Sunday, March 11, 2007

நானும் வானொலிகளும்..

பாடல் கேட்பது ; பலரது பொழுது போக்கு; அதுவும் அன்று அதை வானொலியில் கேட்பதென்பதே!
அலாதியானது.
இன்று விரும்பியதைக் கேட்கக்கூடிய பலவசதி; அத்துடன் எத்தனையோ வானொலிகள்...அப்பாடா??

அவர்களும் தங்கள் வானொலியைக் கேட்க என்ன??எல்லாம் செய்கிறார்கள்...அப்படியும் நேயர்களை மடக்குவது கடினமாகத் தான் இருக்கிறது.

அன்று இருந்த வானொலி; நேயர்கள் எல்லோரையுமே திருப்திப்படுத்தத் திணறியது.
அந்தத் திணறலை இலங்கை வானொலிக்குக் கொடுத்தவர்களில் அடியேனும் ஒருவன்.

கடைசிவரையும் நான் கேட்ட ஒரு பாடல்தனையும் ஒலிபரப்பும் பெருமை; அந்த இலங்கை வானொலிக்குக் கிட்டவில்லையென்பதில் எனக்கு இன்றும் வருத்தமே!!

அன்று இலங்கை வானொலியில் பாடல் கேட்பதென்பதில் கூட "சில அரசியல்" இருந்ததென்பதைப் பின் அறிந்தேன். ஆச்சரியப்பட்டேன்.
நானும் என்னைப்போல் பலரும் ஒதுக்கப்பட்டது "அரசியலே"

எதற்குச் செல்வாக்கைப் பாவிப்பதென்றே விவஸ்தையில்லையா?? என எண்ணியதுண்டு.

இப்படி வானொலிக்கு பாட்டுக்கேட்டெழுதும் வியாதி...பாரிஸ்...வரை என்னுடன் தொடர்ந்து வந்தது.

அன்று 1986 அல்லது 1987 ல் ;பாரிசிலும்..ஒரு தமிழ் வானொலி நாளுக்கு ஒரு மணி நேரம் ஒலிபரப்பானது.

அவர்களும் உங்கள் விருப்பம்;இன்றைய நேயர் என ;எழுதுங்கள் ஒலிபரப்புகிறோம். என விளம்பரம் செய்தார்கள்.

விடுவேனா?? பேனையையும் கடுதாசியையும் தூக்கிவிட்டேன்.எழுதினேன். அனுப்பினேன்.

ம்ம்...நான் கேட்டதெதுவும் ஒலிபரப்பவில்லை. இங்கும் "அரசியலே".. அதாவது...இந்த

வானொலியிலறிவிப்பாளராகப் பயின்றவர்களது (சம்பளமற்றவர்கள்) அறிந்தவர்;தெரிந்தவர்கள் பெயர் கூறவே நேரம் சரியானதால்; இங்கும் "அரசியல்"...விளையாடிவிட்டது.

இதையே சம்பளமாக இந்த அறிவிப்பாளர்கள் நினைத்தார்களோ!! தெரியவில்லை.

இப்படியாக என் வானொலி பாட்டுக் கேட்கும் ஆசை தேய்ந்து போனது.

இன்றைய வானொலிக்கு எழுதுவதிலும்; பேசாமல் இருப்பதே!!மேல்.

ஆனாலும் அன்று வானொலிக் எழுதியவற்றின் பிரதிகள் எதோ ஒரு பக்கத்தில் என் கோர்ப்பில் கிடந்தது.

சில வேளைகளில் அதை எடுத்துப் படித்தும் பார்ப்பதுண்டு. அப்போ ஒன்று புரிந்து கொண்டேன்.

என் பாடல்கள் பற்றிய விமர்சனம் அப்படி ஒன்றும்; மோசமில்லை...ஒலிபரப்பானவற்றுடன் ஒப்பிடும் போது!!

இந்த நிலையில்; இப்போ இணையத்தில் எழுதுகிறேன். இதில் கூட பாடல் கேட்கலாம்; போடலாம்; விமர்சிக்கலாம்.
இதன் தொழில் நுட்டம் புரியவில்லையே!!!
இது பற்றி அறிய "சாரல்- சயந்தனிடம்" தொழில் நுட்பம் பற்றிக் கேட்டேன்."செய்தா போச்சுது அண்ணே"
என அதைச் செய்தே தந்தார்.விளக்கமும் தந்தார்
.

இந்த இணைய அறிமுகம்...கூடல் குமரன்....ஒரு குடிலமைச்சுத் தந்தது..மலைநாடர்...அதை "பீற்றா" சிக்கலில் இருந்து மீட்டுவிட்டது..ஊரோடி -பகீ...பின்பு..;தற்போதைய அமைப்பு மற்றும் ஏனைய உதவுகள்
யாவும் "சாரல்- சயந்தன்...இப்படி பலர் வற்றா உதவியால்..நானும் எதோ எழுதுகிறேன்.எனப் பாவனை
காட்டுகிறேன்.

அப்படி!! நான் பாரிஸ் தமிழ் வானொலிக்கு; "இன்றைய நேயர்" நிகழ்ச்சிக்கு எழுதிய பல
பாடல்களின் முதல் பாடலாகத் தெரிவு செய்த "கொஞ்சும் சலங்கை"..படத்தில் இடம் பெற்ற
"சிங்கார வேலனே தேவா" என்ற பாடலைக் கேட்டு...விமர்சனத்தைப் படிக்கவும்
.

**நிகழ்ச்சியின் இறைவணக்கமாகவும்; மங்கல இசையாகவும் இப்பாடலைத் தெரிவு செய்துள்ளேன்.
எனது மாத்திரமல்ல ;பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் செவிகளில் ரீங்காரமிடும்;இந்த ஜானகி அம்மாவும்;காரைக் குருச்சியாரும் என்னால் மறக்கமுடியாதவர்கள்.
நாதஸ்வரம் தமிழர்களின் இசைச் செழுமையின் பிரதிபலிப்பு.எவர் மனதையும் கவரக் கூடியது.
அதிலும் காரைக்குருச்சி அருணாசலம் அவர்கள் இத்துறையில் இறைகடாட்சம் பெற்றவரென்பது என்கருத்துமாத்திரமல்ல; இசை உணர்ந்தோர் கருத்தும் கூட...
இப்பாடலில் ஜானகி அம்மாவின் குரல் நளினங்களுக்கு;அவர் விரல் ஈடு கொடுத்துள்ள லாவகம்
இசைப் பிரியர்களால் மறக்க முடியாதது.
காரக்குருச்சியாரின் அட்சரசுத்தி பிசகாத வாசிப்பு என்னை இன்றும் இப்பாடலுக்கு மயங்க வைத்துள்ளது.
ஜானகி அம்மாவின் குரலும் இப்பாடலுக்கு காத்திரமான ஒரு நளினத்தைக் கொடுத்துள்ளது.
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத ;என் இஸ்ட தெய்வம் சிங்கார வேலன் புகழ் பாடும் இப்பாடலை ஒலிபரப்பவும்.
இப்பாடலை இசைத்தட்டாக உருவாக்கியோரும் நல்லதமிழ் ரசிகர் போலும்;அருமையான வசனத்தை முதலில் சேர்த்து ;இப்படலின் சிறப்புக்கும் வெற்றிக்கும் கைகொடுத்துள்ளார்கள்.ஒலிபரப்புவீர்களா??
என்னை மகிழ்விற்பீர்களா??

எனக்குப் பிடித்த ""சிங்கார வேலனே தேவா"

பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

20 comments:

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

எஸ்.ஜானகி இப்போது அவுஸ்திரேலியாவில் இசைக்கச்சேரி நடாத்துகின்றார். கடந்த வாரம் சிட்னியில் நடந்த விழாவுக்குப் போயிருந்தேன். சிங்காரவேலனே பாடலைப் பாட இவரை வழிமொழிந்தது பாடகி பி.லீலாவாம். தனது 16 வயதில் பாடிய அப்பாடலைத் தன் 69 வயதில் இப்போது பாடுகிறேன் என்று சொல்லிக் கடந்த வாரம் இப்பாடலைப் பாடினார். அவரது குரலுக்கு இன்னும் 16 வயது.

ramachandranusha(உஷா) said...

யோகன்,
சனானி அப்பண்ணா என்று ஒரு கன்னடப்படம். அதில் ராஜ்குமார் ஷெனாய் வாசிப்பவராய் நடித்திருப்பார். படம் வந்தது 1978ல் இங்கு நாகஸ்வரம் காருக்குறிச்சி என்றால் அங்கு ஷெனாய்க்கு உஸ்தாத் பிஸ்மிலாகான். ஷெனாய் வாத்தியத்துடன் ஜானகி அம்மாவின் குரல். கேட்டுப்பாருங்கள்.
பாட்டை பார்க்கும்போது பல இடங்களில் தில்லானா
மோகனாம்பாள் "சண்முக சுந்தரம்" நினைவில் வருவார்.
இந்த சுட்டியில் "Karedaru Kelade'' என்றப் பாடலை கிளிக்கி பாருங்கள். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

http://www.udbhava.com/udbhava/songs.jsp?id=325

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன் ..காரை குறிச்சியாருடைய நாதஸ்வரத்தோடை இணைந்த ஜானகியின் பாடலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!!
சிங்காரவேலன் தரிசனம் உங்களுக்கு நேரடியாகக் கிடைக்கிறது;
கொடுத்து வைத்தவர்கள்.
நமக்கு இருக்குது musicindiaonline.

மலைநாடான் said...

யோகன்!

அருமை பாடலும், வானொலி அனுபவங்களும்.

உஷா!

பிஸ்மிலாகான், நான் மிகவும் ரசித்த ஒரு கரலஞன். அவர் மறைவின்போது, குறிஞ்சிமலரில் நினைவுப்பதிவு இட்டிருந்தேன். இங்கே நீங்கள் தந்த சுட்டிக்கு நன்றி

செல்லி said...

யோகன்
இந்தப் பதிவு எனக்கும் வானொலி தொடர்பான பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்தது.

நானும் பல தடவை என் ஆக்கங்களை அனுப்பி, அவை ஒலிபரப்பப் படாமல் ஏமாந்தவள். பின்னர் கொழுப்பில் நான் வசித்தபோது நண்பி ஒருவரூடாகச் சென்ற என் ஆக்கங்கள் ஒலிபரப்பப் பட்டன.
அப்துல் கமீட் நடத்திய பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் (தோழிகளின் ஆதரவால்) பங்கு பற்றி பரிசும் பெற்றேன்.
//பிரபா!!சிங்காரவேலன் தரிசனம் உங்களுக்கு நேரடியாகக் கிடைக்கிறது;
கொடுத்து வைத்தவர்கள்.//
அவுஸ்திரேலியாவில இருந்தும் பிறிஸ்பேனில் இருப்பதால் நானும் ஜானகி அம்மாவின் நேரடித் தரிசனம் கிடைக்காத துரதிஷ்டசாலி..
சிட்னி மக்கள் குடுத்து வைத்தவர்கள் இந்த விசயத்தில் இல்லயா, பிரபா.
பகிந்தமைக்கு மிகவும் நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உஷா!
நான் இந்தச் சுட்டி சென்று "கர்நாட்டிக்" கேட்பேன்; குறிப்பாக எல்லா அல்பமும் கேட்டு விட்டேன்.
ஆனல் வேற்று மொழி பக்கம் போகவில்லை.
நீங்கள் குறிப்பிட்ட கன்னடப்பாடல் கேட்டேன். மிக இனிமை; அப்படியே "சிங்கார வேலனே" பாணியில்
பாடல் உருவாக்கப்பட்டுள்லது.பிற்காலப் பாடல் என நினைக்கிறேன்.
இப்பாடலைக் கேட்கும் போது "தில்லானா மோகனாம்பாள்" ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாதென்பது உண்மை.
செனாய் எனக்கு ;ஆகாசவாணியின் புண்ணியத்தில் சற்று அறிமுகமான வடநாட்டு வாத்தியம்; அதிலும் திரு.கான் உன்னத கலைஞர். இசை ;சமய பேதங்களுக்கு அப்பாற்பட்டதென நிறுவியவர்.எம் சின்ன மௌலானா போல்.
அத்துடன் "கர்ணன் " படப்பாடல்களில் செனாயின் பங்களிப்பு மிகத் தூக்கலாக இருக்கும்; அருமையான
பாடல்கள்;செனாய் ஒலியுடன்.
நம் பாரம்பரிய இசையை ரசிப்பவன் எனும் வகையில்; இப்பாடல்கள்;பலரைப்போல் என்னை மிகக் கவர்ந்தவை...என்றும்..
கருத்துக்கு நன்றி!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
இது சயந்தன் கைவண்ணம்; ஒலி ஒளி வடிவம் சந்தித்தால் சொல்லுங்கோ!
உங்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோசம்; இது எவரையும் கவரும் பாடல்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
ஆம் ! நல்ல பாடல்;இந்த வானொலிக் கெழுதும் அனுபவம் எல்லா பதிவர்களுக்கு இருந்திருக்கும் பிபிசி..நாதஸ்வர விழாப் பற்றிய ஒலிப்பெட்டகத்திலும்;இப்பாடலின் நாதஸ்வரப்பகுதியை ஒலிக்கவிட்டுள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
அப்போ!! நீங்கள் "அரசியல்" பண்ணி வென்றுள்ளீர்கள்;பரிசுக்குப் பாராட்டுக்கள்.நான் அலுத்துச் சீச்சீ
இந்தப் பழம் புளிக்கும் மெனக் கைவிட்டவன். ஆனால் எழுதியவற்றில் பிரதியை ஏனோ? வைத்திருந்தேன்.அதுவே இது.

சயந்தன் said...

யோகன் அண்ணை.. வானொலியில் அரசியல் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நானும் வானொலியில் சில காலம் பணியாற்றியிருக்கிறேன். எனது காலத்தில் தொலைபேசி தான். கடிதங்களில் பாடல் கேட்பதில்லை. பாடல் ஒலிக்கும் இடைநேரத்தில் தொலை பேசி நேயர்கள் கேட்கும் பாடலையும் அவர்களின் பெயர்களையும் குறித்து வைத்து விட்டு ஒவ்வொன்றாக ஒலிபரப்புவது வழமை. தொலைபேசி அழைப்புக்கள் வராத நேரத்தில் நமது தெரிவு பாடல்கள் தான் தெரிந்தவர் அறிந்தவர் உற்றார் உறவினர் நண்பர்கள் பெயரில் ஒலிக்கும். :)) அவ்வளவு ஏன்..? அந்த நாட்டிலேயே இல்லாதவர்கள் கூட வானொலியை கேட்க முடியாதவர்கள் கூட பாடல் விரும்பிக் கேட்டதாக சொன்னோம் என்றால் பாருங்களேன்.

என்னோடு உதவிக்கு வரும் எனது உறவுக்கார நண்பர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு நாளில் தனது அண்ணாவோடு சின்ன மனஸ்த்தாபத்தில் இருந்தார். நிகழ்ச்சியில் அந்த அண்ணா விரும்பிக் கேட்ட பாடலாக ஒலிபரப்பிய பாடல் இப்பவும் நினைவில் நிற்குது. அது.. அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாடல்..

பகீ said...

ஒரு பாட்டுக் கேக்கிறதுக்கு இவ்வளவு பெரிய கடிதமா????

மன்னிச்சுக்கொள்ளுங்கோ யோகன் அண்ணா.. எனக்கு பாட்டு கேக்கிறதெண்டா கசாயம் குடிக்கிற மாதிரி அதுதான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
எங்க காலத்தில என்கையப்பு, தெலிபோன்;;நாங்க கடுதாசியைப் போட்டுவிட்டு; ஒவ்வொரு நாளும் அந்த நேரம்; ரேடியோவை ஆவெண்டு கொண்டு இருப்போம்.
அரசியல் புடிபட வெகுநாளானது.புறகு வீட்டுக்கு வீடு ரேப்ரெக்கோடர் வந்த பின் ஆரு ரேடியோவுக்கு எழுதுவதென்றால்; தங்கட பேரையும் ரேடியோவில கேட்க விருப்பப் பட்டவை.
நீங்க ரேடியோ இல்லாதவை கூடக் கேட்டதாகப் பாடல் போட்டதை நினைச்சுச் சிரித்தேன்.
காதில விழுந்த செய்தி; யாரோ..தான் விரும்பிற பொட்டையின் பேரில் பாட்டுக் கேட்டு; பொடிச்சிக்கு
வீட்டில பூசை விழுந்ததாம்; ,இப்படிக் கூத்துக்களும் நடந்திருக்குமே!!
நம்ம ரேடியோவுக்கென்னே ஒரு சரித்திரம் உண்டெல்லோ??
வடமாராட்சிப் பெண்ணை தமிழ்நாட்டுப் பையன் கலியாணம் செய்ய உதவியது; எங்கட ரேடியோ??
இக்கதை ஆனந்த விகடனில் படித்தேன்.
"அண்ணன் என்னடா தம்பி என்னடா" இப்போ ஒற்றுமையாக இருக்கிறாங்களா??

கொழுவி said...

//வடமாராட்சிப் பெண்ணை தமிழ்நாட்டுப் பையன் கலியாணம் செய்ய உதவியது; எங்கட ரேடியோ??//

அண்ணை. அது அந்தக் காலம். இப்போ ஒண்டா ஒற்றுமையா இருக்கிற குடும்பங்களை பிரிச்சு மேயுற வேலையளையும் சில றேடியோக்கள் செய்திருக்காம். காது வழி கேட்டேன். உண்மை பொய் தெரியாது.

ramachandranusha(உஷா) said...

மலை நாடன் நீங்கள் போட்ட பிஸ்மிலாக்கான் அவர்களைப் பற்றிய சுட்டி தர முடியுமா?

யோகன், இசைக்கு மொழி புரிதல் அவசியம். அதனாலேயே என்னால் கர்நாடக இசையை ரசிக்க
முடியவில்லை. இந்த பாடலை சமீபத்தில் உத்யா டீவியில் பார்த்தேன். அப்படியே "நலந்தானா"
காட்சியின் உல்டா. ஆனால் அதில் சுசீலா அம்மாவின் குரலில் இல்லாத மோகமும், தாபமும் ஜானகியின் குரலில் வழிய அதுக்கு இணைந்த பிஸ்மிலாகான் அவர்களின் தேனிசையும் ...கேட்க கேட்க தெவிட்டாததுதான்.

Anonymous said...

உங்கள் கோரிக்கை நிறைவேற்றப் படாமைக்கு அரசியற் காரணம் இருபதாகத் தெரியவில்லை :-(

மலைநாடான் said...

உஷா!

பிஸ்மிலாகான் குறித்த என் பதிவை இங்கே பாருங்கள்.

யோகன்! நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கொழுவி!
//அண்ணை. அது அந்தக் காலம். இப்போ ஒண்டா ஒற்றுமையா இருக்கிற குடும்பங்களை பிரிச்சு மேயுற வேலையளையும் சில றேடியோக்கள் செய்திருக்காம். காது வழி கேட்டேன். உண்மை பொய் தெரியாது. //

இவற்றில் உண்மையிருக்கலாம். என எண்ணவைக்கும் வண்ணமே!!தற்போதைய வானொலித்; தொலைக்காட்சிச் சேவைகளின் நிகழ்ச்சிகள்;குறிப்பாகப் புலம் பெயர் மண்ணிலும் சில இருக்கின்றன.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மன்னிச்சுக்கொள்ளுங்கோ யோகன் அண்ணா.. எனக்கு பாட்டு கேக்கிறதெண்டா கசாயம் குடிக்கிற மாதிரி அதுதான்.//

அப்பு பகீ!
இதிலென்ன? மன்னிக்கக்கிடக்கிறது; பெத்த பிள்ளையே ஒத்த எண்ணம் இல்லா நிலை; உடன் பிறந்ததுகளே!!உடன் படுவதில்லைப் பலதில்..அதனால் அதை உங்கள் தெரிவுக்கு விட்டு விட்டு.
"ஆனாலும் உந்தன் அதிசயங்கள் தன்னில்; கானாமிர்தம் படைத்த காட்சி மிக விந்தை" எனப் பாரதி ஆண்டவனைப் நோக்கி
வியந்தாராம். "தமிழோடிசை பாடமறந்தறியேன் "என்றார். அப்பர் சுவாமிகள்.இன்னிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் இறைவன்!!
ஆம் இசை; கசாயம் தான் ஒப்புக்கொள்கிறேன். கசாயம் நோய் தீர்ப்பது. இசையும் அதே!!!
தங்கள் பெற்றோர் இசை நாட்டமில்லாதவர்களா?நேரம் கிட்டும் போது; சில பாடல்கள் தெரிவுசெய்து தனிமடல் அனுப்புகிறேன்.
கேட்டுவிட்டுச் சொல்லவும்.
நல்ல இசை ரசிக்கக் கூடிய அல்லது பாடக்கூடிய பெண்ணை மணக்கும் படி சிபார்சு செய்கிறேன்.
மன்னிக்கவும் பதிற் பின்னூட்டம் நீண்டுவிட்டது.

Anonymous said...

திரு.யோகன் அவர்களே

உங்களின் படைப்பு அபாரம் வாழ்த்துக்கள். ஏற்கெனவே வெளியிட்டுவீட்டிர்கள். பரவாயில்லை அம்மாவின் குரலை எத்தனை வருடம் கழித்துக்கேட்டாலும் சலிக்கவைக்காது. எனது தளத்திற்கு வந்து சுட்டியை வழங்யதற்க்கு நன்றி.