வட பிரான்சின் நோர்மண்டிப் பகுதியில் , Couesnon நதியின் முகத்துவாரத்துச் சதுப்பு நிலத்தில் உள்ள ஓர் கல்மலையே
இந்த
புனித மைக்கல் தேவாலயம் அமைந்துள்ள
“MONT St. MICHEL” ஆகும். இதன் அமைப்பு மற்றும் கட்டிய காலப்பகுதி
மற்றும் இம் மலையில் இதைக் கட்டிய விதம் போன்றவற்றால்
இதை மேற்கின் அதிசயமாக நோக்குகிறார்கள்.

கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
இம்மலைக்குச் செல்ல சிறு மணல் மேடு இருந்துள்ளது. அதுவும்
ஒரு நாளைக்கு இரு தடவை கடல் வெள்ளம் பெருகும் போது
மூடிவிடுவதாக இருந்துள்ளது. அப்போது ஒரு தீவுபோல் தான் இது காட்சிதரும்.

ஆரம்பகாலத்தில் இடுகாடாக இருந்த இந்த மலைப்பகுதி , AUBERT- BISHOP OF AVRANCHES ன் கனவில், புனித மைக்கேல் தோன்றி தனக்கொரு தேவாலயம் ,இம்மலையில் அமைக்கும்
படி கேட்டுக் கொண்டதால்
16-10-709ல் ஒரு சிறிய தேவாலயமாகக் கட்டப்பட்டது.

பின் நோர்மண்டி மன்னர் விருப்பப்படி
966ல் , மதகுருக்களின்
மேற்பார்வையில் றோமபாணி தேவாலயம் எழுப்பப்பட்டது.
11,12,13 ம் நூற்றாண்டுகளின் இத் தேவாலயம் பெருப்பிக்கப்பட்டு
பல வசதிகளும் செய்யப்பட்டது.
14ம் நூற்றாண்டு இதைச் சுற்றி இராணுவப் பாதுகாப்புக்குரிய கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டது.
சுமார் ஆயிரம் வருடங்களாக மக்கள் பாதயாத்திரையாக இவ்வாலயம் வருகிறார்கள். புனித மைக்கல் அருள் நோக்கி வரும் இந்த யாத்திரையை
சொர்க்கத்தின் பாதை என வர்ணிப்பர்.
19ம் நூற்றாண்டுப் பிரன்ஸ்சுப் புரட்சியின் போது, இதன் சிலபகுதிகள் சிறைக்கூடமாக மாற்றினர்.

1966ல் ,இவ்வாலயத்தின் 1000 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் போது, கிருஸ்தவக் குருக்களின்
பயிற்சி, தியானக் கூடமாக ஆக்கப்பட்டு இன்றுவரை செயல்படுகிறது.
2001ல் இருந்து ஜெருசலேமின் குருமடத்தினரால் இறைவழிபாட்டுப் பொறுப்பேற்கப்பட்டு தினமும் பூசை நடை பெறுகிறது. ஏனைய நேரங்களில் கட்டணம் அறவிட்டு காட்சியகமாகச் செயல்படுகிறது.
இம்மலையின் தென்பகுதி சிறு குடியுருப்பில், தற்போது 50 பேர்
பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்களாக இருக்கிறார்கள்.
1979ல் யுனஸ்கோ பாதுகாக்க வேண்டிய உலகின் உன்னதமாகப் பிடகடனப்படுத்தியுள்ளது.

இதனைப் பார்க்க 3 தடவை சென்ற போதும், 85/87ல் சென்ற போது பிரான்சில் என் ஆரம்பகாலமாதலால், இது பற்றி மிக அறிய முடியவில்லை.
பின் தொலைக்காட்சியிலும், இப்போ நேரிலும் பார்த்த போது
பிரமித்தேன்.
தஞ்சைப் பெரிய கோவில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்
தியது.
அதைவிட இது என்னை வியக்கவைத்தது. காரணம் அது சம தளத்தில் கட்டப்பட்டது. இதுவோ ஒரு சிறுமலை சுமார் 300 மீட்டர் உயரம்... கடலுள்.....சிலபகுதி மிகச் செங்குத்தானது. இலங்கையில் சிகிரியாக் குன்றில் பழைய கட்டிடங்கள் அழியாதிருந்தால் இப்படி இருக்குமோ?
மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இக்கட்டிடம்.
நமது எத்தனையோ பழைமையான , வியத்தகு கலைகள், சாதனைகள் அழிய விடுகிறோம்.
இவர்கள் இன்றும் திருத்தம் செய்து பேணுகிறார்கள். பழைமையின் பெருமையை உணர்ந்து போற்றுவது மனதுக்கு
இதமாக உள்ளது.

இம்மலையைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலப்பரப்பு, கடல், ஆறு இரண்டும் கொண்டுவந்து சேர்த்த வண்டல் மண் நிறைந்த ஆபத்தான அசையும் சேற்றால் ஆன புதைகுழிகளையுடையது.
மிகத் தேர்ந்த அனுபவம் மிக்க வழிகாட்டிகளுடன் கடல் வற்றி வடிந்திருக்கும் போது நடந்து செல்லலாம்.

இப்பகுதியில் குதிரை வளர்ப்போர் ,தங்கள் குதிரைக்குக் கால்பலத்துக்காக இச்சதுப்புநிலத்தில் நடைபயில்வார்கள்.தரைப்பகுதியின் புல்வளத்தை ஆடுவளர்ப்போர்
பயன்படுத்துகிறார்கள்.
கடல்,மலை, பழைமைமிக்க கட்டிடக்கலை அத்துடன் இறைஇல்லம் என எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற சுற்றுலாத்
தலமானபடியால்....
உலகம் பூராகவும் இருந்து வருடம் 3 மில்லியன் மக்கள் வந்து பார்த்து ரசிக்கிறார்கள்

குறிப்பாக தினமும் இருதரம் வற்றி நிரம்பும், இம்மலையைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்பு ஆச்சரியமாக இருக்கும். தரவையாகக் கிடந்த நிலப்பரப்பு சில நிமிடங்களில் நீரால் நிரம்புவது பிரமிப்புடன் பார்த்துக் களிக்கக் கூடியது.
இத்தடவை பல இந்தியப் பயணிகளையும் காணக்கூடியதாக இருந்தது.

அங்கே ,நான் எடுத்த படங்களில் சில.......
(புனித மைக்கல் சிலை, பறவைப் பார்வைப் படம் எனதல்ல!இணையத்தில் பிரதி செய்தது.)







