Friday, August 18, 2006
கற்பகதரு!
ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை;அதன் முழுப் பயன் கருதி "கற்பகதரு" என்பர். இப் போர்ச்சூழலிலும் ,பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி இணையச் சமுதாயமாகிய எமது இளைய தலைமுறையில்; அறியாதிருக்கும் சிலர் அறிய ;எனக்குத் தெரிந்ததை;அறிந்ததை;அனுபவித்தை, பகிர்வதே இப்பதிவின் நோக்கம்."கடகத்தின்" பின் இளையோர் மாத்திரமன்றி; நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட; அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும்;பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும்; எம் போன்றவர்களுக்கான ஓர் மீட்டலாகவும் இதைப் பதிவிடுகிறேன்.இதில் நான் தவறவிட்டவற்றைத் தெரிந்தோர் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.இம்மரத்தில் பெறும் உணவு; ஓலையின் பயன்;மரப்பகுதியின் பயன் என பிரித்துத் தரவுள்ளேன். இவை பற்றிப் பலர் தெரிந்திருக்கலாம்.உணவாக குருத்து; கள்; பனங்கட்டி;நுங்கு;பழம்;பூரான்;கிழங்கு என்பவற்றை உண்பர்.
குருத்து:- பனை தறிக்கும் போதோ;ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர்; இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.
கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள்; முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பநி அல்லது கருப்பனியெனவும்;தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பிடாதிறக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும்;இதைக் குடித்தால் வெறிக்கும்;அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.
பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம்;பனங்கருப்பட்டி;எனவும் கூறுவர். கருப்பநியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்க்கொள்ளும் மருந்துகளுக்கு; தேன் கிடைக்காத போது; இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம்.ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும்;செய்பாங்கிலும் பிரபலம்.
நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு.
பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும்.பசியும் அடங்கும்.
பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமைமாச் சேர்த்து; கொதிக்குமெண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும்;சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேச பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்து தட்டுத்தட்டாக வெட்டி மடித்து ஓலை உமலில் கட்டி; அடுப்படிப் பறனில் புகை படக்கட்டி வருடக்கணக்கில் பாதுகாத்து உண்ணும் பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் மிக அருமையாக இருக்கும்; இது காலை;மாலை உணவு.
சீக்காய்:- இது பனங்காயின் செங்காய்ப்பதம்; இதன் தோலைச் சீவி,மஞ்சள்சதைப் பகுதியை அரிந்து தட்டுத்தட்டாக சப்பிச்சாறையுறிஞ்சி விட்டு, தும்பைத் துப்புவார்கள்; இனிமையான மாலை ஆசைத் தீனி.
பூரான்:- பனம் விதை; கிழங்கிக்குப் பாத்தி போடும்போது; சில விதைகள்;முளைத்து வேர் பாத்தியூடு நிலத்துக்கோட முடியாதநிலையில்; அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அதைப் பிளந்து உண்ண நல்ல சுவையாக இருக்கும்; கிழங்கான விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் "சிதவல்" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும்.
ஒடியல்:- "நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்" என உவமிக்கப்பட்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் பச்சை ஒடியல் என்பர். இதை இடித்தரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை,சேர்த்துப் பிட்டவிப்பர்; கறியுடனோ;சீனி,சக்கரையுடனோ சாப்பிடலாம்.அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவு. அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு;கூழ் இதில் சைவக்கூழ்;மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள்.ஒடியல்மாவுடன் மிளகாய்;உள்ளி;மிளகு;புளி;உப்பு கரைசல்; உழுந்து,பயறு,மரவள்ளிக்கிழங்கு;பூசணிக்காய்;ஈரப்பலாக்காய்;
பலாக்கொட்டை;அவரைக்காய்;முல்லை;முடுட்டை; முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவது; தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு.இது சைவ உணவு உண்பவர்களுக்குத் தயாரிப்பது ,இத்துடன் மீன்;நண்டு,கணவாய்,இறால்;திருக்கை;மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது;மச்சக்கூழ்; இது மச்சப் பிரியர்களுக்கு; முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான்;மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர்.இது தடிமலுக்கு நல்ல கைவைத்தியம்; இதன் சமையல் குறிப்பைப் பின்பு பார்ப்போம்.
அவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் ;இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர்.
கிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்த கிழங்குத்துண்டுகளுடன் பச்சைமிளகாய்,உள்ளி,மிளகு;உப்பு;வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்குவது.;சேமிபாட்டை இலகுவாக்கி;சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும்,சுவையானதும் கூட.
புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு துப்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு காயவைப்பது. இதை நீலமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு; தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும்.பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதை இடித்த மாவுக்கு தேங்காய்த் துருவல்;சீனி;சர்க்கரை,பனங்கட்டி சேர்த்து ;சிறுவர்களுக்கும்;பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பல் பலமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதாகப் கேள்விப்பட்டேன்.
இவையே, நானறிந்த பனை உணவு வகைகள்; மேலும் இருக்கலாம். தெரிந்தோர் சொல்லவும்.அடுத்ததாக ஓலையின் பயனைப் பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
TEST
வாழ்த்துக்கள்.
// புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு துப்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு காயவைப்பது. இதை நீலமாகவும், //
நீளமாகவும் (எழுத்துத் சதி)
// விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் "சிதவல்" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும். //
சீந்தில் என்றும் சொல்வதாகவும் கேள்வி.
// இருக்கமாக // (எழுத்துத் சதி)
தொடருங்கள்.
வாயூறவைக்கும் பதிவு நன்றி.
....
பனையின் பயன்கள் பற்றி அறிவுமதி ஒரு அருமையான பாடல் இயற்றி... இசையுடன் கேட்டதாய் நினைவுண்டு.
வணக்கம் யோகன் ....கற்கபதரு என்று சொல்லப்படும் பனை தரும் பயன்கள் பற்றிய விரிவான பதிவுக்கு நன்றி .
பிரமாதம் அய்யா.
நாங்கள் ஈழ பகுதிகளை தொலைகாட்சிகளில் பார்க்கும் போது மனிதர்களை விட வெறுங்காடுகளையும் கற்பகதருகளையும் தான் அதிகம் பார்க்கிறோம்.
தாள் பிரதி எடுத்திருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்கிறேன் ஐயா.
பனை ஒரு கற்பகதருவே. பனையின் அனைத்துப் பகுதிகளும் பயன் தருகின்றன. பனையின் பல்வேறு பயன்களும் விக்கிபீடியாவில் உள்ளன. அக்கட்டுரையை விரிவாக்க நீங்களும் உதவலாமே.
அன்புடன் ஜெயபாலுக்கு; வரவுக்கும்; கருத்துப் பகிர்விக்கும் நன்றி!
பதிவிடுதல் ,புது அனுபவமாக இருப்பதால்; ஒவ்வொன்றையும் செய்யும் போது; சில தவறுகள் குறிப்பாக எழுத்துப் பிழையேற்பட்டுவிட்டது.இட்ட பதிவில் திருத்தம் செய்யும் முறை தெரியவில்லை. என் குரு மலைநாடர் உதவி கிட்டியதும் செய்வேன்.
நீலமாகவும் அல்ல அதை நீளமாக எனப் படிக்கவும்.
எங்கள் ஈழத்தில் வட்டாரவழக்கமாக; பல பல சொற்புழக்கம் ஒரே பொருளுக்குண்டு. இந்தப் பூரானை சில பகுதிகளில் குறிப்பாகத் தீவுப்பகுதிகளில் "தகன்" எனக் கூறுவார்கள். நான் குறிப்பிடும் "சிதவலை"(சரியான சொல்); சீந்தில் என உங்கள் பகுதியில் குறிப்பிடலாம்; ஈழத்தில் நான் கேள்விப்படவில்லை.சிதம்புவதால் "சிதவல்" என்கிறார்களோ! தெரியாது.
நீங்கள் கூழ் குடித்திருக்கிறீர்களா????
யோகன் பாரிஸ்
நன்றாயிருக்கு பதிவு.
எங்கட அடிவளவில நிறையப் பனைகள் இருந்தன.
நொங்குப் பதமான காலத்தில வீட்டில நிக்கிற நேரங்களில சத்தம் கேட்டா வளவுக்க ஓடுறது, அணில் கொந்திப் போட்ட நொங்கை எடுக்கத்தான். எனக்குக் கிடைச்சா தங்கச்சியோ, அவளுக்குக் கிடைச்சா நானோ 'அணிலேற விட்ட நாய் மாதிரி' அடுத்த நொங்குக்குக் காத்திருக்க வேணும்.
இருந்தாலும் எப்பவாவது ரெண்டு குலை இறக்கி ஆசைதீரக் குடிப்பதுண்டு.
பனம்பழக் கால்த்தில வளவு வேலியைப் பாதுகாக்கிறது கடினம். கிழம்பி வாசத்தில றோட்டால போற மாடுகள் வேலியை இடிச்சுப்பிரிச்சுக் கொண்டு வந்திடும்.
பனங்கிழங்கு கிண்டின பிறகு பாத்தியிலயிருந்து எல்லா பனங்கொட்டைகளையும் வீட்டை கொண்டந்துடுவம். பிறகு நேரம் கிடைக்கிற நேரம் ஒவ்வொண்டா கொத்துவோம் பூரானுக்காக. அனேகமா பத்தில ஒண்டுக்குள்ள நல்ல பூரான் வரும். அதுக்காக மிச்ச ஒன்பதிலயிருந்தும் தெறிக்கிற சிதிலத்தைப் பொறுக்கத்தான் வேணும்.
வீட்டு வளவில பனம்பாத்தி சரிவராது. கடற்கரைக் காணிகளிலதான் பாத்தி போடுவோம். பனம்பாத்தியை ஆடுகள் விடாது. ஆடுகளிட்ட இருந்து பாதுகாக்க ஆமணக்குப் பத்தைகளை வெட்டி பாத்திக்கு மேல போட்டுவிடுவோம். சிலவேளை முளைவிட்ட நிலையில் பாத்திகள் ஆடுகளின் தாக்குலுக்கு அளாகிவிடும். அதைக்கண்டால் எங்களுக்குக் கொண்டாட்டம்தான். ஒருத்தருக்கும் தெரியாமல் முளைவிட்ட பனங்கொட்டைகளிற் சிலவற்றைப் பதுக்கிவிடுவோம். ஆடுகளின் கணக்கில் அவற்றைக் காட்டினால் சரி.
பிறகு யாருக்கும் தெரியாமல் பதுக்கியவற்றில் பூரான் வெட்டிச்சாப்பிட வேண்டியதுதான்.
பனை....ஈழத்தில் மிகப் புகழான மரம். தெந்தமிழகத்தில் பரவலான மரம். பழுவேட்டரையரர் கொடி. காளிதாசன் சொன்ன "தாளீ பத்ரம்". இவைகள்தான் முதலில் நினைவில் வருபவை.
ஈழத்தோடு பனைக்குறிய தொடர்பு போல வேறெதுவும் சொல்ல முடியாது. மா பலா வாழை என்று முக்கனிகள் முடிந்து போனாலும் வாழையடி வாழை என்று வாழையே புகழானாலும் பனை அணைய செல்வச் சுரங்கம் காண்பதரிது.
ஓங்கி உலகளந்த உத்தனம் நிறத்தில் ஓங்கி நிற்கும் மரங்கள். மற்ற மரங்களெல்லாம் சலசலவெனும் பொழுது சடசடவெனும் மரம். பட்டியாகட்டும் பஞ்சாரமாகட்டும் கடைகளில் பலகாரம் கட்டும் பெட்டியாகட்டும் பனையின்றி முன்பு நடந்ததில்லை.
பதநீர் என் உள்ளம் கவர் குளுநீர். கேட்கத் திகட்டாத கானம் போல இது குடிக்கத் திகட்டாத பானம். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். அதுபோல கருப்பட்டி வாசத்துக்கு உருகார் ஒரு வாசத்துக்கும் உருகார்.
லேசாக நெகிழ்ந்த கருப்பட்டியைக் கையில் திரட்டி வாயில் உருட்டினால் அது நம்மை வேறெதும் தின்ன விடாது மருட்டும். அத்தனை சுவை.
பனங்கிழங்கு....சொல்லவும் வேண்டுமோ! சுட்டாலும் அவித்தாலும் சுவை கொடாது இரேன் இரேன் எனச் சொல்லி மகிழ்விக்கும் பேருணவு. அதில் துவையலும் ஈழத்தில் செய்வார்கள் எனக் கேள்வி. இன்று அந்தப் பக்குவமும் யோகன் ஐயாவால் தெரிந்தது. முயன்று பார்க்க வேண்டும். பெங்களூரில் நல்ல கிழங்கு கிடைப்பது மிகவும் அரிது. :-)
டிசே தமிழன்!
கருத்துப் பகிர்வுக்கு நன்றி!
என் இளமைக்காலத்தில் தாய்வழிப் பேத்தியார். பனம் பண்டப் பிரிகை!; "நல்ல சத்தடா சாப்பிடடா" என்பார், நானோ ரொம்பப் பிகு பண்ணுவேன். என் 25களில் அவர் இறந்தபின் அவரின் கைப்பக்குவத்துடன்; செய்து தர என் தாயாருக்குத் தெரியவில்லை. எனினும் சில பண்டங்கள் செய்து தருவார்.என் வாய்கூட ஊறவக்கும் நினைப்பு; பிகு பண்ணி என் பேத்தியார்; தீத்தி விட உண்ட பண்டங்களே! 2004 ஈழம் சென்ற போது ஆசைக்கு எல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன்.
யோகன் பாரிஸ்
சின்னக்குட்டியர்!
ம்; இவ்வளவுதானா! வடமராட்சிப் பனை விசயங்களைச் ;கடகத்தால கொட்டக் கூடாதா??? செல்வச் சன்னதிப் பனங்கட்டிக் குட்டான்களை மறந்துட்டியளோ???? அப்பு ;நான் மறக்கவில்லையண??? அப்பத்துக்கு நல்ல சோக்காயிருக்குமண??,பதிவு பெருத்துடுமென அதெல்லாம் பறயல!!!!
யோகன் பாரிஸ்
சமுத்ரா!
பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது.அத்துடன் எங்கள் பழைய வாழ்க்கையை மீட்டுப் பார்த்து இளைய தலைமுறையுடன் பகிரும் போது,நிறைவாகவிருக்கிறது. நீங்கள் கூறுவது உண்மை! எப்போதும் எங்கள் ஈழத்தில் மக்களைவிடப் பனைகூட; நியூசிலாந்தில் ஒருவருக்கு 21 செம்மறி ஆடு எனும் விகிதத்தில் இருப்பதால் செழிப்பாம். எம் மக்களின் செழிப்புக்கும் இது ஒரு காரணம்.
யோகன் பாரிஸ்
இங்கே எங்கதமிழ்ச்சங்கத்துலே ஒருக்கா, ஒரு பொடியன் 'பனை'மரம்
பாட்டுப் படிச்சது நினைவுக்கு வருது.
இப்பெல்லாம் 'நுங்கு' டின்னிலே அடைச்சு வர்றதைத்தான் திங்கவேண்டி இருக்கு. தாய்லாந்திலே இருந்து வர்றதுதான். ஆனா இதுவாச்சும் கிடைக்குதேங்கற திருப்திதான்.
வாயூறவைக்கும் பதிவு
கருப்பணிகருப்பணியையும் சேர்க்கலாம்
யோகன்
கருப்பணி பற்றி எழுதியுள்ளீர்கள்.
அதை இரண்டாம் முறையாக வாசித்த போதுதான் கவனித்தேன்.
பாணி என்ற ஒன்றும் உண்டல்லவா?
பாணிப்பனாட்டும் செய்வார்கள்.
"வணக்கத்துடன்" அனுபவப் பகிர்வுக்கும் நன்றி!
நுங்குக்குப் பால் சேர்த்துச் சாப்பிடலாமா?? புதியது எனக்கு??சுவைக்குக் குறையிருக்காது, என நினைக்கிறேன். உங்களுக்கு சிலோன்வீட்டம்மா தந்தது. நீங்கள் கொடுத்த பனம்பழத்தில் சுட்ட "பனங்காய்ப்பணியாரம்" என்பதே !என் அனுமானம். காரணம் "காலையில் நீங்க கொடுத்த பனம்பழத்தில் செய்ததாகக் கூறியுள்ளார்". பழகிப் பிரிவது துயரம்- உங்கள் உணர்வைப் புரிகிறேன். எல்லோர் வாழ்விலும் எத்தனை துயர் தரும் பிரிவு.
யோகன் பாரிஸ்
"வணக்கத்துடன்" அனுபவப் பகிர்வுக்கும் நன்றி!
நுங்குக்குப் பால் சேர்த்துச் சாப்பிடலாமா?? புதியது எனக்கு??சுவைக்குக் குறையிருக்காது, என நினைக்கிறேன். உங்களுக்கு சிலோன்வீட்டம்மா தந்தது. நீங்கள் கொடுத்த பனம்பழத்தில் சுட்ட "பனங்காய்ப்பணியாரம்" என்பதே !என் அனுமானம். காரணம் "காலையில் நீங்க கொடுத்த பனம்பழத்தில் செய்ததாகக் கூறியுள்ளார்". பழகிப் பிரிவது துயரம்- உங்கள் உணர்வைப் புரிகிறேன். எல்லோர் வாழ்விலும் எத்தனை துயர் தரும் பிரிவு.
யோகன் பாரிஸ்
அன்புக்குமரனுக்கு!
தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். விரைவில் இடவும்.
யோகன் பாரிஸ்
நல்ல பதிவு யோகன்!
உங்களின் "கற்பகதரு" படித்ததும் எனது கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நொங்கு சாப்பிடப் போன காலங்கள் நினைவுக்கு வருகின்றன், அந்த சமயங்களில் பனம்பழத்திற்க்குத் தான் பெரிய தட்டுப்பாடு ஏனின்றால் அந்த சீசனில் அனைத்து மரங்களும் குத்தகைக்கு விடப்பட்டு கள்ளு இறக்கப்படும், மிச்சம் இருப்பவைகளில் நொங்காகா இருக்கும் போதே எங்களால் வெட்டப்படும்,என்வே பனம்பழம் அரிது!
சாமி மரம்(மாவிடியான் சாமி) என்று 3 மரங்கள் உண்டு அம்மரங்களில் யாரும் ஏற மாட்டார்கள், எனவே அம் மரத்தில் மட்டுமே பனம்பழம் கிடைக்கும், அதற்க்கும் எங்களுக்குள் எவ்வளவு போட்டி நடக்கும் தெரியுமா..?
நன்றி யோகன்! திரும்பிப் பார்க்க வைத்தமைக்கு....
தொடர்ந்து எழுதவும்,
அன்புடன்...
சரவணன்.
kanags!
விக்கிமீடியா பார்த்தேன். பனங்சாராயம்;வினாகிரி ; கேள்விப்படவில்லை. தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்
துளசி அக்கா!
நீங்க கூட "டின் நுங்கா" சாப்பிடுறீங்க!; வரும் சித்திரைக்கு திருச்செந்தூர் போங்கோ! முருகனைக் கும்பிட்டதுமாச்சு, நுங்கு சாப்பிட்டதுமாச்சு; நம்ம நாடுதான் போரால போவது கஸ்டம்; உங்களுக்கு முடியுந்தானே!!நம்ம கடைக்காரங்க எல்லாம் கொண்டுவாராங்க! இதை ஏன் விட்டாங்க?
யோகன் பாரிஸ்
சந்திரவதனா!
இந்தப் பாணிப் பனாட்டுப் பற்றி;என் பேத்தியார் சொல்லியது ;ஞாபகம் வருகிறது. சாப்பிடவில்லை. உங்களுக்குச் சாப்பிட அனுபவம் இருந்தால் அது எப்படி? இருக்குமென விளக்கவும்.செய்முறை தெரிந்தால் கூறவும். கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்
வசந்தன்!
ஐயா; அப்படியே! ஊருக்குக் கூட்டிப் போய்விட்டீர்;45 வருசம் தள்ளி; யோசிக்கிறேன் அணில் கோதிய நுங்கு; நுங்கிறக்க ஐயண்ணனைக் கெஞ்சிக் கூட்டிவாறது; மாட்டுடன் பனம்பழத்துக்குப் போட்டி;பூரான் வெட்டுப் போது நாத்த சிதவல் உடம்பெல்லாம் சிதற குளிக்க ஓடுவது; விளக்கீட்டுக்கு மழை வெள்ளத்துடன் கிழங்குப் பாத்திக்கும் ஒரு பந்தம் கொழுத்தி வைப்பது;புழுக் கொடியல் காயப் போடும் போது ;காகம் கலைக்கிறேன்; பேர்வழியென அரைப் பதம் காஞ்சதை முறிச்சு சாரத்துக்கை ஒழிச்சுக் கொண்டோடிக் கூட்டாளிகளோடு பங்கு போடுவது.அதுக்கே ஒரு பதிவு போடலாம்; இனி ஒரு காலம் அது போல் வருமா???ம்
யோகன் பாரிஸ்
ராகவா!
நீவிர் சொல்லின் செல்வரே! எங்கள் பனைக்குப் பாவே பாடிவிட்டீர். இலக்கியத்திலும் இதற்கு இடம் போட்டுள்ளார்களா??தகவலுக்கு நன்றி;
நீங்க பதநீர்ப் பிரியரா? 2004 ல் திருச்செந்தூர் சென்ற போது; இதைக் கள் என என்மனைவியிடம் கூற; அதைப் பருகிக் கொண்டிருந்த காவி ஒருவர்; வாய்க்குக் குறுக்கே விரலை வைத்து; தவறு எனச் சுட்டி ,ஏதோ அபசாரவார்த்தை கூறியது போல் என்னை நோக்கி;பதநி என்றார்.
பனங்கிழக்கு சுட்டுச் சாப்பிடுவதை மறந்தே விட்டேன். அந்த வாசமே தனி. என் அத்தான் அவித்த கிழங்கைக் கூட தணலில போட்டு வாட்டியே சாப்பிடுவார்.
கட்டாயம் துவையல் செய்து சாப்பிடவும். 10 கிழங்குக்கு 5 பச்சைமிளகாய்;05 பல்லு உள்ளி;10 சின்ன வெங்காயம்;15 மிளகு; சுவைக்கு அளவான உப்பு; அப்பிடியே சற்று நருவல்,புருவலாக இடித்து;பசைப்பாகத்தில் எடுத்து உருட்டவும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்
யோகன்,
இப்பத்தான் நினைவுக்கு வருது. அந்தப் பாட்டுக்கூட 'பனக்காய் பணியாரமே'ன்னுதான்
ஆரம்பிக்கும்.
அருமையான, பயனுள்ள பதிவு அண்ணா
துளசி அக்கா!
என்ன "பனங்காப் பணியாரமே" என்றெல்லாம்; பாட்டெழுதுராங்களா,,,??காதலன் ;காதலியை இப்படி விளிக்கிறானா?,சரி ;இது " அழகான ராட்சகியிலும் பரவாயில்லை.
யோகன் பாரிஸ்
பனங்காயில் வண்டி செய்துவிட்ட அனுபவம் இருக்கா ?
பனம்பழம் கொஞ்சம் பூச்சி இல்லாமல் கீழே விழுந்தால் - உலகத்தில் இந்த சுவைக்கு இணையாக எதுவும் இல்லை என்பதுபோல் இருக்கும்...அருமையாக ஒரு வாசனையும் எழும்...
ஆகா...
நொங்கை - விரலைவிட்டு - டர்ர்ர்ர் என்று உறிஞ்சுவதில் என்ன சுகம்..
:)))
// Johan-Paris said...
ராகவா!
நீவிர் சொல்லின் செல்வரே! எங்கள் பனைக்குப் பாவே பாடிவிட்டீர். இலக்கியத்திலும் இதற்கு இடம் போட்டுள்ளார்களா??தகவலுக்கு நன்றி;
நீங்க பதநீர்ப் பிரியரா? 2004 ல் திருச்செந்தூர் சென்ற போது; இதைக் கள் என என்மனைவியிடம் கூற; அதைப் பருகிக் கொண்டிருந்த காவி ஒருவர்; வாய்க்குக் குறுக்கே விரலை வைத்து; தவறு எனச் சுட்டி ,ஏதோ அபசாரவார்த்தை கூறியது போல் என்னை நோக்கி;பதநி என்றார்.//
பின்னே பதநியைக் கள் என்றால்! நல்ல புதுப்பதநின்னா ரெண்டு மூனு செம்பு உள்ள போகும். அடடா! ம்ம்ம்...குடிச்சி எவ்வளவு நாளாச்சு....குளுகுளுன்னு இருக்குமே...இப்பல்லாம் பயக சாக்கரினக் கலந்துர்ராங்க. அது ரொம்பவே நொரைச்சிக்கிருது. ஆகையால எடம் பாத்துப் பதம் பாத்துக் குடிக்கனும்.
// பனங்கிழக்கு சுட்டுச் சாப்பிடுவதை மறந்தே விட்டேன். அந்த வாசமே தனி. என் அத்தான் அவித்த கிழங்கைக் கூட தணலில போட்டு வாட்டியே சாப்பிடுவார்.
கட்டாயம் துவையல் செய்து சாப்பிடவும். 10 கிழங்குக்கு 5 பச்சைமிளகாய்;05 பல்லு உள்ளி;10 சின்ன வெங்காயம்;15 மிளகு; சுவைக்கு அளவான உப்பு; அப்பிடியே சற்று நருவல்,புருவலாக இடித்து;பசைப்பாகத்தில் எடுத்து உருட்டவும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ் //
இதை நாம் செய்து பார்க்கிறேன். அடுத்த வாரம் பெங்களூர் சென்று விடுவேன். பொங்கல் சமயத்தில் கிழங்கு கிடைக்கும். நிச்சயம் செய்கிறேன்.
ம்...புது வீடு, புதுத் தலைப்பு, கலக்றீங்க யோகன்!்
பாணிப்பினாட்டுச் சாப்பிடா வாழ்வெல்லாம் ஒருவாழ்வா? யோகன்! சந்திரவதனான்ர , ஊர்ப்பக்கம்இந்தப்பாணிப் பினாட்டுக்குப் பிரசித்தம்.
இங்கிருந்து ஆரும் நண்பர்கள் அந்த ஊர்ப்பக்கம் போனா, நான் மறக்காமல் சொல்லி விடிறது இந்தப்பாணிப்பினாட்டுத்தான்.
யோகன்.. என்ன நம்ம ஊர் பினாட்டு கண்டோஸ் சாப்பிட்டதே இல்லையா.... பிறவி பயனை இழந்திட்டீங்களே
ஜான்
பனையை பற்றி போட்டு தாக்கிவிட்டீர்களே
எனக்குத் தெரியாத விஷயங்கள் அதிகம் உண்டு. தங்கள் பனையின் ஓலை கூறை மேயவும் மரம் வீடு கட்டவும் பயன் படுகிறது. இங்கு
யோகன்
பாணிப் பனாட்டின் சுவை அதிகம்.
சிவத்தப்பச்சை அரிசியில் வடித்த கஞ்சிக்கு நல்ல இளவல் தேங்காய் துருவிப் போட்டு பாணிப்பனாட்டும் சேர்த்துக் குடிக்க நல்ல சுவை என்று அப்பா சொல்வார். இதற்காகவே அம்மா சிவத்தப் பச்சை அரிசியில் சோறு சமைத்து கஞ்சி வடிப்பா. எனக்கு அதையும் விட பாணிப்பனாட்டை தனியே சாப்பிடத்தான் நன்கு பிடிக்கும். சும்மாபனாட்டு பெரிது பெரிதாக இருக்கும். பாணிப்பனாட்டு சொக்கிளேற் போல சதுரம் சதுரமாக வெட்டி ஆனால் சப்பையாக இருக்கும். சாடிக்குள் பத்திரப்படுத்தி வைக்கப் பட்டிருக்கும். இதை செய்வதில் எங்கள் வீட்டில் அப்பாச்சிதான் எக்ஸ்பேர்ட். பாணிக்கலவை எப்படிச் செய்கிறா என்பதை அம்மாவிடமாவது கேட்டுப் பார்த்து எழுதுகிறேன்.
பாணிப்பனாட்டு என்றதும் எனக்கு இன்னொரு நினைவு. நாங்கள் 2002இல் வன்னிக்குச் சென்று திரும்புவதற்கு முதல்நாள் மறைந்த கவிஞர் நாவண்ணன் அவசரமாக வந்தார். வெயிலில் வாடிக் களைத்து வந்தவர் தனது மனைவி எமக்காக ஏதோ தந்து விட்டதாகச் சொல்லி பொட்டலம் போன்றதொரு பெரிய பார்சலைத் தந்தார். உள்ளே சின்னச் சின்ன வட்டமாக வெட்டப்பட்ட புழுக்கொடியல், பனங்காய்ப்பணியாரம், எள்ளுருண்டை, இந்தப் பாணிப்பனாட்டு எல்லாம் இருந்தன.
ரவி!
பனம்பழத்தில் வண்டி; காவோலையில ஆளை இருத்தி இழுப்பது ரெயின் என்போம்;இதெல்லாம் விளையாடாமல் ஒரு 1/2 சத மடித்த கிராமத்தான் எப்படி ?வளர்வது.ம் அது ஒரு காலம். காவோலைச் சத்தம் இன்னும் காதுக்க கேட்குது.
யோகன் பாரிஸ்
"உங்கள் நண்பன்" சரவணன்!
ஈழத்தில் பெரும்பாலும் ஆண்பனையே கள்ளுக்கு; பெண் பனை மிக அதிக இருக்கும் வளவுகாரரே! கள்ளுக்கும் குத்தகைக்கு விடுவார்கள்.காரணம் கிழங்குத் தேவையுண்டு. எங்கள் கிழங்கு நாடு பூரா விற்பனைக்குச் செல்வது. சிங்களமக்கள் கூட கிழங்குக் காலத்தை எதிர் பார்த்திருப்பர். இப்போர்ச் சூழலிலும் ,நாடுதழுவிய விற்பனை நடக்கும்; சிங்களப் பிரதேசங்களில் உள்ள தமிழ்வியாபாரிகள்; இதைக் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். மிகக் கிராக்கியான பொருள். மிக அத்தியாவசியமன்றிப் பெண்பனையைத் தறிக்கவேமாட்டார்கள்.சாமி மரமென்றெல்லாம் பிரிவு இல்லை. ஆனால் பெண்பனைக்கு சாமியைப் போல் மரியாதை இருக்கும். "பணம்காச்சியல்லா"
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்
மலை நாடர்,சின்னக்குட்டியண்ணர்!
என் மாமனார் ஒருவர்;இளமையில் இந்திய வாணிபம் செய்தவர்; மதுரை;சிதம்பரம் தண்ணிபட்ட பாடென்பார். முருக பக்தர்; கடைசிவரை அறுபடை வீட்டில் ;திருச்செந்தூர் தவிர ஏதும் தெரியாது. என்னிலையும் அவர்போல்; பாணிப்பனாட்டுத் தெரியாத நிலையாப் போச்சு; எனினும் கிடைக்கும் போது சந்திரவதனா எனக்குத் தந்து; என்னையும் என் பிறவிப் பயனை அடைய வைப்பார் என நம்பிகிறேன்.
மலை நாடர் சந்தோசமா இருக்கு!...இனி ஓலை பற்றி எழுதலாமென நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்
என்னிலையும் அவர்போல்; பாணிப்பனாட்டுத் தெரியாத நிலையாப் போச்சு; எனினும் கிடைக்கும் போது சந்திரவதனா எனக்குத் தந்து; என்னையும் என் பிறவிப் பயனை அடைய வைப்பார் என நம்பிகிறேன்.
கண்டிப்பாக.
தரமுடியாத இடத்தில் இருந்தாலும் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்களை நினைத்துக் கொள்வேன்.
ஓலை பற்றிய உங்கள் பதிவை எதிர் பார்த்திருக்கிறேன்.
யோகன் ஐயா. மிக அருமையாக இந்தக் கற்பகத் தருவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
நீங்கள் சொன்னவற்றில் நான் சிறுவயதில் ருசித்தவை: பனங்குருத்து, பதநீர் (மிக மிக விருப்பம் உண்டு இதில்), பனங்கட்டி (திருச்செந்தூரில்), நுங்கு (இப்போதும் மதுரைக்கு வேனிற்காலத்தில் சென்றால் விரும்பி உண்பது), பனங்கிழங்கு (அவித்தும் சுட்டும் - மதுரையில் திருவிழா நேரங்களில் - பங்குனி, சித்திரை மாதங்களில் - பனங்கிழங்கு அவித்தும் சுட்டும் கிடைக்கும்). மற்றவை சுவைத்ததில்லை. அறியக் கொடுத்ததற்கு நன்றி.
அன்புக் குமரனுக்கு!
தங்கள் கருத்தை எதிர்பார்த்தேன். இந்தப் பதநீரைப் பாரத தேசத்தோர் வெகுவாகதான்,விதந்துரைக்கிறார்கள்.செந்தூர் சென்றும்;மதுப்பழக்கம் இல்லாததால்; கள் எனத் தவறாகக் கருதியதால்,தவறவிட்டுவிட்டேன். மீண்டும் சென்றால் கட்டாயம் சுவைப்பேன். நீங்கள் கிழங்குத் துவையலை முயலுங்கள்; சைவக் கூழோ;மச்சக் கூழோ; நாம் என்றோ ஒன்று கூடும் போது;கட்டாயம் காச்சுவோம்.பாரிஸ் வாங்க காச்சுவோம். என் மனைவி சுவையாகக் காச்சுவார்.ஈழத்தவர் போல் தமிழகத்தில் கூழ் ஆர்வமாக இல்லை. என்பதை ஞாநி அவர்கள் கட்டுரை ஒன்றில் படித்தேன்.
யோகன் பாரிஸ்
என்னார் ஐயா!
தங்களுக்கு பல பனைபற்றிய விடயங்களை என் பதிவு தந்ததாயின் மகிழ்வே!
கடைசிப்பகுதியை விரைவில் இடுகிறேன்
நன்றி
யோகன் பாரிஸ்
Post a Comment