கவிதை!.....
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய வார்த்தை;இலக்கியத்தின் எழிற்குழந்தை....படிப்போரைக் கேட்போரை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் " காகிதத் தேன்" கவிதையைச் சுவைக்கத் தெரியாது மனிதனாக இருப்பதே! வீண்.
கவிஞர்கள்; தம் வாழ்வில் கற்றவற்றையும்;கேட்டவற்றையும்; அனுபவித்தவற்றையும்; தாம் சுவைத்தது மாத்திரமன்றி, யாமும் சுவைக்க அழகுற எழுதி வைத்தவையே! கவிதைகள்.
கவிஞன் பெற்ற அனுபவச் சாறு கவிதை; அவன் நமக்கு விட்டுச் சென்ற பெருநிதியும் அதுவே!தமிழ்க்கவிதையின் தோற்றுவாய், பக்தி;நீதி சார்ந்ததாக இருந்தது.
அத்துடன் அன்றைய காலக்கட்டத்தில் எல்லாவற்றையுமே செய்யுளாகவே! ஆக்கிவைத்தார்கள்.
மருத்துவம்;தத்துவம்;ஓவியம்,சிற்பம்;இலக்கணம் ;இலக்கியம் எதுவானாலும் அவற்றின் செயற்குறிப்புகளை நினைவில் நிறுத்த ஓசைநயம் பொருந்திய செய்யுள்களாகவே! ஆக்கிவைத்தார்கள்.
அத்துடன் இச்செய்யுட் குறிப்புகள் மிகப் பெரியவிடயங்களையும்; குறுகிய வடிவில் குறித்துவைக்க உதவியது.
"செவிவழி" இலக்கிய வடிவங்கள் பரவுவதற்குச் சந்தங்களும்;ஓசைநயமும் பேருதவியாக இருந்தது.
அதனால் அமரத்துவம் மிக்க செய்யுள்கள்;கவிதைகள் உருவாக யாப்புக்கள் இன்றியமையாததாகின.
நல்ல பாடகனுக்கு எப்படிச் சுரங்கள் தெரியவேண்டுமோ!நல்ல கவிஞனுக்கு யாப்புத் தெரிய வேண்டுமென்றானது.
இயல்பாகவே கவிவளம் உடையோருக்கு சந்தமும்;ஓசைநயமும்;யாப்புருவும் பிறப்புடனே கிடைத்த கொடை எனலாம்.உலகில்எப்படி? ஞானிகள்;யோகிகள்;வைத்தியர்கள்;பொறியியலாளர்கள்;வக்கீல்கள்; பாடகர்கள்,பேச்சாளர்கள்;சிந்தனைவாதிகள்;சிற்பிகள்;ஓவியர்கள்;சமைப்போர்;
சோம்பேறிகள்,சுரணையற்றோர்.....பிறக்கிறார்களோ!அப்படியே...
வித்தகப் பொருளின் மாட்சி வியத்தகு சொல்லின் ஆட்சி!மெய்த்திறம்;திட்பம்;நுட்பம் விளக்கம் மற்றுள யாவும் மேவி!
எத்தனை முறை கற்றாலும் எழில் நலம் மேல் மேலோங்கி
தித்திக்கும் பாடல் தானே தெய்வீகப் கவிதையாகும்!.
என்ற வகைக் கவிதையை உருவாக்கும் கவிஞர்களும் பிறக்கிறார்கள்.
எல்லோரும் வைத்தியராக முடியாது எவ்வளவு உண்மையோ!! அவ்வளவு உண்மை எல்லோரும் கவிஞர் ஆகமுடியாதது.
இதைப் பலர் உணரவேண்டும்.ஆனால் உணரவில்லை.
ஒவ்வொருவரிடமும் இன்றோ;இரண்டோ திறமையுண்டு.
ஆனால் எல்லோரிடமும் எல்லாத் திறனும் இல்லை.இதனால் "கவிதை" எனும் பெயரில் குப்பைகள் வலம் வருகின்றன.
கவிதை எழுதக் காகிதம்; எழுதுகோல் .....இவற்றுடன் பட்டறிவு;படிப்பறிவு;சிந்தனை;கற்பனைவளம்;சுவைபடக் கூறும்
ஆற்றலும் வேண்டும்.
இவற்றின் மொத்த உருவமாகத் தமிழினத்தில் கம்பன்;வள்ளுவன்;இளங்கோ;ஔவை;ஒட்டக்கூத்தன்;
பாரதி;கண்ணதாசன்;பாரதிதாசன்;நவாலியூர் சோமசுந்தரப் புலவர்;சின்னத்தம்பிப் புலவர்; நல்லதம்பிப் புலவர்;உருத்திரமூர்த்தி;பேராசிரியர் சுந்தரம் பிள்ளை;சமய குரவர்கள்;மற்றும் பலர் கவிஞர்களாகப் பிறந்தார்கள்....இன்பக் கவிதைகளைத் தந்தார்கள்.
ஆனால்;இன்று இந்த உன்னத இலக்கிய வடிவத்தின் நிலை என்ன? "நடக்க மாட்டாதவன் குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல்" ஆகிவிட்டது.சீரான கல்விஅறிவற்றவர்களினதும்; இலக்கிய இலக்கண அனுபவமற்றவர்களினதும் கைகளில், அது சிக்கிச் சீரழிவதைக் கண்கூடாகப் காணக் கூடியதாக உள்ளது.
இன்று கம்பனும் பாரதியும் இருந்திருந்தால் "மறம்" பாடியே இக்கூட்டத்தை அழித்திருப்பார்கள்.
இன்று கவிஞர்கள் என்று "கக்கத்துள்" காகிதக் கட்டுடன் அலையும் "திருக்கூட்டம்;தாம் எதோ தமிழை அழிவில் இருந்து காக்க உதித்தவர்கள் போல் எண்ணி; தமிழையே சாகடிக்கிறார்கள்.
மொத்தமாகத் தமக்குத் தெரியாத பரீட்சயமில்லாத ஒன்றைச் சாதிக்க முற்பட்டு;சோதனையில் மாட்டித் தவிக்கிறார்கள். மற்றவர்களையும் தவிக்க வைக்கிறார்கள்.
இதைப் பேராசிரியர் கலாநிதி வெங்கடசுப்பிரமணியம் குறிப்பிடும் போது "நாம் யார்? பாரதியின் வழித்தோன்றல்கள்;பாவேந்தர் பரம்பரை,ஔவ்வைப்பாட்டியின் பேரர்கள்....உலகுக்கு வழிகாட்டிய வள்ளுவரின் திருக்குமாரர்கள் எனவே நமக்கு அறிவுக்குப் பஞ்சமில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமென்றால்;எமக்குக் கவிதை கைவந்த கலையாகத்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் வசனத்தைக்கூடக் கவிதையாக்கி,ஆணைப் பெண்ணாக்குவது போன்ற இரச(இரசமற்ற) வாதங்கள் செய்துவருகிறோம்.
ஒரு பத்து வரிகளைச் சேர்த்து எழுதினால் "பந்தி" அதையேவரிசையாக ஒன்றுக்கு கீழ் ஒன்றாக எழுதினால் "புதுக்கவிதை" என்று கேலி செய்கிறார்.
யாப்புக் கூறும் இலக்கியவடிவம் வயலுக்கு வரம்பு போல்...ஆனால் வரம்பு வயல் ஆகாது உண்மை;அதுபோல் வரம்பின்றி வயல் செழிக்காது.
அதுவும் உண்மையே!காவியங்கள்;கதைகள்;நாடகங்கள்;கட்டுரைகள்;கடிதங்கள் எப்படி இருக்க வேண்டுமெனும் கட்டமைப்பு ஒன்று இருக்குமானால்; கட்டாயம் கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் எனும் கட்டமைப்பு இருந்தே ஆகவேண்டும்.
அதுவே "யாப்பு". கவிதைக்கு வரைபிலக்கணம் இல்லை என்பதுமனிதனுக்கு வரைவிலக்கணம் இல்லை என்பதற்கு ஒப்பானது.
வரைபின்றி வளர்ந்த கலை என்று கவிதையை எண்ணுவது "ஆழ்ந்த அறிவின்மையின் புலம்பல்".மனிதன் ,பின்பு தமிழன்;பிரான்சியன்;இந்து;கிருஸ்தவன் என்பது போன்றே!கவிதை,வெண்பா,விருத்தம்....இவற்றுக்கு வரைபுண்டு.
கவிஞன் என்பவன் மொழியைத் தனக்குச் சேவகம் செய்ய வைப்பவன் என்பர்.நல்ல கவிஞனுக்கு மொழி அவன் சிந்தனையை வடிக்க என்றுமே தடையாக இருந்ததில்லை.
"இம் என்றால் எழுநூறு;எண்ணூறு ;அம்மென்றால் ஆயிரம்" எனக் கவிபடைத்த தமிழ்க்கவிஞர்கள் இருந்தே உள்ளார்கள்.அவர்கள் என்றுமே தம் சிந்தனைக்கு மொழியும்,யாப்பும்;வரைபும் தடையாகவிருந்ததென சிணுங்கியதே! இல்லை.
ஆனால் இன்றைய அறிவு "சூனியங்கள்" ஆடத் தெரியாதவன் கூடம் கோணை என்பது போல் யாப்புத் தடையாம்."யாப்பைத் தவிர்ப்பதனால் கவிதை தன் அனைத்துச் சக்தியோடும் புறப்படுகிறது" பழைய யாப்பு உருவங்கள் புதிய சிந்தனைகளைத்தாங்காது என்கிறார்களே!பாரதியும்;பாரதிதாசனும்;கண்ணதாசனும்;உருத்திரமூர்த்தியும்,காசி ஆனந்தனும் கூறியவை பழைய சிந்தனைகளா? இப்படிக் கூறுபவர்கள்....
இதோ ஓர் தற்காலச் சிந்தனையில் உருவான கவிதை நெல்லை சு.முத்து வினால் எழுதப்பட்டது.
உலகம் ஒரு கைப்பந்தாய்ச் சுருங்கச் செய்யும்உன்னதமாம் விஞ்னானப் பொற்காலத்தில்பலதுறையில் ஆய்வுகளில் சிறந்து ஓங்கும்பாரதமும் பாரிடையே உயர்ந்து வெற்றித்திலகமெனப் பல்நோக்குச் செயற்கைக்கோள்கள்செலுத்திவிடும் தனிப்பெருமை உவகை நல்கும்!உலவிவரும் இன்சாட்டில் உயர்ச்சி சொல்வோம்!உறு வான சாத்திரத்தில் புரட்சி செய்வோம்!ஏழாண்டு அண்டவெளி சுற்றும் வண்டாம்;இந்தியத் தேசியச் செயற்கைக் கோளால் - விண்மீன்கோளாண்டு,மின்காந்த அலைகள் கொண்டுகூறு புகழும் வானொலியும்;வானிலையும்நாளாண்டு நம்நாட்டில் கல்வி கேள்விஞானமுடன்விஞ்ஞானம் செழிக்க மக்கள்வாழ்வாண்டு தொலை பேசி;தூரக்காட்சிவளமாண்டு இன்சாட்டே வாழி நீடு!கலைமகள் - யூன் - 1993இது புதிய சிந்தனை வடிவமல்லவா?!கவிஞன் நினைத்ததை யாப்புக்குள் அடக்கவில்லையா???இது சுவையில்லையா???
அடுத்து காளமேகப் புலவர்; ஒரு சத்திரத்தில் உணவருந்துகிறார். அவர் அருகில் இங்கிதம் தெரியாதவர், சோறிட்டதும் பாய்ந்து குடுமி கலைய
அள்ளி வாயிலடைகிறார்.
விருந்தின் நெறியைக் கடைப்பிடிக்கத் தெரியாதவரை புலவர் பாடலால் கண்டிக்கிறார்.
இலக்கியத்துக்கு ஓர் அழகிய பொருள் பொதிந்த பாடல்....புலவரின் எண்ணம் அப்படியே நாலு வரிக்குள் அழகுற அடங்கிவிட்டது.
அது.........
முடிச்சவிழ்ந்த முன் குடிமிச் சோழியா!சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா!! புலையா,!!திருவானைக்காக் கோட்டானே! நாயே! குரங்கே!உனையொருத்திபோட்டாளே! வேலையற்றுப் போய்!!!!காள மேகமல்லவா!!!! தமிழ் கைகட்டிச் சேவகம் செய்துள்ளது.
பெற்றாளே!!!!! என்று கூறாமல் போட்டாளே!! என மிருகமே....என இன்னுமொரு போடு போட்டுள்ளார்.
புதிய சிந்தனைகளின் ஊற்று ;நம் புரட்சிக் கவி பாரதியார்........
இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்அன்ன யாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்இது புதுமைக் கருத்தில்லையா? கல்வியின் மகத்துவத்தையும்; இன்றியமையாமையையும் புரிய வைக்கப் பாரதி சொற்களின்றியா?? தவித்தார்.
இக்கவிதையில் உயிரோட்டம் இல்லையா??,பாரதி சொற்களுடன் விளையாடவில்லையா???தன் எண்ணத்திற்கு எழுத்துருக் கொடுக்கவில்லையா???சொல்லவந்த விடயத்தை பாரதி செட்டாகச் சொல்லிவிட்டார்.
இவை ஏன்??, "புதுசு" களுக்குப் புரியவில்லை. எம் தமிழ் மொழியிலா ? சொல்லுக்குப் பஞ்சம்.மலயாளம்; தெலுங்கு;கன்னடம் என மழலைகளைத் தன் சொல்வளத்தால் பெற்ற தாயல்லவா?, எம் தமிழ்!
"
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சு!வெள்ளைப் பறங்கியனைத் துரையென்ற காலமும் போச்சு!எனப் பாரதி புதுமை பேச !
அவர் தாசன் - சுப்பு ரெத்தினம் என்ற பாரதி தாசன்
"ஆடுகிறாய்! உலகப்பா யோசித்துப் பார்!ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!தேடப்பா ஒரு வழியை என்று சொன்னான்.செகதப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்உதையப்பராகிவிட்டார் - ஓர் நொடிக்குள்ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறிஒப்பப்பர் ஆய் விடுவர் உரையப்பா நீ!என இலகு தமிழில் எவ்வளவு பொருள் பொதிந்த புதுமைக் கருத்தைக் வெளிக் கொண்டுவந்துள்ளார்.மரபுடன் புதுமைக் கருத்துக்களைச் சேர்த்து கவிதை அமைக்கலாம் என்று முதல் முயன்று வெற்றி பெற்றவர்கள் பாரதியும்; பாரதிதாசனும்.
பாரதியார் - மடங்களிலும் மாளிகைகளிலும் கொலுவிருந்த தமிழைக் கையைப்பிடித்துத் திண்ணைக்கும் ;தெருவுக்கும் கூட்டிவந்து தமிழுலகில் பிடித்திருந்த நோயை விரட்ட நல்மருத்துவராக கவிதை மருந்து கொண்டுவந்த கவி வைத்தியர் ;பொற்கவி பாடிய சித்திரக்கோ!!!சுதந்திரத்தின் சுவையைச் சொற்களில் வடித்தவர்.
அவர் கருத்துக்கள் புதுமை;புரட்சி;சுதந்திரம் விரும்பும் யாவராலும் போற்றப்பட்டது.
மரபு மீறி அவர் கவி எழுத முற்படவில்லை. இலக்கணப் புலமை மிக்க அவருக்கு அத் தேவை இருக்கவுமில்லை.
பரீட்சார்த்தமாக அவரெழுதிய "வசனக்கவிதை" கள் கூட ஆற்றொழுக்கெனச் சீராக இருந்தது.
வெண்பாவில் புகழேந்தி எனப் புகழப்பட்ட "நளவெண்பா" ஆசிரியர் எழில் கொஞ்சும் கவிதைக்கு ஒப்பாரும் மிக்காருமற்றவர்.
காட்சியொன்றைக் கண்முன்னே கொணர்வதுபோல் உவமான உவமேயங்களைக் கையாண்டு படிப்போர் மனதில் பதியவைப்பதில் வல்லவர்.அவர் பாடலொன்றைப் பார்ப்போம்.
சுயம்வரமண்டபத்தில் மன்னர்கள் வரிசையாக இருக்கிறார்கள்.தமயந்தி நுளைகிறாள்.காட்சி இதுதான் கவிஞர் பதியவைக்கிறார்.
மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தே!பொன்னின் மடப்பாவை போய்ப் புக்காள்!- மின்னிறைத்துச்செய்யதாள் வெள்ளைச் சிறகன்னஞ்செங்கமலப்பொய்கைவாய் போவதே போன்று........கண்களுக்குத் தாமரையும்;மண்டபத்தைத் தடாகமாகவும்;தமயந்தியை அன்னமாகவும் உவமித்து;மறக்க முடியாததாகிவிட்டது.
"அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் ஒரு காட்சி சூரி எனும் வைத்தியராக பல பிரபலங்களுக்கு வைத்தியம் செய்பவர் கவியரசர் கண்ணதாசனுக்கும் வைத்தியம் செய்துவிட்டு ஒரு பாடல் தன்னைப் பற்றிப் பாடும்படி கேட்கிறார்.
தமிழுக்கு ஓர் கவிதை!!!!!!
அருமருந்துகள் போன்றவர் தமிழரசராம் திருவள்ளுவர்!பெருமருந்துயர் பக்தியென்பதைப் பெரியவர் பலர் பேசுவர்!சுரமருந்தென எதனையோ தரும் சூரி யெனும் மருத்துவர்!கரி மெலிந்தது போல் மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே!!......வைத்தியருக்கு மருந்து என்ற விடயத்தை வைத்து யாப்புப் பிசகாமல் வார்த்தெடுத்த கவிதை.இப்படத்தில் சூரி எனும் வைத்தியராக நடிப்பவர் நடிகர் நாகேஷ்..... அவர் தோற்றம் அவரைக்காய் போல் மெலிவு.
அதைக் கவிஞர் "கரி மெலிந்தது" என நயம் பட உரைக்கிறார். யானை மெலிந்தால் பார்க்கச் சகிக்காது.இவர்களல்லவா ! கவிஞர்கள்.
இனிக் கம்பன் பாடல் ஒன்று பார்ப்போம்.பல்லாயிரம் பாடல்கள் பாடி தமிழைச் சிறப்பித்தவர் கம்பர் பெருமான்; அவர் தமிழை ஆண்டு கவிச்சக்கரவர்த்தியானவர்.அவர் ஆற்றலுக்கு எவ்வளவோ பாடல்களைக் காட்டலாம்.ஓர் பாடலை உங்களுடன் பகிர்கிறேன்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்!எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறே!கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ! ஒருவன் வாளி!!!இராம பாணத்தால் இராவணன் உடல் சல்லடையாகிக் கிடக்கிறது. மண்டோதரி அதைக் காண்கிறாள்.
எள்ளிருக்க இடமில்லாதவண்ணம் இராமபாணம் உடலெங்கும் தைத்துள்ளது.
கம்பன் கற்பனை பெருக்கெடுத்து அந்தக் காட்சிக்கு உயிரூட்டுகிறது.ஓர் அம்பால் உயிரை வாங்காமல் இப்படி உடலெங்கும் அம்பு பாய்ந்ததற்கு காரணம் கற்ப்பிக்கப்படுகிறது.
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்சானகியை மனச்சிறையில் கரந்த காதல்; உள்ளிருக்குதோ????என உடலெங்கும் தேடியது.என மண்டோதரி புலம்புவதாகக் கூறுகிறார்.
கவிஞன் தானும் அனுபவித்துப் படிப்போரையும் அனுபவக்கவைப்பதே!!!கவிதை.
அதனால் தான் கம்பர் சொற்களுக்கு அனுகூலமாக
கருத்து ;செம்மை;இனிமை; தெளிவு, நடையெழில்;இலக்கிய இலக்கணப் புலமை;புராண வரலாறுகள் நாட்டு நடப்பு அறிந்திருத்தல் ஆகியன உடையோரே கவிதை எழுதும் தகுதியுடையோர் என்கிறார்.
சிறந்த இயல் இசை நாடக விமர்சகர்
"சுப்புடு" ;இன்றைய புதுக்கவிதை பற்றிக் குறிப்பிடும் போது
" அவிழ்த்து விட்ட அரபுக்குதிரை" என்கிறார்; அவற்றின் ஓட்டம் பயனற்றது; புரியவேண்டியவர்கள் புரிய வேண்டும்.
இன்றைய புதுக்கவிதையாளர்கள்; தாங்கள் நினைத்த போக்கில் எழுதுகிறார்கள். அவர்களுக்கு இலக்கணம் என்பதைப் பற்றியே கவலையில்லை; ஏன்,,?? அது தெரியாததும் கூட; பொருளுக்கிசைய எழுதுகிறோம் என்று ;சொல்லவந்த விடயத்தைத் தலைகீழாக்கி விடுவார்கள்.
உதாரணம்:-
உண்ண உணவும்!உடுக்க உடையுமின்றிய சிறுவன்;தந்தையும் தாயுமிழந்து இன்று
சொந்த மண்ணில்அகதியானான்.
இது ஒரு புதுக் கவிதையாம்.....இதைச் சற்று ஆய்வோம்.
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.
இது எப்படி??ச்சாத்தியமாகும்.கருத்தையே தலை கீழாக்கிவிட்டார்கள்;
தந்தை தாயை இழந்து; உண்ண உணவும் உடுக்க உடையும் அற்ற சிறுவன் என்பதே!!!உலகுக் கொப்பும்.
இதுவே இன்றைய புதுக்கவிதையாளர்களால் ஏற்படும் கேடு. எழுவாய் ஏது??? பயனிலை ஏது???என்பதின்றி மனதில் பட்டதையெல்லாம் எழுதி நிரப்புவதே!!!! அவர்கள் கூத்து.
இதன் தலைப்பு ஊரும் நாட்கள்! வாசுதேவன் கவிதை (யாம்)
இன்று எனது முறையாய் இருக்க வேண்டும்;அவன் என்னிடம் வந்தான்அவன் கேள்விகளுக்குஅவன் விரும்பிய பதில்களைஎன்னிடம் எதிர் பார்த்தான்என் நியாயங்களில் பொருட்டுஅவன் எதிர் பார்ப்பைச் சிதறடித்தேன்அவன் ஒரு முண்டமாய் மாறினான்தோலை உரித்துஎன் மனிதனைஅவன் முன் வைத்தேன்!அசௌகரியம் தாங்க வொண்ணாதுமுண்டம் திடீரெனஒரு துப்பாக்கியாய் மாறியது.அதுவரைஇரும்பென உறுதிகாத்த நான்இதோஅதன் காலடியில்மெழுகாய் உருகி வழிகிறேன்ஐந்தடி எட்டங்குலமும்எழுபது கிலோஎடையும் கொண்டதொருஉருப்படி என்பதற்கப்பால்எந்தப் பெறுமதியும்எனக்கில்லாது போயிற்றுஒரு இலையானாய் நசுக்குண்டு கிடந்தேன்அறுவடைகள் சகிதம்வாசலில் அவன் தலைக் கறுப்பு மறையகூட்டிப் பொறுக்கி அள்ளி எடுக்கிறேன்;என்னை!!தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா???இவர் ஏன்.???இப்படி முக்கி முனகுகிறார்;இப்படித்தான்....
இன்று பல கவிதைத் தொகுப்புக்கள் ;வெறும் புலம்பலாகவே!! இருக்கிறது.
நூறு பக்கத்தில் ஓர் கவிதைத் தொகுப்பெனில் பக்கத்துக்கு 25 சொல்; இப்படிப் புரிந்து கொள்ள முடியாத புலம்பலாக நிரப்பப் பட்டிருப்பதும்;எப்போதுமே எதியோப்பிய வறுமை போல்"பிலாக்கன ஒலியும்" ;இவை என்னைப் போன்றோருக்கு! வெறும் ஏமாற்றமும்;வேதனையுமே!!!
இப்படி ஆயிரம் உதாரணம் காட்டலாம்.
எப்போதாவது ஒன்று....அது போதாது...;கவி உலகம் தன்னை மாற்ற வேண்டும்...;
இன்றைய "புதிசுகள்" யாப்பைப் பற்றியோ எதுகை;மோனையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.
தாங்கள் எழுதுபவை செய்யுளா?, வசனமா?? என்று அலட்டிக் கொள்வதில்லை. சொற்களை வைத்து விளையாடுகிறார்கள். உணர்ச்சியைக் கொட்டுகிறார்கள். மொத்தத்தில் இவற்றை யாரும் படிக்க வேண்டுமே என்று எண்ணுவதும் இல்லை.
இவை இலக்கியத் தரம் பெறவேண்டுமே எனச் சிந்திப்பதுமில்லை. எவரெல்லாம் எதோ செய்கிறார்கள்; நாம் இதையாவது செய்வோம் எனக் கிறுக்கிவிட்டு "கிறுக்கர்கள்" போல் இருக்கிறார்கள்.
அதாவது துக்ளக் ஆசிரியர் கூறியது போல் தமிழில் எதுவுமே எழுதத் தெரியாதவர்கள் புதுக் கவிதை எழுதுகிறார்கள்.
இன்று ஐயாயிரம் ரூபாவும்; 25 பேரை ஓரிடத்தில் கூட்டும் தகுதியும் இருந்தால் எவருமே கவிராயர்கள் ஆகிவிடலாம்.
நவீன இயந்திர யுகத்தில் அச்சு வேலைகள் மிக இலகுவாக்கப்பட்டதால் ; புற்றீசல் போல் பத்திரிகைகள் உருவாகியுள்ளன.
அவற்றில் இடத்தை நிரப்ப ;இந்தப் "புதிசு" உதவுகிறது.புதிசை எழுதியவரும் அவர் சார்ந்தோரும் வாங்குவதால் சில பிரதிகள் விலைபோகும்.
இது வெறும் கல்லாப்பெட்டி நிரப்புபவருக்கும் ,கஸ்டமின்றிப் புகழ் தேடுபவருக்கும் உள்ள உடன்படிக்கையே!!! இதனால் இலக்கிய உலகுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால் இவர்கள் ஒன்று புரிய வேண்டும்.மரபுக்கவிதை ஆர்றலுக்குத் தடை என்று; இந்த இலகு வழியைத் தொடர்ந்து நாடாமல்; மரபுக்கவிதைகளையும் படித்து அதில் மரபை மாத்திரமன்றி ஏனைய கவித்துவத்தின் அழகியல் அம்சங்களையும் அறிந்து திருந்த வேண்டும்.
இன்றைய வெகுசனப் பத்திரிகைகளில் வரும் பல கவிதை விமர்சனங்களைச் செய்வது முழுக்க முழுக்க கவிஞர் எனத் தன்னைத் தானே அடையாளம் காட்டிய ஒருவராக இருப்பது வேதனை.
ஒரு திரைப் படத்தை இன்னுமொரு இயக்குநர்;விமர்சிப்பதில்லை.
ஒரு பாடகனை இன்னுமொரு பாடகன் விமர்சிப்பதில்லை; ஒரு கதாசிரியரை இன்னுமொரு கதாசிரியர் விமர்சிப்பதில்லை.....
ஆனால் இந்த கவிதை மாத்திரம் இன்னுமொரு கவிஞரென்பவரால் அதாவது அதே கூட்டத்தையோ;குழுவையோ சேர்ந்தவரால் விமர்சிக்கப் படுவது;
மிக வினசமானதுடன்;நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது;
ஆளுக்கு ஆள் முதுகில் தட்ட வகை செய்கிறது.
"இந்தியா ருடே" யில் பல தடவை பார்த்துள்ளேன்; மாறி மாறி முதுகில் தட்டியதை!!!!இந்த நவீன கவிதையுருவை;இன்னுமொரு இந்த நவீனத்தை எழுதுபவரால் தான் புரிந்து கொள்ளமுடியும்;உணரமுடியும் என்பது வேடிக்கையாக உள்ளது;இவர்களின் நம்பகத் தன்மை அடிபட்டுப் போகிறது.
அதிலும் தமிழ்க் கவியுலகினர் "கூழுக்குப் பாடுவதில்" ஒப்பாரும்;மிக்காருமற்றவர்கள்.
கம்பனையும்,பாரதியையும்;கண்ணதாசனையும்.....சாதாரண அறிவு படைத்தோர்;உணர்ந்தார்கள்;விமர்சித்தார்கள். ஆனால் இந்தபுதுக் கவிராயர்களை;என்னுமொரு கவிராயர் தான் விமர்சிக்க முடியும் ;உணரமுடியுமென்பது.....வேடிக்கை மிக்கது.
ஒன்று என்றும் உண்மை. "நிழலின் அருமை வெய்யிலில் போல்" இப் புதிது ,வந்த பின்
"OLD IS GOLD " என கம்பனையும்;பாரதியையும் தேடி ஓட வைத்துள்ளது.
இன்று புதுக்கவியுலகு ஆரம்பம் போல் இல்லை.ஓர் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.கண்ணதாசன் கூறியது போல்"எழுத முன் படியுங்கள்".
இதுவே புதுக் கவிராயர்கள் தெரிய வேண்டியது.
குறிப்பு: இக் கட்டுரை "பாரிஸ் கல்வி நிலைய 7ம் ஆண்டு மலரில்; 31- 08- 1993 வெளிவந்தது.பலர் தடி;கம்பு ஏன் துப்பாக்கியுடன் கூட ஓடிவரலாம்.உனக்கென்ன தெரியுமென...ஆனால் பொறுமையாக எனக்குப் புரிய வைக்கவும்.
Labels: poems