Friday, March 23, 2007

இன்னிசை வேந்தர்!மிழிசைக்கும் ; திரைஇசைக்கும் தன் இன்குரலால் புகழ் சேர்த்து;
உலக அரங்குகள் பலவற்றில் தமிழ் இசை ஒலிக்க வைத்து ;
தமிழிசை ஆர்வலர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்று;
தன் வாழ்நாள் எல்லாம் தமிழிசைக்கு வளம் சேர்த்து;
தமிழ்க் கடவுள் முருகன் மேல் மாறாப் பெரும் பக்தியுடன் வாழ்ந்து
மறைந்த இன்னிசை வேந்தர்; கம்பீர கானமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் ; இறை எய்திய தினம் இன்று!!

19 - 01 - 1933 ல்; ஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி எனும் தவப்பூமியில்; சிவசிதம்பரம் - அவயம்பாள் தம்பதியினருக்கு புத்திரராகப் பிறந்து;
சிறுவயது முதலே இசையார்வத்தால் ; நாடகங்களில் நடித்து; பின்
தமிழிசைக் கல்லூரியில் இசைகற்று 1949 ல் "இசை மணி" பட்டம்
பெற்று அதன் பின் திருப்பாம்புரம் சுவாமிநாதன் பிள்ளை எனும் பிரபல வித்துவானிடம்; குருகுல வாசத்தில் இசைகற்றுத் தேறி 1951 - 1952 பல போட்டிகளில் வென்று; சங்கீத வித்துவானாக; இசையரசராகப் பவனிவந்தார்.

இந்நிலையில் திரையுலகும் இவரை இருகரம் நீட்டி வரவேற்க; கல்கியின் "பொன்வயல்" திரைப்படத்தில்"சிரிப்புத்தான் வருகுதையா" என்ற பாடலுடன் மிக வெற்றியாக தன் இசையாட்சியை விரிவாக்கிப் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களையும் பாடி ;பாமரரும் இசை உணர வகை செய்தார்.

சரச மோகன; சங்கீர்தாமிர்த!
அமுதும் தேனும் எதற்கு!
ஆடியடங்கும் வாழ்க்கையடா!
மழை கொடுக்கும்!கொடையுமொரு
அறுபடை வீடுகொண்ட திருமுருகா!
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
!

இவர் பாடிய காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் சில!!

சாத்திரீய சங்கீதத்தை ஒத்த இசையா!! , கூப்பிடு சீர்காழியை என்னும் அளவுக்கு ; தனக்கென ஒரு பாணியை வகுத்துச் சாதித்தார்.இசை ஆர்வலர் உள்ளங்களை வென்றார். அத்துடன் பல திரைபடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இட்ட அகத்தியர், நக்கீரர் வேசங்கள் மறக்க முடியாதவை.

இவர் திறமை கண்டு பட்டங்களும் பதவிகளும் ;தேடிவந்தன . இதில் இந்திய அரசின் "பத்மஸ்ரீ " விருது அன்றைய ஜனாதிபதி திரு. ஜெல் சிங் அவர்களால் 1983ல் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார்.


பதிவிகளாக “தியாகராச உற்சவ சபாக்” காரியதரிசியாகவும்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பிரிவு முதல்வராகவும் கடமையாற்றினார்.

எந்த வித சிக்கலிலும் புகாத எல்லோர்க்கும் இனிய பண்பாளராக வாழ்க்கை பூராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

பல பக்தி இலக்கியங்களுக்கு இசைவடிவம் கொடுத்தார். குறிப்பாக கந்தசஸ்டி கவசம்; அபிராமி அந்தாதி ; கந்தரலங்காரம் அவற்றில் பிரபலமானது.

இவர் பக்திப் பாடல்கள் மெய்சிலிற்க வைப்பவை. கேட்போரை உருகவைக்கும்; சொல்லுணர்ந்து அவர் பாடும் பாங்கே அலாதியானது.

என் இளமைக் காலத்தில் ஊரில் கோவில் திருவிழாவெனில்; ஒலிபெருக்கி கட்டி காலை இளங்காற்றுடன் வரும்...விநாயகனே...வெவ்வினையை வேரறுக்க வல்லான்..!என்ற அவர் குரல் என் ஐம்புலனையும் சிலகணம் கட்டிப்போடும்.

அப்படி!! ஓர் உச்ச நிலைக்கு கொண்டு சென்று;பரவசத்திலாழ்த்தும் குரலால் அவர் கோடிக்கணக்கான இரசிகர்களைப் பெற்றார். இதனால் தமிழர் வாழும் நாடெல்லாம் பறந்து;பறந்து அவர் பாடி மகிழ்வித்தார்.

அந்த வகையில் ஈழத்திற்கு 70 க்களில் 2 தடவைகள் புங்குடுதீவு,சுட்டிபுரம் என வந்த போது; சுட்டிபுரத்தில் இவர் கச்சேரி கேட்கும் நல்லூழ் எனக்குக் கிட்டியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து பாடி அன்பர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியவர்.அதுபற்றி அவர் அன்று மேடையில் குறிப்பிட்டது.

"சாதாரணமாக தமிழ்நாட்டில் வானொலிக் கச்சேரி 2 மணி; கல்யாணக்கச்சேரி 2 1/2 மணி; தைப்பூசம்; பழனிமலை முருகன் சந்நிதியில் 3 மணி; ஆனால் இன்று உங்கள் அன்பின்; ஆர்வத்தின் முன் 7 மணி நேரம்; என் வாழ் நாளில் மறக்க முடியாத கச்சேரி”

அன்று எங்கள் ஈழத்தில் புகழ் பெற்ற சாகித்ய கர்த்தா "வீரமணி ஐயரின்"..."சுட்டிபுரம் வாழும் சிவசுந்தரியே;கண்ணகியே "எனும் பாடலுக்கு; மேடையிலே இசை உருப்போட்டுப் பாடிச் சிறப்பித்தவர்.

இவர் கச்சேரியை கதம்பமாகத் தருவார். அதுவும் தனது திரையிசைப்பாடல்கள்; பக்திப் பாடல்கள்; தனிப்பாடல்களேன போட்டு நிரப்பி ;;தமிழ்க் கச்சேரியாக அமைப்பார் . தமிழை அவர் உச்சரிக்கும் செழுமை ; கச்சேரியைத் தனித்துவமாக்கும்.

மும்மூர்த்திகளை மதித்து ஆரம்ப சாகித்தியங்களை முடித்துக் கொண்டு; பாசுரம்;தேவாரம்;பாரதி பாடல்; கோதை தமிழ்; திருப்புகழ் எனத் ;தமிழ் வெள்ளம் கரைபுரண்டோடும்; இவர் கச்சேரிகளில்...;

அன்று தமிழில் பாடுவதற்குப் பல பாடகர்கள் கூச்சப்படும் போது ,அதை ஒரு தவம் போல் மேடை தோறும் செய்தவர்!.
அதனால் பாமரர் முதல் படித்தவர் வரை பல கோடிப் பேரை உலகம் பூராகவும் இரசிகர்களாக வரிந்து கொண்டவர்.அன்றைய இவர் இசைவிழாக் கச்சேரிகள் இந்திய வானொலியில் இரவிரவாக ஒலிபரப்புகையில் ;ஈழத்தில் வீடுதோறும் விழித்திருந்து கேட்டு மகிழ்வார்கள்.

கடைசிக்காலங்களில் அவர் கச்சேரிகளில் பிரதான அம்சமாக ; தனி ஆவர்த்தனங்களுடன் கூடிய பகுதிகளுக்கு புகழ் பெற்ற திரையிசைப் பாடல்களை பாடி மகிழ்வித்தவர். இவர் நியூயோர்க் கச்சேரியில்"சரச மோகன " என்ற பிரபல பாடல்; பிரதான இடம் பெற்றதை நீங்கள் இசைத்தட்டிலாவது கேட்டிருக்கலாம்.

இவர் கச்சேரி மேடைகளே பக்கவாத்தியங்களால் களைகட்டும்; வயலின் , மிருதங்கம், கடம்; கஞ்சிரா;மோர்சிங்; தம்புரா..என அத்தனை பக்கவாத்தியங்களையும் அருமையாக சேர்த்துப் இசைக்கவைத்துப் பாடி மகிழ்விப்பார். அன்றைய நாட்களில் மோர்சிங்குடன் பாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய வித்துவான்களில் இவரும் ஒருவர்.

அவர் கச்சேரிகளில் "என் குருநாதர்" எனும் பாடல் இறுதியாக அமையும்; அப்பாடல் அவர் குரு பக்திக்குச் சான்று;

என்குருநாதர் வேன்குழல் வேந்தன்;
இசையமுதூட்டிய ஞான சீலன்
அன்னை தந்தை அதன் பிறகவரே!
அகண்ட உலகில் வாழ்வளித்தவரே!
என் கீத ஞானம் அவர் தந்த வாழ்வு!
என் உள்ளம் என்றும் அவருக்குத் தாழ்வு!
என் குருநாதன் குழல் சுவாமிநாதன்
திருப்பாம் புரத்தான்!
என் குருநாதன்!!

என முடிப்பார்.


இவ்விதம் தமிழை ஒதுக்கக் கங்கணங் கட்டும் காலங்களில்.
மேடையேற்றுவதில் நல்லதொரு முன்மாதிரியாக இருந்தவர்.


"உலகம் வாழ்க" என்னும் தன் உள்ளக் கிடக்கைக்கமைய; இந்திய அரசுக்கு
பல நிதியுதவிக் கச்சேரிகள் செய்து ; தன் சேவையைச் செய்தவர்.

இசைக்கென வாழ்ந்து ; உனைப் பாடும் பணி யொன்று போதும் என முருகனைத்
தினமும் பாடி மகிழ்ந்தவர் ; தன் 55 பராயத்தில்; இளம் வயதிலே எவரும் எதிர் பாராவண்ணம்
24-03 - 1988 ல் ;தன் குடும்பத்தவர்களையும் ;ரசிகர்களையும் ஆற்றாத் துயரில் ஆழ்த்தி"முருகா" என அவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே; மீளாத் துயில் கொண்டு;முருகன் திருவடியில் பாட இறை எய்தினார்.

தமிழும் இசையும் உள்ளவரை எங்கள் சீர்காழியார் புகழ் நிலைக்கும்!!
அன்னார் நினைவை; உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

20 comments:

Anonymous said...

Excellent god bless you for the nice article.
Radha

jeevagv said...

ஆஹா, எவ்வளவு இனிமையான கலைஞர் அவர் அல்லவா, நினைக்கும்போதே பெருமையாக இருக்கிறது. அவர் பற்றியதொரு பதிவினைப் படிக்க மேலும் இன்பம் கூடுது, நன்றிகள் யோகன்.

செல்லி said...

யோகன்
//என் இளமைக் காலத்தில் ஊரில் கோவில் திருவிழாவெனில்; ஒலிபெருக்கி கட்டி காலை இளங்காற்றுடன் வரும்...விநாயகனே...வெவ்வினையை வேரறுக்க வல்லான்..!என்ற அவர் குரல் என் ஐம்புலனையும் சிலகணம் கட்டிப்போடும்.//
எங்கட ஊர்க் கோவிலிலும் இந்தப் பாட்டுத் தான் முதல்ல போடுவினம்.
சீர்காழி கோவிந்தராஜனைப் பற்றி நல்ல கட்டுரை இது. பகிந்தமைக்கு நன்றி

மலைநாடான் said...

யோகன்!
நல்லதொரு நினைவு கூரல். மேடைக்கச்சேரிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களுடன் அவர் பேணும் உறவே ரசிக்கத்தகதாக இருக்கும். அவரது மிக நெருங்கிய ஈழத்து நண்பர் குறித்து இங்கே பதிவு செய்துள்ளேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராதா!
உங்கள் பாராட்டும்; ஆசியும்;உண்மையில் நெகிழ்வைத் தந்தது. அவர் இசைமேல் நான் வைத்துள்ள மதிப்பின்
பிரதிபலிப்பே!! உங்கள் "EXCELLENT".
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜீவா!
உங்களைப் போன்றோர் அவரை நினைப்பதும்; அவர் பெருமையை உணர்வதும்; மிக மகிழ்வாக உள்ளது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
ஒரு குறிப்பிட்ட வயதுக்காரர்; இந்தக் குரலைக் கேட்காமல் வளர்ந்திருக்கவே முடியாது.
நம் ஈழத்திலும் அவருக்கு பெரிய இரசிகர் பட்டாளம் இருந்தது; அதைச் சுட்டிபுரம்
நிரூபித்தது.
வரவுக்கும்; தங்கள் அனுபவப் பகிர்விக்கும் நன்றி!

கானா பிரபா said...

யோகன் அண்ணா

பதிவுக்கு நன்றி, உண்மைதா எங்களூர்க் கோயில் தினங்களில் சீர்காழியார் தான் இசை முழக்கம் செய்வார் ஒலிபெருக்கிகளில். பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் ..கோவிந்தராஜன் அவர்களின் பதிவுக்கு நன்றிகள் ..சீர்காழியும் டிம்ஸும் சேர்ந்து பாடிய பாடல் வீடியோவை பார்க்கஇங்கே அழுத்தவும்

வெற்றி said...

யோகனண்ணை,
நல்ல பதிவு. நினைவுகூரப் பட வேண்டிய உன்னதமான கலைஞர். இவரின் குரல் ஒலிக்காத தமிழர்கள் வீடே இருக்காது.

இவர் பத்திப் பாடல்களை உருகிப் பாடும் விதம் நாத்தீகர்களைக் கூட உருக்கிவிடும்.

சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கும் என் அண்ணா/ அக்காவின் பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்வது, சீர்காழி, செளந்தரராஜன், வாணி ஜெயராம், சுந்தராம்பாள் போன்றவர்களின் பாடல்களைக் கேட்டு தமிழை எப்படி உச்சரிப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று.

சீர்காழி போன்ற கலைஞர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் புகழ் என்றும் அழியாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
உண்மை; அவர் பக்கவாத்தியக் கலைஞர்களைக் குடும்ப அங்கத்தவர் போல் தான் அரவணைத்து நடந்தவராம்;;நீளம் கருதி பல விடயங்கள் தவிர்த்தேன்.
தங்கள் பதிவு பார்த்தேன். கருத்திட்டுள்ளேன்.

பாலராஜன்கீதா said...

அவரால் பாடப்பட்ட இன்னும் பல பாடல்களில் சில -

சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பும் (விநாயகர் அகவல்)

திருப்பதி மலை வாழும் சீனிவாசா - திருமலை தென்குமரி

கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் - ராமு

எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் - ???

சங்கே முழங்கு - ???

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜய - கர்ணன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!!
இவர் குரல் பல தலைமுறையின் காதில் விழுந்துள்ளது. இனிமையும் சேர்த்துள்ளது.பின்னூட்டத்தில்
புரிகிறது.
வரவு கருத்துக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
என் கணனி ஒளி ஒலி போட மறுத்துவிட்டது. அந்தக் குறையை நீங்கள் தீர்த்து விட்டீர்கள். சிலவேளை
அதைப் பதிவில் சேர்க்கும் எண்ணமும் உண்டு.இவர் பேரன் நடத்தும் பக்கத்தில்; "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" ..உள்ளது. போடும் வழிதெரியவில்லை.
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இவரின் குரல் ஒலிக்காத தமிழர்கள் வீடே இருக்காது.//

வெற்றி! அப்படி இருந்தால்...அவர்கள் தமிழை மறந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சரியான புத்திமதி கூறியுள்ளீர்கள்!!
உங்களப் போல் இளம் தலைமுறையினர் ;இவரை அறிந்து புரிந்து வைத்திருப்பது
மகிழ்வே!!
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாலராஜன் கீதா!
"நீளமான பதிவுகள் கவனிக்கப்படா" எனும் தமிழ் மண எழுதாவிதிக்கமைய; எழுதிய பதிவிது என்பதால்; அவர் பாடற்பட்டியலை மிகச்சுருக்கும் படியானது.தங்கள் பட்டியலும் ரசிகரைகளைக் கவர்ந்ததே!!
உங்கள் யாரிடமாவது அவர் பாடிய கிருஸ்தவ கீதம் "எங்கே? சுமந்து போரீரே! சிலுவையை நீர் எங்கே? சுமந்து போரீரே" என்ற பாடல் இருந்தால் ; அதன் சுட்டி தாருங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குமரன் (Kumaran) said...

அருமையான இடுகை யோகன் ஐயா. என்றோ படித்துவிட்டேன். இன்று தான் பின்னூட்டம் இட முடிந்தது. நீளமான இடுகைகள் என்றாலும் நீங்கள் எழுதியதென்றால் அவை பொருளுடன் இருக்கும்; அதனால் நாளானாலும் தாள் பிரதி எடுத்தேனும் படித்துவிடுவேன். என்னைப் போல் பலருண்டு என்று எண்ணுகிறேன்.

கரவையூரான் said...

அன்பு யோகன்,
இசை மணி பற்றிய உங்கள் கட்டுரை, அவர் சம்பந்தப்பட்ட அனுபவம் ஒன்றை தமிழில் எழுத என்னை தூண்டியது. எனது வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.

கூடலில் இடம் பெற்ற, நாதஸ்வரக்கலை சம்பந்தமன கட்டுரையை வாசித்தேன். அருமையாக இருந்தது. அதற்கான பின்னூட்டத்தை அந்த வலைத்தளத்திலேயே இட்டிருக்கிறேன்.

உங்கள் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது.

G.Ragavan said...

யோகன் ஐயா. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பக்திக்குரலார். முருகனை நினைத்து அவர் சுரம் பாடினாலே நமக்கு பக்திச் சுரம் வரும். சரம் பிரித்துப் பாடினால் சரவணனின் முல்லைச் சரமணம் வரும். அவருடைய பாடல்கள் எத்தனையெத்தனை. ஆகா! அவரை நினைவு கூர்வதில் மிக்க மகிழ்ச்சி. அவர் இன்றும் குரலால் நம்மோடு வாழ்கிறார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக்குமரா!
இவரைப் பற்றி எழுத ,பதிவு நீண்டுவிட்டது..எனினும் படிப்பவர் படிக்கட்டும். என இட்டேன்.
என் பதிவுகள் நீளமானாலும்; படிக்கக்கூடியதாக இருக்குமென ;நன்கு எழுதும் நீங்கள் சொல்வது
சந்தோசமாக உள்ளது.
கருத்துக்கு நன்றி!