Wednesday, September 20, 2006

கற்பகதரு 2


கற்பகதரு 2 தொடர்ச்சி

இனிப் பனையோலையின் பயனைப் பார்ப்போம்.

சுவடி:- ஆதிகாலத்தில்; எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே; பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக; பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது;தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன.பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை.காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் ;குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர்.

கால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாடாட்டுக்கிடுவர்.

கூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள்; பலையோலை;தென்னங்கிடுகு;வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது.வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில்;இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பலையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது.

வேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு; முகமறைப்பாகவும்;பாதுகாப்பாகவும்; பனையோலையோ;தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு.இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர்.

பன்ன வேலை:- இது பனையோலை ;குறிப்பாகக் குருத்தோலை;நார்,ஈர்க்கு;மட்டை என்பவற்றைக் கொண்டு; வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி;கடகம்;சுளகு;பாய்;நீற்றுப்பெட்டி;தடுக்கு;குட்டான்;உமல்,தொன்னை;
வட்டில்,விசிறி;தொப்பி;கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்க்கும் ,முக்கிய குடிசைக் கைத்தொழில்.

அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம்;எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள்;1/2' முதல் 1 1/2' விட்டம் வரை ;சுமார் 1/2' உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை.ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்...பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப்ப பயன்படுத்துவர்.நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை;அதிகம் நனையவிடாமலோ,அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால்;15 வருடங்கள் கூடப் பிய்யாமல் இருப்பவையும் உண்டு.

அஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்பெட்டி):- சுமார் 8"- 10" ,நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி ,இருஅடுக்கு அமைப்பாக இருக்கும்;முதல் அடுக்கு,பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள்;கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும்; மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம்.அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள்;சில்லறைக் காசுக்கு இதைப் பாவித்தனர்; சமையலறையிலும்; பலசரக்குப் பெட்டியாகவும்; ஆயுள் வேத வைத்தியர்கள்; மருந்து காவும் பெட்டியாகவும்;பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர்.இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ! தெரியவில்லை.

கொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு;புகையிலை பாவிப்பவர்கள்; அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில்;தனியான மூடியுடன் கூடியது.இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும்;சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும்.

மூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து,மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூட கைபிடியும் வைத்திருப்பார்கள்.

வட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர்;சாப்பாடு எடுத்துச் செல்ல,பாவித்த சிறிய மூடியுடன் கூடிய பெட்டி; நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது.இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர்.

சுளகு:- பனையீர்க்காலும்;மட்டையாலும் பின்னுவது; அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும்; வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பத்ற்கும்; பல அளவுகளில் முடைவார்கள்.

கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, ஏற்கனவே "சுஜாதா-கடகம்-நான்" ல் விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

பட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர்;இது தோட்டத்து இளங்கன்றுகளுக்கு உய்தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர்,சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.

திருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி; அதற்கு முறுக்கிய ஈர்க்கால் ;மேற்சுற்றுச் சுற்றுவர். பனை,சட்டி,குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர்.

உறி:-திருகணைக்கு 3;4 ஈர்க்கில் பின்னிய ;சுமார் 3' நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து; சாப்பாட்டுப் பொருட்களை பூனை,நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்)

உமல்:-பலையோலையில் இழைப்பது; இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும்; அன்று பொருள் காவப் பாவித்தார்கள்.

பிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும்;பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும்;அரை முட்டைவடிவில் அமைப்பது;கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும்; வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர்.சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே! அருமையாக இருக்கும்.குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர்.

தொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன.

பறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது.

நீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.

பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5'x7' பாய்கள்; சூடடிக்கப் பாவிக்கும்,பந்தலுக்கு விரிக்கும் 20'x 25' களப்பாய்கள்; பந்திக்கு விரிக்கும் 2'x30' பந்திப்பாய்; பிற்க்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது.முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப்பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.

தடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3'x3'; சிறு பாய்; குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள்.

தட்டி:-அன்றைய வீடுகளுக்கு ;பாய் ,மட்டை;சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு.

குட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும்; பொதியாக்கக் கொள்கலன்; இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3"x6" முதல் 1/2"x1" ;அளவில் கூடச் செய்வார்கள்.

நெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர்.

விசிறி,தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள்; வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள்.

விளக்குமாறு:- கழிவு ஈர்க்கினால் செய்யப்படும்;அன்றைய சமையலறை;இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது.

இவை நான் கண்ட, அறிந்த பனையோலையின் பயன்பாடுகள். வேறும் இருக்கலாம். தெரிந்தவர் அறியத்தரவும்.இறுதிப் பாகத்தில் மரத்தில் உபயோகத்தைப் பார்ப்போம்.

13 comments:

சின்னக்குட்டி said...

யோகன் ... பனையினால் எவ்வளவு விசயங்கள் செய்திருக்கிறார்கள்.... அந்த காலம் செல்வசந்நிதி கோயிலுக்கு போனால் காணலாம்... மறந்து போன தெரியாமால் இருந்த விசயங்களை எல்லாம் ஞாபக படுத்தியதற்க்கு நன்றி.... பனை நிச்சயம் கற்பவதரு தான்

ENNAR said...

உண்மையில் இது கற்பகதருதான் ஜான் நாங்கள் எங்கள் மாட்டுக்கொட்டகைக்கு இதைத்தான் போட்டு மேய்வோம் தீ பிடித்தால் சொல்ல வேண்டியதில்லை அருமையாக இருக்கும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டி அண்ணர்!
பனைக்கு வடமராட்டி பிரபலம்; அத்துடன் இன்றும் எந்தக் கோவில் திருவிழாவானாலும்;பனம் பொருள் இல்லாததில்லை. ஒருதடவை மன்னார் மடுமாதா சென்ற போது; பேசாலைப் பனம் பொருள் பார்த்த இடமெல்லாம் இருந்தது.நல்லூர்க் கந்தனும் இதற்கு விதிவிலக்கல்ல!இறுதியான அடுத்த பகுதியில் அவற்றைப் பற்றிக் கூறவுள்ளேன்.
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் அண்ணா

நேற்று முன் தினம் எனது வானொலி நிகழ்ச்சியில் உங்கள் கற்பகதரு 1 பகுதியை வழங்கியிருந்தேன். தனிப்பட்ட அழைப்பில் நேயர்கள் நன்று என்று தெரிவித்திருந்தார்கள்.
இப்படைப்பும் அருமை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னார் ஐயா!
என் இளமைக் காலத்தில் எங்கள் ஊரில்; ஓட்டுக் கூரையிலும் ;ஓலைக் கூரையே அதிகம்; வீட்டுக் கொரு மாட்டுக் கொட்டில்,பழையவை போட்டுவைக்க ஒரு கொட்டில் ;தலை வாசல் எனும் ஓய்வெடுக்கும் இடம் இவை யாவும் ஓலையால் வேயப்பட்டே இருக்கும்; எனினும் என் ஊரில் ஈழத்தில் வாழ்ந்த நாளில் ஒரு வீடு கூட எரியவில்லை. கைவிளக்கு;மண்ணெய்க் குப்பி விளக்குகள் இருந்தும்; மிகக் கவனமாக இருந்துள்ளார்கள். வேறு கிராமங்களில் ஒன்றிரண்டு நடந்துள்ளது.ஒப்பீட்டளவில் பெரும் பாதிப்புகள் இல்லை .ஆனால் இன்று ஓட்டு வீடும் எரிகிறது.தென்னிந்தியாவில் கலவரங்களில் குடிசைகளுக்குத் தீ வைத்து;கொழுத்துவதை செய்திகளில் படித்துள்ளேன். இந்த "கலவரத் தீ" க்கு
ஓட்டு வீடு கூடத் தாங்காதையா????
யோகன் பாரிஸ்

வெற்றி said...

யோகன் அண்ணை,
நல்ல பதிவு. பனைமரத்தைத் தறித்து வீடு கட்ட வளை, சிலாகை போன்றவற்றிற்கும் பாவிப்பார்கள். நான் கடந்த வருடம் யாழ்ப்பாணம் சென்ற போது இன்னுமொரு விடயத்தைக் கவனித்தேன். சிங்கள இராணுவம் அங்குள்ள பனைமரங்களை வெட்டி தங்கள் முகாம்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் பாவிக்கிறார்கள்.

ramachandranusha(உஷா) said...

யோகன், சென்ற மாதம் சென்னையில் கண்ணில் பட்ட ஆவியை புரட்டும்பொழுது க.பெவில் சுஜாதா குறிப்பிட்ட பெயரைப் பார்த்ததும் ஹைய் நம்ம பிரண்டாச்சே என்று தோன்றியது.
நகரத்திலேயே பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இவை எல்லாம் புதுமையான தகவல்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
இப்படி சிபாரிசு செய்யலாமா என்று தெரியவில்லை- இக்கட்டுரையை "கில்லி" மற்றும் "பூங்கா" விற்கு பரிந்துரைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நல்ல தொகுப்பு யோகன் ஐயா. பனையின் பல பயன்கள் பற்றி ஏற்கனவே என்னைப் போன்ற நகரத்தில் பிறந்தவர்களுக்குத் தெரிந்திருப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. யாருப்பா அது மதுரை நகரம் இல்லை - பெரிய கிராமம்ன்னு சத்தம் விடறது? :-)

பனையின் பயன்பாடுகளில் அறியாத பலவற்றையும் அறிந்து கொண்டேன். நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இதன் கடைசியும் 3ம் பாகமும் மரத்தில் பயன்பாடு பற்றியதாக அமையும்; விரைவில் இடப்பார்க்கிறேன். படித்துப் பின்னூட்டமிட காலம் போகிறது; நம்ம வீட்டைக் கவனிக்க நேரமில்லை. ஏன் ?,வீடு கட்டினோம் என்றிருக்கு!!!;எப்படியப்பா?? எல்லோரும் சமாளிக்கிறீங்க!!போதும் போதுமென்றிருக்கு!!!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
இறுதிப் பாகமான 3ம் பாகத்தில்;மரத்தின் பயன் பாடு பற்றிக்கூறி; முடிவுரையாக இன்றைய பயன்பாட்டில் உள்ளது. பற்றிய விபரப்பட்டியலிடுவேன். காலம் பலதைப் புரட்டிவிட்டது. இந்தப் பனையைப் புரட்டாதா????வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

G.Ragavan said...

பனை பொருட்கள் தெந்தமிழ் நாட்டில் பிரபலம். அதை விடப் பலமடங்கு ஈழத்தில். உண்ணும் பொருட்களாய் பழம், கிழங்கு, நொங்கு, பதநி என்று களிக்கக் கிடைக்கும். அடுத்து பெட்டிகளும் பாய்களும். ஊர்ப்பக்கம் போனால் சில்லுக் கருப்பட்டி அடைத்துத் தரும் மூட்டுப் பெட்டிகள் ஒரு பக்கம். சீரணிகளை அடைத்துத் தர இரண்டு பெட்டிகள். ஒன்றுக்குள் மற்றொன்னை வைத்து மூடி கட்டித் தரப்படும் பெட்டிகள்....ம்ம்ம்ம்...ஊர்ப்பக்கத்து நினைவுகளை கிளறி விட்டீர்கள். இப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் கிடைக்கிறது எல்லாம். :-(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
இப்போ எல்லாம் "பிளாஸ்டிக்" கில் கிடைக்கிறது. அத்துடன் உலகம் மாசு அடைகிறது. அதனால் பிளாஸ்சிக் தடை என்ற பேச்சு வேறு உலகம் பூரா,ஆக்ரோசமா இருக்கு! நாம் நனைத்துச் சுமப்பவர்களாகிவிட்டோம்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உஷா!
நான் வாசகர் வட்டம் மிகக் குறைந்தவன்; "என்னத்தை எழுதுவது" என்ற அலுப்பு வரும்; பின்னூட்டத்துடன் ,இருப்போம். பதிவல்லாம் சரிப்படாது. என நினைத்து ஒதுங்க நினைக்கும் போது; உங்களைப் போன்ற ஒரு சிலர் பின்னூட்டம்;இட மீண்டும் என்னை கிள்ளிப் பார்த்துவிட்டு;"எடே யோகன் -தொடரடா" என மனம் உந்தும். இப்படியே "அமாவாசை-பௌர்ணமி" யாயிருக்கு!!!நம்ம எழுத்து.
பார்ப்போம்.
யோகன் பாரிஸ்