முன்னாள் தென் ஆபிரிக்க அதிபர் திரு. நெல்சன் மன்டெலாவுக்கு (Nelson MANDELA- 89); பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் 2.7 மீட்டர் உயரச் சிலை ; நேற்று 29-08- 2007 அன்று பிரித்தானியப் பிரதமர் கோர்டொன் பிறவுண்(Gordon BROWN); லண்டன் நகரபிதா கென் லிவிங்ஸ்ரோன்(Ken LIVINGSTONE); நெல்சன் மன்டெலா முன் திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்ரன் சர்சில்(Winston CHURCHILL); முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்(Abraham LINCOLN) சிலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.இச் சிலை இயன் வோல்ரஸ்(Ian WALTERS) என்னும் சிற்பியால் உருவாக்கப்பட்டது.இதை ஒட்டி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில்; பிரித்தானிய பிரதமர் "எமது தலைமுறையில் மிகப் புகழ்மிக்க ;மிகுந்த மனத்தைரியம் மிக்க பெருந்தலைவர் எனப் புகழ்ந்தார்.
இவ் விழாவில் பெருந்திரளான நிறப் பாகுபாட்டுக்கெதிரான போராடும் மக்கள் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்
மனிதன் தனக்கு உதவியாக வேலைகள் செய்யக் காலாகாலமாக மிருகங்களைப் பழக்கியுள்ளான். இந்தக் குரங்குகளை பொதுவாக வேடிக்கை காட்டவே நம் நாடுகளில் பழக்கியுள்ளார்கள். அப்படியே நான் பார்த்துள்ளேன்.
தாய்லாந்து , வியட்னாம் போன்ற நாடுகளில் ,இந்தக் குரங்குகள் தேங்காய் பறிக்க பழக்கப்பட்டு; நாளுக்கு 300 தேங்காய் பறிப்பதுடன்;மனிதனிலும் அதிவேகமாகப் பறிப்பதாகவும்; களைப் படைவதில்லை எனவும் கூறுகிறார்கள்.
சுமார் 2 மாதக் குட்டியாகப் பிடித்து;படிப்படியாகப் பயிற்சி கொடுத்து; இரு வருடப் பயிற்சியில் ,அது வேலைக்குத் தயாராகிறது.
இந்தக் குரங்குகள் இடையில் போட்டி வைத்து; பயிற்சியாளருக்குப் பணமுடியும் அக் கிராமங்களில் வழங்குகிறார்கள்.
பயிற்றப்பட்ட குரங்கு ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்பனை செய்கிறார்கள்.
தென்னந்தோப்பு சொந்தக்காரர்கள் இவற்றை வாங்கிப் பயனடைகிறார்கள்.
இதைத் தொலைக்காட்சியில் பார்த்த பின் இணையத்தில் தேடிய போது யூருயூப்பில் கிடைத்ததைப் பகிர்கிறேன்.
உங்களில் பலருக்கு இவரைத் தெரிந்திருக்கலாம். பாகிஸ்தானின் குவாலி(Qawwali) இசைப்பாடல் மூலம் உலகம் புகழ்ந்த நஸ்ரத் பேத் அலிகான்(Nusrat Fateh Ali Khan).
13-10-1948 ல் பாகிஸ்தானிப் பஞ்சாப்பில் பிறந்தவர். தன் குடும்பத்தினர் இசைக்கும் இசை வடிவான இந்த 600 வருடப் பழமை வாய்ந்த குவாலி இசையை, தந்தையிடம் கற்றுத் தேறி ,தந்தையின் மறைவின் பின் குழுவைத் தலைமை தாங்கி தான் மறையும் வரை; அதற்கு உலக அரங்கமெங்கும் புகழ் கூட்டிச் சென்றவர்.
இவர் குழுவில் சுமார் 11 பேர் உள்ளனர். யாவரும் உறவினரே...பலர் பின்குரலும்..கைத் தாளம் போடுபவர்களாகவுமே உள்ளார்கள்.
இவர் உருது,பஞ்சாபி,இந்தி மொழிகளில் பாடி மகிழ்வித்தார். பல மேலைத் தேச இசை வல்லுனர்களுடன் சேர்ந்திசைத்து, சுமார் 125 இசைஅல்பங்கள் வெளியிட்டு குவாலி இசையுலகில் அதிக அல்பம் வெளியிட்டவர் எனும் கின்னஸ் சாதனை படைத்தவர்.
DEAD MAN WALKING,THE LAST TEMPTATION OF CHRIST,NATURAL BORN KILLERS போன்ற ஹாலிவூட் படங்களுக்கு இசையமைத்தவர்.
பிரான்சில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 1997 ல் பாரிசில் பெரிய மண்டபத்தில் இவருக்கு 5 நாட்கள் மாலை 8.30 மணி நிகழ்ச்சிக்கொதுக்கியிருந்தது. குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன் சிறுநீரக மாற்றத்துக்காக அமெரிக்கா செல்லும் வழியில் ,இங்கிலாந்தில் 16-08-1997 ல் மாரடைப்பினால் இறையெய்தினார். இவரது இசையை நேரடியாகக் கேட்க நான் ஆவலாக 1997ல் நுளைவுச் சீட்டுக்குப் பதிவு செய்திருந்தும்,கைகூடவில்லை. ஆனால் இவர் இறையெய்திய போது ,லண்டனில் இருந்தேன். அப்போது இவருக்கு மரியாதை செய்ய தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியாக ,லண்டனில் நடந்த கச்சேரி ஒன்று போட்டது.
அதில் இந்த ‘மஸ்து, மஸ்து’ என்ற பாடல் மிகப் பிரபலமாக வரவேற்பைப் பெற்றது. இவர் இசையை நான் மொழி புரியாவிடிலும் மிகரசிப்பேன். இசைத்தட்டுக்கள், ஒலி ஒளி நாடாவிலும் வைத்துள்ளேன். இன்றும் இவர் கச்சேரி நேரே பார்க்கக் கிடைக்கவில்லை, எனும் கவலை எனக்குண்டு. அவர் மறைந்து 10 வருடமாகிறது. அவரை நினைத்தேன், உங்களுடன் பகிர்கிறேன்.
இலங்கையில் என் இளமைக்காலத் ; தேர்தல் காலம், திருவிழாக் காலம் போல் தான்!
ஊர்வலம்;ஒலிபெருக்கி; தோரணம்;கொடி ;கும்பம்...என அட்டகாசமாகத் தான் இருக்கும்.
தேர்தற் காலத்தில் மாத்திரம் பத்திரிகை வாங்குவோரும் உண்டு; சனசமூக நிலைய; வாசிகசாலைப் பத்திரிகைகள் இரவு தவிர ஏனைய நேரங்களில் , பலர் கைகளில் தவழும்...அப்படி ஆர்வமாக தேர்தல் செய்தி படித்தறிவார்கள்.
தேர்தல் அன்று ...முடிவுகள் அறிய மக்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது. அன்றைய நாட்களில் வானொலி ஒன்றே உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் சாதனமாக இருந்தது.
வானொலியுள்ள வீடுகளில் அன்று இரவு....சிவராத்திரியே!!!
சில வானொலியுள்ள வீடுகளின் உறவினர்கள் தாம் இரவு முடிவு கேட்க வருவதாக முன்கூட்டியே "இட ஒதுக்கீடு" செய்வது முண்டு. அன்றைய இரவு வானொலியைச் சுற்றி சிறிசு,பெரிசெல்லாம்....கூட்டமாகிவிடுவார்கள்.
நள்ளிரவுக்குமேல் தூக்கம் கலைக்கவும்; அதிகாலைப் புத்துணர்வுக்கும் தேனீர் உபசரிப்புக்களும் உண்டு.
சில பெரியவர்கள் இரவுச் சாப்பாட்டின் பின் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு நள்ளிரவின் பின் விழித்தே முடிவறியக் காத்திருப்பார்கள்.
அவர்கள் அனுபவத்தில் முடிவுகள் எப்படியும் நள்ளிரவு தாண்டியே வெளிவரும் என்பதை அறிந்தவர்கள்.
தேர்தல் முடிவை விட இரவிரவாக ஒலிபரப்பும் , திரைப்படப்பாடல்களைக் கேட்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.
சில நல்ல பாடல்களை அறிவிப்பாளர்களும், அந்த இரவு 2 ,3 தரம் போட்டுச் சந்தோசப் படுத்துவார்கள். ரெப்ரெக்கோட்டர் இல்லாத அந்தக் காலத்தில் பிடித்த பாடலை சில மணியில் மீண்டும் கேட்பதென்பது, குதூகலமான விடயம்.
அன்றைய அறிவிப்பாளர்கள்;தயாரிப்பாளர்கள் கூட இது தேர்தல் முடிவு அறிவிப்புத் தானே என ஏனோதானோ என அந்த இரவைக் கரைய விடாமல்; "விரும்பிக் கேட்டவை" நிகழ்ச்சிக்கு நேயர்கள் கேட்டெழுதிய பாடல்களையே தொகுத்துப் ஒலிபரப்புவார்கள். முழு இரவும் இனிமையான பாடல்கள் வானலையில் தவழ்ந்துவரும்.
‘’ஆகாயப்பந்தலிலே, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள், நமது வெற்றியை நாளை’’ போன்ற பாடல்கள் ஒரே இரவில் மறு ஒலிபரப்பானதை மறக்கமுடியாது.
கிராமங்களில் மின்சாரமில்லாக்காலம்... வால்பு வானொலிகள்...பெரிய எவரெடி மின்கலங்களில் இயங்குபவை..
கடைகளில் இந்த வகை மின்கலங்கள்...தட்டுப்பாடு போல் காட்டி 2 ரூபா அதிகவிலை கூட்டி முதலாளிகள் விற்பார்கள். ‘’காற்றுள்ள போதே தூற்று’’...
அத்துடன் விரல் விட்டெண்ணக்கூடிய "டிரான்சிஸ்டர்" வானொலிகள்...இவை ரோச் பற்றியில் இயங்கக் கூடியவை.
அந்த இரவு தொடர்ந்து வானொலி இயங்குவதால்...ஏற்படும் மின்கலச் சக்திக் குறைபாட்டை நிவிர்த்திசெய்ய ஆபத்பாந்தவனாகக் கைவசம் உள்ளதே..இந்த வீட்டிலுள்ள இருட்டுக்கு வெளியே கொண்டு செல்ல உள்ள ரோச்லயிற்ரின் பற்றிகளே!!!
எந்தச் சந்தர்ப்பத்திலும் ரோச் பற்றியை வானொலிக்கு மாற்ற விடாத அப்பாக்கள், ஐயாக்கள் கூட,அன்று அனுமதிப்பார்கள். காரணம் அவர்களும்; முடிவறியக் காட்டும் ஆவலே!!!!!
இதே வேளை கிராமச் சனசமூக நிலையமும் களைகட்டிவிடும்; அங்குள்ள வானொலி இளைஞர்களால் சூழப்பட்டிருக்கும்.
நான் சனசமூக நிலைய வானொலியையே தேர்வேன்; வீட்டைவிட "சுதந்திரமாக " விமர்சனம் ,தர்க்கம்" வைக்க அதுதான் சிறந்த இடம்..
இப்படியாக அன்றைய தேர்தல் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது. தேர்தல் காலச் சிறு சச்சரவுகள் இருக்குமே தவிரக் கொலைகள் என்பது என்ன? என்று தெரியாத காலம்.
அது ஒரு பொற்காலம்...
இப்படியான காலக் கட்டத்தில் , நான் மலையகத்துக்கு வேலைக்குச் சென்ற போது பல மாவட்டங்களைச் சேர்ந்த பல வித தொழில் நிமித்தம் , வந்தவர்களுடன் சேர்ந்து பழகி,வாழும் பொன்னான, மறக்க முடியா வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்று விட்டு ஆசிரியராக வந்த ஒரு நண்பர்; தங்கள் கலாசாலை அனுபவத்தைக் கூறும் போது...
அவர் கலாசாலை சென்ற; முதல் நாள் விரிவுரைக்கு வந்த பேராசிரியர். மாணவ ஆசிரியர்களைப் பார்த்துக் கேட்டாராம்!...
"இரவு பூராக விழித்திருந்து..;தேர்தல் முடிவு கேட்பவர்கள் கையுயர்த்துங்கள் சுமார் 80% மாணவர்கள் கையுயர்த்தினார்களாம்.
அவர் மீண்டும் கேட்டாராம்;;;மிகுதி 20% யையும் பார்த்து...நீங்கள் எவருமே சிறிதளவும் தேர்தல் முடிவில் ஆர்வம் காட்டுவதில்லையா????
அப்போது ஒரு 15% மாணவர்கள்...விரும்பியும் விரும்பாமலும் கையைத் தூக்கினார்களாம். அதன் பின் அந்தப் பேராசிரியர் கூறிய கூற்றே...இப் பதிவின் தலைப்பு.
அப் பேராசிரியர் இது தவிர வேறு எந்த விமர்சனமும் இது விடயமாக செய்யாது, தொடர்ந்து விரிவுரை ஆற்றினாராம்.
இன்று தேர்தல்களின் நிலை மாறினாலும்;;; திரைப்படத்துக்கு முதல் நாள் முதற்காட்சி.. மழை வெய்யிலில் வரிசையில் சோறு தண்ணி இன்றிக் கிடந்து பார்ப்பவர்கள். ஹரி போட்டர்.. நள்ளிரவு 12 மணிக்கு வரிசையில் நின்று வாங்குபவர்கள்; பிளே ஸ்ரேசன் நள்ளிரவே வாங்கி உடைப்பவர்கள் போன்றோரை , அந்த விரிவுரையாளரின் கூற்றுடன் ஒப்பிடுவேன்....
சிலவிடயங்களில் இந்த அதீத ஈடுபாடெனும் கோமாளித் தனத்தை, இப்பேராசிரியரின் கூற்றை ஏற்றுத் தவிர்க்கிறேன்.
நமது தமிழ் இடத்துக்கிடம் எப்படியெல்லாம் பேசப்படுகிறது. சில இடங்களில் அவை புரிந்துகொள்ளப்படுவதும் இல்லை.
அதிலும் ஓரளவு தூய தமிழ் பேசினால், இவர் என்ன?? மொழி பேசுகிறார் என விழி பிதுங்கும் நிலையும் உண்டு. இந்தத் திரைப்படக் காட்சி நகைச்சுவையானாலும்,பேச்சுத் தமிழின் நிலையும், அரசியலின் போக்கும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
மிக ரசிக்கும் படி அனைவரும் நடித்துள்ளார்கள். பார்த்திருப்பீர்கள் மீண்டும் பாருங்கள்.....