Saturday, June 30, 2007

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.......என் எட்டு




ட்டு விளையாட்டுக்கு மாயன், ராகவன், ராமச்சந்திரன் உஷா கூப்பிட்டாங்க!


நமக்கேன்ன விளையாடும் வயதா??? இதெல்லாம் வேண்டாம்..என்றாலும் மீள்
அழைப்பு...


சாதனை....என்னைப்போன்றவர்கள் வாழ்வதே சாதனையே!!!


என்னைப் பொறுத்தமட்டில் சாதனைக்கு வரைபிலக்கணம் புரியவில்லை।


நம் நாடுகளில் சொந்த முகவரியே இல்லாமல் தெருவிலே வாழ்ந்து , அதைப்
பற்றிய கவலையே இல்லாமல் மறைகிறார்களே!!!
அந்த மக்கள் சாதனையாளர்களே!


இல்லை இல்லை என அழுவதிலும் இருப்பதில் திருப்திப்படுவது சாதனையில்லையா?
இது எத்தனைபேரால் முடியும்.

அந்த வகையில் நான் அசட்டுச் சாதனையாளனே!

1
)உயர் வகுப்புக்குப் போனபோது , ராக்கிங் - பகிடி வதை, அத்துடன் அதில் இருந்து தப்புவதானால் , மாணவர் அரங்க விவாத அரங்கில் பங்குபற்ற வேண்டும். விதியே என ஒப்புக் கொண்டேன். சமுதாய சீர்திருத்தத்துக்கு வன்முறையா? மென்முறையா?
தலைப்பு...எல்லோரும் பேசினார்கள்.எந்த முன் அனுபவமும் இல்லாமல் நானும் பேசினேன்.
பிள்ளை முலையைக் கடித்தால், தாய் தலையைக் கடிப்பதா? அவர்கள் நம் சகோதரர்கள் என அவர்களை அரவணைப்போம்... எனப் பேசினேன்.கைதட்டல் ,மாணவ மாணவிகள் மத்தியில்
அந்த
முலை
ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி..நடுவரே என்னைப் பாராட்டும் படி ஆகி..
தொடர்ந்து விவாத அரங்கம் , பட்டிமன்றம் என்றால் கூப்பிடு இவனை என்றாகி... மானிப்பாய் இந்துக் கல்லூரியில் திரைப்படப்பாடல்களில் இலக்கிய நயம் உண்டு என வித்துவான் வேலன் நடுவராக இருக்கப் பேசி...தானத்தில் சிறந்தது, நிதானம் அது இவர் பேச்சில் உள்ளதெனப் பாராட்டப் பெற்றது. பின் எங்கள் அதிபரும் பாராட்டியது.
தொடர்ந்து அந்தப் பழக்கம் பாரிஸ் வரை கைகொடுத்து, பம்பாய் ஜெயஸ்ரீ , கானமூர்த்தி
போன்றோரின் கச்சேரிக்கு அறிமுக உரையாற்றுமளவுக்கு ,நான் ஆனது ...


2) படிப்பு இவ்வளவே என ஆனதும் வேலை தேடினேன். முதல் நேர்முகத் தேர்வு
வங்கி வேலைக்கு , தேர்வு முடிந்து வெளியே வந்ததும், வேலை கிடைக்காது என
உடன் வந்த நண்பர்களிடம் அடித்துக் கூறினேன்.எப்படி?
இங்கிலாந்தின் தலைப்பட்டனம் என்ன?,
கலங்கரைவிளக்கம் என்றால் என்ன ? போன்ற கேள்வி கேட்பது ,வேலை தரவா?
அடுத்த வேலை நேர்முகத் தேர்வு.... பல கேள்விகளிடையே கடைசிக் கேள்வி..
என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்? நான் எள்ளளவும் எதிர் பாராக் கேள்வி॥ தயார் படுத்தாத கேள்வி...
அதனால் தருமி பாணியில் தருவதைத் தாருங்கள்॥ என்றேன்।

அவருமோ 50 ரூபா போதுமா? என்றார். நானுமோ வந்தால் வருகுது போனால் போகுதென
எதிர்காலத்தில் சம்பள உயர்வு வேலைக்கும், வாழ்க்கைத் தேவைக்கும் தகுந்த வகையில்
இருக்குமானால் தயார் என்றேன். அவர் சிரித்தார்...
நான் சாதித்துவிட்டேன் இல்லையா???

3) 83 இனக்கலவரம்... நான் வேலை செய்த இடத்தில் யாழ் தமிழரைத் தேடி அடித்தார்கள்।
அப்போ நான் தாடி வைத்திருந்தேன்। நான் புலியென சந்தேகம் அவர்களுக்கு
இருந்தது।(உண்மைப் புலிகளுக்கு அவமானம்) எல்லோரும் நீ...அங்கே போ॥இங்கே போ
என்ற போது நான் பக்கத்து வீட்டில் ஒழிப்பதே!! சரி என முடிவு செய்து, தப்பினேன்.
பலர் குறிப்பிட்ட வீட்டில் தேடியுள்ளார்கள்..என்பதை பின்பு அறிந்தேன்.

4) கலவரம், வேலையையும் கொண்டு போய் விட்டது. மீண்டும் அதே இடம் சென்று வேலை
செய்யும் உத்தேசமில்லை. எதிர் காலம் கண்முன்னே இருண்டு போனது.அடுத்த கட்டம் என்ன? நடுத்தரக் குடும்பத்துக்கேயுரிய பணத் தட்டுப்பாடு. பல உறவினர்கள் வெளிநாடுகளில்
இருந்தும் எவரும் உதவவரவில்லை.விலாசத்தையே தரவில்லை. ( காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி). ஒரு சில நண்பர்கள் உதவி வெளிநாடு வந்தேன்.
இதை என் உறவினர்கள் பெரிய சாதனையாகத்தான் கருதுகிறார்கள்.

5) வெளிநாடு வந்த இரண்டு வருடத்தில் அண்ணன், அத்தான் என குடும்பத்தைத் தாங்கிய தூண்களையும் , என்னைப் பெற்றவளையும் இழந்து ,அவர்கள் கட்டையில் கூட விழிக்க போக விசா அற்ற நிலையில், இந்த வெளிநாட்டில் இருக்கிறேன்.என்பது தவிர எதுவுமே இல்லாநிலையில் அக்காகுடும்பம்,அண்ணன் குடும்பம், இளைய சகோதரி திருமணம், இளைய சகோதரர் எதிர்காலம் எனபவற்றை, சீர்செய்து அக்கா ,அண்ணன் பிள்ளைகளுக்கும்
வாழ்க்கைக்கு வழிகாட்டி,துணைதேடி....என் பதிவு முகப்புப் படத்தில் இருப்போர், பாட்டா எனக் கூப்பிட ,கவலையையும்,கண்ணீரையும் துடைத்து விட்டு... பல ஈழத்து அன்பர்கள்
போல் கருமமே கண்ணாகியது....பலர் இதைச் சாதனையாகத் தான் எனக்குப் பின்னால் பேசுகிறார்கள்.

6) இதுவரையில் மது, புகை பழக்கம் மருந்துக்குக் கூட இல்லை. அதைத் பல தவிர்க்க முடியாத இக்கட்டான சூழலிலும் ,தவிர்த்துக் கடைப்பிடிப்பது.இதையே என் குடும்பத்து இளையவர்களுக்கும் போதித்து, இது வரை அவர்கள் அதற்கு ஆசைப்படாமல் வளர்த்தது.

7)மற்றவர்கள் பாராட்டும்படி, சுவையாகச் சமைப்பது, சில பிரஞ்சு உணவு வகைகள்
உட்பட.( சுவையாக உண்ணும் படி சமைப்பதைக் குறிப்பிடுகிறேன்)

8) கணணி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், ஐயா,தம்பி,ராசா எனக் கெஞ்சிக் கூத்தாடி
இந்தத் தளத்தில் எழுதி, நாலு பேர் யோகன் உங்கள் கருத்து நன்று எனப் பின்னூட்டமிடுகிறார்கள். அவர்கள் முகம் தெரியாது. ஆனால் பல நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஊக்கப்படுத்துகிறார்கள். ஒரு கணணித் தற்குறியின் இந்தத் தளம் சாதனையில்லையா?
என் உறவினர்கள் அதிசயப்படுகிறார்கள்.

இதை நீங்கள் சாதனையாகக் கருதலாம், பூ... எனலாம்।

ஆனால் இது இந்த ஏழைக்கேற்ற எள்ளுருண்டை.

******
இது என் பலகணியில் உள்ள பூக்களின் படம்






35 comments:

வெற்றி said...

யோகனண்ணை,
உங்கடை அனுபவங்களை நல்ல வடிவாக பகிர்ந்து இருக்கிறீங்கள்.

ஆட்சேபனை இல்லையெண்டால் உங்கடை மேடைப் பேச்சுக்களை ஒலிப்பதிவாகப் போடுங்கோவேன்.
நாங்களும் கேட்டு இரசிக்கலாம்.

G.Ragavan said...

எட்டு பதிவிட்டமைக்கு நன்றி ஐயா. உங்கள் பதிவைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பதிவு படிக்கும் பொழுது மகிழ்ச்சியும் சோகமும் மாறிமாறியடித்தாலும் முடிவு மகிழ்ச்சி என்பதால் அமைதி கொள்கிறோம். முருகனருள் முன்னிற்கும்.

சின்னக்குட்டி said...

வணக்கம்..யோகன் ..உங்களை பற்றி மேலும் அறிய உதவிய இந்த எட்டு பதிவுக்கு மிக்க நன்றிகள்.

நலல சுவராசியமான நடையில் எழுதியுள்ளீர்கள் நல்லாயிருக்கு..உ-த தருமியின் பகிடி,etc.....etc..

கதிரவன் said...

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை நல்லாவே இருந்தது :-)

குமரன் (Kumaran) said...

ஐயா. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான் என்பார்கள். தங்கள் அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள். அதனைப் படித்து ஓரளவிற்குத் தான் என்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள இயலும். தாங்கள் பட்ட இன்ப துன்பங்களை முழுவதும் உணர இயலாது. உணர்ந்த வரையே மனப்பாரமாக இருக்கிறது.

தங்களைப் பற்றி இன்னும் சிறிது அறிய இந்த இடுகை உதவியது.

படத்தில் உள்ள பூக்களும் அழகுடன் இருக்கின்றன.

மாயன் said...

யோகன்.. அருமையான பதிவு.. தங்கள் வாழ்க்கை கனவுகள் நனவாக என் உள்ளபூர்வமான வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

ஹோ! நாங்க பால்கனி என்பதை நீங்கள் பலகணி என்று சொல்கிறீர்களோ!ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன்.

கானா பிரபா said...

வணக்கம் அண்ணா

நம் உறவுகள் பலருக்கு இருந்த சுமைதாங்கி வாழ்வு உங்களுக்கு வாய்த்ததும், நல்ல பேச்சாளர் என்பதும் எட்டு மூலம் தெரியவந்தது.

Anonymous said...

நல்லதொரு பதிவு! பகிர்வு! நீங்கள் ஓரிரு வார்த்தைகளில் குறிப்பிட்ட விசயங்களுக்குப் பின் இருக்கும் துக்கங்களும், வேதனையும், வலியையும் நானும் உணர்கிறேன்.

பகீ said...

எள்ளுருண்டைகள் மிகச் சுவையாக இருந்தன யோகன் அண்ணா..

கண்மணி/kanmani said...

அருமை யோகன்.இத்தனை அருமையாச் சொல்லிட்டு சலிச்சுக்கிறீங்க.
ஆமாம் எள்ருண்டைன்னா சும்மாவா...சுவை அதிகமாச்சே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
மற்றவர்களின் சாதனைகளுடன் ஒப்பிடும் போது, இது சொல்லிய விதத்திலாவது வடிவாக இருக்கா?
நன்றி! எளிமையான உண்மைக்குக்குள்ள
அழகு இதுதான் என நான் நினைக்குறேன்.
இலங்கையிலும் சரி, இங்கும் சரி
இவற்றை ஒலிப்பதிவு செய்ய முடியவுமில்லை,வசதியுமில்லை. கானமூர்த்தி கச்சேரியில் வீடியோ படப்பிடிப்பு,
கச்சேரியை மாத்திரமே செய்தார்கள்.
ஆனால் அந்த உரைதான் என் ஈழத்தில் இசை வளர்ச்சியில் நாதஸ்வர தவில் கலைஞர்கள் பங்கு எனும் கட்டுரை யானது.

துளசி கோபால் said...

ஹை.......... இந்த எள்ளுருண்டை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
நான் அடிக்கடி நினைக்கும் கவியரசர் வரிகள் "வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனையிருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..."
அவர் என்ன? மனநிலையில் இதை எழுதியிருப்பார்.
முன்னேயே சொன்னேனே "வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டு விட்டேன்."
அவன் பார்த்துக் கொள்ளட்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நல்ல சுவராசியமான நடையில் எழுதியுள்ளீர்கள் நல்லாயிருக்கு..உ-த தருமியின் பகிடி,etc.....etc.. //

சின்னக்குட்டியண்ணர்!
அப்படியா ? சந்தோசமாக இருக்கு,
அந்த நேர்முகப் பரீட்சையில் என் நிலை தருமி நிலைதான்.வாச்சா வாய்க்குது தேய்சா தேய்குது.28 வருசம் இப்போ போல் இருக்கிறது.
தனிமையில் நினைத்து பல தடவை சிரித்துள்ளேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கதிரவன்!
முதற்தடவை வந்துள்ளீர்கள்.
எள்ளுருண்டை சுவைத்து, பின்னூட்டிதற்கு நன்றி!

வவ்வால் said...

யோகன் ,

என்னவென்று சொல்வது , அனுபவங்களின் பதிவாக உள்ளது, உண்மையான ஒரு பதிவு!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரன்!
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர் இன்பதுன்பம் ,ஏனைய வெளிநாட்டில் வாழும் ஈழத்தவரால் ஓரளவுக்கேனும் புரியும். ஆனால் தென்னகச் சகோதரர்களுக்கு புரிவது கடினம்; தங்கள் கணிப்பு உண்மையே!!!
" நாளைப் பொழுதை இறைவனுக் களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு"
நமக்குக் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"
இவை எங்களைப் போன்றோருக்காகத் தான் சொல்லப்பட்டவை!
அதனால் "குறையொன்றுமில்லை"
பூக்கள் அழகாக இருக்கின்றனவா!!!!; அவை பூவல்லவா??அது தான்.....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாயன்!
வாழ்த்துக்கு முதல் நன்றி!
உண்மையான வார்த்தை எனக்கு அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
முன்பும் சொல்லியுள்ளேன். வாழ்க்கையை அதன் போக்குக்கு விட்டவனுக்கு; கனவு
இருக்குமா?
அதனால் சிறு சந்தோசமிருக்கு.....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வடுவூரார்!
என்ன? உங்களைக் குழப்பி விட்டேனா?
இந்த சொல் ஆங்கிலச் சொல்லின் மருவல்; உ+ம்: tavern= தவறணை;cash=காசு;cusine= குசினி;bottle= போத்தல்; button= பொத்தான்.
போல்.... தற்போது நினைவுக்கு வந்தவை; அந்த balcony க்கு வேறு தமிழ்ச் சொல் தெரிந்தால் கூறவும்.

Anonymous said...

//ஹோ! நாங்க பால்கனி என்பதை நீங்கள் பலகணி என்று சொல்கிறீர்களோ!ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன்//


அவங்க டமிளில் மாடம் என்று சொன்னாலும் புறிஞ்சுக்குமாங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த எள்ளுருண்டையும் நல்லாருக்கு..
எங்க அம்மா செய்யும்
எள்ளுருண்டைக்காக நானும் தம்பியும்
பிள்ளையார் சதுர்த்தி எதிர்பாத்திருப்போம் .

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
நம்மவர்களுக்கு பலருக்கு இது வரமோ,சாபமோ தெரியவில்லை. தவிர்க்கமுடியாததாகி விட்டது.
ஆனாலும் கைதூக்கிவிடுவதும்; உறவின் கடமையல்லவா?மகிழ்வோம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெய்யிலான்!
அந்தக் காலங்கள்; தான் எனக்கு வாழ்க்கையின் மேடுபள்ளங்களைக் கற்றுத் தந்த காலம்.
"அழுதழுதும் பிள்ளையை அவளே தான் பெறவேண்டுமென" உணர்த்தியகாலம்.
இப்போ திருப்தியாக இருக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பகீ!
கணணியை உருட்டும் நீங்கள் கூட இந்த எள்ளுருண்டை உருட்டவந்தது; மகிழ்வே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கண்மணி!
நல்லாயிருந்ததா? நன்றி!
சலிப்பல்ல!; அயற்சி எனக் கூறலாம். சுமந்த முதுகல்லா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா!
பலரின் ரீச்சரே வந்து, புள்ளி போட்டது. மெத்தச் சந்தோசம்.
நன்றி

ramachandranusha(உஷா) said...

யோகன், இன்றுவரை உங்களைப் பற்றி நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவர் என்ற ஓரே ஒரு செய்தி மட்டுமே தெரியும். பின்னுட்டங்களில் உங்கள் எழுத்தை ரசிக்க ஆரம்பித்து, இன்று பதிவுகளில் தொடருகிறது. எட்டில் கடைசி ரீப்பீட்டூ.
அது என்ன ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டைன்னு நான் போட்டதை நீங்களும் பாவித்து இருக்கிறீர்கள். காப்பி ரைட் என்னுது.
அவங்க அவங்க கோல்ட் மெடல் வாங்கினேன், யூனிவர்சிட்டி ரேங்கு என்று சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, தேடிப்பிடித்து
எட்டு போட்டதை, ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டைனேன்.
அழைப்பை ஏற்று எட்டு போட்டதற்கு நன்றி.
பி.கு இன்றுவரை கொஞ்சம் சோகம் என்றால் சமையலறையில் பாடும் பாடல் "மயக்கமா தயக்கமா"
அழுதாலும் புரண்டாலும் அவள்தானே பிள்ளை பெற வேண்டும்- பழமொழி

jeevagv said...

ஏழைகள் எங்களுக்கு தாங்கள் தரும் எள்ளுருண்டைதானே, மிக்க நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாதரசி!
மாடம் எனும் சொல் தெரியும் ஆனால்
இந்த balcony க்கு மாடம் பொருந்துமா? எனும் சந்தேகம் இருந்தது. மாட, மாளிகை , கூட கோபுரம் என்பதை வைத்து மாடிகளைத் தான் மாடம் என்பதோ எனக் கருதினேன்.
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முத்துலெட்சுமி!
பிள்ளையாருக்கு மோதகம் பிடிக்குமெனத் தெரியும், ஆனால் எள்ளுருண்டையும் ஒரு படையல்
பண்டம் என்பதை இப்போதே அறிந்தேன்.
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அனுபவங்களின் பதிவாக உள்ளது, உண்மையான ஒரு பதிவு! //

வவ்வால்!

என்னை அறிந்தவர்கள் படித்தால், அவர்களும் உண்மையை எழுதியுள்ளான் என நினைக்க வேண்டும்.என நினைத்து எழுதியது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பின்னுட்டங்களில் உங்கள் எழுத்தை ரசிக்க ஆரம்பித்து//

உஷா!
நம்பக் கஸ்ரமாக இருக்கு!
அதே வேளை மகிழ்வாகவும் இருக்கு!
சும்மாவா!!! கலைமகள் புகழ் எழுத்தாளினியல்லா!
நீங்கள்!

முரளிகண்ணன் said...

படிக்க இனிமையாக இருந்தது.

த.அகிலன் said...

நல்லதொரு அனுபவப்பகிர்வு யோகன் அண்ணா