Friday, September 28, 2007

Mr.Dominique Strauss-Kahn -உலக நிதி நிறுவனத் தலைவர்



பிரான்சின் அரசியலில் மிக முக்கியமான
திரு.Dominique Strauss-Kahn (58), அவர்கள் உலக நிதி நிறுவனத்
(International Monetary Fund) தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

இவர் சிறந்த கல்விமான் அத்துடன் சோசலிசக் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்.

நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியவர்.
போட்டியிட்டிருந்தால் வென்றிருப்பார், எனும் அபிப்பிராயமும் இருந்தது.

இவர் ஏழை நாடுகள் மேல் அதிகம் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.
வரும் நவம்பர் முதலாம் திகதி பதவி ஏற்று, 5 வருடங்கள் இந்தப் பதவியில் இருப்பார்.
சொன்னதைச் செய்வார் என எதிர்பார்த்து வரவேற்போம்.

Thursday, September 06, 2007

மேற்கத்தைய பாரம்பரிய இசையுலக மேதைLUCIANO PAVAROTTI மறைந்தார்.



மேற்கத்தைய பாரம்பரிய(OPERA) இசையுலகின் மன்னனாக 40 வருடங்கள் ரசிகர் மனதைக் கவர்ந்த லூசியனொ பவறொற்ரி (Luviano PAVAROTTI) இன்று அதிகாலை இறையெய்தினார்.

இவர் இத்தாலியப் பிறப்பிடமாகக் கொண்டு; தன் குரலால் உலக மேற்கத்தைய பாரம்பரிய இசை ரசிகர்களைக் கவர்ந்தவர்.

1990 உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டியின் முன்; ஏனைய திறமைமிக்க மேதைகளான
Placido DOMININGO,Jose CARERRAS; உடன் Zubin MEHTA(இந்தியர்) சுபேன் மேத்தா வின் நெறியாள்கையில் பாடியதை ,உலகமே கட்டு கேட்டு ரசித்தது.

2006 இல் இருந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டதால்; பாடுவதை நிறுத்தியிருந்தார்.

என் ஆரம்ப காலப் பாரிஸ் வாழ்வில் இவர் என் தனிமையில் துணையாக இருந்தவர்.


ஆச்சரியப்படவேண்டாம்....

1984 ல் , பாரிஸ் வந்த போது; இங்கு சில குறிப்பிட்ட தொலைக்காட்டிகளே இருந்த காலம்; நமது பாடல்கள் கேட்கக் கிடைக்காத காலம்.வீட்டு நினைவுகளால் நித்திரை தொலைத்த காலம்..தொலைக்காட்சியிலோ நள்ளிரவின் பின் பாரம்பரிய இசையே போடுவார்கள்..;ஏதோ பார்ப்போம் என பார்த்த போது மெள்ள மெள்ள இதில் சிறு ரசிப்புத் தன்மை ஏற்பட்டது.

குறிப்பாக இவர் மேடையில் எப்போதுமே சிரித்த முகத்துடனே பாடுவார்.நேரடிக் கச்சேரிகளில் ஒவ்வொரு பாடல் முடிவிலும் ரசிகர்களின் கைதட்டலை ஏற்றுக் கைகூப்பிக் கும்பிடுவார்.
அந்தச் சிரித்தமுகம் என் தனிமைக்கு இனிமையாக இருந்தது
.

இவர், நம் செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜேசுதாஸ்; ஷேசு கோபாலன்; சீர்காழியுடன் ஒப்பிடக் கூடியவர்.
திறமை மிக்க ஒரு மேதையை இசையுலகம் இழந்து விட்டது.

Monday, September 03, 2007

பாரிஸ் விநாயகர் தேரில்...

பாரிசில் சென்ற ஞாயிறு 02-09-2007 அன்று , மாணிக்க விநாயகர் தேரில் பவனி வந்தார்.
உங்களுக்காகச் சில படங்கள்...

பஞ்சமுக விநாயகர் தேரில்.....





பாரிஸ் வீதியில் தேர்....




நாதஸ்வர மேளம் முழங்க...


உடன் துப்பரவுப் பணி...







நிறைகுட வரவேற்பு...



சிதறக் காத்திருக்கும்...

சிதறிய.....


மாவிலை,கரும்பு, தோரணம்..


சேலையிலும் தோரணம்..
முருகன் தேர்


காணொளிக் காட்சியாக சில பகுதிகள்....







வழமையை விட இந்த வருடம், மக்கள் குறைவாக வருகை தந்த போதும், திருவிழா பெருவிழாவாக நிறைவெய்தியது.

Thursday, August 30, 2007

நெல்சன் மன்டெலா சிலை- லண்டன் பாராளுமன்றத்தில்

முன்னாள் தென் ஆபிரிக்க அதிபர் திரு. நெல்சன் மன்டெலாவுக்கு (Nelson MANDELA- 89); பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் 2.7 மீட்டர் உயரச் சிலை ; நேற்று 29-08- 2007 அன்று பிரித்தானியப் பிரதமர் கோர்டொன் பிறவுண்(Gordon BROWN); லண்டன் நகரபிதா கென் லிவிங்ஸ்ரோன்(Ken LIVINGSTONE); நெல்சன் மன்டெலா முன் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்ரன் சர்சில்(Winston CHURCHILL); முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்(Abraham LINCOLN) சிலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.இச் சிலை இயன் வோல்ரஸ்(Ian WALTERS) என்னும் சிற்பியால் உருவாக்கப்பட்டது.இதை ஒட்டி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில்; பிரித்தானிய பிரதமர் "எமது தலைமுறையில் மிகப் புகழ்மிக்க ;மிகுந்த மனத்தைரியம் மிக்க பெருந்தலைவர் எனப் புகழ்ந்தார்.



இவ் விழாவில் பெருந்திரளான நிறப் பாகுபாட்டுக்கெதிரான போராடும் மக்கள் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்

Thursday, August 23, 2007

குரங்கு வேலை...

னிதன் தனக்கு உதவியாக வேலைகள் செய்யக் காலாகாலமாக மிருகங்களைப் பழக்கியுள்ளான். இந்தக் குரங்குகளை பொதுவாக வேடிக்கை காட்டவே நம் நாடுகளில் பழக்கியுள்ளார்கள். அப்படியே நான் பார்த்துள்ளேன்.

தாய்லாந்து , வியட்னாம் போன்ற நாடுகளில் ,இந்தக் குரங்குகள் தேங்காய் பறிக்க பழக்கப்பட்டு; நாளுக்கு 300 தேங்காய் பறிப்பதுடன்;மனிதனிலும் அதிவேகமாகப் பறிப்பதாகவும்; களைப் படைவதில்லை எனவும் கூறுகிறார்கள்.

சுமார் 2 மாதக் குட்டியாகப் பிடித்து;படிப்படியாகப் பயிற்சி கொடுத்து; இரு வருடப் பயிற்சியில் ,அது வேலைக்குத் தயாராகிறது.

இந்தக் குரங்குகள் இடையில் போட்டி வைத்து; பயிற்சியாளருக்குப் பணமுடியும் அக் கிராமங்களில் வழங்குகிறார்கள்.

பயிற்றப்பட்ட குரங்கு ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்பனை செய்கிறார்கள்.

தென்னந்தோப்பு சொந்தக்காரர்கள் இவற்றை வாங்கிப் பயனடைகிறார்கள்.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்த பின் இணையத்தில் தேடிய போது யூருயூப்பில் கிடைத்ததைப் பகிர்கிறேன்.


இலங்கை; இந்தியாவில் இப்படியான முறையுண்டா???









Sunday, August 19, 2007

Qawwali இசைச் சக்கரவர்த்தி Nusrat Fateh Ali Khan


உங்களில் பலருக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்.
பாகிஸ்தானின் குவாலி(Qawwali) இசைப்பாடல் மூலம் உலகம் புகழ்ந்த நஸ்ரத் பேத் அலிகான்(Nusrat Fateh Ali Khan).

13-10-1948 ல் பாகிஸ்தானிப் பஞ்சாப்பில் பிறந்தவர்.
தன் குடும்பத்தினர் இசைக்கும் இசை வடிவான இந்த 600 வருடப் பழமை வாய்ந்த குவாலி இசையை, தந்தையிடம் கற்றுத் தேறி ,தந்தையின் மறைவின் பின் குழுவைத்
தலைமை தாங்கி தான் மறையும் வரை; அதற்கு உலக அரங்கமெங்கும் புகழ் கூட்டிச் சென்றவர்.




இவர் குழுவில் சுமார் 11 பேர் உள்ளனர். யாவரும் உறவினரே...பலர் பின்குரலும்..கைத் தாளம் போடுபவர்களாகவுமே உள்ளார்கள்.


இவர் உருது,பஞ்சாபி,இந்தி மொழிகளில் பாடி மகிழ்வித்தார். பல மேலைத் தேச இசை வல்லுனர்களுடன் சேர்ந்திசைத்து, சுமார் 125 இசைஅல்பங்கள் வெளியிட்டு குவாலி இசையுலகில் அதிக அல்பம் வெளியிட்டவர் எனும் கின்னஸ் சாதனை படைத்தவர்.


DEAD MAN WALKING,THE LAST TEMPTATION OF CHRIST,NATURAL BORN KILLERS போன்ற ஹாலிவூட் படங்களுக்கு இசையமைத்தவர்.


பிரான்சில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 1997 ல் பாரிசில் பெரிய மண்டபத்தில் இவருக்கு 5 நாட்கள் மாலை 8.30 மணி நிகழ்ச்சிக்கொதுக்கியிருந்தது.
குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன் சிறுநீரக மாற்றத்துக்காக
அமெரிக்கா செல்லும் வழியில் ,இங்கிலாந்தில் 16-08-1997 ல் மாரடைப்பினால் இறையெய்தினார்.
இவரது இசையை நேரடியாகக் கேட்க நான் ஆவலாக 1997ல் நுளைவுச் சீட்டுக்குப் பதிவு செய்திருந்தும்,கைகூடவில்லை.
ஆனால் இவர் இறையெய்திய போது ,லண்டனில் இருந்தேன். அப்போது இவருக்கு மரியாதை செய்ய தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியாக ,லண்டனில் நடந்த கச்சேரி
ஒன்று போட்டது.

கேட்டுப் பாருங்கள்


Nusrat Fateh Ali Khan
envoyé par ploukkk



அதில் இந்த ‘மஸ்து, மஸ்து’ என்ற பாடல் மிகப் பிரபலமாக வரவேற்பைப் பெற்றது.
இவர் இசையை நான் மொழி புரியாவிடிலும் மிகரசிப்பேன்.
இசைத்தட்டுக்கள், ஒலி ஒளி நாடாவிலும் வைத்துள்ளேன்.
இன்றும் இவர் கச்சேரி நேரே பார்க்கக் கிடைக்கவில்லை, எனும் கவலை எனக்குண்டு.
அவர் மறைந்து 10 வருடமாகிறது.
அவரை நினைத்தேன், உங்களுடன் பகிர்கிறேன்.

அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.....

Monday, August 06, 2007

புகைப்படப் போட்டி- portrait

ந்தப் போட்டியில் வெல்பவர் படங்கள்; பல போட்டிப் படங்களுள் தெரிவானதெனும் பெயரெடுக்க இந்தப்படங்களையும் அனுப்புகிறேன்.







Friday, August 03, 2007

இரவு 12 மணிக்கு உண்மையெனில்!...விடிந்தும் உண்மையே!!




இலங்கையில் என் இளமைக்காலத் ; தேர்தல் காலம், திருவிழாக் காலம் போல் தான்!

ஊர்வலம்;ஒலிபெருக்கி; தோரணம்;கொடி ;கும்பம்...என அட்டகாசமாகத் தான் இருக்கும்.

தேர்தற் காலத்தில் மாத்திரம் பத்திரிகை வாங்குவோரும் உண்டு; சனசமூக நிலைய; வாசிகசாலைப் பத்திரிகைகள் இரவு தவிர ஏனைய நேரங்களில் , பலர் கைகளில் தவழும்...அப்படி ஆர்வமாக தேர்தல் செய்தி படித்தறிவார்கள்.

தேர்தல் அன்று ...முடிவுகள் அறிய மக்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது.
அன்றைய நாட்களில் வானொலி ஒன்றே உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் சாதனமாக இருந்தது.

வானொலியுள்ள வீடுகளில் அன்று இரவு....சிவராத்திரியே!!!

சில வானொலியுள்ள வீடுகளின் உறவினர்கள் தாம் இரவு முடிவு கேட்க வருவதாக முன்கூட்டியே "இட ஒதுக்கீடு" செய்வது முண்டு.
அன்றைய இரவு வானொலியைச் சுற்றி சிறிசு,பெரிசெல்லாம்....கூட்டமாகிவிடுவார்கள்.

நள்ளிரவுக்குமேல் தூக்கம் கலைக்கவும்; அதிகாலைப் புத்துணர்வுக்கும் தேனீர் உபசரிப்புக்களும் உண்டு.

சில பெரியவர்கள் இரவுச் சாப்பாட்டின் பின் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு நள்ளிரவின் பின் விழித்தே முடிவறியக் காத்திருப்பார்கள்.

அவர்கள் அனுபவத்தில் முடிவுகள் எப்படியும் நள்ளிரவு தாண்டியே வெளிவரும் என்பதை அறிந்தவர்கள்.

தேர்தல் முடிவை விட இரவிரவாக ஒலிபரப்பும் , திரைப்படப்பாடல்களைக் கேட்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.

சில நல்ல பாடல்களை அறிவிப்பாளர்களும், அந்த இரவு 2 ,3 தரம் போட்டுச் சந்தோசப் படுத்துவார்கள். ரெப்ரெக்கோட்டர் இல்லாத அந்தக் காலத்தில் பிடித்த பாடலை சில மணியில் மீண்டும் கேட்பதென்பது, குதூகலமான விடயம்.

அன்றைய அறிவிப்பாளர்கள்;தயாரிப்பாளர்கள் கூட இது தேர்தல் முடிவு அறிவிப்புத் தானே என ஏனோதானோ என அந்த இரவைக் கரைய விடாமல்; "விரும்பிக் கேட்டவை" நிகழ்ச்சிக்கு நேயர்கள்
கேட்டெழுதிய பாடல்களையே தொகுத்துப் ஒலிபரப்புவார்கள்.
முழு இரவும் இனிமையான பாடல்கள் வானலையில் தவழ்ந்துவரும்.

‘’ஆகாயப்பந்தலிலே, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள், நமது வெற்றியை நாளை’’ போன்ற பாடல்கள் ஒரே இரவில் மறு ஒலிபரப்பானதை மறக்கமுடியாது.

கிராமங்களில் மின்சாரமில்லாக்காலம்... வால்பு வானொலிகள்...பெரிய எவரெடி மின்கலங்களில் இயங்குபவை..

கடைகளில் இந்த வகை மின்கலங்கள்...தட்டுப்பாடு போல் காட்டி 2 ரூபா அதிகவிலை கூட்டி முதலாளிகள் விற்பார்கள்.
‘’காற்றுள்ள போதே தூற்று’’...

அத்துடன் விரல் விட்டெண்ணக்கூடிய "டிரான்சிஸ்டர்" வானொலிகள்...இவை ரோச் பற்றியில் இயங்கக் கூடியவை.

அந்த இரவு தொடர்ந்து வானொலி இயங்குவதால்...ஏற்படும் மின்கலச் சக்திக் குறைபாட்டை நிவிர்த்திசெய்ய ஆபத்பாந்தவனாகக் கைவசம் உள்ளதே..இந்த வீட்டிலுள்ள இருட்டுக்கு வெளியே கொண்டு செல்ல உள்ள ரோச்லயிற்ரின் பற்றிகளே!!!

எந்தச் சந்தர்ப்பத்திலும் ரோச் பற்றியை வானொலிக்கு மாற்ற விடாத அப்பாக்கள், ஐயாக்கள் கூட,அன்று அனுமதிப்பார்கள்.
காரணம் அவர்களும்; முடிவறியக் காட்டும் ஆவலே!!!!!

இதே வேளை கிராமச் சனசமூக நிலையமும் களைகட்டிவிடும்; அங்குள்ள வானொலி இளைஞர்களால் சூழப்பட்டிருக்கும்.

நான் சனசமூக நிலைய வானொலியையே தேர்வேன்; வீட்டைவிட "சுதந்திரமாக " விமர்சனம் ,தர்க்கம்" வைக்க அதுதான் சிறந்த இடம்..

இப்படியாக அன்றைய தேர்தல் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது.
தேர்தல் காலச் சிறு சச்சரவுகள் இருக்குமே தவிரக் கொலைகள் என்பது என்ன? என்று தெரியாத காலம்.

அது ஒரு பொற்காலம்...

இப்படியான காலக் கட்டத்தில் , நான் மலையகத்துக்கு வேலைக்குச் சென்ற போது பல மாவட்டங்களைச் சேர்ந்த பல வித தொழில் நிமித்தம் , வந்தவர்களுடன் சேர்ந்து பழகி,வாழும் பொன்னான, மறக்க முடியா வாய்ப்புக் கிடைத்தது.

அப்போது மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்று விட்டு ஆசிரியராக வந்த ஒரு நண்பர்; தங்கள் கலாசாலை அனுபவத்தைக் கூறும் போது...

அவர் கலாசாலை சென்ற; முதல் நாள் விரிவுரைக்கு வந்த பேராசிரியர்.
மாணவ ஆசிரியர்களைப் பார்த்துக் கேட்டாராம்!...

"இரவு பூராக விழித்திருந்து..;தேர்தல் முடிவு கேட்பவர்கள் கையுயர்த்துங்கள்
சுமார் 80% மாணவர்கள் கையுயர்த்தினார்களாம்.

அவர் மீண்டும் கேட்டாராம்;;;மிகுதி 20% யையும் பார்த்து...நீங்கள் எவருமே சிறிதளவும் தேர்தல் முடிவில் ஆர்வம் காட்டுவதில்லையா????

அப்போது ஒரு 15% மாணவர்கள்...விரும்பியும் விரும்பாமலும் கையைத் தூக்கினார்களாம்.
அதன் பின் அந்தப் பேராசிரியர் கூறிய கூற்றே...இப் பதிவின் தலைப்பு.

அப் பேராசிரியர் இது தவிர வேறு எந்த விமர்சனமும் இது விடயமாக செய்யாது, தொடர்ந்து விரிவுரை ஆற்றினாராம்.

இன்று தேர்தல்களின் நிலை மாறினாலும்;;; திரைப்படத்துக்கு முதல் நாள் முதற்காட்சி.. மழை வெய்யிலில் வரிசையில் சோறு தண்ணி இன்றிக் கிடந்து பார்ப்பவர்கள்.


ஹரி போட்டர்.. நள்ளிரவு 12 மணிக்கு வரிசையில் நின்று வாங்குபவர்கள்; பிளே ஸ்ரேசன் நள்ளிரவே வாங்கி உடைப்பவர்கள்
போன்றோரை , அந்த விரிவுரையாளரின் கூற்றுடன் ஒப்பிடுவேன்....

சிலவிடயங்களில் இந்த அதீத ஈடுபாடெனும் கோமாளித் தனத்தை, இப்பேராசிரியரின் கூற்றை ஏற்றுத் தவிர்க்கிறேன்.

நீங்கள் எப்படி??


***படம்:என் வீட்டு மாடத்திற்கு வரும் நிலவு

Wednesday, August 01, 2007

சென்னைத் தமிழும்…. யாழ்ப்பாணத் தமிழும்....

மது தமிழ் இடத்துக்கிடம் எப்படியெல்லாம் பேசப்படுகிறது.
சில இடங்களில் அவை புரிந்துகொள்ளப்படுவதும் இல்லை.

அதிலும் ஓரளவு தூய தமிழ் பேசினால், இவர் என்ன?? மொழி பேசுகிறார் என விழி பிதுங்கும் நிலையும் உண்டு.


இந்தத் திரைப்படக் காட்சி நகைச்சுவையானாலும்,பேச்சுத் தமிழின் நிலையும், அரசியலின் போக்கும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

மிக ரசிக்கும் படி அனைவரும் நடித்துள்ளார்கள்.
பார்த்திருப்பீர்கள் மீண்டும் பாருங்கள்.....




Tuesday, July 31, 2007

திருநங்கையாக பிரஞ்சுத் திரையில் வாழ்ந்து காட்டிய MICHEL SERRAULT

பிரஞ்சுத் திரைப்பட உலகில் 50 வருடங்களாக தன் திறம்பட்ட
நடிப்பால் ,குறிப்பாக நகைச்சுவையால் கோலோச்சிய சிறந்த குணசித்திர நடிகர் மிசல் செறோ (MICHEL SERRAULT) தன் 79 வயதில் நோய்வாய்ப்பட்டு 29-07-2007 மாலை காலமானார்.

பிரான்சில் புறுனொய் (BRUNOY) ல் 24-01-1928 ல் பிறந்து, 1954 ல் திரையுலகுக்கு வந்து பல தரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தபோதும். அவருக்கு ( CAGE AUX FOLLES) காச் ஓ பொலி என்ற படத்தில் ஏற்று நடித்த திருநங்கை பாத்திரமே மிகப் பெரிய புகழைத் தேடித் தந்ததுடன், சர்வதேச கீர்த்தியையும் ஏற்படுத்தியது மாத்திரமன்றி தொடர்ந்து 3 பாகமாக வெளிவந்து வெற்றி கண்டது.


நான் மிக மிக இரசித்த இவர் படமும் இந்த CAGE AUX FOLLES.



இவர் சிறந்த நடிப்பால், திருநங்கைகளே வெகுவாகப் பாராட்டியதாக கூறுவார்கள். அவ்வளவு இயல்பான மிக அவதானிப்பான நடிப்பு.



இவர் பிரான்சின் உயர் திரைப்பட விருதான சிசர்(CESAR) , 3 தடவைகள் பெற்றுள்ளார். மொத்தம் 135 முழுப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், மேடை நாடகமென ,சென்ற வருடம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.
ஒப்பாரும் மிக்காரும் அற்றவர். பிரான்சின் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பே!


இன்று தொலைக்காட்சிச் செய்தியில் கூட அவர் திருநங்கை வேசத்தின் சில காட்சியைக் காட்டி... செய்தி வாசிப்பவர் ,இந்தக் கவலையான சூழலிலும் தன்னை மறந்து சிரிக்கும் படியானது.
உங்களில் யாருக்காவது இந்தத் திரைப்படம் கிடைத்தால் பார்க்கவும்.



Monday, July 30, 2007

அதி புத்திசாலித்தனம்....

கல உயிரினங்களும், உயிர் வாழ உரிய வித்தைகளைக் கற்றவையாக இயற்கையிலே அமையப் பெற்றன.


சிம்பன்சிக் குரங்னினம் மிகுந்த புத்திசாலித் தனமான விலங்காகக் கணிக்கப்பட்டு; மனிதனுக்கு மிகக் கிட்டிய உறவும்;புத்திசாலித் தனமும் உள்ளதாக ஆய்வாளர்கள்; கூறுகிறார்கள்.

எனினும் சிலவற்றின் அதீத நவீன உலகுக்கேற்ற வாழ்வியல் மாற்றப் புத்திசாலித் தனம் ஆச்சரியமானது.

சென்ற வாரம் ஜப்பானியக் காகங்கள் பற்றிய ஆய்வு சம்பந்தமான விலங்கியல் விவரணச்சித்திரம் ;பார்த்த போது.... காகத்துக்கு, புறாவை விட மூளை ;3 மடங்கு பெரியது என விளக்கி ;அதன் புத்திசாலித் தனம் பற்றியும்; இந்த நவீன உலகின் மக்களுடன் அது எப்படி ? தன் வாழ்க்கையை அனுசரித்துச் செல்கிறதென்பதனை விளக்கிய போது...

காகம் பற்றிய தேடுதல் செய்த போது...YOUTUBEல் இவற்றைக் கண்டேன்..
நீங்களும் பாருங்கள்....




Monday, July 23, 2007

இந்த இரண்டு துயரமும் கூறுவது ஒன்றே!!!


25-07-2007 யூனியர் விகடன் படித்தவர்கள் ....

1-நாவினால் சுட்டவனை தீயினால் சுட்டானா?...

2- ஐந்து ரூபாய்க்காக ஒரு தற்கொலை....


என்ற இந்தச் செய்திகளைப் படித்திருக்கலாம்!

இச் செய்தியின் நாயகன், நாயகிக்கு வயது, வெறும் பத்தும், பதினொன்றுமே.....

செய்தியைத் சுருக்கமாகத் தருகிறேன்!


முதலாவது செய்தியின் சிறுவன் 10 வயது, அவன் வயதையொத்த சிறுவன் ,இவன் தாயாரை கெட்டவார்த்தையால் திட்டி விட்டான் என்பதால், அவன் வீடுசென்று மண்ணெய் ஊற்றிக் கொழுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். எரிந்த சிறுவனே வாக்குமூலம் கொடுத்துள்ளான்।


இரண்டாவது செய்தியில் 11 வயதுச் சிறுமியின் தந்தை அவளுக்குப் 10 ரூபா கொடுக்கிறார், அவள் அக்கா அதில் 5 ரூபா தனக்கு எனக்கேட்க ,தாய் 5 ரூபாயை வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்!, தன் காசைச் சகோதரிக்குக் கொடுத்தது தாங்காது, துப்பட்டாவைக் கழுத்தில் மாட்டி சுருக்கிட்டு, தொங்கி இறந்தே விட்டாள்।


இந்த இளம் குருத்துக்களின் மனதில் இவ்வளவு வைராக்கியமும், வன்மமும்
எப்படி? வந்தது...


இதற்கு பெரிய ஆய்வு செய்ய வேண்டியதில்லை.


இன்றைய திரைப்படங்களே....இந்தச் சீரழிவின் ஜீவநாடி....

இன்றைய பழிக்குப்பழி தீர்க்கும் கதையமைப்புடைய திரைப்படங்கள்,
எம் சிறார்களை மனநிலையை வெகுவாகப் பாதித்து விட்டது.


அன்றைய படங்களின் நாயகன் குற்றம் செய்தவரைப் பிடித்து,
பொலிசாரின் கைகளில் கொடுப்பது போல் காட்சியமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது
போல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு!எனச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது!।


இந்த வெளுத்தையெல்லாம் பாலேன எண்ணும் சிறுவர்கள் மனதில் விசத்தைத் தெளித்துவிட்டார்கள்,,,,

வயது வந்தவர்களே திரைப்பட நாயகன்களைக் கடவுளாகக் கருதிப் பாலாபிஷேகம் செய்யும் போது ,இந்த விபரமறியாப் பிஞ்சுகளின் நிலையென்ன?

கல்லாப்பெட்டி நிரப்பும் கூட்டம் ,சமுதாயம் பற்றிச் சிந்திக்காது.
நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது!


அடுத்து திரைப்படத்தின் தங்கை சின்னத்திரைக் கதைகளில்
சிறிய குடும்பச்சிக்கல்கலுக்குக் கூட நாயகி தற்கொலை என்பதை
விலாவாரியாகக் காட்டுகிறார்கள் இந்த தொலைக்காட்சியே
தஞ்சமெனக் கிடக்கும் தாய்மாருடன் இந்தச் சிறுமிகளும்
சேர்ந்து இவற்றைப் பார்த்து, மனமாசடைந்தவர்களாகி ,
சிறு மனச் சோர்வுக்குக் கூட இவற்றை நாடுவது,
சிந்தனைக்குரியது.


10 வயதில் கொலைசெய்யத் துணிவு வருவதும், தற்கொலை செய்யும் மனத்திடம் வருவதும்... வரவேற்கக் கூடியதல்ல.

நாம் நமது எதிர்கால சந்ததி பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டதென்பதன் அறிகுறியே இது.....

இவர்கள் இளம் மனதில் இனியாவது... பொறுமை, தர்மம்,ஞாயம்,
மன்னிக்கும் மனப்பாங்கு, பழிவாங்கும் எண்ணமின்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்ப்போமா??

அத்துடன் திரைப்படம், தொலைக் காட்சி என்பது தவிர்த்து...வாசித்தல், கேட்டல் என்ற விடயங்களையும் நாமும் அவர்களுடன் சேர்ந்து செய்யப் பழகுவோமா??

பாடசாலைகளிலும்...

உயிரின் பெறுமதியை உணரப் போதித்தல்

பழிக்குப்பழியால் ஏற்படும் துன்பம் அவமானம் போன்றவற்றை விளக்குதல்।

தற்கொலையால் குடும்ப அங்கத்தினர் படும் வாழ்நாள் வேதனையைப் புரிய வைத்தல்।

குடும்பத்திலுள்ள அனைவருமே ,சிறியோர் மனதைப்பாதிக்கக் கூடிய தொலைக்காட்சித் தொடர்களை முற்றாகப் பார்ப்பதைத் தவிர்த்து,
நம் சிறார்களைக் காத்து, நல்ல எதிர்காலச் சந்ததியை உருவாக்குவோமா
?

Wednesday, July 18, 2007

புகைப்படப் போட்டி!!!!

'' புகைப்படப் போட்டி'' அறிவித்தலில்...வந்த பலர் அனுப்பிய படங்களைப் பார்த்த போது , பரிசு கிடைக்காதென்பது தெளிவாகத் தெரிந்த போதும், பதிவு போட்டும் அதிக நாளாவதால் ,இதையிடுகிறேன்।

இந்தக் கலையெல்லாம் ,நமக்கு எதுவும் புரிவதில்லை। ஏதோ தன்னியக்க கருவிகள் வந்தபின் நாமும் ஏதோ பிடிக்கிறோம்।

அவ்வளவுதான்.....




அட....தமிழ்மணத்தில்.....புகைப்படக் கலைப் போட்டியாமே!!!!!!








தேனுண்ணும் வண்டு.........

Saturday, June 30, 2007

இரவு, மணி 8.00, 8.02, 8.05,…..8.20 நிறைந்து விட்டது.

பிரான்சில்,Mont Saint Michel எனும் இடத்துக்குச் சென்று படங்களுடன் ஒரு பதிவு போட்டிருந்தேன்।
"புனித மைக்கல் தேவாலயம்-Normandy யின் கட்டடக் கலையின் இரத்தினம்"
அங்கே ஒரு சிறப்பு இம்மலையைச் சுற்றியுள்ள கடல் வற்றி நிரம்புவது. இதை முன்கூட்டியே கணித்து அறிவித்தல் வைத்துள்ளார்கள்.


அன்று மாலை 7.30 மணிக்கு எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
மலையருகே இரவு 8.00 மணிக்குத் தொடங்கியதைப் படமாக்கி
உள்ளேன்।

இந்த கடற்பெருக்கு ஒரு குதிரையின் வேகத்தை ஒத்ததாம்.
தரவையாக செம்மறி ஆடுகள் மேய்ந்த இடம் , நீர்க்காடாவது
சில மணித் துளியில் வியப்பான காட்சி॥

நான் ஒரு இடத்தில் நின்று படம் பிடிக்க முடியாமல்..
கரை நோக்கி மேலேறும் படியானது।

முதற் படம் பிடித்த இடம் ,சில நிமிடத்தில் நீரால் நிறைந்தது.
வாகனத் தரிப்பிடம் முற்றாக நீரில் மூழ்குவதால், மாலை 7 மணிக்கு முன் வண்டிகள் எடுத்துவிடவேண்டும்।

ஆச்சரியமும், ரம்மியமும் மிக்க காட்சி॥

கோடை காலமானதால் சூரியன் ஒத்துழைப்பு, படம் பிடிக்க
நிறைய இருந்தது.





























**** முதற்படம் இணையத்தில் எடுத்தது.

இங்கிலாந்தில் குண்டுத் தாக்கல்




இங்கிலாந்து ;கிளாஸ்கோ விமானநிலையத்தின் பிரதான வாசலில்

குண்டு பொருத்திய வண்டியில் வந்து வெடிக்கச் செய்துள்ளார்கள்।


ஒரு ஆசியர் கைது செய்யப்பட்டுள்ளார்।


சேதவிபரம் தெரியவில்லை।

உயிர் சேதம் இல்லை।

விமானங்கள் யாவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது।

நேற்றும்; லண்டன் பாதாள வண்டி நிலைய மருகே,எரிவாயு குடுவைகளும் ,ஆணிகளும் நிரப்பிய வண்டி ஒன்று

அனாதரவாக கிடந்து பொலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்।

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.......என் எட்டு




ட்டு விளையாட்டுக்கு மாயன், ராகவன், ராமச்சந்திரன் உஷா கூப்பிட்டாங்க!


நமக்கேன்ன விளையாடும் வயதா??? இதெல்லாம் வேண்டாம்..என்றாலும் மீள்
அழைப்பு...


சாதனை....என்னைப்போன்றவர்கள் வாழ்வதே சாதனையே!!!


என்னைப் பொறுத்தமட்டில் சாதனைக்கு வரைபிலக்கணம் புரியவில்லை।


நம் நாடுகளில் சொந்த முகவரியே இல்லாமல் தெருவிலே வாழ்ந்து , அதைப்
பற்றிய கவலையே இல்லாமல் மறைகிறார்களே!!!
அந்த மக்கள் சாதனையாளர்களே!


இல்லை இல்லை என அழுவதிலும் இருப்பதில் திருப்திப்படுவது சாதனையில்லையா?
இது எத்தனைபேரால் முடியும்.

அந்த வகையில் நான் அசட்டுச் சாதனையாளனே!

1
)உயர் வகுப்புக்குப் போனபோது , ராக்கிங் - பகிடி வதை, அத்துடன் அதில் இருந்து தப்புவதானால் , மாணவர் அரங்க விவாத அரங்கில் பங்குபற்ற வேண்டும். விதியே என ஒப்புக் கொண்டேன். சமுதாய சீர்திருத்தத்துக்கு வன்முறையா? மென்முறையா?
தலைப்பு...எல்லோரும் பேசினார்கள்.எந்த முன் அனுபவமும் இல்லாமல் நானும் பேசினேன்.
பிள்ளை முலையைக் கடித்தால், தாய் தலையைக் கடிப்பதா? அவர்கள் நம் சகோதரர்கள் என அவர்களை அரவணைப்போம்... எனப் பேசினேன்.கைதட்டல் ,மாணவ மாணவிகள் மத்தியில்
அந்த
முலை
ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி..நடுவரே என்னைப் பாராட்டும் படி ஆகி..
தொடர்ந்து விவாத அரங்கம் , பட்டிமன்றம் என்றால் கூப்பிடு இவனை என்றாகி... மானிப்பாய் இந்துக் கல்லூரியில் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயம் உண்டு என வித்துவான் வேலன் நடுவராக இருக்கப் பேசி...தானத்தில் சிறந்தது, நிதானம் அது இவர் பேச்சில் உள்ளதெனப் பாராட்டப் பெற்றது. பின் எங்கள் அதிபரும் பாராட்டியது.
தொடர்ந்து அந்தப் பழக்கம் பாரிஸ் வரை கைகொடுத்து, பம்பாய் ஜெயஸ்ரீ , கானமூர்த்தி
போன்றோரின் கச்சேரிக்கு அறிமுக உரையாற்றுமளவுக்கு ,நான் ஆனது ...


2) படிப்பு இவ்வளவே என ஆனதும் வேலை தேடினேன். முதல் நேர்முகத் தேர்வு
வங்கி வேலைக்கு , தேர்வு முடிந்து வெளியே வந்ததும், வேலை கிடைக்காது என
உடன் வந்த நண்பர்களிடம் அடித்துக் கூறினேன்.எப்படி?
இங்கிலாந்தின் தலைப்பட்டனம் என்ன?,
கலங்கரைவிளக்கம் என்றால் என்ன ? போன்ற கேள்வி கேட்பது ,வேலை தரவா?
அடுத்த வேலை நேர்முகத் தேர்வு.... பல கேள்விகளிடையே கடைசிக் கேள்வி..
என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்? நான் எள்ளளவும் எதிர் பாராக் கேள்வி॥ தயார் படுத்தாத கேள்வி...
அதனால் தருமி பாணியில் தருவதைத் தாருங்கள்॥ என்றேன்।

அவருமோ 50 ரூபா போதுமா? என்றார். நானுமோ வந்தால் வருகுது போனால் போகுதென
எதிர்காலத்தில் சம்பள உயர்வு வேலைக்கும், வாழ்க்கைத் தேவைக்கும் தகுந்த வகையில்
இருக்குமானால் தயார் என்றேன். அவர் சிரித்தார்...
நான் சாதித்துவிட்டேன் இல்லையா???

3) 83 இனக்கலவரம்... நான் வேலை செய்த இடத்தில் யாழ் தமிழரைத் தேடி அடித்தார்கள்।
அப்போ நான் தாடி வைத்திருந்தேன்। நான் புலியென சந்தேகம் அவர்களுக்கு
இருந்தது।(உண்மைப் புலிகளுக்கு அவமானம்) எல்லோரும் நீ...அங்கே போ॥இங்கே போ
என்ற போது நான் பக்கத்து வீட்டில் ஒழிப்பதே!! சரி என முடிவு செய்து, தப்பினேன்.
பலர் குறிப்பிட்ட வீட்டில் தேடியுள்ளார்கள்..என்பதை பின்பு அறிந்தேன்.

4) கலவரம், வேலையையும் கொண்டு போய் விட்டது. மீண்டும் அதே இடம் சென்று வேலை
செய்யும் உத்தேசமில்லை. எதிர் காலம் கண்முன்னே இருண்டு போனது.அடுத்த கட்டம் என்ன? நடுத்தரக் குடும்பத்துக்கேயுரிய பணத் தட்டுப்பாடு. பல உறவினர்கள் வெளிநாடுகளில்
இருந்தும் எவரும் உதவவரவில்லை.விலாசத்தையே தரவில்லை. ( காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி). ஒரு சில நண்பர்கள் உதவி வெளிநாடு வந்தேன்.
இதை என் உறவினர்கள் பெரிய சாதனையாகத்தான் கருதுகிறார்கள்.

5) வெளிநாடு வந்த இரண்டு வருடத்தில் அண்ணன், அத்தான் என குடும்பத்தைத் தாங்கிய தூண்களையும் , என்னைப் பெற்றவளையும் இழந்து ,அவர்கள் கட்டையில் கூட விழிக்க போக விசா அற்ற நிலையில், இந்த வெளிநாட்டில் இருக்கிறேன்.என்பது தவிர எதுவுமே இல்லாநிலையில் அக்காகுடும்பம்,அண்ணன் குடும்பம், இளைய சகோதரி திருமணம், இளைய சகோதரர் எதிர்காலம் எனபவற்றை, சீர்செய்து அக்கா ,அண்ணன் பிள்ளைகளுக்கும்
வாழ்க்கைக்கு வழிகாட்டி,துணைதேடி....என் பதிவு முகப்புப் படத்தில் இருப்போர், பாட்டா எனக் கூப்பிட ,கவலையையும்,கண்ணீரையும் துடைத்து விட்டு... பல ஈழத்து அன்பர்கள்
போல் கருமமே கண்ணாகியது....பலர் இதைச் சாதனையாகத் தான் எனக்குப் பின்னால் பேசுகிறார்கள்.

6) இதுவரையில் மது, புகை பழக்கம் மருந்துக்குக் கூட இல்லை. அதைத் பல தவிர்க்க முடியாத இக்கட்டான சூழலிலும் ,தவிர்த்துக் கடைப்பிடிப்பது.இதையே என் குடும்பத்து இளையவர்களுக்கும் போதித்து, இது வரை அவர்கள் அதற்கு ஆசைப்படாமல் வளர்த்தது.

7)மற்றவர்கள் பாராட்டும்படி, சுவையாகச் சமைப்பது, சில பிரஞ்சு உணவு வகைகள்
உட்பட.( சுவையாக உண்ணும் படி சமைப்பதைக் குறிப்பிடுகிறேன்)

8) கணணி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், ஐயா,தம்பி,ராசா எனக் கெஞ்சிக் கூத்தாடி
இந்தத் தளத்தில் எழுதி, நாலு பேர் யோகன் உங்கள் கருத்து நன்று எனப் பின்னூட்டமிடுகிறார்கள். அவர்கள் முகம் தெரியாது. ஆனால் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஊக்கப்படுத்துகிறார்கள். ஒரு கணணித் தற்குறியின் இந்தத் தளம் சாதனையில்லையா?
என் உறவினர்கள் அதிசயப்படுகிறார்கள்.

இதை நீங்கள் சாதனையாகக் கருதலாம், பூ... எனலாம்।

ஆனால் இது இந்த ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.

******
இது என் பலகணியில் உள்ள பூக்களின் படம்






Saturday, June 23, 2007

காலத்தால் புகழழியாத் தமிழ்க் கவியரசர்



எங்கள் கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினமின்று!

சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து தமிழ்பேசும் கிராமமெங்கும்
மங்காப் புகழ் பெற்ற எங்கள் கவிஞர்।

24-06-1927 , முத்தையா எனும் இயற்பெயருடன் பிறந்து
வெறும் 8 வகுப்பே படித்து, உலக அறிஞர்கள் போற்ற
வாழ்ந்தவர்.

அவரை அறியாத தமிழர், அவருக்கு முன் பிறந்தோரே!!
அந்தக் கவிமாமணியின் சிந்தையில் உதித்த தேன் இசைப்
பாடல்கள் சிலவற்றை அவர் நினைவாக உங்களுடன்
பகிர்வதில் மகிழ்கிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென இவற்றை
Youtube ல் பதிவிறக்க வசதி செய்த தழிழ் ஆர்வலருக்கு
இதய பூர்வமான நன்றி!

1- அச்சம் என்பது மடமையடா!!


2-கல்வியா? செல்வமா? வீரமா?



3-மனைவியமைவதெல்லாம் இறைவன் ....



4-ஆறோடும் மண்ணிலேங்கும்......



5- போனால் போகட்டும் போடா!!!



6- கடவுள் ஏன்? கல்லானார்....


7- படித்தறியா அறிவுபெற்றோர்....



8-ஒன்று எங்கள் ஜாதியே....


9-பேசுவது கிளியா?



10- ஒரு நாள் போதுமா....

Friday, June 22, 2007

மிருகாபிமானம்…இதுதானோ ?

னிதன் மனிதனிலோ ,மற்றைய உயிர்களிலோ காட்டும்
அன்பை மனிதாபிமானம் என்கிறோம்.

அந்த மனிதாபிமானம் உலகில் குறைந்து வருகிறதெனும் கூச்சலுக்குக் குறைவில்லை.

ஆனால் எதிர் மாறாக மிருகங்களுள் அபிமானமும், அன்பும்
ஓங்குதோ என ஐயம் ஏற்படவைக்கின்றன தொடர்ந்து வரும்
காட்சிகள்.

1- ஆகா...இந்த வாத்துக்குஞ்சு..எப்படி மீன்களுக்கு ஊட்டுதெனப் பாருங்கள்.




2- பூனை அணிலுக்கு எதிரி...இது தான் நாம் அறிந்தது.
இந்தத் தாய்ப் பூனையைப் பார்ப்போமா???




3- இந்த சிறுத்தை இக்குரங்குக் குட்டியின் தாயைக் கொன்ற
பின் செய்வதைப் பாருங்கள்.



4-நான், நீங்கள் கூட பூனை,காகத்தைக் கலைப்பதையே கண்டிருப்பீர்கள்.
இதைப் பாருங்கள்




ஜெகோவாவின் சாட்சிகள், பிரசாரத்துக்குத் தரும் புத்தகங்களில்
மானும் புலியும் அருகருகே நின்று நீரருந்தும் படங்கள் இருக்கும்.

இயற்கை நியதிக்கு விலக்காக இருக்கே!!! என ஆச்சரியப்படுவேன்.
ஆனால் நடந்துதான் விடுமோ???
இக் கலியுகத்தில்.

Tuesday, June 19, 2007

கருத்துக் கணிப்பும் ….பிரன்சுப் பொதுத் தேர்தலும்...



பிரான்சின் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் , அதிபர் தேர்தல் வெற்றிச் சூட்டுடன் முதற்சுற்று யூன் 10 லும், இரண்டாம் சுற்று
சென்ற 17 யூனிலும் நடைபெற்று , அரசியல் கருத்துக் கணிப்புக்க ளையும், ஆரூடங்களையும் பொய்யாக்கி நிறைவுக்கு வந்துள்ளது.

அதிபர் தேர்தலில் நிக்கோலா சார்கோசி (Nicolas SARKOZY) பெற்ற பெருவெற்றியை
வைத்தும் முதற் சுற்றையும் வைத்து சொன்ன கணிப்புகளும் ஆரூடங்களும் தவிடுபொடியாகின.

அதிபரின் கட்சியினர் தங்களுக்கு வரப்போகும் வெற்றி , சுனாமியை ஒத்தது என மிகக் கர்வமாகத் தான் இருந்தார்கள்.
அதற்கேதுவாக முதற்சுற்றில் 450 இடங்களில் முதன்மையாகவும்
வந்தார்கள். ஆனாலும் பிரான்ஸ் வாக்காளர்கள் மிருக பலம் கொடுக்காமல், நல்லதொரு எதிர்க்கட்சியும் இருக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்து, ஆரூடங்களையும் பொய்பித்து விட்டார்கள்.





அத்துடன் அதிபருக்கு ஒரு எச்சரிக்கை மணியையும் , அவர் கட்சியில் இரண்டாவது முக்கியமானவர் எனக் கருதப்படுபவரும்,முன்னாள் பிரதமர்,இன்னாள் அமைச்சர், போர்தோ நகரபிதா (சுற்றுச்சூழல்,அபிவிருத்தி,கட்டுமான ம்) அலன் யூப்பே (Alain JUPEE) யை தோற்கடித்துள்ளார்கள். 18-06-2007 அன்று அவர் தன் இராஜினாமாவை , தேர்தல் நேரத்தில் பிரதமர் கூறியவண்ணம், தோல்வியடைந்தால் இராஜினாமா செய்ய வேண்டுமென்பதற் கிணங்க, செய்துள்ளார்.

ஊழல் குற்றத்திற்காக தண்டனைபெற்று மறியலில் இருந்து, விடுதலையானவருக்கு, அதிபர், மந்திரி பதவி கொடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க முற்பட்டார். ஆனால் மக்கள் அமைதியாக வீட்டுக்கே அனுப்பிவிட்டார்கள். இவரெல்லாம் வெல்லுவார் எனவே பத்திரிகைகள் கூறின.


அதிபர் தேர்தலை அளவு கோலாகக் கொண்டதால், அதிபரின் வலது சாரிக் கூட்டு, மிக அதிக இடங்களைப் பிடிக்கும், எனக் கணக்குப் போட, நேரேதிராக எதிர் கட்சியான சோசலிசக் கட்சியும் அதன் கூட்டுக் கட்சிகளுமான இடது சாரிகள், எவருமே எதிர் பாராவண்ணம்...சென்ற 2002 ஆண்டுத் தேர்தலிலும் ,அதிக இடங்களைப் பெற்று, அதிபர் தேர்தலின் பின் துவண்டு போயிருந்த அவர்கள், மீளுயிர் பெற்றுள்ளார்கள். அவர்களே எதிர் பாராவெற்றி. ஆனால் அதிபர் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த
17 மில்லியன் வாக்கு சிதறாமல் கிடைத்துள்ளது.

இப்பொதுத் தேர்தலில் வரலாற்றில் இல்லாவண்ணம் முதல், இரண்டாம் சுற்றுக்களுக்கு 40 % வாக்களிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை அதிபர் தேர்தலுக்கு 85% வாக்களித்தார்கள். இதையும் மறக்கக் கூடாது.

நிக்கோலா சார்க்கோசி போன்ற சற்றுக் கடும்போக்கான அதிபர் ஒருவர் வேண்டுமென விரும்பிய வாக்காளர்கள், மிருகபலம் மிக்க பாராளுமன்றம் தேவையில்லையென நினைத்தது. வரவேற்கத் தக்கது.



ஏற்கனவே இருந்த இடங்களில் 60 இடத்தை ஆளும் அதிபர் கட்சி இழந்ததற்கு, அவர்கள் கொண்டுவர இருக்கும் விற்பனை வரி உயர்வே என இவர்கள் கட்சிச் சகாவும் முன்னாள் பிரதமருமான யோன் பியர் ரவரன் (Jean-Pierre RAFFARIN) கூறிவிட்டார். அதாவது இவர்கள் புதிய திட்டதில் ஒன்று சரிப்படாது. என்பதனை தேர்தல் சூட்டுடனே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள்.

அதிபர் கட்சி எதிர்பார்த்த பெரும்பான்மை இல்லாவிடிலும், அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. தாங்கள் கூறியவற்றை உடனே நடைமுறைப் படுத்த உள்ளோம். என சற்று தொங்கிய முகத்துடன் ஆட்சியமைக்க உள்ளார்கள்.

ஆளும் அதிபர் கட்சியின் பல முக்கிய புள்ளிகள் தோல்வியத் தழுவியுள்ளார்கள். அதிபர் தேர்தல் முடிந்து 1 ½ மாதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு. கருத்துக்கணிப்பால் கணக்கிட முடியாச் சரிவு.

அதிபரின் கட்சி ஆதரவாளர்களில் பலர் நல்ல பலமான எதிர்கட்சி நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது என இதை வரவேற்கிறார்கள்.

ஒரு வெளிநாட்டுவாசியாகிய நான்,இவர்கள் வெளிப்படையான இனவாதத்தை விரும்புவதில்லை. எனினும் பிரான்ஸ் வாக்காளர்கள் தீர்ப்பு, கணிப்புக்களைத் தாண்டி மிக மகிழ்வைத் தந்தது.

இத்தேர்தலில் மிகக் குறைந்த 28 வயதில் ஒரு உறுப்பினர் தேர்வாகியுள்ளார், மிகக் கூடிய வயது 78. அத்துடன் 108 பெண்களும் தெரிவாகியுள்ளார்கள்.

அத்துடன் 50 வருடங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து உறுப்பினராக இருந்த ஒரு குடும்பத்தினரையும், ஓரம் கட்டியுள்ளார்கள். இவர்கள் யாவரும் செய்தித்துறையின் கண்ணில் படாதவர்கள்.

இவ்வண்ணம் கருத்துக்கணிப்பின் கண்ணைக் கட்டி, பிரான்ஸ் தேர்தல், எந்த உயிரையும் காவு கொள்ளாமல் அமைதியாக நடந்ததே தெரியாமல், நிறைவுபெற்றுள்ளது.

நம் நாட்டவர்கள் படிக்க வேண்டியது.

ஆளும் அதிபர் வலது சாரிகள் (UMP) ,345 இடத்தையும், எதிர்க் கட்சியான இடது சாரிகள், 232 இடங்களையும் பெற்றுள்ளார்கள். இவர்கள் மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள் என நம்புவோம்.


படங்கள்:


1- பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோசி

2- பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெலன் (Francois FILLON)

3- முன்னாள் பிரதமர், தோல்வியுற்ற மந்திரி அலன் யூப்பே

4- சோசலிச கட்சி தலைவர் பிரான்சுவா ஒல்லாண்ட்( Francois HOLLANDE), இடது சாரிகள் சார்பில் அதிபர் தேர்தலின் நின்று தோற்ற செகலன் ரோயல் (Segolene ROYAL)

5- முன்னாள் பிரதமர், அதிபர் கட்சி முக்கிய புள்ளி யோன் பியர் ரவரன் ( jean pierre raffarin )