலகுவானதும்;வேதனையற்றதாகவும் இருப்பதாக மருத்துவ உலகு வரவேற்கிறது.
ஒரு தடவையே பாவிக்கக்கூடிய இக்கருவி மலத்துடன் சிரமமின்றி வெளிவேறுகிறது.

நான் ஒரு குடல் வியாதிக்காரன் இந்த ENDOSCOPY க்கு பலதடவை உட்பட்டவன் எனும் வகையில் இச்செய்தி எனக்கு மிக மகிழ்வைத் தந்தது.
மேலதிக விபரம் எஸ் கே அண்ணா போன்ற மருத்துவத்துறையில் உள்ளோர் தரலாம்.

Friday, December 22, 2006

இவரும் சாதனைப் பெண்ணே!





கடந்த 10 - 12 - 2006 அன்று பிரான்சில் நடை பெற்ற "மிஸ் பிரான்ஸ் - MISS FRANCE" தேர்வில் ; 2 ம் இடத்தைப் பெற்ற(Premiere Dauphine)Sophie VOUZELAUD என்னும் இந்தப் பெண் ஓர் வாய் பேசமுடியாதவர்.
இப்படிக் குறையுள்ளவர்களால் சாதிக்கமுடியும் என்பதை உணர்த்தவே!! தான் பங்கேற்றதாகக் கூறிய இவர் ஓர் 19 வயதுக் கணக்கியல் மாணவி.நீச்சல்,கராத்தி,சினிமா....இவர் ஆர்வங்கள்.
உலக அழகிகள் தேர்வு வரலாற்றிலேயே!! இப்படிப்பட்ட உடற்குறைபாடுடைய பெண்பங்கேற்றதும்; 2 ம் இடத்தைப் பெற்றதும் .
இதுவே முதற்தடவையாகும்.

MISS LIMOUSIN ஆக அவர் மாநிலத்தில் தெரிவாகி; பின்முதல் சுற்றுள் வரும் 45 அழகிகளில் ஒருவராகி, பின் 12 அழகிகள் அடங்கிய 2 ம் சுற்றுக்கும் தேர்வாகி ;இறுதிச் சுற்றில் ஐவருள் ஒருவராகி தன் இரண்டாம் இடத்தைத் தங்கவைத்துக் கொண்டார்.

தொலைக் காட்சியில் நேரடியாக நடந்த தேர்வில்; "சைகை நிபுணர்" உதவியுடன் பேசினார். அவர் குரலிலே சிலவார்த்தை பேச முயன்றார்.(அதற்காகக் கடும் பயிற்சி எடுக்கிறார்).

மிஸ் பிரான்சாகத் தெரிவானவரிலும் பலமடங்கு இவர் வசம் இருந்த போதும். இப் பதவியில் இருப்பவர்கள்;பேசக் கூடியவராக இருக்க வேண்டுமென நடுவர் குழு ;தீர்மானித்ததோ தெரியவில்லை.

இவருக்கு 2 ம் இடமே!! கிடைத்தது.எனினும் இவர் துணிவு பாராட்டுக்குரியதாக ;பத்திரிகைகள் புகழ்ந்தன.

Monday, December 11, 2006

அந்த மரத்தின் பெயரும் வரலாறும்.......





1-ஈழத்தில் மன்னாரில் பள்ளிமுனையில் உள்ள "பெருக்க மரம்" பற்றிய விபரக்கோவை!

2-ஈழத்தில் மன்னாரில் பள்ளிமுனை எனும் சிறு கிராமத்தில் உள்ள;
BAO BAB -Adasonia Digitata இனம் ;ஆபிரிக்க அரேபிய இனத்தைச் சேர்ந்தது.
3-மடகஸ்காரிலுள்ள BAO BAB- Adasonia Grandidieri எனும் இனம்.
4-ஆபிரிக்க அரேபிய BAO BAB -Adasonia Digitata எனும் இனம்.
5-மடகஸ்காரில் BAO BAB- Adasonia Grandidieri இனம் தொகையாக உள்ள படம்.

நான் "புத்தளம் வரலாறும்,மரபுகளும்" எனும்; திரு.அசன் நெய்னா மரைக்கார் ஷாஜஷான் அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தபோது; புத்தளம்;கற்பிட்டி; மன்னார் பகுதியில் ஒருவகை மரம்;அரேபியரால்(1477 மட்டில்) கொண்டுவந்து நடப்பட்டதாகவும்; அதன் பிரமாண்டத்தால் அதை "பெருக்க மரம்" என அழைக்கிறார்கள் என்பதையும் வாசித்தேன்.
2004 ல் மன்னார் சென்ற போது; பெருக்கமரம் பார்க்கப் போவோம். என்ற போது; அந்த மரம் இருக்கா???என ஆச்சரியப்பட்டுச் சென்று; பார்த்துப் படமும் பிடித்தேன்.இப்போ இந்த ஓர் மரமே!! மிகுதியாக உண்டென என்ணுகிறேன்; இதைப் பள்ளிமுனை கத்தோலிக்கத் தேவாலயத்தினர் பாதுகாக்கின்றார்கள்.
இனி அப்புத்தகத்தில் உள்ள பகுதி.........
அரேபியர்களின் செல்வாக்கு இப்பகுதியில் இருந்ததென்பதற்கு சான்றாக "பெருக்கமரம்" என்ற ஒரு வகைத் தாவரம் விளங்குகிறது. இம்மரம் மத்திய கிழக்குக் குரியதாகும். அரேபியர் வாழ்ந்த இடத்தில் இதை நட்டு வளர்த்தனர்.புத்தளம்;கற்பிட்டி;மன்னார்ப் பகுதிகளில் நின்றுள்ளது.
காலகதியில்முக்கியத்துவம் குன்றி பராமரிக்கப் படாமல் அழிந்து போயின.இதன் இலைகள் ஒட்டகத்துக்குத் தீனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது;அதிஸ்டவசமாக கற்பிட்டியிலுள்ள திகழி எனும் பண்டைச் சிறப்பு மிக்க கிராமப் பள்ளிவாசலில் வரலாற்று நினைவுச் சின்னமாக இருந்து; 1991 ல் வேரோடு சாய்ந்தது; துரதிஸ்டமே!!!
பெருக்க மரத்தைக் குறிப்பிட்டு வழங்கும் கிராமியப்பாடலொன்று.......
ஊருக்கலங்காரம் ஒசந்த பள்ளி பெருக்கமரம்
காட்டுக்கலங்காரம் கலை மானும் குட்டிகளும்
ஊட்டுக்கலங்காரம் விடிவிளக்கும் பிள்ளைகளும்
கடலுக்கலங்காரம் கப்பலும் பாய்மரமும்.
ஊருக்கலங்காரமெனப் பெருக்கமரத்தைக் குறிப்பதன் மூலம் அதன் அழகும் முக்கியமும் புலப்படுகிறது.பண்டைய பள்ளிவாசல்களிலும்;முஸ்லீம் குடியிருப்புகளிலும் இவை வளர்க்கப் பட்டுள்ளன.இம்மரம் பாரிய விருட்சமாகும்;1848ல் புத்தளம் வந்த "டெனன்ட்" எனும் வரலாற்றாசிரியர்; புத்தளம் பள்ளிவாசலில் இப்படி ஓர் மரம் நின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதைப் பப்பரப்புளி(இராட்சதப்புளி);தொதி எனவும் தமிழில் கூறுவர்..;...இப்படி பல தகவல்கள் உள்ளன.
இன்னும் பல தகவல்கள் இவ்வகை மரம் பற்றி இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது.

Saturday, December 09, 2006

இந்த மரத்தின் பெயர் என்ன??




ஈழத்தில் இந்த மரத்துக்கு ஓர் பெரிய சரித்திரமே!!உள்ளது.


இந்த மரத்தில் பெயர் தெரியுமா???


இது இருக்கும் ஊர் தெரியுமா??


தெரிந்தவர் கூறுங்கள்.

Thursday, December 07, 2006

மரபுக் கவிதையும்....புதுக் கவிதையும்....


கவிதை!.....

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய வார்த்தை;இலக்கியத்தின் எழிற்குழந்தை....படிப்போரைக் கேட்போரை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் " காகிதத் தேன்" கவிதையைச் சுவைக்கத் தெரியாது மனிதனாக இருப்பதே! வீண்.
கவிஞர்கள்; தம் வாழ்வில் கற்றவற்றையும்;கேட்டவற்றையும்; அனுபவித்தவற்றையும்; தாம் சுவைத்தது மாத்திரமன்றி, யாமும் சுவைக்க அழகுற எழுதி வைத்தவையே! கவிதைகள்.
கவிஞன் பெற்ற அனுபவச் சாறு கவிதை; அவன் நமக்கு விட்டுச் சென்ற பெருநிதியும் அதுவே!தமிழ்க்கவிதையின் தோற்றுவாய், பக்தி;நீதி சார்ந்ததாக இருந்தது.
அத்துடன் அன்றைய காலக்கட்டத்தில் எல்லாவற்றையுமே செய்யுளாகவே! ஆக்கிவைத்தார்கள்.
மருத்துவம்;தத்துவம்;ஓவியம்,சிற்பம்;இலக்கணம் ;இலக்கியம் எதுவானாலும் அவற்றின் செயற்குறிப்புகளை நினைவில் நிறுத்த ஓசைநயம் பொருந்திய செய்யுள்களாகவே! ஆக்கிவைத்தார்கள்.
அத்துடன் இச்செய்யுட் குறிப்புகள் மிகப் பெரியவிடயங்களையும்; குறுகிய வடிவில் குறித்துவைக்க உதவியது.
"செவிவழி" இலக்கிய வடிவங்கள் பரவுவதற்குச் சந்தங்களும்;ஓசைநயமும் பேருதவியாக இருந்தது.
அதனால் அமரத்துவம் மிக்க செய்யுள்கள்;கவிதைகள் உருவாக யாப்புக்கள் இன்றியமையாததாகின.
நல்ல பாடகனுக்கு எப்படிச் சுரங்கள் தெரியவேண்டுமோ!நல்ல கவிஞனுக்கு யாப்புத் தெரிய வேண்டுமென்றானது.
இயல்பாகவே கவிவளம் உடையோருக்கு சந்தமும்;ஓசைநயமும்;யாப்புருவும் பிறப்புடனே கிடைத்த கொடை எனலாம்.உலகில்எப்படி? ஞானிகள்;யோகிகள்;வைத்தியர்கள்;பொறியியலாளர்கள்;வக்கீல்கள்; பாடகர்கள்,பேச்சாளர்கள்;சிந்தனைவாதிகள்;சிற்பிகள்;ஓவியர்கள்;சமைப்போர்;
சோம்பேறிகள்,சுரணையற்றோர்.....பிறக்கிறார்களோ!அப்படியே...

வித்தகப் பொருளின் மாட்சி வியத்தகு சொல்லின் ஆட்சி!மெய்த்திறம்;திட்பம்;நுட்பம் விளக்கம் மற்றுள யாவும் மேவி!
எத்தனை முறை கற்றாலும் எழில் நலம் மேல் மேலோங்கி
தித்திக்கும் பாடல் தானே தெய்வீகப் கவிதையாகும்!.
என்ற வகைக் கவிதையை உருவாக்கும் கவிஞர்களும் பிறக்கிறார்கள்.
எல்லோரும் வைத்தியராக முடியாது எவ்வளவு உண்மையோ!! அவ்வளவு உண்மை எல்லோரும் கவிஞர் ஆகமுடியாதது.
இதைப் பலர் உணரவேண்டும்.ஆனால் உணரவில்லை.
ஒவ்வொருவரிடமும் இன்றோ;இரண்டோ திறமையுண்டு.
ஆனால் எல்லோரிடமும் எல்லாத் திறனும் இல்லை.இதனால் "கவிதை" எனும் பெயரில் குப்பைகள் வலம் வருகின்றன.

கவிதை எழுதக் காகிதம்; எழுதுகோல் .....இவற்றுடன் பட்டறிவு;படிப்பறிவு;சிந்தனை;கற்பனைவளம்;சுவைபடக் கூறும்
ஆற்றலும் வேண்டும்.

இவற்றின் மொத்த உருவமாகத் தமிழினத்தில் கம்பன்;வள்ளுவன்;இளங்கோ;ஔவை;ஒட்டக்கூத்தன்;
பாரதி;கண்ணதாசன்;பாரதிதாசன்;நவாலியூர் சோமசுந்தரப் புலவர்;சின்னத்தம்பிப் புலவர்; நல்லதம்பிப் புலவர்;உருத்திரமூர்த்தி;பேராசிரியர் சுந்தரம் பிள்ளை;சமய குரவர்கள்;மற்றும் பலர் கவிஞர்களாகப் பிறந்தார்கள்....இன்பக் கவிதைகளைத் தந்தார்கள்.
ஆனால்;இன்று இந்த உன்னத இலக்கிய வடிவத்தின் நிலை என்ன? "நடக்க மாட்டாதவன் குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல்" ஆகிவிட்டது.சீரான கல்விஅறிவற்றவர்களினதும்; இலக்கிய இலக்கண அனுபவமற்றவர்களினதும் கைகளில், அது சிக்கிச் சீரழிவதைக் கண்கூடாகப் காணக் கூடியதாக உள்ளது.
இன்று கம்பனும் பாரதியும் இருந்திருந்தால் "மறம்" பாடியே இக்கூட்டத்தை அழித்திருப்பார்கள்.
இன்று கவிஞர்கள் என்று "கக்கத்துள்" காகிதக் கட்டுடன் அலையும் "திருக்கூட்டம்;தாம் எதோ தமிழை அழிவில் இருந்து காக்க உதித்தவர்கள் போல் எண்ணி; தமிழையே சாகடிக்கிறார்கள்.
மொத்தமாகத் தமக்குத் தெரியாத பரீட்சயமில்லாத ஒன்றைச் சாதிக்க முற்பட்டு;சோதனையில் மாட்டித் தவிக்கிறார்கள். மற்றவர்களையும் தவிக்க வைக்கிறார்கள்.
இதைப் பேராசிரியர் கலாநிதி வெங்கடசுப்பிரமணியம் குறிப்பிடும் போது "நாம் யார்? பாரதியின் வழித்தோன்றல்கள்;பாவேந்தர் பரம்பரை,ஔவ்வைப்பாட்டியின் பேரர்கள்....உலகுக்கு வழிகாட்டிய வள்ளுவரின் திருக்குமாரர்கள் எனவே நமக்கு அறிவுக்குப் பஞ்சமில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமென்றால்;எமக்குக் கவிதை கைவந்த கலையாகத்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் வசனத்தைக்கூடக் கவிதையாக்கி,ஆணைப் பெண்ணாக்குவது போன்ற இரச(இரசமற்ற) வாதங்கள் செய்துவருகிறோம்.

ஒரு பத்து வரிகளைச் சேர்த்து எழுதினால் "பந்தி" அதையேவரிசையாக ஒன்றுக்கு கீழ் ஒன்றாக எழுதினால் "புதுக்கவிதை" என்று கேலி செய்கிறார்.
யாப்புக் கூறும் இலக்கியவடிவம் வயலுக்கு வரம்பு போல்...ஆனால் வரம்பு வயல் ஆகாது உண்மை;அதுபோல் வரம்பின்றி வயல் செழிக்காது.
அதுவும் உண்மையே!காவியங்கள்;கதைகள்;நாடகங்கள்;கட்டுரைகள்;கடிதங்கள் எப்படி இருக்க வேண்டுமெனும் கட்டமைப்பு ஒன்று இருக்குமானால்; கட்டாயம் கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் எனும் கட்டமைப்பு இருந்தே ஆகவேண்டும்.
அதுவே "யாப்பு". கவிதைக்கு வரைபிலக்கணம் இல்லை என்பதுமனிதனுக்கு வரைவிலக்கணம் இல்லை என்பதற்கு ஒப்பானது.
வரைபின்றி வளர்ந்த கலை என்று கவிதையை எண்ணுவது "ஆழ்ந்த அறிவின்மையின் புலம்பல்".மனிதன் ,பின்பு தமிழன்;பிரான்சியன்;இந்து;கிருஸ்தவன் என்பது போன்றே!கவிதை,வெண்பா,விருத்தம்....இவற்றுக்கு வரைபுண்டு.
கவிஞன் என்பவன் மொழியைத் தனக்குச் சேவகம் செய்ய வைப்பவன் என்பர்.நல்ல கவிஞனுக்கு மொழி அவன் சிந்தனையை வடிக்க என்றுமே தடையாக இருந்ததில்லை.
"இம் என்றால் எழுநூறு;எண்ணூறு ;அம்மென்றால் ஆயிரம்" எனக் கவிபடைத்த தமிழ்க்கவிஞர்கள் இருந்தே உள்ளார்கள்.அவர்கள் என்றுமே தம் சிந்தனைக்கு மொழியும்,யாப்பும்;வரைபும் தடையாகவிருந்ததென சிணுங்கியதே! இல்லை.
ஆனால் இன்றைய அறிவு "சூனியங்கள்" ஆடத் தெரியாதவன் கூடம் கோணை என்பது போல் யாப்புத் தடையாம்."யாப்பைத் தவிர்ப்பதனால் கவிதை தன் அனைத்துச் சக்தியோடும் புறப்படுகிறது" பழைய யாப்பு உருவங்கள் புதிய சிந்தனைகளைத்தாங்காது என்கிறார்களே!பாரதியும்;பாரதிதாசனும்;கண்ணதாசனும்;உருத்திரமூர்த்தியும்,காசி ஆனந்தனும் கூறியவை பழைய சிந்தனைகளா? இப்படிக் கூறுபவர்கள்....
இதோ ஓர் தற்காலச் சிந்தனையில் உருவான கவிதை நெல்லை சு.முத்து வினால் எழுதப்பட்டது.

உலகம் ஒரு கைப்பந்தாய்ச் சுருங்கச் செய்யும்
உன்னதமாம் விஞ்னானப் பொற்காலத்தில்
பலதுறையில் ஆய்வுகளில் சிறந்து ஓங்கும்
பாரதமும் பாரிடையே உயர்ந்து வெற்றித்
திலகமெனப் பல்நோக்குச் செயற்கைக்கோள்கள்
செலுத்திவிடும் தனிப்பெருமை உவகை நல்கும்!
உலவிவரும் இன்சாட்டில் உயர்ச்சி சொல்வோம்!
உறு வான சாத்திரத்தில் புரட்சி செய்வோம்!


ஏழாண்டு அண்டவெளி சுற்றும் வண்டாம்;
இந்தியத் தேசியச் செயற்கைக் கோளால் - விண்மீன்
கோளாண்டு,மின்காந்த அலைகள் கொண்டுகூறு புகழும் வானொலியும்;வானிலையும்
நாளாண்டு நம்நாட்டில் கல்வி கேள்விஞானமுடன்
விஞ்ஞானம் செழிக்க மக்கள்வாழ்வாண்டு தொலை பேசி;தூரக்காட்சி
வளமாண்டு இன்சாட்டே வாழி நீடு!

கலைமகள் - யூன் - 1993

இது புதிய சிந்தனை வடிவமல்லவா?!கவிஞன் நினைத்ததை யாப்புக்குள் அடக்கவில்லையா???இது சுவையில்லையா???
அடுத்து காளமேகப் புலவர்; ஒரு சத்திரத்தில் உணவருந்துகிறார். அவர் அருகில் இங்கிதம் தெரியாதவர், சோறிட்டதும் பாய்ந்து குடுமி கலைய
அள்ளி வாயிலடைகிறார்.
விருந்தின் நெறியைக் கடைப்பிடிக்கத் தெரியாதவரை புலவர் பாடலால் கண்டிக்கிறார்.
இலக்கியத்துக்கு ஓர் அழகிய பொருள் பொதிந்த பாடல்....புலவரின் எண்ணம் அப்படியே நாலு வரிக்குள் அழகுற அடங்கிவிட்டது.
அது.........

முடிச்சவிழ்ந்த முன் குடிமிச் சோழியா!சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா!! புலையா,!!
திருவானைக்காக் கோட்டானே! நாயே! குரங்கே!
உனையொருத்திபோட்டாளே! வேலையற்றுப் போய்!!!!
காள மேகமல்லவா!!!! தமிழ் கைகட்டிச் சேவகம் செய்துள்ளது.
பெற்றாளே!!!!! என்று கூறாமல் போட்டாளே!! என மிருகமே....என இன்னுமொரு போடு போட்டுள்ளார்.

புதிய சிந்தனைகளின் ஊற்று ;நம் புரட்சிக் கவி பாரதியார்........

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
இது புதுமைக் கருத்தில்லையா? கல்வியின் மகத்துவத்தையும்; இன்றியமையாமையையும் புரிய வைக்கப் பாரதி சொற்களின்றியா?? தவித்தார்.
இக்கவிதையில் உயிரோட்டம் இல்லையா??,பாரதி சொற்களுடன் விளையாடவில்லையா???தன் எண்ணத்திற்கு எழுத்துருக் கொடுக்கவில்லையா???சொல்லவந்த விடயத்தை பாரதி செட்டாகச் சொல்லிவிட்டார்.
இவை ஏன்??, "புதுசு" களுக்குப் புரியவில்லை. எம் தமிழ் மொழியிலா ? சொல்லுக்குப் பஞ்சம்.மலயாளம்; தெலுங்கு;கன்னடம் என மழலைகளைத் தன் சொல்வளத்தால் பெற்ற தாயல்லவா?, எம் தமிழ்!

"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சு!வெள்ளைப் பறங்கியனைத் துரையென்ற காலமும் போச்சு!எனப் பாரதி புதுமை பேச !

அவர் தாசன் - சுப்பு ரெத்தினம் என்ற பாரதி தாசன்

"ஆடுகிறாய்! உலகப்பா யோசித்துப் பார்!
ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னான்.
செகதப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டார் - ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய் விடுவர் உரையப்பா நீ!

என இலகு தமிழில் எவ்வளவு பொருள் பொதிந்த புதுமைக் கருத்தைக் வெளிக் கொண்டுவந்துள்ளார்.மரபுடன் புதுமைக் கருத்துக்களைச் சேர்த்து கவிதை அமைக்கலாம் என்று முதல் முயன்று வெற்றி பெற்றவர்கள் பாரதியும்; பாரதிதாசனும்.
பாரதியார் - மடங்களிலும் மாளிகைகளிலும் கொலுவிருந்த தமிழைக் கையைப்பிடித்துத் திண்ணைக்கும் ;தெருவுக்கும் கூட்டிவந்து தமிழுலகில் பிடித்திருந்த நோயை விரட்ட நல்மருத்துவராக கவிதை மருந்து கொண்டுவந்த கவி வைத்தியர் ;பொற்கவி பாடிய சித்திரக்கோ!!!சுதந்திரத்தின் சுவையைச் சொற்களில் வடித்தவர்.
அவர் கருத்துக்கள் புதுமை;புரட்சி;சுதந்திரம் விரும்பும் யாவராலும் போற்றப்பட்டது.
மரபு மீறி அவர் கவி எழுத முற்படவில்லை. இலக்கணப் புலமை மிக்க அவருக்கு அத் தேவை இருக்கவுமில்லை.
பரீட்சார்த்தமாக அவரெழுதிய "வசனக்கவிதை" கள் கூட ஆற்றொழுக்கெனச் சீராக இருந்தது.
வெண்பாவில் புகழேந்தி எனப் புகழப்பட்ட "நளவெண்பா" ஆசிரியர் எழில் கொஞ்சும் கவிதைக்கு ஒப்பாரும் மிக்காருமற்றவர்.
காட்சியொன்றைக் கண்முன்னே கொணர்வதுபோல் உவமான உவமேயங்களைக் கையாண்டு படிப்போர் மனதில் பதியவைப்பதில் வல்லவர்.அவர் பாடலொன்றைப் பார்ப்போம்.
சுயம்வரமண்டபத்தில் மன்னர்கள் வரிசையாக இருக்கிறார்கள்.தமயந்தி நுளைகிறாள்.காட்சி இதுதான் கவிஞர் பதியவைக்கிறார்.
மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தே!
பொன்னின் மடப்பாவை போய்ப் புக்காள்!- மின்னிறைத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறகன்னஞ்செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று........
கண்களுக்குத் தாமரையும்;மண்டபத்தைத் தடாகமாகவும்;தமயந்தியை அன்னமாகவும் உவமித்து;மறக்க முடியாததாகிவிட்டது.

"அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் ஒரு காட்சி சூரி எனும் வைத்தியராக பல பிரபலங்களுக்கு வைத்தியம் செய்பவர் கவியரசர் கண்ணதாசனுக்கும் வைத்தியம் செய்துவிட்டு ஒரு பாடல் தன்னைப் பற்றிப் பாடும்படி கேட்கிறார்.
தமிழுக்கு ஓர் கவிதை!!!!!!

அருமருந்துகள் போன்றவர் தமிழரசராம் திருவள்ளுவர்!
பெருமருந்துயர் பக்தியென்பதைப் பெரியவர் பலர் பேசுவர்!
சுரமருந்தென எதனையோ தரும் சூரி யெனும் மருத்துவர்!
கரி மெலிந்தது போல் மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே!!......
வைத்தியருக்கு மருந்து என்ற விடயத்தை வைத்து யாப்புப் பிசகாமல் வார்த்தெடுத்த கவிதை.இப்படத்தில் சூரி எனும் வைத்தியராக நடிப்பவர் நடிகர் நாகேஷ்..... அவர் தோற்றம் அவரைக்காய் போல் மெலிவு.
அதைக் கவிஞர் "கரி மெலிந்தது" என நயம் பட உரைக்கிறார். யானை மெலிந்தால் பார்க்கச் சகிக்காது.இவர்களல்லவா ! கவிஞர்கள்.
இனிக் கம்பன் பாடல் ஒன்று பார்ப்போம்.பல்லாயிரம் பாடல்கள் பாடி தமிழைச் சிறப்பித்தவர் கம்பர் பெருமான்; அவர் தமிழை ஆண்டு கவிச்சக்கரவர்த்தியானவர்.அவர் ஆற்றலுக்கு எவ்வளவோ பாடல்களைக் காட்டலாம்.ஓர் பாடலை உங்களுடன் பகிர்கிறேன்.

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்!எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறே!கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ! ஒருவன் வாளி!!!
இராம பாணத்தால் இராவணன் உடல் சல்லடையாகிக் கிடக்கிறது. மண்டோதரி அதைக் காண்கிறாள்.

எள்ளிருக்க இடமில்லாதவண்ணம் இராமபாணம் உடலெங்கும் தைத்துள்ளது.
கம்பன் கற்பனை பெருக்கெடுத்து அந்தக் காட்சிக்கு உயிரூட்டுகிறது.ஓர் அம்பால் உயிரை வாங்காமல் இப்படி உடலெங்கும் அம்பு பாய்ந்ததற்கு காரணம் கற்ப்பிக்கப்படுகிறது."கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்சானகியை மனச்சிறையில் கரந்த காதல்; உள்ளிருக்குதோ????என உடலெங்கும் தேடியது.என மண்டோதரி புலம்புவதாகக் கூறுகிறார்.
கவிஞன் தானும் அனுபவித்துப் படிப்போரையும் அனுபவக்கவைப்பதே!!!கவிதை.
அதனால் தான் கம்பர் சொற்களுக்கு அனுகூலமாக கருத்து ;செம்மை;இனிமை; தெளிவு, நடையெழில்;இலக்கிய இலக்கணப் புலமை;புராண வரலாறுகள் நாட்டு நடப்பு அறிந்திருத்தல் ஆகியன உடையோரே கவிதை எழுதும் தகுதியுடையோர் என்கிறார்.
சிறந்த இயல் இசை நாடக விமர்சகர் "சுப்புடு" ;இன்றைய புதுக்கவிதை பற்றிக் குறிப்பிடும் போது" அவிழ்த்து விட்ட அரபுக்குதிரை" என்கிறார்; அவற்றின் ஓட்டம் பயனற்றது; புரியவேண்டியவர்கள் புரிய வேண்டும்.
இன்றைய புதுக்கவிதையாளர்கள்; தாங்கள் நினைத்த போக்கில் எழுதுகிறார்கள். அவர்களுக்கு இலக்கணம் என்பதைப் பற்றியே கவலையில்லை; ஏன்,,?? அது தெரியாததும் கூட; பொருளுக்கிசைய எழுதுகிறோம் என்று ;சொல்லவந்த விடயத்தைத் தலைகீழாக்கி விடுவார்கள்.
உதாரணம்:-
உண்ண உணவும்!
டுக்க உடையுமின்றிய சிறுவன்;
தந்தையும் தாயுமிழந்து இன்று
சொந்த மண்ணில்அகதியானான்
.
இது ஒரு புதுக் கவிதையாம்.....இதைச் சற்று ஆய்வோம்.
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.
இது எப்படி??ச்சாத்தியமாகும்.கருத்தையே தலை கீழாக்கிவிட்டார்கள்;
தந்தை தாயை இழந்து; உண்ண உணவும் உடுக்க உடையும் அற்ற சிறுவன் என்பதே!!!உலகுக் கொப்பும்.
இதுவே இன்றைய புதுக்கவிதையாளர்களால் ஏற்படும் கேடு. எழுவாய் ஏது??? பயனிலை ஏது???என்பதின்றி மனதில் பட்டதையெல்லாம் எழுதி நிரப்புவதே!!!! அவர்கள் கூத்து.

இதன் தலைப்பு
ஊரும் நாட்கள்!

வாசுதேவன் கவிதை (யாம்)

இன்று எனது முறையாய் இருக்க வேண்டும்;
அவன் என்னிடம் வந்தான்
அவன் கேள்விகளுக்கு
அவன் விரும்பிய பதில்களை
என்னிடம் எதிர் பார்த்தான்
என் நியாயங்களில் பொருட்டு
அவன் எதிர் பார்ப்பைச் சிதறடித்தேன்
அவன் ஒரு முண்டமாய் மாறினான்
தோலை உரித்து
என் மனிதனை
அவன் முன் வைத்தேன்!
அசௌகரியம் தாங்க வொண்ணாது
முண்டம் திடீரென
ஒரு துப்பாக்கியாய் மாறியது.
அதுவரை
இரும்பென உறுதிகாத்த நான்
இதோ
அதன் காலடியில்மெழுகாய்
உருகி வழிகிறேன்
ஐந்தடி எட்டங்குலமும்
எழுபது கிலோ
எடையும் கொண்டதொரு
உருப்படி என்பதற்கப்பால்
எந்தப் பெறுமதியும்
எனக்கில்லாது போயிற்று
ஒரு இலையானாய்
நசுக்குண்டு கிடந்தேன்
அறுவடைகள் சகிதம்
வாசலில் அவன் தலைக் கறுப்பு மறைய
கூட்டிப் பொறுக்கி அள்ளி எடுக்கிறேன்;
என்னை!!

தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா???இவர் ஏன்.???இப்படி முக்கி முனகுகிறார்;இப்படித்தான்....
இன்று பல கவிதைத் தொகுப்புக்கள் ;வெறும் புலம்பலாகவே!! இருக்கிறது.
நூறு பக்கத்தில் ஓர் கவிதைத் தொகுப்பெனில் பக்கத்துக்கு 25 சொல்; இப்படிப் புரிந்து கொள்ள முடியாத புலம்பலாக நிரப்பப் பட்டிருப்பதும்;எப்போதுமே எதியோப்பிய வறுமை போல்"பிலாக்கன ஒலியும்" ;இவை என்னைப் போன்றோருக்கு! வெறும் ஏமாற்றமும்;வேதனையுமே!!!
இப்படி ஆயிரம் உதாரணம் காட்டலாம்.
எப்போதாவது ஒன்று....அது போதாது...;கவி உலகம் தன்னை மாற்ற வேண்டும்...;
இன்றைய "புதிசுகள்" யாப்பைப் பற்றியோ எதுகை;மோனையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.
தாங்கள் எழுதுபவை செய்யுளா?, வசனமா?? என்று அலட்டிக் கொள்வதில்லை. சொற்களை வைத்து விளையாடுகிறார்கள். உணர்ச்சியைக் கொட்டுகிறார்கள். மொத்தத்தில் இவற்றை யாரும் படிக்க வேண்டுமே என்று எண்ணுவதும் இல்லை.
இவை இலக்கியத் தரம் பெறவேண்டுமே எனச் சிந்திப்பதுமில்லை. எவரெல்லாம் எதோ செய்கிறார்கள்; நாம் இதையாவது செய்வோம் எனக் கிறுக்கிவிட்டு "கிறுக்கர்கள்" போல் இருக்கிறார்கள்.
அதாவது துக்ளக் ஆசிரியர் கூறியது போல் தமிழில் எதுவுமே எழுதத் தெரியாதவர்கள் புதுக் கவிதை எழுதுகிறார்கள்.
இன்று ஐயாயிரம் ரூபாவும்; 25 பேரை ஓரிடத்தில் கூட்டும் தகுதியும் இருந்தால் எவருமே கவிராயர்கள் ஆகிவிடலாம்.
நவீன இயந்திர யுகத்தில் அச்சு வேலைகள் மிக இலகுவாக்கப்பட்டதால் ; புற்றீசல் போல் பத்திரிகைகள் உருவாகியுள்ளன.
அவற்றில் இடத்தை நிரப்ப ;இந்தப் "புதிசு" உதவுகிறது.புதிசை எழுதியவரும் அவர் சார்ந்தோரும் வாங்குவதால் சில பிரதிகள் விலைபோகும்.
இது வெறும் கல்லாப்பெட்டி நிரப்புபவருக்கும் ,கஸ்டமின்றிப் புகழ் தேடுபவருக்கும் உள்ள உடன்படிக்கையே!!! இதனால் இலக்கிய உலகுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால் இவர்கள் ஒன்று புரிய வேண்டும்.மரபுக்கவிதை ஆர்றலுக்குத் தடை என்று; இந்த இலகு வழியைத் தொடர்ந்து நாடாமல்; மரபுக்கவிதைகளையும் படித்து அதில் மரபை மாத்திரமன்றி ஏனைய கவித்துவத்தின் அழகியல் அம்சங்களையும் அறிந்து திருந்த வேண்டும்.
இன்றைய வெகுசனப் பத்திரிகைகளில் வரும் பல கவிதை விமர்சனங்களைச் செய்வது முழுக்க முழுக்க கவிஞர் எனத் தன்னைத் தானே அடையாளம் காட்டிய ஒருவராக இருப்பது வேதனை.
ஒரு திரைப் படத்தை இன்னுமொரு இயக்குநர்;விமர்சிப்பதில்லை.
ஒரு பாடகனை இன்னுமொரு பாடகன் விமர்சிப்பதில்லை; ஒரு கதாசிரியரை இன்னுமொரு கதாசிரியர் விமர்சிப்பதில்லை.....
ஆனால் இந்த கவிதை மாத்திரம் இன்னுமொரு கவிஞரென்பவரால் அதாவது அதே கூட்டத்தையோ;குழுவையோ சேர்ந்தவரால் விமர்சிக்கப் படுவது;
மிக வினசமானதுடன்;நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது;
ஆளுக்கு ஆள் முதுகில் தட்ட வகை செய்கிறது.
"இந்தியா ருடே" யில் பல தடவை பார்த்துள்ளேன்; மாறி மாறி முதுகில் தட்டியதை!!!!இந்த நவீன கவிதையுருவை;இன்னுமொரு இந்த நவீனத்தை எழுதுபவரால் தான் புரிந்து கொள்ளமுடியும்;உணரமுடியும் என்பது வேடிக்கையாக உள்ளது;இவர்களின் நம்பகத் தன்மை அடிபட்டுப் போகிறது.
அதிலும் தமிழ்க் கவியுலகினர் "கூழுக்குப் பாடுவதில்" ஒப்பாரும்;மிக்காருமற்றவர்கள்.
கம்பனையும்,பாரதியையும்;கண்ணதாசனையும்.....சாதாரண அறிவு படைத்தோர்;உணர்ந்தார்கள்;விமர்சித்தார்கள். ஆனால் இந்தபுதுக் கவிராயர்களை;என்னுமொரு கவிராயர் தான் விமர்சிக்க முடியும் ;உணரமுடியுமென்பது.....வேடிக்கை மிக்கது.

ஒன்று என்றும் உண்மை. "நிழலின் அருமை வெய்யிலில் போல்" இப் புதிது ,வந்த பின் "OLD IS GOLD " என கம்பனையும்;பாரதியையும் தேடி ஓட வைத்துள்ளது.

இன்று புதுக்கவியுலகு ஆரம்பம் போல் இல்லை.ஓர் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.கண்ணதாசன் கூறியது போல்"எழுத முன் படியுங்கள்".

இதுவே புதுக் கவிராயர்கள் தெரிய வேண்டியது.

குறிப்பு: இக் கட்டுரை "பாரிஸ் கல்வி நிலைய 7ம் ஆண்டு மலரில்; 31- 08- 1993 வெளிவந்தது.

பலர் தடி;கம்பு ஏன் துப்பாக்கியுடன் கூட ஓடிவரலாம்.உனக்கென்ன தெரியுமென...ஆனால் பொறுமையாக எனக்குப் புரிய வைக்கவும்.
Labels: poems

Saturday, December 02, 2006

Friday, November 10, 2006

பழச் சிற்பம்

கல்;மரம்;மண்,உலோகம்,கண்ணாடி.....ஏன் மணலிலும் கூடச் சிற்பம் செய்வார்கள்.

யாரோ ஒருவர் வத்தகப் பழத்தில் (தார்ப்பூசணி) சிற்பம் செய்துள்ளார்.

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லுமாயுதமென்பதா???








இவருக்குப் பெரியயயயயய......கொம்பு








என் நண்பர் ஒருவர் அனுப்பிய மாறுதலான படங்கள்; நீங்களும் பாருங்கள்.

Saturday, November 04, 2006

கிறுக்கலில் நம் தெய்வங்கள்!








இந்தக் கிறுக்கல் ஓவியங்களை நான் ஆர்வமாகப் பார்ப்பதுண்டு.

என் போன்ற தற்க்குறிகளுக்கு இது "நவீன ஓவியத்தை" விட புரிவது போல் இருக்கும்; பெண்ணைப் பெண்ணாகக் காட்ட முயல்வார்கள்.

அவர்கள் பூசணிக்காயை பெண் என்பதில்லை. அதாவது நவீன ஓவியர்கள் போல்.....

நம் AVM PRODUCTIONS பாதகையில் கூட இந்த !!!!கிறுக்கலொவியச் சாயல் இருக்கும்.

பாரிசில் ஓர் பொதிவண்டியில் கிறுக்கியிருக்கே!!!!!!!அடடா!!! நம்ம பிள்ளையாரப்பா!; அட மீனாட்சியம்மா கூட!!!!அடுத்த பக்கமும் பார்த்தேன்.

புத்தர்;சீன பெரிய தொந்தி கடவுள் !!!வண்டிக் கதவுகளில் திருநீற்றுக் குறி; நாமம்,,,,,,,,

அன்று என் கையில் என் NIKON குட்டி இருந்தது.

வண்டி உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வண்டியைப் படம் பிடித்து விட்டேன்.

உங்களுக்காகத் தானுங்க!!!!!!எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக ....தானுங்க

Friday, October 27, 2006

உன்னுடைய வேல்....உறு துணை.....


உன்னுடைய வேல்....உறு துணை.....

உன்னுடைய வேலொன்றே...உறுதுணையாய் வருகிறது.....
கும்மிருட்டுப் பாதையிலும் கோலாகத் தெரிகிறது.....

என்னுடைய ஆட்டமெல்லாம் நீ..அமைத்த மேடையிலே.......
இசைவதுவும் அசைவதுவும் நீ...காட்டும் யாடையிலே....

பன்னிரு தோள்கள் எனும் பரந்தவெளி பறந்துவர....
சின்னமனச் சிறகதுதான் சிறிதேனும் பயின்றிடுமோ....

தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைக் காண்பதற்கு...
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ....!

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்,,,,எழுதியவரைத் தெரியவில்லை.

கந்தனுக்குகந்த கந்த சஷ்டியில் இப்பாடலைக் கேட்பதோ படிப்பதோ மனநிறைவைத் தரும்....

இது இலகுதமிழில் அமைந்த உன்னதமான பாடல்....இப்பாடலைப் பிரியமுடன் கேட்பேன்.

கேட்கும் போதெல்லாம் எனக்கு இரு கந்தரலங்காரப் பாடல்கள் நினைவுக்கு வரும்....

விழிக்குத் துணை திரு மென்மலர்ப்பாதங்கள்..மெய்மைகுன்றா....
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி...
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!!!!

இருட்டுப்பாதையிலும் ,குருட்டுப் பார்வையிலும் கோல் போல் நம் வாழ்வில் வேலவன் வேல் துணை என்பதனை சொல்வதில், கந்தரலங்காரத்தின் கருத்தை உள்வாங்கி அழகுற எழுதப்பட்டுள்ளது.

மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞானதெய்வத்தை மேதினியில்
சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே..!

இக் கந்தரலங்காரத்தின் கருத்தையொட்டிய அடிகளாக "தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைப் காண்பதற்கு! என் முகத்தில் அமைந்திருக்கும் இரு விழியால் இயன்றிடுமோ!!" என இரு விழி போதாது, நாலாயிரம் கண் வேண்டுமென அமைவது, இப்பாடலைச் சாதாரண தமிழறிவு மிக்கோரும் புரிந்து கொள்ளும்படி உள்ளது.

இப்பாடலின் சிறப்பு.அழகான கர்நாடக இசை மெட்டில் இசையமைத்து, சொல்லுக்குயிரூட்டும் சீர்காழியாரின் உச்சரிப்பில் பாடல் மனம் கவர்கிறது.

சீர்காழியார் என் சிந்தைகவர்ந்த பாடகர், நம் இசையில் எனக்கு லயிப்பை ஏற்ப்படித்தியவர்.இப்பாடலை நீங்களும் musicindiaonline.com இணையத் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/m/artist.19/பாடலைத் தரும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லை."கந்தன் கருணை" கிட்டட்டும்.

Wednesday, October 11, 2006

நியூயோர்க் கட்டிடம் ஒன்றை விமானம் மோதியுள்ளது

நியூயோர்க் கட்டிடம் ஒன்றை விமானம் மோதியுள்ளது; சிறு ரக விமானம் ஒன்று;இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லையெனக் கூறப்படுகிறது. இன்று மாலை நடந்துள்ளது;இப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

Monday, October 09, 2006

ஒரு தடியில்.... இருமலர்கள்..... இரு கலரில்!!





என் வீட்டுப் பல்கனியில் ஓர் "நாலுமணிப்பூ " மரம்;அது ஓரே கிளையில் இந்த இரு நிறப் பூ பூத்துள்ளது. இந்த விதையை என் நண்பர் வீட்டில் எடுத்தேன். அவர்கள் வீட்டில் மஞ்சளும்; நாவலும் எனத் தனிமரங்களாகவே இருந்தன.
இப் பூமரத்தை ஈழத்தில் மாலை நாலுமணிக்குப் பூப்பதால் ;"நாலுமணிப்பூ" எனும் காரணப் பெயர் கொண்டே அழைப்போம்.
தமிழகத்தில் என்ன??பெயரில் அழைக்கிறீர்கள்????தெரிந்தவர் கூறவும்.இதன் தாவரவியல் பெயரும் யாருக்கும் தெரிந்தால் கூறவும்.

Thursday, October 05, 2006

கவரிமா! வள்ளுவர்.......கவரிமான் நாம்......




"மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!" -வள்ளுவர்


அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

பரிமேலளகர் உரை -விசா பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமாவை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின்; தாங்காது இறப்பர்.

கருத்துரை: தன் மயிர்த்திரளிலிருந்து;ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் தம் மானம் அழியக் கூடிய நேரம் வந்தால் அதைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்வர்.

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை உரை- பாரதி பதிப்பகம் வெளியீடு

(மானமுடையவர் தன்மை) தன் உடலின் மீதுள்ள மயிர் தன் உடலைவிட்டு நீங்கினால் உடனே இறந்து போகிற கவரிமானைப் போன்ற மானிகள் மானம் நீங்க நேரிட்டால் உடனே உயிரை விட்டு விடுவார்கள்.

Yak-A species of ox found in Tibet and domesticated there;covered all over with a thick coat of long silky hair; thatof the lower parts hanging down almost to the ground. (CHAMBERS CONCISE 20th CENTURY DICTIONARY)

Yak - a wild ox used for carrying loads over mountainous regions in Tibet and Himalayas.இமாலயப் பிரதேசத்தில் பொதி சுமக்கும் "யாக்" என்னும் ஒருவகை எருது; கவரி எருமை. (The Great Lifco Dictionary)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால்;உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்; மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.

Kural - 969 Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day. Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.- koodal.com-Kural

கௌரவம் படத்திலும்; நீதிபதியான தந்தை; தன்னை மீறிய மகனுக்குச் சவால் விட்டு; தன் மனைவியிடம்" டி நான் கவரிமான் சாதியடி" என ஓர் வசனம் வருகிறது.

கவரிமான் எனும் பெயரில் ஓர் திரைப்படமும் வந்துள்ளது.

"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா??? என்ற திரைப்பாடலடியும் ;இக்குறளையொட்டி எழுதப்பட்டதே!!!!

வள்ளுவரின் இக்குறளுக்குப் பொருள் எழுதிய பலர்; இந்தக் கவரிமா எனும் இமயமலையை அண்டிய பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கை கவரிமான் என ஓர் இல்லாத மான் வகையாக்கியது ;மாத்திரமன்றி.....அதன் வாழ்வியல்பைச் சரியாகப் புரியாமல்; வள்ளுவர் ஏன் ? அவ்விலங்கை உதாரணம் காட்டினார். என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன்.

விலங்குகளில் ஆர்வமுள்ளவன்; ஐரோப்பா வந்தபின் பல விலங்குகள் தொடர்பான;விவரணச் சித்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்தவன் என்ற வகையில் அன்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சரியென்பதால் உங்களுடன் பகிர்கிறேன். தங்கள் மேலான கருத்தை வரவேற்க்கிறேன்.

வள்ளுவர் தெளிவாக "கவரிமா" என்று சொன்னதை; எப்படிக் கவரிமானாக்கினரென்பது,புரியாத புதிர்!. மூலத்தில் "கவரிமான் அன்னார்" என இல்லை. தெளிவாக "கவரிமா அன்னார்" எனவே உள்ளது.

முதல் கவரிமா என்பது;மேலே உள்ள படத்திலுள்ள விலங்கு; இது தீபேத்; நேபாளம் போன்ற நாடுகளில் இப்போதும் உண்டு. இந்தியாவிலும் இமயமலைப் பக்கம்;காஷ்மீ ரில் இருக்கிறது. இதன் தோற்றம் மாடு அல்லது எருமை போல் இருக்கும்; உடல் பூராக அடர்ந்த உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்; காரணம் இதன் வாழ்விடங்கள்; - 40°C மிகக் குளிரானவை. இயற்கை இதற்குத் தந்த பாதுகாப்பு; அடர்ந்த உரோமம்; இவ் உரோமம் நீக்கிலால்; அது குளிர் தாங்காது இறந்துவிடும். ஆனால் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.

இதன் ஒரு மயிர் அல்லது உரோமம் உதிர்வதால்;நீங்குவதால்; அகற்றப்படுவதால் .....இவ்விலங்கு ஒரு நாளும் இறப்பதில்லை. அத்துடன் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும்; மனிதனுக்கும் உரோமம்;இறகு; மயிர் ; நாளாந்தம் சில உதிர்ந்து கொண்டே! இருக்கிறது. இந்த ஒரு சில உதிர்வதால் அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் இறப்பதில்லை.அதனால் இந்த ஒர் மயிர்;என்பது இந்த உரையில் இருந்து நீக்கப்படவேண்டும்.

இப்படத்திலுள்ள இந்த விலங்கை; மானினமாகக் கொள்ள முடியாது.; மரையினம் கூட இல்லை.

இது மாடு அல்லது எருமையினமே!!! இதைப் பண்டைய தமிழர் "கவரிமா" - என அழைத்துள்ளார்கள்.

கவரி என்பது;உரோமம் ; மயிர் என்ற கருத்துடைய சொல்லாக இருந்திருக்கலாம். "மா" என்பது -விலங்கு;மிருகம் எனும் பொருள்படும். எனவே அடர்ந்த உரோமமுள்ள விலங்கு ;மிருகம் எனும் காரணப்பெயராகவும் இருக்கலாம்.

இதே வேளை "சவரி முடி" என்ற சொல்லைக் கட்டாயம் ,நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றைய பெண்கள் பாவித்த பொய்முடி; இது இலங்கைக்குச் சீனாவில் இருந்து இறக்குமதியானது. என் தாயாரும் கொண்டை போடும் போது(முடி குறைந்த போது) பாவித்தார். கவரிமா- முடியில் செய்தது. அதுவே மருவி "சவரி" யாகியிருக்கலாமெனக் கூறக் கேட்டுள்ளேன்.

என் பாடசாலை வாழ்வில்; நான் ஓர் சராசரி மாணவன்; எனக்கு இந்தக் குறளை விளக்கிய ஆசிரியரிடம்; ஒரு மயிர் விழுந்தால் ; மான் செத்துடுமா??, எனக் கேட்டு "இவர் பெரிய அறிவாளி வள்ளுவரில் பிழை பிடிக்கிறார்" என வாங்கிக் கட்டியது. நினைவுக்கு வருகிறது.ஆனால் இப்போ கூறுகிறேன். இவ்விலங்கு பற்றிச் சரியான புரிதல்;அறிதல் இன்மையால்;இக்குறள் பற்றி மிகத் தவறான விளக்கமே தரப்பட்டுள்ளது.

இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
கவரிமான் இருந்தால் அதன் விபரத்தைத் தாருங்கள்; படத்தைக் காட்டுங்கள்.

Wednesday, October 04, 2006

கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்



கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்

இத்தொடரின் இறுதிப்பகுதியாக பனை மரப் பயன்பாட்டைப் பார்ப்போம்.

வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை;தீராந்தி;;பாவுமரம்;சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து;அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40' நீளமானமரத்தில் சுமார் 25' வைரமானபகுதியாக;பாவுமரமாகவும்;ஏனையபகுதில் சுமார் 10' வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும்.

துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர்; நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.

இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி;பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது.காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம்;உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது.அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது.

வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி; இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள்; அதன் உறுதிக்காக.

தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர்;சப்பற்த்ட்தின் சகடைக்கு மேற்ப்பகுதி;அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர்,அவற்ருக்கு வயதெல்லை இல்லை; நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும்; நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது.

பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை;விழாக்காலத்தில்;திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ;தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது.சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும்.

மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர்.

மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது.

கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும்;மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்)

விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை;மட்டை;பன்னாடை;கொக்கரை;பாளை;மூரி;ஊமல்;பழுதடைந்தமரம்; யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது.

பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால்;நல்ல இயற்க்கைப் பசளையே!சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது.விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.


இதுவரை பனையின் மரப்பகுதியின் பயனைப் பார்த்தோம். எனக்குத் தெரியாதது எதாவது இருக்கும் பகிரவும்.இவற்றில் சில பாவனையில் இருந்து அருகிவிட்டன.
ஈழத்தின் போர்ச்சூழல் இதன் அருகலுக்கு முக்கிய காரணியாகிவிட்டது. நகரமயமாக்கலாகும் பனைகள் கண்மூட்டித்தனமாகத் தறிக்கப்பட்டுள்ளன.என்நிலையிலும் புதிய பனைகள் நடுவதற்கான எந்த ஓர் நடவடிக்கையும் இல்லை.
1964ல் ,கிளிநொச்சியில் காடு வெட்டிக் குடியேறிய எனது சொந்தக்காரர்;தங்கள் காணி எல்லைகளில் ;பனங் கொட்டை நட்டனர். அதை 84ல் சென்ற போது சிறுவடலிகளாகக் கண்டேன். 2004ல் சென்றபோது சுமார் 15' மரங்களாக பாளைதள்ளி நின்றன.
மிக நிதானமாக வளரும் மரமாக இருக்கும்; பயனுள்ள இம்மரத்தை ,தென்னையினத்தில் குறுகியகாலப் பயன் இனத்தை உருவாக்கியது போல் ,விவசாய விஞ்ஞானிகள் உருவாக்கிப் பரவவைக்க வேண்டும். இன்றைய ஈழத்தின் போர்ச் சூழலில் இது சாத்தியப்படாது. ஆனால் தமிழகம் முயன்றால், இதை ஓர் இயக்கமாகத் தொடங்கிப் பனைவளர்ப்பை ஊக்கிவித்தால். தமிழகத்தில் பஞ்சம் என்ற சொல் அடிபட்டுப் போய்விடும்.எலிக்கறி உண்ணும் நிலையும் வராது.கஞ்சித் தொட்டியும் வைக்கத் தேவையில்லை .என்றோ ஒருநாள் அமைதி ஏற்ப்படும் போது; அதன் பயனை ஈழத்தவரும் அனுபவிப்பர்.

தமிழர் வாழ்வாதாரமான இம் மரத்தைப் பேண நடவடிக்கை எடுப்பார்களா????

குறிப்பு:- இப் பதிவுகளில் இட்ட படங்கள் யாவும்; தமிழ்நாதத்தில் உள்ள "எழுவைதீவுக் காட்சிகள்" எனும் படத்தொகுப்பில் பிரதியெடுக்கப்பட்டவை. அழகான படங்களை உருவாக்கி யாவரும் பயன்படுத்த உதவிய அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி!!யோகன் பாரிஸ்

Sunday, October 01, 2006

கலைமகளும் பாரதியும்



ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லந்த துருக்கம் மிசிரம்
சூழ் கடற்கப் புறத்தில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியில் ஒளிமிகுந் தோங்க!

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகள் ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ!
போனதற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்க்க முயலுவம் வாரீர்!

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்


நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!

"என் பாட்டுத் திறத்தாலே வையகம் பாலித்திட வேண்டுமென"-பராசக்தியை வேண்டிய பாரதியாரின் எண்ணம்;எழுத்து எல்லாம்; தமிழ்மக்களின் கல்வி எழுச்சியும்; அறிவின் முதிற்சியும் வேண்டுவதாகவே!
இருந்துள்ளது;
கல்வி கேள்விகளில் சிறக்கும் சமுதாயமே! எதிர்கால உலகின் வளர்ச்சியுடன்,தாமும் வளரும் இல்லையேல் தேங்கிவிடும் ,இதற்கு எல்லோருக்கும் கல்வி!
"மீனைப் பிடித்துக் கொடுப்பதிலும், பிடிக்கக் கற்றுக் கொடு" என்ற கோட்பாட்டுடன்;பாரதி நம் சமுதாயத்தின் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களையும் ; கல்வியால் மேம்படச் செய்ய அவர்கள் வறுமை;முன்னெற்றத்துக்குத் தடையாக இருக்கக் கூடாதென்பதால்.......
உணவிலும் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டியதன் அவசியத்தை ; உணர்த்திப் பாடினார்.
முற்றிலும் இல்லாவிடிலும் தமிழ்ச்சமுதாயம் இப்போ தரணியில்;தன்னை நிலை நிலை நிறுத்தியுள்ளது.
பாரதியின் பெரும் ஆசை " பெண்களின் முன்னேற்றம்" ;அது திறம் பட நடந்தேறியுள்ளது.
இந்த "நவராத்திரி" காலத்தில்- சக்தி உபாசகரான "பாரதி" யையும் நினைவு கூர்வோம்.