Thursday, October 05, 2006

கவரிமா! வள்ளுவர்.......கவரிமான் நாம்......




"மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!" -வள்ளுவர்


அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

பரிமேலளகர் உரை -விசா பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமாவை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின்; தாங்காது இறப்பர்.

கருத்துரை: தன் மயிர்த்திரளிலிருந்து;ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் தம் மானம் அழியக் கூடிய நேரம் வந்தால் அதைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்வர்.

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை உரை- பாரதி பதிப்பகம் வெளியீடு

(மானமுடையவர் தன்மை) தன் உடலின் மீதுள்ள மயிர் தன் உடலைவிட்டு நீங்கினால் உடனே இறந்து போகிற கவரிமானைப் போன்ற மானிகள் மானம் நீங்க நேரிட்டால் உடனே உயிரை விட்டு விடுவார்கள்.

Yak-A species of ox found in Tibet and domesticated there;covered all over with a thick coat of long silky hair; thatof the lower parts hanging down almost to the ground. (CHAMBERS CONCISE 20th CENTURY DICTIONARY)

Yak - a wild ox used for carrying loads over mountainous regions in Tibet and Himalayas.இமாலயப் பிரதேசத்தில் பொதி சுமக்கும் "யாக்" என்னும் ஒருவகை எருது; கவரி எருமை. (The Great Lifco Dictionary)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால்;உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்; மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.

Kural - 969 Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day. Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.- koodal.com-Kural

கௌரவம் படத்திலும்; நீதிபதியான தந்தை; தன்னை மீறிய மகனுக்குச் சவால் விட்டு; தன் மனைவியிடம்" டி நான் கவரிமான் சாதியடி" என ஓர் வசனம் வருகிறது.

கவரிமான் எனும் பெயரில் ஓர் திரைப்படமும் வந்துள்ளது.

"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா??? என்ற திரைப்பாடலடியும் ;இக்குறளையொட்டி எழுதப்பட்டதே!!!!

வள்ளுவரின் இக்குறளுக்குப் பொருள் எழுதிய பலர்; இந்தக் கவரிமா எனும் இமயமலையை அண்டிய பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கை கவரிமான் என ஓர் இல்லாத மான் வகையாக்கியது ;மாத்திரமன்றி.....அதன் வாழ்வியல்பைச் சரியாகப் புரியாமல்; வள்ளுவர் ஏன் ? அவ்விலங்கை உதாரணம் காட்டினார். என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன்.

விலங்குகளில் ஆர்வமுள்ளவன்; ஐரோப்பா வந்தபின் பல விலங்குகள் தொடர்பான;விவரணச் சித்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்தவன் என்ற வகையில் அன்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சரியென்பதால் உங்களுடன் பகிர்கிறேன். தங்கள் மேலான கருத்தை வரவேற்க்கிறேன்.

வள்ளுவர் தெளிவாக "கவரிமா" என்று சொன்னதை; எப்படிக் கவரிமானாக்கினரென்பது,புரியாத புதிர்!. மூலத்தில் "கவரிமான் அன்னார்" என இல்லை. தெளிவாக "கவரிமா அன்னார்" எனவே உள்ளது.

முதல் கவரிமா என்பது;மேலே உள்ள படத்திலுள்ள விலங்கு; இது தீபேத்; நேபாளம் போன்ற நாடுகளில் இப்போதும் உண்டு. இந்தியாவிலும் இமயமலைப் பக்கம்;காஷ்மீ ரில் இருக்கிறது. இதன் தோற்றம் மாடு அல்லது எருமை போல் இருக்கும்; உடல் பூராக அடர்ந்த உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்; காரணம் இதன் வாழ்விடங்கள்; - 40°C மிகக் குளிரானவை. இயற்கை இதற்குத் தந்த பாதுகாப்பு; அடர்ந்த உரோமம்; இவ் உரோமம் நீக்கிலால்; அது குளிர் தாங்காது இறந்துவிடும். ஆனால் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.

இதன் ஒரு மயிர் அல்லது உரோமம் உதிர்வதால்;நீங்குவதால்; அகற்றப்படுவதால் .....இவ்விலங்கு ஒரு நாளும் இறப்பதில்லை. அத்துடன் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும்; மனிதனுக்கும் உரோமம்;இறகு; மயிர் ; நாளாந்தம் சில உதிர்ந்து கொண்டே! இருக்கிறது. இந்த ஒரு சில உதிர்வதால் அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் இறப்பதில்லை.அதனால் இந்த ஒர் மயிர்;என்பது இந்த உரையில் இருந்து நீக்கப்படவேண்டும்.

இப்படத்திலுள்ள இந்த விலங்கை; மானினமாகக் கொள்ள முடியாது.; மரையினம் கூட இல்லை.

இது மாடு அல்லது எருமையினமே!!! இதைப் பண்டைய தமிழர் "கவரிமா" - என அழைத்துள்ளார்கள்.

கவரி என்பது;உரோமம் ; மயிர் என்ற கருத்துடைய சொல்லாக இருந்திருக்கலாம். "மா" என்பது -விலங்கு;மிருகம் எனும் பொருள்படும். எனவே அடர்ந்த உரோமமுள்ள விலங்கு ;மிருகம் எனும் காரணப்பெயராகவும் இருக்கலாம்.

இதே வேளை "சவரி முடி" என்ற சொல்லைக் கட்டாயம் ,நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றைய பெண்கள் பாவித்த பொய்முடி; இது இலங்கைக்குச் சீனாவில் இருந்து இறக்குமதியானது. என் தாயாரும் கொண்டை போடும் போது(முடி குறைந்த போது) பாவித்தார். கவரிமா- முடியில் செய்தது. அதுவே மருவி "சவரி" யாகியிருக்கலாமெனக் கூறக் கேட்டுள்ளேன்.

என் பாடசாலை வாழ்வில்; நான் ஓர் சராசரி மாணவன்; எனக்கு இந்தக் குறளை விளக்கிய ஆசிரியரிடம்; ஒரு மயிர் விழுந்தால் ; மான் செத்துடுமா??, எனக் கேட்டு "இவர் பெரிய அறிவாளி வள்ளுவரில் பிழை பிடிக்கிறார்" என வாங்கிக் கட்டியது. நினைவுக்கு வருகிறது.ஆனால் இப்போ கூறுகிறேன். இவ்விலங்கு பற்றிச் சரியான புரிதல்;அறிதல் இன்மையால்;இக்குறள் பற்றி மிகத் தவறான விளக்கமே தரப்பட்டுள்ளது.

இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
கவரிமான் இருந்தால் அதன் விபரத்தைத் தாருங்கள்; படத்தைக் காட்டுங்கள்.

48 comments:

கானா பிரபா said...

வணக்கம் அண்ணா

திரைப்படங்களைப் பார்த்தே கவரிமான் வசனங்கள் மூலம் கவரிமான் என்றால் என்ன என்பதை பால்யப்பருவத்தில் அறிந்துகொண்டேன். அதில் கவரிமான் திரைப்படம் உட்பட.
உங்கள் விளக்கம் விரிவாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

பார்ப்போம் இன்னும் யாராவது மேலதிக தகவல்களோடு வருகின்றார்களாவென்று.

Anonymous said...

Hi

Sorry for the spam, but I think you will be interested in www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.

You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.

I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.

C Ramesh

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
என் நோக்கமும் அதுதான்; நிச்சயம் யாராவது இது பற்றி விளக்க வேண்டுமென்பதே!! என் அவாவும் கூட.
பார்ப்போம்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

இலவசக்கொத்தனார் said...

கவரிமான் என ஒரு இனமே இல்லையா? ஒரு வகை மானிலிருந்து வாசனை திரவியம் எடுப்பார்களே அது கவரிமான் இல்லையா?

அது மயிர் விழுந்தா உயிர் நீக்குமா என்பது அடுத்து பேச வேண்டியது.

வித்தியாசமான சிந்தனை யோகனாரே.

(தங்களுக்கு மரபுக்கவிதைகளில் ஆர்வம் உண்டாவெனத் தெரியாது, இங்கு ஒரு வெண்பா தளம் நடத்துகிறோம்.)

ஞானவெட்டியான் said...

அன்பு யோகன்,
"தூர்வகந் துரியம் என்ப பொதியெருது எருமை யின்பேர்
கரானே வடவை மேதி சைரிபங் கவரி காரா
மூரியே மகிடம் எட்டு......"

சூடாமணி நிகண்டு பகர்வது:
பொதியெருது = தூர்வகம், துரியம்
எருமை=காரான்,வடவை,மேதி,சைரிபம்,கவரி,காரா,மூரி,மகிடம் ஆகிய எட்டும் எருமையின் பெயர்கள்.

கவரிக்குச் சாமரம், தேர் எனப் பொருள்கொள்வாரும் உண்டு.
ஆக, மயிர் நிறைந்த எருமையே "கவரிமா" என ஆயிற்று என்பது எம் முடிபு. கவரிமான் என ஒரு இனம் இருந்ததாகவும், அதைப் படகம், பட்டம்,மானமா,எகின் என அழைத்ததாகவும் சூடாமணி நிகண்டு கூறும்.
"சவரிசீகரமே வீசுஞ் சாமரங் கவரி யும்பேர்
கவரிமா படகம் பட்ட மானமா வெகினும் காட்டும்"

ஆயினும் முடி உதிர்தல் இயற்கையாய் உள்ள பண்புகளில் ஒன்று. அதற்காக அம்மான் உயிர் உயிர் துறந்ததா இல்லையா என அறிகிலேன்.

சின்னக்குட்டி said...

//கற்புடை மாதர்கொங்கை கவரிமான் மயிரின்கற்றை
வெற்புறுவேங்கையின்தோல் வீரன்கை வெய்யகூர்வேல்
அற்பர்தம்பொருள்கடாமு மவரவ ரிறந்தபின்னே
பற்பலர் கொள்வார் ரிந்தப்பாரினி லுண்மைதானே//.....


கோவிச்சுக்காதையுங்கோ.... யோகன்....தமிழிச்சி புலியை முறத்தாலை அடிச்ச கதை மாதிரி ...கவரிமான் என்றது கற்பனை மிருகமாயிருக்கும் ......இதுவும் தமிழனின்ரை என்னொரு விறுகீசாயிருக்குமோ

ரவி said...

///ஒரு மயிர் விழுந்தால் ; மான் செத்துடுமா??, எனக் கேட்டு "இவர் பெரிய அறிவாளி வள்ளுவரில் பிழை பிடிக்கிறார்" என வாங்கிக் கட்டியது///

இந்தமாதிரி தான், காலங்காலமாக சொல்லி ஏமாற்றி வரும் விஷயங்களை கேள்விகேட்டா தட்டி அடக்கிடுறாங்க..

இன்னும் ஊரை ஏமாத்த முடியுமா ?

எனக்கு ஒரு தெரிஞ்சு கவரிமான் தாடி அதிகமா இருக்கு என்பதுக்காக ஷேவ் செய்ய நாவிதர் கடைக்கு போயிருக்கு...

ஏன் எப்படின்னு கேக்காதீங்க..

ரவி said...

//தமிழிச்சி புலியை முறத்தாலை அடிச்ச கதை மாதிரி ////

நல்லா சிரிச்சேன். இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்து இருக்கும்..

முறம் எங்கே இருக்கும் ? சமயல் அறையில்...

புளி ( அதாங்க, ரசம் வைக்க உபயோகம் செய்வது) எங்கே இருக்கும் ?

அதுவும் சமையல் அறையில்...

கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இலவசக் கொத்தனார்!
வாசனைத் திரவியம் தரும் மானினம்; கஸ்த்தூரிமானென்பர். இதை சீனாவில் சிறுபண்ணையாக வளர்த்து வாசனைத்திரவியம் திரட்டுகிறார்கள்.
பூனையினத்தில் வாசனை திரவியம் திரட்டுவதை புனுகுப்பூனை என்பர்.
எனக்கு மரபுக் கவிதையில் மிக ஆர்வம் உண்டு. ஆனால் எழுதுவதில்லை..படிப்பது மாத்திரமே!!
தங்கள் தளம் பார்வையிடுகிறேன் .
என் கேள்வி!!! ஒரு மயிர் நீங்குவதால் உயிர் விடுமா?????
வருகைக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஞானவெட்டியான் ஐயா!
தங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி!
நிச்சயம் இதற்கு தாங்கள் விளக்கம் தருவீர்கள் என நம்பியே!! தனிமடலுமிட்டேன்.
பரிமேலளகர் உரையும் கவரிமா என்பதுடனே!! நின்ற நினையில் வள்ளுவரும் தெளிவாகக் கவரிமா எனக் கூறியுள்ள போதும்; இடையில்" மா" எப்படி "மான்"
ஆனது என்பதே!! என் சிந்தனை!!!!
கம்பன் பாடலாகட்டும்;தேவாரதிருவாசகமாகட்டும் ;எப்போதும் மனம் போன போக்கில் விளக்கம் சொல்லும் பாங்கு; நம் இலக்கிய வாதிகளிடம் அதிகம்.
அதனாலே எனக்குச் சந்தேகம்!!!!
"கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை- நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை" இதற்கு சாதாரணமக்கள் ஓர் விளக்கம் ;சமய வாதிகள் ஓர் விளக்கம்- நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
இப்படிப் பல பல உதாரணம் கூறலாம். முடிந்தால் திரட்டி ஓர் பதிவிடுகிறேன்.

கவரிமா!!!!இன்றும் வாழும் போது.....கவரிமான் மாத்திரம் முற்றாக அழிந்து விட்டதா???? வள்ளுவரின் பின்!!!!!சந்தேகம் வரக்கூடாதா??????
அடுத்து ஓர் மயிர் உதிர்வதால்!!!எந்த விலங்கும் மடியாது. இது முற்றான உயிரியல் அறிவற்றவர்கள் கூற்று.
ஆகவே!!! தவறான விளக்கமது என்பதனை அடித்துக் கூறலாம்.
ஆனால் இவர்கள் "ஒளிவட்டங்கள்" இவர்களை ஒப்புக்கொள்ளவிடாது. மேலும் மேலும் சால்சாப்புக் கூறவைக்கும்.
மீண்டும் நன்றி ஐயா!!
யோகன் பாரிஸ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யோகன் அண்ணா,
தக்க சமயத்தில் சொன்னீர்கள்! அதுவும் செந்தழல் ரவியின் காமெண்டுகள் ரசித்தேன்!

சென்னையில் ஹாமில்டன் பிரிட்ஜ், அம்பட்டன் வாராவதி ஆன கதை தெரியும்!
ஆனால் மிகத் தொன்மையான குறளுக்கே இந்த கதியா? "கால வழூஉ"
என்பது இது தானா?

கவரிமா சரி - இப்போ புரிகிறது!
மயிர் நீப்பின் வாழா - அதுவும் புரிகிறது. மயிர் "எல்லாம்" நீப்பின் வாழாது! குளிர் அப்படி!
"ஒரு" மயிர் உதிர்ந்தாலும் வாழாது என்பதெல்லாம் உயர்வோ-உயர்வு நவிற்சியோ?
அறிஞர் மு.வ கூட இந்த விளக்கம் தான் தருகிறார் :-(

அது சரி, வள்ளுவர் பேசாமல், நீரை விட்டு விலகிய மீன் வாழாது என்றோ, அல்லது வேறு ஏதாவது ஒன்றைக் காட்டி விளக்கி இருக்கலாமே!
நம் தென் பகுதியில் அவ்வளவாக அறியாத கவரிமா-வை ஏன் தேர்ந்து எடுத்தார் என்று தான் புரியவில்லை!

மேலும் இது போல வித்தியாசமான ஒப்புமை பிற குறள்களில் இல்லை என்று தான் நினைக்கிறேன்! குறள் வளம் உள்ளவர் வந்து மேலும் உரைக்க வேண்டும்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
என் எண்ணமும் அதுதான்; இது ஏதாவது" விறுக்கீசா" இருக்கு மெனத்தான் ;நினைக்கிறேன்.பரிமேலளகர் உரையிலிருந்து இவர்கள் ஏன்?? மாறு பட்டார்கள். என்பதே!! என் வாதம்.
மேலும் நீங்கள் தந்த பாடல்; யார் பாடியது; எங்கே படித்தீர்கள் எனும் விபரம் தர முடியுமா???
எனக்கு தேவையானது அதில் உண்டு.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!!!
என் சந்தேகத்தை இணைய உடன் பிறப்புக்கள் ஆகா; ஓகோ என வந்து தீர்த்து வைப்பார்கள். என எதிர் பார்த்தேன்.
ம் ....6 பேர் தான் வந்திருக்கிறாங்க......தமிழ்மண உடன்பிறப்புகளுக்கு என்ன???தேவையென்னே!! புரியல!!!!!!
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

அல்ப்ஸ் மலைச்சாரலில் கமோச்சொ எனும் ஒருவகை மானினம் உண்டு. இதற்கு மானைப் போல் கொம்புகளும், அடர்ந்த மயிரும் உண்டு. ஆனால் அதிக நீளம் என்று சொல்ல முடியாது. இந்த மானினத்தின் உரோமத்துடன் கூடிய தோல் குளிர்தடுக்கும் ஆடையாகப் பாவிக்கப்படுவதுண்டு. ஆனால் குளிராடைகளுக்கென ஆடுகளிடம் இருந்து மயிரைக்கத்தரித்து எடுப்பதுபோல் இம்மானின் உரோமம் சேகரிக்கப்படுவதில்லை. காரணம் உரோமம் அல்லாவிடின் அது குளிரில் இறந்துவிடும் என்பதே. மேலும் இதை இலகுவில் பிடிக்க முடியாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் இம்மான்களை வேட்டையாடப்ட்டோ அல்லது இறந்த பின்போதான் இவற்றின் உரோமம் எடுக்கப்படுகிறது. இவ்வகை மானினம் அல்ப்ஸின் உயர்ந்த சிகரங்களில் மட்டுமே தற்போது காணப்படுவதால் அதை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இத்தகைய மானினம் அல்ப்ஸ்ஸின் சீதோஸ்ணநிலைக்குச் சமமான இந்திய மலைச்சாரல்களிலும் இருந்திருக்கக் கூடும். மனித தேவைகளுக்கான வேட்டையாடல்களினாலும், பிறகாரணிகளாலும், இவ்வுயிரினம் அழிந்து போயிருக்கக் கூடும். அந்த உயிரினத்தின் பாதிப்பில் படைக்கப்பட்ட இலக்கிய வடிவங்களும், அவற்றின் மிகைப்படுத்தப்பட்ட பொருள் விளக்கங்களும், ஒரு மயிரை இழ்பதனால் இறந்து விடும் என்ற கருத்தாக்கத்தை செய்திருக்கலாம் என்பதே என் எண்ணப்பாடு.

சின்னக்குட்டி said...

//மேலும் நீங்கள் தந்த பாடல்; யார் பாடியது; எங்கே படித்தீர்கள் எனும் விபரம் தர முடியுமா???
எனக்கு தேவையானது அதில் உண்டு.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி//

http://sinthaamani.blogspot.com/2006/02/32.html

இந்தப்பாடல் விவேக சிந்தாமணியில் உள்ளது

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
இந்த பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை - நான் என்ற பாடல் கேட்டு ,நீர்கலந்த பாலைக் கண்டுபிடிக்க ஏன் கருவி அன்னமொன்றே போதுமே ,என எண்ணியதுண்டு.இப்படிப் பல உண்டு.
நீங்கள் கடைசியாகக் குறிப்பிட்ட அனிச்சம் என்பது, தொட்டாச்சுருங்கும், இதை மோப்ப- நுகர ,குழையும்- சுருங்கும். நமது சுவாசத்தில் இருக்கும் சூட்டுத் தன்மையில் அது சுருங்கும், ஆனால் நிச்சயம், வாடி மடியாது.ஆனால் நம் உரையாசிரியர்கள் ,எப்போதும் மிகைப்படுத்தலையே ! கலையாகக் கொண்டுள்ளார்கள்.
வரவு ,கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Kanags said...

யோகன், நல்ல விவாதத்துக்குரிய தலைப்பாகத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். மலைநாடான் ஆராய்ந்தறிந்து ஒரு விளக்கத்தோடு வந்திருக்கிறார். அதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே உள்ளது.

ஆறுமுக நாவலர் திருக்குறளுக்கு மட்டும் விளக்கவுரை எழுதவில்லை. பரிமேலழகர் விளக்கவுரையே போதும் என்றெண்ணி அதனையே பதிப்பித்தார் என்கின்றனர்.

அத்தகைய மிருகம் திருவள்ளுவர் காலத்தில் இருந்திருக்கலாம் அல்லவா? ஏதோ என் அறிவுக்கெட்டியது இவ்வளவுதான்:))

சின்னக்குட்டி குறிப்பிட்ட பாடல் விவேக சிந்தாமணியில் வருகிறது. ஞானவெட்டியானின் பதிவொன்றில் பார்த்தேன்.

G.Ragavan said...

யோகன் ஐயா...நல்லதொரு கட்டுரை. ஆய்வுக் கட்டுரை என்பதே கற்பனைகளின் மீது எழுதி தமது கருத்தை நியாயம் எனக் கற்பிக்கவே என்றான நிலையில் உண்மையான ஆய்வுக் கட்டுரை தந்தமை உங்கள் சிறப்பு.

படக்கென்று என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் நீங்கள் எழுப்பிய வினாக்கள் மிகச்சரியானவை.

ன் என்ற ஒற்று வந்தாலும் வராவிட்டாலும் இலக்கணம் சரியாயிருப்பதால் இந்தக் குழப்பம் வந்திருக்கிறது என நினைக்கிறேன். அதிலும் ஓலைகளில் எழுதப்பட்டு படியெடுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பிழை நேர்ந்திருக்கலாம். ஆனால் பரிமேலழகர் சரியாக இருக்கிறாரே!

அடியார்க்கு நல்லாரோ நச்சினார்க்கினியாரோ குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்களா? இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தால் அவைகளையும் பார்க்கலாம்.

கவரிமா என்றால் அதற்கு நீங்கள் தரும் விளக்கமே மிகப் பொருத்தம். மிகச் சிறப்பு.

மான் என்று எடுத்துக் கொள்வோம். சமீபத்தில் சென்னையில் நான்கு மாதம் தங்க வேண்டியிருந்தது. கோட்டூரில் வீடு. அங்கு மான்கள் அடிக்கடி வரும். இரவில் கோட்டூர் பாலத்திலிருந்து இடது புறம் திரும்பி உள்ளே போனால் சமயங்களில் மான்கள் காணக்கிடைக்கலாம். அதை விட நிறைய மான்களை ஐஐடியிலும் காந்தி மண்டபத்தை ஒட்டிய காடுகளிலும் காணலாம். புள்ளிமான்கள்தான். மிகவும் மெல்லிய குணம் உடையவையாம்.

ஒரு நாள் காலையில் செய்தித்தாளில் இப்படி வந்திருந்தது. ஒரு வார காலகட்டத்தில் இரண்டு மான்கள் இறந்து போயினவாம். ஏனென்றால் நாய் குலைத்தாம். மிகமிக மென்மையான மான்கள் நாய்கள் கூடி நின்று குரைத்தாலே இறந்து விடும் என்பது எனக்கு அப்பொழுது புதிய செய்தி. அது போல ஏதேனும் மானினத்தின் மயிரைப் பறிக்க யாரேனும் முயன்றிருந்தால் அந்த அதிர்ச்சியில் கூட செத்திட வாய்ப்புண்டு. அப்படியும் நிகழ்ந்திருக்கலாம்.

இன்னொரு விதமாயும் தோன்றுகிறது. மயிர் நீங்கின் உயிர் வாழா அல்ல. மயிர் நீப்பின் உயிர் வாழா. ஆக மானே மயிரை இழக்கிறது. மான்கள் முதிர்ந்த காலத்தில் மயிர் உதிரத்தானே செய்யும். மனிதர்களுக்கும் மண்டை மயிர் உதிர்ந்து சொட்டை வருகிறதே. அது போல முழு நலத்தோடு இருந்த மான் மயிர் நீக்கத் தொடங்கி விட்டால் அதை முதிர்ச்சி அதன் தொடர்ச்சி சாக்காடு என்றும் கொண்டிருக்கலாம்.

இதை கவரிமாந்தான் சரியானது என்பதற்காகச் சொல்லவில்லை. இப்படியும் இருக்கலாம் என்று தோன்றியதற்காகச் சொன்னது. வெறும் நகைச்சுவைத் துணுக்காய்ப் பின்னூட்டம் இட ஒப்பாததால் எழுதியது.

கவரிமா என்றிருப்பின் உங்கள் விளக்கம் மிகப் பொருத்தம். மான் என்றிருப்பினும் தவறில்லை என்பதற்கு மேலே சொன்ன கருத்து. மாவா மானா என்று அறுதியிட்டுச் சொல்ல எனக்கு அறிவு போதாது.

உங்களது இது போன்ற ஆய்வுகள் தொடர வேண்டும். அதுவே எனது விருப்பம்.

G.Ragavan said...

// என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன். //

சத்தியமாகச் சொல்கிறேன். இந்த வரிகளைப் படிக்கையில் திக்கென்று இருந்தது. அநுபூதி, தமிழ்ச் செய்யுட்கள் என்று பொருள் சொல்கையில் ஏதேனும் தவறாக சொல்லி விடக்கூடாதே என்று. முருகனே துணை.

VSK said...

பாஸ் க்ருன்னியன்ஸ் [ yak, bos grunniens.]
எனும் வகையைச் சேர்ந்த ஒரு எருது இனம்தான் கவரிமான் என அழைக்கப்படுகிறது.

"கவரிமான்" எனப் போட்டு தேடியபோது இது தெரியவந்தது!

யோஹன் சொன்னது போல மலை மற்றும் பனிப் பிரதேசங்களில் குறிப்பாக திபெத்தில் இவை அதிகம்.

இவற்றின் முக்கிய அமைப்பே இதன் நீளமான முடிதானாம்!

இவை உதிர்ந்து போகுமானால், குளிரால் பாதிக்கப்பட்டு, இறந்து போக வாய்ப்புகள் அதிகம்.

எனவே வள்ளுவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

உரை எழுதியவர்கள் சொதப்பியிருக்கிறார்கள்!

நன்றி யோஹன் - பாரிஸ் !

Here is the link!

கவரிமான் yak, bos grunniens.
http://animaldiversity.ummz.umich.edu/site/accounts/information/Bos_grunniens.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
மருவலென்பதில்; தங்கள் முறம்;புளி(லி) சமையலறை எல்லாம் என்ன??? உருமாற்ற மடைந்ததோ??,
இணைய யுகத்தில் தட்டி அடக்கல் இனிச் சரிப்படுமென நினைக்கவில்லை.
வந்து எட்டிப் பார்த்ததுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

VSK said...

நான் போட்ட மறுமொழி கிடைக்கவில்லையா?

இன்னும் வரவில்லையே பதிவில்?

VSK said...

Kural - 969
Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.
Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

Here is G.U.Pope's translation.

Hetoo got cofused between a yak and a yark, I think.

But leaving the 'r' it still apllies tothe Yak species, I have quoted.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
வள்ளுவர் கவரிமா எனத் தெளிவாகக் கூறிய விடயத்தை; ஏன் ??? நம் உரையாசிரியர்கள் கவரிமானாக்கினார்கள் என்பதே!! என் வாதம்.
அடுத்து ஏன்??? ஒரு மயிர் நீங்கினால் உயிர் போகும் என உரையெழுதினார்கள். மு. வ உட்பட . இதை இந்த நவீன ஒப்புநோக்கக் கூடிய காலங்களிலும் ஏன் ??தொடர்ந்து பதிப்பிக்கிறார்கள்.
புதுப் பதிப்புகளில் ஏனைய மொழியார் கடைப்பிடிக்கும்; மாறுபட்ட விடயங்களையும், தவறுகளையும் களைவது போல்; ஏன் நம் தமிழ் மொழிப்பதிப்பகங்கள் கடைப்பிடிப்பதில்லை.
காலம் பூராகவும் ஈயடிச்சான் கொப்பி விளையாட்டுத் தானா???
தாங்கள் முதல் முதல் வந்து கருத்துக் கூறியுள்ளீர்கள். பாசுரங்களில் உங்கள் தேர்ச்சியை அறிவேன்.
பழந்தமிழ் விடயத்தில் உங்கள் கருத்தை எதிர் பார்த்தேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

மிகச் சிறந்த ஆராய்ச்சி யோகன் ஐயா. உங்கள் பதிவு மிக மிக நல்ல முறையில் எழுதப் பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன்பே படித்துவிட்டேன் இந்தப் பதிவை. இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது.

VSK said...

என் கருத்துப்படி கவரிமான் என்றாலே எருதைத்தான் குறிக்கிறது!

நான் கவரிமா என்று போட்டுத் தேடவில்லை.

கவரிமான் என்றுதான் தேடினேன்!

இராம.கி said...

கவரிமா என்பது யாக் எருமை என்பது சரியே.

அதே பொழுது மான் என்ற சொல்லிற்கு விதப்பான பொருளை (deer)மட்டுமே பார்க்கிறீர்கள். எந்த ஒரு தமிழ்-தமிழ் அகரமுதலியையும் பாருங்கள். அந்தச் சொல் விலங்கு என்ற பொதுப்பொருளைக் குறிப்பதாகவும் போட்டிருக்கும்.

மான்/மா என்ற இரண்டுமே பொதுவான (generic) விலங்கு என்ற பொருளைக் குறிக்கும் சொற்கள். கூடவே மானுக்கு விதப்பான பொருள் உண்டு. இதே போல மா என்ற சொல்லிற்கும் பொதுப்பொருள் விலங்கு. விதப்பான (specific) வகையில் பல குறிப்பிட்ட விலங்குகளையும் குறிக்கும்.

அன்புடன்,
இராம.கி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
நீங்கள் குறிப்பிடும் "கமோச்சொ" இத்தாலியச் சொல்(camoscio) என நினைக்கிறேன். அதன் பிரான்ஸ் சொல்- CHAMOIS" -The chamois (Rupicapra rupicapra) is a goat-like animal that lives in the European Alps, central Italian Appennine regions Corno Grande, as well as the high mountains of Slovakia (Rupicapra rupicapra tatrica - High Tatras, West Tatras and Belianske Tatras), Romania, Bulgaria, northern Greece and the Republic of Macedonia. Chamois were successfully introduced to the South Island of New Zealand in 1907, where it has caused damage to mountain ecosystems. It is one of only two species of the genus Rupicapra, the other being the Pyrenean Chamois, Rupicapra pyrenaica. It is in the Caprinae subfamily of bovids, along with sheep and goats.
சமுவா" (பிரஞ்சு உச்சரிப்பு) எனும் விலங்கு; மலையாட்டு வகையைச் சேர்ந்தது.வெள்ளாட்டைப் போல் உரோமம் குறைந்தது. ஆட்டுக் கொம்பைவிடச் சிறிய கொம்புடையது. இதை bovides என வகைப்படுத்தியுள்ளார்கள். விலங்கியலாலர்கள். மானினம் cervides என வகைப்படுத்தப்பட்டுள்ளது; இவற்றை நீங்கள் Le Petit Larousse illustre ல் ; பார்க்கலாம். அல்ப்ஸ் மலையோர மக்கள்; உரோமத்துடன் தோலில் உடை செய் தணிவதுண்டு.இப்போ வேட்டையாடத் தடை செய்யப்பட்ட இனம்.

ஆனால் வள்ளுவர் தெளிவாக "கவரிமா" என எழுதியதை; அதாவது இந்தியாவிலும் இருந்ததால் அறிந்தே எழுதியதை; உரையாசிரியர்களில் பரிமேலளகர் கூட கவரிமா எனக் கூற ; இவர்கள் ஏன் ?? அதை மானாக்கினார்கள். என்பதே!! எனக்குப் புரியாமல் இருக்கிறது.

மான்களை விட மக்களுக்கு அதிகம் பரீட்சயமான; பழக்கமான; தெரிந்த விலங்கு மாட்டினங்களே!!!!!; அதனால் வள்ளுவர் மக்களுக்குத் தெரிந்ததையே ! உதாரணம் காட்டியிருப்பார்; என எண்ணத் தோணவில்லையா????

சூரியன் பூமியைச் சுற்றுதென ஒருவர் கூற ; பின் வந்தவர் இல்லை பூமிதான் தானும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்று தெனக் கூறி; அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இப்படி உலகில் பல விடயங்கள் ; இப்போதுள்ள அறிவியல் வளர்ச்சியால் மாற்றுக் கருத்துக் குட்பட்டுள்ளன. அவை அப்பப்போ மக்களுக்கு அறியத்தரப்படுகிறது.

ஏன்?? எங்கள் தமிழ் விடயங்களில் ; மாற்றி எழுதுவதில்லை. அதைப்பற்றிச் சிந்திப்பதுமில்லை.

இப்போ கூட "ஓர் மயிர்" நீங்கினால் இறந்துவிடுமென்பதை; ஏன்??? நீக்க அஞ்சுகிறார்கள்.

என்னும் எத்தனை காலத்துக்கு இதை நம் பிள்ளைகள் படிப்பது என்பதே!!! என் கேள்வி!

மனிதனின் மிகப் பழைய நண்பன் குதிரை; கழுதை ;மாடு; நாய் வாழும் போது;;;;;இம்மிருகம் நவீன வேட்டைக்கருவிகள் அற்ற காலங்களிலே அழிந்து விட்டதா???

அதுவும் வள்ளுவர் காலத்தின் பின்னும்; ஐரோப்பியர் வருகைக்கு முன்னும் இந்தியர்களில்; பெரும் பான்மையோர் ;சைவபோசனிகள்.
தங்கள் விரிவான ஆய்வுக்கும் ,பதிலுக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கனக்ஸ்!
மலை நாடருக்கும்; போடும் பின்னூட்டத்தையும் பார்க்கவும். அவரும் அப்படி ஓர் மிருகம் இருந்திருக்கலாம்!!!???? அழிந்திருக்கலாம் .;;!!! எனும் ஊகத்தையே வெளிக் கொணர்கிறார்.

ஆனால் திருவள்ளுவரும்; பரிமேலளகரும் தெளிவாக இருந்த ; கவரிமா எனும் எருமை அல்லது மாட்டினத்தை ; பின்பு உரையெழுதியோரே!!! மானாக்கிவிட்டு ,இன்றும் தொடருகிறார்கள்.

மான்களை விட மக்களுக்கு அதிகம் பரீட்சயமான; பழக்கமான; தெரிந்த விலங்கு மாட்டினங்களே!!!!!; அதனால் வள்ளுவர் மக்களுக்குத் தெரிந்ததையே ! உதாரணம் காட்டியிருப்பார்; என எண்ணத் தோணவில்லையா????

கவரிமா என்பது இமயமலையடிவாரங்களில்;வாழும் அடர்ந்த ,நீளமான மயிரையுடைய எருமை வகை;இது மிகுந்த குளிர்ப்பிரதேசத்தில் வாழக்கூடியது. ஆங்கிலத்தில் yak என்பர். என குறிப்பிட்டால்....படிப்போர் புரிவர். இதைப் பற்றி மிக அறிய விரும்புபவர் yak பற்றி ஆங்கிலத்தில் தேடி விபரத்தைப் பெறுகிறார்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

Anonymous said...

Its is not a deer. Its the Yak.

Please go the following URL-

http://www.maroon.com/yaks/

Go to the section titled -

'Tibetan Yak Facts'.

Then refer to the 4th paragraph.

Regards

JayBee

4/28/2003
http://www.treasurehouseofagathiyar.net/24000/24087.htm

VSK said...

கவரிமா என்றாலும் கவரிமான் என்றாலும் ஒன்றே.

மயிர் நிறைந்த ஒரு விலங்கினத்தையே அது குறிக்கும்

பனிப்பிரதேசங்களில் காணப்படும் இவற்றிற்கு மயிர் இருத்தல் மிகவும் தேவையான ஒன்று.

மயிர் நீங்கின் உயிர் வாழா.

இதில் ஒன்றும் பிழை இல்லை.

பரிமேலழகர் கூட அப்பொதிருந்த வழக்குப் படி, இப்போது இரா. ம. கி ஐயா சொல்வது போல, விலங்கு என்ற பொருளில் தான் எழுதியிருக்கக் கூடும்.

பின் வந்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதை மான் இனம் என்றும், மயிர் என்பதை ஒரு மயிர் என்றும் திரித்திருக்கலாம்.

இது எனது மூன்றாவது பின்னுட்டம்.
இதற்காவது ஏதாவது சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன், யோ - பா.

enRenRum-anbudan.BALA said...

யோகன்,
அருமையான பதிவு, மற்றபடி விவாதிக்க எனக்கு சரக்கு கிடையாது :)

இராம.கி ஐயா தான் சொல்ல வேண்டும் !

Anonymous said...

கவரிமான் என்றும் கம்பராமாயணத்தில் வருகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எஸ் கே ஐயா!
தங்கள் வரவும்,பயனுமான கருத்துக்களுக்கு நன்றி!, நீங்கள் விலங்கியலை ஓர் பாடமாகவும் படித்திருப்பீர்கள்.
வரிசையாகப் பின்னூட்டமிடுகிறேன். அத்துடன் சில பின்னூட்டம் மேலும் தகவல் சேகரிப்பால் பெரிய கட்டுரையுருப் பெறுகிறது.அத்துடன் ஆதாரத்துடன் சொல்லவேண்டியுள்ளதால் விபரக் கொத்துகளின் உதவி, குறிப்புத் தேவையாக உள்ளது.
அத்துடன் விடுமுறையில் லண்டனில் நிற்ப்பதால் நேரமொதுக்கக் கடினமாகவுள்ளது.
எனவே உங்களுக்கு விபரமாக எனக்கு மேலும் ஏற்படும் சந்தேகங்களடங்கிய பின்னூட்டமிட தற்போது என் கைவசம் என் "விபரக் கொத்தி"ல்லை.
எனினும் நான் தொடர்வேன்.
மீண்டும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
அன்புடன் வந்து விரிவான பின்னூட்டமிட்டூக்கிவிக்கும் உங்களுக்கு நன்றி!
தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு ,பதிலெழுத நான் இப்போ லண்டனில் நிற்ப்பதால், சூழ்நிலையில்லை
எனினும் ,கட்டாயம் என் சந்தேகங்களைப் பகிர்வேன்.
28/10 பின் சாவதானமாக இடுகிறேன். தட்டச்சவும் வேண்டுமே!!!!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
உங்களுடமிருந்து நிறைய தகவல்கள் எதிர்பார்த்தேன். தேடிக் கூறவும்.
விடுமுறைக்கு லண்டனில் நிற்கிறேன்.
வரவுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இராம.கி ஐயா!
தங்கள் வரவும், தகவல்களுக்கும் மிக்க நன்றி!
என் வீட்டுப்பக்கம் தமிழ்ப்புலமைமிக்க உங்களைப் போன்றோரும் வந்தது. பெருமகிழ்வே!!!
தங்களுடன் மேலதிக சந்தேகம் தீர்க்க ,நான் விடுமுறையில் நிற்பதால் கைவசம் விபரக் கொத்தில்லை.
28/10 பின் , கட்டாயம் ஓர் பின்னூட்டமிடுவேன். நான் தெளிய........பிரன்ஸ்,ஆங்கில விபரக் கொத்துக்கள் மாறுபடுகின்றன,generic விடயத்தில்........
உங்கள் மின்னஞ்சல் கிடைத்தால் ,தனிமடலிடுகிறேன்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்றும் அன்புடன் பாலா!!!!
தங்கள் பாராட்டுக்கு நன்றி!
உங்களுக்குச் சரக்கில்லையா????,எனக்கு ஆங்கிலம் சரியாகத்தெரியாது, பிரஞ் அதுவும் தெரியாது. இதைச் சொல்ல என்றும் நான் வெட்கப்படவில்லை.....
இப்படிப் பல குறைகள் உள்ளதால் சந்தேகத்துக்கும் குறைவில்லை.
தங்கள் வரவுக்கு நன்றி......இன்னும் பல சந்தேகமுண்டு....அப்பப்போ வெளிவிடுவேன்....வந்து தீர்க்க முற்ப்படவும்.
யோகன் பாரிஸ்

Chandravathanaa said...

இராம.கி அவர்களின் விளக்கம் சில சந்தேகங்களைத் தீர்க்கிறது.
அதே போல Skயின் பதிலும் சில விளக்கங்களைத் தந்தது.

வெங்கட்ராமன் said...

கவரி மா - மயிர் போனால் வாழாது.
நீ மானம் போன பிறகு வாழாதே.

என்று நான் எடுத்துக் கொண்டேன்.

(எனக்கு இது தான் சரி என்று படுகிறது)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரவதனா!
இராம .கி, எஸ்.கே அண்ணாக்கள் கூறியவிடயங்கள், எனக்குச் சில தெளிவுகளும் புதிய சந்தேகங்களும் தந்தன. அவை என் French Encyclopedia ல் தான் பார்த்துக் கூறவேண்டும். தற்ப்போது லண்டனில் நிற்பதால் கைவசமில்லை. திருப்பிய பின் இடுகிறேன்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெங்கட்ராமன் !
உங்களுடன் நான் ஒத்துப் போகிறேன்.
அதே வேளை இந்தக் கவரி மா..........ஏன்????? மான் ஆகியது ,இதுதான் சிக்கல்.
பலர் மிக அருமையாக விளக்கம் தருகிறார்கள். எனினும் சில ஐயம் உண்டு, அய்யன் குறளில்!!!
யோகன் பாரிஸ்

வல்லிசிம்ஹன் said...

கவரிமா படித்தேன் யோஹன்.
மானும் ஒரு மா தானே. எனக்குப் புரிந்தது, மானம் இழந்தால் மானுடம் பிழைப்பது அவசியம் இல்லை என்பது.

இப்போது அது சரிப்படாது.மானிடத்தில் ஒருவரை மிதித்து மற்றவர் முன்னுக்கு வருகிறார்கள். மதித்து வருபவரோடு இருக்கலாம்,.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி!
வரவுக்கும் கருத்துக்கும், மிக்க நன்றி!
மான் ஒரு வகை மா ,அதில் எந்த ஐயமுமில்லை. எனினும் மாக்கள்( விலங்குகள்) வகை வகையாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு பொதுவான பெயர்களும் உள்ளன. பின்பும் தமிழில் குழப்பமாகவே!!! விளக்கங்கள் உள்ளன. என்பதே புரியாமல் உள்ளது.
அது பற்றிய விபரங்கள் அடங்கிய பதிவு விரைவில் இடுவேன்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலியாக வந்த நண்பருக்கு!
கம்பராமாயணத்தில் "கவரிமான்" கூறப்பட்டதாகக் கூறியுள்ளீர்கள். தயவுசெய்து அந்தப் பாடலின் தலைப்பையோ;பாடற் படலத்தையோ; எண்ணையோ தந்துதவமுடியுமா???
நன்றி!
யோகன் பாரிஸ்

பகீ said...

அன்புடன் யோகன்,

இந்தப்பதிவு வெறுமனே சங்க இலக்கியம் சித்தர் பாடல்கள் என்று இருந்த என்னை திருப்பவும் திருக்குறளை ஆழப்படிக்க வைத்துவிட்டது. உண்மையில் நான் திருக்குறள் படித்தபோது குறளை படித்து பின் கருத்தை தெரிந்து கொண்டு அப்பால் போய்விடுவேன். அவற்றில் ஆராய்ச்சி யெல்லாம் செய்வது கிடையாது. ஆனால் இப்போது அப்படி கிடையாது.

நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பகீ!!
உங்களைப் போன்ற இளைஞர்கள்; சித்தர் பாடல் படிப்பது என்பதனைக் கேட்கச் சிந்தை இனிக்குது.
தொடரவும். நீங்கள் கட்டாயம் ஞானவெட்டியான் ஐயாவின் பதிவுகள் படிக்க வேண்டுகிறேன்.அள்ள அள்ளக் குறையாமல் அருமையாகத் தருகிறார்
உங்கள் மனதில் திருக்குறளை ஆழப் படிக்க வேண்டுமெனும் ஆவலை என் பதிவு ஏற்படுத்தியதென்பதை அறிய ,மிகுந்த ஆனந்தமாக உள்ளது.அந்த ஆக்கத்தை உருவாக்க என் போல தட்டச்சு தெரியாதவர்களுக்கு வெகுசிரமமும், நேரச் செலவும் மிக்கது; அதற்குப் பயன் எனக் கருதுறேன்.
அப்பதிவுக்கு நான் சகலருக்கும் ஓர் பதில் பின்னூட்டமும்; வேறுபல சந்தேகங்களும் அறிவுக்கவுள்ளேன்;
அது தயார் நிலையில் உண்டு;. என் தளப் பிரச்சனையால் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Anonymous said...

நண்பன் யோகன் அவர்களுக்கு!
கவரிமா கவிதையையும் வாசித்தேன், உமது சந்தேகத்தையும் கண்டுகொண்டேன். அது தொடர்பான சிறிய தேடலை நான் மேற்கொள்ளவிருக்கிறேன். முடிந்ததும் உமது சந்தேகம் இயன்றளவிலாவது என்னால் தீர்க்கமுடியுமென்பது எனது நப்பாசை. அடுத்து உமக்கோரு நற்செய்தி; எனது ஆக்கங்கள் இப்போது நண்பன் பகீ அவர்களின் வித்துவத் தன்மையாலும் எனது ஊக்கத்தினாலும் தமிழ்மணம் வலைப்பதிவில் இடம்பெறத் தொடங்கியுள்ளது. ஆக்கங்களை வாசியுங்கள் தவறாது பின்னூட்டமிடுங்கள். ஆ.... மற்றுமொரு விடயம், மறந்தே போய்விட்டேன். தாங்கள் தற்போது மிகுந்த கவலையாக (தங்கள் ஆக்கங்கள் தமிழ்மணம் முகப்பிற்கு வராததால்) இருப்பதாக நண்பன் பகீ மூலமாக அறிந்துகொண்டேன். உங்களிடம் சிறிய வேண்டுகோள் யோகன்...... உங்களைப்போன்ற ஒரு நல்ல விமர்சகன் எப்போதும் வலைப்பதிவர் வட்டத்தில் உருவாகும் என எந்நாழும் நம்பமுடியாது. மனம் தளரவேண்டாம், முயற்சிசெய்யுங்கள் நிட்சயம் தமிழ்மணம் பதிவில் ஒன்றாய் வலம்வருவோம். தயவுசெய்து ஆக்கங்களையோ! விமர்சனங்களையோ!நல்ல பின்னூட்டங்களையோ எழுதுவதை நிறுத்தவேண்டாம். இது தொடர்பான உங்கள் அபிப்பிராயத்தையும் நான் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
வானம்பாடி -கலீஸ்-
Email- pxcalis@gmail.com

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வானம்பாடி கலீஸ்!
கட்டாயம் "கவரிமா" பற்றி ஆய்ந்து ;அடுத்தவரும் கருத்துக் கூறவேண்டுமெனும் நோக்கிலே இப் பதிவிட்டேன்.
தங்கள் ஆய்வை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
பதிவுகளில் காலம் தள்ள கணனி அறிவு முக்கியம். அது மிகப் பெரிய இடஞ்சலாக எனக்கிருக்கிறது.
தாங்கள் கூறியதைக் கவனிக்கிறேன்.
யோகன் பாரிஸ்