Thursday, April 12, 2007

புலம் பெயர்ந்த தமிழர்களும் பிள்ளைகளும்...




லகில் தமக்கென ஒரு நாடற்ற தமிழினம்;இன்று விரும்பியோ விரும்பாமலோ...உலகெங்கும் வாழத்தலைப்பட்டுவிட்டது.இதில் ஈழத்தமிழரின் நிலையே குறிப்பிட்டுச் சொல்லும்படியுள்ளது.

ஐரோப்பிய ,அமெரிக்க,ஒஸ்ரேலிய நாடுகளில் வாழும் நம்மவரின் எதிர்காலச் சந்ததியினரின் நிலை என்ன?
என்ற கேள்வி! இப்போ பரவலாக நம்மிடையே ஓர் அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளதெனில் மிகையில்லை.

உலக வளர்ச்சியின் வேகத்துக்கு மொழி,கலை,கலாச்சாரம் ஈடு கொடுக்கிறதா? எமது இளைய
தலைமுறையினர் இதை ஈடேற்றுவார்களா? என்பதே ஆய்வாளர்களுக்கு விடை கிடைக்காத வினாவாகவுள்ளது.

"தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு" அதுதான் ஒற்றுமையின்மை. என்னையும் சேர்த்தே சுயபரிசோதனை மூலம் எழுதுகிறேன்.நாம் எங்கே சென்றாலும் தனித்து வாழப் பழகிவிட்டோம்.

நாட்டில் வேலி,மதில் என்று வாழ்ந்த நாம் இங்கும் எல்லை வகுத்து தண்ணீரில் நெய் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழப் பழக்கப்பட்டு விட்டோம்.

இதை நம் எதிர்காலத் தலைமுறை முற்றாக ஏற்றுக் கொள்வதாகவில்லை.
ஆனால் நம் தனித்துவம் பேணப்பட்டது இதனாலெனில் மறுப்பதற்கில்லை.

இதை மறுப்பதன் மூலம் எமது இளைய சந்ததி நம் தொடர்பிலிருந்து அறுத்தோடப் பார்க்கிறதென்பது உண்மை. ஆனால் அவர்கள் ஓடும் பாதை முற்றாகச் சரியெனக் கூறுமளவுக்கில்லை.

ஐரோப்பிய; அமெரிக்கப் பண்பாடு நேற்றிருந்தது போல் இன்றில்லை. அவர்களே ,அவர்கள் எதிர்காலச் சந்ததி பற்றி அச்சமடைய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந் நிலையில் இன்று புலம்பெயர்ந்த தமிழ்ப் பெற்றோருக்கு மிகப் பெரிய சுமை தம் பிள்ளைகளில் எதிர்காலம். "அவயத்து முந்தி இருக்கச் செயல்" எனும் வள்ளுவன் வாக்கை ;தாம் எவ்வளவு தூரம் தம் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் நிறைவேற்றப் போகிறோம் என்ற அச்சம்.

பிள்ளை வளர்ப்பென்பது" கத்தியில் நடப்பது போல்" என்றார். ஓர் அறிஞர். அன்றைய சூழ்நிலையில் குடும்பத்திற்கு குறைந்தது 5 பிள்ளைகளாவது இருக்கும்; ஒன்றோ இரண்டோ பெயர் சொல்லும் பிள்ளையாகிவிடும்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பல காரணங்களாலும் இரண்டுக்குப் பின் வேண்டவே வேண்டாமென ; நம்மவர்களும் ஆகிவிட்ட நிலையில் எல்லோருமே தம் பிள்ளைகள் அவயத்து முந்தியிருக்க என்ற எண்ணத் துடிப்புடன் செயற்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஆனால் இதற்காக நம் பெற்றோரில் அனேகர் கைக் கொள்ளும் அதரப் பழைய விடயம்; டாக்டர்;எஞ்சினியர், புறக்டர்...என்ற இந்த மூன்றுக்குள்ளும் தம் பிள்ளைகள் வரவேண்டுமென கொப்பாட்டன் காலக் கொள்கையுடன் இன்றும் ;இங்கும் வாழுவது. இது முன்னேறும் நிலையில் உள்ள இந்தச் சமுதாயத்துக்கு ஏற்புடையதில்லை.

ஒரு வைத்தியனாக வரக்கூடிய பிள்ளையை உயிரைக்கொடுத்தும் வைத்தியனாக்க வேண்டியது பெற்றோர் கடன்.
ஆனால் அந்த வழியில்;எந்த வகையிலும் ஆர்வமற்ற பிள்ளையை வைத்தியனாக்குகிறேனெனப் பெற்றோர் உயிரைக் கொடுத்து கடைசியில் ஒன்றுக்குமுதவாமல்; அவன் "லாச்சப்பயில்" (la chapelle-தமிழர்களின் வியாபார நிலையங்கள் சுற்றியுள்ள ;பாதாளத் தொடர் வண்டித் தரிப்பிடம்) நிற்பது; வைத்தால் குடுமி- மழித்தால் மொட்டை எனும் உப்புச் சப்பற்ற கொள்கை; உவப்புடையதில்லை.

எனவே பிள்ளைகளின் ஆர்வமறிந்து ,அத்துறையில் ஊக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை.அது விளையாட்டாக இருக்கலாம்;சங்கீதமாக இருக்கலாம்;கணணியாக இருக்கலாம்; கார் திருத்தலாக இருக்கலாம்; ஏன் முடி திருத்தலாகக் கூட இருக்கலாம்.

பொய் களவின்றி; உடல்;மூளை உழைப்பால் முன்னேறும் எந்தத் துறையானாலும் அவர்கள் ஊக்கமாக உள்ள துறையை ஊக்குவியுங்கள்.

தம் பிள்ளை ஒரு மருத்துவனாக வேண்டுமெனும் ஆசை எல்லாப் பெற்றோரிடமும் உண்டு. ஆனால் தான் ஒரு வைத்தியனாக வேண்டுமெனும் ஆசை எல்லாப் பிள்ளைகளிடமும் இருப்பதில்லை.

இது கசப்பான பொது உண்மை. ஆகவே பிள்ளைகளின் ஆர்வமறிந்து செயற்பட்டு அவர்களைப் பயனுள்ளவர்களாக மாற்ற முற்பட வேண்டியது ;நம் புத்திசாலித்தனத்தில் தங்கியுள்ளது.

நாம் பல மொழி பேசும் நாடுகளில் வாழ்கிறோம்.ஆனால் நாம் தமிழர்கள். இன்றைய மொறீசியஸ் தீவுத் தமிழனுக்கேற்பட்ட மொழி வீழ்ச்சி; இந்த இலங்கைத்தீவுத் தமிழனுக்கு ஏற்படக்கூடாது.

இன்னும் 25 வருடத்தில் உலக வீதிகளில் தமிழ்ப் பெயர்களுடன் தமிழ் தெரியாத தமிழர் உலாவரும் அவலம் இருக்கக் கூடாது.

அதுவும் தனக்கெனத் ஒரு நாடு கேட்ட ஈழத்தமிழரின் சந்ததி உலா வரக்கூடாது. அதற்குப் பெற்றோரே! தம் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவூட்டத் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும்.

எனவே உங்கள் சிறார்களுக்கு வாழும் நாட்டு மொழியுடன் தாய்மொழியையும் ஊட்டுங்கள்.வாழும் நாட்டு மொழியில் இயல்பாகவே முன்னேற வாய்ப்பு அதிகம் எனவே தாய் மொழியில் கூடிய கவனம் செலுத்தவும்.

ஓரளவுக்குத் தாய்மொழிச் சுவையை அவர்கள் உணர்ந்தால்; பின்பு தானே அவர்கள் தொடர்வார்கள்.அந்த ஆரம்ப அறிவை அவர்கள் அறியாத பருவத்தில் அறிய வைப்பதே நீங்கள் தாய்நாட்டுக்கும்; நம் மொழிக்கும் செய்யும் மிகப் பெரிய கைங்கரியம். உங்கள் பிள்ளைகள் அந்நிய மண்ணில் தாய்மொழிப் புலமையுடன் வளர்வது உங்களுக்கே பெருமை.

50 வருடங்களுக்கு முன் என்ன? என அறிந்திராத ஜப்பானிய மொழியை உலகம் தேடி;ஓடிப் படிக்கிறது.நம் தமிழ் மொழிக்குக் கூட இந்த நிலை வரலாம்; எனவே எங்கள் சிறார்களையும் தமிழ் அறிவு பெற்றோராக்குவோம்."

வீதி தோறும் இரண்டொரு பள்ளி" என்றார் பாரதி;நாம் செய்வோம் "உலக நாடுதோறும் நற்றமிழ்ப் பள்ளி" நம் சிறார்க்கு...
நம் தமிழூட்ட இதை மற்ற நாட்டார் நமக்குச் செய்யார். நாமே அதைச் செய்வோம். செய்வோரை ஊக்குவிப்போம்; நம் சிறார்க்காக ;நம் மொழிக்காக..

இவற்றுடன் உலக அரங்கில் எங்கள் இசை,நடனம்;சிற்பம்;ஓவியம் இன்றும் கலாபிமானிகளால் போற்றப்படுவது உண்மை.இந்த ஆர்வமுள்ள உங்கள் பிள்ளைகளின் பொன்னான பொழுதுகளை இப்படியான அழகியல் கலைகளில் லகிக்க வைத்து அவர்களை விற்பன்னர்களாக்காவிடினும்; விசயமறிந்தோராக்குங்கள்.

எல்லோரும் ஜேசுதாஸ் ஆகமுடியாது;சுப்புலெட்சுமியும் ஆகமுடியாது;பொன். சுந்தரலிங்கமும் ஆகமுடியாது; ஆனால் அவர்கள் ஆற்றலை அறிய உணர எல்லோராலும் முடியும்.

அதற்கு விடயஞானம் தேவை. அதை வளர்க்கலாம் அதற்கு நீங்கள் அவற்றில் ஆர்வம் காட்டவேண்டும்.

பாலூட்டும் தாய்; தன் குழந்தையின் மருந்தைத் தானுண்பாள்; ஒவ்வாதவற்றையும் தானுண்ணாள்.

அப்படி; நம் குழந்தைகளைப் பொறுத்தமட்டில் நாம் இருக்கவேண்டும்.நம் வீட்டு வானொலி மூன்று வேளையும் "கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போகலாமா" என அழுதால்; நம் பிள்ளைக்கு நம் இசையின் சரளி வரிசை கூட வராது. பாரிசில் நடந்த "அளவெட்டி பத்மநாதனின் "நாதஸ்வரக் கச்சேரியில் பிரபல வானொலி அறிவிப்பாளர்...விமல் சொக்கநாதன் ;நம் பிள்ளைகள் "கொலம்பஸ் கொலம்பஸ்" ஐ (அந்த நாளில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பாடல்) அறிந்த அளவுகூட பத்மநாதனை அறியவில்லையென ஆதங்கப்பட்டார்.

இது வெட்கப்பட வேண்டிய விடயம்.ஏன் கேவலமும் கூட ;பன்னாடைபோல் நல்லதை வடியவிடும் சமுதாயமாக நாம் மாறி வருவது அருவருக்கத்தக்கது.

கிளிப்பிள்ளை போல் வெறும் சினிமாப்பாடல்களை ஒப்புவிப்பதும்; அந்த நடனங்களென அங்கங்களை அசிங்கமாக வளைப்பதை பார்த்துச் செய்வதுமாக நம் சமுதாயம் மாறிவருவது மிக மிக வேதனை.அதைவிட இதையே பெற்றோரும் இளமை முதல் ஊக்குவிப்பதும் வேதனைக்குரியது.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" கேள்வி ஞானமே பெரிய கொடை. நல்லதை நீங்கள் கேழுங்கள் உங்கள் பிள்ளைகளும் அதையே தேடும்.

நாமே நம் பிள்ளைகளின் முதலாவது பாடப் புத்தகம்; போர்ப்பந்தரில் பிறந்த மோகன்லால் கரம்சந் காந்தி...உலகம் போற்றும் மகாத்மா காந்தியானது; புத்திலிபாய் என்ற கொண்ட கொள்கையில் எந்த நிலையிலும் தளராமை என்ற வீராப்புக் கொண்ட தாய் எனும் ஆரம்பப் பாடப்புத்தகம்.

வீட்டில் சைவ உணவு உண்பவர்களின் குழந்தைகள் இயல்பாகவே!
அசைவத்தை வெறுப்பது போல்; பெற்றோரின் விருப்பு வெறுப்புகளே பிள்ளைகளில் பிரதிபலிக்கிறது.உங்கள் பிள்ளை என்ன விரும்ப வேண்டுமென நீங்கள் விரும்பிகிறீர்களோ!
அதை நீங்கள் விரும்பத் தொடங்குங்கள்.

நீங்கள் தலைக்குமேலே வளையம் வளையமாக புகைவிட்டுக் கொண்டு பிள்ளைகளைச் சிகரட் பிடியாதே? என்றால் இன்றைய 21 நூற்றாண்டு இளைஞன் பிடித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேனெனத் தான் கூறுவான். இளைஞி கூட. எனவே நீங்கள் முன்மாதிரியாக நடவுங்கள்; பிள்ளைகள் பார்த்து நடக்க...

போதைப்பொருட்கள் ;குடி வெறி; கொலை;களவு என ஐரோப்பிய ;அமெரிக்க இளஞ் சமுதாயம் சீரழிவின் விளிம்பில் அல்லற்படுகிறது.

அவர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியவர்களாதலால் இவற்றுக்கு ஈடுகொடுக்கிறார்கள். நம் சமுதாயம் அவர்கள் போல் மாறினால் சில ஆண்டுகளிலே காணாமலே போய்விடுவோம்.

எனவே எந்த நிலையிலும் நம் பிள்ளைகளுக்கு இக் கெட்ட பழக்கங்கள் வராவண்ணம்; எப்போதும் அவற்றின் தீமைகளை அறிவுறுத்தி ;இளமையிலிருந்தே வளர்த்து விடுவோமானால் அதுவே பாதி வெற்றி!

நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு நற்பண்புள்ள அங்கத்தவர்களை உருவாக்குவதே! பெற்றோராகிய நம் மிகப் பெரிய பொறுப்பு.வீரர்களும்; விவேகிகளும் பண்புள்ளவர்கள் மத்தியிலேயே உருவாக முடியும்.எனவே பண்புள்ளவர்களை உருவாக்குவோம். மிகுதி தானே வரும்.


21 நூற்றாண்டுத் தமிழ் இளமைகளே! உங்கள் பெற்ற தாய் மாத்திரமல்ல; தமிழ்த் தாயும் உங்களை நம்பித்தான் உள்ளாள். மறவாதீர்கள் ;அவளைத் தாங்கும் தூண்களே! நீங்கள் தான்...உங்கள் வாழ்வும் வளமும் அவள்தான். எனவே உத்தம புருசர்களாக வளர்வோம்; வாழ்வோமெனச்
சங்கர்ப்பம் பூணுங்கள்.

எந்த துர்ப்பழக்க, வழக்கங்களுக்கும் அடிமையாகாமல்; கல்வியே கருத்தாகக் கொண்டு; உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! வீணே உண்டு களிப்போரை நிந்தனை செய்வோமென்றுணர்ந்து;உங்கள் ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கையில் என்பதைப் புரிந்து வாழ்வீர்கள் என நம்புகிறேன்.

(இக் கட்டுரை பாரிஸ் தமிழர் கல்வி நிலைய 12 ஆண்டு விழா மலரில் 03-01- 1999 ல் வெளிவந்தது

26 comments:

Unknown said...

மிக நல்ல கருத்துகளடங்கிய பதிவு எடுத்து இட்டதற்கு நன்றிகள்.
குறிப்பாக
//பிள்ளைகளின் ஆர்வமறிந்து, அத்துறையில் ஊக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. அது விளையாட்டாக இருக்கலாம். சங்கீதமாக இருக்கலாம். கணணியாக இருக்கலாம். கார் திருத்தலாக இருக்கலாம். ஏன் முடி திருத்தலாகக் கூட இருக்கலாம்.

பொய் களவின்றி, உடல், மூளை உழைப்பால் முன்னேறும் எந்தத் துறையானாலும் அவர்கள் ஊக்கமாக உள்ள துறையை ஊக்குவியுங்கள்.//

என்ற கருத்து நடைமுறைப்படுத்த மிகவும் அவசியமான ஒன்று.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுல்தான் அண்ணா!
என் பதிவுகளுக்கு வந்து;
படித்துக் கருத்துக் கூறிப் பாராட்டியதற்கு நன்றி.

Anonymous said...

தரமான கருத்துக்கள் கொண்ட நல்லதொரு கட்டுரை...

நன்றி..!!!!!!!!!!

கானா பிரபா said...

யோகன் அண்ணா

சிந்திக்க வேண்டிய பல விஷயங்களைக் கிளறியிருக்கிறீர்கள். அறியாப்பருவம் வரை வழிகாட்டி, பின்னர் பிள்ளைகளின் தேவை உணர்ந்து செயற்படல் ஓவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட. நல்ல வழிகாட்டலோடு வளரும் பிள்ளைகளுக்கு ஒரு நிலைக்குப் பின் அதிகம் கண்காணிப்பு தேவையில்லை என்று நினைக்கின்றேன்.

அமெரிக்காவென்ன, ஐரோப்பா என்ன அவுஸ்திரேலியா என்ன நம்மவர் நிலை மாறவில்லை. பக்கத்து வீட்டுப் பிள்ளை சங்கீதம் படிக்குது என்று தன் பிள்ளையை வலிந்து வகுப்புத் தள்ளுவதும், அரங்கேற்றம் என்ற பெயரில் ஒட்டிக்கொண்ட நவீன சம்பிரதாயமும் ( பத்தாயிரம் டொலர் செலவில் உயர் ரக மண்டபம் எடுத்துச் செயவது இங்கு சாதாரணம்) , நம்மவர் மேல் படிந்திருக்கும் துடைக்கமுடியாத தூசாகிவிட்டது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தரமான கருத்துக்கள் கொண்ட நல்லதொரு கட்டுரை...//


ரவி!
தங்கள் பாராட்டு சந்தோசம் தந்தது.
நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பிள்ளைகளின் தேவை உணர்ந்து செயற்படல் ஓவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட. நல்ல வழிகாட்டலோடு வளரும் பிள்ளைகளுக்கு ஒரு நிலைக்குப் பின் அதிகம் கண்காணிப்பு தேவையில்லை என்று நினைக்கின்றேன்.//

பிரபா!
ஆம்; தகுந்த கண்காணிப்பு; பின் சிறு வழிகாட்டல்...நல்மக்களை உருவாக்கலாம்.

//நம்மவர் மேல் படிந்திருக்கும் துடைக்கமுடியாத தூசாகிவிட்டது//

இது பற்றி ஓர் பதிவே போடலாம். அவ்வளவு கூத்திருக்கு. இந்த ஆசிரியர்கள் கூத்து உட்பட.
சிலர் "சந்தனம் மிஞ்சிய நிலை"...அதனால் கூத்துப் போடுவது;தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
கருத்துக்கு நன்றி!

Anonymous said...

//உங்கள் பிள்ளை என்ன விரும்ப வேண்டுமென நீங்கள் விரும்பிகிறீர்களோ!
அதை நீங்கள் விரும்பத் தொடங்குங்கள்.//
ஒவ்வொரு பெற்றேரும் மனதில் பதிய வைக்க வேண்டிய வாக்கியம்.

செல்லி said...
This comment has been removed by the author.
தென்றல் said...

யோகன்,

மிக அருமையான பதிவு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

Anonymous said...

" ஒரு பெற்றார் 21 வயதின்பின் தன் மகளை ஒரு வருடத்தில் நடனம் பயிற்றுவித்து அரங்கேற்ற வைத்தார்கள்.சரியான வெட்கக்கேடு..."

இதில் என்ன வெட்கக்கேடு இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அரங்கேற்றம் என்று நடக்கும் கூத்து இருக்கிறதே, எழுதி மாளாது. இதில் பட்டம் பெற்ற பெறாத எல்லோரும் அடக்கம்.
அமெரிக்காவில் செய்யப்படுகிற அரங்கேற்றம் பற்றிச்சொல்லப்போனால் 'நாறல்' என்ற வார்த்தை 'குறைவென்று தமிழ் சொல்லுமே' என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவு படுத்தும். இதில் ஆசிரியையின் அட்டகாசம் வேறுகதை. செய்வதெல்லாம் செய்துவிட்டு ஏதே தான் கேட்காமலே ஆசையில் செய்துவிட்டனர் என்ற போர்வையில் விளையாடுவார்.
இதுபோதாதென்று அவ உடுப்பு, நட்டுவாங்கம், அரங்கம் பற்றி தனி எஜன்சி நடத்துவா!!! அவரவர் தகுதிக்கு ஏற்ற மாதிரி ஏற்பாடு செய்து கொமிசன் பெற்றுக்கொள்வா என சொன்னார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//உங்கள் பிள்ளை என்ன விரும்ப வேண்டுமென நீங்கள் விரும்பிகிறீர்களோ!
அதை நீங்கள் விரும்பத் தொடங்குங்கள்.//

ஒவ்வொரு பெற்றேரும் மனதில் பதிய வைக்க வேண்டிய வாக்கியம். //

பெயரிலி!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
பல விடயங்களை அவதானித்துள்ளீர்கள். இது ஒரு தொற்று நோய் போல் நம்மவர் மத்தியில் பரவுவது
மிக வேதனை. பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தம் கொடுத்து வீணடிக்கிறார்கள்.
ஆனால் மேதாவிகள் போல் புலம்புவார்கள். இவர்கள் சொல்லிக் கேட்கும் கூட்டமில்லை.
எதையுமே திணிக்கலாம் எனக் கருதிக் கோட்டை விடுகிறார்கள் . என்பதே உண்மை.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தென்றல்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

குமரன் (Kumaran) said...

அருமையான இடுகை ஐயா. பல சிந்தனைகளைக் கிளப்பியிருக்கிறது.

சினேகிதி said...

வணக்கம்!

தேவையான பதிவு...1999 ல் வெளிவந்த இந்தக் கட்டுரையைப் படித்த உங்களுக்குத் தெரிந்தவர்கள் மத்தியாலாவது ஏதும் மாற்றம் வந்ததா?

இதைப்பற்றி நானும் முன்னர் 2 அல்லது 3 பதிவுகள் எழுதியிருக்கிறேன்.இப்போதும் எனது நண்பியின் கதையை எழுத வேண்டும் என நினைத்தேன்.

அவளது பெற்றோருக்கும் அவள் டொக்டராக வேண்டும் என்பது கனவு...கனவென்றும் சொல்ல முடியாது அது ஒரு வெறி.சுதந்திரமா ஒரு வேலை செய்ய விடுவதில்லை நீ ஒரு டொக்ராகு முதல் பிறகுதான் நண்பர்க் வீட்டுக்கோ அல்லது விழாக்களுக்கோ போகலாம் அதுவரை ஒன்றுமி;ல்லை என்று சொல்லிக் கிட்டத்தட்ட கொடுமை செய்கிறார்கள் என்றே சொல்லலாம்.இப்பவே விரக்தி அவளுக்கு இப்பிடியே போனால் அவளுக்குத் தான் யாரும் வைத்தியம் பார்க்க வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலியாக வந்த இரண்டாவது அன்பருக்கு!

செல்லி! சொன்ன 21 வயது விடயத்தில் பெரிய தவறு இல்லை. "கற்றலுக்கு வயதெல்லை இல்லை" எனும்
பேச்சு வழக்கிருந்த போதும் "இளமையில் கல்" என்பதே!! நன்று. அந்தவகையில் ;அப்பெற்றோர் தம் பணச் செருக்குக்கெடுத்த எடுப்பே அதென எவருமே கொள்வதைத் தவிர்க்கமுடியாது. விதிவிலக்குகள் உண்டு . ஆனால் நம்மவர் மத்தியில் இல்லை.
மேலும் இந்தக்கலைகளில் சிறு ஆர்வம் ஈடுபாடுள்ளவனெனும் வகையில்; மென்டலின் சிறீநிவாஸ்- 4 வயது; நித்தியசிறி - 5 வயது; சோபா( நாட்டியம்) - 7 வயது..;இவர்கள் இக்கலைகளைக் கற்க முற்பட்டகாலம்.
மற்றது இந்த அரங்கேற்றமென்பது ஐயர் செய்து வைக்கும் திருமணம் போல்; பதிவுத் திருமணம் போல்
சட்டவலுவற்றது. பெற்றோர் காசு தயார் பண்ணியவுடன்;ஆசிரியர் அரங்கேற்றத்துக்கு நாள் குறிப்பார்.அவருக்கே தெரியும் அதன் பின் அந்தப் பிள்ளை இந்தப் பக்கம் வராதெனும் உண்மை.
ஏனையவை!!! நீங்கள் மிக அழகாக அவதானித்துள்ளீர்கள்.
வரவுக்கும் ;நற்கருத்துப் பரிமாற்றத்துக்கும் நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரன்!
"சிந்தனைகளைக் கிளறியதா?" ...இதை தட்டச்சுச் செய்து 2 மாதம் ;போட சற்றுப் பயமாக இருந்தது.
யாரெல்லாம் வந்து ;இலவசக் குட்டுத் தருவார்களோ எனும் அச்சம்.
ஏனெனில் சிலருக்கு இவர் பெரிய இவரோ எனும் எண்ணம் ;உடனே மண்டையைக் குடையும்.
நீங்கள் பாராட்டுவது சந்தோசமாக உள்ளது.

செல்லி said...

//இதில் என்ன வெட்கக்கேடு இருக்கிறதென்று தெரியவில்லை.//

என்று அனானி கூறியதற்கு என் பதில்:


//மற்றவரின் பிள்ளை அரங்கேற்றம் செய்தால் தன் பிள்ளையும் அரங்கேற்றம் செய்ய வேண்டுமென முனைகின்றானர்.//
அனானி, இங்கு இதை முதல்ல நீங்க படிச்சிருக்கணும்.இதனால் தன் பிள்ளையின் வயதென்ன, கலை என்பது ஒரு வருடத்தில் கெதியாக படித்து அரங்கேற்றக் கூடியதா எனச் சிந்திக்காமல் செயற்பட்டது என்னவாகத் தெரிகிறது?

// ஒரு பெற்றார் 21 வயதின்பின் தன் மகளை ஒரு வருடத்தில் நடனம் பயிற்றுவித்து அரங்கேற்ற வைத்தார்கள்.சரியான வெட்கக்கேடு//
அரங்கேற்றம் என்பது பட்டம் பெறுவது அதாவது graduation.
அப்படியானால் அந்தக் கலையை முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றபின்தான் அரங்கேற்றம் இடம்பெற வேண்டும். தனியே அரங்கே ற்றத்திற்குத் தேவையான நடனங்களை மட்டுமே கற்று அரங்கேற்றுவதுக்கு பேர் அரங்கேற்றமா? அது அரங்கிறக்கம்
ஒரு கிழமைக்கு நாளுக்கு 2 மணித்தியாலப்படி பாடசாலை விமுறைகளைத் தவிர்த்து 40 கிழமைகளில் 80 மணித்தியாலம் , அத்துடன் விசேட வகுப்புகள் 30 மணித்தியாலம் , ஆக மொத்தம் 110 மணித்தியாலம் நடத்தை கற்றுக் கொண்டு அரங்கேற்றம் வைப்பது சரியா?அதுவும் மற்றவரைப் போல தன் மகளும் அரங்கேற்ற இந்த வயதில் அவசர அவசரமாக இது தேவையா? என்பதுதான் என் கருத்து.
அனானி இதற்கு உமது பதில் என்ன?

ஏனென்றால் அதன்பின் அந்தப் பிள்ளை அரங்கில ஆடாது அல்லது சினிமா பாட்டுக்கு வேண்டுமானால் அரங்கேற்றியவள் என்றபட்டத்துடன் ஆடிப் பேற் பெறலாம். இவர்கள் இப்படிச் செய்வதெற்கெல்லாம் சொல்லும் நியாயம் தமிழ்க் கலை, கலாச்சாரத்தை வளர்க்கிறார்கள் என்பதுதான்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இருக்கிற தமிழாலயப் பள்ளிகளில் தேவைப்படும் சீர்திருத்தம் குறித்து என் இடுகை -

http://blog.ravidreams.net/?p=148

Anonymous said...

யோகன், செல்வி,

உங்களைப்போலவே எனக்கும் இந்த அரங்கேற்றம் ஆட்டம் பாட்டு சாமத்தியச்சடங்கு எல்லாவற்றையும் பற்றி குறை உண்டு. இதனால் எனது பல நலன்விரும்பிகள்/நண்பர்களின் விரோதத்தை சம்பாதித்துள்ளேன்.

"கற்றலுக்கு வயதெல்லை இல்லை" எனும்
பேச்சு வழக்கிருந்த போதும் ...."

பேச்சு வழக்கில் மட்டுமல்ல நடைமுறையிலுமுண்டு. நான் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இரவு நேரவகுப்புகளுக்கு வருபவர்கள் எங்கள் ஆசிரியரிலும்வயது கூடியவர்கள்! அதுமட்டுமல்ல வேலையிலும் எனது மேலதிகாரி இப்போதூம் பகுதிநேர மாணவர்தான்.
பெற்றோரின் வற்புறுத்தலால் மேடையேறுவது வெட்கக்கேடு எனலாம். ஆனால் மனம் விரும்பினால் 21வயதில் ஏறுவது ஒன்றும் குறை இல்லை. அதுமட்டுமல்ல நான் ஒரு "ஒடிசி" நடனம் பார்த்தேன் நன்றாக இருந்தது ஆடியவர் திருமணம் செய்து பிள்ளைகள் கல்லூரி சென்றபின்னர் அரங்கேறியவர்.

"மென்டலின் சிறீநிவாஸ்- 4 வயது; நித்தியசிறி - 5 வயது; சோபா( நாட்டியம்) - 7 வயது..;இவர்கள் இக்கலைகளைக் கற்க முற்பட்டகாலம்...."

நீங்கள் குறிப்பிடுவது விரல் விட்டு எண்ணக்கூடியது. இவர்களை Child Prodigy என்பர். ஆனால் இவ் Child Prodigy க்களில் எவ்வளவு பேர் காணாமல் போனார்கள் என நினைக்கிறீர்கள். இவ்வாறான Burnt out ஆனவர்களில் வீணை காயத்திரி முக்கியமானவர். இந்த லிஸ்ட் மிக நீளமானது. அது மட்டுமல்ல மிகப்பல Child Prodigy's பிற்காலத்தில் தமது குழந்தை வாழ்வை தொலைத்துவிட்டோமென கவலைப்படுவதையும் போதைப்பொருட்களுக்கு அடிமை ஆவதையும் கண்டிருக்கிறேன்.
இங்கே நியூயோர்க்கில் 14 வதில் மருத்துவக்கல்லூரி முடித்தவர் இந்தியா சென்று தமையனாரின் சீதனப்பிரச்சினையில் சிக்கி உள்ளே இருந்ததும் நடந்தது.

எனவே வயதோ அன்றி பணமோ, புகழோ தூண்டுதலாக இலாமல் உண்மையான அக்கறையுடன் கற்பது ஒன்றே சிறந்தது எனலாம்

"...பெற்றோர் காசு தயார் பண்ணியவுடன்;ஆசிரியர் அரங்கேற்றத்துக்கு நாள் குறிப்பார்.அவருக்கே தெரியும் அதன் பின் அந்தப் பிள்ளை இந்தப் பக்கம் வராதெனும் உண்மை..."

மிகவும் சரியானது! அதுமட்டுமல்ல 'மாவீரர் நாள்" நடனம் ஆடும் எனது நண்பர்களின் பிள்ளைகள் வளர்ந்து நல்ல நடனக்காரர்களான போது அவர்களின் பெற்றோரையோ அவர்களையோ நமது நிகழ்வுகளில் காணமுடியாது!!! மாறாக இந்தியர்களின் நிகழ்வுகளில் காணலாம். இதில் எமது நிகழ்வு ஒலி, ஒளி அமைப்பு சரியில்லை என் குறை வேறு!!!!!

"...அதுவும் மற்றவரைப் போல தன் மகளும் அரங்கேற்ற இந்த வயதில் அவசர அவசரமாக இது தேவையா? என்பதுதான் என் கருத்து.
அனானி இதற்கு உமது பதில் என்ன?.."

"நாறல்" என சொன்னேனே? அது குறைவென்று 'தமிழ் சொல்லும்' என்றேனே படிக்கவில்லை?????
(பார்வை யுவராணி கண்ணோவியம் பாடலில் வரும்)
இவாறான தெளிவான நேரான முகத்திலடித்தால் போன்ற பதில்களால் தான் எனது நண்பர்களிடம் குறைபடுகிறேன். இதில் நீங்கள் வேறு

வெற்றி said...

யோகன் அண்ணை,
நல்ல கட்டுரை. மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். மிக்க நன்றி.

/* ஒரு பெற்றார் 21 வயதின்பின் தன் மகளை ஒரு வருடத்தில் நடனம் பயிற்றுவித்து அரங்கேற்ற வைத்தார்கள்.சரியான வெட்கக்கேடு...*/

ஆட்சேபனை இல்லையெனின் ஏன் இதை வெட்கக்கேடு என்கிறீர்கள் என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாமா?
எனக்கும் இப்போது கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் போலுள்ளது. இதுவரை எனக்கு நேரமும் கிடைக்கவில்லை.முயற்சியும் எடுக்கவில்லை.

செல்லி said...

யோகன்

வெட்கக் கேடு என்ற வார்த்தைக்கு பதிலாக "பொருந்தந்தானா?" எனப் போடிருந்தால் மேலும் மேலும் தவறான புரிந்துணர்வுக்கு இடமளித்திராது.
கலையை கற்பதற்கு குறிப்பிட்ட காலம் தேவை.அவசரதில் கற்றுக் கொள்ள முடியாது.
வெற்றி, வயது ஒரு தடை என்ற கருத்தில் அப்படி எழுதவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவிசங்கர்!
தங்கள் பதிவுகள் பார்த்தேன். கட்டாயம் இப்பாடசாலைகள் நடத்துவோர். கைக் கொண்டால் பலன் உண்டு.
இவர்கள் கைக் கொள்ள வேண்டுமே!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலியாக வந்து; என்னிடமும் செல்வியிடமும் கேள்விகள் கேட்டுள்ள அன்பர்;
"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோவம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோவம்; எனும் நம்
சமுதாயத்துடன் வெகு அனுபவப்பட்டது தெரிகிறது.

நீங்கள் கூறுவது போல்; இந்த சாதனை புரிந்த வயதில் கூடியவர்கள் பட்டியல் கூடத் தயாரிக்கலாம்.ஆனால் அவர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இதை நான் அடித்துக் கூறுவேன். "இளமையில் கற்றுப் புகழ் பெற்றோர் பட்டியல் அப்படிப்பட்டதல்ல..
மிக நீளமானது.
அதனால்; கற்கைக்கு இளமையே பொருத்தமான காலம் என்பதில் உங்களுக்குக் கருத்து வேறு பாடு இருக்க மாட்டாது; எனக் கருதுகிறேன்.
அப்படி இருக்குமானால்...எல்லாக் குழந்தைகளையும் அவர்கள் குழந்தைப்பருவத்தில்; அதை அனுபவியுங்கள் என் விட்டுவிட்டு; 26 வயதுக்கு மேலோ அல்லது அவர்கள் விரும்பும் காலத்திலோ
கல்வியோ; வேறு கலைகளையோ கற்பிகலாமெனக் கருதுகிறீர்களா??
குழந்தைப் பருவத்தைத் தொலைத்து; தடுமாறியவர்கள் பட்டியலை எடுத்தால்; அந்தக் குழந்தை ;அந்தப் பாடத்தையோ கலையையோ விரும்பிக் கற்கமுற்படாமல் பெற்றோரின் ஆக்கினையிலும்; நிர்ப்பந்தத்திலும்
கற்றதாக இருக்கும்; மென்டலின் சிறிநிவாசின் பின்னணியைப் பார்த்தீர்களானால்; அவர் 4 வயதில் ;பிறந்த நாளுக்கு தந்தை பரிசு என்ன? வேண்டுமெனக் கேட்ட போது; மென்டலின் வேண்டுமென்றாராம். (தந்தையும் அந்த வாத்திய கலைஞர்)
வீணை காயத்திரி....திடீரென ...அல்பம் போடப் போனது; அவர் தவறு...இன்றும் வீணைக்கு நல்ல கலைஞர்கள்..தேவையான நிலையில்...அவர் வீணையை...மெல்லிசைக்குள் புகுத்த முற்பட்டது. அவர் தவறு.
மேற்குறிப்பிட்ட ஒரு சிலரை மாத்திரம் நான் உதாரணத்துக்கு;எடுத்ததன் காரணம் ..."எங்கள் பின் வீட்டு சின்னத்தம்பி மாஸ்ரரின் பேரன்" என்றால் நிச்சயம் உங்களுக்குத் தெரியப் போவதில்லை".

ஆனாலும் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்கிறேன். "உண்மையான அக்கறை; ஆர்வம்" ...இருந்து ..புகழையோ..பணத்தையோ கருத்தில் கொள்ளா திருந்தால் சாதிக்க வயது தடையில்லை.
ஆனாலும்...இளம் வயது மிகப் பொருத்தமானது. காரணம் மனதில் வேறு கவலைகள்; தொல்லைகள் அற்ற
மிகுதியான அர்பணிப்புக்குரிய நேரமுள்ள பருவம்.
முதுமையில் இந்தக் சிரமம் உண்டு. இதைத் தாண்டிச் சாதித்தவர் சொற்பம். கைவிட்டொரே அதிகம்.

ஆகவே...எந்த வகையிலும்..21 வயதுப் பெண்ணுக்கு ...வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பெற்றோர்..அவசர அவசரமாக கலைகற்க வைத்து அரங்கேற்றம் காண்பது; கலைப் பற்றின் வெளிப்பாடென்பதை நம்புவது கடினம்; இவ்வளவு கலைப் பற்றுள்ள பெற்றோர் ஆனால் அந்தப் பிள்ளைக்கு; அவள் இளம் வயதில் தொடங்கியிருப்பார்கள். அப்படிப்பட்ட ஆர்வமுள்ளோரை நான் ஈழத்தில் கண்டுள்ளேன்.
இது அவர்கள் புதுப் பணத்துக் கெடுத்த எடுப்பென்பது சிறு குழந்தையும் புரியும் விடயம்.
அதனால்; செல்லி கூறிய "வெட்கக் கேடென்பதில்" ...பெரிய தவறில்லை.வேறு மாதிரி நோகாமல் கூறலாம்.
அதை எப்படிச் சொன்னாலும்...அச்சொல்லின் உள்ளீடு...கேலியின் தொனிப்பே!!
மேலும் யாராவது நமது கலைகளை உள்ளார்ந்த உணர்வுடன்...கற்க முற்படுவீர்களானால்;;உங்களை
மனதார வாழ்த்துகிறேன்.
வித்துவானாக இல்லாவிடினும் விசயமறிந்தோராகுங்கள்.

Chandravathanaa said...

தேவையான நல்ல பதிவு

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரவதனா!
படித்துப் பின்னூட்டியதற்கு நன்றி!
தேவை பற்றிப் பெற்றோர் உணர்வார்கள், என நம்புவோம்.