Thursday, September 28, 2006

நாமகள் வாழ்விடம்


சக்தி வழிபாட்டையொட்டிய ; கலைமகளுக்குரிய இந்த மூன்று நாளும்; "சுந்தரத் தமிழின் சொந்தக்காரன்" பாரதியின் எனக்குப் பிடித்த இந்த எளிமையான தமிழில் அமைந்த பாடல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை எவருக்குமே பிடிக்கும், புரியும் பாடலென்பதில் சந்தேகமில்லை.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்!
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்திருப்பாள்!
உள்ள தாம் பொருள் தேடியுணர்ந்தே!
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள்.

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்;
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்.

வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மானாள்;
வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்;
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்;
வீரமன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடும் தெய்வம்;
தரணி மீதறி வாகிய தெய்வம்.


14 comments:

சின்னக்குட்டி said...

நன்றி யோகன் பாடசாலை நாட்களில் நவராத்திரி பூசை நேர பாட கேட்டிருக்கிறேன்

G.Ragavan said...

யோகன் ஐயா....சரியான பொழுதில் மிகச் சரியானதொரு பாடலைத் தந்து மகிழ்வு கூட்டியிருக்கிறீர்கள். கண்ணுக்குத் தமிழைக் காட்டியிருக்கிறீர்கள்.

முப்பெருந்தேவியரில் முதலில் புகழப் படுகிறவள் கலைமகள். நாமகள். வெண்பூமகள். சொல்மகள். தமிழ்மகள்.

எங்கோ இருப்பவன் இறைவன் என்று கொண்டவர் அல்லர் தமிழர். எங்கும் இருப்பது இறை. அதுதான் நமது ஆன்மீகப் பசிக்கு இரை. இதை என்றென்றும் தமிழில் உரை என்று வாழ்ந்தவர்கள் முன்னோர். அந்த வழக்குக்கு மாறுபாடு காணாதவன் பாரதி. அவன் எழுதில் மாறுபாடு காணாதவர் நீர். அதனால்தான் அவன் கவியை அவியறியத் தருகிறீர்.

எனக்கும் ஒரு பாடல் நினைவிற்கு வருகிறது. இது பாரதி எழுதியதல்ல. கம்பன் எழுதியது.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை
தூய உருப்பளிங்கு போல் வாழ் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள்
இங்கு வாராது இடர்
படிக நிறமும் பவழச் செவ்வாயும்
கடிகமழ் போல் தாமரைப் பூக்கையும்
துடியிடையும் அல்லும் பகலும்
அனவரதம் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி!

SP.VR. SUBBIAH said...

நல்ல பாடல் திருவாளர் ஜோகன் பாரிஸ்
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்தப்பாட்டை வாரம் ஒருமுறை மாணவர்கள் அனைவரையும் சேர்ந்து பாடச் சொல்வார் எங்கள் தமிழ் ஆசான்
இப்போது இதையெல்லாம் பள்ளிக்கூடங்களில் பாடச் சொல்வதாகத் தெரியவில்லை!
என் நண்பர் கவிஞர் காசு மணியன் கலைமக்ளுக்காக ஒரு பாட்டு எழுடியுள்ளார் - அதை மேடைகளில் அடிக்கடி சொல்லவும் செய்வார்
பாடல் இதோ
:
பூமகளே பொன்மகளே
புதுவண்ணச் சீர்மகளே
நாமகளே எந்தன்
நாமீது வாமகளே
நாமீது வந்தமர்ந்து
நல்லதமிழ் தாமகளே!

ENNAR said...

நன்றாக இருக்கிறது யோகன்

//வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மானாள்;//
இந்த வார்த்தை நன்றாக உள்ளது

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாரா!
இந்த ஒலிவடிவைக் கேட்கிறேன்.
வருகைக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
இது பாடசாலை வாழ்விலல்ல! என்றும் பாடக்கூடிய பாடல்கள். கல்வியின் அவசியம்;கல்விக்கண் திறக்க வேண்டிய அவசியம் பற்றிய பாடல்கள். நீங்கள் அறியாததல்ல.உங்களுக்கும் பிடித்த மாதிரித் தான் சொல்லியுள்ளார்.
"மந்திரம் முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்!
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்"
இதனால் தான் பாரதியில் எனக்கு அபிமானம்!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
"நவராத்திரி" எதாவது பதிவிடுவோம். எனும் போது;பாரதியும்; குறிப்பாக இந்தப் பாடல்களும் ;நினைவு வந்தன. பொருட் சிக்கலின்றிப் புரியக் கூடிய பாடல்கள் அதனால் பிரதியிட்டேன்.
அத்துடன் கல்விக்கு பாரதி கொடுக்கும் முக்கியத்துவம்; என்னைக் கவர்ந்தது."தேடு கல்வியிலாத தொரூரைத்; தீயினுக்கிரையாக மடுத்தல்"- எனப் பாரதி சன்னதம் கொள்கிரார். அதன் பலன் உலக அரங்கில் தமிழர்களும் இன்று பல்துறையிலும் கால்பதித்துள்ளார்கள்.
"ஆயகலைகள்" ;நான் எப்போதும் மேடையில் பேசும் போது(செய்வதுண்டு) என் இறை வணக்கப்பாடலாகப் பாடியே பேச்சை ஆரம்பிப்பேன்.
பதிவுக்கு வந்து அழகான ஓர் பின்னூட்டமிடதற்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
ஓம், அப்படித்தான்3;3;4 ஆகத்தான் போட்டுள்ளேன். பாரதியார் இதற்கு "ஆனந்த பைரவி" சிபார்சு செய்துள்ளார். எனக்கோ இதன் சில பாடல்கள்" கம்பீர நாட்டையில்" பாடலாம். போல இருக்கிறது.
அப்படி!!!! ஆக்ரோசமாகப் பாரதி-கல்விக்கு வலுச் சேர்த்துள்ளார்.
வருகைக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுப்பையா அண்ணருக்கு!
இதிலுள்ள படம் உங்கள் தான் என்றால்! உங்களை நான் அண்ணர் எனலாம். தயவு செய்து திருவாளர் போடவேண்டாம். யோகனே போதும்!
நம்காலத்தில் இப்பாடல்கள் பாடத்திட்டத்தில் இருந்தன. படித்தோம். இன்று ஏனோ??, இவை தவிர்க்கப்பட்டன.
மாணவ சமுதாயத்துக்கு என்றும் உகந்த பாடல் இதுவே!!!!இதைவிடக் கல்வியின் மகத்துவம் உணர்த்தமுடியுமோ? தெரியவில்லை.
தங்கள் நண்பரும் அழகாகத்தான் ;நாமகளை நாவமர அழைத்துள்ளார்.
நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னார் ஐயா!
"பாட்டுக் கொரு புலவன் பாரதி"-பாடல் சோடை போகுமா?"வஞ்சமற்ற" எனத் தொழில் நேர்மை பற்றிப் பாரதிதான் சொல்லும் தகையுள்ளவர்.
வருகைக்கு நன்றி

கானா பிரபா said...

பொருத்தமான பதிவுக்கு நன்றி அண்ணா

வெற்றி said...

//கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள்.
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்;
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்.//

அற்புதமான வரிகள். ஆழ்ந்த கருத்துக்கள். பாரதிக்கு நிகர் பாரதியேதான். பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் யோகனண்ணை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
நவராத்திரி ஏதாவது போடுவோமே!என நினைக்கையில் பாரதி தான் நினைவு வந்தார்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
"காக்கைச் சிறகில் கண்ணனையும்; தீக்குள் விரலைவைத்து அவனைத் தீண்டுமின்பமும்" பெற்ற பாரதியால் தான் இப்படி எழுதமுடியும்; அவர் பாட்டுக் கொருவர்தான் ஐயமில்லை.
வரவுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்