Friday, October 27, 2006

உன்னுடைய வேல்....உறு துணை.....


உன்னுடைய வேல்....உறு துணை.....

உன்னுடைய வேலொன்றே...உறுதுணையாய் வருகிறது.....
கும்மிருட்டுப் பாதையிலும் கோலாகத் தெரிகிறது.....

என்னுடைய ஆட்டமெல்லாம் நீ..அமைத்த மேடையிலே.......
இசைவதுவும் அசைவதுவும் நீ...காட்டும் யாடையிலே....

பன்னிரு தோள்கள் எனும் பரந்தவெளி பறந்துவர....
சின்னமனச் சிறகதுதான் சிறிதேனும் பயின்றிடுமோ....

தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைக் காண்பதற்கு...
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ....!

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்,,,,எழுதியவரைத் தெரியவில்லை.

கந்தனுக்குகந்த கந்த சஷ்டியில் இப்பாடலைக் கேட்பதோ படிப்பதோ மனநிறைவைத் தரும்....

இது இலகுதமிழில் அமைந்த உன்னதமான பாடல்....இப்பாடலைப் பிரியமுடன் கேட்பேன்.

கேட்கும் போதெல்லாம் எனக்கு இரு கந்தரலங்காரப் பாடல்கள் நினைவுக்கு வரும்....

விழிக்குத் துணை திரு மென்மலர்ப்பாதங்கள்..மெய்மைகுன்றா....
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி...
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!!!!

இருட்டுப்பாதையிலும் ,குருட்டுப் பார்வையிலும் கோல் போல் நம் வாழ்வில் வேலவன் வேல் துணை என்பதனை சொல்வதில், கந்தரலங்காரத்தின் கருத்தை உள்வாங்கி அழகுற எழுதப்பட்டுள்ளது.

மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞானதெய்வத்தை மேதினியில்
சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே..!

இக் கந்தரலங்காரத்தின் கருத்தையொட்டிய அடிகளாக "தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைப் காண்பதற்கு! என் முகத்தில் அமைந்திருக்கும் இரு விழியால் இயன்றிடுமோ!!" என இரு விழி போதாது, நாலாயிரம் கண் வேண்டுமென அமைவது, இப்பாடலைச் சாதாரண தமிழறிவு மிக்கோரும் புரிந்து கொள்ளும்படி உள்ளது.

இப்பாடலின் சிறப்பு.அழகான கர்நாடக இசை மெட்டில் இசையமைத்து, சொல்லுக்குயிரூட்டும் சீர்காழியாரின் உச்சரிப்பில் பாடல் மனம் கவர்கிறது.

சீர்காழியார் என் சிந்தைகவர்ந்த பாடகர், நம் இசையில் எனக்கு லயிப்பை ஏற்ப்படித்தியவர்.இப்பாடலை நீங்களும் musicindiaonline.com இணையத் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/m/artist.19/பாடலைத் தரும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லை."கந்தன் கருணை" கிட்டட்டும்.

6 comments:

கானா பிரபா said...

ஈழத்துப் பக்தி மரபைக் கந்தபுராணக்கலாச்சாரம் என்று அழைப்பதாக முன்பு படித்திருந்தேன். கந்தஷஷ்டி காலத்தில் இப்பதிவுகளை வழங்குவது குறித்து நன்றிகள் அண்ணா.

குமரன் (Kumaran) said...

கந்த சஷ்டிக்கு அருமையான பாடல்களாக எடுத்து இட்டிருக்கிறீர்கள் ஐயா. மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யோகன் அண்ணா
இந்தப் பதிவில் முன்னரே பின்னூட்டினேனே; கிட்ட வில்லையா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
மிக உண்மை; ஈழப் பக்தி கலாச்சார மரபு; கந்தபுராணக் கலாச்சாரமே!!!முருகன் கோவில்களில் சூரன் போர் மறக்க முடியாதது.சரசுவதி பூசை முடிந்தவுடன் தொடங்கி விடும்.வீடு மெழுகலும் விரதமும்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புடன் குமரனுக்கு!
இப்பாடல் எனக்குக் கேட்ட நாள்முதல் பிடிக்கும்; அதிலுள்ள கந்தரலங்காரச் செறிவுவை,நினைத்து மகிழ்வேன். அதனால் பகிர்ந்தேன்.
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவிசங்கர்!
பின்னூட்டினீர்களா?? ; தவறுதலாக அழித்துவிட்டேன்; என நினைக்கிறேன். வரவுக்கு நண்றி!
யோகன் பாரிஸ்