Tuesday, January 23, 2007

பிரான்சின் மனிதநேயம் மறைந்தது!





Abbé Pierre அபே பியர்! -ஏழைபங்காளன் .
பிரான்ஸ் வாழும் தமிழர்களில் தொலைக்காட்சி பத்திரிகை பார்ப்போர் கட்டாயம் அறிந்திருக்கும் செல்லப்பெயர்.
சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தன் வாழ்வை வசதி குறைந்தவர்களுக்காகவும்;வாழ்வில் அல்லலுறுபவர்களுக்காகவும் செலவு செய்த புண்ணியாத்மா!
05- 08 - 1912 ல் லியோன்(Lyon) எனும் நகரில் மிக வசதிபடைத்த குடும்பத்தில் Henri-Antoine Goués எனும் இயற்பெயருடன் பிறந்து; இளம் பிராயத்தில் அல்ஜீரியப் போர், உலகப் போரில் பங்கேற்று இன்னல்களைக் கண்டு; 1938ல் மதகுருவானவர்.அப்பொழுது; தனக்குக் பரம்பரையால் கிடைத்த சொத்துப் பங்கை ஏழைகளுக்கும்;நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் பரோபரவாழ்வை EMMAUS எனும் இயக்கமாகஆரம்பித்தார்.
1945 - 1951 Meurthe en Moselle தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகி அரசியலிலும் புகுந்து; சேவை செய்தார்.1954 தையில் பிரான்சில் மிகக் கடும் குளிர் தாக்கி வீடற்ற ஒரு தாயும் சேயும் ;தெருவில் - 20 °c ல் உறைந்து இறந்த கொடுமைகண்டு கொதித்து முழுப் பிரஞ்சு மக்களுக்கும் வானொலி மூலம் வேண்டுகோள் விட்டு; பல கோடி பிராங்குகள் சேர்த்து உடன் நடவடிக்கை எடுத்து வாழ்விடமமைத்து; குறிப்பாக குளிர்காலத்தில் இல்லிடமற்றவர்களுக்கு உணவு உறையுள் கொடுத்துக் காத்தார்.
இதைத் தன் முழு நேரப் பணியாக்கினார்.அப்பபோ அரசாங்கக் கதவுகளைத் தட்டிச் செயல்படச் செய்தார். இதனால் பிரான்சில் சகல மக்களும் அரசும் கூட இவர் மேல் மரியாதை வைத்தது. இவர் கேட்ட உதவிகளைச் செல்வந்தர்கள் செய்யத்தயங்கவில்லை. இவர் நேர்மை ;தனக்கென வாழா ,வேண்டா இயல்பு இவரை பிரான்சின் சிறந்த மனிதராகப் பலவருடங்கள் தெரிவாக வைத்தது.
அரசு கொடுத்த மரியாதைப் பதக்கத்தையும் ; மறுத்து ;அரசு பெரிய வீடமைப்புத் திட்டத்துக்கு உதவியபின்னே பெற்றுக் கொண்டவர். அவர் அதைப் பெற்றது அரசு தனக்குக் கிடைத்த மரியாதை எனக் கருதவைத்தவர்.
80 களில் மித்திரன்(Mittrand) ஜனாதிபதியாக இருந்தபோது;பல லட்சக் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வதிவிட உரிமை கொடுக்கக் காரணமான உந்துதல் சக்கியாகவும் இருந்தது இவர் இயக்கமுமே!!90 களில் வீடற்ற,வாழப் போதிய பணவதியற்ற வெளிநாட்டவர்களுக்கு ஆதார சுருதியாக இருந்து அர்பணிப்புடன் செயற்பட்டு;பல நாட்டவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்.
அத்துடன் போதைக்கு அடிமையாகி வீட்டாரால் ஒதுக்கப்பட்ட பலரை; மனிதாபிமானத்துடன் நோக்கி விடுதி அமைத்து அவர்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து; மறு வாழ்வழித்தை சம்பத்தப்பட்ட பலர் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்கள்.
இவர் சேவை பல ஈழத்தமிழர்;பாண்டிச்சேரித் தமிழர்கள் பயனடைந்துள்ளனர்.பெரிதாக வெளியுலகுக்குத் தெரியாவிடிலும்; பிரஞ்சு பேசும் நாடுகளில் பெரு மதிப்புக்குரிய மாமனிதர்.
தனக்கென வாழாச் செம்மல். சேவை என்பது என்ன? எனக் கற்பித்தவர் ;தன் 94 வயதில் 22-01- 2007.காலை இறையடி சேர்ந்து விட்டார்.
"இறத்தல் என்பது ஒளியுடன் கலத்தல்" எனக் கூறும் ;இவர் ஒளியில் கலந்து விட்டார்.
இன்னுமொருவர் இப்படிப் பிறப்பதரிது.
கடந்த 20 வருடங்களாக அவர் நேயத்தை இங்கே பார்த்தவனெனும் வகையில் அவர் பெருமையையும்; வாழ்ந்த சேவை வாழ்வையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
அன்னார் ஆத்மா சாந்தியடையும் இதில் ஐயம் இல்லை.




26 comments:

Anonymous said...

பதிவுக்கு நன்றி யோகன்.

ரவி said...

அவரது தொண்டுக்கு தலைவணங்குகின்றேன்...அன்னாரது ஆன்மா சாந்தியடைய நெஞ்சில் இருந்து இல்லாத இறைவனை வேண்டுகிறேன்...

இந்த உள்ளம் தான் கடவுள்...இதுபோன்ற எடுத்துக்காட்டான வாழ்வுதான் மனிதனை தன்னிலை உணரவைக்கிறது...

!!!!!!!!!!!!!

Anonymous said...

He is a good EXAMPLE of LOVE AND PEACE. RIP

சின்னக்குட்டி said...

தகவலுக்கான பதிவுக்கு நன்றிகள் யோகன்,

மலைநாடான் said...

//அவர் அதைப் பெற்றது அரசு தனக்குக் கிடைத்த மரியாதை எனக் கருதவைத்தவர்.//

ஆட்சிகள், இத்தகைய மாட்சிமை முன் பெறுமானம் அற்றவை.

மனிதர்களை நேசித்த, நேசனுக்கு அஞ்சலிகள்

யோகன்!
அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

DJ!
இவரைப் பற்றியும் அறிய வேண்டுமென்பதற்காக இட்டேன்.
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

வெற்றி said...

யோகன் அண்ணை,
தகவலுக்கு மிக்க நன்றி.

கானா பிரபா said...

தகுந்த நேரத்தில் அன்னாரில் செயற்கரிய செயல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா. எனது அஞ்சலிகளும் உரித்தாகுக

வசந்தன்(Vasanthan) said...

பதிவுக்கு நன்றி.

//பிரான்சின் மனிதநேயம் மறைந்தது! //


தலைப்பு கொஞ்சம் இடறுகிறதே?

வல்லிசிம்ஹன் said...

யோகன்,
அவரது முகமே நோபிளாக இருக்கிறது.

நல்ல மனிதரைப் பற்றி தெரிவித்ததற்கு நன்றி.
உலகம் இனியும் உய்யும் என்பதற்கு இவர்கள் தான் ஒரு உதாரணம்.

அவர் இறைவனிடம் சேர்ந்து இருப்பார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இதுபோன்ற எடுத்துக்காட்டான வாழ்வுதான் மனிதனை தன்னிலை உணரவைக்கிறது...//

ரவி!
அழகாகச் சொன்னீர்கள்.பலரை உணரவைக்கும் வாழ்வுதான்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெயரிலி!
அன்பும்;அமைதியும் நிலைக்க; மனிதனுக்கு உணவு;உடை,உறையுள் முக்கியமெனக் கருதிப் போராடியவர்.
ஆம் நல்ல உதாரணமே!
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
இவர் பற்றி பலருக்குத் தெரிய வாய்ப்பில்லையென்பதால்; பதிவாக்கினேன்.இவர் நேர்மை; வள்ளல் தன்மையும் மிகப் பிடிக்கும். "திக்கற்றவர் தெய்வம்"
வரவுக்கு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆட்சிகள், இத்தகைய மாட்சிமை முன் பெறுமானம் அற்றவை.//

உண்மை! மலைநாடர்!
பல ஊழல் அரசியல்வாதிகளை இவர் நேர்மையும் ,சேவையும், எளிய வாழ்வும் தலை குனிய வைத்தது.
அதனால் அவர் அங்கீகாரத்துக்கு ஏங்கினார்கள். அதை ஏழைகளுக்கு மடைமாற்றியவர்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
கனெடியத் தொலைக்காட்சிகள் நிச்சயம் இவர் பற்றிப் பேசும், சிறப்பு நிகழ்ச்சி கூட வைக்கலாம்.
முடிந்தால் பதிவு செய்து பார்க்கவும்.
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
சென்ற வருட குளிர்காலம் கூட இவர் தொலைக்காட்சியில் வேண்டுகோள் வைத்தவர்; அத்துடன் ஆபிரிக்க அகதிகள் தங்கியிருந்த விடுதி தீக்கிரையாகிப் பலர் மாண்டபோது; அரச கதவை தள்ளு வண்டிலில் சென்று தட்டியவர்.கடந்த சில மாதமே சற்று வருத்தம் கூடி வைத்தியசாலை சென்றவர். இப்படிச் சேவையை பிரிவினையின்றி வாழ்க்கையாகக் கொண்டோர். இனிக் கிடைப்பது அரிது.குறிப்பாக பிரான்ஸ் போன்ற பல்கலாச்சார மக்கள் வாழும் நாட்டுக்கு இவர் போன்றோர்; வேறுபாட்டை அகற்றத் தேவை.இங்கு வாழ்பவன் என்ற வகையில் அதன் முக்கியத்துவம் உணர்வேன்.
மொத்தம் 8 பதிவர்கள் இவர் பற்றி அறிந்ததே!! எனக்கு மிகச் சந்தோசமாக உள்ளது.
ஏனெனில் இவரை எனக்கு மிகப் பிடிக்கும்.
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வசந்தன்!
தலைப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்; ஒரு -ஒரு அதில் சேர்ப்போமா? என யோசித்து விட்டு!!
வேண்டாம்; மே மாத ஜனாதிபதி தேர்தலின் பின் இத்தலைப்புப் பொருத்தமானது. என்பது
நிரூபணமாக அதிக வாய்ப்புண்டென்பதாலும்.
ஏற்கனவே "புற்று நோய் ஆய்வுக் கழகத்துக்குச் சேர்த்த பணத்தில் மில்லியன் கணக்கில் கையாடல் செய்து சிறையில் வாடும் அதன் முன்னாள் தலைவர்;மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பணத்தில் சுயதேவைக்கு அளவின்றிச் செலவு செய்த தலைவரையும் ;சுனாமிக்கு பணம் சேர்த்து இந்தோனேசியா ;இலங்கையில் குளிரூட்டிய வாகனங்களிலும்; சொகுசு விடுதிகளிலும் தங்கிச் செலவு செய்த ஊழயர்கள் பிரச்சனையையும் படித்ததாலும்;செய்தியாகப் பார்த்ததாலும்; இனி இவர்போல் சொந்தப் பரம்பரைச் சொத்தையும் அல்லலுறுவேருக்குக் கொடுத்ததுடன்; "தேன் தொட்டாலும் கையை அந்தத் தேனுக்குரியவருக்கே! நக்கக் கொடுக்கும் மனோநிலையுடன் இனிமேல் ஒருவர் வரச் சந்தர்ப்பமே இல்லையென்பதால் ;இத் தலைப்பை இட்டேன்.
நீங்கள் முன்பு பிரான்சில் இருந்தீர்களோ? தெரியவில்லை. அப்படியானால் நீங்கள் சில வருடங்களுக்கு முன் பார்த்த பிரான்ஸ் மாறி விட்டது. சோசலிஸ்டே மாற்றம் வர வேண்டுமென நினைக்குமளவுக்கு; மக்கள் மாறி விட்டார்கள். சென்ற வருடம் பிரான்ஸ் எரிந்தது அறிந்திருக்கலாம்.
அதனால் மனித நேயம் குறிப்பான அன்னிய தேச மனிதனில் நேயம் என்பது..பெரும் கேள்விக்குறியே!!
மறைந்தவர்மேல் அனைவர்க்கும் உள்ள மரியாதையால்...அவர் பேச்சை இதுவரை மதித்தார்கள்.
இனிமேல் இந்த அளவுக்கு மரியாதையை எவருமே சுயநயத்தால் உருவாக்கமுடியவில்லை.
அதனால் மறைந்தது என்பது பொருத்தமெனக் கருதினேன்.
அடுத்து..தமிழ்ப்படத்தில் கதாநாயகியின் தேவைபோலும்; தமிழ்ப்படக் கதைக்கும் தலைப்புக்கும்; அதில் இடம் பெறும் பாடல்கள் போலும்..தமிழ்ப் பதிவுகள் பலதின் தலைப்புக்கும்; உள்ளடக்கத்துக்கும் தொடர்பே! இருப்பதில்லை.
இது பரவாயில்லைப் போல் இருந்தது. என்ன? ஒரு "ஒரு" தானே குறைந்தது.
அதுதான் இட்டேன். இவ்வளவு கூர்மையாகப் பார்ப்பீர்கள் என எதிர் பார்க்கவில்லை.
ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று தானே போடுறன்; வந்து பார்க்க வேண்டும்
நன்மை,தீமை கூற வேன்டும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அவரது முகமே நோபிளாக இருக்கிறது.//

ஆம், ரேவதி நரசிம்ஹன்!
அவர் ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் கண்டதால்; நீங்கள் கூறும் நோபிள் முகத்தில் தெரிகிறது.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

G.Ragavan said...

வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
இவரைப் போன்ற பெரியவர்கள்தான்.

எங்களுக்கு இவரைப் பற்றி என்ன தெரியும்? இருந்தாலும் பிரெஞ்சுக்காரரான இவரைப் பற்றி ஒரு தமிழர் எழுதிட வேண்டும் என்று இருந்திருக்கிறதே. அதை நாங்கள் படிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறதே. அதுதான் அவருடைய சிறப்பு.

இறைவன் திருவடிகளில் அவர் அமைதியுற வேண்டுகிறேன்.

Anonymous said...

//வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
இவரைப் போன்ற பெரியவர்கள்தான்//

உண்மை ராகவா!
பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூத்த்தி!!
அந்த வகையில் இவர் ஒரு உன்னத ஆத்மா!! உங்களில் ஒரு சிலருக்காவது இவர் பெருமையை அறியவைத்ததில் மகிழ்ச்சியே!
இன்று இறுதிச் சடங்கு ;ஓர் அரச நிகழ்வு போல் அரசால் நடத்தப்படுகிறது.இந்தியா;வங்காள தேசமுட்பட அவர் கை விரிந்துள்ளது.
வரவுக்கும்; அவரைப் பெருமைப்படுத்திய சொற்களுக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

ஒரு புண்ணிய மூர்த்தியைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி யோகன் ஐயா.

Subbiah Veerappan said...

இவர் போன்றவர்களுக்கெல்லாம் மரணம் கிடையாதூ
"எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!" என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லியதைப்போல!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரன்!
பிரான்ஸ் வாழ்வில் ஆரம்ப காலம் முதல் என்னைப் பாதித்த;அயரா உழைப்பால் பிரமிப்பில் ஆழ்த்திய "புண்ணிய மூர்த்தி" இவரே தான்.
வருகை கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

Anonymous said...

நல்ல ஒரு மாமனிதரைப் பற்றி தகவல்கள் தந்திருக்கிறீர்கள். நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுப்பையா அண்ணா!
கவிஞர் சரியாகத்தான் சொல்லியுள்ளார். "எந்த நிலையிலும் இவர்களைப் போன்றோருக்கு மரணமே இல்லைத் தான். அதை அவர் இறுதி ஊர்வலம் பறைசாற்றியது.
இப்பதிவைப் படிக்க வேண்டுமென்று எதிர் பார்த்ததில் தாங்களும் ஒருவர்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
இவர் தன்மையைச்,சேவையை,உபகாரவாழ்வைத் நம்மில் பலர் அறியவாய்ப்பில்லை என்பதால் அறியத் தந்தேன். ஒரு சிலராவது அறிந்தது மகிழ்வே!
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்