Friday, August 03, 2007

இரவு 12 மணிக்கு உண்மையெனில்!...விடிந்தும் உண்மையே!!
இலங்கையில் என் இளமைக்காலத் ; தேர்தல் காலம், திருவிழாக் காலம் போல் தான்!

ஊர்வலம்;ஒலிபெருக்கி; தோரணம்;கொடி ;கும்பம்...என அட்டகாசமாகத் தான் இருக்கும்.

தேர்தற் காலத்தில் மாத்திரம் பத்திரிகை வாங்குவோரும் உண்டு; சனசமூக நிலைய; வாசிகசாலைப் பத்திரிகைகள் இரவு தவிர ஏனைய நேரங்களில் , பலர் கைகளில் தவழும்...அப்படி ஆர்வமாக தேர்தல் செய்தி படித்தறிவார்கள்.

தேர்தல் அன்று ...முடிவுகள் அறிய மக்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது.
அன்றைய நாட்களில் வானொலி ஒன்றே உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் சாதனமாக இருந்தது.

வானொலியுள்ள வீடுகளில் அன்று இரவு....சிவராத்திரியே!!!

சில வானொலியுள்ள வீடுகளின் உறவினர்கள் தாம் இரவு முடிவு கேட்க வருவதாக முன்கூட்டியே "இட ஒதுக்கீடு" செய்வது முண்டு.
அன்றைய இரவு வானொலியைச் சுற்றி சிறிசு,பெரிசெல்லாம்....கூட்டமாகிவிடுவார்கள்.

நள்ளிரவுக்குமேல் தூக்கம் கலைக்கவும்; அதிகாலைப் புத்துணர்வுக்கும் தேனீர் உபசரிப்புக்களும் உண்டு.

சில பெரியவர்கள் இரவுச் சாப்பாட்டின் பின் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு நள்ளிரவின் பின் விழித்தே முடிவறியக் காத்திருப்பார்கள்.

அவர்கள் அனுபவத்தில் முடிவுகள் எப்படியும் நள்ளிரவு தாண்டியே வெளிவரும் என்பதை அறிந்தவர்கள்.

தேர்தல் முடிவை விட இரவிரவாக ஒலிபரப்பும் , திரைப்படப்பாடல்களைக் கேட்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.

சில நல்ல பாடல்களை அறிவிப்பாளர்களும், அந்த இரவு 2 ,3 தரம் போட்டுச் சந்தோசப் படுத்துவார்கள். ரெப்ரெக்கோட்டர் இல்லாத அந்தக் காலத்தில் பிடித்த பாடலை சில மணியில் மீண்டும் கேட்பதென்பது, குதூகலமான விடயம்.

அன்றைய அறிவிப்பாளர்கள்;தயாரிப்பாளர்கள் கூட இது தேர்தல் முடிவு அறிவிப்புத் தானே என ஏனோதானோ என அந்த இரவைக் கரைய விடாமல்; "விரும்பிக் கேட்டவை" நிகழ்ச்சிக்கு நேயர்கள்
கேட்டெழுதிய பாடல்களையே தொகுத்துப் ஒலிபரப்புவார்கள்.
முழு இரவும் இனிமையான பாடல்கள் வானலையில் தவழ்ந்துவரும்.

‘’ஆகாயப்பந்தலிலே, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள், நமது வெற்றியை நாளை’’ போன்ற பாடல்கள் ஒரே இரவில் மறு ஒலிபரப்பானதை மறக்கமுடியாது.

கிராமங்களில் மின்சாரமில்லாக்காலம்... வால்பு வானொலிகள்...பெரிய எவரெடி மின்கலங்களில் இயங்குபவை..

கடைகளில் இந்த வகை மின்கலங்கள்...தட்டுப்பாடு போல் காட்டி 2 ரூபா அதிகவிலை கூட்டி முதலாளிகள் விற்பார்கள்.
‘’காற்றுள்ள போதே தூற்று’’...

அத்துடன் விரல் விட்டெண்ணக்கூடிய "டிரான்சிஸ்டர்" வானொலிகள்...இவை ரோச் பற்றியில் இயங்கக் கூடியவை.

அந்த இரவு தொடர்ந்து வானொலி இயங்குவதால்...ஏற்படும் மின்கலச் சக்திக் குறைபாட்டை நிவிர்த்திசெய்ய ஆபத்பாந்தவனாகக் கைவசம் உள்ளதே..இந்த வீட்டிலுள்ள இருட்டுக்கு வெளியே கொண்டு செல்ல உள்ள ரோச்லயிற்ரின் பற்றிகளே!!!

எந்தச் சந்தர்ப்பத்திலும் ரோச் பற்றியை வானொலிக்கு மாற்ற விடாத அப்பாக்கள், ஐயாக்கள் கூட,அன்று அனுமதிப்பார்கள்.
காரணம் அவர்களும்; முடிவறியக் காட்டும் ஆவலே!!!!!

இதே வேளை கிராமச் சனசமூக நிலையமும் களைகட்டிவிடும்; அங்குள்ள வானொலி இளைஞர்களால் சூழப்பட்டிருக்கும்.

நான் சனசமூக நிலைய வானொலியையே தேர்வேன்; வீட்டைவிட "சுதந்திரமாக " விமர்சனம் ,தர்க்கம்" வைக்க அதுதான் சிறந்த இடம்..

இப்படியாக அன்றைய தேர்தல் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது.
தேர்தல் காலச் சிறு சச்சரவுகள் இருக்குமே தவிரக் கொலைகள் என்பது என்ன? என்று தெரியாத காலம்.

அது ஒரு பொற்காலம்...

இப்படியான காலக் கட்டத்தில் , நான் மலையகத்துக்கு வேலைக்குச் சென்ற போது பல மாவட்டங்களைச் சேர்ந்த பல வித தொழில் நிமித்தம் , வந்தவர்களுடன் சேர்ந்து பழகி,வாழும் பொன்னான, மறக்க முடியா வாய்ப்புக் கிடைத்தது.

அப்போது மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்று விட்டு ஆசிரியராக வந்த ஒரு நண்பர்; தங்கள் கலாசாலை அனுபவத்தைக் கூறும் போது...

அவர் கலாசாலை சென்ற; முதல் நாள் விரிவுரைக்கு வந்த பேராசிரியர்.
மாணவ ஆசிரியர்களைப் பார்த்துக் கேட்டாராம்!...

"இரவு பூராக விழித்திருந்து..;தேர்தல் முடிவு கேட்பவர்கள் கையுயர்த்துங்கள்
சுமார் 80% மாணவர்கள் கையுயர்த்தினார்களாம்.

அவர் மீண்டும் கேட்டாராம்;;;மிகுதி 20% யையும் பார்த்து...நீங்கள் எவருமே சிறிதளவும் தேர்தல் முடிவில் ஆர்வம் காட்டுவதில்லையா????

அப்போது ஒரு 15% மாணவர்கள்...விரும்பியும் விரும்பாமலும் கையைத் தூக்கினார்களாம்.
அதன் பின் அந்தப் பேராசிரியர் கூறிய கூற்றே...இப் பதிவின் தலைப்பு.

அப் பேராசிரியர் இது தவிர வேறு எந்த விமர்சனமும் இது விடயமாக செய்யாது, தொடர்ந்து விரிவுரை ஆற்றினாராம்.

இன்று தேர்தல்களின் நிலை மாறினாலும்;;; திரைப்படத்துக்கு முதல் நாள் முதற்காட்சி.. மழை வெய்யிலில் வரிசையில் சோறு தண்ணி இன்றிக் கிடந்து பார்ப்பவர்கள்.


ஹரி போட்டர்.. நள்ளிரவு 12 மணிக்கு வரிசையில் நின்று வாங்குபவர்கள்; பிளே ஸ்ரேசன் நள்ளிரவே வாங்கி உடைப்பவர்கள்
போன்றோரை , அந்த விரிவுரையாளரின் கூற்றுடன் ஒப்பிடுவேன்....

சிலவிடயங்களில் இந்த அதீத ஈடுபாடெனும் கோமாளித் தனத்தை, இப்பேராசிரியரின் கூற்றை ஏற்றுத் தவிர்க்கிறேன்.

நீங்கள் எப்படி??


***படம்:என் வீட்டு மாடத்திற்கு வரும் நிலவு

12 comments:

தீவிரவாசகன் said...

அந்த நாள் ஞாபகம், அருமையான பதிவு, நன்றி யோகன்.

சின்னக்குட்டி said...

நல்லதொரு நினைவு மீட்டல் யோகன். தீடிரென்ற பாட்டு நிற்கும் . ஒரு சிறிய அமைதியின் பின் ஒரு முடிவு கிடைத்திருக்கு என்று சொல்வார்கள்

யோகன் இக்காலங்களில் மட்டும் விஷேசமாக எரியும் பெட்ரோல் மாக்ஸை மறந்து போனீங்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாசகன்!
பிடித்திருந்தால் மகிழ்வே!!!
நேரமொதுக்கி எழுதும் போது; சிலராவது "கண்டு "கொள்ளும் போது; வயதை மறந்து ஒரு குதூகலம் வருகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//திடீரென பாட்டு நிற்கும் . ஒரு சிறிய அமைதியின் பின் ஒரு முடிவு கிடைத்திருக்கு என்று சொல்வார்கள்

யோகன் இக்காலங்களில் மட்டும் விஷேசமாக எரியும் பெட்ரோல் மாக்ஸை மறந்து போனீங்கள் //

ஆம் சின்னக்குட்டியர்!!
இவையும் சுவையான அம்சங்களே!! மறந்து விட்டேன்.
சேர்க்க முயல்கிறேன்.

கானா பிரபா said...

நல்ல நினைவுகள், எனக்கும் இது வாய்த்தது. தேர்தல் நேரத்தில் ஒரு முறை "சுடரும் சூறாவளியும்" படம் காட்ட ஆரம்பித்தார்கள். 10 மணிக்கு ஆரம்பித்த படம், தேர்தல் முடிவுகளின் இடைவேளையோடு சேர்ந்து அடுத்த நாட் காலை தான் படம் முடிந்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
உங்கள் காலம் தொலைக்காட்சிக் காலம்;அது ஒரு வகையானது. மின்சாரக்காலம். நம்ம காலமோ வானொலி...
உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்படச் சந்தர்ப்பம் குறைவு.நீங்கள் மிகச் சிறுவராக இருந்திருக்கலாம்.

துளசி கோபால் said...

//ரோச் பற்றியில் //

புரியல்லை.

இது டார்ச் பேட்டரியா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா!
உங்கள் ஊகம் சரி...அதே அதே.
torchlight battery

ஜீவி said...

உங்களது இந்தப் பதிவைப் படிதததும்,
அன்றைய நிலையும், இன்றைய நிலையும் நினைவில் நிழலாடின.
ஒரு சோகம் தான் மனசைக் கப்பியது.

மாயா said...

எங்கட காலத்திலயும் கொஞ்சக்காலம் சைக்கிள் டைனமோவில தான் ரேடிறோகேட்பம் ( 1997 வரை )
பின் தொலைக்காட்சி வந்துவிட்டது

எனினும் உங்கள் பதிவை வாசிக்கும் போது அன்றைய நிலையும், இன்றைய நிலையும் ஞாபகத்திற்கு வந்தன
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜீவி!
உண்மை!! சற்றுச் சோகமே ...இந்த நாட்கள் திரும்பா!!!

த.அகிலன் said...

நல்ல பதிவு.சந்திரிகா பங்கேற்ற முதல் தோதலின் முடிவுகளை நானும் இப்படி கேட்டிருக்கிறேன்.(ஒரு பதிவிலும் இடையில் எழுதியிருப்பேன்.)ஆனால் அது பற்றிக் காலமுமல்ல தொலைக்காட்சிக்காலமுமல்ல டைனமோக்காலம்..