Monday, July 23, 2007

இந்த இரண்டு துயரமும் கூறுவது ஒன்றே!!!


25-07-2007 யூனியர் விகடன் படித்தவர்கள் ....

1-நாவினால் சுட்டவனை தீயினால் சுட்டானா?...

2- ஐந்து ரூபாய்க்காக ஒரு தற்கொலை....


என்ற இந்தச் செய்திகளைப் படித்திருக்கலாம்!

இச் செய்தியின் நாயகன், நாயகிக்கு வயது, வெறும் பத்தும், பதினொன்றுமே.....

செய்தியைத் சுருக்கமாகத் தருகிறேன்!


முதலாவது செய்தியின் சிறுவன் 10 வயது, அவன் வயதையொத்த சிறுவன் ,இவன் தாயாரை கெட்டவார்த்தையால் திட்டி விட்டான் என்பதால், அவன் வீடுசென்று மண்ணெய் ஊற்றிக் கொழுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். எரிந்த சிறுவனே வாக்குமூலம் கொடுத்துள்ளான்।


இரண்டாவது செய்தியில் 11 வயதுச் சிறுமியின் தந்தை அவளுக்குப் 10 ரூபா கொடுக்கிறார், அவள் அக்கா அதில் 5 ரூபா தனக்கு எனக்கேட்க ,தாய் 5 ரூபாயை வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்!, தன் காசைச் சகோதரிக்குக் கொடுத்தது தாங்காது, துப்பட்டாவைக் கழுத்தில் மாட்டி சுருக்கிட்டு, தொங்கி இறந்தே விட்டாள்।


இந்த இளம் குருத்துக்களின் மனதில் இவ்வளவு வைராக்கியமும், வன்மமும்
எப்படி? வந்தது...


இதற்கு பெரிய ஆய்வு செய்ய வேண்டியதில்லை.


இன்றைய திரைப்படங்களே....இந்தச் சீரழிவின் ஜீவநாடி....

இன்றைய பழிக்குப்பழி தீர்க்கும் கதையமைப்புடைய திரைப்படங்கள்,
எம் சிறார்களை மனநிலையை வெகுவாகப் பாதித்து விட்டது.


அன்றைய படங்களின் நாயகன் குற்றம் செய்தவரைப் பிடித்து,
பொலிசாரின் கைகளில் கொடுப்பது போல் காட்சியமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது
போல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு!எனச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது!।


இந்த வெளுத்தையெல்லாம் பாலேன எண்ணும் சிறுவர்கள் மனதில் விசத்தைத் தெளித்துவிட்டார்கள்,,,,

வயது வந்தவர்களே திரைப்பட நாயகன்களைக் கடவுளாகக் கருதிப் பாலாபிஷேகம் செய்யும் போது ,இந்த விபரமறியாப் பிஞ்சுகளின் நிலையென்ன?

கல்லாப்பெட்டி நிரப்பும் கூட்டம் ,சமுதாயம் பற்றிச் சிந்திக்காது.
நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது!


அடுத்து திரைப்படத்தின் தங்கை சின்னத்திரைக் கதைகளில்
சிறிய குடும்பச்சிக்கல்கலுக்குக் கூட நாயகி தற்கொலை என்பதை
விலாவாரியாகக் காட்டுகிறார்கள் இந்த தொலைக்காட்சியே
தஞ்சமெனக் கிடக்கும் தாய்மாருடன் இந்தச் சிறுமிகளும்
சேர்ந்து இவற்றைப் பார்த்து, மனமாசடைந்தவர்களாகி ,
சிறு மனச் சோர்வுக்குக் கூட இவற்றை நாடுவது,
சிந்தனைக்குரியது.


10 வயதில் கொலைசெய்யத் துணிவு வருவதும், தற்கொலை செய்யும் மனத்திடம் வருவதும்... வரவேற்கக் கூடியதல்ல.

நாம் நமது எதிர்கால சந்ததி பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டதென்பதன் அறிகுறியே இது.....

இவர்கள் இளம் மனதில் இனியாவது... பொறுமை, தர்மம்,ஞாயம்,
மன்னிக்கும் மனப்பாங்கு, பழிவாங்கும் எண்ணமின்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்ப்போமா??

அத்துடன் திரைப்படம், தொலைக் காட்சி என்பது தவிர்த்து...வாசித்தல், கேட்டல் என்ற விடயங்களையும் நாமும் அவர்களுடன் சேர்ந்து செய்யப் பழகுவோமா??

பாடசாலைகளிலும்...

உயிரின் பெறுமதியை உணரப் போதித்தல்

பழிக்குப்பழியால் ஏற்படும் துன்பம் அவமானம் போன்றவற்றை விளக்குதல்।

தற்கொலையால் குடும்ப அங்கத்தினர் படும் வாழ்நாள் வேதனையைப் புரிய வைத்தல்।

குடும்பத்திலுள்ள அனைவருமே ,சிறியோர் மனதைப்பாதிக்கக் கூடிய தொலைக்காட்சித் தொடர்களை முற்றாகப் பார்ப்பதைத் தவிர்த்து,
நம் சிறார்களைக் காத்து, நல்ல எதிர்காலச் சந்ததியை உருவாக்குவோமா
?

16 comments:

குமரன் (Kumaran) said...

ஐயா. நீங்கள் எல்லா சிறுவர்களைப் பற்றியும் கவலை கொண்டு இதனைச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு முதலில் என் மக்களைப் பற்றிய கவலை வந்துவிட்டது. சன் தொலைக்காட்ச்யைப் பார்த்து நிறைய தேவையற்றவைகளைக் கற்று கொள்கிறாள் எங்கள் மகள் என்றொரு எண்ணம் அண்மைக்காலமாக மீண்டும் மீண்டும் தோன்றத் தொடங்கியிருக்கிறது. இப்போது கோடை என்பதால் வெளியே அழைத்துச் சென்று விளையாடுகிறோம். பனிக்காலத்தில் சன் தொலைக்காட்சி துண்டிக்கப்படும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இறைவா. பிள்ளைகளை நன்றாக வளர்க்க எம்மைப் போன்றவர்களுக்கு நல்வழியைக் காட்டு.

G.Ragavan said...

மிகவும் வருத்தத்திற்குரிய செய்திகள். குழந்தைகள் குழந்தைகளாக வளர இந்த உலகம் அனுமதிக்கவே அனுமதிக்காதா!

துளசி கோபால் said...

மனவருத்தம் தரும் செய்திகள் (-:

வடுவூர் குமார் said...

அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது போல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு
இதை பார்த்த போது "அன்னியனில்" ஒரு காட்சியில் விகரம் சொல்வதாக அமைகிறது.
"அதெப்படி நீ சட்டத்தை கையில் எடுக்கலாம்?"
"நீ சட்டத்தை உடைக்கலாம நான் கையில் எடுக்கக்கூடாதா?" என்று கேள்வி கேட்பார்.
இதை பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் ஏதோ ஒரு சமயத்தில் "சட்டத்தை கையில் எடுக்க ஆரம்பிப்பார்கள்".
சினிமா மட்டும் அல்ல நீங்கள் சொல்லிய தொலைக்காட்சி தொடர்களும் இப்படித்தான். நல்ல வேளை இந்த தொடர்களை நான் எதையும் பார்ப்பதில்லை. விவகாரத்து,பழி,குரோதம் எல்லாவற்றையும் இந்த தொடர்கள் விரிவாகவும்,விளக்கமாகவும் சொல்லித்தருகின்றன.
பார்பதில்லை.. எப்படி தெரியும் என்கிறீர்களா? அதான் காது கேட்கிறதே!!

jeevagv said...

//இந்தச் சீரளிவின் ஜீவநாடி....//
சீரழிவு?

கானா பிரபா said...

;-(

வைசா said...

யோகன்,

மிக நல்ல கருத்துகள். பாடசாலையை விடுங்கள். நீங்கள் கூறும் அத்தனையும் வீட்டில் ஆரம்பிக்க வேண்டும். பெற்றோர்கள் கூடிய பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும். இம்மாதிரியான படங்களையோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ பிள்ளைகளைப் பார்க்க பெற்றோர்கள் அநுமதிக்கக் கூடாது. இது நடக்குமா?

வைசா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அன்றைய படங்களின் நாயகன் குற்றம் செய்தவரைப் பிடித்து,
பொலிசாரின் கைகளில் கொடுப்பது போல் காட்சியமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது
போல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு!எனச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது//

இது தமிழ்ச் சினிமாவில் மட்டும் இல்லை யோகன் அண்ணா...உலகெங்கும் இது பரவப் பார்க்கிறது!

ஆங்கிலப் படங்கள் (ஸ்பைடர் மேன் படங்கள் கூட) வன்முறைத் தீர்வுகளை வெளிச்சம் போடத் துவங்குவது அச்சமூட்டும் ஒரு விடயம்! அனிமேஷன்-காமிக்ஸ் கூட இப்படி ஆகி வருவதைப் பார்த்தால்....:-(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரா!
உண்மை!; பல வீடுகளில் இந்தத் தமிழ்த் தொலைக்காட்சி தொல்லைக் காட்சியாகிவிட்டது; பிள்ளைகளுக்காகப் பெற்றோரும் இவற்றைத் தியாகம் செய்யும் படியே ஆகிவிட்டது.
ஒன்றுக்கு ஆயிரம் தடவைகள் யோசித்து; இந்தத் தமிழ் "தொல்லைக் காட்சியை" ;நான் வீட்டுள் அனுமதிக்கவில்லை.பாரம்பரிய இசை; அறிஞர் உரை போன்றவற்றில் ஆர்வமிருந்தும்; வெகுவான நேரம் சினிமாவே இச்சின்னத்திரையை ஆட்கொள்வதால்;;;;பிள்ளைகள் இல்லாத போதும் ;;;எனக்கு வேண்டாம்.
என் மனைவிகூட தேவையில்லை என்று விட்டார். பிரஞ்சுத் தொலைக்காட்சியில் ஆக்கபூர்வமான பல நிகழ்ச்சிகள்; எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பார்க்கவுண்டு.
எதிர்காலக் குழந்தைகள் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.ஏனெனில் அவற்றில் நம் குழந்தைகளும் உண்டு.
மகளுக்கு இசையார்வம் இருந்தால் திசை திருப்பப் பார்க்கவும்...

Unknown said...

மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம். அவரவர் குடும்பத்திலும் குழந்தைகள் நல்ல முறையில் வளர வேண்டுமென்று விரும்புபவர்கள் அவர்கள் குடும்பத்துக்குள்ளாவது ஒரு கடிவாளம் போடுவது மிகவும் அவசியமான அவசியம்.

மலைநாடான் said...

இது அன்மைக்காலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமுகப்பிரச்சனை. சினிமா, தொலைக்காட்சித் தொடர், என்று மட்டுமல்ல, தற்போது செய்திகளில் கூட இத்தகவல்கள் அதிகம் வெளிவருவது போலுள்ளது.

இதற்கான மாற்று அவசியமானது. அது வைசா சொல்வது போல் வீட்டிலிருந்து ஆரம்பிப்பது சிறந்ததே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//குழந்தைகள் குழந்தைகளாக வளர இந்த உலகம் அனுமதிக்கவே அனுமதிக்காதா?//

ராகவா!
உங்கள் ஏக்கம்; எதிர்பார்ப்புப் புரிகிறது.
இந்த நம்பிக்கை எனக்கு "உலகத்தில்"அற்று விட்டது. ஆனால் பெற்றோராகிய நாம் முயன்றால் முடியாததல்ல.
இன்னும் காலம் தாழ்ந்திடவுமில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா!
அந்தச் செய்திகளின் வருத்தமும்,அதிர்ச்சியும் தான் பதிவானது..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வடுவூரார்...
நான் பார்த்த இரு தொடர்கள்(ஒளிஒலி நாடாவில்),,,கையளவு மனது,சித்தி
20 பாகமாக முடிக்கக்கூடியதை 200 பாகமாக்க அவர்கள் தேவையற்ற காட்சிகளைச் சேர்ப்பது புரிந்தது. இதனுடன் காலம் கடத்துவதில் பயன் இல்லை என நிறுத்திவிட்டேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஜீவா!
தவறைத் திருத்திவிட்டேன்.
சுட்டியதற்கு நன்றி
பலதடவை பார்த்தாலும் சில தவறுகள்
வருகின்றன.
எனினும் உங்களைப் போன்றோர் இருப்பதால் , பயமில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
கணனியின் சங்கேதக் குறிகள் எனக்கு
இன்னும் பிடிபடவில்லை.
இந்தக் குறி என் பதிவில் முதற்தடவை வந்ததால் என்ன? சொல்லியுள்ளீர்கள் எனப் புரியவில்லை.
அக்குறிக்குள் ''ஏதும் உள்க் குத்தில்லை'' என நினைக்கிறேன்.