Wednesday, October 04, 2006

கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்



கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்

இத்தொடரின் இறுதிப்பகுதியாக பனை மரப் பயன்பாட்டைப் பார்ப்போம்.

வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை;தீராந்தி;;பாவுமரம்;சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து;அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40' நீளமானமரத்தில் சுமார் 25' வைரமானபகுதியாக;பாவுமரமாகவும்;ஏனையபகுதில் சுமார் 10' வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும்.

துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர்; நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.

இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி;பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது.காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம்;உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது.அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது.

வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி; இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள்; அதன் உறுதிக்காக.

தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர்;சப்பற்த்ட்தின் சகடைக்கு மேற்ப்பகுதி;அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர்,அவற்ருக்கு வயதெல்லை இல்லை; நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும்; நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது.

பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை;விழாக்காலத்தில்;திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ;தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது.சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும்.

மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர்.

மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது.

கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும்;மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்)

விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை;மட்டை;பன்னாடை;கொக்கரை;பாளை;மூரி;ஊமல்;பழுதடைந்தமரம்; யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது.

பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால்;நல்ல இயற்க்கைப் பசளையே!சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது.விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.


இதுவரை பனையின் மரப்பகுதியின் பயனைப் பார்த்தோம். எனக்குத் தெரியாதது எதாவது இருக்கும் பகிரவும்.இவற்றில் சில பாவனையில் இருந்து அருகிவிட்டன.
ஈழத்தின் போர்ச்சூழல் இதன் அருகலுக்கு முக்கிய காரணியாகிவிட்டது. நகரமயமாக்கலாகும் பனைகள் கண்மூட்டித்தனமாகத் தறிக்கப்பட்டுள்ளன.என்நிலையிலும் புதிய பனைகள் நடுவதற்கான எந்த ஓர் நடவடிக்கையும் இல்லை.
1964ல் ,கிளிநொச்சியில் காடு வெட்டிக் குடியேறிய எனது சொந்தக்காரர்;தங்கள் காணி எல்லைகளில் ;பனங் கொட்டை நட்டனர். அதை 84ல் சென்ற போது சிறுவடலிகளாகக் கண்டேன். 2004ல் சென்றபோது சுமார் 15' மரங்களாக பாளைதள்ளி நின்றன.
மிக நிதானமாக வளரும் மரமாக இருக்கும்; பயனுள்ள இம்மரத்தை ,தென்னையினத்தில் குறுகியகாலப் பயன் இனத்தை உருவாக்கியது போல் ,விவசாய விஞ்ஞானிகள் உருவாக்கிப் பரவவைக்க வேண்டும். இன்றைய ஈழத்தின் போர்ச் சூழலில் இது சாத்தியப்படாது. ஆனால் தமிழகம் முயன்றால், இதை ஓர் இயக்கமாகத் தொடங்கிப் பனைவளர்ப்பை ஊக்கிவித்தால். தமிழகத்தில் பஞ்சம் என்ற சொல் அடிபட்டுப் போய்விடும்.எலிக்கறி உண்ணும் நிலையும் வராது.கஞ்சித் தொட்டியும் வைக்கத் தேவையில்லை .என்றோ ஒருநாள் அமைதி ஏற்ப்படும் போது; அதன் பயனை ஈழத்தவரும் அனுபவிப்பர்.

தமிழர் வாழ்வாதாரமான இம் மரத்தைப் பேண நடவடிக்கை எடுப்பார்களா????

குறிப்பு:- இப் பதிவுகளில் இட்ட படங்கள் யாவும்; தமிழ்நாதத்தில் உள்ள "எழுவைதீவுக் காட்சிகள்" எனும் படத்தொகுப்பில் பிரதியெடுக்கப்பட்டவை. அழகான படங்களை உருவாக்கி யாவரும் பயன்படுத்த உதவிய அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி!!யோகன் பாரிஸ்

19 comments:

ENNAR said...

நல்ல தகவல் எனக்குத்தெரயாதவைகளைத் தெரிந்து கொண்டேன் மர ஆணி இங்கு மூங்கிலில் செய்வர் அல்லத தேக்கில் செய்வர். ஆமாம் ஒற்றைப் பனைமரத்தில் பேய்இருக்கும என்பார்களே உண்மையா?

வசந்தன்(Vasanthan) said...

யோகன்.
பதிவுக்கு நன்றி.

துலாவுக்கு தென்னை மரத்தைத்தானே அதிகம் பாவிப்பார்கள்?

அடுப்பு மூட்டிறதுக்கு பன்னாடை அருமையான சாமான். அதோட கங்குமட்டையின்ர அடிப்பாகமும் தனித்தனியாகக் கழற்றிய கொக்கரையும் பொருத்தமானது.

யாழ்ப்பாணம் அரசபடையினரிட்ட விடுபடமுதல் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக்கழகம் "2000 ஆம் ஆண்டில் இரண்டு கோடிப் பனை" என்ற திட்டத்தை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் செயற்பட்டது. எக்கச்சக்கமான பனைவிதைகள் நாட்டப்பட்டன, அவை முளைவிட்டு வளர்ந்ததையும் பார்த்தோம். இப்ப என்ன நடந்துதோ தெரியேல.

எங்கட ஊரில குறிப்பிட்ட இடத்திலயிருந்து பாத்தா கடல் தெரியாது. பனங்கூடல் மறைக்கும். இப்ப பாத்தா ஓவெண்டு கிடக்கு. அரை மைல் தூரத்திலயே கடல் ஆவெண்டு கிடக்கு. இடையில இருந்த நூற்றுக்கணக்கான - இல்லை ஆயிரக்கணக்கான பனைகள் எங்க போனதெண்டு தெரியாது.

வன்னியில பனையால வேலியடைக்கிறது பொதுவா எல்லா இடமும் இருக்கு. வன்னி வந்த புதுசில உது பெரிய புதினம் எங்களுக்கு.
'பனைவேலி' எண்ட தலைப்பில ஒரு படப்பதிவு போட்டனான் முந்தி.

பனையின்ர பயன்களில் பதுங்குகுழிப் பயன்பாட்டை விட்டுப்போட்டியள்.
இராணுவத்தினருக்கும் அதுதான் கைகுடுக்குது (தென்மராட்சிப் பக்கம் தென்னைகளும் வலிகாமப் பக்கம் பனைகளும்)

G.Ragavan said...

யோகன் ஐயா, கட்டுரையின் கடைசியில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது தொலைநோக்குப் பார்வையுடைய அரசாங்கம் செய்ய வேண்டிய சேவை. ஹும். உள்ளூர் அரசியலிலும் ஈகோவினாலும் வீங்கி உழுத்துப் போயிருக்கும் இவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு வழி இப்பொழுது இல்லை.

இந்தத் தொடர் மிகவும் சிறப்பானதொரு தொடர். ஒரு இனத்தின் அடையாளத்தை வெளிக்கொண்டு வந்த தொடர் என்றாலும் மிகையில்லை.

பனைக்கொடி ஏற்றி பழுவேட்டரையன் தோணியோட்டிய காலம் மீண்டும் வரும். பனைக்கொடி பறக்கும். காத்திருக்கிறேன்.

மலைநாடான் said...

யோகன்!

மிக நல்ல பதிவு.
மேலதிகமாக ஒரு சிறப்புத் தகவல்.

பனை மரத்திற்கு கிளைகள் கிடையாது. ஆனால் நெடுந்தீவில் ஒரேயொரு பனைமரம் ஐந்துகிளைகளோடு இருந்தது. நெடுந்தீவுக்குப் போகும் புதியவர்களுக்கு, அது ஒரு சுற்றுலாத்தலம். அதன்படம் இணையத்தில் எங்கோ பார்த்தனான். தேடிப்பார்க்கின்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னார்!
மூங்கில்;தேக்கிலும் பனைவைரத்தின் அமைப்பு; வலிமைகூடியது. இது பாரங்களைத் தாங்கும் கூட்டுக் கம்மி அமைப்பு,எப்படி பல மெல்லிய உருக்குக் கம்மிகளைக் கொண்டு மிகப் பலமான தாங்கு கம்மியைத் தயாரிக்கிறார்களோ!!!!அதே பாணியில் இயற்க்கையின் அமைப்பிது.இதை ஓர் மரவேலை செய்யும் அன்பர் எனக்கு விளக்கினார்.
மேலும் பனையெல்லாம் தறித்து;ஓரே பனையுள்ள ஊரில் அதையும் தறிக்கப்; பேய்க்குப் பயந்து கிட்டப் போகமாட்டாங்க!!! என்பதால் சொன்னாங்களோ,,,,????தெரியல
நம்ம பக்கம் ஆமிக்காரனுக்குப் பயந்து அதெல்லாம் போய்விட்டது.
அவங்களோட அதுவும் காலம் தள்ள முடியாது.
யோகன் பாரிஸ்

சின்னக்குட்டி said...

நல்லதொரு பதிவு..

பனை பற்றி மறந்த விசயங்களையும...மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி வெளி கொணர்ந்த யோகனுக்கு நன்றிகள்...

மலை நாடன் பனைக்கு கிளைகள் உள்ளதாய் கணடதாக கூறினார்... வல்லிபுரக்கோவில் பகுதியில் இரண்டு கிளையுள்ள பனையை கண்டதாக ஞாபகம்..

யாழ்ப்பாணத்தவரை ...பனங்கொட்டையள்...என்று தெற்கு பகுதியிலுள்ளவர் கிண்டலாக கூறுவது வழக்கம்...

யோகனின் பதிவை பார்க்கும் போது அதன் பயன்களை பார்க்கும் போது... அது கிண்டலுக்கான பட்டமல்ல... பெருமை தரும் பட்டம் என்று மகிழ்கிறேன்...

வெற்றி said...

யோகனண்ணை,
நல்ல பதிவு.

/*துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர்; நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.*/

துலா தென்னைமரத்திலிருந்தல்லவா செய்வது?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வசந்தன்!
துலாவுக்குத் தென்னைமரம் அதிகம் பாவித்தபோதும், பனையில் ஆண்பனை வசதியிருப்பதால், இதையும் பாவிப்பர்.
ஒரு சின்னத் தணலை பன்னாடையில் வைத்து;கொக்ககைக்குள் வைத்து;ஊதப் பக்கென சுவாலைவரும்; நானும் செய்துள்ளேன்.

70 களில் பனம் பொருள் அபிவிருத்திச்சபை; பின்பு தமீழ பொருள்மிய மேம்பாட்டுக் கழகம்; இதைப்பற்றி அக்கறை எடுத்ததை அறிவேன்; பயனை அனுபவிக்கும் சூழலற்று விட்டது.அதனால் தான் தமிழகம் இதைச் செய்து பாதுகாக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.

உங்கள் ஊரென்றில்ல!யாழ் குடாநாட்டின் பல கடற்கரைக் கிராமங்களின் பாதுகாப்பரணாக இருந்தது. இந்த லட்டக்கணக்கான பனைகளே!என்பது உண்மை!; பல புயல்களைக் கூட உள்கிராமங்களுக்குள் வராமல் தடுத்தது;கரையோரங்களில் செறிவாக நின்ற பனைகளே!!!!

தறிப்பதில்;கண்ணாகயிருந்த நாம்; அதன் வளர்ப்பில் அக்கறை எடுக்காததே!!! இந்த வெளிகள்.
பனையோலை வேலியடைப்பு;செலவு குறைந்தது. அதனால் அதை வன்னியில் விரும்பியிருக்கலாம்.
பதுங்கு குழி இராணுவத்தினரின் பயன்பாடு ,தமிழர் பயன்பாடல்ல!!! அதனால் விட்டுவிட்டேன்.
சேர்க்கிறேன்.
விரிவான பின்னூட்டப் பகிர்வுக்கு மிக நன்றி!
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

கற்பகதரு பற்றி ஆழமான பதிவுகள். உங்களைப் போன்றவர்களின் அனுபவ அறிவு பதிவுகளாக வருவது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைகின்றேன் அண்ணா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
நெடுந்தீவு கிளைப்பனையின் கறுப்பு வெள்ளைப் படமொன்று; என் பாடசாலைக்கால நண்பன் 30வருடங்களுக்கு முன் காட்டிப் பார்த்துள்ளேன்.
ஆம் ;அது ஒரு காட்சிக் குரியதாக இருந்ததெனவே! நண்பன் கூறினான்.
கிளைத் தென்னைப் படமிருக்கிறது. பின்பு போடுகிறேன்.
யோகன் பாரிஸ்

வசந்தன்(Vasanthan) said...

யோகண்ணை,
பதுங்குகுழி எங்களுக்கானதும்தான்.
யாழ்ப்பாணத்தில் மக்களின் முழுப் பதுங்குகுழிகளுமே பனைமரத்தால் மூடப்பட்டவைதாம்.
வன்னியில்தான் காட்டுமரங்களைக் கொண்டு பதுங்குகுழி மூடும்தன்மை வந்தது.

கிளைப்பனைகள் பற்றிச் சொன்னார்கள்.
நான் பல பனைகளைப் பார்த்துள்ளேன்.
எங்கள் ஊரில் தென்னையொன்று ஐந்து கிளைகளுடன் நின்றது. ஆனால் பனை கிளைகளுடனில்லை.
பளையில் மூன்று பனைகள் பார்த்தேன். ஒவ்வொன்றும் இவ்விரண்டு கிளைகளுடன்.
முதன்முதலில் இதை ஒரு அதிசயமாகப் பார்த்தது பேசாலையில் தான். எனது சிறிய வயதில் நிறையக் கிளைகளுடன் ஒரு பனை மரம் பார்த்த ஞாபகமுள்ளது. அது பதினாறு கிளைகள் கொண்டது என்று என் வீட்டில் சொல்வார்கள். வளர்ந்த பின் அதைப்பார்க்கும் வாய்ப்பு இல்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
பாராட்டுக்கு நன்றி!
இந்த மரத்தின் பயன் என்றும் எம் தலைமுறைகளுக்குக் கிடைக்கவேண்டுமெனும் அவா! எனக்குண்டு.இதை தனிமனிதனாகச் செய்ய முடியாது. அரசோ,அரசு சாரா நிறுவனங்களோ; ஆதீனங்களோ இப்பணியைக் முன்னெடுத்தால்;வெற்றி நிச்சயம்.
இன்றுள்ள போர்ச்சூழலில் ஈழத்தில் சாத்தியமில்லை. தமிழகத்தையே! எதிர் பார்க்கிறோம்.
பனையை பெருக்கினால் பஞ்சத்தைத் தமிழ்ச்சமுதாயத்திடமிருந்து பிரிக்கலாம்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!
நெடுந்தீவிலுள்ள கிளைப்பனைக்கு 4 வட்டுக்கள் இருந்ததாகப் படம் பார்த்தது. ஞாபகமுண்டு.
மலையகத்தில் ஒருதடவை பேசக்கிடைத்தபோது; "நான் யாழ்பாணத் தமிழன்;சுத்த பனங்கொட்டைத் தமிழன் சொல்கிறேன் - இதில் எமக்கு இழுக்கல்ல !பெருமையே!" எனப் பேசினேன். உங்கள் கூற்றைப் படிக்கையில் அந்த நினைப்பு வந்தது.
அது பெருமைக்குரிய பட்டமே! சந்தேகமில்லை.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
தங்களைப் போல் ஊக்குவிப்போர் இருந்தால்; முயலலாம்.
பல பதிவிட!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
தங்கள் அதே! கருத்தை வசந்தனும்; குறிப்பிட்டுள்ளார். தங்கள் அவதானிப்பு மிகச்சரி! எனினும் பனை மரத்தில் "துலா" செய்யக்கூடாதெனும் சட்டம் இல்லை.
அரிசிமாவில் பிட்டவிப்பது, வழக்கம் ஆனால் இல்லாத நிலையில் கோதுமைமாவிலும் அவிப்பர். கோதுமையின் பயன் பற்றிக் குறிப்பிடும் போது; பிட்டவித்தலையும் குறிப்பிடத்தானே வேண்டும்.
கிளிநொச்சியில் 60களில் தென்னையும் இல்லை;பனையும் இல்லை; சகல காணிகளிலும் தென்னை நாற்று நிலையிலையே இருந்தது. அங்கே உள்ள கிணறுக்கெல்லாம் துலா நீளமான காட்டு மரமே!!!
நான் முள்ளியவளையில் இருந்தபோது; சில கிணறுகளுக்கு லைட் போஸ்ட் தான் "துலா"; அரசாங்கம் மின்சார வினியோகத்துக்கு போட்ட மரங்கள்; நெடுநாள் தேடுவாரற்றுக் கிடக்க; நல்மக்கள் துவாரமுள்ள தலைப்பகுதியை வெட்டிவிட்டு துலாவாக்கிவிட்டார்கள்.
சிலாபத்தில் இரும்புக் குழாயில் வெல்ட் பண்ணி துலா ஆக்கியிருந்ததையும் கண்டேன்.

மொத்தம் நெம்புகோல் தத்துவத்துக்கு பொருத்தமான யாவும் "துலா" வே'!!!
ஆகவே இனி உங்கள் வீட்டுக் கிணற்றுக்கு; ஓர் ஆண்பனையைத் தறித்து நல்ல துலா!!உங்க பிள்ளைகளுக்குக் காட்டவாவது போடுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
தெரிந்ததைப் பரிமாறிக் கொள்ளவே! இது; உங்கள் பலர் பதிவுகளிலும் எவ்வளவோ! என்னை நான் தீட்டிப் பார்க்க உதவியது.
முடிந்ததை எழுதுகிறேன்; ஊக்கத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. இந்தக் கற்பகத்தரு தொடர்பதிவுகளின் மூலம் பனைமரத்தைப் பற்றி அறியாதவற்றை அறிந்தேன். முன்பு அறிந்து இப்போது மறந்தவற்றையும் அறிந்தேன். மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
பதிவை படித்து கருத்தும் ஊக்கமும் எப்போதும் தருவதற்கு நன்றி!
நான் விடுமுறையில் லண்டனில் உள்ளேன். உங்கள் புதிய பதிவுகள் எதுவும் படிக்கவில்லை. திரும்பியதும் படித்துக் கருத்துக் கூறுவேன்.
யோகன் பாரிஸ்

NONO said...

பல கிளைகள் உள்ள பனையை நானும் பார்தது உண்டு ....(100 கணக்கில்)!!! காரணம் யாருக்காவது தெரியுமா?
பனையின் தாவரவியல் பெயர்:Borassus flabellifera