Tuesday, August 08, 2006

சுஜாதா-நான்-கடகம்

23.07.06 விகடனில், கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா அவர்கள், தனக்குப்பிடித்த கவிதைப்பகுதியில் சோ. பத்மநாதன் அவர்களின் கவிதையைக்குறிப்பிட்டு, அதிலே கடகம் என்பதற்கு சும்மாடு என விளக்கமிட்டிருந்தார்கள். வாசிக்கும் போது; தவறைக் கண்டால்;அது பற்றிச் சரியாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதித் தெரிவிக்கும் பழக்கம் உண்டு.அன்றைய தபாற் சேவையில் நமது கடிதம்;கிடைப்பதற்குள் மாதங்கள் பல உருண்டுவிடுவதனால்;அவை மறக்கப் பட்டுவிடும்.இன்றோ மின்னஞ்சல் சுடச் சுடப் படித்த சூட்டுடனே எழுத முடிகிறது.அன்று பல எழுதியும் எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.கலைமகளுக்குக் கூட எழுதினேன். வெளியிடவுமில்லை; வெளி விடவுமில்லை.கி வா ஜ - மிகப் பெரிய இடம். (அவ் விடயம் ஒரு நாள் பகிர்வேன்) சுஜாதா அவர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தியதும், சிறியேனின் மடல் பார்த்து; ஏற்றுக் கொண்டு; பிரசுரித்துள்ளார். பிரசுரத்திதற்கு நன்றி!என்னைப் போல் கற்றுக் குட்டிகளுக்கு இவ் அங்கீகாரம் மிகமகிழ்வாக இருக்கிறது.

மரத்தால் ;உலோகத்தால் ;ஓலையால்; நார்களால்;பிரம்பால்,காகிதத்தால்;கண்ணாடியால்; செயர்க்கை இழைகளால் செய்யப்படும் கொள்கலங்களைப் பெட்டி எனும் புழக்கம் உண்டு. அந்த வகையில் இதை கடகப்பெட்டி என்பர்.சாதாரண பனையோலைப் பெட்டிக்கும்; கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் ; கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து; வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண் ;கல் அள்ளுதல்.சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி;சால்வை; முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது.இதை துணிவகையிலேயே செய்வர்.தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும்.பெண்கள் தண்ணீர்க் குடம் தலையில் சுமக்க உடன் தங்கள் முந்தானை நுனியைச் சுற்றிச் செய்வார்கள்.நீத்துப் பெட்டியென்பது; பனை யோலையில் கூம்பு வடிவில் இழைக்கப் படும் ஒரு வகைக் கருவி; இதன் பயன்பாடு பிட்டவித்தல்;மா அவித்தல்; பால் வடித்தல்.குட்டான் என்பது பனையோலையில் இழைக்கப்படும் ஒருவகைப் பொதியாக்கம்; இதன் பயன்பாடு பனங்கட்டியை(பனஞ்சர்க்கரை) பொதியாக்குவதே! இதில் பல அளவு உண்டு.ஒரு அங்குல உயரம் அரை அங்குல வாய் விட்டம் மிகச் சிறியது.(எப்பிடித்தான் அதை இழைக்கிறார்களோ!)!இப்பொழுதும் அது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

24 comments:

குமரன் (Kumaran) said...

நிறைய புதிய விவரங்கள் தெரிந்து கொண்டேன் ஐயா.

உங்கள் நண்பன்(சரா) said...

புதிதாக வலைப்பதிவு தொடங்கி இருக்கும் நண்பர் ஜோஹன் பாரீஸ் (பெயர் சரியா சொல்லீட்டேனா இல்லையா...?)
அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்,

உங்களின் இந்த வலைப்பதிவு வெளிவருவதற்க்கு உதவியாக இருந்தவரும் , இதைப் பற்றிய செய்தியை தெரிவித்தவருமான
நண்பர் மலைநாடன்அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்,

ஆக்கப்பூர்வமான,பிறருக்குப் பயன்படக்கூடிய பல நல்ல ஆக்கங்களை தருமாரும், அதே வேளையில் இங்கு நடக்கும் ஜாதி, மதம் பற்றிய வீண் சண்டைகளில் தலையிட வேண்டாம் என்றும்(இதுவரை தாங்கள் தலையிட்டதில்லை, இனியும் அது தொடரவேண்டும்.)உங்கள் கருத்துக்களின் மேல் மரியாதை வைத்திருக்கும் ஒரு சக நண்பனாக வேண்டுகோள் விடுக்கின்றேன்,

தொடர்ந்து எழுதுங்கள்,

வாழ்த்தி வரவேற்கின்றோம்,


அன்புடன்...
சரவணன்.

G Gowtham said...

ஆச்சர்யமாக இருக்கிறது. இதுபோல அவ்வப்போது நல்ல சொற்களை அறிமுகப்படுத்தலாமே...

துபாய் ராஜா said...

அன்பு யோஹன்,வாழ்த்துக்கள்.நமது நண்பர் 'உங்கள் நண்பன்' சரவணனின்
வார்த்தைகளை நானும் வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

Anonymous said...

WELCOME

சின்னக்குட்டி said...

விகடனினில் வந்த அறிமுகத்துடன் பதிவு தொடங்கியாச்சு ............மேலும் பல புகழ் பரவ வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

மீண்டும் வாழ்த்துக்கள் யோகன்.

Anonymous said...

வாருங்கள் வரவேற்கிறேன்.

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் யோஹன்.

Pot"tea" kadai said...

வாழ்த்துக்கள் யோகன்.

VSK said...

நம்ம ஊர் வழக்கப்படி "கடகம்" யோகன் என்று பட்டம் சூட்டி உங்களை வரவேற்கிறேன்!

வருக! நல்ல கருத்துகள் தருக!

G.Ragavan said...

யோகன் ஐயா. அருமையான விளக்கம். உங்கள் எழுத்து எனக்குப் பல பழைய பெட்டிகளை நினைவூட்டி விட்டது.

என்னுடைய தாத்தனார் நெம்மேனியிலிருந்து வாங்கி வரும் சீரணிப் பெட்டி. கருப்பட்டிச் சீரணியை பனையோலைப் பெட்டியில் கொண்டு வருவார்கள். சதுரமாகச் செய்த இரண்டு பெட்டிகள். ஒன்றில் சீரணிகளை இட்டு இன்னொன்றால் மூடி சணலால் கட்டித் தருவார்கள். பெட்டியைப் பிரித்தால் சீரணி வாடையும் சணல் வாடையும் கலந்து...ஆகா!

இப்போதும் திருச்செந்தூரில் சில்லுக்கருப்பட்டி பனையோலைப் பெட்டியில் கிடைக்கிறது. இந்தப் பெட்டிக்கு வாய் கிடையாது. முழுதாகப் பூட்டப்பட்ட பெட்டி. எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஞானவெட்டியான் said...

அன்பு யோகன்,
குருட்டாம்போக்காகத் தமிழ்மணத்துக்குள் நுழைந்ததும் தங்களின் இடுகை கண்டேன். மகிழ்ந்தேன்.

கடகப் பெட்டி, கொட்டான் > குட்டான் ஆகிய வட்டார வழக்குகளில் ஒளிந்துள்ள நல்ல தமிழ்ச் சொற்களை வெளிக்கொணரும் நற்செயல் பாராட்டுக்குறியது.
வாழ்த்துகள். தொடருங்கள்.

ஞானவெட்டியான் said...

என் பின்னூட்டம் கண்டு பாரீசிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தமைக்கு நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

இதன் நீட்சியாக ஒரு தனிப்பதிவு.

மணியன் said...

உங்கள் பின்னூட்டங்களால் கவரப் பட்டிருக்கிறேன். இனி உங்கள் பதிவுகள் மூலம் அதிக ஈழ பழக்கங்களை அறிய ஆவலாயிருக்கிறேன். தமிழ்மணத்திற்கு நல்வரவாகுக !

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள். வலைபதிவைத்தொடங்கி குடத்தில் இட்ட விளக்கு போல தமிழுக்கு சேவை செய்யும் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்பு குமரா!
நன்றி! தமிழ்மணத்தில் என்னை முதல் முதல் உங்கள் "கூடல்" மூலம் அறிமுகப்படுத்தி; பின்னூட்டமிடக்கூடத் தெரியாதிருந்த எனக்கு அதைச் சொல்லித்தந்து;இது வரை காலமும் பின்னூட்டத்தால் பல நல்ல நண்பர்களைப் பெற வைத்து அதன் மூலம் கிடைத்த "மலை நாடாரின் தளராத முயர்ச்சியே! இந்த "என் பார்வையில்";"இதில் விகடன் பங்கு ஓர் விபத்து" உங்கள் இருவருக்கும் என் மனப் பூர்வமான நன்றி!
உங்கள் ஊக்கத்தை ஆக்கமாக்க இயன்றவரை முயல்வேன். இன்னும் சில தொழில் நுட்பவிடயங்கள் பிடிபடவில்லை. வெல்வோம் என நம்புகிறேன். நாட்டின் போரால் மனதை ஒரு வழிப்படுத்தியெழுத முடியவில்லை.முயல்கிறேன். நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"உங்கள் நண்பன்" சரவணனுக்கு!
தங்கள் ஊக்கப் பின்னூட்டத்திற்கு நன்றி! தாங்களும் "துபாய் ராஜா" வும் குறிப்பிடுவது போல் சச்சரவில் ஈடுபடாது ;ஆரோக்கியமான விவாதங்களில் பங்கேற்பதுடன்; பயனுள்ள தகவல்களைப் பரிமாறவேண்டுமென்பதே! என் ஆசையும் கூட!; தனி ,தொழில் வாழ்க்கைக்கு நேரமொதுக்கி மிகும் சொற்ப நேரத்தில் அற்தமற்ற சச்சரவில் ஈடுபட எனக்கும் உங்களைப் போல் விருப்பமில்லை. அதேவேளை 5+3=7 ; என்பதை ஆமாம் சாமியேன ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இது தவறு என உணர்த்தும் உரிமையையும்;கடமையையும்; தனிமனித சுதந்திரம் எனும் "ஒளி வட்டத்தால்" இழக்க நான் தயாரில்லை.இங்கே வாசிப்பதும்; எழுதுவதும் தெரியாததைத் தெரியயும்; தெரிந்ததை பகிரவுமே! உங்கள் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கௌதம்!
தாங்கள் பெருநகரில் பிறந்து;பெருநகரிலே வாழ்கிறீர்கள் போல் உள்ளது. நவீனமயமெனும்; பழையன கழிதல்; புதியன புகுதலில் ;எத்தனையோ அடிபட்டுப்போனது; பல தமிழ்ச் சொற்களும்; தமிழர் பாவனைப் பொருட்களும் கூட.தமிழ் இளைஞர் பலருக்கு அறிமுகமில்லாத சொற்கள் பல உண்டு.இப்போ தமிழ்மணத்தில் பலர் அதை வெளிக் கொணர்கிறார்கள்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
நெம்பேனி சீரணிக் கருப்பட்டி விசேடமா? ஈழத்தில் பருத்தித்துறை ,பிரபலம்: குறிப்பாக தொண்டமானாறு செல்வச் சன்னிதி முருகன் கோவில் செல்லும் யாவரும்; பருத்துறைப் பனங்கட்டிக் குட்டான் அளவு வாரியாக இல்லாமல் வரமாட்டார்கள்; மிகச் சிறிய குட்டான்கள் அழகாக இருக்கும் ;ஒரு வாய் போட்டு விழுங்குமளவு. குட்டான் ஓலைமணமும் கருப்பட்டி வாசமும் தனிக்கலவையாக இருக்கும். நான் ஓலையையும் சூப்பியே துப்பிவேன். அது தனி ருசி! என்ன?? முருகனுக்குப் பனங்கட்டி பிடிக்குமோ???ஒங்கபக்கமும்,எங்க பக்கமும் முருகன் கோவிலில் விசேசமா விக்கிறாங்க.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா! எஸ் கே!
இந்தக் "கடகம்" பட்டத்தை இப்போ தான் பார்த்தேன். ஐயோ வேண்டாமுங்க! எங்க ஈழத்தில அதிகம் கதைக்கும் பெண்களைக் "கடகம் போல வாய்..;;எனச் சொல்லுவாங்க!. இது எனக்கு வேணுமா???
யோகன் பாரிஸ்

Thangamani said...

நல்ல பயனுள்ள புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள உதவும் பதிவு. நன்றி. இதுபோன்ற நல்லபதிவுகளை மேலும் இடுவீர்க்ள் என்று நம்புகிறேன்.
தங்கமணி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கமணி!
வருகைக்கு நன்றி! வரவேற்பிருந்தால் தெரிந்ததைப் பகிர்வதற்குத் தடையொன்றுமில்லை. பனையின் பயன் பற்றி ஓர் தொடரிடுகிறேன்.
யோகன் பாரிஸ்