Thursday, March 29, 2007

அவனுக்கு வியரடி!!( Weird )
கொஞ்ச நாளாக சக பதிவர்கள் ஒரே என் வியர் அறிய பெருந்தொல்லை!!

குமரன் தொடங்கி; ஷ்ரேயா வால்..இப்போ செல்லியும் கூப்பிட்டுள்ளா??
இந்தப் பதிவுகளைப் பார்த்த போது இந்த WEIRD ; வியர் ; விசர் எல்லாம் ஒரு தொடர்பான எப்படி?ஆனது என்றும் யோசித்தேன்.


நம் ஊரில் வயது போனோர் விசர் என கூறமாட்டார்கள். " அவனுக்கு வியரடி"...இந்த "ச " வை "ய"வாக்கிப் போடுவார்கள்.


சமீபத்தில் என் அக்கா என்னைப் பற்றிக் கூறியது.


அவனுக்கு "வியர்! (அவவுக்கு என்னைப் புரியும் அடுத்துப் பிறந்தவன்)


அதனால் எனக்கு என்ன ? வியர் என்று யோசித்தேன்.


*இளமையில் வீட்டில் என்னைப்போல் அடி வாங்கி வளர்ந்தவர்கள் இருப்பது அருமை!! அந்த அளவுக்குக் குழப்படி (வீட்டில் மாத்திரம்)இதனால் "சுணை" இல்லாதது ;எனப் பெயரெடுத்தவன்!என்ன? அடி அடித்தாலும் அடுத்த நேரச்சாப்பாட்டுக்கு முதலாளாக குசினுக்குள் நிற்பது!!அதையும் வெட்கமில்லாதவன் ;என வீட்டில் விமர்சிப்பார்கள்; இவற்றைச் சட்டை செய்யாமல்இவர்கள் என்ன ? முதுகில் விழுகிற அடிக்கும்; வயிற்றில் போடுற சோத்துக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் என யோசித்துக் கொண்டே ;சாப்பிட்டு விட்டு அடுத்த நேரச் சாப்பாட்டுக்கிடையில்அடுத்த அட்டூளியம் செய்து அடிவாங்குவது..


*வீட்டை ஒரு மிருகக் காட்சிச் சாலை போல் வைத்திருக்க முயன்றது. ஆடு;மாட்டு; கோழியுடன்;நாய் ;பூனை; கிளி மைனா;முயல்; புறா,கினிக் கோழி.


*இளமை முதல் கோவில்; மேளக் கச்சேரி; பின் சங்கீதக் கச்சேரி;கதாபிரசங்கம் கேட்க அலைந்தது.


*வாசித்தல்; வானொலி....பிரியமானது!.


*வாழ்க்கையில் எந்தத் திட்டமும் இல்லால் அதன் வழிக்கே!!இன்றுவரை விட்டுள்ளது.


இந்த வெளிநாட்டு வாழ்க்கை மிகப் பெரிய மாறுதலை என்னில் ஏற்படுத்தா விடிலும்; புதிய சில விசர்ஒட்டிக் கொண்டது.


- எந்த கொடுப்பனவும் (தொலைபேசி;மின்சாரம்;வாடகை போன்றவை)கடிதம் கிடைத்த உடன் காசோலை தயார் பண்ணி வைத்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போவது."காவயித்துக் கஞ்சியானாலும் ,கடனில்லாக் கஞ்சி என்பதில் விசராக உள்ளேன்.


-காட்டூன்;விபரணச் சித்திரம் பார்ப்பது


-ஒரு பொருளை வாங்குமுன் ; அது பற்றி பல தடவை யோசிப்பது


- OLD IS GOLD என்பதில் மாறாமல் இருப்பது!


- கைக்குழந்தைகளில் வீசும் மணம் பால் மொச்சையை ரசித்து நுகர்வது; வயது முதிர்ந்தவர்களுடன் நானே பேச்சுக் கொடுத்து ;அலட்டுவது..

(கட்டாயம் வைத்தியம் செய்ய வேண்டுமென்னிறீர்களா?)


- சந்தையை சாமான் வாங்காவிடிலும் போய் ஒரு சுற்றுச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவது (சரியான விசர் தான் என யோசிக்கிறீர்களா)


-வருடா வருடம் புதுவருட வாழ்த்து அட்டை உறவினர்;நண்பர்களுக்கு 1979 ல் இருந்து தவறாமல் அனுப்புவது.(நான் சம்பாதிக்கத் தொடங்கியதிலிருந்து)


-காலையும் மாலையும் என் பல்கனி பூந்தோட்டத்தைப் தவறாமல் ஒருதடவையாவது பார்ப்பது!


-என்ன சாப்பாடு இருந்தாலும் காலைச்சாப்பாடாக பாற்கஞ்சி...மதியம் ;இரவு கத்தரிக்காய்..உப்பவியல்..குத்தரிசிச் சோற்றுடன் வெகு பிரியம்...


- ஆரம்பம் முதல் துக்ளக் படிப்பது (சோவுடன் பல விடயங்களில் ஒத்த கொள்கை இல்லாத போதும்)


- பத்திரிகைக்கு என் கருத்தையும் ;அவர் எந்தக் கொம்பனானாலும் எழுதுவது...


- சைவனாக இருந்த போதும் கடந்த 20 வருடங்கள் ;செவ்வாய் தோறும் "அந்தோனியாரையும்" தரிசிப்பது.


இதை விட பதிவுகளால் பழகி என் பல வியருகள் நீங்கள் அவதானித்திருக்கலாம்.


இவ்வளவும் போதுமா?

*** இப் படம் ...என் அக்கா வழிப் பேத்தி "பூமிகா"

Monday, March 26, 2007

கவியரசர் கவிதை கேட்போமா??
அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசர் கண்ணதாசன் - நகைச்சுவை மன்னன் நாகேஷ்
சம்பத்தப்பட்ட காட்சி.
இதில் கவிஞர் கவிதை கூறுகிறார்.

Friday, March 23, 2007

இன்னிசை வேந்தர்!மிழிசைக்கும் ; திரைஇசைக்கும் தன் இன்குரலால் புகழ் சேர்த்து;
உலக அரங்குகள் பலவற்றில் தமிழ் இசை ஒலிக்க வைத்து ;
தமிழிசை ஆர்வலர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்று;
தன் வாழ்நாள் எல்லாம் தமிழிசைக்கு வளம் சேர்த்து;
தமிழ்க் கடவுள் முருகன் மேல் மாறாப் பெரும் பக்தியுடன் வாழ்ந்து
மறைந்த இன்னிசை வேந்தர்; கம்பீர கானமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் ; இறை எய்திய தினம் இன்று!!

19 - 01 - 1933 ல்; ஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி எனும் தவப்பூமியில்; சிவசிதம்பரம் - அவயம்பாள் தம்பதியினருக்கு புத்திரராகப் பிறந்து;
சிறுவயது முதலே இசையார்வத்தால் ; நாடகங்களில் நடித்து; பின்
தமிழிசைக் கல்லூரியில் இசைகற்று 1949 ல் "இசை மணி" பட்டம்
பெற்று அதன் பின் திருப்பாம்புரம் சுவாமிநாதன் பிள்ளை எனும் பிரபல வித்துவானிடம்; குருகுல வாசத்தில் இசைகற்றுத் தேறி 1951 - 1952 பல போட்டிகளில் வென்று; சங்கீத வித்துவானாக; இசையரசராகப் பவனிவந்தார்.

இந்நிலையில் திரையுலகும் இவரை இருகரம் நீட்டி வரவேற்க; கல்கியின் "பொன்வயல்" திரைப்படத்தில்"சிரிப்புத்தான் வருகுதையா" என்ற பாடலுடன் மிக வெற்றியாக தன் இசையாட்சியை விரிவாக்கிப் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களையும் பாடி ;பாமரரும் இசை உணர வகை செய்தார்.

சரச மோகன; சங்கீர்தாமிர்த!
அமுதும் தேனும் எதற்கு!
ஆடியடங்கும் வாழ்க்கையடா!
மழை கொடுக்கும்!கொடையுமொரு
அறுபடை வீடுகொண்ட திருமுருகா!
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
!

இவர் பாடிய காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் சில!!

சாத்திரீய சங்கீதத்தை ஒத்த இசையா!! , கூப்பிடு சீர்காழியை என்னும் அளவுக்கு ; தனக்கென ஒரு பாணியை வகுத்துச் சாதித்தார்.இசை ஆர்வலர் உள்ளங்களை வென்றார். அத்துடன் பல திரைபடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இட்ட அகத்தியர், நக்கீரர் வேசங்கள் மறக்க முடியாதவை.

இவர் திறமை கண்டு பட்டங்களும் பதவிகளும் ;தேடிவந்தன . இதில் இந்திய அரசின் "பத்மஸ்ரீ " விருது அன்றைய ஜனாதிபதி திரு. ஜெல் சிங் அவர்களால் 1983ல் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார்.


பதிவிகளாக “தியாகராச உற்சவ சபாக்” காரியதரிசியாகவும்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவு முதல்வராகவும் கடமையாற்றினார்.

எந்த வித சிக்கலிலும் புகாத எல்லோர்க்கும் இனிய பண்பாளராக வாழ்க்கை பூராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

பல பக்தி இலக்கியங்களுக்கு இசைவடிவம் கொடுத்தார். குறிப்பாக கந்தசஸ்டி கவசம்; அபிராமி அந்தாதி ; கந்தரலங்காரம் அவற்றில் பிரபலமானது.

இவர் பக்திப் பாடல்கள் மெய்சிலிற்க வைப்பவை. கேட்போரை உருகவைக்கும்; சொல்லுணர்ந்து அவர் பாடும் பாங்கே அலாதியானது.

என் இளமைக் காலத்தில் ஊரில் கோவில் திருவிழாவெனில்; ஒலிபெருக்கி கட்டி காலை இளங்காற்றுடன் வரும்...விநாயகனே...வெவ்வினையை வேரறுக்க வல்லான்..!என்ற அவர் குரல் என் ஐம்புலனையும் சிலகணம் கட்டிப்போடும்.

அப்படி!! ஓர் உச்ச நிலைக்கு கொண்டு சென்று;பரவசத்திலாழ்த்தும் குரலால் அவர் கோடிக்கணக்கான இரசிகர்களைப் பெற்றார். இதனால் தமிழர் வாழும் நாடெல்லாம் பறந்து;பறந்து அவர் பாடி மகிழ்வித்தார்.

அந்த வகையில் ஈழத்திற்கு 70 க்களில் 2 தடவைகள் புங்குடுதீவு,சுட்டிபுரம் என வந்த போது; சுட்டிபுரத்தில் இவர் கச்சேரி கேட்கும் நல்லூழ் எனக்குக் கிட்டியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி அன்பர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியவர்.அதுபற்றி அவர் அன்று மேடையில் குறிப்பிட்டது.

"சாதாரணமாக தமிழ்நாட்டில் வானொலிக் கச்சேரி 2 மணி; கல்யாணக்கச்சேரி 2 1/2 மணி; தைப்பூசம்; பழனிமலை முருகன் சந்நிதியில் 3 மணி; ஆனால் இன்று உங்கள் அன்பின்; ஆர்வத்தின் முன் 7 மணி நேரம்; என் வாழ் நாளில் மறக்க முடியாத கச்சேரி”

அன்று எங்கள் ஈழத்தில் புகழ் பெற்ற சாகித்ய கர்த்தா "வீரமணி ஐயரின்"..."சுட்டிபுரம் வாழும் சிவசுந்தரியே;கண்ணகியே "எனும் பாடலுக்கு; மேடையிலே இசை உருப்போட்டுப் பாடிச் சிறப்பித்தவர்.

இவர் கச்சேரியை கதம்பமாகத் தருவார். அதுவும் தனது திரையிசைப்பாடல்கள்; பக்திப் பாடல்கள்; தனிப்பாடல்களேன போட்டு நிரப்பி ;;தமிழ்க் கச்சேரியாக அமைப்பார் . தமிழை அவர் உச்சரிக்கும் செழுமை ; கச்சேரியைத் தனித்துவமாக்கும்.

மும்மூர்த்திகளை மதித்து ஆரம்ப சாகித்தியங்களை முடித்துக் கொண்டு; பாசுரம்;தேவாரம்;பாரதி பாடல்; கோதை தமிழ்; திருப்புகழ் எனத் ;தமிழ் வெள்ளம் கரைபுரண்டோடும்; இவர் கச்சேரிகளில்...;

அன்று தமிழில் பாடுவதற்குப் பல பாடகர்கள் கூச்சப்படும் போது ,அதை ஒரு தவம் போல் மேடை தோறும் செய்தவர்!.
அதனால் பாமரர் முதல் படித்தவர் வரை பல கோடிப் பேரை உலகம் பூராகவும் இரசிகர்களாக வரிந்து கொண்டவர்.அன்றைய இவர் இசைவிழாக் கச்சேரிகள் இந்திய வானொலியில் இரவிரவாக ஒலிபரப்புகையில் ;ஈழத்தில் வீடுதோறும் விழித்திருந்து கேட்டு மகிழ்வார்கள்.

கடைசிக்காலங்களில் அவர் கச்சேரிகளில் பிரதான அம்சமாக ; தனி ஆவர்த்தனங்களுடன் கூடிய பகுதிகளுக்கு புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களை பாடி மகிழ்வித்தவர். இவர் நியூயோர்க் கச்சேரியில்"சரச மோகன " என்ற பிரபல பாடல்; பிரதான இடம் பெற்றதை நீங்கள் இசைத்தட்டிலாவது கேட்டிருக்கலாம்.

இவர் கச்சேரி மேடைகளே பக்கவாத்தியங்களால் களைகட்டும்; வயலின் , மிருதங்கம், கடம்; கஞ்சிரா;மோர்சிங்; தம்புரா..என அத்தனை பக்கவாத்தியங்களையும் அருமையாக சேர்த்துப் இசைக்கவைத்துப் பாடி மகிழ்விப்பார். அன்றைய நாட்களில் மோர்சிங்குடன் பாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய வித்துவான்களில் இவரும் ஒருவர்.

அவர் கச்சேரிகளில் "என் குருநாதர்" எனும் பாடல் இறுதியாக அமையும்; அப்பாடல் அவர் குரு பக்திக்குச் சான்று;

என்குருநாதர் வேன்குழல் வேந்தன்;
இசையமுதூட்டிய ஞான சீலன்
அன்னை தந்தை அதன் பிறகவரே!
அகண்ட உலகில் வாழ்வளித்தவரே!
என் கீத ஞானம் அவர் தந்த வாழ்வு!
என் உள்ளம் என்றும் அவருக்குத் தாழ்வு!
என் குருநாதன் குழல் சுவாமிநாதன்
திருப்பாம் புரத்தான்!
என் குருநாதன்!!

என முடிப்பார்.


இவ்விதம் தமிழை ஒதுக்கக் கங்கணங் கட்டும் காலங்களில்.
மேடையேற்றுவதில் நல்லதொரு முன்மாதிரியாக இருந்தவர்.


"உலகம் வாழ்க" என்னும் தன் உள்ளக் கிடக்கைக்கமைய; இந்திய அரசுக்கு
பல நிதியுதவிக் கச்சேரிகள் செய்து ; தன் சேவையைச் செய்தவர்.

இசைக்கென வாழ்ந்து ; உனைப் பாடும் பணி யொன்று போதும் என முருகனைத்
தினமும் பாடி மகிழ்ந்தவர் ; தன் 55 பராயத்தில்; இளம் வயதிலே எவரும் எதிர் பாராவண்ணம்
24-03 - 1988 ல் ;தன் குடும்பத்தவர்களையும் ;ரசிகர்களையும் ஆற்றாத் துயரில் ஆழ்த்தி"முருகா" என அவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே; மீளாத் துயில் கொண்டு;முருகன் திருவடியில் பாட இறை எய்தினார்.

தமிழும் இசையும் உள்ளவரை எங்கள் சீர்காழியார் புகழ் நிலைக்கும்!!
அன்னார் நினைவை; உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

Sunday, March 11, 2007

நானும் வானொலிகளும்..

பாடல் கேட்பது ; பலரது பொழுது போக்கு; அதுவும் அன்று அதை வானொலியில் கேட்பதென்பதே!
அலாதியானது.
இன்று விரும்பியதைக் கேட்கக்கூடிய பலவசதி; அத்துடன் எத்தனையோ வானொலிகள்...அப்பாடா??

அவர்களும் தங்கள் வானொலியைக் கேட்க என்ன??எல்லாம் செய்கிறார்கள்...அப்படியும் நேயர்களை மடக்குவது கடினமாகத் தான் இருக்கிறது.

அன்று இருந்த வானொலி; நேயர்கள் எல்லோரையுமே திருப்திப்படுத்தத் திணறியது.
அந்தத் திணறலை இலங்கை வானொலிக்குக் கொடுத்தவர்களில் அடியேனும் ஒருவன்.

கடைசிவரையும் நான் கேட்ட ஒரு பாடல்தனையும் ஒலிபரப்பும் பெருமை; அந்த இலங்கை வானொலிக்குக் கிட்டவில்லையென்பதில் எனக்கு இன்றும் வருத்தமே!!

அன்று இலங்கை வானொலியில் பாடல் கேட்பதென்பதில் கூட "சில அரசியல்" இருந்ததென்பதைப் பின் அறிந்தேன். ஆச்சரியப்பட்டேன்.
நானும் என்னைப்போல் பலரும் ஒதுக்கப்பட்டது "அரசியலே"

எதற்குச் செல்வாக்கைப் பாவிப்பதென்றே விவஸ்தையில்லையா?? என எண்ணியதுண்டு.

இப்படி வானொலிக்கு பாட்டுக்கேட்டெழுதும் வியாதி...பாரிஸ்...வரை என்னுடன் தொடர்ந்து வந்தது.

அன்று 1986 அல்லது 1987 ல் ;பாரிசிலும்..ஒரு தமிழ் வானொலி நாளுக்கு ஒரு மணி நேரம் ஒலிபரப்பானது.

அவர்களும் உங்கள் விருப்பம்;இன்றைய நேயர் என ;எழுதுங்கள் ஒலிபரப்புகிறோம். என விளம்பரம் செய்தார்கள்.

விடுவேனா?? பேனையையும் கடுதாசியையும் தூக்கிவிட்டேன்.எழுதினேன். அனுப்பினேன்.

ம்ம்...நான் கேட்டதெதுவும் ஒலிபரப்பவில்லை. இங்கும் "அரசியலே".. அதாவது...இந்த

வானொலியிலறிவிப்பாளராகப் பயின்றவர்களது (சம்பளமற்றவர்கள்) அறிந்தவர்;தெரிந்தவர்கள் பெயர் கூறவே நேரம் சரியானதால்; இங்கும் "அரசியல்"...விளையாடிவிட்டது.

இதையே சம்பளமாக இந்த அறிவிப்பாளர்கள் நினைத்தார்களோ!! தெரியவில்லை.

இப்படியாக என் வானொலி பாட்டுக் கேட்கும் ஆசை தேய்ந்து போனது.

இன்றைய வானொலிக்கு எழுதுவதிலும்; பேசாமல் இருப்பதே!!மேல்.

ஆனாலும் அன்று வானொலிக் எழுதியவற்றின் பிரதிகள் எதோ ஒரு பக்கத்தில் என் கோர்ப்பில் கிடந்தது.

சில வேளைகளில் அதை எடுத்துப் படித்தும் பார்ப்பதுண்டு. அப்போ ஒன்று புரிந்து கொண்டேன்.

என் பாடல்கள் பற்றிய விமர்சனம் அப்படி ஒன்றும்; மோசமில்லை...ஒலிபரப்பானவற்றுடன் ஒப்பிடும் போது!!

இந்த நிலையில்; இப்போ இணையத்தில் எழுதுகிறேன். இதில் கூட பாடல் கேட்கலாம்; போடலாம்; விமர்சிக்கலாம்.
இதன் தொழில் நுட்டம் புரியவில்லையே!!!
இது பற்றி அறிய "சாரல்- சயந்தனிடம்" தொழில் நுட்பம் பற்றிக் கேட்டேன்."செய்தா போச்சுது அண்ணே"
என அதைச் செய்தே தந்தார்.விளக்கமும் தந்தார்
.

இந்த இணைய அறிமுகம்...கூடல் குமரன்....ஒரு குடிலமைச்சுத் தந்தது..மலைநாடர்...அதை "பீற்றா" சிக்கலில் இருந்து மீட்டுவிட்டது..ஊரோடி -பகீ...பின்பு..;தற்போதைய அமைப்பு மற்றும் ஏனைய உதவுகள்
யாவும் "சாரல்- சயந்தன்...இப்படி பலர் வற்றா உதவியால்..நானும் எதோ எழுதுகிறேன்.எனப் பாவனை
காட்டுகிறேன்.

அப்படி!! நான் பாரிஸ் தமிழ் வானொலிக்கு; "இன்றைய நேயர்" நிகழ்ச்சிக்கு எழுதிய பல
பாடல்களின் முதல் பாடலாகத் தெரிவு செய்த "கொஞ்சும் சலங்கை"..படத்தில் இடம் பெற்ற
"சிங்கார வேலனே தேவா" என்ற பாடலைக் கேட்டு...விமர்சனத்தைப் படிக்கவும்
.

**நிகழ்ச்சியின் இறைவணக்கமாகவும்; மங்கல இசையாகவும் இப்பாடலைத் தெரிவு செய்துள்ளேன்.
எனது மாத்திரமல்ல ;பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் செவிகளில் ரீங்காரமிடும்;இந்த ஜானகி அம்மாவும்;காரைக் குருச்சியாரும் என்னால் மறக்கமுடியாதவர்கள்.
நாதஸ்வரம் தமிழர்களின் இசைச் செழுமையின் பிரதிபலிப்பு.எவர் மனதையும் கவரக் கூடியது.
அதிலும் காரைக்குருச்சி அருணாசலம் அவர்கள் இத்துறையில் இறைகடாட்சம் பெற்றவரென்பது என்கருத்துமாத்திரமல்ல; இசை உணர்ந்தோர் கருத்தும் கூட...
இப்பாடலில் ஜானகி அம்மாவின் குரல் நளினங்களுக்கு;அவர் விரல் ஈடு கொடுத்துள்ள லாவகம்
இசைப் பிரியர்களால் மறக்க முடியாதது.
காரக்குருச்சியாரின் அட்சரசுத்தி பிசகாத வாசிப்பு என்னை இன்றும் இப்பாடலுக்கு மயங்க வைத்துள்ளது.
ஜானகி அம்மாவின் குரலும் இப்பாடலுக்கு காத்திரமான ஒரு நளினத்தைக் கொடுத்துள்ளது.
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத ;என் இஸ்ட தெய்வம் சிங்கார வேலன் புகழ் பாடும் இப்பாடலை ஒலிபரப்பவும்.
இப்பாடலை இசைத்தட்டாக உருவாக்கியோரும் நல்லதமிழ் ரசிகர் போலும்;அருமையான வசனத்தை முதலில் சேர்த்து ;இப்படலின் சிறப்புக்கும் வெற்றிக்கும் கைகொடுத்துள்ளார்கள்.ஒலிபரப்புவீர்களா??
என்னை மகிழ்விற்பீர்களா??

எனக்குப் பிடித்த ""சிங்கார வேலனே தேவா"

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

Thursday, March 08, 2007

கோச்சி வரும் கவனம்....கொப்பரும் வருவார் கவனம்...!**
ழத்தில் மிகுந்த தமிழ்ப்பற்றுடன்,எங்கும் தமிழ் எதிலும் தமிழ்;அதுவும் சரியான தமிழ் எனும் ஆர்வத்துடனும்; நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் கல்லடி வேலுப்பிள்ளை( 1860- 1944) எனும் அறிஞர் வாழ்ந்தார்.

இவரைக் "கல்லடி வேலர்" என மரியாதையாகவும்;செல்லமாகவும் அழைத்தார்கள்.

எங்கே தமிழ்ப் பிழை கண்டாலும் ,திருத்துவார் அல்லது திருத்தவைப்பார்.
அன்றைய புகையிரதக் கடவைகளின் ; அறிவிப்புப் பலகைகளில் "
கோச்சி வரும் கவனம்" எனக் குறிப்பிடுவது வழக்கம்.


அதாவது "COACH-கோச்" எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம் போல் இச் சொல் வழக்கில் இருந்தது.

இதைக் காணும் போது; இத் தவறைச் சுட்டிக் காட்ட "கல்லடி வேலர்"; எங்கெல்லாம் இவ்வறிவிப்பைக்கண்டாரோ; அதிலெல்லாம் கரியினால் ;"கோச்சிவரும் கவனம்" என்பதன் கீழ் ;கொப்பரும் வருவார் கவனம்" என எழுதி விட்டாராம்.

இதன் பின் "புகைவண்டி வரும் கவனம்" எனும் வாசகம் புழக்கத்தில் வந்ததாகக் கூறுவர்.

இன்றும் இந்தக்

கோச்சி,கொம்மா,கொப்பர்;கொய்யா;கொண்ணன்,கொக்கா,கொம்மான்...எனும் முறைச் சொற்கள்; முறையே ஆச்சி, அம்மா,அப்பா,ஐயா;அண்ணன்,அக்கா,அம்மான் (மாமன்) எனும் முறைச் சொற்களுக்குஈடாகப் பேச்சுவழக்கில் உண்டு.

குறிப்பாகப் கிராமப் புறத்துப் பேச்சு வழக்கில்; இது சற்று நெருக்கமான;நட்பு வட்டாரங்களிலும்;அறிமுகம்மிக்கவர்களிடையேயும் வழக்கிலுள்ளது.

உதாரணமாக:

கோச்சி வீட்டில இருக்கிறாவா? (ஆச்சி வீட்டில் இருக்கிறாரா?)

கொம்மாட்ட ஒரு விசயம் கதைக்கவேண்டும். (அம்மாவிடம் ஒரு விடயம் கதைக்க வேண்டும்)

கொப்பருக்கு இப்ப வருத்தம் சுகமோ? (அப்பாவுக்கு இப்போது நோய் குணமாகிவிட்டதா ?)

கொண்ணர் கொழும்பால வந்திட்டார். (அண்ணன் கொழும்பில் இருந்து வந்துவிட்டார்)

கொக்காவுக்கு கலியாணம் முற்றாக்கியாச்சாமே! (அக்காவுக்கு திருமணம் நிச்சயித்தாகிவிட்டதாமா?)

கொம்மானை ஒருக்கா என்னை வந்து சந்திக்கச் சொல் (மாமாவை ஒருதரம் என்னை வந்து சந்திக்கும் படி கூறிவிடு)

இவ் பேச்சு வழக்கம் தமிழகத்தில் இருக்கலாம். கூறுங்கள்.அத்துடன் ஈழத்தவர் யாருக்காவது; கல்லடி வேலர் பாடல்கள் தெரிந்தால்; கூறவும்.

*07 -மார்ச்; கல்லடி வேலர் அவர்களின் பிறந்த நாள்!!
**இப்படம்; கானாப்பிரபாவின் "கல்லடி வேலர் வாழ்வில்" பதிவிலிருந்து;அவர் அனுமதியுடன் இடப்பட்டது.நன்றி

சென்னையில் நாதஸ்வர இசை விழா

சென்னையில் நாதஸ்வர இசை விழா ஒன்று முதல் தடவையாக
நடந்திருக்கிறது.
கனடாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர் (முருகதாஸ்)ஒருவரின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த இசைவிழா, தமிழகமெங்கும் வாழும் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு மிகவும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.
வழமையான மார்கழி மாத இசைவிழாவின் போது நாதஸ்வரக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக பலராலும் கூறப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில், இந்த நாதஸ்வர இசைவிழா மிகவும் முக்கியமான ஒன்றாக பல இசை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.
இந்த இசைவிழா குறித்து எமது சென்னை நிருபர் டி. என். கோபாலன் தயாரித்து வழங்கிய பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/03/070304_nadeswaram.shtml

இது BBC இல் இருந்து எடுக்கப்பட்டது.

இதன் உருவாக்க கர்த்தா ஒரு ஈழத்தமிழர் என்பதில் பெருமைப்படுகிறேன்.

Wednesday, March 07, 2007

பாரதியார் பாடல்-தேவாரம்- ஒளி ஒலி -நித்யஸ்ரீ

இது ஒரு பரிசோதனைப் பதிவு!!

எல்லோரும் பாட்டுப் படமெல்லாம் காட்டுராங்களே!!
நாமும் முயன்று பார்ப்போம்.
என ஒரு சிறு முயற்சி!!


நம்மிசை, ஏன் திரையிசையிலும் முத்திரை பதித்த நித்தியஸ்ரீ!!

">

Thursday, March 01, 2007

எலும்பில்....ஓர்..தேவாலயம்!!
உண்மை!சில சமயம் கற்பனைக் கதைகளிலும் அன்னியப்படும்.
அது செக்(Czech) குடியரசின் தலைநகரான பராக்கிலிருந்து(PRAGUE) ;
70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள SEDLEC எனும் கிராமத்தில்
காணலாம்.

இந்தக் கிராமத்திலுள்ள தேவாலயத்தின் உட்புறம்; மனித
எலும்புகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இக்கதை 1218 ல் ஆரம்பமானது. ABBOT HENRY என்பவர் ;
புனிதமண்ணுக்கு யாத்திரை செய்து திரும்பும் போது,
அங்குள்ள
பழமையான இடுகாட்டு மண்ணைக் கொண்டு வந்து இந்தத்
தேவாலயத்தில் தூவியுள்ளார்.

இதன் காரணமாக இத்தேவாலயம் மிகப் புனித இடமானதுடன்;
இடுகாடாகவும் மாறியது.1318 வரை; 30000 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. 1511 ல்
கட்டாயமாகப் பழைய எலும்புகள்அப்புறப்படுத்தினால் தான் ;
புதிய உடல்கள் அடக்கம் செய்யலாமெனும் நிலை வந்தது.அப்படிச் சேர்த்த எலும்புகளைக் கொண்டு இத் தேவாலயத்தை அழகுபடுத்தும்படி; 1870 ல் Duke of SHWARTZENBERG அவர்கள்; மரவேலையாளர்களை நியமித்து. அவர்கள் அப்பணியை அழகுற
முடித்தனர்.இத்தேவாலய உள்புறத்தை சுமார் 40000 உடல்களின் எலும்புகள் அலங்கரிக்கின்றன.அத் தேவாலயத்தின் சில படங்களே இவை.

இத்தனை கால்களா? இதுக்கு!!!
சீனாவின் FUJIAN மாநிலத்திலுள்ள உணவு விடுதியில் சமையலுக்கு
வாங்கிய தவளைக்கு இத்தனை கால்கள் பி. பி. சி யில் பார்த்தேன்.
நீங்களும் பாருங்கள்...