Tuesday, April 08, 2008

கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்...

வட்டாள் நாகராஜ் எப்படி இருப்பார் என பார்க்க ;அவர் படம் தேடிப் போனபோது இந்தப் படங்களையும் கண்டேன்.ஏதோ; பார்த்த போது கமல் பற்றிய என் எண்ணத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இது வரை எத்தனையோ நடிகர்களின் குடும்பப் படங்கள் பார்த்துள்ளேன்.


இப்படி ஒரு படம்பார்க்கவில்லை.

கமல் பரந்து பட்ட வாசனைப் பழக்கம் உள்ளவர் எனத் தன்னைப் குறிப்பிடுவார்!! அவர் பெண்களானால்; பெற்ற பிள்ளையானாலும்; முகர்வதைக் குறிப்பிட்டாரோ?? எனச் சந்தேகிக்கிறேன்.
என்ன??தான் அன்பானாலும் வயது வந்த பெண்களை ஏன் ? சிறுமிகளில் கூட கையை எங்கே? வைக்கலாமெனும் நியதி மனித சமுதாயத்துக்கு உண்டு.

போக்கற்ற எம் சினிமாவில் தான் ஊரான் பெற்ற பிள்ளையை கிழவர்கள் முதல் குமரர்கள் வரை தோடம்பழம் பிளிவதுபோல் பிளிவதைப் பார்க்கிறோம்.
அதற்காகப் பெற்ற பிள்ளையையுமா??கமல் தன் படங்களில் பல இளம் நாயகிகளை எங்கெல்லாம் தொட்டு; எப்படிக் கட்டிப் பிடித்து; முகர்வாரோ அதைத்தானே இந்தப் பெற்றபிள்ளைக்குச் செய்கிறார்.
இதே காட்சிகளை சிம்ரனிடம் பார்த்துள்ளேன்.
அது காதற்காட்சியானால் இது???
இப்படிப்பட்ட காட்சிகளை நாம் இந்த மேற்கத்தேய நாடுகளில் கூட காண்பதரிது.
அன்று சுகாசினி பிரபலமாக இருந்த போது, கமலுடன் ஒரு படமும் சேர்ந்து நடிக்கவில்லை.சித்தப்பன் + மகள் உறவு எனத் தவிர்த்தார்கள் எனக் கொண்டோம்.
ஆனால் இதைப் பார்த்த போதுஅதைச் சுகாசினி தான் தவிர்த்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.
இந்த கமலின் மகள் உடுத்தியுள்ள ஆடை; இந்தக் காட்சியை பார்க்க எவ்வளவு தான் நவநாகரீகமாக வளர்த்தாலும் அவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு; என்பது இப் புத்திஜீவி உணராமல் போனது வருத்தமே!
இப்படங்களையாவது தவிர்த்திருக்கலாம்,தான் பெற்ற பெண்ணானாலும்..
இது என் கருத்து...கமல் அன்பர்கள் தடியெடுத்து வரலாம்.
எனக்கு சொல்லவேண்டும் போல் இருந்தது.

Sunday, March 30, 2008

எப்படி இருந்தோம்... இப்படி ஆக்கிப் போட்டீங்களே!!

மனித அறிவு வளர்ச்சியில் பல உயிர்கள் மாற்றத்தைக் கண்டுவருவது

நாம் நாளாந்தம் செய்தியாகக் கேட்கிறோம்.

இந்த Glo fish எனும் வியாபரக் குறியுடன் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும், இவ் ஒளிரும் மீன்கள் மரபில் மாற்றம் செய்யப்பட்ட ZEBRA FISH .

இவை கடும் சிவப்பு,பச்சை, ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.


1999 ல், Dr. Zhiyuan GONG உடன் அவர் உதவியாளர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒருவகை jelly fish இருந்து கிடைத்த பச்சை ஒளிரும் புரட்டீனை, சாதாரண ZEBRA FISH GENOME ல் செலுத்திய போது அந்த மீன் ,ஓளிர்வதை அவதானித்து...


அதையே ஒரு வியாபார உத்தியாக்கி, செல்லப்பிராணியாக உலகம் பூராக விற்பனை செய்கிறார்கள். நிறையவே சம்பாதிக்கிறார்கள். சோடி 10 யூரோ விலை போகிறது...






Saturday, March 22, 2008

ஆடல் காண்பீரோ...அழகு மயிலாடல் காண்பீரோ!!.

பாம்புக்குப் படையும் நடுங்கும் ஆனாலும் அதைப் பிடித்து ஆடவைத்துவிடலாம். மயில் அப்படியல்ல...எம் நினைப்புக்கு ஆடுவதல்ல....அது நினைத்தே ஆடும்...

நான் மயில்களைப் பல தடவை கண்ட போதும், ஆடும் மயிலை ஒரு தடவை கதிர்காமத்தில் சில விநாடிகள் கண்டுள்ளேன்.
2004 ஈழம், இந்தியா சென்றபோது பல மயில்களைக் கண்டேன். ஆனால்
ஆடும் மயில் காணக் கிடைக்கவில்லை.
இப்படத்தில் நீலமயிலுடன்,வெள்ளை மயிலும் எப்படி அழகு நடம் புரிகிறது.
படத்திலாவது இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழ்வோம்.


Thursday, March 20, 2008

வேதனையற்ற மரணம் நிராகரிக்கப்பட்ட பெண் மரணம்


பிரான்சில், சாந்தல் செபிர் (Chantal Sebire)எனும் 52 வயது முன்னாள் பள்ளி ஆசிரியையும் 3 பிள்ளைகளுக்குத் தாயான பெண் பல வருட காலமாக மூக்குப் பகுதியில் அபூர்வ மாற்ற முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் , தான் வேதனையற்ற மரணத்தைத்(euthanasia) தழுவ அனுமதி தரவேண்டுமென அரசைக் கேட்டிருந்தார்.

பிரான்சு அதிபர் நிக்கோலா சார்கோசிக்கும் எழுதியிருந்தார்.
சமீபத்தில் தொலைக்காட்சியில் தோன்றி.. நாளாக ஆக வேதனையுடன் பார்வை,நுகரும் தன்மை, மணம் என்பனவற்றையும் உணரும் தன்மையைத் தான் இழந்துவிட்டதாகவும், இதைவிட தன்னைத் தெருவில் காணும் குழந்தைகள் பயப்படுவதும், சமீபத்தில் ஒரு பெண் தன்னைக்கண்டு ஓடியதும் தனக்கு மிக வேதனை தருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார்.
இவர் கோரிக்கை டியோன் நீதிமன்றத்தால்நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் சுவிஸ்,பெல்சியம்,ஒல்லாந்து போன்ற ஐரோப்பிய 'வேதனையற்ற மரணத்தை' தழுவ அனுமதியுள்ள நாடுகளில் ஒன்றில் சென்று தன் வாழ்வை முடிக்க எண்ணியிருந்துள்ளார்.
அத்துடன் எந்த வைத்தியத்தையும் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் இல்லத்தில் தனிமையில் மரணத்தைத் தழுவியுள்ளார்.
'வேதனையற்ற மரணம்' பிரான்சில் சட்டபூர்வமாக அனுமதியில்லை.
இதையொட்டிய சர்ச்சைகள்,விவாதங்கள் இப்போ முக்கிய இடம் வகுக்கிறது.என்ன??இருந்தென்ன ? நோயற்ற வாழ்வு போல் வருமா??
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
http://news.bbc.co.uk/2/hi/europe/7305970.stm

Monday, March 17, 2008

பிரான்சின் உலக மகா யுத்தக் கடைசி வீரர் மறைவு

உலக மகா யுத்தத்தில் பங்குபற்றிய பிரன்சு வீரர் திரு. லசார் பொன்ரிசெலி (Lazare PONTICELLI) அவர்கள், தன் 110 வது வயதில் 12 -03- 2008 அன்று காலமானார். அன்னார் இறுதி யாத்திரை பிரஞ்சு அதிபர் (17 -03 - ௨00௮ ) தலைமையில் இன்று அரச மரியாதையுடன் நடை பெற்றது.
07- 12- 1887 ல் ,இத்தாலியில் 7 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர். தந்தையில் மரணத்தின்பின் ,ஏற்கனவே பிரான்சில் உள்ள தன் சகோதரர்களிடம் தன் 9 வது வயதில் 1907 ல் வந்தார்.
ஆரம்பத்தில் புகைபோக்கி துப்பரவுப் பணி, செய்திப் பத்திரிகை விநியோகித்தல் போன்ற வேலைசெய்து
ஆகஸ்ட் 1914 ல், தன் 16 வயதில், 18 வயதெனப் பொய் சொல்லி பிரஞ்சு இராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவில் இணைந்து கொண்டு1915ல் ,இராணுவம் இத்தாலி சென்ற போது, இத்தாலி இராணுவத்தில் இணைந்தார்.
பின் நீக்கப்பட்டு, மீண்டும் ,ஆஸ்திரியாவுக்கு எதிரான போரில் பிரஞ்சுப் படையில் இணைந்து, இயந்திரத் துப்பாக்கிப்இயக்குபவராக இருந்தபோது, எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகிக் படுகாயமுற்றவர்.


1920ல் தன் சகோதரர்களுடன் சேர்ந்து 'பொன்ரிசெலி சகோதரர்கள் என்னும் உலோக வேலை நிறுவனத்தை நிறுவி செல்வந்தரானார்.இந் நிறுவனம் இன்றும் பிரபலமாக இவர்கள் பெயர் குறிப்பிடும்படி உள்ளது.

இந் நிறுவனத்தை இவர் 1960 வரை தலைமை வகுத்து நடத்தினார்.பிரான்சின் தேசிய தின கொண்டாட்டங்களில் சென்ற வருடம் வரை பங்கேற்றவர்.அத்துடன் தன் மரணத்துக்கு அரச மரியாதை தேவையில்லை எனவும் தெரிவித்தவர்.

கடைசியாக முதலாம் உலக மகா யுத்தத்தில் மரணடைந்த அனைவரையும் கௌரவிப்பதானால் அதை ஏற்றுக்கொள்ளுவதாகக் கூறியுள்ளார்.

இவரே பிரான்சில் அதிக நாள் வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும், இத்தாலியில் பிறந்து அதிக காலம்வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும் பெற்றவராவார்.

உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற சாட்சிகளாக இன்னும் எண்மர் வாழ்வதாகக் செய்திகள் கூறுகிறது.

Saturday, March 08, 2008

ஏன்? இது...நாக்கை இப்பிடி ...தொங்கப் போடுது.

வலையில் மேயும் போது ,இதைக் கண்டேன். இயற்கையின் விசித்திரம்
வியப்பையும் ,சிரிப்பையும் தந்தது. மிளகாய்க்கே உறைக்கிறதோ?
உங்களுடன் பகிர்கிறேன்.






Wednesday, March 05, 2008

அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு....

கதைகளிலும்,கவிதைகளிலும்...வர்ணிப்பதைப் படித்துள்ளேன்.
இப்படியும் இருக்குமா??? மிகைப்படுத்துகிறார்கள் என எண்ணியிருந்தேன்.
வாழ்நாளில் இப்படி படத்தில் கூடப் பார்க்கவில்லை.
இதைப் பார்க்க மலைப்பாக இருந்தது. எப்படித்தான் இப்பெண் சமாளிக்கிறாரோ!!
நீங்களே, பாருங்கள்.
மயில் தோகை போல் என்பாங்க...நிசமாகவே..மயில் கூட பின்னுக்குத்தான்


என் தலையில் உள்ள ஒரு அங்குல நீளத்தை,அதுவும் களைபிடுங்கிய
வயல் போல் உள்ளதைப் பராமரிக்க ,நான் படும் பாடு.
இந்தப் பெண் இவ்வளவு நேர்த்தியாக பராமரிக்கிறார். பாராட்டுகிறேன்.
பார்த்தேன் ,மலைத்தேன்,பகிர்ந்தேன்

Thursday, January 31, 2008

தாயும் சேயும், நமக்குச் சிலையும்.....

இணையத்துள் மேயும் போது, இந்த அற்புதமான அழகிய கணங்களைக் கண்டேன்.
அத் தாயின் நாணம், அருமையாகப் படமாகியுள்ளது.
உங்களுடன் பகிர்கிறேன்.



Friday, January 11, 2008

தெரிந்தால் கூறி உதவவும்....


தெரிந்தால் கூறி உதவவும்....



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


தயவு செய்து,சிறு தமிழ்ப் பிள்ளைகளுக்குக் சொல்லிக் கொடுக்கக்கூடிய வகையில், பாரி மன்னனின் சுருக்கமான வரலாறு தெரிந்தவர்கள் கூறி உதவவும்.இங்கே புத்தகங்கள் தேடுவது கடினம்; அத்துடன் இணையத்திலும் கிடைக்கவில்லை.இங்குள்ள தமிழ்ச் சிறார்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையாக உள்ளது.

Tuesday, December 18, 2007

கிசு ..கிசு....இது பெரிய இடத்துக் கிசு ..கிசு....



சென்ற மேயில் பிரான்சின் அதிபராகப் தெரிவாகிப் பதிவியேற்ற திரு. நிக்கோலா சார்கோசி-54 (Nicolas SARKOZY)அவர்கள் கடந்த ஒக்டோபர் ,அவர் 2 வது மனைவி சிசிலியாவுடனான மண வாழ்வு முறிந்து விவாகரத்தாகிய நிலையில்...பிரான்சு வெகு ஜன ஊடகமெங்கும் ,அதிபரின் புதிய காதலி பற்றிய செய்தியால் சூடேறியுள்ளது.


பிரபல முன்னாள் மாதிரி உடையழகியும்; இன்னாள் பாடகியுமான கார்லா புறுனி-39 (Carla BRUNI) ,அதிபரின் புதியகாதலி அத்துடன் இவர்கள் பல இடங்களில் ஒன்றாக சந்தித்துள்ளார்கள் என்ற முக்கிய செய்திகள்; படங்களுடன் பத்திரிகைகள் செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.

இவை வெறும் வதந்திகள்; அப்பிராயம் கூற இல்லை போன்ற செய்திகள் அடிபட்டாலும்; இப்படிபல வதந்திகள் உண்மையானது; நடந்துள்ளதால்...நெருப்பின்றிப் புகையில்லை எனும் நிலையில் , மக்கள் உள்ளனர்.

அதிபர் முன்னாள் மனைவி விவாகரத்து பற்றிய செய்தி கூட ,வதந்தியாகப் பரவி உண்மையானது.பிரான்சு மக்கள் இது ;அவர் சொந்த விடயம் எனும் அளவிலேயே கவனிக்கிறார்கள். 54 வயதான அவருக்கு ஒரு துணை தேவை எனவும் கருதுகிறார்கள்; விவாகரத்தானவரானதால் இதனால் எவருக்கும்பங்கமில்லை என நினைக்கிறார்கள்.


அமெரிக்கர் போல் மக்கள் எப்படியும் வாழலாம்;ஆனால் அதிபர் குணக் கொழுந்தாக வாழவேண்டுமென; கிளிங்ரலீலை அறிய 40 மில்லியன் டாலர் செலவு செய்யும் மனநிலை ,பிரஞ்சு மக்களுக்கில்லை.


ஏற்கனவே முன்னாள் அதிபர் காலம் சென்ற மித்திரன்(Mitterrrand) மனைவி உயிருடன் இருக்க ; காதலி வைத்திருந்து பிள்ளையும் பெற்றவர். முன்னாள் அதிபர் சிராக்குக்கும் (Chirac) பலரைக் காதலித்தவர் என்ற பெயர் பெற்றவர்.


இந்த நிலையில் இந்த வதந்தி....உண்மையாகலாம்...என நம்பப்படுகிறது
கிசு கிசு யாருக்குத்தான் பிடிக்காது...அதுவும் பெரிய இடத்துக் கிசு கிசு...தமிழ் மணமும்...இதை அறியட்டும் என பதிவாக்கிறேன்.


பதவி ஏற்ற நாள் முதல் பல நாடுகளுக்கு அரச பயணம் செய்யும் அதிபர் தனிமையிலே செல்வது பார்க்க அழகில்லை.

குறிப்பாக சீனப் பயணம் அவர் தன் தாயாருடன் சென்றுள்ளார். அதைச் செய்தியில் காட்டினார்கள்.


அதனால் இந்தக் கிசு கிசு உண்மையாக வேண்டும். அதிபர் துணையுடன்

இருக்க வேண்டும். அதில் தனி அழகே உண்டு. இது என் விருப்பம்...

செய்தியைக் காட்சியாகப் பார்க்க......








Thursday, December 13, 2007

பூ..பூவாய் பூத்திருக்கு..

இவை என் வீட்டு மாடத்தில் பூத்தவை....





Thursday, December 06, 2007

அம்பேத்கர்-அவமானங்கள் உருவாக்கிய அற்புத மனிதர்...



ஒரு மாட்டு வண்டிக்காரன் அச் சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவனது பேச்சொலியின் வட்டாரவழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று அறிந்ததும் மாட்டைக் கழட்டி விட்டு வண்டியைக் குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.

தாகத்துக்கு அந்தச் சிறுவன் தண்ணீர் கோட்கிறான்; அதோ இதுதான் உனக்கான தண்ணீர் எனச் சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைக் காட்டியுள்ளார்கள்...உயர் சாதிக்காரர்கள்.

அவன் மட்டுமல்ல- அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று நோட்டுப் புத்தகத்தைத் திருத்த மறுக்கிறார் ஆசிரியர்.

முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத் தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான். அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறான்.

வடமொழியைப் பாடமாய் எடுத்துப் படிக்க விரும்பிய போது இந்து தர்மம் -கல்விச் சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு.

பதினாறு வயதில் திருமணம் நடக்கிறது; தீண்டத் தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாது எனும் விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய் இரவில் நடக்கிறது அந்த ஏழையின் திருமணம்.

இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவன் தான் இந்திய அரசமைப்பை வடிவமைத்திருக்கிறார்.

அடிமை இந்தியாவில் வெள்ளை ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் ,சுதந்திர இந்தியாவில் இந்து ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.

தீண்டத் தகாத 429 சாதிகளுக்கு யுகவிடுதலை பெற்றுத் தந்திருக்கிறார்.

சேறும் சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமோ??

அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன் "அம்பேத்கர்"

திரு.அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கியவர்; தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து உயர்ந்தவர்;பல தாழ்த்தப்பட்ட இனங்களின் உயர்வுக்கு பாடுபட்டவர் என்பதற்குமேல் ,அவர் வாழ்வில் பட்ட அவமானங்கள் நான் அறியவில்லை.
தற்செயலாக 05 - 12 - 2007 , குமுதம் இதழில் கவிஞர் வைரமுத்து; " அவமானங்களால் ஒரு மனிதன் உருவாக முடியுமா?" எனும் கேள்விக்குக் கூறிய பதிலில் ...அம்பேத்கர் வாழ்வில் பட்ட அவமானங்களைப் படித்தபோது; அது சந்தர்ப்பவசமாக அவர் நினைவு நாளிலும் அமைந்ததால் உங்களுடன் பகிர்கிறேன்.

அம்பேத்கர் , மாமனிதரே...


****அம்பேத்கர் படம் விடாது கருப்பு அவர்கள் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது- நன்றி

Tuesday, November 20, 2007

தமிழ் மணத்திலிருந்து விகடனுக்கு...'ரஜனியும் அப்பாவும்'

சக பதிவர் செல்வேந்திரன் எழுதி தமிழ் மணத்தில் வந்த 'ரஜனியும் அப்பாவும் ' எனும் சிறுகதை 21-11-2007 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது.

கடைசி வரையும் கற்பனை என்பதனைத் தெரியாமல் நல்ல நடையில் எழுதிய கதையை
அன்றே படித்துப் பின்னூட்டினேன்.

அவரைப் பாராட்டுவோம்.
விகடனுக்கும் நன்றி!!


அவர் கதையைப் படிக்க.......
http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_11.htm
l

'ரஜனியும் அப்பாவும் '......செல்வேந்திரன்

“ரஜினி இந்த பெயர் எனக்கு அறிமுகமாகும்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. வேல்சாமி நாயக்கர் அப்பாவின் பால்ய நண்பர். சாத்தூர்காரர். இருவருக்கும் அப்படியொரு நெருக்கம். எனது அப்பாவின் மிகக்குறுகலான நட்பு வட்டத்தின் அடுத்த மனிதர் வேல்சாமி நாயக்கர்தான். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்ளாமல் எந்த முக்கிய முடிவும் எடுத்ததே இல்லை. இத்தனைக்கும் அவரும் இவரும் நட்பு பாராட்ட பெரிதாக எவ்வித முகாந்திரமும் இல்லை. அவர் அப்பாவை விட ஐந்து வயது சிறியவர். வேறு ஊரைச் சேர்ந்தவர். தெலுங்கர். அவரும் இவரும் சிறிய வயதில் ஒரே தீப்பெட்டிக் கம்பெனியில் போர்மேன் வேலை செய்தவர்கள். பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே தொழில் தொடங்கி, அவர் பல கம்பெனிகள் வைத்து சாத்தூரின் மிகப்பெரிய தொழிலதிபரும் புரவலரும் ஆனார். என் அப்பா உள்ளூரிலே பிழைக்க வேண்டும் என்று கம்பெனி ஆரம்பித்து, காதல் திருமணம் செய்து ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். என்னதான் வேல்சாமி கோடீஸ்வரர் என்றாலும் நட்பில் ஒரு பிசிராந்தையார். எத்தனை பெரிய வேலை என்றாலும் அப்பாவிற்கோ எங்களுக்கோ ஒன்று என்றால் உடனே வந்து உதவும் கரம் அவருடையதாகத்தான் இருந்திருக்கிறது நேற்று வரை.

வேல்சாமியின் தொழில் வட்டாரத்தில் அவருக்கு நெருங்கிய சக தொழிலதிபர்கள் ரஜினிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே வேல்சாமியின் வெள்ளை உள்ளமும், வேடிக்கை பேச்சும் ரஜினியை அவர்பால் ஈர்த்திருக்கிறது. அடிக்கடி இருவரும் சந்தித்து பேசுகையில் வேல்சாமியின் வார்த்தைகளில் அடிக்கடி வந்து விழுந்திருக்கிறது அப்பாவின் பெயர். அவர் அப்பா குறித்து சொல்லும் வார்த்தைகளில் சுவாரஸ்யமான ரஜினி அப்பாவை சந்தித்தே ஆக வேண்டும் என ஒரு நாள் அடம்பிடித்திருக்கிறார்.

திட்டமிட்டபடி ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் ரஜினி ஒரு வெடி வியாபாரி போல மாறு வேடமிட்டு அவரது உதவியாளருடன் எங்கள் வீட்டுக் கதவை தட்டினார். கதவை திறந்த எனது தந்தையிடம் “வேல்சாமி நாயக்கர் அனுப்பி வைத்தார். ஒரு திருவிழாவிற்கு வெடி செய்ய கொஞ்சம் வெடிபொருட்கள் வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் குழப்பமான எனது தந்தை "வேல்சாமி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. சட்டத்திற்கு புறம்பான எதையும் அவன் பேச மாட்டான். நானும் செய்வதில்லை. சரி.. வந்ததுவந்து விட்டீர்கள். வேல்சாமியின் பேரை சொல்லியதற்காக இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு காலை முதல் பஸ்ஸில் உங்கள் ஊரை பார்த்து கிளம்புங்கள்" எனச் சொல்லி அவர்களுக்கு நள்ளிரவில் உணவு தயார் (உப்புமா) செய்து கொடுத்து, படுக்கை வசதியும் செய்து கொடுத்துள்ளார் எனது தந்தை. தம் வாழ்நாளில் 'மிஸ்ஸியம்மா' தவிர்த்து வேறு சினிமா பார்த்தறியதா அவருக்கு ரஜினியை எப்படி தெரியும்?

பொழுது விடியும்போது அவர்களை காபியோடு எழுப்பிய எனது தந்தை ஒரு சைக்கிள் ரிக்சா அமர்த்தி அவர்களை பேருந்து நிலையம் வரை கொண்டு வழி அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் வேல்சாமி நாயக்கரை சந்தித்த ரஜினி எனது தந்தையின் விருந்தோம்பல் பண்பையும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சட்டத்தை மீறாத பண்பையும், எளிய வாழ்க்கை முறையையும் சிலாகித்திருக்கிறார். வந்திருந்தவர் யாரென்றே தெரியாதபோதும் உபசரித்ததை சிலாகித்த ரஜினி, அடுத்தமுறை ரஜினியாகவே போவது என முடிவு செய்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் தனது உதவியாளருடன் அம்பாஸடர் காரில் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவை திறந்த எனது தந்தையிடம் "நான் நடிகர் ரஜினிகாந்த். உங்கள் நண்பர் வேல்சாமி நாயக்கருக்கு வேண்டியவன். ஒரு ஷூட்டிங் வந்தோம். கார் ரிப்பேர் ஆகிவிட்டது. நான் வந்திருப்பது ரசிகர்களுக்கு தெரிந்தால் கூட்டம் கூடி விடும். இன்றிரவு உங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார். மீண்டும் அதே உப்புமா... அதே காஃபி. அதே எளிய உபசாரங்கள். சாமான்யன், சூப்பர் ஸ்டார் யாராக இருந்தாலும் ஒன்றுதான். பெரியோரை வியத்தலும் இலமே.. சிறியோரை இகழ்தலும் இலமே என்ற எனது தந்தையின் குணம் அவரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி விட்டது.

உண்மையில் என் தந்தை பணக்காரர்களிடம் பழகுவதை விரும்புபவர் இல்லை. ஒரே விதி விலக்கு வேல்சாமி நாயக்கர். ரஜினி விஷயத்தில் ரஜினிதான் என் தந்தையை வம்படியாக நண்பராக்கி கொண்டார். எத்தனையோ முறை தமது வீட்டிற்கு அழைத்தும் அவர் போனதில்லை. ஆனால் அவரே தொழில் நிமித்தமாக சென்னைக்கு செல்ல நேர்ந்தால் லதா ரஜினிகாந்திற்கு அகர்பத்திகள், முதலூர் அல்வா, கருப்பட்டி, பனங்கற்கண்டு, குழந்தைகளுக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய், தடியங்காய் அல்வா (செளந்தர்யாவிற்கு ரொம்ப பிடிக்குமாம்) வாங்கி செல்ல தவறியதேயில்லை. அவர்கள் வீட்டில் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அவசர வேலை என்று நழுவி விடுவார். ஒரு முறை ரஜினி வீட்டிலிருந்து வெளியே வரும்போது எதிர்பட்ட பத்திரிக்கையாளர் ரஜினி என்ன சொன்னார் எனக்கேட்டபோது "உங்களையெல்லாம் தினமும் தினமணி படிக்க சொன்னார்" என வேடிக்கையாக பதில் சொல்லி விட்டு நகர்ந்தாராம். அவருக்கு தினமணி பேப்பர் என்றால் அவ்வளவு பிரியம். ஒரு முறை முள்ளும் மலருமில் ரஜினியின் நடிப்பை பாராட்டி எழுதியபோதுதான் ஒத்துக்கொண்டார் ரஜினி ஒரு நல்ல நடிகர் என்று.

ரஜினி எப்போதாவது எங்களிடம் பேசும்போது 'உங்களுக்கு கிடைச்ச மாதிரி அப்பா எனக்கு கிடைச்சிருந்தா. எவ்வளவு சந்தோஷமா இருக்கும்'. குழந்தை வளர்ப்பது எப்படின்னு உங்க அப்பா இந்த உலகத்திற்கே சொல்லி கொடுக்கலாம். அப்படி வளர்த்திருக்கிறார் உங்களை"ன்னு அடிக்கடி சொல்வார். எப்போதாவது சென்னையிலிருந்து வரும் லதா ரஜினிகாந்த நிறைய திண்பண்டங்களை வாங்கி வருவார்கள். எவ்வளவு வம்படியாக எங்களிடம் இனிப்பை தினித்து சாப்பிட சொன்னாலும் எங்கள் அப்பாவின் கண்ணசைவு சம்மதம் இல்லாமல் அதை நாங்கள் வாயில் வைத்ததாய் சரித்திரம் இல்லை. ஊர் திரும்பும்போது திருவிழா செலவுக்கு வச்சுக்கோங்க என எங்கள் பையில் பணத்தை திணிப்பார். அவர் ஊருக்கு கிளம்பும் வரை பொறுமையாக இருந்து கிளம்பும் சமயத்தில் 'அப்பா திட்டுவார். பணம் வேண்டாம்' என அவரது கையில் திணித்துவிட்டு ஓடி, ஓளிந்து கொள்வோம்.

பின்னாளில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகும் சமயத்தில் ரஜினி தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சர்ச்சைகள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. அவர் நின்றால், நடந்தால், தும்மினால் கவர் ஸ்டோரிகள் எழுதப்பட்டு வந்த காலம். தனது பிரைவசி, நிம்மதி இரண்டும் கெடுவதாக அவர் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருந்தினார். அவருக்கு ஆறுதலளிக்கும் கடிதம் ஒன்றை அப்பாவும், நாங்களுமாக பதினைந்து பக்கத்திற்கு எழுதி அனுப்பினோம். தினசரி வீட்டு பூஜையில், குடும்ப பிரார்த்தனைகளில், ஆலய வழிபாடுகளில் ரஜினிக்காக வேண்டிக்கொள்வதும், அர்ச்சனை செய்வதும் தொடர்ந்....... எழுதிக்கொண்டிருந்தவனின் பேப்பர் சரலென பிடுங்கப்பட்டது. “என்னடா மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சுட்டியா....?” ஆத்திரத்தில் கத்தினார் அப்பா. பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தபடி இருந்தான் தினகரன். “டேய் ஒன்னு ஒழுங்கா படி அல்லது தொழில பாரு.... உன் வயசுல பத்து வீட்டுக்கு கட்டை சுமந்து குடும்பத்த காப்பாத்தினேண்டா... தறுதலைப் பயலே எப்ப பார்த்தாலும் பொஸ்தகம் படிக்கிறது, எதையாவது கிறுக்கிட்டு திரியறது.... மாசமானா பென்சன் வாங்குற கிழட்டு பயக கூட இலக்கியம், கிலக்கியம்னு பேசிகிட்டு திரியிறது... உருப்பட மாட்டேடா.... உருப்படவே மாட்ட” மூச்சிரைக்க பேசியவர் தினகரன் எழுதிக்கொண்டிருந்த கதையை சுக்கல் சுக்கலாக கிழித்து எரிந்தார். என்ன செய்து என்ன பயன்? இந்த உலகின் தலைசிறந்த எழுத்தாளனாகிய தினகரனின் ஆர்வத்தை இவரது ஆத்திரமா தடுத்துவிடும். ‘ரஜினி ராசியில்லை, நாளை கமல்ஹாசனை வைத்து முயற்சிக்கலாம்’ எனத் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

Posted by செல்வேந்திரன் at

Labels: சிறுகதை

Wednesday, October 17, 2007

பாரிசில் தியாகராஜர் விழா...காணொளியாக



பிரான்சில் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வர் ' சற்குரு தியாகராஜ சுவாமிகளின்'

ஆராதனை விழா ஒக்கோபர் 13, 14 ம் திகதிகளில், 6 வது தடவையாக, பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் வெகுசிறப்பாக தென்னகக் கலைஞர்கள் பலரின் இசை விருந்துடன்
நடந்தேறியது.

அங்கே நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளின் சிறு பகுதியை ,காணொளியாக தரவுள்ளேன்.
வெளிச்சம் அதிகம் இல்லாததால் காட்சி சுமாரே, ஆனால் இசை ஓரளவு கேட்கும் படி உள்ளது.


கர்நாடக இசை வளர்ச்சி நிறுவனத்(MADHURYA) தலைவர் Michel ROLLOT


இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா


நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுடன் விழா அமைப்பாளர் ஆனந்தி (Anandi ROY)





முக்கிய கலைஞர்கள் வீணை மேதை திரு.திருவனந்தரம் வெங்கட்ராமன், வயலின் மேதை திரு. ரி.என். கிருஸ்ணன், பாட்டு மேதை திருமதி வேதவல்லி, வயலின் மேதை விஜி கிருஸ்ணன் (திரு. ரி.என்.கிருஸ்ணன் மகள்)






இவ்வருட விழாவில்...
தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை பத்ம பூசண் ரி.என். கிருஸ்ணன்
வயலின் மேதை விஜி கிருஸ்ணன்
வாய்ப்பாட்டு மேதை திருமதி வேதவல்லி
வீணை மேதை திருவனந்தரம் வெங்கட்ராமன்
வாய்ப்பட்டு மேதை சுகந்தா காளமேகம்
வாய்ப்பாட்டு வித்துவான் சுமதி கிருஸ்ணன்

புல்லாங்குழல் மேதை ரி.ஆர்.மூர்த்தி
வீணை வித்தகி ஆர்.சுப்புலக்சுமி அம்மாள்

ஆகியோருக்கு பக்க வாத்தியமாக

மிருதங்க வித்துவான் காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி


மிருதங்க வித்துவான் திருவனந்தரம் வி.சுரேந்திரன்


வயலின் வித்தகி சாருலதா ராமானுஜம்


கடம் வித்துவான் வைக்கம் கோபாலகிருஸ்ணன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.





ஆரம்ப நாள் நிகழ்சியாக சுகந்தா காளமேகம் பாடுகிறார்.
அவருடன் மதுரியா மாணவர்களும் உடன் பாடினார்கள்.




சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மாள் பாடுகிறார். அவர் 80 வயதை எட்டுகிறார்.


மிகுந்த லகிப்புடன் பாடி மகிழ்வித்தார்.இவருக்குப் பக்கவாத்தியம் வயலின் சாருலதா


ராமானுஜம் மிகச் சிறப்பாக வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார். வயது சொற்பம்,ஆற்றல்


மெச்சத் தக்கது.



சங்கீத கலாநிதி ரி.என். கிருஸ்ணன் அவர்கள் வயலின் கச்சேரியில் ஒரு சிறு


பகுதி , அவர் மகள் விஜி அவர்களும் உடன் வாசித்தார்கள். பக்கவாத்தியமாக


காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி-மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஸ்ணன் -கடமும்


வாசித்துச் சிறப்பித்தார்கள். இந்த 80 வயது இளைஞர் மிகத் துடிப்புடன் வாசித்தார்.





சாதாரணமாக மிகக் குறைவான வெளிச்சமே ரசிகர் மேல் படவிடுவது இங்கே வழமை


இவரோ!!! நான் என் ரசிகர் முகங்களில் என் இசை ஏற்படுத்தும் மாற்றங்களைத் காண விரும்புகிறேன். தயவு செய்து வெளிச்சத்தைப் போடுங்கள் எனக் கேட்டு எல்லோர்


முகத்தையும் பார்த்துப் பரவசத்துடன் வாசித்தார். 2 மணி நேரம் மெய்மறக்க வைத்தார்.





பிரன்சு இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து, கௌரவித்தனர்.( இங்கு மிகப் பிடித்தால் எழுந்து பல நிமிட நேரம் கரகோசம் செய்வது வழமை)






ரி.என்.கிருஸ்ணன் வயலின் இசையின் மேலும் சிறு பகுதி






கலைஞர்கள் அனைவரும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிக நேர்த்தியாக ஒழுங்குசெய்த மதுரியா அங்கத்தவர்கள்அனைவரும் பாராட்டுக்குரியோர். குறிப்பாக திருமதி ஆனந்தி ரோய் மிகப் போற்றுதலுக்குரியவர்.




பொதுவாக மிக அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளை 'ஊசி போட்டால் சத்தம் கேட்டும்' எனக் கூறுவது வழமை...இந்த இருநாள் நிகழ்ச்சியிலும் கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்த போது, இறகு விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும், அப்படி ஒரு அமைதி.




சுமார் 150 பேர் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய,ஈழ ரசிகர்கள்...ஏனையோர்

அனைவருமே நம் இசையால் கவரப்பட்ட பிரான்சியர்கள்.. இசையை ரசிப்பதை அவர்களிடம்

பாடமெடுக்க வேண்டும்.

கலைஞர்கள் கூட அவர்கள், ஒன்றி ரசித்ததை வெகுவாகக் குறிப்பிட்டார்கள்.

இடைவேளையில் சுவையான சிற்றுண்டியும் மதுரியா வழங்கியது.




அன்றைய இரு தினமும்,மிக அருமையான வாரவிறுதியாக அமைந்தது.

Tuesday, October 16, 2007

புறா நீரருந்துவதைப் பாருங்கள்!




பறவை இனங்களில் நீரை உறுஞ்சிக் குடிப்பது புறா...(வேறு இருந்தால் கூறவும் )
அத்துடன் புறா பறவையினத்தில்
தன் அளவுக்கு அதிக நீரைக் குடிக்கும் பறவை எனவும் படித்துள்ளேன்.
இதோ அந்தக் காட்சி.....


Friday, October 12, 2007

பாம்பும் நீர் குடிக்கும்...பாருங்கள்

வவ்வால் தன் 'சில கேள்விகளும் பதில்களும்' எனும் பதிவில், பாம்பு நீர் குடிப்பதில்லை ,அதன் பிளவு பட்ட நாக்கு பொருந்தாது என எழுதியிருந்தார்.

ஆனால் நான் பார்த்த தொலைக்காட்சி விபரணச் சித்திரத்தில் ,ஆபிரிக்காவில் ஆற்றோரம் பாம்பு நீரருந்தியது, நினைவில் வந்தது. அதை அவருக்குப் பின்னூட்டமாகப் போட்டபின் யூரியூப்பில் தேடிய போது இவை கிடைத்தது.

இவை வளர்ப்புப் பாம்புகள் ஆனால் இயற்கைச் சூழலில் வாழும் பல இனப் பாம்புகள் நீரருந்துகின்றன.

தயவு செய்து இயற்கையில் வாழும் பாம்பு ,எப்படி நீர் அருந்துகிறதென இங்கே

பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=YVYFP9SjIQs










Tuesday, October 09, 2007

பாரிசில் தியாகராஜர் ஆராதனை

இசை மும்மூர்த்திகளில் மூத்த சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின்
ஆராதனையை, 6 வது தடவையாக ,எதிர் வரும் 13, 14 ஒக்டோபர் 2007 , வாரவுறுதியில் பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் ,
பாரிசில் கர்நாடக இசைக்கான நிறுவனமான மதுறியா (MADHURYA) ஒழுங்கு செய்துள்ளது.

தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை ரி.என்.கிருஸ்ணன் , இசை மேதை வேதவல்லி உட்படப் பல கலைஞர்கள் கலந்து
சிறப்பு இசை நிகழ்ச்சி தரவுள்ளார்கள்.




Samedi 13 octobre 2007
16h : Ouverture du festival
16h30 : Concert de chant par Sugandha Kalamegham
17h50 : Concert de vina par R. Subbalekshmi Ammal
18h50 : Entracte
19h20 : Concert de flûte par TR Moorthy
20h30 : Concert de chant par Sangitha Kalanidhi R. Vedavalli
22h15 : Fin de la première journée

Dimanche 14 octobre 2007
13h55 : Ouverture
14h00 : Concert de vina par Trivandrum R. Venkataraman
15h45 : Entracte
16h15 : Concert de violon par Padma Bhushan Sangitha Kalanidhi TN Krishnan
18h05 : Récitation des Pancharatna kritis par tous les musiciens
19h15 : Clôture du 6ème Festival Tyagaraja

நுளைவுக் கட்டணமாக நாளொன்றுக்கு 18 யூரோக்கள் .


நல்ல இசை நுகர அரிய சந்தர்ப்பம்.


மேலதிக விபரங்களுக்கு இங்கே

சொடுக்கவும்.

பிரான்சியருக்கும் பௌதீகத் துறை நோபல் பரிசு


Mr.Albert FERT- FRANCE




Mr. Peter GRUNBERG - Germany

ன்று அறிவித்த பௌதீகவியலுக்கான நோபல் பரிசுக்காக பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி திரு அல்பேட் பேர், ஜேர்மனியைச் சேர்ந்த திரு. பீட்டர் குறுண்பேர்க்
ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளார்கள் .
இவர்கள் இருவரும் கணனிக்கு உபயோகிக்கும் சேமிப்பு தகடு (hard disk)
பற்றிய துறையில் மிக பயனுள்ள அதிகம் சேமிக்கக் கூடிய ,கண்டுபிடிப் பொன்றைச் செய்துள்ளதற்காக ,இது வழங்கப்பட உள்ளது.
இது என்ன உபகரணம், இதன் சிறப்புப் பற்றி கணனித் துறையில் கைதேர்ந்த
சக பதிவர்கள்...எமக்கு எளிமைப் படுத்தி கூறுவார்கள் என நம்புகிறேன்.
இருவரையும் வாழ்த்துவோம்.

Sunday, October 07, 2007

ஹரிவராசனம் விச்வ மோகனம்.....





தெய்வீக நம்பிக்கையுள்ளவர்கள் ,நல்ல இசையை நுகர்வோர்,ஜேசுதாசின் இன்குரலின் மையல் கொண்டோர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


ஹரிவராசனம் விச்வ மோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரண லோலுபம் நர்தனாலஸம்
அருண பாஸுரம் பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
கள ம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ச்ருத ஜன ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் சாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலானஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!


உயர்ந்ததும் தங்கமயமானதுமான பொன்னம்பல மேட்டில் எழுந்தருளியிரிப்பவர்!
உலகையே மயக்கச் செய்பவர்!
பூசிக்கத் தகுந்த திருவடிகளைக் கொண்டவர்!
பகைவர்களை நாசம் செய்பவர்!
பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்துத் துதி பாடு சரணங்களை உடையவர்!
அறியாமையை நீக்கி அருளாடச் செய்பவர்!
சூரியன் போல் பிரகாசிப்பவர்!
பஞ்சபூதங்களுக்குத் தலைவர்!
இனிமையான பேச்சு உடையவர்!
மென்மையான புன்சிரிப்புக் கொண்டவர்!
களபச் சாந்து பூசிய திருமேனியர்!
அழகான கழுத்தும் உறுதியான உடலும் கொண்டவர்!
சிங்கத்தின் பிடரியைப் போன்று பின் கழுத்துவரையும் தவழும் தலைமுடியைக் கொண்டவர்!
சரங்குத்தியி அருள்பவர் சாஸ்தா!
சாஸ்திர வல்லுனர்களுக்குப் பிரியமானவர்!
எண்ணியதை முடித்து வைப்பதில் முதல்வர்!
வேதங்களையே ஆபரணமாகக் கொண்டவர்!
நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பவர்!
அழகான காதுகளைக் கொண்டவர்!
சரண கோஷத்தில் விருப்பம் உள்ளவர்!
தேவர்களால் துதிக்கப்படும் அப்படிப்பட்ட ஹரிஹரசுதனைத் துதிக்கிறேன்.

*** நன்றி:சக்திவிகடன் டிசம்பர் 2004


யூ ரூபில் இட்ட shankermcsa


''கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் மறவேன்'

Saturday, October 06, 2007

பிரான்ஸ் கம்பன் விழா....

டந்த செப்டம்பர் மாதம் 29, 30 திகதிகளில் ,பாரிசின்
புறநகர்ப் பகுதியான லா கூர்னோவில், பிரான்ஸ்
கம்பன் கழகத்தின், 6 ம் ஆண்டு விழா வெகு விமரிசையாக
நடைபெற்றது.

சிறப்புப் பேச்சாளராக அருட் சொற்ச் செல்வர் திருமிகு சுகி சிவம் அவர்கள்
கலந்து, தன் திறன் மிகு பேச்சால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இந்த எழில் உற்ற விழாவைக் காணும் பேறு இவ்வருடம் நான் பெற்றேன்.

அதை உங்களுடன் பகிர என் குட்டி NIKON ஆல் காணொளியாகப் படமாக்கினேன். இது என் கன்னி முயற்சி, அதனால் இதில் உள்ள குறைகளைப் பொறுக்க வேண்டும்.

முதற் காட்சி... மலர் வெளியீடு ,இதில் நமது சக பதிவர் திரு மாசிலா மணி
(நாளை நமதே- மாசிலா ) அவர்களையும் மேடையில் பெயர் கூப்பிட்டழைத்து
மலர் வழங்குகினார்கள்.



பட்டிமன்றத் தலைப்பாக 'கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக்கியது

பாத்திறமா? பாத்திரமா?' இடம் பெற்றது அதில் ஒரு பகுதியான மரபின் மைந்தர் வே .முத்தையா, நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல் பேசியதில் சிறு பகுதிகள் சேர்த்துள்ளேன்.





இந்த இரண்டாம் நாள் நிகழ்சிகளில் பாரிசில் இசைகற்கும்

பிள்ளைகள் பங்கேற்றார்கள்.நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

வழக்காடு மன்றத்தில் ' குற்றவாளிக் கூட்டில் தமிழைப் பேணாத தமிழர்கள்

எனும் தலைப்பில் மரபின் மைந்தர் வே.முத்தையா. நகைச்சுவைத் தென்றல்

இரெ. சண்முகவடிவேல் , சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்றார்.(தமிழகத்தில் இருந்து வந்திருந்தார்கள்)

தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலையை நகைச்சுவையுடன் அழகாகச் சுட்டிக்காட்டினார்கள்.

சுகி சிவம் அவர்கள்' தமிழக தமிழ்த் தொலைக்காட்சியில் செய்தி தவிர தமிழ் வாக்கியங்களை முறிக்காத நிகழ்ச்சியே இல்லை எனக் கூறினார்.



இனிதே சிறப்புற நடந்த விழாவில் இரண்டாம் நாள் மண்டபம் நிறைந்தது.

இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது, மகிழ்வே!!

இரு நாளும் காலை முதல் நடந்த விழாவை தடையின்றிக்காண ,அன்பர்களுக்கு உணவு,குளிர்பானம் கொடுத்து அனுசரித்தார்கள்.

இந்த விழாவை சிறப்புற நடத்திய பிரான்ஸ் கம்பன் கழகமும், அதன் தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகமும் எவ்வளவும் பாராட்டத் தகும்.

குறிப்பாக பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் பாவலர் பாரதிதாசன் மிகப் போற்றுதலுக்குரியவர்.

குறிப்பாக என் மனதைக் கவர்ந்தது. சகபதிவர் திரு மாசிலாமணி அவர்களை

மேடையில் அழைத்துக் கௌரவித்தது. அவர் ஆத்மீகத்தை இகழ்பவராக இருந்தாலும், தமிழரின் சீரிய வாழ்வு பற்றிய சிறந்த சிந்தனையுடையவர் என்பதால் இந்தச் சிறப்பைச் செய்தார்களோ தெரியவில்லை.

ஆனால் நல் ஆத்மீக வாதிகளின் சிறப்பே ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' அதைச் செய்து ஆத்மீகத்தைப் பெருமைப் படுத்திய அன்பர்களுக்கு நன்றி!!

பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார்.

நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.

இத்தனைக்கும் நான் மாசிலா அவர்கள் பதிவைப் பார்த்துவிட்டே புறப்பட்டேன்.

இப்படி ஓர் இனிய வாழ்நாளில் மறக்கமுடியாத அறிஞர்கள் பேச்சை நேரடியாகக் கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மிக்க

நன்றி!

கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!

அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.

கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!!