சக பதிவர் செல்வேந்திரன் எழுதி தமிழ் மணத்தில் வந்த 'ரஜனியும் அப்பாவும் ' எனும் சிறுகதை 21-11-2007 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது.
கடைசி வரையும் கற்பனை என்பதனைத் தெரியாமல் நல்ல நடையில் எழுதிய கதையை
அன்றே படித்துப் பின்னூட்டினேன்.
அவரைப் பாராட்டுவோம்.
விகடனுக்கும் நன்றி!!
அவர் கதையைப் படிக்க.......
http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_11.html
'ரஜனியும் அப்பாவும் '......செல்வேந்திரன்
“ரஜினி இந்த பெயர் எனக்கு அறிமுகமாகும்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. வேல்சாமி நாயக்கர் அப்பாவின் பால்ய நண்பர். சாத்தூர்காரர். இருவருக்கும் அப்படியொரு நெருக்கம். எனது அப்பாவின் மிகக்குறுகலான நட்பு வட்டத்தின் அடுத்த மனிதர் வேல்சாமி நாயக்கர்தான். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்ளாமல் எந்த முக்கிய முடிவும் எடுத்ததே இல்லை. இத்தனைக்கும் அவரும் இவரும் நட்பு பாராட்ட பெரிதாக எவ்வித முகாந்திரமும் இல்லை. அவர் அப்பாவை விட ஐந்து வயது சிறியவர். வேறு ஊரைச் சேர்ந்தவர். தெலுங்கர். அவரும் இவரும் சிறிய வயதில் ஒரே தீப்பெட்டிக் கம்பெனியில் போர்மேன் வேலை செய்தவர்கள். பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே தொழில் தொடங்கி, அவர் பல கம்பெனிகள் வைத்து சாத்தூரின் மிகப்பெரிய தொழிலதிபரும் புரவலரும் ஆனார். என் அப்பா உள்ளூரிலே பிழைக்க வேண்டும் என்று கம்பெனி ஆரம்பித்து, காதல் திருமணம் செய்து ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். என்னதான் வேல்சாமி கோடீஸ்வரர் என்றாலும் நட்பில் ஒரு பிசிராந்தையார். எத்தனை பெரிய வேலை என்றாலும் அப்பாவிற்கோ எங்களுக்கோ ஒன்று என்றால் உடனே வந்து உதவும் கரம் அவருடையதாகத்தான் இருந்திருக்கிறது நேற்று வரை.
வேல்சாமியின் தொழில் வட்டாரத்தில் அவருக்கு நெருங்கிய சக தொழிலதிபர்கள் ரஜினிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே வேல்சாமியின் வெள்ளை உள்ளமும், வேடிக்கை பேச்சும் ரஜினியை அவர்பால் ஈர்த்திருக்கிறது. அடிக்கடி இருவரும் சந்தித்து பேசுகையில் வேல்சாமியின் வார்த்தைகளில் அடிக்கடி வந்து விழுந்திருக்கிறது அப்பாவின் பெயர். அவர் அப்பா குறித்து சொல்லும் வார்த்தைகளில் சுவாரஸ்யமான ரஜினி அப்பாவை சந்தித்தே ஆக வேண்டும் என ஒரு நாள் அடம்பிடித்திருக்கிறார்.
திட்டமிட்டபடி ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் ரஜினி ஒரு வெடி வியாபாரி போல மாறு வேடமிட்டு அவரது உதவியாளருடன் எங்கள் வீட்டுக் கதவை தட்டினார். கதவை திறந்த எனது தந்தையிடம் “வேல்சாமி நாயக்கர் அனுப்பி வைத்தார். ஒரு திருவிழாவிற்கு வெடி செய்ய கொஞ்சம் வெடிபொருட்கள் வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் குழப்பமான எனது தந்தை "வேல்சாமி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. சட்டத்திற்கு புறம்பான எதையும் அவன் பேச மாட்டான். நானும் செய்வதில்லை. சரி.. வந்ததுவந்து விட்டீர்கள். வேல்சாமியின் பேரை சொல்லியதற்காக இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு காலை முதல் பஸ்ஸில் உங்கள் ஊரை பார்த்து கிளம்புங்கள்" எனச் சொல்லி அவர்களுக்கு நள்ளிரவில் உணவு தயார் (உப்புமா) செய்து கொடுத்து, படுக்கை வசதியும் செய்து கொடுத்துள்ளார் எனது தந்தை. தம் வாழ்நாளில் 'மிஸ்ஸியம்மா' தவிர்த்து வேறு சினிமா பார்த்தறியதா அவருக்கு ரஜினியை எப்படி தெரியும்?
பொழுது விடியும்போது அவர்களை காபியோடு எழுப்பிய எனது தந்தை ஒரு சைக்கிள் ரிக்சா அமர்த்தி அவர்களை பேருந்து நிலையம் வரை கொண்டு வழி அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் வேல்சாமி நாயக்கரை சந்தித்த ரஜினி எனது தந்தையின் விருந்தோம்பல் பண்பையும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சட்டத்தை மீறாத பண்பையும், எளிய வாழ்க்கை முறையையும் சிலாகித்திருக்கிறார். வந்திருந்தவர் யாரென்றே தெரியாதபோதும் உபசரித்ததை சிலாகித்த ரஜினி, அடுத்தமுறை ரஜினியாகவே போவது என முடிவு செய்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் தனது உதவியாளருடன் அம்பாஸடர் காரில் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவை திறந்த எனது தந்தையிடம் "நான் நடிகர் ரஜினிகாந்த். உங்கள் நண்பர் வேல்சாமி நாயக்கருக்கு வேண்டியவன். ஒரு ஷூட்டிங் வந்தோம். கார் ரிப்பேர் ஆகிவிட்டது. நான் வந்திருப்பது ரசிகர்களுக்கு தெரிந்தால் கூட்டம் கூடி விடும். இன்றிரவு உங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார். மீண்டும் அதே உப்புமா... அதே காஃபி. அதே எளிய உபசாரங்கள். சாமான்யன், சூப்பர் ஸ்டார் யாராக இருந்தாலும் ஒன்றுதான். பெரியோரை வியத்தலும் இலமே.. சிறியோரை இகழ்தலும் இலமே என்ற எனது தந்தையின் குணம் அவரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி விட்டது.
உண்மையில் என் தந்தை பணக்காரர்களிடம் பழகுவதை விரும்புபவர் இல்லை. ஒரே விதி விலக்கு வேல்சாமி நாயக்கர். ரஜினி விஷயத்தில் ரஜினிதான் என் தந்தையை வம்படியாக நண்பராக்கி கொண்டார். எத்தனையோ முறை தமது வீட்டிற்கு அழைத்தும் அவர் போனதில்லை. ஆனால் அவரே தொழில் நிமித்தமாக சென்னைக்கு செல்ல நேர்ந்தால் லதா ரஜினிகாந்திற்கு அகர்பத்திகள், முதலூர் அல்வா, கருப்பட்டி, பனங்கற்கண்டு, குழந்தைகளுக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய், தடியங்காய் அல்வா (செளந்தர்யாவிற்கு ரொம்ப பிடிக்குமாம்) வாங்கி செல்ல தவறியதேயில்லை. அவர்கள் வீட்டில் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அவசர வேலை என்று நழுவி விடுவார். ஒரு முறை ரஜினி வீட்டிலிருந்து வெளியே வரும்போது எதிர்பட்ட பத்திரிக்கையாளர் ரஜினி என்ன சொன்னார் எனக்கேட்டபோது "உங்களையெல்லாம் தினமும் தினமணி படிக்க சொன்னார்" என வேடிக்கையாக பதில் சொல்லி விட்டு நகர்ந்தாராம். அவருக்கு தினமணி பேப்பர் என்றால் அவ்வளவு பிரியம். ஒரு முறை முள்ளும் மலருமில் ரஜினியின் நடிப்பை பாராட்டி எழுதியபோதுதான் ஒத்துக்கொண்டார் ரஜினி ஒரு நல்ல நடிகர் என்று.
ரஜினி எப்போதாவது எங்களிடம் பேசும்போது 'உங்களுக்கு கிடைச்ச மாதிரி அப்பா எனக்கு கிடைச்சிருந்தா. எவ்வளவு சந்தோஷமா இருக்கும்'. குழந்தை வளர்ப்பது எப்படின்னு உங்க அப்பா இந்த உலகத்திற்கே சொல்லி கொடுக்கலாம். அப்படி வளர்த்திருக்கிறார் உங்களை"ன்னு அடிக்கடி சொல்வார். எப்போதாவது சென்னையிலிருந்து வரும் லதா ரஜினிகாந்த நிறைய திண்பண்டங்களை வாங்கி வருவார்கள். எவ்வளவு வம்படியாக எங்களிடம் இனிப்பை தினித்து சாப்பிட சொன்னாலும் எங்கள் அப்பாவின் கண்ணசைவு சம்மதம் இல்லாமல் அதை நாங்கள் வாயில் வைத்ததாய் சரித்திரம் இல்லை. ஊர் திரும்பும்போது திருவிழா செலவுக்கு வச்சுக்கோங்க என எங்கள் பையில் பணத்தை திணிப்பார். அவர் ஊருக்கு கிளம்பும் வரை பொறுமையாக இருந்து கிளம்பும் சமயத்தில் 'அப்பா திட்டுவார். பணம் வேண்டாம்' என அவரது கையில் திணித்துவிட்டு ஓடி, ஓளிந்து கொள்வோம்.
பின்னாளில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகும் சமயத்தில் ரஜினி தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சர்ச்சைகள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. அவர் நின்றால், நடந்தால், தும்மினால் கவர் ஸ்டோரிகள் எழுதப்பட்டு வந்த காலம். தனது பிரைவசி, நிம்மதி இரண்டும் கெடுவதாக அவர் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருந்தினார். அவருக்கு ஆறுதலளிக்கும் கடிதம் ஒன்றை அப்பாவும், நாங்களுமாக பதினைந்து பக்கத்திற்கு எழுதி அனுப்பினோம். தினசரி வீட்டு பூஜையில், குடும்ப பிரார்த்தனைகளில், ஆலய வழிபாடுகளில் ரஜினிக்காக வேண்டிக்கொள்வதும், அர்ச்சனை செய்வதும் தொடர்ந்....... எழுதிக்கொண்டிருந்தவனின் பேப்பர் சரலென பிடுங்கப்பட்டது. “என்னடா மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சுட்டியா....?” ஆத்திரத்தில் கத்தினார் அப்பா. பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தபடி இருந்தான் தினகரன். “டேய் ஒன்னு ஒழுங்கா படி அல்லது தொழில பாரு.... உன் வயசுல பத்து வீட்டுக்கு கட்டை சுமந்து குடும்பத்த காப்பாத்தினேண்டா... தறுதலைப் பயலே எப்ப பார்த்தாலும் பொஸ்தகம் படிக்கிறது, எதையாவது கிறுக்கிட்டு திரியறது.... மாசமானா பென்சன் வாங்குற கிழட்டு பயக கூட இலக்கியம், கிலக்கியம்னு பேசிகிட்டு திரியிறது... உருப்பட மாட்டேடா.... உருப்படவே மாட்ட” மூச்சிரைக்க பேசியவர் தினகரன் எழுதிக்கொண்டிருந்த கதையை சுக்கல் சுக்கலாக கிழித்து எரிந்தார். என்ன செய்து என்ன பயன்? இந்த உலகின் தலைசிறந்த எழுத்தாளனாகிய தினகரனின் ஆர்வத்தை இவரது ஆத்திரமா தடுத்துவிடும். ‘ரஜினி ராசியில்லை, நாளை கமல்ஹாசனை வைத்து முயற்சிக்கலாம்’ எனத் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.
Posted by செல்வேந்திரன் at
Labels: சிறுகதை