Saturday, June 30, 2007
இரவு, மணி 8.00, 8.02, 8.05,…..8.20 நிறைந்து விட்டது.
"புனித மைக்கல் தேவாலயம்-Normandy யின் கட்டடக் கலையின் இரத்தினம்"
அங்கே ஒரு சிறப்பு இம்மலையைச் சுற்றியுள்ள கடல் வற்றி நிரம்புவது. இதை முன்கூட்டியே கணித்து அறிவித்தல் வைத்துள்ளார்கள்.
அன்று மாலை 7.30 மணிக்கு எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
மலையருகே இரவு 8.00 மணிக்குத் தொடங்கியதைப் படமாக்கி
உள்ளேன்।
இந்த கடற்பெருக்கு ஒரு குதிரையின் வேகத்தை ஒத்ததாம்.
தரவையாக செம்மறி ஆடுகள் மேய்ந்த இடம் , நீர்க்காடாவது
சில மணித் துளியில் வியப்பான காட்சி॥
நான் ஒரு இடத்தில் நின்று படம் பிடிக்க முடியாமல்..
கரை நோக்கி மேலேறும் படியானது।
முதற் படம் பிடித்த இடம் ,சில நிமிடத்தில் நீரால் நிறைந்தது.
வாகனத் தரிப்பிடம் முற்றாக நீரில் மூழ்குவதால், மாலை 7 மணிக்கு முன் வண்டிகள் எடுத்துவிடவேண்டும்।
ஆச்சரியமும், ரம்மியமும் மிக்க காட்சி॥
கோடை காலமானதால் சூரியன் ஒத்துழைப்பு, படம் பிடிக்க
நிறைய இருந்தது.
இங்கிலாந்தில் குண்டுத் தாக்கல்
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.......என் எட்டு
நமக்கேன்ன விளையாடும் வயதா??? இதெல்லாம் வேண்டாம்..என்றாலும் மீள்
அழைப்பு...
சாதனை....என்னைப்போன்றவர்கள் வாழ்வதே சாதனையே!!!
என்னைப் பொறுத்தமட்டில் சாதனைக்கு வரைபிலக்கணம் புரியவில்லை।
நம் நாடுகளில் சொந்த முகவரியே இல்லாமல் தெருவிலே வாழ்ந்து , அதைப்
பற்றிய கவலையே இல்லாமல் மறைகிறார்களே!!!
அந்த மக்கள் சாதனையாளர்களே!
இல்லை இல்லை என அழுவதிலும் இருப்பதில் திருப்திப்படுவது சாதனையில்லையா?
இது எத்தனைபேரால் முடியும்.
அந்த வகையில் நான் அசட்டுச் சாதனையாளனே!
1)உயர் வகுப்புக்குப் போனபோது , ராக்கிங் - பகிடி வதை, அத்துடன் அதில் இருந்து தப்புவதானால் , மாணவர் அரங்க விவாத அரங்கில் பங்குபற்ற வேண்டும். விதியே என ஒப்புக் கொண்டேன். சமுதாய சீர்திருத்தத்துக்கு வன்முறையா? மென்முறையா?
தலைப்பு...எல்லோரும் பேசினார்கள்.எந்த முன் அனுபவமும் இல்லாமல் நானும் பேசினேன்.
பிள்ளை முலையைக் கடித்தால், தாய் தலையைக் கடிப்பதா? அவர்கள் நம் சகோதரர்கள் என அவர்களை அரவணைப்போம்... எனப் பேசினேன்.கைதட்டல் ,மாணவ மாணவிகள் மத்தியில்
அந்த முலை ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி..நடுவரே என்னைப் பாராட்டும் படி ஆகி..
தொடர்ந்து விவாத அரங்கம் , பட்டிமன்றம் என்றால் கூப்பிடு இவனை என்றாகி... மானிப்பாய் இந்துக் கல்லூரியில் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயம் உண்டு என வித்துவான் வேலன் நடுவராக இருக்கப் பேசி...தானத்தில் சிறந்தது, நிதானம் அது இவர் பேச்சில் உள்ளதெனப் பாராட்டப் பெற்றது. பின் எங்கள் அதிபரும் பாராட்டியது.
தொடர்ந்து அந்தப் பழக்கம் பாரிஸ் வரை கைகொடுத்து, பம்பாய் ஜெயஸ்ரீ , கானமூர்த்தி
போன்றோரின் கச்சேரிக்கு அறிமுக உரையாற்றுமளவுக்கு ,நான் ஆனது ...
2) படிப்பு இவ்வளவே என ஆனதும் வேலை தேடினேன். முதல் நேர்முகத் தேர்வு
வங்கி வேலைக்கு , தேர்வு முடிந்து வெளியே வந்ததும், வேலை கிடைக்காது என
உடன் வந்த நண்பர்களிடம் அடித்துக் கூறினேன்.எப்படி? இங்கிலாந்தின் தலைப்பட்டனம் என்ன?,
அடுத்த வேலை நேர்முகத் தேர்வு.... பல கேள்விகளிடையே கடைசிக் கேள்வி..
என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்? நான் எள்ளளவும் எதிர் பாராக் கேள்வி॥ தயார் படுத்தாத கேள்வி...
அவருமோ 50 ரூபா போதுமா? என்றார். நானுமோ வந்தால் வருகுது போனால் போகுதென
எதிர்காலத்தில் சம்பள உயர்வு வேலைக்கும், வாழ்க்கைத் தேவைக்கும் தகுந்த வகையில்
இருக்குமானால் தயார் என்றேன். அவர் சிரித்தார்...
நான் சாதித்துவிட்டேன் இல்லையா???
3) 83 இனக்கலவரம்... நான் வேலை செய்த இடத்தில் யாழ் தமிழரைத் தேடி அடித்தார்கள்।
அப்போ நான் தாடி வைத்திருந்தேன்। நான் புலியென சந்தேகம் அவர்களுக்கு
பலர் குறிப்பிட்ட வீட்டில் தேடியுள்ளார்கள்..என்பதை பின்பு அறிந்தேன்.
4) கலவரம், வேலையையும் கொண்டு போய் விட்டது. மீண்டும் அதே இடம் சென்று வேலை
செய்யும் உத்தேசமில்லை. எதிர் காலம் கண்முன்னே இருண்டு போனது.அடுத்த கட்டம் என்ன? நடுத்தரக் குடும்பத்துக்கேயுரிய பணத் தட்டுப்பாடு. பல உறவினர்கள் வெளிநாடுகளில்
இருந்தும் எவரும் உதவவரவில்லை.விலாசத்தையே தரவில்லை. ( காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி). ஒரு சில நண்பர்கள் உதவி வெளிநாடு வந்தேன்.
இதை என் உறவினர்கள் பெரிய சாதனையாகத்தான் கருதுகிறார்கள்.
5) வெளிநாடு வந்த இரண்டு வருடத்தில் அண்ணன், அத்தான் என குடும்பத்தைத் தாங்கிய தூண்களையும் , என்னைப் பெற்றவளையும் இழந்து ,அவர்கள் கட்டையில் கூட விழிக்க போக விசா அற்ற நிலையில், இந்த வெளிநாட்டில் இருக்கிறேன்.என்பது தவிர எதுவுமே இல்லாநிலையில் அக்காகுடும்பம்,அண்ணன் குடும்பம், இளைய சகோதரி திருமணம், இளைய சகோதரர் எதிர்காலம் எனபவற்றை, சீர்செய்து அக்கா ,அண்ணன் பிள்ளைகளுக்கும்
வாழ்க்கைக்கு வழிகாட்டி,துணைதேடி....என் பதிவு முகப்புப் படத்தில் இருப்போர், பாட்டா எனக் கூப்பிட ,கவலையையும்,கண்ணீரையும் துடைத்து விட்டு... பல ஈழத்து அன்பர்கள்
போல் கருமமே கண்ணாகியது....பலர் இதைச் சாதனையாகத் தான் எனக்குப் பின்னால் பேசுகிறார்கள்.
6) இதுவரையில் மது, புகை பழக்கம் மருந்துக்குக் கூட இல்லை. அதைத் பல தவிர்க்க முடியாத இக்கட்டான சூழலிலும் ,தவிர்த்துக் கடைப்பிடிப்பது.இதையே என் குடும்பத்து இளையவர்களுக்கும் போதித்து, இது வரை அவர்கள் அதற்கு ஆசைப்படாமல் வளர்த்தது.
7)மற்றவர்கள் பாராட்டும்படி, சுவையாகச் சமைப்பது, சில பிரஞ்சு உணவு வகைகள்
உட்பட.( சுவையாக உண்ணும் படி சமைப்பதைக் குறிப்பிடுகிறேன்)
8) கணணி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், ஐயா,தம்பி,ராசா எனக் கெஞ்சிக் கூத்தாடி
இந்தத் தளத்தில் எழுதி, நாலு பேர் யோகன் உங்கள் கருத்து நன்று எனப் பின்னூட்டமிடுகிறார்கள். அவர்கள் முகம் தெரியாது. ஆனால் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஊக்கப்படுத்துகிறார்கள். ஒரு கணணித் தற்குறியின் இந்தத் தளம் சாதனையில்லையா?
என் உறவினர்கள் அதிசயப்படுகிறார்கள்.
இதை நீங்கள் சாதனையாகக் கருதலாம், பூ... எனலாம்।
ஆனால் இது இந்த ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.
****** இது என் பலகணியில் உள்ள பூக்களின் படம்
Saturday, June 23, 2007
காலத்தால் புகழழியாத் தமிழ்க் கவியரசர்
எங்கள் கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினமின்று!
சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து தமிழ்பேசும் கிராமமெங்கும்
மங்காப் புகழ் பெற்ற எங்கள் கவிஞர்।
24-06-1927 , முத்தையா எனும் இயற்பெயருடன் பிறந்து
வெறும் 8 வகுப்பே படித்து, உலக அறிஞர்கள் போற்ற
வாழ்ந்தவர்.
அவரை அறியாத தமிழர், அவருக்கு முன் பிறந்தோரே!!
அந்தக் கவிமாமணியின் சிந்தையில் உதித்த தேன் இசைப்
பாடல்கள் சிலவற்றை அவர் நினைவாக உங்களுடன்
பகிர்வதில் மகிழ்கிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென இவற்றை
Youtube ல் பதிவிறக்க வசதி செய்த தழிழ் ஆர்வலருக்கு
இதய பூர்வமான நன்றி!
1- அச்சம் என்பது மடமையடா!!
2-கல்வியா? செல்வமா? வீரமா?
3-மனைவியமைவதெல்லாம் இறைவன் ....
4-ஆறோடும் மண்ணிலேங்கும்......
5- போனால் போகட்டும் போடா!!!
6- கடவுள் ஏன்? கல்லானார்....
7- படித்தறியா அறிவுபெற்றோர்....
8-ஒன்று எங்கள் ஜாதியே....
9-பேசுவது கிளியா?
10- ஒரு நாள் போதுமா....
Friday, June 22, 2007
மிருகாபிமானம்…இதுதானோ ?
அன்பை மனிதாபிமானம் என்கிறோம்.
அந்த மனிதாபிமானம் உலகில் குறைந்து வருகிறதெனும் கூச்சலுக்குக் குறைவில்லை.
ஆனால் எதிர் மாறாக மிருகங்களுள் அபிமானமும், அன்பும்
ஓங்குதோ என ஐயம் ஏற்படவைக்கின்றன தொடர்ந்து வரும்
காட்சிகள்.
1- ஆகா...இந்த வாத்துக்குஞ்சு..எப்படி மீன்களுக்கு ஊட்டுதெனப் பாருங்கள்.
2- பூனை அணிலுக்கு எதிரி...இது தான் நாம் அறிந்தது.
இந்தத் தாய்ப் பூனையைப் பார்ப்போமா???
3- இந்த சிறுத்தை இக்குரங்குக் குட்டியின் தாயைக் கொன்ற
பின் செய்வதைப் பாருங்கள்.
4-நான், நீங்கள் கூட பூனை,காகத்தைக் கலைப்பதையே கண்டிருப்பீர்கள்.
இதைப் பாருங்கள்
ஜெகோவாவின் சாட்சிகள், பிரசாரத்துக்குத் தரும் புத்தகங்களில்
மானும் புலியும் அருகருகே நின்று நீரருந்தும் படங்கள் இருக்கும்.
இயற்கை நியதிக்கு விலக்காக இருக்கே!!! என ஆச்சரியப்படுவேன்.
ஆனால் நடந்துதான் விடுமோ???
இக் கலியுகத்தில்.
Tuesday, June 19, 2007
கருத்துக் கணிப்பும் ….பிரன்சுப் பொதுத் தேர்தலும்...
பிரான்சின் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் , அதிபர் தேர்தல் வெற்றிச் சூட்டுடன் முதற்சுற்று யூன் 10 லும், இரண்டாம் சுற்று
சென்ற 17 யூனிலும் நடைபெற்று , அரசியல் கருத்துக் கணிப்புக்க ளையும், ஆரூடங்களையும் பொய்யாக்கி நிறைவுக்கு வந்துள்ளது.
அதிபர் தேர்தலில் நிக்கோலா சார்கோசி (Nicolas SARKOZY) பெற்ற பெருவெற்றியை
வைத்தும் முதற் சுற்றையும் வைத்து சொன்ன கணிப்புகளும் ஆரூடங்களும் தவிடுபொடியாகின.
அதற்கேதுவாக முதற்சுற்றில் 450 இடங்களில் முதன்மையாகவும்
வந்தார்கள். ஆனாலும் பிரான்ஸ் வாக்காளர்கள் மிருக பலம் கொடுக்காமல், நல்லதொரு எதிர்க்கட்சியும் இருக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்து, ஆரூடங்களையும் பொய்பித்து விட்டார்கள்.
ஊழல் குற்றத்திற்காக தண்டனைபெற்று மறியலில் இருந்து, விடுதலையானவருக்கு, அதிபர், மந்திரி பதவி கொடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க முற்பட்டார். ஆனால் மக்கள் அமைதியாக வீட்டுக்கே அனுப்பிவிட்டார்கள். இவரெல்லாம் வெல்லுவார் எனவே பத்திரிகைகள் கூறின.
அதிபர் தேர்தலை அளவு கோலாகக் கொண்டதால், அதிபரின் வலது சாரிக் கூட்டு, மிக அதிக இடங்களைப் பிடிக்கும், எனக் கணக்குப் போட, நேரேதிராக எதிர் கட்சியான சோசலிசக் கட்சியும் அதன் கூட்டுக் கட்சிகளுமான இடது சாரிகள், எவருமே எதிர் பாராவண்ணம்...சென்ற 2002 ஆண்டுத் தேர்தலிலும் ,அதிக இடங்களைப் பெற்று, அதிபர் தேர்தலின் பின் துவண்டு போயிருந்த அவர்கள், மீளுயிர் பெற்றுள்ளார்கள். அவர்களே எதிர் பாராவெற்றி. ஆனால் அதிபர் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த
17 மில்லியன் வாக்கு சிதறாமல் கிடைத்துள்ளது.
இப்பொதுத் தேர்தலில் வரலாற்றில் இல்லாவண்ணம் முதல், இரண்டாம் சுற்றுக்களுக்கு 40 % வாக்களிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை அதிபர் தேர்தலுக்கு 85% வாக்களித்தார்கள். இதையும் மறக்கக் கூடாது.
நிக்கோலா சார்க்கோசி போன்ற சற்றுக் கடும்போக்கான அதிபர் ஒருவர் வேண்டுமென விரும்பிய வாக்காளர்கள், மிருகபலம் மிக்க பாராளுமன்றம் தேவையில்லையென நினைத்தது. வரவேற்கத் தக்கது.
ஏற்கனவே இருந்த இடங்களில் 60 இடத்தை ஆளும் அதிபர் கட்சி இழந்ததற்கு, அவர்கள் கொண்டுவர இருக்கும் விற்பனை வரி உயர்வே என இவர்கள் கட்சிச் சகாவும் முன்னாள் பிரதமருமான யோன் பியர் ரவரன் (Jean-Pierre RAFFARIN) கூறிவிட்டார். அதாவது இவர்கள் புதிய திட்டதில் ஒன்று சரிப்படாது. என்பதனை தேர்தல் சூட்டுடனே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள்.
அதிபர் கட்சி எதிர்பார்த்த பெரும்பான்மை இல்லாவிடிலும், அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. தாங்கள் கூறியவற்றை உடனே நடைமுறைப் படுத்த உள்ளோம். என சற்று தொங்கிய முகத்துடன் ஆட்சியமைக்க உள்ளார்கள்.
ஆளும் அதிபர் கட்சியின் பல முக்கிய புள்ளிகள் தோல்வியத் தழுவியுள்ளார்கள். அதிபர் தேர்தல் முடிந்து 1 ½ மாதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு. கருத்துக்கணிப்பால் கணக்கிட முடியாச் சரிவு.
அதிபரின் கட்சி ஆதரவாளர்களில் பலர் நல்ல பலமான எதிர்கட்சி நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது என இதை வரவேற்கிறார்கள்.
ஒரு வெளிநாட்டுவாசியாகிய நான்,இவர்கள் வெளிப்படையான இனவாதத்தை விரும்புவதில்லை. எனினும் பிரான்ஸ் வாக்காளர்கள் தீர்ப்பு, கணிப்புக்களைத் தாண்டி மிக மகிழ்வைத் தந்தது.
இத்தேர்தலில் மிகக் குறைந்த 28 வயதில் ஒரு உறுப்பினர் தேர்வாகியுள்ளார், மிகக் கூடிய வயது 78. அத்துடன் 108 பெண்களும் தெரிவாகியுள்ளார்கள்.
அத்துடன் 50 வருடங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து உறுப்பினராக இருந்த ஒரு குடும்பத்தினரையும், ஓரம் கட்டியுள்ளார்கள். இவர்கள் யாவரும் செய்தித்துறையின் கண்ணில் படாதவர்கள்.
இவ்வண்ணம் கருத்துக்கணிப்பின் கண்ணைக் கட்டி, பிரான்ஸ் தேர்தல், எந்த உயிரையும் காவு கொள்ளாமல் அமைதியாக நடந்ததே தெரியாமல், நிறைவுபெற்றுள்ளது.
நம் நாட்டவர்கள் படிக்க வேண்டியது.
ஆளும் அதிபர் வலது சாரிகள் (UMP) ,345 இடத்தையும், எதிர்க் கட்சியான இடது சாரிகள், 232 இடங்களையும் பெற்றுள்ளார்கள். இவர்கள் மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள் என நம்புவோம்.
படங்கள்:
1- பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோசி
2- பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெலன் (Francois FILLON)
3- முன்னாள் பிரதமர், தோல்வியுற்ற மந்திரி அலன் யூப்பே
4- சோசலிச கட்சி தலைவர் பிரான்சுவா ஒல்லாண்ட்( Francois HOLLANDE), இடது சாரிகள் சார்பில் அதிபர் தேர்தலின் நின்று தோற்ற செகலன் ரோயல் (Segolene ROYAL)
5- முன்னாள் பிரதமர், அதிபர் கட்சி முக்கிய புள்ளி யோன் பியர் ரவரன் ( jean pierre raffarin )
Saturday, June 09, 2007
புனித மைக்கல் தேவாலயம்-Normandy யின் கட்டடக் கலையின் இரத்தினம்
வட பிரான்சின் நோர்மண்டிப் பகுதியில் , Couesnon நதியின் முகத்துவாரத்துச் சதுப்பு நிலத்தில் உள்ள ஓர் கல்மலையே
இந்த புனித மைக்கல் தேவாலயம் அமைந்துள்ள “MONT St. MICHEL” ஆகும். இதன் அமைப்பு மற்றும் கட்டிய காலப்பகுதி
மற்றும் இம் மலையில் இதைக் கட்டிய விதம் போன்றவற்றால்
இதை மேற்கின் அதிசயமாக நோக்குகிறார்கள்.
கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
இம்மலைக்குச் செல்ல சிறு மணல் மேடு இருந்துள்ளது. அதுவும்
ஒரு நாளைக்கு இரு தடவை கடல் வெள்ளம் பெருகும் போது
மூடிவிடுவதாக இருந்துள்ளது. அப்போது ஒரு தீவுபோல் தான் இது காட்சிதரும்.
ஆரம்பகாலத்தில் இடுகாடாக இருந்த இந்த மலைப்பகுதி , AUBERT- BISHOP OF AVRANCHES ன் கனவில், புனித மைக்கேல் தோன்றி தனக்கொரு தேவாலயம் ,இம்மலையில் அமைக்கும்
படி கேட்டுக் கொண்டதால் 16-10-709ல் ஒரு சிறிய தேவாலயமாகக் கட்டப்பட்டது.
பின் நோர்மண்டி மன்னர் விருப்பப்படி 966ல் , மதகுருக்களின்
மேற்பார்வையில் றோமபாணி தேவாலயம் எழுப்பப்பட்டது.
11,12,13 ம் நூற்றாண்டுகளின் இத் தேவாலயம் பெருப்பிக்கப்பட்டு
பல வசதிகளும் செய்யப்பட்டது.
14ம் நூற்றாண்டு இதைச் சுற்றி இராணுவப் பாதுகாப்புக்குரிய கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டது.
சுமார் ஆயிரம் வருடங்களாக மக்கள் பாதயாத்திரையாக இவ்வாலயம் வருகிறார்கள். புனித மைக்கல் அருள் நோக்கி வரும் இந்த யாத்திரையை சொர்க்கத்தின் பாதை என வர்ணிப்பர்.
19ம் நூற்றாண்டுப் பிரன்ஸ்சுப் புரட்சியின் போது, இதன் சிலபகுதிகள் சிறைக்கூடமாக மாற்றினர்.
1966ல் ,இவ்வாலயத்தின் 1000 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் போது, கிருஸ்தவக் குருக்களின்
பயிற்சி, தியானக் கூடமாக ஆக்கப்பட்டு இன்றுவரை செயல்படுகிறது.
2001ல் இருந்து ஜெருசலேமின் குருமடத்தினரால் இறைவழிபாட்டுப் பொறுப்பேற்கப்பட்டு தினமும் பூசை நடை பெறுகிறது. ஏனைய நேரங்களில் கட்டணம் அறவிட்டு காட்சியகமாகச் செயல்படுகிறது.
இம்மலையின் தென்பகுதி சிறு குடியுருப்பில், தற்போது 50 பேர்
பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்களாக இருக்கிறார்கள்.
1979ல் யுனஸ்கோ பாதுகாக்க வேண்டிய உலகின் உன்னதமாகப் பிடகடனப்படுத்தியுள்ளது.
இதனைப் பார்க்க 3 தடவை சென்ற போதும், 85/87ல் சென்ற போது பிரான்சில் என் ஆரம்பகாலமாதலால், இது பற்றி மிக அறிய முடியவில்லை.
பின் தொலைக்காட்சியிலும், இப்போ நேரிலும் பார்த்த போது
பிரமித்தேன்.
தஞ்சைப் பெரிய கோவில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்
தியது.
அதைவிட இது என்னை வியக்கவைத்தது. காரணம் அது சம தளத்தில் கட்டப்பட்டது. இதுவோ ஒரு சிறுமலை சுமார் 300 மீட்டர் உயரம்... கடலுள்.....சிலபகுதி மிகச் செங்குத்தானது. இலங்கையில் சிகிரியாக் குன்றில் பழைய கட்டிடங்கள் அழியாதிருந்தால் இப்படி இருக்குமோ?
மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இக்கட்டிடம்.
நமது எத்தனையோ பழைமையான , வியத்தகு கலைகள், சாதனைகள் அழிய விடுகிறோம்.
இவர்கள் இன்றும் திருத்தம் செய்து பேணுகிறார்கள். பழைமையின் பெருமையை உணர்ந்து போற்றுவது மனதுக்கு
இதமாக உள்ளது.
இம்மலையைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலப்பரப்பு, கடல், ஆறு இரண்டும் கொண்டுவந்து சேர்த்த வண்டல் மண் நிறைந்த ஆபத்தான அசையும் சேற்றால் ஆன புதைகுழிகளையுடையது.
மிகத் தேர்ந்த அனுபவம் மிக்க வழிகாட்டிகளுடன் கடல் வற்றி வடிந்திருக்கும் போது நடந்து செல்லலாம்.
இப்பகுதியில் குதிரை வளர்ப்போர் ,தங்கள் குதிரைக்குக் கால்பலத்துக்காக இச்சதுப்புநிலத்தில் நடைபயில்வார்கள்.தரைப்பகுதியின் புல்வளத்தை ஆடுவளர்ப்போர்
பயன்படுத்துகிறார்கள்.
கடல்,மலை, பழைமைமிக்க கட்டிடக்கலை அத்துடன் இறைஇல்லம் என எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற சுற்றுலாத்
தலமானபடியால்....
உலகம் பூராகவும் இருந்து வருடம் 3 மில்லியன் மக்கள் வந்து பார்த்து ரசிக்கிறார்கள்
குறிப்பாக தினமும் இருதரம் வற்றி நிரம்பும், இம்மலையைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்பு ஆச்சரியமாக இருக்கும். தரவையாகக் கிடந்த நிலப்பரப்பு சில நிமிடங்களில் நீரால் நிரம்புவது பிரமிப்புடன் பார்த்துக் களிக்கக் கூடியது.
இத்தடவை பல இந்தியப் பயணிகளையும் காணக்கூடியதாக இருந்தது.
அங்கே ,நான் எடுத்த படங்களில் சில.......
(புனித மைக்கல் சிலை, பறவைப் பார்வைப் படம் எனதல்ல!இணையத்தில் பிரதி செய்தது.)