Friday, October 27, 2006

உன்னுடைய வேல்....உறு துணை.....


உன்னுடைய வேல்....உறு துணை.....

உன்னுடைய வேலொன்றே...உறுதுணையாய் வருகிறது.....
கும்மிருட்டுப் பாதையிலும் கோலாகத் தெரிகிறது.....

என்னுடைய ஆட்டமெல்லாம் நீ..அமைத்த மேடையிலே.......
இசைவதுவும் அசைவதுவும் நீ...காட்டும் யாடையிலே....

பன்னிரு தோள்கள் எனும் பரந்தவெளி பறந்துவர....
சின்னமனச் சிறகதுதான் சிறிதேனும் பயின்றிடுமோ....

தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைக் காண்பதற்கு...
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ....!

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்,,,,எழுதியவரைத் தெரியவில்லை.

கந்தனுக்குகந்த கந்த சஷ்டியில் இப்பாடலைக் கேட்பதோ படிப்பதோ மனநிறைவைத் தரும்....

இது இலகுதமிழில் அமைந்த உன்னதமான பாடல்....இப்பாடலைப் பிரியமுடன் கேட்பேன்.

கேட்கும் போதெல்லாம் எனக்கு இரு கந்தரலங்காரப் பாடல்கள் நினைவுக்கு வரும்....

விழிக்குத் துணை திரு மென்மலர்ப்பாதங்கள்..மெய்மைகுன்றா....
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி...
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!!!!

இருட்டுப்பாதையிலும் ,குருட்டுப் பார்வையிலும் கோல் போல் நம் வாழ்வில் வேலவன் வேல் துணை என்பதனை சொல்வதில், கந்தரலங்காரத்தின் கருத்தை உள்வாங்கி அழகுற எழுதப்பட்டுள்ளது.

மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞானதெய்வத்தை மேதினியில்
சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே..!

இக் கந்தரலங்காரத்தின் கருத்தையொட்டிய அடிகளாக "தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைப் காண்பதற்கு! என் முகத்தில் அமைந்திருக்கும் இரு விழியால் இயன்றிடுமோ!!" என இரு விழி போதாது, நாலாயிரம் கண் வேண்டுமென அமைவது, இப்பாடலைச் சாதாரண தமிழறிவு மிக்கோரும் புரிந்து கொள்ளும்படி உள்ளது.

இப்பாடலின் சிறப்பு.அழகான கர்நாடக இசை மெட்டில் இசையமைத்து, சொல்லுக்குயிரூட்டும் சீர்காழியாரின் உச்சரிப்பில் பாடல் மனம் கவர்கிறது.

சீர்காழியார் என் சிந்தைகவர்ந்த பாடகர், நம் இசையில் எனக்கு லயிப்பை ஏற்ப்படித்தியவர்.இப்பாடலை நீங்களும் musicindiaonline.com இணையத் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/m/artist.19/பாடலைத் தரும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லை."கந்தன் கருணை" கிட்டட்டும்.

Wednesday, October 11, 2006

நியூயோர்க் கட்டிடம் ஒன்றை விமானம் மோதியுள்ளது

நியூயோர்க் கட்டிடம் ஒன்றை விமானம் மோதியுள்ளது; சிறு ரக விமானம் ஒன்று;இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லையெனக் கூறப்படுகிறது. இன்று மாலை நடந்துள்ளது;இப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

Monday, October 09, 2006

ஒரு தடியில்.... இருமலர்கள்..... இரு கலரில்!!





என் வீட்டுப் பல்கனியில் ஓர் "நாலுமணிப்பூ " மரம்;அது ஓரே கிளையில் இந்த இரு நிறப் பூ பூத்துள்ளது. இந்த விதையை என் நண்பர் வீட்டில் எடுத்தேன். அவர்கள் வீட்டில் மஞ்சளும்; நாவலும் எனத் தனிமரங்களாகவே இருந்தன.
இப் பூமரத்தை ஈழத்தில் மாலை நாலுமணிக்குப் பூப்பதால் ;"நாலுமணிப்பூ" எனும் காரணப் பெயர் கொண்டே அழைப்போம்.
தமிழகத்தில் என்ன??பெயரில் அழைக்கிறீர்கள்????தெரிந்தவர் கூறவும்.இதன் தாவரவியல் பெயரும் யாருக்கும் தெரிந்தால் கூறவும்.

Thursday, October 05, 2006

கவரிமா! வள்ளுவர்.......கவரிமான் நாம்......




"மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!" -வள்ளுவர்


அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

பரிமேலளகர் உரை -விசா பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமாவை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின்; தாங்காது இறப்பர்.

கருத்துரை: தன் மயிர்த்திரளிலிருந்து;ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் தம் மானம் அழியக் கூடிய நேரம் வந்தால் அதைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்வர்.

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை உரை- பாரதி பதிப்பகம் வெளியீடு

(மானமுடையவர் தன்மை) தன் உடலின் மீதுள்ள மயிர் தன் உடலைவிட்டு நீங்கினால் உடனே இறந்து போகிற கவரிமானைப் போன்ற மானிகள் மானம் நீங்க நேரிட்டால் உடனே உயிரை விட்டு விடுவார்கள்.

Yak-A species of ox found in Tibet and domesticated there;covered all over with a thick coat of long silky hair; thatof the lower parts hanging down almost to the ground. (CHAMBERS CONCISE 20th CENTURY DICTIONARY)

Yak - a wild ox used for carrying loads over mountainous regions in Tibet and Himalayas.இமாலயப் பிரதேசத்தில் பொதி சுமக்கும் "யாக்" என்னும் ஒருவகை எருது; கவரி எருமை. (The Great Lifco Dictionary)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால்;உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்; மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.

Kural - 969 Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day. Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.- koodal.com-Kural

கௌரவம் படத்திலும்; நீதிபதியான தந்தை; தன்னை மீறிய மகனுக்குச் சவால் விட்டு; தன் மனைவியிடம்" டி நான் கவரிமான் சாதியடி" என ஓர் வசனம் வருகிறது.

கவரிமான் எனும் பெயரில் ஓர் திரைப்படமும் வந்துள்ளது.

"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா??? என்ற திரைப்பாடலடியும் ;இக்குறளையொட்டி எழுதப்பட்டதே!!!!

வள்ளுவரின் இக்குறளுக்குப் பொருள் எழுதிய பலர்; இந்தக் கவரிமா எனும் இமயமலையை அண்டிய பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கை கவரிமான் என ஓர் இல்லாத மான் வகையாக்கியது ;மாத்திரமன்றி.....அதன் வாழ்வியல்பைச் சரியாகப் புரியாமல்; வள்ளுவர் ஏன் ? அவ்விலங்கை உதாரணம் காட்டினார். என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன்.

விலங்குகளில் ஆர்வமுள்ளவன்; ஐரோப்பா வந்தபின் பல விலங்குகள் தொடர்பான;விவரணச் சித்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்தவன் என்ற வகையில் அன்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சரியென்பதால் உங்களுடன் பகிர்கிறேன். தங்கள் மேலான கருத்தை வரவேற்க்கிறேன்.

வள்ளுவர் தெளிவாக "கவரிமா" என்று சொன்னதை; எப்படிக் கவரிமானாக்கினரென்பது,புரியாத புதிர்!. மூலத்தில் "கவரிமான் அன்னார்" என இல்லை. தெளிவாக "கவரிமா அன்னார்" எனவே உள்ளது.

முதல் கவரிமா என்பது;மேலே உள்ள படத்திலுள்ள விலங்கு; இது தீபேத்; நேபாளம் போன்ற நாடுகளில் இப்போதும் உண்டு. இந்தியாவிலும் இமயமலைப் பக்கம்;காஷ்மீ ரில் இருக்கிறது. இதன் தோற்றம் மாடு அல்லது எருமை போல் இருக்கும்; உடல் பூராக அடர்ந்த உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்; காரணம் இதன் வாழ்விடங்கள்; - 40°C மிகக் குளிரானவை. இயற்கை இதற்குத் தந்த பாதுகாப்பு; அடர்ந்த உரோமம்; இவ் உரோமம் நீக்கிலால்; அது குளிர் தாங்காது இறந்துவிடும். ஆனால் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.

இதன் ஒரு மயிர் அல்லது உரோமம் உதிர்வதால்;நீங்குவதால்; அகற்றப்படுவதால் .....இவ்விலங்கு ஒரு நாளும் இறப்பதில்லை. அத்துடன் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும்; மனிதனுக்கும் உரோமம்;இறகு; மயிர் ; நாளாந்தம் சில உதிர்ந்து கொண்டே! இருக்கிறது. இந்த ஒரு சில உதிர்வதால் அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் இறப்பதில்லை.அதனால் இந்த ஒர் மயிர்;என்பது இந்த உரையில் இருந்து நீக்கப்படவேண்டும்.

இப்படத்திலுள்ள இந்த விலங்கை; மானினமாகக் கொள்ள முடியாது.; மரையினம் கூட இல்லை.

இது மாடு அல்லது எருமையினமே!!! இதைப் பண்டைய தமிழர் "கவரிமா" - என அழைத்துள்ளார்கள்.

கவரி என்பது;உரோமம் ; மயிர் என்ற கருத்துடைய சொல்லாக இருந்திருக்கலாம். "மா" என்பது -விலங்கு;மிருகம் எனும் பொருள்படும். எனவே அடர்ந்த உரோமமுள்ள விலங்கு ;மிருகம் எனும் காரணப்பெயராகவும் இருக்கலாம்.

இதே வேளை "சவரி முடி" என்ற சொல்லைக் கட்டாயம் ,நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றைய பெண்கள் பாவித்த பொய்முடி; இது இலங்கைக்குச் சீனாவில் இருந்து இறக்குமதியானது. என் தாயாரும் கொண்டை போடும் போது(முடி குறைந்த போது) பாவித்தார். கவரிமா- முடியில் செய்தது. அதுவே மருவி "சவரி" யாகியிருக்கலாமெனக் கூறக் கேட்டுள்ளேன்.

என் பாடசாலை வாழ்வில்; நான் ஓர் சராசரி மாணவன்; எனக்கு இந்தக் குறளை விளக்கிய ஆசிரியரிடம்; ஒரு மயிர் விழுந்தால் ; மான் செத்துடுமா??, எனக் கேட்டு "இவர் பெரிய அறிவாளி வள்ளுவரில் பிழை பிடிக்கிறார்" என வாங்கிக் கட்டியது. நினைவுக்கு வருகிறது.ஆனால் இப்போ கூறுகிறேன். இவ்விலங்கு பற்றிச் சரியான புரிதல்;அறிதல் இன்மையால்;இக்குறள் பற்றி மிகத் தவறான விளக்கமே தரப்பட்டுள்ளது.

இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
கவரிமான் இருந்தால் அதன் விபரத்தைத் தாருங்கள்; படத்தைக் காட்டுங்கள்.

Wednesday, October 04, 2006

கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்



கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்

இத்தொடரின் இறுதிப்பகுதியாக பனை மரப் பயன்பாட்டைப் பார்ப்போம்.

வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை;தீராந்தி;;பாவுமரம்;சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து;அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40' நீளமானமரத்தில் சுமார் 25' வைரமானபகுதியாக;பாவுமரமாகவும்;ஏனையபகுதில் சுமார் 10' வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும்.

துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர்; நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.

இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி;பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது.காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம்;உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது.அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது.

வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி; இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள்; அதன் உறுதிக்காக.

தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர்;சப்பற்த்ட்தின் சகடைக்கு மேற்ப்பகுதி;அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர்,அவற்ருக்கு வயதெல்லை இல்லை; நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும்; நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது.

பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை;விழாக்காலத்தில்;திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ;தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது.சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும்.

மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர்.

மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது.

கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும்;மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்)

விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை;மட்டை;பன்னாடை;கொக்கரை;பாளை;மூரி;ஊமல்;பழுதடைந்தமரம்; யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது.

பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால்;நல்ல இயற்க்கைப் பசளையே!சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது.விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.


இதுவரை பனையின் மரப்பகுதியின் பயனைப் பார்த்தோம். எனக்குத் தெரியாதது எதாவது இருக்கும் பகிரவும்.இவற்றில் சில பாவனையில் இருந்து அருகிவிட்டன.
ஈழத்தின் போர்ச்சூழல் இதன் அருகலுக்கு முக்கிய காரணியாகிவிட்டது. நகரமயமாக்கலாகும் பனைகள் கண்மூட்டித்தனமாகத் தறிக்கப்பட்டுள்ளன.என்நிலையிலும் புதிய பனைகள் நடுவதற்கான எந்த ஓர் நடவடிக்கையும் இல்லை.
1964ல் ,கிளிநொச்சியில் காடு வெட்டிக் குடியேறிய எனது சொந்தக்காரர்;தங்கள் காணி எல்லைகளில் ;பனங் கொட்டை நட்டனர். அதை 84ல் சென்ற போது சிறுவடலிகளாகக் கண்டேன். 2004ல் சென்றபோது சுமார் 15' மரங்களாக பாளைதள்ளி நின்றன.
மிக நிதானமாக வளரும் மரமாக இருக்கும்; பயனுள்ள இம்மரத்தை ,தென்னையினத்தில் குறுகியகாலப் பயன் இனத்தை உருவாக்கியது போல் ,விவசாய விஞ்ஞானிகள் உருவாக்கிப் பரவவைக்க வேண்டும். இன்றைய ஈழத்தின் போர்ச் சூழலில் இது சாத்தியப்படாது. ஆனால் தமிழகம் முயன்றால், இதை ஓர் இயக்கமாகத் தொடங்கிப் பனைவளர்ப்பை ஊக்கிவித்தால். தமிழகத்தில் பஞ்சம் என்ற சொல் அடிபட்டுப் போய்விடும்.எலிக்கறி உண்ணும் நிலையும் வராது.கஞ்சித் தொட்டியும் வைக்கத் தேவையில்லை .என்றோ ஒருநாள் அமைதி ஏற்ப்படும் போது; அதன் பயனை ஈழத்தவரும் அனுபவிப்பர்.

தமிழர் வாழ்வாதாரமான இம் மரத்தைப் பேண நடவடிக்கை எடுப்பார்களா????

குறிப்பு:- இப் பதிவுகளில் இட்ட படங்கள் யாவும்; தமிழ்நாதத்தில் உள்ள "எழுவைதீவுக் காட்சிகள்" எனும் படத்தொகுப்பில் பிரதியெடுக்கப்பட்டவை. அழகான படங்களை உருவாக்கி யாவரும் பயன்படுத்த உதவிய அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி!!யோகன் பாரிஸ்

Sunday, October 01, 2006

கலைமகளும் பாரதியும்



ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லந்த துருக்கம் மிசிரம்
சூழ் கடற்கப் புறத்தில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியில் ஒளிமிகுந் தோங்க!

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகள் ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ!
போனதற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்க்க முயலுவம் வாரீர்!

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்


நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!

"என் பாட்டுத் திறத்தாலே வையகம் பாலித்திட வேண்டுமென"-பராசக்தியை வேண்டிய பாரதியாரின் எண்ணம்;எழுத்து எல்லாம்; தமிழ்மக்களின் கல்வி எழுச்சியும்; அறிவின் முதிற்சியும் வேண்டுவதாகவே!
இருந்துள்ளது;
கல்வி கேள்விகளில் சிறக்கும் சமுதாயமே! எதிர்கால உலகின் வளர்ச்சியுடன்,தாமும் வளரும் இல்லையேல் தேங்கிவிடும் ,இதற்கு எல்லோருக்கும் கல்வி!
"மீனைப் பிடித்துக் கொடுப்பதிலும், பிடிக்கக் கற்றுக் கொடு" என்ற கோட்பாட்டுடன்;பாரதி நம் சமுதாயத்தின் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களையும் ; கல்வியால் மேம்படச் செய்ய அவர்கள் வறுமை;முன்னெற்றத்துக்குத் தடையாக இருக்கக் கூடாதென்பதால்.......
உணவிலும் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டியதன் அவசியத்தை ; உணர்த்திப் பாடினார்.
முற்றிலும் இல்லாவிடிலும் தமிழ்ச்சமுதாயம் இப்போ தரணியில்;தன்னை நிலை நிலை நிறுத்தியுள்ளது.
பாரதியின் பெரும் ஆசை " பெண்களின் முன்னேற்றம்" ;அது திறம் பட நடந்தேறியுள்ளது.
இந்த "நவராத்திரி" காலத்தில்- சக்தி உபாசகரான "பாரதி" யையும் நினைவு கூர்வோம்.

Saturday, September 30, 2006

கலைமகள் உவப்பவை!


தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்
உய்வமென்ற கருத்துடை யோர்கள்
உயிரி நுக்குயிராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம் ;கடவுளர் தெய்வம்.


செந்தமிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம் இவட் கேசெய்வ தென்றால்
வாழி ய்கிதிங் கெளிதென்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன் மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.



வீடு தோறும் கலையின் விளக்கம்!
வீதி தோறும் இரண்டொரு பள்ளி!
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் ளெங்கும் பலபல பள்ளி!
தேடு கல்வியிலாததொ ரூரைத்
தீயினுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை!
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.

Thursday, September 28, 2006

நாமகள் வாழ்விடம்


சக்தி வழிபாட்டையொட்டிய ; கலைமகளுக்குரிய இந்த மூன்று நாளும்; "சுந்தரத் தமிழின் சொந்தக்காரன்" பாரதியின் எனக்குப் பிடித்த இந்த எளிமையான தமிழில் அமைந்த பாடல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை எவருக்குமே பிடிக்கும், புரியும் பாடலென்பதில் சந்தேகமில்லை.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்!
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்திருப்பாள்!
உள்ள தாம் பொருள் தேடியுணர்ந்தே!
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள்.

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்;
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்.

வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மானாள்;
வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்;
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்;
வீரமன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடும் தெய்வம்;
தரணி மீதறி வாகிய தெய்வம்.


Thursday, September 21, 2006

ஆனை கொண்டான்!!!!






ஆனை கொண்டான்!!!!
ஆம்! அனக் கொண்டா தான் ;உலகில் நீளமான ;நிறைகூடிய ,நீர்வாழ் பாம்பு; தென்னமெரிக்க அமேசன் நதியை அண்டிவாழும் பாம்பு.

Wednesday, September 20, 2006

கற்பகதரு 2


கற்பகதரு 2 தொடர்ச்சி

இனிப் பனையோலையின் பயனைப் பார்ப்போம்.

சுவடி:- ஆதிகாலத்தில்; எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே; பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக; பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது;தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன.பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை.காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் ;குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர்.

கால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாடாட்டுக்கிடுவர்.

கூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள்; பலையோலை;தென்னங்கிடுகு;வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது.வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில்;இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பலையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது.

வேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு; முகமறைப்பாகவும்;பாதுகாப்பாகவும்; பனையோலையோ;தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு.இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர்.

பன்ன வேலை:- இது பனையோலை ;குறிப்பாகக் குருத்தோலை;நார்,ஈர்க்கு;மட்டை என்பவற்றைக் கொண்டு; வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி;கடகம்;சுளகு;பாய்;நீற்றுப்பெட்டி;தடுக்கு;குட்டான்;உமல்,தொன்னை;
வட்டில்,விசிறி;தொப்பி;கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்க்கும் ,முக்கிய குடிசைக் கைத்தொழில்.

அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம்;எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள்;1/2' முதல் 1 1/2' விட்டம் வரை ;சுமார் 1/2' உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை.ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்...பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப்ப பயன்படுத்துவர்.நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை;அதிகம் நனையவிடாமலோ,அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால்;15 வருடங்கள் கூடப் பிய்யாமல் இருப்பவையும் உண்டு.

அஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்பெட்டி):- சுமார் 8"- 10" ,நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி ,இருஅடுக்கு அமைப்பாக இருக்கும்;முதல் அடுக்கு,பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள்;கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும்; மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம்.அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள்;சில்லறைக் காசுக்கு இதைப் பாவித்தனர்; சமையலறையிலும்; பலசரக்குப் பெட்டியாகவும்; ஆயுள் வேத வைத்தியர்கள்; மருந்து காவும் பெட்டியாகவும்;பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர்.இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ! தெரியவில்லை.

கொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு;புகையிலை பாவிப்பவர்கள்; அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில்;தனியான மூடியுடன் கூடியது.இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும்;சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும்.

மூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து,மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூட கைபிடியும் வைத்திருப்பார்கள்.

வட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர்;சாப்பாடு எடுத்துச் செல்ல,பாவித்த சிறிய மூடியுடன் கூடிய பெட்டி; நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது.இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர்.

சுளகு:- பனையீர்க்காலும்;மட்டையாலும் பின்னுவது; அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும்; வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பத்ற்கும்; பல அளவுகளில் முடைவார்கள்.

கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, ஏற்கனவே "சுஜாதா-கடகம்-நான்" ல் விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

பட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர்;இது தோட்டத்து இளங்கன்றுகளுக்கு உய்தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர்,சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.

திருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி; அதற்கு முறுக்கிய ஈர்க்கால் ;மேற்சுற்றுச் சுற்றுவர். பனை,சட்டி,குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர்.

உறி:-திருகணைக்கு 3;4 ஈர்க்கில் பின்னிய ;சுமார் 3' நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து; சாப்பாட்டுப் பொருட்களை பூனை,நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்)

உமல்:-பலையோலையில் இழைப்பது; இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும்; அன்று பொருள் காவப் பாவித்தார்கள்.

பிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும்;பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும்;அரை முட்டைவடிவில் அமைப்பது;கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும்; வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர்.சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே! அருமையாக இருக்கும்.குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர்.

தொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன.

பறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது.

நீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.

பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5'x7' பாய்கள்; சூடடிக்கப் பாவிக்கும்,பந்தலுக்கு விரிக்கும் 20'x 25' களப்பாய்கள்; பந்திக்கு விரிக்கும் 2'x30' பந்திப்பாய்; பிற்க்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது.முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப்பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.

தடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3'x3'; சிறு பாய்; குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள்.

தட்டி:-அன்றைய வீடுகளுக்கு ;பாய் ,மட்டை;சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு.

குட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும்; பொதியாக்கக் கொள்கலன்; இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3"x6" முதல் 1/2"x1" ;அளவில் கூடச் செய்வார்கள்.

நெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர்.

விசிறி,தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள்; வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள்.

விளக்குமாறு:- கழிவு ஈர்க்கினால் செய்யப்படும்;அன்றைய சமையலறை;இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது.

இவை நான் கண்ட, அறிந்த பனையோலையின் பயன்பாடுகள். வேறும் இருக்கலாம். தெரிந்தவர் அறியத்தரவும்.இறுதிப் பாகத்தில் மரத்தில் உபயோகத்தைப் பார்ப்போம்.

Friday, August 18, 2006

கற்பகதரு!


ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை;அதன் முழுப் பயன் கருதி "கற்பகதரு" என்பர். இப் போர்ச்சூழலிலும் ,பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி இணையச் சமுதாயமாகிய எமது இளைய தலைமுறையில்; அறியாதிருக்கும் சிலர் அறிய ;எனக்குத் தெரிந்ததை;அறிந்ததை;அனுபவித்தை, பகிர்வதே இப்பதிவின் நோக்கம்."கடகத்தின்" பின் இளையோர் மாத்திரமன்றி; நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட; அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும்;பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும்; எம் போன்றவர்களுக்கான ஓர் மீட்டலாகவும் இதைப் பதிவிடுகிறேன்.இதில் நான் தவறவிட்டவற்றைத் தெரிந்தோர் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.இம்மரத்தில் பெறும் உணவு; ஓலையின் பயன்;மரப்பகுதியின் பயன் என பிரித்துத் தரவுள்ளேன். இவை பற்றிப் பலர் தெரிந்திருக்கலாம்.உணவாக குருத்து; கள்; பனங்கட்டி;நுங்கு;பழம்;பூரான்;கிழங்கு என்பவற்றை உண்பர்.
குருத்து:- பனை தறிக்கும் போதோ;ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர்; இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.
கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள்; முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பநி அல்லது கருப்பனியெனவும்;தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பிடாதிறக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும்;இதைக் குடித்தால் வெறிக்கும்;அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.
பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம்;பனங்கருப்பட்டி;எனவும் கூறுவர். கருப்பநியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்க்கொள்ளும் மருந்துகளுக்கு; தேன் கிடைக்காத போது; இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம்.ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும்;செய்பாங்கிலும் பிரபலம்.
நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு.
பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும்.பசியும் அடங்கும்.
பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமைமாச் சேர்த்து; கொதிக்குமெண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும்;சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேச பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்து தட்டுத்தட்டாக வெட்டி மடித்து ஓலை உமலில் கட்டி; அடுப்படிப் பறனில் புகை படக்கட்டி வருடக்கணக்கில் பாதுகாத்து உண்ணும் பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் மிக அருமையாக இருக்கும்; இது காலை;மாலை உணவு.
சீக்காய்:- இது பனங்காயின் செங்காய்ப்பதம்; இதன் தோலைச் சீவி,மஞ்சள்சதைப் பகுதியை அரிந்து தட்டுத்தட்டாக சப்பிச்சாறையுறிஞ்சி விட்டு, தும்பைத் துப்புவார்கள்; இனிமையான மாலை ஆசைத் தீனி.
பூரான்:- பனம் விதை; கிழங்கிக்குப் பாத்தி போடும்போது; சில விதைகள்;முளைத்து வேர் பாத்தியூடு நிலத்துக்கோட முடியாதநிலையில்; அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அதைப் பிளந்து உண்ண நல்ல சுவையாக இருக்கும்; கிழங்கான விதையுளுள்ள பூரான் இருக்கமாக இராது. இதைச் "சிதவல்" என்பர். நீர்த்தன்மையுடன்;சுவை குன்றியிருக்கும்.
ஒடியல்:- "நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்" என உவமிக்கப்பட்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் பச்சை ஒடியல் என்பர். இதை இடித்தரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை,சேர்த்துப் பிட்டவிப்பர்; கறியுடனோ;சீனி,சக்கரையுடனோ சாப்பிடலாம்.அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவு. அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு;கூழ் இதில் சைவக்கூழ்;மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள்.ஒடியல்மாவுடன் மிளகாய்;உள்ளி;மிளகு;புளி;உப்பு கரைசல்; உழுந்து,பயறு,மரவள்ளிக்கிழங்கு;பூசணிக்காய்;ஈரப்பலாக்காய்;

பலாக்கொட்டை;அவரைக்காய்;முல்லை;முடுட்டை; முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவது; தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு.இது சைவ உணவு உண்பவர்களுக்குத் தயாரிப்பது ,இத்துடன் மீன்;நண்டு,கணவாய்,இறால்;திருக்கை;மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது;மச்சக்கூழ்; இது மச்சப் பிரியர்களுக்கு; முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான்;மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர்.இது தடிமலுக்கு நல்ல கைவைத்தியம்; இதன் சமையல் குறிப்பைப் பின்பு பார்ப்போம்.
அவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் ;இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர்.
கிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்த கிழங்குத்துண்டுகளுடன் பச்சைமிளகாய்,உள்ளி,மிளகு;உப்பு;வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்குவது.;சேமிபாட்டை இலகுவாக்கி;சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும்,சுவையானதும் கூட.
புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு துப்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு காயவைப்பது. இதை நீலமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு; தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும்.பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதை இடித்த மாவுக்கு தேங்காய்த் துருவல்;சீனி;சர்க்கரை,பனங்கட்டி சேர்த்து ;சிறுவர்களுக்கும்;பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பல் பலமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதாகப் கேள்விப்பட்டேன்.
இவையே, நானறிந்த பனை உணவு வகைகள்; மேலும் இருக்கலாம். தெரிந்தோர் சொல்லவும்.அடுத்ததாக ஓலையின் பயனைப் பார்ப்போம்.





Tuesday, August 08, 2006

சுஜாதா-நான்-கடகம்

23.07.06 விகடனில், கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா அவர்கள், தனக்குப்பிடித்த கவிதைப்பகுதியில் சோ. பத்மநாதன் அவர்களின் கவிதையைக்குறிப்பிட்டு, அதிலே கடகம் என்பதற்கு சும்மாடு என விளக்கமிட்டிருந்தார்கள். வாசிக்கும் போது; தவறைக் கண்டால்;அது பற்றிச் சரியாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதித் தெரிவிக்கும் பழக்கம் உண்டு.அன்றைய தபாற் சேவையில் நமது கடிதம்;கிடைப்பதற்குள் மாதங்கள் பல உருண்டுவிடுவதனால்;அவை மறக்கப் பட்டுவிடும்.இன்றோ மின்னஞ்சல் சுடச் சுடப் படித்த சூட்டுடனே எழுத முடிகிறது.அன்று பல எழுதியும் எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.கலைமகளுக்குக் கூட எழுதினேன். வெளியிடவுமில்லை; வெளி விடவுமில்லை.கி வா ஜ - மிகப் பெரிய இடம். (அவ் விடயம் ஒரு நாள் பகிர்வேன்) சுஜாதா அவர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தியதும், சிறியேனின் மடல் பார்த்து; ஏற்றுக் கொண்டு; பிரசுரித்துள்ளார். பிரசுரத்திதற்கு நன்றி!என்னைப் போல் கற்றுக் குட்டிகளுக்கு இவ் அங்கீகாரம் மிகமகிழ்வாக இருக்கிறது.

மரத்தால் ;உலோகத்தால் ;ஓலையால்; நார்களால்;பிரம்பால்,காகிதத்தால்;கண்ணாடியால்; செயர்க்கை இழைகளால் செய்யப்படும் கொள்கலங்களைப் பெட்டி எனும் புழக்கம் உண்டு. அந்த வகையில் இதை கடகப்பெட்டி என்பர்.சாதாரண பனையோலைப் பெட்டிக்கும்; கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் ; கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து; வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண் ;கல் அள்ளுதல்.சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி;சால்வை; முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது.இதை துணிவகையிலேயே செய்வர்.தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும்.பெண்கள் தண்ணீர்க் குடம் தலையில் சுமக்க உடன் தங்கள் முந்தானை நுனியைச் சுற்றிச் செய்வார்கள்.நீத்துப் பெட்டியென்பது; பனை யோலையில் கூம்பு வடிவில் இழைக்கப் படும் ஒரு வகைக் கருவி; இதன் பயன்பாடு பிட்டவித்தல்;மா அவித்தல்; பால் வடித்தல்.குட்டான் என்பது பனையோலையில் இழைக்கப்படும் ஒருவகைப் பொதியாக்கம்; இதன் பயன்பாடு பனங்கட்டியை(பனஞ்சர்க்கரை) பொதியாக்குவதே! இதில் பல அளவு உண்டு.ஒரு அங்குல உயரம் அரை அங்குல வாய் விட்டம் மிகச் சிறியது.(எப்பிடித்தான் அதை இழைக்கிறார்களோ!)!இப்பொழுதும் அது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

வாங்கோ

அன்பு நெஞ்சங்களே!"ஆசை அறுமின்! ஆசை அறுமின் - ஈசனோடாயினும் ஆசையறுமின்!!!யாரை விட்டது ஆசை! எல்லோரும் தமிழ்மணத்தில் சொந்த வீடு கட்டுறாங்களே! நாமும் ஒன்று கட்டினால் என்ன? என்ற ஆசையே இந்த "என் பார்வையில்"!எனக்கு எதையும் வாசிக்கப் பிடிக்கும்;அறிவு தெரிந்த நாளிலிருந்து;என் அறிவுக்கெட்டியவரை வாசிக்கிறேன். அவற்றில் எல்லோரைப் போலும் "என் பார்வை"யும் உண்டு.அதை உங்களுடன் பகிரவே! இந்த "என் பார்வையில்"இது எப்படி? என வந்து தான் பாருங்களேன்.
வணக்கம் நண்பர்களே!