Thursday, March 08, 2007

கோச்சி வரும் கவனம்....கொப்பரும் வருவார் கவனம்...!**
ழத்தில் மிகுந்த தமிழ்ப்பற்றுடன்,எங்கும் தமிழ் எதிலும் தமிழ்;அதுவும் சரியான தமிழ் எனும் ஆர்வத்துடனும்; நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் கல்லடி வேலுப்பிள்ளை( 1860- 1944) எனும் அறிஞர் வாழ்ந்தார்.

இவரைக் "கல்லடி வேலர்" என மரியாதையாகவும்;செல்லமாகவும் அழைத்தார்கள்.

எங்கே தமிழ்ப் பிழை கண்டாலும் ,திருத்துவார் அல்லது திருத்தவைப்பார்.
அன்றைய புகையிரதக் கடவைகளின் ; அறிவிப்புப் பலகைகளில் "
கோச்சி வரும் கவனம்" எனக் குறிப்பிடுவது வழக்கம்.


அதாவது "COACH-கோச்" எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம் போல் இச் சொல் வழக்கில் இருந்தது.

இதைக் காணும் போது; இத் தவறைச் சுட்டிக் காட்ட "கல்லடி வேலர்"; எங்கெல்லாம் இவ்வறிவிப்பைக்கண்டாரோ; அதிலெல்லாம் கரியினால் ;"கோச்சிவரும் கவனம்" என்பதன் கீழ் ;கொப்பரும் வருவார் கவனம்" என எழுதி விட்டாராம்.

இதன் பின் "புகைவண்டி வரும் கவனம்" எனும் வாசகம் புழக்கத்தில் வந்ததாகக் கூறுவர்.

இன்றும் இந்தக்

கோச்சி,கொம்மா,கொப்பர்;கொய்யா;கொண்ணன்,கொக்கா,கொம்மான்...எனும் முறைச் சொற்கள்; முறையே ஆச்சி, அம்மா,அப்பா,ஐயா;அண்ணன்,அக்கா,அம்மான் (மாமன்) எனும் முறைச் சொற்களுக்குஈடாகப் பேச்சுவழக்கில் உண்டு.

குறிப்பாகப் கிராமப் புறத்துப் பேச்சு வழக்கில்; இது சற்று நெருக்கமான;நட்பு வட்டாரங்களிலும்;அறிமுகம்மிக்கவர்களிடையேயும் வழக்கிலுள்ளது.

உதாரணமாக:

கோச்சி வீட்டில இருக்கிறாவா? (ஆச்சி வீட்டில் இருக்கிறாரா?)

கொம்மாட்ட ஒரு விசயம் கதைக்கவேண்டும். (அம்மாவிடம் ஒரு விடயம் கதைக்க வேண்டும்)

கொப்பருக்கு இப்ப வருத்தம் சுகமோ? (அப்பாவுக்கு இப்போது நோய் குணமாகிவிட்டதா ?)

கொண்ணர் கொழும்பால வந்திட்டார். (அண்ணன் கொழும்பில் இருந்து வந்துவிட்டார்)

கொக்காவுக்கு கலியாணம் முற்றாக்கியாச்சாமே! (அக்காவுக்கு திருமணம் நிச்சயித்தாகிவிட்டதாமா?)

கொம்மானை ஒருக்கா என்னை வந்து சந்திக்கச் சொல் (மாமாவை ஒருதரம் என்னை வந்து சந்திக்கும் படி கூறிவிடு)

இவ் பேச்சு வழக்கம் தமிழகத்தில் இருக்கலாம். கூறுங்கள்.அத்துடன் ஈழத்தவர் யாருக்காவது; கல்லடி வேலர் பாடல்கள் தெரிந்தால்; கூறவும்.

*07 -மார்ச்; கல்லடி வேலர் அவர்களின் பிறந்த நாள்!!
**இப்படம்; கானாப்பிரபாவின் "கல்லடி வேலர் வாழ்வில்" பதிவிலிருந்து;அவர் அனுமதியுடன் இடப்பட்டது.நன்றி

45 comments:

வைசா said...

"கல்லடி வேலன் கண்டால் பொல்லடி" என்றொரு கதையும் உண்டல்லவா?

வைசா

Anonymous said...

ஆத்தாவை கோத்தா என்னும் பழக்கம் தமிழகத்தில் கெட்ட வார்த்தையாக பயன்படுகிறது.

சின்னக்குட்டி said...

கல்லடி வேலன் மாதிரி...கரவை வேலன் என்ற ஒருவர் இருந்தவர்...... கல்லடி வேலனின் துணுக்குக்கள் கனக்க உப்படி இருக்கல்லோ....... தகவலுக்கு நன்றிகள்....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
"கல்லடி வேலரைக் கண்டால் பொல்லடி"
அப்படியுமொரு கதையிருக்கா?
எனக்குத் தெரியாதே!
தெரிந்தால் சொல்லவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கொண்ணர்!
இங்கே சொல்லப்பட்டவை! எவையுமே ஈழத்தில்; கெட்ட வார்த்தை எனும்
வகையில் அடங்காக் கிராமிய வார்த்தைகள்.மிக நெருக்கமான உறவுகளுக்குள்ளும்;அறிமுகமானவர்களுக்குள்ளும்
புழங்கும் வார்த்தைகள்

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

கல்லடி வேலரின் வாழ்வில் பல தடவை இப்படியான வேடிக்கைகள் நடந்திருக்கின்றன. அவரின் பேத்தி ஒருவர் இங்கிருக்கிறார்.

Anonymous said...

ஏறக்குறைய இரண்டு வருடங்களின் முன் எழுதப்பட்ட பதிவிது.
உறவு முறைகள் -1

அப்பதிவிலிருந்து ஒருவசனம்:
//இளையவர்களைக் குறிக்கும் தம்பியை ‘கொம்பி’ என்றோ தங்கையை “__ங்கை” என்றோ தங்கச்சியை ‘கொங்கச்சி’ என்றோ அழைப்பதில்லை. நாங்கள் மூத்தாக்கள நல்லா மரியாதை செய்யிறனாங்கள் எண்டது இதிலயிருந்து நல்லா விளங்கும். தம்பி தங்கச்சியெல்லாம் சின்ன ஆக்கள் எண்ட படியா அவைக்கு “இவ்வளவு” மரியாதை தேவயில்ல.
//

தமிழ்நதி said...

நேற்று வந்து பின்னூட்டம் இட்டேன். இருந்தாற்போல இணையத்தொடர்பு அறுந்துவிட்டது. சரி என்று போய்விட்டேன். உங்கள் கோச்சியில் ஏறி ஒருக்கா ஊருக்குப் போட்டு வந்தன். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ப் போய் வந்த ஞாபகம் அந்தக் கோச்சியைப் பார்த்தபோது வந்தது. ஆனாலும் எங்கடை ஆக்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு. இல்லையெண்டா இப்பிடியொருத்தர் எழுதியிருப்பாரே...!அவர் பரவாயில்லை இப்ப எழுதிக்கொண்டிருக்கிற வசந்தன்,சயந்தன் மாதிரி ஆக்கள் எண்டா இன்னும் கொஞ்சம் சேத்து எழுதியிருப்பினம்:)

சயந்தன் said...

இவர் ஒடியற்கூழைப் பற்றியும் ஏதோ எழுதியவராம். நண்பனின் மனைவி செய்த ஒடியற் கூழ் என்று. படித்த ஞாபகம். பாடப்புத்தகத்தில் இருந்திருக்க வேண்டும்.

இவருடைய பீட்டன் எனச் சொல்லி ஒருவர் என்னோடு படித்தவர். உண்மையா அல்லது சுத்தினானரா என்று தெரியாது. ஆனால் அவரின் நடவடிக்கைகளைப் பார்த்த போது ஒருவேளை பீட்டனாக இருக்கக் கூடும் என நினைத்ததுண்டு.

G.Ragavan said...

புதுமையாக இருக்கின்றன அந்த அழைப்பு மொழிகள். புதிய செய்தி எனக்கு.

கல்லடி வேலரைப் பற்றி இன்னும் தகவல்கள் தாருங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
பலர் இவரை அறிந்துள்ளார்கள்;ஆனால் இவர் பாடல்கள் ;ஆக்கங்கள் பற்றித் தெரிந்தவர்களாக இல்லை;
எனவே முடிந்தால்;அவர் ஆக்கங்களைத் தேடிப் போடுங்கள்.
ராகவன் போன்றோரும் ஆர்வமாக உள்ளனர்.
அவர் பேத்தியாரைக் கண்டுபிடித்தால் ;முடியுமென நம்புகிறேன்;

செல்லி said...

யோகன்
இவை எனக்கு புதியவை. நல்ல நகைச் சுவையாக இருக்கிறது. கல்லடியரைப் பற்றி இப்போதான் கேள்விப் பட்டிருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பற்றிய சில சம்பவக்குறிப்புக்கள் என்னிடம் உள்ளன. அத்தோடு அவரின் பேத்தியார் (வயசு 70 இற்கு மேல்) எனக்குத் தெரிந்தவரே. அவரிடமும் மேலதிக செய்திகள் கேட்டு ஒரு பதிவை சீக்கிரம் தருகின்றேன். செல்லிக்கே தெரியாது என்பது ஆச்சரியம் ;-)

Anonymous said...

வசாவிளான் கிராமத்தில் வேலுப்பிள்ளை பிறந்த வீட்டினருகே ஒரு பெரிய கல் மலை இருந்தது. கல் மலைக்கு அருகேயிருந்த வீட்டில் தோன்றிய வேலுப்பிள்ளை, இளமைக் காலத்திலிருந்தே கல்லடி வேலுப்பிள்ளை எனக் குறிப்பிடப் பெற்றார்.

இவரைப்பற்றி மேலதிக தகவல்களை இங்கு பெறலாம்.

Vasanthan said...

கனக சிறீதரன் இவர் பற்றி எழுதியிருக்க வேண்டுமே?
ஒருமுறை எனக்கு இணைப்புத் தந்திருந்தார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வசந்தன்!
தங்கள் உறவுமுறைகள் பற்றிய ஆக்கம் படித்தேன். சிறப்பாக ஆய்ந்துள்ளீர்கள்.
சிறியவர்களுக்கு மரியாதை தேவையில்லையா???

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அட! தமிழ் நதியே நம்ம கோச்சியில ஏறியிருக்கு; மெத்தச் சந்தோசம்; "அண்ண றைற்" ;"சக்கடத்தார்"கேட்டா தெரியும்
நம்மக்கள் நகையும்;கிண்டலும்;;;ஈழத்திலும் விண்ணர்களுக்குக் குறைவில்லை.
சரியாகச் சொன்னீங்க...இது வசந்தன்;சயந்தன் மாதிரி ஆட்களிடம் கிடைத்தால்;நிச்சயம் கூட்டித்தான் எழுதுவார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
என்னன்றாலும் கட்டாயம் நீங்கள் தேடிப் போடுங்கள்; கட்டாயம் இவர் ஆக்கங்கள் படிக்க ஆவலாக இருக்கிறது. பிரபாவும் கூறியுள்ளார்.போடுவார் என நம்புகிறேன்.
ராகவன் கேட்டே விட்டார். செல்லிக்கும் தேவையாகவுள்ளது.
அது சரி "பீட்டன்" இது எந்த ஊர் முறை; நீங்கள் "பூட்டனை" த்தான் இப்படித் தவறாக எழுதி விட்டீர்கள்
என நினைக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
நம் நாட்டு உறவு முறைச் சொற்கள் ;உங்களுக்குப் புதுமையா??ஆச்சரியம் தான்!!அறிந்து வையுங்கள்.
"கல்லடி வேலருக்கு" இவ்வளவு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. என் பாடசாலைக் காலத்தில் ஓர் ஆசிரியர் கூறியது; புகையிரதக் கடவை காணும் போதெல்லாம் ஞாபகம் வரும்.மனதுள் சிரிப்பேன்.
பிரபா; சயந்தன்; கனெக்ஸ் அண்ணா..மேலதிகமாகத் தருவார்கள் என நம்புகிறேன்.
இங்கே கனெக்ஸ் அண்ணா தந்துள்ள சுட்டியில்; மேலும் அவர் பற்றி அறியலாம். ஆக்கங்கள் கிடைத்ததும்
போடுவார்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
இந்தச் செல்லிக்கே கல்லடி வேலரைச் சொல்லிவைச்சதில; சந்தோசம்...பிரபா கூட ஆச்சரியப்படுகிறார்
பாருங்கோ?? பிரபா வேறு செய்திகளோடும்;சிரிப்போடும் வருவார் என நம்புகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கனகசிறி அண்ணா!
தங்கள் சுட்டி படித்தேன். இவர் பிறந்த தினத்தைக் கூட நாட்காட்டியில் தான் கண்டு; இந்த விடயத்தைப் போட வேண்டுமென நினைத்து; படம் தேட இணையத்துள்; ஆங்கிலத்தில் போட்டுத் தேடிக் கிடைக்கவில்லை.
தெரிந்ததை வைத்து ஒப்பேற்றிய பதிவே இது. கட்டாயம் இவர் ஆக்கங்கள் படிக்க ஆவலாக உள்ளோம்;
தயவு செய்து கிடைத்தால் பகிரவும்.

சோமி said...

திமிலை மகாலிங்கம் இவரைப் பற்றி நான் சின்னப் பையானாக(16 வயசில) இருந்த போது சில கதைகள் சொன்னதாக நினைவு. ஏதும் தகவல் இருந்தால் உங்களோடு பகிர்ந்து கொள்ளுறன்.

சின்னக்குட்டி said...

//சரி "பீட்டன்" இது எந்த ஊர் முறை; நீங்கள் "பூட்டனை" த்தான் //


பீட்டன் பீட்டி என்று வடமராட்சி பக்கம் பாவிக்கிறது யோகன்...........சயந்தனும் அந்த பக்கம் போலை.

கல்லடி வேலனை பற்றி தேடிய போது

மீனா இப்போதுதான் இதை வாசித்தேன். நல்ல விடயமொன்றைத் தந்துள்ளீர்கள். புஸ்பராணி தங்கராசா கல்லடி வேலன் அவர்களின் மகள் என்பதை இத்தனை காலம் அறியாமலே இருந்து விட்டேன். தெரியத் தந்தமைக்கு நன்றி. நட்புடன் சந்திரவதனா

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு ஐயா இது. கோச்சி, கொப்பர் என்ற சொற்களை தமிழகத்திலும் நெருங்கினவர்களுக்குள் புழங்குவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் தலைப்பைப் பார்த்தவுடனேயே புரிந்தது.

உங்க ஆச்சி, உங்க அப்பர் என்பதே கோச்சி, கொப்பர் என்று ஆனதோ என்று நினைப்பதுண்டு.

கல்லடி வேலர் செய்தது மிக நல்ல விசுப்பாத்தியாக இருக்கிறது. :-)

சயந்தன் 'பீட்டன்' என்றொரு சொல்லைப் புழங்கியிருக்கிறாரே?! அப்படி என்றால் என்ன பொருள்?

கானா பிரபா said...

கல்லடி வேலர் பற்றிய மேலதிக தகவல்களை வெளியிடும் அனுமதியை இன்று பெற்றிருக்கின்றேன், நாளைக்குள் பதிவாகப் போடுகின்றேன் அண்ணா

வல்லிசிம்ஹன் said...

கல்லடி சொல்லடியுடன் அருமையாகத்தான் பாடுபட்டு இருக்கிறார்.
நகைச்சுவை அழகு அருமை. நன்றி யோகன்.

Anonymous said...

யோகன் ஐயா!
நீங்கள் செய்யும் பணி மகத்தானது.
உங்களால் தமி்ழ் வளம் பெறுகிறது.
வீரமாமுனிவர் பற்றின கட்டுரையிலேயே புரிந்தது நீங்கள் ஒரு தமிழ்க்கடல் என்று.
தொடர்ந்து இதுபோன்று பயனுள்ள கட்டுரைகளை எழுதவும்.
உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
தமிழ்மண வெற்றுக் கூச்சல்களுக்கிடையில் உங்கள் ஆக்கங்கள் புத்துயில் அளிக்கின்றன.
உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன்.

குமரன் (Kumaran) said...

பெயர் சொல்ல விரும்பாத நண்பரின் கூற்றை நானும் வழிமொழிகிறேன் யோகன் ஐயா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சோமி!
மிக விபரமான பதிவு பல புதிய தகவல்களுடன் (சிரிப்பு) கானாப்பிரபா போட்டுள்ளார். படிக்கவும்.
அத்துடன் கனெக்ஸ் அண்ணாவும் ஒரு தொடுப்பிட்டுள்ளார்.
இதைவிடப் புதிய தகவல் இருந்தால் பகிரவும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
சயந்தன் எந்தப் பக்கம் எனத் தெரியாது. பல வடமராட்சி
நண்பர்களிடம் பழக்கமிருந்தும்; இந்தச் சொற்களை இப்போ
தான் கேட்டுள்ளேன்.
எவ்வளவு நம் நாட்டு விடயங்களே தெரியாதிருந்துள்ளோம்.
பிரபாவின் பதிவு மிக விபரமாகவுள்ளது.படித்தீர்களா??
சந்திரவதனாவுக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரன்!
நீங்கள் இவற்றை அறிந்துள்ளீர்கள்.உங்கள் ஊகங்கள் சரி ;ஆனால் இந்த உறவு முறைகள்;
தம்பி;தங்கைக்கு மாறவில்லை ;என்பதை வசந்தன் குறிப்பாக நோக்கியுள்ளார்.
மேலும் இந்த "விசுப்பாத்தி"...நல்ல புதிய சொல்...சொல் ஒரு சொல்லில் அறிமுகப்படுத்தலாம்.நம்ம
"கல்லடி வேலரிடமும்" விசுத்தனமான ; ரசிக்கக்கூடிய ;நகைச்சுவைக் குத்தல். இருந்துள்ளது.
இன்றைய தலைமுறைக்கு இவரை விசுவைச் சொல்லி அறிமுகப் படுத்துவோம்
ஈழத்தில் வடமராட்சி எனும் பருத்துறையை அண்டிய பகுதிகளில்; பூட்டன்;பூட்டியை இப்படி
பீட்டன்;பீட்டி எனக் கூறும் பழக்கம் உண்டென அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
நான் முதல் தடவையாகக் கேள்விப்பட்டேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி அக்கா!
கல்லடி...சொல்லடி...தான் கொடுத்துள்ளார்.இவை ஆயிரம் பொல்லடிக்குச் சமமானவை!! அந்த நாள் மனிதரல்லவா??
மேலும் இவர் பற்றி கானாப் பிரபா நல்ல சிரிப்பூட்டும் விபரங்கள் அவர் பதிவில் இட்டுள்ளார்.
படித்துச் சிரிக்கவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலியாக பின்னூட்டிய அன்பருக்கு!
உங்கள் பின்னூட்டம் படித்து சற்றுக் கூச்சப்பட்டு; இதைப் பிரசுரிக்காமல் தவிர்ப்போம் எனக்கூட
எண்ணினேன். அது உங்களை அவமதிப்பதாக ஆகும். உங்கள் மனம் வேதனைப்படலாம்
என்பதால் பிரசுரித்தேன்;குமரனும் கூட நெளிய வைத்துவிட்டார்.
தமிழ்க் கடல் என்பதெல்லாம் மிக மிக மிக அதிகம். ஏதோ நான் அறிந்ததை எழுதுகிறேன்.
அவை உங்களுக்கு உண்மையில் மகிழ்வைத் தந்த தாயின் அதற்காக ;அடியேன் மகிழ்கிறேன்.
இதே வேளை பலர் எழுதுவதைப் பார்த்து நம்மால் முடியவில்லையே என எனக்குப் பொறாமை
வருகிறது.என்பதனைக் கூச்சப்படாமல் சொல்லுகிறேன்.
ஒன்று உண்மை "கூச்சல்" போட எனக்கு விருப்பமில்லை. கும்மியடிப்புக்கும் நேரமில்லை.
எதுவுமே செய்யவில்லையெனில்; நற்துயில் மேலென நினைப்பவன் நான்.
இதே வேளை தமிழ் மணத்தில் பலர் மிக நன்றாக எழுதுகிறார்கள்; ஆனால் அவற்றைப் பலர் இனம் கண்டு படிப்பதாகவில்லை. அப்படிப் படித்தோரும் பின்னூட்டுவதில்லை.
எனவே இயன்றவரை பின்னூட்டுங்கள். அதுதான் பெரும் ஊக்கம் தரும்;ஆவலைத் தூண்டும்.
எனவே படித்துக் கருத்துக் கூறத் தவறவேண்டாம். தவறுகளைக் கூடச் சுட்டவேண்டும்.
மேலும் பின்னூட்டத்தின் கடைசியில் "ஆக்கங்கள் புத்துயில் அளிக்கின்றன" என்பதை
"புத்துயிர்" என வாசிக்க அனுமதிக்க வேண்டும்.
வைத்துக் கொண்டு வஞ்சனை செய்யும் பழக்கம் இல்லை; அதனால் தெரிந்ததை தருவேன்.
படிக்கப் பின்னூட்ட; எழுத அதற்கு மறுமொழி என மிகுதியான நேரம் தேவையாக உள்ளது.
அத்துடன் எனக்குக் கணனி அறிவு குறைவு அதனால்; பலர் உதவி நாட வேண்டும். அத்துடன்
தட்டச்சும் சிரமம்.
எனினும் முயல்கிறேன்.

சயந்தன் said...

பீட்டன் என்ற சொல் வழக்கு எனது அப்பம்மாவிடம் இருந்து எனக்கு கடத்தப்பட்டது. வடமராட்சியில் இவ்வழக்கு உள்ளதென்பது எனக்குப் புதிய தகவல்.
யோகன் அண்ணை.. இது போலவே ஆனால் மறுவளமாக பிட்டு என்பதை புட்டு என்று சொல்லும் வழக்கமும் உள்ளது தானே.
ப அல்லது பு திரிபுகள் வேறும் சில சொற்களில் உள்ளன.
ம்.. இந்தப் பதிவுக்கு கூட ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்கிறது. ம்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சயந்தன்!
உங்கள் பின்னூட்டத்துள் இரண்டு விடயம் உள்ளது. 1) நீங்கள் வடமராட்சியில்லை;2) உங்கள் பக்கமும் பீட்டன் பீட்டி உள்ளது.
ஆனால் எனக்கு இவை மிகப் புதிய செய்தியே!!
ஆம் !பருந்து-பிராந்து; பனாட்டு-பினாட்டு;பலாப்பழம்-பிலாப்பழம்;பிடிச்சிருக்கு-புடிச்சிருக்கு..இப்படி ? நிறைய உண்டு.
என்ன? மைனஸ் பற்றிக் கூரியுள்ளீர்கள். அது புரியவில்லை; கண்டு பிடிக்கமுடியுமா..
அது அவர் புரிதல்!!

சினேகிதி said...

\\கொண்ணர் கொழும்பால வந்திட்டார். (அண்ணன் ஷஷகொழும்பில் இருந்து வந்துவிட்டார்)\\

பொதுவா மற்றவர்கள் விழிக்கும்போதுதானே அப்படிச் சொல்வார்கள்?? ஒருவர் தன்னுடைய அண்ணாவைக் கொண்ணா என்று சொல்லுவாரோ??

ஐயா->கொய்யா

சினேகிதி said...

செல்லப்பா சுவாமிகள் என்றொருவரும் இருந்தவரெல்லோ?? அவர்தானே தேரடிச்சித்தர்??

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சினேகிதி!
உங்கள் ஊகம் சரி எனினும் சொல்லக் கூடாதென்றில்லை. சிலருக்கு அப்பர்,அண்ணர்...கொப்பர்;கொண்ணராகத்தான் இருக்கிறவர்கள்.
உதாரணமாக : நான் நண்பரிடம் வாரவிறுதி 2.30 க்கு படத்துக்குப் போக;
பட மாளிகையில் நிற்கும் படி கூறிவிட்டு;வெள்ளி பாடசாலையால் வருகிறேன்.
சனி காலை;தபால் வண்டியில் அண்ணர் வந்து நிற்கிறார். படம் போக முடியுமா??
படிபென்ன ? படிப்பென ? என உயிரை வாங்குவார்களே??
அப்படியே திங்கள் காலை பாடசாலை போனால்; நண்பன் கேட்பான்;
என்னடா??எழுத்தோடும் மட்டும்;உன்னைப் பாத்துக் கொண்டு நிண்டனான். என்னடா? ஆச்சு
அப்போ ,நாம் திருவாய் மலர்வோம் மிக மரியாதையாக"சனி ;காலம்பிற கொண்ணரல்லோடா?
கொழும்பால வந்துட்டார்.புறகு என்கையடா வெளிக்கிடுவது
அவன் புரிஞ்சுடுவான்.நீங்களும் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
"கொப்பரைச் சரிக்கட்டுவதுதான் பெரிய கஸ்டமாக் கிடக்கடா?? என அலுத்துக் கொள்ளுவோம். உங்களுக்கு இப்படிக் கஸ்டமெதுவும் இருந்திருக்காது என நம்புகிறேன்.

***இந்தச் செல்லப்பா சுவாமிகள் தான் தேரடிச் சித்தரா? எனும் விபரம்; கானாப்பிரபா துல்லிய
மாகக் கூறுவார்.அவருக்கு மின்னஞ்சலிடுகிறேன்;.
அவர் யாழ்பாணத்துச் சுவாமிகள் பற்றி ஒரு பதிவிட்டதாக ஞாபகம். இது பற்றி கனேக்ஸ் அண்ணாவும்
கூறுவார்.

மாசிலா said...

//கோச்சி, கொம்மாட்ட,
கொப்பருக்கு,கொண்ணர், கொழும்பால,கொக்காவுக்கு,
கொம்மானை//
பாண்டிச்சேரியை சேர்ந்த நாங்கள் இதையே "ங்கொக்கா, ங்கொம்மா, ங்கொண்ணன்..." என சொல்வது வழக்கம். இதனுடை சரியான விரிவாக்கம் உங்க அக்கா, உங்க அம்மா, உங்க அண்ணன்... என்பதே. இப்படி பேசப்படும் கொச்சை மொழித்தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், கீழ் வர்க்கத்தினரே இதனை பெரிதும் பழகுவர்.

ramachandranusha(உஷா) said...

யோகன் படிக்க படிக்க சுகமாய் இருக்கிறது. இதுவே கானாபிரபாவின் கல்லடி வேந்தர்" பதிவுக்கும் :-)
ஈழத்தில் பேச்சு வழக்குகளில் இருக்கும் விதங்களைப் பற்றியும் எழுதுங்களேன். தமிழகத்தில் சென்னை
தமிழ், நெல்லை, கோவை போன்ற வட்டார வழக்குகள், அங்கும் உண்டு இல்லையா?

கானா பிரபா said...

செல்லப்பாச் சுவாமிகள் தான் தேரடிச் சித்தர், "தேரடியில் தேசிகனைக் கண்டேன் தீரெடா பற்றென்றான் சிரித்து என்று யோகர் சொல்லுகிறார், இதோ என் பதிவு.

http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_08.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சினேகிதி!
தங்கள் தேரடிச் சித்தர் பற்றிய கேள்விக்கு; அவரே!!தான் இவர்; செல்லப்பா சுவாமிகளே தேரடிச்சித்தர் எனப் பிரபா பதிலிட்டுள்ளார்.
********
மாசிலா!!
உங்க பக்கம் "ங்" போட்டுப் பேசுவார்களா??.
//இப்படி பேசப்படும் கொச்சை மொழித்தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், கீழ் வர்க்கத்தினரே இதனை பெரிதும் பழகுவர்//

அப்போ!! கீழ் வர்க்கத்தினர்;இனிமையாகப் பேசுவோர் என்கிறீர்கள்.ஆனால் ஈழத்தில்..இது பரவலாக எல்லாத் தரப்பு மக்களிடமும் இருந்தது.
குறிப்பாக என் ஆங்கில ஆசிரியர் ஒருவர் ; மிக நாகரீகமானவர்..மேற்படிப்பு லண்டனில் கற்றவர்.கடைசிவரையும் வேட்டி,நசனல் எனும் ஈழத்து மேற்சட்டை; உத்தரிக மடிப்புக் கலையாத சால்வை(கழுத்தில் இட்டால் முழங்கால் வரை இருபக்கமும் தொங்கும்) ஆனால் அவர்..."உன் படிப்புப் பத்தாது; கொப்பரை ஒருக்கா;என்னை வந்து சந்திக்கச் சொல்லிவிடு!" என என்னிடம் கூறியவர்.
இப்பேச்சு வழக்கு ஈழத்தில் இழிவாகக் கருதப்படவில்லை. இயல்பாக ஏற்றுக் கொள்ளப் பட்டதென்பதற்கு
இப்படிப் பல உதாரணங்கள் கூறலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உஷா!
கல்லடி வேலனாரை உங்களைப் போல் "கல்லடி வேந்தர் என்று கூறவும் அழகாகத்தான் இருக்கிறது.
அவர் நகைச்சுவை வேந்தர் தான்.
ஒன்று தெரியுமா?? எங்கள் பேச்சு வழக்கு உங்களுக்குப் பிடிப்பதுபோல்; எனக்கு சென்னைச் செந்தமிழ் மிகப் பிடிக்கும்; துக்ளக்கில் "ஜக்குவின்" தமிழை விரும்பி படித்து மகிழ்வேன்.
நீங்கள் வசந்தனின் பதிவுகள்; தமிழ்நதியின் பதிவுகளில்;;எங்கள் ஈழ உரையாடல்களை வாசித்து ரசிக்கலாம்.
என்னினும் இவை பற்றி எழுதும் திறன் அவர்களுக்குண்டு ;வசந்தனுக்கு ஒரு வேண்டுகோள் வைப்போம்.

வெற்றி said...

அடடே, யோகன் அண்ணை, ஒண்டரை மாதம் தமிழ்மணப் பக்கம் வரேலை. அதுக்குள்ள எவ்வளவு அருமையான பதிவுகள் போட்டுவிட்டியள்.

அண்ணை, உண்மையா பதிவைப் படிச்சு வாய்விட்டுச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை ததும்பிய பதிவு.

ஈழத்திலை, இப்பவும் எங்கடை ஊரிலை இந்த கோச்சி, கொப்பர், கோத்தை என்ற சொல்லுகள் புழக்கத்திலை உண்டு.

நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இவர் மிச்சப் பகிடைகளைப் படிக்க கானாப் பிரபா போட்ட பதிவைப் படிக்கவும். அதன் பின்னூட்டங்களும் நல்லாயிருக்கிறது.
நம்மவர் என்ன?? குறைந்தவர்களா??கலக்கியுள்ளார்கள்.