Abbé Pierre அபே பியர்! -ஏழைபங்காளன் .
பிரான்ஸ் வாழும் தமிழர்களில் தொலைக்காட்சி பத்திரிகை பார்ப்போர் கட்டாயம் அறிந்திருக்கும் செல்லப்பெயர்.
சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தன் வாழ்வை வசதி குறைந்தவர்களுக்காகவும்;வாழ்வில் அல்லலுறுபவர்களுக்காகவும் செலவு செய்த புண்ணியாத்மா!
05- 08 - 1912 ல் லியோன்(Lyon) எனும் நகரில் மிக வசதிபடைத்த குடும்பத்தில் Henri-Antoine Goués எனும் இயற்பெயருடன் பிறந்து; இளம் பிராயத்தில் அல்ஜீரியப் போர், உலகப் போரில் பங்கேற்று இன்னல்களைக் கண்டு; 1938ல் மதகுருவானவர்.அப்பொழுது; தனக்குக் பரம்பரையால் கிடைத்த சொத்துப் பங்கை ஏழைகளுக்கும்;நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் பரோபரவாழ்வை EMMAUS எனும் இயக்கமாகஆரம்பித்தார்.
1945 - 1951 Meurthe en Moselle தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகி அரசியலிலும் புகுந்து; சேவை செய்தார்.1954 தையில் பிரான்சில் மிகக் கடும் குளிர் தாக்கி வீடற்ற ஒரு தாயும் சேயும் ;தெருவில் - 20 °c ல் உறைந்து இறந்த கொடுமைகண்டு கொதித்து முழுப் பிரஞ்சு மக்களுக்கும் வானொலி மூலம் வேண்டுகோள் விட்டு; பல கோடி பிராங்குகள் சேர்த்து உடன் நடவடிக்கை எடுத்து வாழ்விடமமைத்து; குறிப்பாக குளிர்காலத்தில் இல்லிடமற்றவர்களுக்கு உணவு உறையுள் கொடுத்துக் காத்தார்.
இதைத் தன் முழு நேரப் பணியாக்கினார்.அப்பபோ அரசாங்கக் கதவுகளைத் தட்டிச் செயல்படச் செய்தார். இதனால் பிரான்சில் சகல மக்களும் அரசும் கூட இவர் மேல் மரியாதை வைத்தது. இவர் கேட்ட உதவிகளைச் செல்வந்தர்கள் செய்யத்தயங்கவில்லை. இவர் நேர்மை ;தனக்கென வாழா ,வேண்டா இயல்பு இவரை பிரான்சின் சிறந்த மனிதராகப் பலவருடங்கள் தெரிவாக வைத்தது.
அரசு கொடுத்த மரியாதைப் பதக்கத்தையும் ; மறுத்து ;அரசு பெரிய வீடமைப்புத் திட்டத்துக்கு உதவியபின்னே பெற்றுக் கொண்டவர். அவர் அதைப் பெற்றது அரசு தனக்குக் கிடைத்த மரியாதை எனக் கருதவைத்தவர்.
80 களில் மித்திரன்(Mittrand) ஜனாதிபதியாக இருந்தபோது;பல லட்சக் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வதிவிட உரிமை கொடுக்கக் காரணமான உந்துதல் சக்கியாகவும் இருந்தது இவர் இயக்கமுமே!!90 களில் வீடற்ற,வாழப் போதிய பணவதியற்ற வெளிநாட்டவர்களுக்கு ஆதார சுருதியாக இருந்து அர்பணிப்புடன் செயற்பட்டு;பல நாட்டவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்.
அத்துடன் போதைக்கு அடிமையாகி வீட்டாரால் ஒதுக்கப்பட்ட பலரை; மனிதாபிமானத்துடன் நோக்கி விடுதி அமைத்து அவர்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து; மறு வாழ்வழித்தை சம்பத்தப்பட்ட பலர் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்கள்.
இவர் சேவை பல ஈழத்தமிழர்;பாண்டிச்சேரித் தமிழர்கள் பயனடைந்துள்ளனர்.பெரிதாக வெளியுலகுக்குத் தெரியாவிடிலும்; பிரஞ்சு பேசும் நாடுகளில் பெரு மதிப்புக்குரிய மாமனிதர்.
தனக்கென வாழாச் செம்மல். சேவை என்பது என்ன? எனக் கற்பித்தவர் ;தன் 94 வயதில் 22-01- 2007.காலை இறையடி சேர்ந்து விட்டார்.
"இறத்தல் என்பது ஒளியுடன் கலத்தல்" எனக் கூறும் ;இவர் ஒளியில் கலந்து விட்டார்.
இன்னுமொருவர் இப்படிப் பிறப்பதரிது.
கடந்த 20 வருடங்களாக அவர் நேயத்தை இங்கே பார்த்தவனெனும் வகையில் அவர் பெருமையையும்; வாழ்ந்த சேவை வாழ்வையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
அன்னார் ஆத்மா சாந்தியடையும் இதில் ஐயம் இல்லை.