கவிதை!.....
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய வார்த்தை;இலக்கியத்தின் எழிற்குழந்தை....படிப்போரைக் கேட்போரை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் " காகிதத் தேன்" கவிதையைச் சுவைக்கத் தெரியாது மனிதனாக இருப்பதே! வீண்.
கவிஞர்கள்; தம் வாழ்வில் கற்றவற்றையும்;கேட்டவற்றையும்; அனுபவித்தவற்றையும்; தாம் சுவைத்தது மாத்திரமன்றி, யாமும் சுவைக்க அழகுற எழுதி வைத்தவையே! கவிதைகள்.
கவிஞன் பெற்ற அனுபவச் சாறு கவிதை; அவன் நமக்கு விட்டுச் சென்ற பெருநிதியும் அதுவே!தமிழ்க்கவிதையின் தோற்றுவாய், பக்தி;நீதி சார்ந்ததாக இருந்தது.
அத்துடன் அன்றைய காலக்கட்டத்தில் எல்லாவற்றையுமே செய்யுளாகவே! ஆக்கிவைத்தார்கள்.
மருத்துவம்;தத்துவம்;ஓவியம்,சிற்பம்;இலக்கணம் ;இலக்கியம் எதுவானாலும் அவற்றின் செயற்குறிப்புகளை நினைவில் நிறுத்த ஓசைநயம் பொருந்திய செய்யுள்களாகவே! ஆக்கிவைத்தார்கள்.
அத்துடன் இச்செய்யுட் குறிப்புகள் மிகப் பெரியவிடயங்களையும்; குறுகிய வடிவில் குறித்துவைக்க உதவியது.
"செவிவழி" இலக்கிய வடிவங்கள் பரவுவதற்குச் சந்தங்களும்;ஓசைநயமும் பேருதவியாக இருந்தது.
அதனால் அமரத்துவம் மிக்க செய்யுள்கள்;கவிதைகள் உருவாக யாப்புக்கள் இன்றியமையாததாகின.
நல்ல பாடகனுக்கு எப்படிச் சுரங்கள் தெரியவேண்டுமோ!நல்ல கவிஞனுக்கு யாப்புத் தெரிய வேண்டுமென்றானது.
இயல்பாகவே கவிவளம் உடையோருக்கு சந்தமும்;ஓசைநயமும்;யாப்புருவும் பிறப்புடனே கிடைத்த கொடை எனலாம்.உலகில்எப்படி? ஞானிகள்;யோகிகள்;வைத்தியர்கள்;பொறியியலாளர்கள்;வக்கீல்கள்; பாடகர்கள்,பேச்சாளர்கள்;சிந்தனைவாதிகள்;சிற்பிகள்;ஓவியர்கள்;சமைப்போர்;
சோம்பேறிகள்,சுரணையற்றோர்.....பிறக்கிறார்களோ!அப்படியே...
வித்தகப் பொருளின் மாட்சி வியத்தகு சொல்லின் ஆட்சி!மெய்த்திறம்;திட்பம்;நுட்பம் விளக்கம் மற்றுள யாவும் மேவி!
எத்தனை முறை கற்றாலும் எழில் நலம் மேல் மேலோங்கி
தித்திக்கும் பாடல் தானே தெய்வீகப் கவிதையாகும்!.
என்ற வகைக் கவிதையை உருவாக்கும் கவிஞர்களும் பிறக்கிறார்கள்.
எல்லோரும் வைத்தியராக முடியாது எவ்வளவு உண்மையோ!! அவ்வளவு உண்மை எல்லோரும் கவிஞர் ஆகமுடியாதது.
இதைப் பலர் உணரவேண்டும்.ஆனால் உணரவில்லை.
ஒவ்வொருவரிடமும் இன்றோ;இரண்டோ திறமையுண்டு.
ஆனால் எல்லோரிடமும் எல்லாத் திறனும் இல்லை.இதனால் "கவிதை" எனும் பெயரில் குப்பைகள் வலம் வருகின்றன.
கவிதை எழுதக் காகிதம்; எழுதுகோல் .....இவற்றுடன் பட்டறிவு;படிப்பறிவு;சிந்தனை;கற்பனைவளம்;சுவைபடக் கூறும்
ஆற்றலும் வேண்டும்.
இவற்றின் மொத்த உருவமாகத் தமிழினத்தில் கம்பன்;வள்ளுவன்;இளங்கோ;ஔவை;ஒட்டக்கூத்தன்;
பாரதி;கண்ணதாசன்;பாரதிதாசன்;நவாலியூர் சோமசுந்தரப் புலவர்;சின்னத்தம்பிப் புலவர்; நல்லதம்பிப் புலவர்;உருத்திரமூர்த்தி;பேராசிரியர் சுந்தரம் பிள்ளை;சமய குரவர்கள்;மற்றும் பலர் கவிஞர்களாகப் பிறந்தார்கள்....இன்பக் கவிதைகளைத் தந்தார்கள்.
ஆனால்;இன்று இந்த உன்னத இலக்கிய வடிவத்தின் நிலை என்ன? "நடக்க மாட்டாதவன் குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல்" ஆகிவிட்டது.சீரான கல்விஅறிவற்றவர்களினதும்; இலக்கிய இலக்கண அனுபவமற்றவர்களினதும் கைகளில், அது சிக்கிச் சீரழிவதைக் கண்கூடாகப் காணக் கூடியதாக உள்ளது.
இன்று கம்பனும் பாரதியும் இருந்திருந்தால் "மறம்" பாடியே இக்கூட்டத்தை அழித்திருப்பார்கள்.
இன்று கவிஞர்கள் என்று "கக்கத்துள்" காகிதக் கட்டுடன் அலையும் "திருக்கூட்டம்;தாம் எதோ தமிழை அழிவில் இருந்து காக்க உதித்தவர்கள் போல் எண்ணி; தமிழையே சாகடிக்கிறார்கள்.
மொத்தமாகத் தமக்குத் தெரியாத பரீட்சயமில்லாத ஒன்றைச் சாதிக்க முற்பட்டு;சோதனையில் மாட்டித் தவிக்கிறார்கள். மற்றவர்களையும் தவிக்க வைக்கிறார்கள்.
இதைப் பேராசிரியர் கலாநிதி வெங்கடசுப்பிரமணியம் குறிப்பிடும் போது "நாம் யார்? பாரதியின் வழித்தோன்றல்கள்;பாவேந்தர் பரம்பரை,ஔவ்வைப்பாட்டியின் பேரர்கள்....உலகுக்கு வழிகாட்டிய வள்ளுவரின் திருக்குமாரர்கள் எனவே நமக்கு அறிவுக்குப் பஞ்சமில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமென்றால்;எமக்குக் கவிதை கைவந்த கலையாகத்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் வசனத்தைக்கூடக் கவிதையாக்கி,ஆணைப் பெண்ணாக்குவது போன்ற இரச(இரசமற்ற) வாதங்கள் செய்துவருகிறோம்.
ஒரு பத்து வரிகளைச் சேர்த்து எழுதினால் "பந்தி" அதையேவரிசையாக ஒன்றுக்கு கீழ் ஒன்றாக எழுதினால் "புதுக்கவிதை" என்று கேலி செய்கிறார்.
யாப்புக் கூறும் இலக்கியவடிவம் வயலுக்கு வரம்பு போல்...ஆனால் வரம்பு வயல் ஆகாது உண்மை;அதுபோல் வரம்பின்றி வயல் செழிக்காது.
அதுவும் உண்மையே!காவியங்கள்;கதைகள்;நாடகங்கள்;கட்டுரைகள்;கடிதங்கள் எப்படி இருக்க வேண்டுமெனும் கட்டமைப்பு ஒன்று இருக்குமானால்; கட்டாயம் கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் எனும் கட்டமைப்பு இருந்தே ஆகவேண்டும்.
அதுவே "யாப்பு". கவிதைக்கு வரைபிலக்கணம் இல்லை என்பதுமனிதனுக்கு வரைவிலக்கணம் இல்லை என்பதற்கு ஒப்பானது.
வரைபின்றி வளர்ந்த கலை என்று கவிதையை எண்ணுவது "ஆழ்ந்த அறிவின்மையின் புலம்பல்".மனிதன் ,பின்பு தமிழன்;பிரான்சியன்;இந்து;கிருஸ்தவன் என்பது போன்றே!கவிதை,வெண்பா,விருத்தம்....இவற்றுக்கு வரைபுண்டு.
கவிஞன் என்பவன் மொழியைத் தனக்குச் சேவகம் செய்ய வைப்பவன் என்பர்.நல்ல கவிஞனுக்கு மொழி அவன் சிந்தனையை வடிக்க என்றுமே தடையாக இருந்ததில்லை.
"இம் என்றால் எழுநூறு;எண்ணூறு ;அம்மென்றால் ஆயிரம்" எனக் கவிபடைத்த தமிழ்க்கவிஞர்கள் இருந்தே உள்ளார்கள்.அவர்கள் என்றுமே தம் சிந்தனைக்கு மொழியும்,யாப்பும்;வரைபும் தடையாகவிருந்ததென சிணுங்கியதே! இல்லை.
ஆனால் இன்றைய அறிவு "சூனியங்கள்" ஆடத் தெரியாதவன் கூடம் கோணை என்பது போல் யாப்புத் தடையாம்."யாப்பைத் தவிர்ப்பதனால் கவிதை தன் அனைத்துச் சக்தியோடும் புறப்படுகிறது" பழைய யாப்பு உருவங்கள் புதிய சிந்தனைகளைத்தாங்காது என்கிறார்களே!பாரதியும்;பாரதிதாசனும்;கண்ணதாசனும்;உருத்திரமூர்த்தியும்,காசி ஆனந்தனும் கூறியவை பழைய சிந்தனைகளா? இப்படிக் கூறுபவர்கள்....
இதோ ஓர் தற்காலச் சிந்தனையில் உருவான கவிதை நெல்லை சு.முத்து வினால் எழுதப்பட்டது.
உலகம் ஒரு கைப்பந்தாய்ச் சுருங்கச் செய்யும்
உன்னதமாம் விஞ்னானப் பொற்காலத்தில்
பலதுறையில் ஆய்வுகளில் சிறந்து ஓங்கும்
பாரதமும் பாரிடையே உயர்ந்து வெற்றித்
திலகமெனப் பல்நோக்குச் செயற்கைக்கோள்கள்
செலுத்திவிடும் தனிப்பெருமை உவகை நல்கும்!
உலவிவரும் இன்சாட்டில் உயர்ச்சி சொல்வோம்!
உறு வான சாத்திரத்தில் புரட்சி செய்வோம்!
ஏழாண்டு அண்டவெளி சுற்றும் வண்டாம்;
இந்தியத் தேசியச் செயற்கைக் கோளால் - விண்மீன்
கோளாண்டு,மின்காந்த அலைகள் கொண்டுகூறு புகழும் வானொலியும்;வானிலையும்
நாளாண்டு நம்நாட்டில் கல்வி கேள்விஞானமுடன்
விஞ்ஞானம் செழிக்க மக்கள்வாழ்வாண்டு தொலை பேசி;தூரக்காட்சி
வளமாண்டு இன்சாட்டே வாழி நீடு!
கலைமகள் - யூன் - 1993
இது புதிய சிந்தனை வடிவமல்லவா?!கவிஞன் நினைத்ததை யாப்புக்குள் அடக்கவில்லையா???இது சுவையில்லையா???
அடுத்து காளமேகப் புலவர்; ஒரு சத்திரத்தில் உணவருந்துகிறார். அவர் அருகில் இங்கிதம் தெரியாதவர், சோறிட்டதும் பாய்ந்து குடுமி கலைய
அள்ளி வாயிலடைகிறார்.
விருந்தின் நெறியைக் கடைப்பிடிக்கத் தெரியாதவரை புலவர் பாடலால் கண்டிக்கிறார்.
இலக்கியத்துக்கு ஓர் அழகிய பொருள் பொதிந்த பாடல்....புலவரின் எண்ணம் அப்படியே நாலு வரிக்குள் அழகுற அடங்கிவிட்டது.
அது.........
முடிச்சவிழ்ந்த முன் குடிமிச் சோழியா!சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா!! புலையா,!!
திருவானைக்காக் கோட்டானே! நாயே! குரங்கே!
உனையொருத்திபோட்டாளே! வேலையற்றுப் போய்!!!!
காள மேகமல்லவா!!!! தமிழ் கைகட்டிச் சேவகம் செய்துள்ளது.
பெற்றாளே!!!!! என்று கூறாமல் போட்டாளே!! என மிருகமே....என இன்னுமொரு போடு போட்டுள்ளார்.
புதிய சிந்தனைகளின் ஊற்று ;நம் புரட்சிக் கவி பாரதியார்........
இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
இது புதுமைக் கருத்தில்லையா? கல்வியின் மகத்துவத்தையும்; இன்றியமையாமையையும் புரிய வைக்கப் பாரதி சொற்களின்றியா?? தவித்தார்.
இக்கவிதையில் உயிரோட்டம் இல்லையா??,பாரதி சொற்களுடன் விளையாடவில்லையா???தன் எண்ணத்திற்கு எழுத்துருக் கொடுக்கவில்லையா???சொல்லவந்த விடயத்தை பாரதி செட்டாகச் சொல்லிவிட்டார்.
இவை ஏன்??, "புதுசு" களுக்குப் புரியவில்லை. எம் தமிழ் மொழியிலா ? சொல்லுக்குப் பஞ்சம்.மலயாளம்; தெலுங்கு;கன்னடம் என மழலைகளைத் தன் சொல்வளத்தால் பெற்ற தாயல்லவா?, எம் தமிழ்!
"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சு!வெள்ளைப் பறங்கியனைத் துரையென்ற காலமும் போச்சு!எனப் பாரதி புதுமை பேச !
அவர் தாசன் - சுப்பு ரெத்தினம் என்ற பாரதி தாசன்
"ஆடுகிறாய்! உலகப்பா யோசித்துப் பார்!
ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னான்.
செகதப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டார் - ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய் விடுவர் உரையப்பா நீ!
என இலகு தமிழில் எவ்வளவு பொருள் பொதிந்த புதுமைக் கருத்தைக் வெளிக் கொண்டுவந்துள்ளார்.மரபுடன் புதுமைக் கருத்துக்களைச் சேர்த்து கவிதை அமைக்கலாம் என்று முதல் முயன்று வெற்றி பெற்றவர்கள் பாரதியும்; பாரதிதாசனும்.
பாரதியார் - மடங்களிலும் மாளிகைகளிலும் கொலுவிருந்த தமிழைக் கையைப்பிடித்துத் திண்ணைக்கும் ;தெருவுக்கும் கூட்டிவந்து தமிழுலகில் பிடித்திருந்த நோயை விரட்ட நல்மருத்துவராக கவிதை மருந்து கொண்டுவந்த கவி வைத்தியர் ;பொற்கவி பாடிய சித்திரக்கோ!!!சுதந்திரத்தின் சுவையைச் சொற்களில் வடித்தவர்.
அவர் கருத்துக்கள் புதுமை;புரட்சி;சுதந்திரம் விரும்பும் யாவராலும் போற்றப்பட்டது.
மரபு மீறி அவர் கவி எழுத முற்படவில்லை. இலக்கணப் புலமை மிக்க அவருக்கு அத் தேவை இருக்கவுமில்லை.
பரீட்சார்த்தமாக அவரெழுதிய "வசனக்கவிதை" கள் கூட ஆற்றொழுக்கெனச் சீராக இருந்தது.
வெண்பாவில் புகழேந்தி எனப் புகழப்பட்ட "நளவெண்பா" ஆசிரியர் எழில் கொஞ்சும் கவிதைக்கு ஒப்பாரும் மிக்காருமற்றவர்.
காட்சியொன்றைக் கண்முன்னே கொணர்வதுபோல் உவமான உவமேயங்களைக் கையாண்டு படிப்போர் மனதில் பதியவைப்பதில் வல்லவர்.அவர் பாடலொன்றைப் பார்ப்போம்.
சுயம்வரமண்டபத்தில் மன்னர்கள் வரிசையாக இருக்கிறார்கள்.தமயந்தி நுளைகிறாள்.காட்சி இதுதான் கவிஞர் பதியவைக்கிறார்.
மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தே!
பொன்னின் மடப்பாவை போய்ப் புக்காள்!- மின்னிறைத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறகன்னஞ்செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று........
கண்களுக்குத் தாமரையும்;மண்டபத்தைத் தடாகமாகவும்;தமயந்தியை அன்னமாகவும் உவமித்து;மறக்க முடியாததாகிவிட்டது.
"அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் ஒரு காட்சி சூரி எனும் வைத்தியராக பல பிரபலங்களுக்கு வைத்தியம் செய்பவர் கவியரசர் கண்ணதாசனுக்கும் வைத்தியம் செய்துவிட்டு ஒரு பாடல் தன்னைப் பற்றிப் பாடும்படி கேட்கிறார்.
தமிழுக்கு ஓர் கவிதை!!!!!!
அருமருந்துகள் போன்றவர் தமிழரசராம் திருவள்ளுவர்!
பெருமருந்துயர் பக்தியென்பதைப் பெரியவர் பலர் பேசுவர்!
சுரமருந்தென எதனையோ தரும் சூரி யெனும் மருத்துவர்!
கரி மெலிந்தது போல் மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே!!......
வைத்தியருக்கு மருந்து என்ற விடயத்தை வைத்து யாப்புப் பிசகாமல் வார்த்தெடுத்த கவிதை.இப்படத்தில் சூரி எனும் வைத்தியராக நடிப்பவர் நடிகர் நாகேஷ்..... அவர் தோற்றம் அவரைக்காய் போல் மெலிவு.
அதைக் கவிஞர் "கரி மெலிந்தது" என நயம் பட உரைக்கிறார். யானை மெலிந்தால் பார்க்கச் சகிக்காது.இவர்களல்லவா ! கவிஞர்கள்.
இனிக் கம்பன் பாடல் ஒன்று பார்ப்போம்.பல்லாயிரம் பாடல்கள் பாடி தமிழைச் சிறப்பித்தவர் கம்பர் பெருமான்; அவர் தமிழை ஆண்டு கவிச்சக்கரவர்த்தியானவர்.அவர் ஆற்றலுக்கு எவ்வளவோ பாடல்களைக் காட்டலாம்.ஓர் பாடலை உங்களுடன் பகிர்கிறேன்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்!எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறே!கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ! ஒருவன் வாளி!!!
இராம பாணத்தால் இராவணன் உடல் சல்லடையாகிக் கிடக்கிறது. மண்டோதரி அதைக் காண்கிறாள்.
எள்ளிருக்க இடமில்லாதவண்ணம் இராமபாணம் உடலெங்கும் தைத்துள்ளது.
கம்பன் கற்பனை பெருக்கெடுத்து அந்தக் காட்சிக்கு உயிரூட்டுகிறது.ஓர் அம்பால் உயிரை வாங்காமல் இப்படி உடலெங்கும் அம்பு பாய்ந்ததற்கு காரணம் கற்ப்பிக்கப்படுகிறது."கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்சானகியை மனச்சிறையில் கரந்த காதல்; உள்ளிருக்குதோ????என உடலெங்கும் தேடியது.என மண்டோதரி புலம்புவதாகக் கூறுகிறார்.
கவிஞன் தானும் அனுபவித்துப் படிப்போரையும் அனுபவக்கவைப்பதே!!!கவிதை.
அதனால் தான் கம்பர் சொற்களுக்கு அனுகூலமாக கருத்து ;செம்மை;இனிமை; தெளிவு, நடையெழில்;இலக்கிய இலக்கணப் புலமை;புராண வரலாறுகள் நாட்டு நடப்பு அறிந்திருத்தல் ஆகியன உடையோரே கவிதை எழுதும் தகுதியுடையோர் என்கிறார்.
சிறந்த இயல் இசை நாடக விமர்சகர் "சுப்புடு" ;இன்றைய புதுக்கவிதை பற்றிக் குறிப்பிடும் போது" அவிழ்த்து விட்ட அரபுக்குதிரை" என்கிறார்; அவற்றின் ஓட்டம் பயனற்றது; புரியவேண்டியவர்கள் புரிய வேண்டும்.
இன்றைய புதுக்கவிதையாளர்கள்; தாங்கள் நினைத்த போக்கில் எழுதுகிறார்கள். அவர்களுக்கு இலக்கணம் என்பதைப் பற்றியே கவலையில்லை; ஏன்,,?? அது தெரியாததும் கூட; பொருளுக்கிசைய எழுதுகிறோம் என்று ;சொல்லவந்த விடயத்தைத் தலைகீழாக்கி விடுவார்கள்.
உதாரணம்:-
உண்ண உணவும்!
உடுக்க உடையுமின்றிய சிறுவன்;
தந்தையும் தாயுமிழந்து இன்று
சொந்த மண்ணில்அகதியானான்.
இது ஒரு புதுக் கவிதையாம்.....இதைச் சற்று ஆய்வோம்.
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.
இது எப்படி??ச்சாத்தியமாகும்.கருத்தையே தலை கீழாக்கிவிட்டார்கள்;
தந்தை தாயை இழந்து; உண்ண உணவும் உடுக்க உடையும் அற்ற சிறுவன் என்பதே!!!உலகுக் கொப்பும்.
இதுவே இன்றைய புதுக்கவிதையாளர்களால் ஏற்படும் கேடு. எழுவாய் ஏது??? பயனிலை ஏது???என்பதின்றி மனதில் பட்டதையெல்லாம் எழுதி நிரப்புவதே!!!! அவர்கள் கூத்து.
இதன் தலைப்பு
ஊரும் நாட்கள்!
வாசுதேவன் கவிதை (யாம்)
இன்று எனது முறையாய் இருக்க வேண்டும்;
அவன் என்னிடம் வந்தான்
அவன் கேள்விகளுக்கு
அவன் விரும்பிய பதில்களை
என்னிடம் எதிர் பார்த்தான்
என் நியாயங்களில் பொருட்டு
அவன் எதிர் பார்ப்பைச் சிதறடித்தேன்
அவன் ஒரு முண்டமாய் மாறினான்
தோலை உரித்து
என் மனிதனை
அவன் முன் வைத்தேன்!
அசௌகரியம் தாங்க வொண்ணாது
முண்டம் திடீரென
ஒரு துப்பாக்கியாய் மாறியது.
அதுவரை
இரும்பென உறுதிகாத்த நான்
இதோ
அதன் காலடியில்மெழுகாய்
உருகி வழிகிறேன்
ஐந்தடி எட்டங்குலமும்
எழுபது கிலோ
எடையும் கொண்டதொரு
உருப்படி என்பதற்கப்பால்
எந்தப் பெறுமதியும்
எனக்கில்லாது போயிற்று
ஒரு இலையானாய்
நசுக்குண்டு கிடந்தேன்
அறுவடைகள் சகிதம்
வாசலில் அவன் தலைக் கறுப்பு மறைய
கூட்டிப் பொறுக்கி அள்ளி எடுக்கிறேன்;
என்னை!!
தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா???இவர் ஏன்.???இப்படி முக்கி முனகுகிறார்;இப்படித்தான்....
இன்று பல கவிதைத் தொகுப்புக்கள் ;வெறும் புலம்பலாகவே!! இருக்கிறது.
நூறு பக்கத்தில் ஓர் கவிதைத் தொகுப்பெனில் பக்கத்துக்கு 25 சொல்; இப்படிப் புரிந்து கொள்ள முடியாத புலம்பலாக நிரப்பப் பட்டிருப்பதும்;எப்போதுமே எதியோப்பிய வறுமை போல்"பிலாக்கன ஒலியும்" ;இவை என்னைப் போன்றோருக்கு! வெறும் ஏமாற்றமும்;வேதனையுமே!!!
இப்படி ஆயிரம் உதாரணம் காட்டலாம்.
எப்போதாவது ஒன்று....அது போதாது...;கவி உலகம் தன்னை மாற்ற வேண்டும்...;
இன்றைய "புதிசுகள்" யாப்பைப் பற்றியோ எதுகை;மோனையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.
தாங்கள் எழுதுபவை செய்யுளா?, வசனமா?? என்று அலட்டிக் கொள்வதில்லை. சொற்களை வைத்து விளையாடுகிறார்கள். உணர்ச்சியைக் கொட்டுகிறார்கள். மொத்தத்தில் இவற்றை யாரும் படிக்க வேண்டுமே என்று எண்ணுவதும் இல்லை.
இவை இலக்கியத் தரம் பெறவேண்டுமே எனச் சிந்திப்பதுமில்லை. எவரெல்லாம் எதோ செய்கிறார்கள்; நாம் இதையாவது செய்வோம் எனக் கிறுக்கிவிட்டு "கிறுக்கர்கள்" போல் இருக்கிறார்கள்.
அதாவது துக்ளக் ஆசிரியர் கூறியது போல் தமிழில் எதுவுமே எழுதத் தெரியாதவர்கள் புதுக் கவிதை எழுதுகிறார்கள்.
இன்று ஐயாயிரம் ரூபாவும்; 25 பேரை ஓரிடத்தில் கூட்டும் தகுதியும் இருந்தால் எவருமே கவிராயர்கள் ஆகிவிடலாம்.
நவீன இயந்திர யுகத்தில் அச்சு வேலைகள் மிக இலகுவாக்கப்பட்டதால் ; புற்றீசல் போல் பத்திரிகைகள் உருவாகியுள்ளன.
அவற்றில் இடத்தை நிரப்ப ;இந்தப் "புதிசு" உதவுகிறது.புதிசை எழுதியவரும் அவர் சார்ந்தோரும் வாங்குவதால் சில பிரதிகள் விலைபோகும்.
இது வெறும் கல்லாப்பெட்டி நிரப்புபவருக்கும் ,கஸ்டமின்றிப் புகழ் தேடுபவருக்கும் உள்ள உடன்படிக்கையே!!! இதனால் இலக்கிய உலகுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால் இவர்கள் ஒன்று புரிய வேண்டும்.மரபுக்கவிதை ஆர்றலுக்குத் தடை என்று; இந்த இலகு வழியைத் தொடர்ந்து நாடாமல்; மரபுக்கவிதைகளையும் படித்து அதில் மரபை மாத்திரமன்றி ஏனைய கவித்துவத்தின் அழகியல் அம்சங்களையும் அறிந்து திருந்த வேண்டும்.
இன்றைய வெகுசனப் பத்திரிகைகளில் வரும் பல கவிதை விமர்சனங்களைச் செய்வது முழுக்க முழுக்க கவிஞர் எனத் தன்னைத் தானே அடையாளம் காட்டிய ஒருவராக இருப்பது வேதனை.
ஒரு திரைப் படத்தை இன்னுமொரு இயக்குநர்;விமர்சிப்பதில்லை.
ஒரு பாடகனை இன்னுமொரு பாடகன் விமர்சிப்பதில்லை; ஒரு கதாசிரியரை இன்னுமொரு கதாசிரியர் விமர்சிப்பதில்லை.....
ஆனால் இந்த கவிதை மாத்திரம் இன்னுமொரு கவிஞரென்பவரால் அதாவது அதே கூட்டத்தையோ;குழுவையோ சேர்ந்தவரால் விமர்சிக்கப் படுவது;
மிக வினசமானதுடன்;நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது;
ஆளுக்கு ஆள் முதுகில் தட்ட வகை செய்கிறது.
"இந்தியா ருடே" யில் பல தடவை பார்த்துள்ளேன்; மாறி மாறி முதுகில் தட்டியதை!!!!இந்த நவீன கவிதையுருவை;இன்னுமொரு இந்த நவீனத்தை எழுதுபவரால் தான் புரிந்து கொள்ளமுடியும்;உணரமுடியும் என்பது வேடிக்கையாக உள்ளது;இவர்களின் நம்பகத் தன்மை அடிபட்டுப் போகிறது.
அதிலும் தமிழ்க் கவியுலகினர் "கூழுக்குப் பாடுவதில்" ஒப்பாரும்;மிக்காருமற்றவர்கள்.
கம்பனையும்,பாரதியையும்;கண்ணதாசனையும்.....சாதாரண அறிவு படைத்தோர்;உணர்ந்தார்கள்;விமர்சித்தார்கள். ஆனால் இந்தபுதுக் கவிராயர்களை;என்னுமொரு கவிராயர் தான் விமர்சிக்க முடியும் ;உணரமுடியுமென்பது.....வேடிக்கை மிக்கது.
ஒன்று என்றும் உண்மை. "நிழலின் அருமை வெய்யிலில் போல்" இப் புதிது ,வந்த பின் "OLD IS GOLD " என கம்பனையும்;பாரதியையும் தேடி ஓட வைத்துள்ளது.
இன்று புதுக்கவியுலகு ஆரம்பம் போல் இல்லை.ஓர் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.கண்ணதாசன் கூறியது போல்"எழுத முன் படியுங்கள்".
இதுவே புதுக் கவிராயர்கள் தெரிய வேண்டியது.
குறிப்பு: இக் கட்டுரை "பாரிஸ் கல்வி நிலைய 7ம் ஆண்டு மலரில்; 31- 08- 1993 வெளிவந்தது.
பலர் தடி;கம்பு ஏன் துப்பாக்கியுடன் கூட ஓடிவரலாம்.உனக்கென்ன தெரியுமென...ஆனால் பொறுமையாக எனக்குப் புரிய வைக்கவும்.
Labels: poems
47 comments:
புதுக்கவிதைகள் தான் என்னை மரபுக்கவிதையின் பாலும் இலக்கியங்கள் பாலும் திரும்பவைத்தவை.
யோகன் அண்ணா நீங்கள் பின்னூட்டங்களை மறித்து விட்டிருந்தீர்கள் ஏன் என்று தெரியவில்லை. தானாக மாறியிருக்கும் என்று நினைத்து நான் மாற்றி பின்னூட்டடிமிட்டிருக்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.
ஊரோடி பகீ
//நடக்க மாட்டாதவன் குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல //
யோகன் நல்ல பிடி பிடிச்சிருக்கிறியள்.... இப்ப உங்களோடை சருவ ஆக்கள் வருவினம் ...விடாதையுங்க...... எனக்கு....எதுன்றாலும்..... பிரச்சனை இல்லை. ஏனென்றால் இரண்டுமே எனக்கு விளஙகிறது குறைவு
உங்கள் கருத்துக்களுடன் முற்றிலும் ஒத்துப் போகிறேன்!
நல்ல அலசல்.
கொள்வார் இல்லை என்று தெரிந்தால் மரபு கவிதை எங்கு பிறக்கும்.
அமானுஷ்யங்களின் அலறலில்.....
ந
ன்
று
இக்கவிதை மூலம் தெரிய வரும் செய்திகள்...
1. நன்று என்று சொல்லக்கூடியவர், அதுவும் எழுத்துக்களை ஒன்றின் கீழ் ஒன்றாக போடுபவர் நிச்சயம் கவிஞராக இருப்பார்...
2. இந்த கவிதையை அவர் இங்கு இட்டு இருப்பதால் அனேகமாக அவர் இந்த இடுகையை சிலாகித்திருக்கிறார்...
3. இந்த மூன்று எழுத்து கவிதை மூலம் அவர் இந்த இடுகையை மட்டும் அல்லாது இந்த பக்கங்கள் யாவையும் சிலாகித்திருப்பதாக தெரிகிறது..
4. நன்று என்ற கவிதையில் இருக்கும் கனத்தை கவனிக்கவும்... இதன் உட்பொருள் மிக நுட்பமானது... இதன் மூலம் கவிஞர் தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போவது புலப்படும்
5. இக்கவிதை முன், பின் நவீனத்துவங்களை தாண்டி கருத்தியல் தளத்தில் இயங்குவது தெற்றென விளங்கும்...
6. இக்கவிதையை இங்கு இணையத்தில் இட்டதன் மூலம் கவிஞர் கணிப்பொறி இயக்கும் திறம் பெற்றுள்ளது தெற்றென விளங்கும்...
7. இங்கு அவர் சாத்வீகன் என்ற பெயரில் பின்னூட்டியுள்ளமையால் இவருக்கு கட்டாயம் ஒரு வலைத்தளம் இருக்கக் கூடும். நிச்சயம் அங்கு கவிதை என்ற பெயரில் ஏதேனும் கிறுக்கப் பட்டிருக்கலாம்...
அட... அட ஒரு சிறு கவிதை இத்துணை விடயங்களை தன்னுள் இணைத்துள்ளது எனில் இந்த நவீன கவிதையின் ஆழமும் அதன் வீச்சும் எத்தனை தொலைவு இருக்க கூடும்...
யோகன் பாரிஸ் அவர்களே,
அருமையான கட்டுரை..
நன்றி.
சாத்வீகன்.
திரு யோகன் பாரிஸ் அவர்களே!
1960ம் ஆண்டு வரை எழுதப்பெற்ற கவிதைகள் அனைத்தும் மரபுக்கவிதைகள்தான்.
அதற்க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணம் திரைப்படங்கள்தான்!
எதில் வேண்டும் என்றாலும் எழுதிவிட்டுபோகட்டும்
தமிழர்கள் தமிழில் முறையாகப் பேசினால், எழுதினால் போதும் என்ற நிலைமைக்குத் தமிழ் தள்ளப்பட்டு விட்டது!
அதுதான் இன்றைய நிலைமை!
யோகன், என் எல்லா இடுகைகளையும் படித்து கருத்து சொல்வதற்கு நன்றி. உங்கள் இடுகையையும் படித்த பிறகு எனக்கு நீங்கள் என் கவிதை பற்றி என்ன சொல்வீர்கள் என்று பயமாக இருக்கிறது. கொஞ்சம் படித்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்.
http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post.html
உங்களுக்குப் புரியவில்லை என்றால் தயங்காமல் திட்டுங்கள். என்னை நானே மேம்படுத்திக் கொள்ள உதவும்.
உங்கள் இடுகை பற்றி இன்னும் நிறைய சொல்ல விரும்புகிறேன். அது நாளைக்கு. இப்ப எனக்குத் தூக்கம் வருது !
நன்றாக அலசியுள்ளீர்கள்
காலையில் வந்து பின்னூட்டமிடலாமென்று பார்த்தால் பெட்டி திறக்கவில்லை. சாவி என்னிடமில்லை. நல்ல சாவி போட்டு திறந்த பகீ வாழ்க!
யோகன் மிக நல்ல பதிவு. எதிர்கருத்துகள் வரட்டும். நான் என் கருத்துகளைக் கூறுகிறேன்.
இங்கே சென்று பாருங்கள்.
"புதுக்கவிதைகள் தான் என்னை மரபுக்கவிதையின் பாலும் இலக்கியங்கள் பாலும் திரும்பவைத்தவை"
பகீ!!
நீங்கள் ,எதோ ஒன்றைத் தேடிப் போய்;அதைக் கண்டு தேடுதலை நிறுத்தியதாகக் கொள்கிறேன்.
அதாவது நல்ல கவிதையை!!!
எனினும் உங்கள் வயதில் அத் தெளிவை நீங்கள் அடைந்தது;எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!!!!
கண்ணப்பர் சிவனுக்கு சுவைத்துச் சுவைத்து இறைச்சி தேர்ந்தது போல்; எங்களுக்கும் சுவைத்தலில் பகிருங்கள்.
பின்னூட்டம் திறந்து நல்லது செய்தீர்!!
யோகன் பாரிஸ்
நீளம்.. ஆனாலும் அருமை அருமை அருமை..
உங்களின் நல்ல அலசலில் ஆங்காங்கே கவிதை வரிகள் போட்டிருப்பது இன்னொரு அருமை அருமை.. ;-)
"இப்ப உங்களோடை சருவ ஆக்கள் வருவினம்"
சின்னக்குட்டியர்!
என்ன??எனக்கு விழும் அடியைப் பார்க்க ஒதுங்கி நிற்பது போல் இருக்கு!!!
எனக்கு ஒண்ணும் புரியாதெனச் சொல்லி அடியில் இருந்து!!தப்புங்க!!
யோகன் பாரிஸ்
ஜீவா!
வருகை கருத்துக்கு நன்றி!
யோகன் பாரிஸ்
ஐயா...இந்தப் பதிவு எப்பொழுதிட்டது? இத்துணை நாள் பாராமல் போனேனே!
தமிழைப் பாலக்கி, அதன் இனிமையைத் தேனாக்கி, இரண்டையும் கலந்து ஊனாக்கி உவட்டாமல் ஊட்டும் அருந்தமிழ்ப் பாக்களை படிக்கப் படிக்க மலரும் பூக்களை மணமும் குணமும் பாராதாருக்கும் தமிழன் என்று பெயருண்டு என்பதே உண்மை. தமிழா...பண்டு மொழி என்று சொல்லில் பெருமை கூட்டல் போதுமா...அந்தப் பண்டும் பண்டு என்று சுவைத்துப் பார்த்தல் வேண்டாமா! வா...தமிழ்க்கடல் காத்திருக்கிறது. நீதான் ஓடம். பயணம் செல். தரளம் நிரம்பக் கிட்டும். நீயே தரளமாவாய். வா!
சாத்வீகன்!
கொள்வாரில்லாததால் கொடுப்பார் இல்லை??? என்கிறீர்கள்!
ஆனால் புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது எனப் பலர் ;இருக்கிறார்கள். சுப்பையா அண்ணரின் ஆதங்கத்தைக் கவனித்தீர்களா??
வரவுக்கும் "நன்று" கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்
//உண்ண உணவும்!
உடுக்க உடையுமின்றிய சிறுவன்;
தந்தையும் தாயுமிழந்து இன்று
சொந்த மண்ணில்அகதியானான்.
இது ஒரு புதுக் கவிதையாம்.....இதைச் சற்று ஆய்வோம்.
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.
இது எப்படி??ச்சாத்தியமாகும்.கருத்தையே தலை கீழாக்கிவிட்டார்கள்;
தந்தை தாயை இழந்து; உண்ண உணவும் உடுக்க உடையும் அற்ற சிறுவன் என்பதே!!!உலகுக் கொப்பும்.
இதுவே இன்றைய புதுக்கவிதையாளர்களால் ஏற்படும் கேடு.//
மேற்கண்ட வரிகளை இன்னொரு விதமாகப் புரிந்துகொள்ள எள்ளளவேனும் முயற்சித்தீரா? தந்தையும் தாயையும் இழந்த பின் தானா ஒருவனுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் போகும்? ஏன், தாய் தந்தையர் இருக்கும்போதே அப்படியொரு நிலைமை சிறுகுழந்தைகள் சிலருக்கு வருகிறதே. ஏற்கனவே அவனுக்கு உண்ண உணவும் இல்லை. உடுக்க உடையும் இல்லை. அப்படி இருக்கும்போது, ஒரு நாள் அவன் தாய் தந்தையை இழந்தான். இப்படிப் புரிந்துகொள்வதில் உங்களுக்கு சிரமமேதும் உள்ளதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
//உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.//
இவ்வாறாக நீங்கள் தவறாகப் பொருள் எடுத்துக்கொண்டால் அதற்கு அந்த வரிகளை எழுதியவர் என்ன செய்யமுடியும். அந்த வரிகளில் எங்கேயும், "இல்லாததால்" என்ற பொருள் படும் சொல்லையே காணவில்லை. இது உங்கள் புரிதலில் உதித்த சொல்லே அன்றி வேறெங்கும் அப்படிப் பொருள்படவில்லை. உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாத அவல நிலையில் அவன் தாய் தந்தையரை வேறு இழந்துவிட்டான் என்று பொருள்படலாமே தவிர, "அவை இல்லாததால் அவன் தாய் தந்தையை இழந்தான்" என்று வேண்டுமென்றா கோணலாகப் பொருள் எடுத்துக்கொண்டால் அதற்கு யார் என்ன செய்வது.
இந்தப் பதிவை இன்று தான் கவனித்தேன், ஆழமான பார்வை
"தமிழர்கள் தமிழில் முறையாகப் பேசினால், எழுதினால் போதும் என்ற நிலைமைக்குத் தமிழ் தள்ளப்பட்டு விட்டது!
அதுதான் இன்றைய நிலைமை!"
அண்ணா!!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
ஆனாலும் ;இந்த நிலை மாறுமென்பது பதிவுகளில் தெரிகிறது. மிக நல்ல முயற்சி இளைஞர்கள் எடுக்கிறார்கள்.
அதனால் மாறும்.
யோகன் பாரிஸ்
ரவி சங்கர்!
வரவுக்கு நன்றி!!
நம்மிருவர் கருத்தும் இவ்விடயத்தில் மிக ஒத்துள்ளது. பலர் ஒத்துக் கொள்கிறார்கள்;
இக்கட்டுரையை நான் எழுத என் ஒரு கலைமகள் விழாப் பேச்சே காரணமானது. "பராசக்தியும் பாரதியும்"....கவிதைக்குள் நுளையும் படியானது. அப்போ பாரிசில் அந்தப் பாடசாலையில் சுமார் 150 மாணவ மாணவிகள் அவர்களில் சுமார் 125 பேர் கவிஞர்கள்(நம்பக் கஸ்டம்);அவர்களுக்கும்; அவர்கள் பெற்றோருக்கு முன்னும் தான் பேசினேன். பல பெற்றோர் என் கருத்தை ஒத்துக் கொண்டார்கள்; சில மாணவர்களும் ஒப்புக் கொண்டார்கள்; சிலர் வயது...இதுகள் பழசுகள் இப்படிதான்...என்றார்கள்;
பின் ஆண்டுமலருக்கு இதைக் கட்டுரை வடிவில் தரும்படி கேட்டது...ஆசிரியர் குழுவில் இருந்த ஒரு இளைஞர்.
சில வாரங்களுக்கு முதல் அவர் பேசும் போது, என் பிளக் பற்றிக் கூற ;அவர் சொன்னது" அந்தக் கவிதைக் கட்டுரையை போடுங்கோ"---அதன் பின்னே இட்டேன்.
அதனால் இது என் கருத்து....கட்டாயம் மாற்றுக் கருத்து இந்த முகமறியாச் சாதனத்தில் இருக்கும்.
ஏற்கனவே!!! பெயரிலியா?,ஒரு அன்பர் துப்பாக்கியுடன் வந்து விட்டார்.
அவருக்குப் பதில் வரிசைக் கிரமமாகப் போடும் போது கட்டாயம் போடுவேன்.
அவர் எனக்குத் தெரிந்தவராகக் கூட இருக்கலாம். முகத்தை முறிக்கக் கூடாதென பெயரிலியாக வருகிறாரோ!! தெரியவில்லை.
இந்த நவீனத்தில்.... நல்ல ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்போல் இருப்பதால் ;நானும் இதை அறிய
வகையாகும் என நம்புகிறேன்.
தங்கள் பதிவுகள் படிப்பேன்.
யோகன் பாரிஸ்
My Friend!
மலேசியாவிலுருந்து; ஐந்து அருமை போட்டுள்ளீர்கள்!!பிடித்திருந்தால் மகிழ்ச்சியே!
நீளம் பற்றி.....தென்னாலிராமனிடம் ராசா...ராமாயணத்தை ஒரு நொடியில் கூறும்படி கூறிவிட்டார்..
தென்னாலி ராமன் சொன்னாராம் " ராமன் பிறந்தார்-ராவணன் இறந்தார்" ....இதுவும் ராமாயணமே!!
கம்பர் எழுதியதும் அதே!!! சில விடயங்களைத் தெளிவாக்க; எழில் சேர்க்க...நீளம் தவிர்க்க முடியாதது.
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
யோகன் பாரிஸ்
யோகன் ஐயா. நேற்று படிக்கத் தொடங்கி இன்று தான் படித்து முடித்தேன். நீங்கள் சொல்வதில் பெரும்பான்மைப் பகுதியுடன் ஒத்துப் போகிறேன். ஆனால் புதுக்கவிதை வடிவுகளிலும் கவிதைகள் இருக்கின்றன. நான் கண்டிருக்கிறேன். சிந்தனையைத் தூண்டிவிடும் கவிதைகள் மரபுக்கவிதையோ புதுக்கவிதையோ எதில் இருந்தாலும் நல்லதே. ஆனால் மரபில் புதுக்கவிதையைப் போல் சுதந்திரம் கிடையாது என்று சொல்பவர்கள் கட்டாயம் 'ஆடத்தெரியாதவர் மேடையைக் கோணல் என்று சொல்வது' போலத் தான்.
'நடக்க மாட்டாதவன் குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல ' என்றால் என்ன?
என்னார் அண்ணா!
என்ன??நல்லா அலசியுள்ளேனா??,
சிலர் காயப் போட்டு (பட்டு)ள்ளதாகவும் நினைக்கிறார்கள்;
என் நோக்கம் அதுவல்ல!!
கவிதை மேல் உள்ள பற்றால் சற்றுச் செம்மையை எதிர்பார்க்கிறேன்.
கூடாதா??
வரவு கருத்து யாவுக்கும் நன்றி
யோகன் பாரிஸ்
ஓகை!
இப்போ யாவும் சரி;உங்கள் கருத்தைக் கூறவும்;
குறிப்பிட்ட பக்கங்கள் படித்துப் பின்னூட்டுவேன்.
நான் ஆவலுடன் தங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்.
அத்துறை ஈடுபாடுடைய ஒருவர் நீங்கள்!!கூறுவது நன்று
என் புரிதலுக்குதவும்.
யோகன் பாரிஸ்
அன்பு ராகவா!
"பாம்பின் கால் பாம்பறியும்".....என் உள்ளக் கிடக்கையை புரிந்தீர்கள்.
இது மலருக்கு எழுதிப் பலவருடம்...ஆனால் பதிவாக்கியது.சிலவாரங்களுக்கு முன்பே!!! பீற்றாவால் அது அல்லாடித் தான் வெளியே வந்தது.
""தமிழைப் பாலக்கி, அதன் இனிமையைத் தேனாக்கி, இரண்டையும் கலந்து ஊனாக்கி உவட்டாமல் ஊட்டும் அருந்தமிழ்ப் பாக்களை படிக்கப் படிக்க மலரும் பூக்களை மணமும் குணமும் பாராதாருக்கும் தமிழன் என்று பெயருண்டு என்பதே உண்மை. தமிழா...பண்டு மொழி என்று சொல்லில் பெருமை கூட்டல் போதுமா...அந்தப் பண்டும் பண்டு என்று சுவைத்துப் பார்த்தல் வேண்டாமா! வா""
இதைத் தான் நானும் கூறுகிறேன்.இதையும் படித்துப் பயிலுங்கள்!!!
மறுக்கிறார்களே!!
வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்
பிரபா!!
கவனித்துள்ளீர்கள்!!!!
ஆழமான பார்வையா??, ஆனால் "உண்மையை" பலர் ஒப்புக் கொள்வதில்லை. சில வேளை;சிலர்- "இவர் இதைச் சொல்ல பெரிய இவரா???" என்று எண்ணுகிறார்களோ???தெரியவில்லை.அல்லது "கழுதை -கற்பூர வாசனை" என்று நினைத்து விட்டு ஒதுங்கி விட்டார்களோ??? தெரியவில்லை.இக்கட்டுரை பலவருடங்களுக்கு முதல்; திரும்பியனுப்ப சர்வதேச தபாற் கூப்பனுடன் நம்ம "வீரகேசரிக்கு" அனுப்பினேன். பிரசுரிக்கவுமில்லை;திருப்பியனுப்பவுமில்லை.தொலைந்த வரிசையில் போகட்டுமென நினைத்தார்களோ??"சொந்தச் செலவில் சூனியம் என நினைத்தார்களோ??,யாரறிவார். குறிப்பாக புதுக் கவிராயர்களையே காணவில்லை.
கவனித்ததற்கு நன்றி!
யோகன் பாரிஸ்
"பெயரிலியாக" வந்த அன்பருக்கு!
பொதுவாகக் கருத்தைச் சொல்ல முகமூடி போடுபவர்களின் கருத்தைக் கணக்கிலெடுக்க விரும்புவதில்லை.
எனினும் "நான் கேட்ட கேள்வியில்" அவர் வாயடைத்து விட்டார். என தவறாகப் புரியக் கூடாதென்பதால் பதிலிடுகிறேன்.
மேலும் இந்தப் பெயரிலி என் நண்பர்களில் ஒருவரோ!!எனும் பலமான சந்தேகமும் இன்னும் உண்டு.
பணிவோடு...பிள்ளைக்குக் கூட சாப்பாடு கொடுக்கமுடியாத பெற்றோரைப் "வறியவர்" எனச் சொல்லலாம்.ஏன்???இந்த "அகதி" அந்தஸ்து...உங்களுக்குத் தான் வெளிச்சம்.
அடுத்து"இல்லாததால்" என்ற சொல்லை நான் கண்டு பிடித்ததாகக் குறைப்பட்டுள்ளீர்.
"இன்றிய" என்பது இல்லாததால் எனத்தான் ;நான் அறிந்தேன். இதைப் பற்றி தமிழுலகம் தான் சொல்லவேண்டும்.
இதற்கு மேல் உங்களுடன் என்ன??சொல்வதென்பதே!! தெரியவில்லை.
சில பொருட்களுக்கு செய்கைவிளக்கம் போடுவது போல்;நீங்கள் எழுதுவதையும் ஆட்டி;அசைத்து; கீழே புகுந்து;அண்ணாந்து....பார்த்தால் பொருள் விளங்குமென ஓரு புரிதல் விளக்கம் போடுவது;சாலச் சிறந்தது.
என் நோக்கம்....முழுக்க தெரிந்த சொல்லால் எழுதுவது....புரியக் கூடாது என ஏன்..????கங்கணம் கட்டி எழுதுகிறீர்கள்.
இதைக் கேட்கும் உரிமை எங்களுக்குத் தான் இருக்கிறது.முதுகில் தட்டவோ!!சேர்ந்து கும்மியடிக்கவோ!!மனம் ஒப்பவில்லை. மன்னிக்கவும்.
அதே நேரம் சிலர் சிறப்பாக எழுதுகிறார்கள்.அதாவது தமிழை நிலைக்குத்தாக எழுதுவது தான் "கவிதை" என்ற புது இலக்கணத்தை உடைத்து.
அது பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!!
யோகன் பாரிஸ்
'இன்றிய' என்பது 'இல்லாத' என்பது நான் அறிந்தவரையில்.
நீங்கள் 'இல்லாததால்' என்று கூறுகிறீர்கள் புரியவில்லை.
'இன்றியதால்' - 'இல்லாததால்'
:S :S :S :S
உங்கள் பதில் கண்டேன்
//இதற்கு மேல் உங்களுடன் என்ன??சொல்வதென்பதே!! தெரியவில்லை.//
இதுவே நான் உங்களுக்கு சொல்லவும் பொருந்துகிறது.
புதியவன்!
"தூங்குபவனை எழுப்பலாம்;தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாதென்பர்".....எனினும் நீங்கள் தூங்குகிறீர்கள் என நம்பி எழுப்புகிறேன்.
"உப்பின்றிய உணவு"= உப்பற்ற உணவு=உப்பிலாத உணவு
தலைவனின்றிய குடும்பம்=தலைவனற்ற குடும்பம்= தலைவனில்லாத குடும்பம்
பொருளின்றிய பேச்சு= பொருளற்ற பேச்சு= பொருளில்லாத பேச்சு
பயனின்றிய முயற்சி= பயனற்ற முயற்சி= பயனில்லாத முயற்சி (நான் இப்போ சிலரிடம் செய்து கொண்டிருப்பது)
இதே போல் தான் உடுக்க உடையுமின்றிய சிறுவன்= உடுக்க உடையற்ற சிறுவன்= உடுக்க உடையில்லாத சிறுவன்......
எனக் கொண்டேன். உங்கள் சந்தேகமென்ன ??,எனப் புரியவில்லை.
கடைசியில் 4 S போட்டதன் காரணம் என்னவோ??, உங்கள் கையொப்பமா??
வரவுக்கும்; கருத்துப் பரிமாறலுக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்
புதியவன்.! உங்கள் கேள்விக்கு இன்னும் சரியான பதில் வரஇல்லை என்பதை அறிக.
இன்றிய = இல்லாத ---- சரி தான்
இன்றிய = இல்லாததால் ---- சரியா?
இதவல்லவா உங்கள் கேள்வி.! பதில் போதவில்லையே
புதியவன்!
முதல் நீங்கள் எனக்கு "இல்லாத; மற்றும்" இல்லாததால்" இரண்டுக்குமிடையில் கண்ட வித்தியாசத்தை தயவு செய்து கூறமுடியுமா????
மேலும் x=y;x=z எனில் y=z என்பது இலகு தற்கவியல்....
கடைசி முயற்சியாக நித்திரையாக நடிக்கும் உங்களை எழுப்பமுற்படுகிறேன்.
யோகன் பாரிஸ்
//ஆனால் மரபில் புதுக்கவிதையைப் போல் சுதந்திரம் கிடையாது என்று சொல்பவர்கள் கட்டாயம் 'ஆடத்தெரியாதவர் மேடையைக் கோணல் என்று சொல்வது' போலத் தான். //
அன்புடன் குமரனுக்கு!
உங்களைப் போன்றோர் படித்துக் கருத்துக் கூறுவதே!!மிக மகிழ்ச்சி!!!உண்மையில் நீங்கள் கூறுவதுபோல் இந்த புதிய உருவிலும் "குறிஞ்சி" பூத்ததுபோல் அப்பப்போ நல்லவை வருகின்றன. ஆனால் எண்ணிக்கை வெகுசொற்பம்....அவர்கள் கூட மரபைப் பழிப்பவர்களோ!!இழிப்பவர்களோ!!!அல்ல!!!
கம்பனைப் பழிப்பதே!!!புதுக்கவிஞனுக்கு அழகு எனும் ஓரு மாயை உருவாகியுள்ளது ஏற்புடையதில்லை.
நேரம் கிடைத்தால் பிடித்த புதிதையும் தருகிறேன்.
மேலும் "நடக்கமாட்டாதவன்...குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல்" என்பது ஒரு கிராமத்துச் சொல் வழக்கு அதாவது நியதிக்கு எதிரானதை இயலாமையால்;சோம்பேறித் தனத்தால் செய்வது. இங்கே "குஞ்சியாத்தை" என்பது "சிறியதாயார்"; அவரிடம் நடக்க முடியவில்லையே எனப் பெண் கேட்பது "சகோதரி" முறைப்பெண்ணை மணம்முடிக்கமுயல்வது....போன்று நியதிக்கு ஒவ்வாதசெயல்.;சமூகச் சீரழிவுக்கு அடிகோலும் செயலும் கூட...
இந்த கவிதை விடயமும் ...தமக்கு இயலாதிருப்பதால்; நல் நியதிகளை உடைத்து; சீரழிக்கிறார்கள்... அதைப் போல்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்
எனக்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை யோகன்-பரீஸ்.
நீங்கள் தந்த விளக்கங்கள் சரி. ஆயினும் இல்லாததால் என்பதில் வரும் "ஆல்" என்னும் விகுதியைக் கவனித்தீர்கள் என்றால் அதில் இருக்கும் வித்தியாசம் புரியும்.
//இன்றிய = இல்லாத ---- சரி தான்
இன்றிய = இல்லாததால் ---- சரியா?//
இதுதான் எனது கேள்வியும்.
//இதே போல் தான் உடுக்க உடையுமின்றிய சிறுவன்= உடுக்க உடையற்ற சிறுவன்= உடுக்க உடையில்லாத சிறுவன்......
எனக் கொண்டேன். உங்கள் சந்தேகமென்ன ??,எனப் புரியவில்லை.//
//உதாரணம்:-
உண்ண உணவும்!
உடுக்க உடையுமின்றிய சிறுவன்;
தந்தையும் தாயுமிழந்து இன்று
சொந்த மண்ணில்அகதியானான்.
இது ஒரு புதுக் கவிதையாம்.....இதைச் சற்று ஆய்வோம்.
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.
இது எப்படி??ச்சாத்தியமாகும்.கருத்தையே தலை கீழாக்கிவிட்டார்கள்;//
இங்கு என்நோக்கம் கவிதை சரி என்று வாதிடுவதல்ல. அவ்வாறு சரியென்று சொல்வதற்கு கவிதை என்றால் என்ன அதன் இலக்கணம் என்ன எப்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆயினும் இங்கு தமிழ்மீது கொண்ட காதலால் தமிழில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தினைத் தீர்த்துக்கொள்ளவே பின்னூட்டம் இடுகின்றேன்.
சிறுவயதிலேயே தமிழின் பயன்பாட்டை விட்டு அந்நிய மொழியோடு சகவாசம். என்தமிழில் தவறிருந்தால் திருத்திக்கொள்ள சந்தர்ப்பமாக அமையும்.
//கடைசியில் 4 S போட்டதன் காரணம் என்னவோ??, உங்கள் கையொப்பமா??//
கையொப்பம் எல்லாம் இல்லை. குழப்பத்தில இருந்தன். பாழாப்போன MSN பழக்கம் lol
//புதியவன்!
முதல் நீங்கள் எனக்கு "இல்லாத; மற்றும்" இல்லாததால்" இரண்டுக்குமிடையில் கண்ட வித்தியாசத்தை தயவு செய்து கூறமுடியுமா????
மேலும் x=y;x=z எனில் y=z என்பது இலகு தற்கவியல்....
//
உங்களிடம் இருந்தே பதில்
--->>>>>
இதைச் சற்று ஆய்வோம்.
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.
இது எப்படி??ச்சாத்தியமாகும்
<<<----
அவ்வாறு இரண்டும் ஒரே பொருள் என்றால் கட்டுரையில் வாசகனிற்கு ஒன்றை ஒன்று விளக்குவதற்கு ஏன் அப்படியே ஒரே வசனத்தை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிப் பாவிப்பான். அது வாசகனை உங்கள் பார்வையில் திசை திருப்புவதற்கு இல்லையா?
அடுத்து x,y,z. இவ்வுதாரணத்தின் தேவை இங்கு எவ்விதத்தில் உதவுகிறது என்று கூறமுடியுமா.. கணிதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறியீடாகப் பாவிக்கப்படும் வேளையில் x=y ஆக முடியும். இங்கு மொழியைப்பற்றிய கருத்தில் இதன்தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னொன்றும் கூறலாம் 1=0 என்று. தர்க்கவியல் முறையில். :P
//"சிறுவயதிலேயே தமிழின் பயன்பாட்டை விட்டு அந்நிய மொழியோடு சகவாசம். என்தமிழில் தவறிருந்தால் திருத்திக்கொள்ள சந்தர்ப்பமாக அமையும்."//
புதியவன்!
அப்படியா???ஏற்கனவே தாய்நாட்டில் கற்ற தமிழை இங்கே? தொழில் ரீதியாகப் பயன்படுத்தாமலும்; வீடுப் பாவனைக்குக் கூட இல்லாமல் இருக்கும் தலைமுறையைச் சேர்ந்தவரா?? ஆனாலும் உங்கள் தமிழ் மிக நன்று!!!
நானும் தமிழ்ப் புலவனில்லை;பண்டிதனுமில்லை.....கத்துக்குட்டிதான்...
//அவ்வாறு இரண்டும் ஒரே பொருள் என்றால் கட்டுரையில் வாசகனிற்கு ஒன்றை ஒன்று விளக்குவதற்கு ஏன் அப்படியே ஒரே வசனத்தை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிப் பாவிப்பான். அது வாசகனை உங்கள் பார்வையில் திசை திருப்புவதற்கு இல்லையா?//
வாசகனை என்பக்கம் திருப்பி நான் அமெரிக்க ஜனாதிபதியாகவா???வரமுடியும்.
அவை திசை திருப்பக் கூறியவை அல்ல.
தமிழில் கூறியது கூறுவதே!!குற்றம்.;;என்பார்கள்.;;;
முருகா,குகா,சண்முகா;சிவகுமாரா...;அப்படிதான் பாடுவார்கள் எழுதுவார்கள்.
அவர்களை ஏன் ??முருகா;முருகா,முருகா.....என்று எழுதவில்லையெனக் கேட்கக் கூடாது. மணிவாசகர் ...சிவபுராணத்தில்..;"நமச்சிவாய வாழ்க!,,, நாதன் தாள் வாழ்க!!!இங்கே தாள்..;எனும் சொல் பாதத்தைக் குறிப்பது....பின் தொடர்ந்து...;இறைவன் அடி;சீரோன் கழல்..எனும் ஒத்தகருத்துடைய அடி, கழல் எனும் சொற்களைப் பாவிக்கிறார்.அவை திசை திருப்பவல்ல!!!தமிழின் செழுமையை உணர்த்த....
//
அடுத்து x,y,z. இவ்வுதாரணத்தின் தேவை இங்கு எவ்விதத்தில் உதவுகிறது என்று கூறமுடியுமா.. கணிதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறியீடாகப் பாவிக்கப்படும் வேளையில் x=y ஆக முடியும். இங்கு மொழியைப்பற்றிய கருத்தில் இதன்தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னொன்றும் கூறலாம் 1=0 என்று.//
மன்னிக்கவேண்டும். நான் வெளிநாட்டுப் படிப்பெதுவும் படிக்காதவன் அதனால்; இந்த கணிதச்சமன்பாடுகளை மொழியில் பாவிக்கக் கூடாதெனும் உண்மை தெரியாமல் போய்விட்டது.எனக்குத் தமிழ் படிப்பித்தவர் ஒத்த கருத்தெனில் சமனானவை எனக் கூறி ;தாய்=பெற்றவள்=அன்னை=மாதா; அடி=பாதம்=கழல்=தாள்;சொல்லுதல்=பகர்தல்=உரைத்தல்=கூறுதல்=செப்புதல்...இப்படியெல்லாம் சொல்லித்தந்தார்(கெடுத்துவிட்டார்-உங்கள் கணிப்பில்)
மீண்டும் ஒரு சிறு முயற்சி...;;குடிக்கப் பாலற்ற பிள்ளை அழுதது;குடிக்கப் பாலில்லாத பிள்ளை அழுதது;குடிக்கப் பாலின்றிய பிள்ளை அழுதது;குடிக்கப் பாலில்லாததால் பிள்ளை அழுதது. இவையாவும் ஒரே கருத்தே!!!இந்த ஆல் விகுதி.;;இங்கே எந்த மாற்றத்தையும் தரவில்லை.
சில இடங்களில் விகுதிகள் மறைத்தும் எழுதலாம்.
இலக்கணத்தில் தொகைகளில் உம்மைத் தொகை என்பதற்கு உதாரணமாக "சேரசோழபாண்டியன் வந்தனர்"
என்ற சொற்றொடர் படித்த ஞாபகம் இதன் விரிவு..சேரனும்;சோழனும்,பாண்டியனும் வந்தனர் " என்பதே!!இங்கே இந்த "உம்" மறைந்து வந்துள்ளது.
நம் மொழியில் அழகுகருதி சிலவிரிபுகளும்; சுருக்கல்களும் உண்டு. (என் சிறு தமிழறிவைக் கொண்டு கூறுகிறேன்)
மேலும் இந்த முகம் தெரியா இணையத் தளத்தில் சில காலம் பயணித்தவன் என்ற வகையில் ஒர் உண்மை; புரிந்து கொண்டேன். இவரென்ன?? பெரிய இவர்...என்ற போக்கு சிலருக்கு உண்டு.
நீங்கள் அப்படித்தான் கருதுகிறீர்கள் போல் இருக்கிறது.ஆனால் சரியைச் சொல்ல கணணிப் பொறியியலாளர்; வைத்தியராகவோ,பேராசிரியராகவோ,,இருக்க வேண்டுமென்பதில்லை.சம்பத்தப்பட்ட விடயத்தைத் தெரிந்தவராக,அதில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம்.
மேலும் நீங்கள் 1=1000 எனக்கூட நிறுவக்கூடிய புலமைமிக்கவராக இருக்கலாம். நிச்சயம் எனக்கு அது தெரியாது.அந்த அளவு என் புலமையில்லை. (இது லோக்கல் படிப்பு)
நீங்கள் சிறு செய்திச் சேவைக் குறியீடா போட்டீங்க???எங்களுக்கு எங்க அதெல்லாம் புரியப்போது.;
இதையெல்லாம் கையொப்பம் என்று நினைக்கிற கைநாட்டுங்க நாங்க.!!!!
எனக்கு இவர்கள் இப்படி??எழுதுவதால் ஒரு நட்டமும் இல்லை.நிச்சயம் தமிழுக்கும் நட்டமில்லை.
என்ன????சூழல் இக்குப்பைகளால் மாசாகிறது.அதைச் சுற்றுச்சூழல் பராமரிப்போர் கவனிக்கட்டும்
உங்கள் எழுத்து நடையை வைத்து; நீங்கள் யாரென்பதை ஒரளவுக்கு ஊகிக்கிறேன். ஏன்??வேறு பெயரில் வருகிறீர்கள் என்பதே!!புரியாமல் உள்ளது.
எனினும் வரவு கருத்துப் பரிமாறலுக்கு நன்றி!
தங்களுக்கும் குடும்பத்தினதுக்கும் என் இதயம் கனிந்த புதுவருட வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்
. , : ; '' "" இக்குறியீடுகள் அனைத்தும் பொருள்பொதிந்தவை. அவற்றை பயன்படுத்தும் முறை தெரியாதிருப்பின் இவ்வாறான விதண்டாவாதங்கள் எழுவது தவிர்க்கமுடியாதது.
"உண்ண உணவும்!
உடுக்க உடையுமின்றிய சிறுவன்;
தந்தையும் தாயுமிழந்து இன்று
சொந்த மண்ணில்அகதியானான்"
இக்கவிதையின் முதல் இரண்டு அடிகளில் பொருள் குழப்பமாக இருக்கிறது. இரண்டு அடிகளையும் தொடர்பு படுத்த முடியவில்லை. ஆனால் இக்கவிதையின் கடைசி அடியில் கொஞ்சம் கவிதை இருக்கிறது. அகதி என்னும் சொல்லுக்கு கதியற்றவன் என்று அகராதி பொருள் சொல்லுகிறது. சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் அயல் நாட்டுக்கு வருபவர்களை குறிக்கும் சொல்லாக இந்நாட்களில் பயன் படுகிறது. கடைசி அடி சொந்த நாட்டிலேயே நாடற்றவன் ஆகிறான் என்னும் பொருளைத் தருகிறது. இந்த முரண் பொருளே அந்த கடைசி அடிக்கு கவிதைத் தன்மையைத் தருவதாக நான் எண்ணுகிறேன். இதற்கு இலக்கணத்தில் பொருள்முரன் என்று சொல்வார்கள். தொடை வகைகள் மூன்று - எதுகை, மோனை, முரண். முரண் தொடையில் ஒரு வகையான பொருள் முரணே பெரும்பாலும் புதுக் கவிதைகளுக்கு ஒரு கவிதைத் தன்மையை அளிக்கிறது என்பது என் எண்ணம். (முரண் தொடையின் மற்றொரு வகை சொல்முரண். உதாரணம் - இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்...)
நல்ல பதிவு யோகன். ராகவன் போலவே நானும் தவறவிட்டிருக்கிறேன்.
ஆனால், புதுக்கவிதைகளை முழுமையாக ஒதுக்குவதிலும் எனக்கு ஒப்புமையில்லை - யாப்பில் அமைந்த குப்பைகளையும் அடையாளம் காணமுடியும். ரசிகனுக்கு ஒரே வழி குப்பையைக் கொத்திக்கிளறிக்கொண்டே இருப்பது - ஒரு நாள் மாணிக்கம் கிடைக்கலாம்.
சமகாலத்தில் இருப்பதால் "கவிஞர்கள்" எழுதும் குப்பை நம் கண்ணை உறுத்துகிறது (நம் - பயன்பாட்டைக்கவனிக்க:-)).. யாப்பில் எழுதிய குப்பைகள் காலவெள்ளத்தில் காணாமல் போயிருக்கலாம்.
பொதுமைப்படுத்துவது தவிர்த்து, உங்கள் கட்டுரையின் பேசுபொருளும் நடையும் நன்றாக இருக்கிறது. நன்றி.
தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை இதுதான்..
எப்போதோ அளித்திருக்கவேண்டிய மடலை இப்போதாவது தாமதமாய் அளிக்க முடிவதில் எனக்கு மகிழ்ச்சி, ஏனெனில் மரபின் காதலி நான்.மரபுக்கவிதையை ரசிக்கும் அளவுக்கு சிறப்பாய் எழுத இயலாது எனினும் மரபின் ஓசை மனதை இழுப்பது நிஜம்.
மிகச் சிறப்பான என்பதைவிட சிரத்தையான பதிவு இது. மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்ட ஏழுத்தின் வீச்சு படிக்கும்போதே பிரமிக்கவைக்கிறது.
//மரபுக்கவிதைகளையும் படித்து அதில் மரபை மாத்திரமன்றி ஏனைய கவித்துவத்தின் அழகியல் அம்சங்களையும் அறிந்து திருந்த வேண்டும்.//
ஆமாம்..உண்மையான வரிகள் இவை.
மரபுக்கவிதை புள்ளிக்கோலம் போல. ஆரம்பித்து இழைகளை புள்ளிகள் நோக்கி கணக்காய் இழுத்தால் கோல இலக்கணம் இம்மியும் பிசகாமல் பூர்த்தியாய் நிறைந்து காணும்.
புதுக்கவிதையாவது அவ்வப்போது கற்பனைக்கேற்றபடி புனையும் அவசரக்கோலம். சிலசமயங்களில் நெஞ்சை அள்ளும் பல நேரங்களில் அலங்கோலம்.
மரபுக்கவிதை பற்றி அமரகவிஞர் திருலோக சீதாராம் கூறுவார்..அவரது சிறுவயதில் கிராமத்தில் கண்தெரியாத தமிழ் அறிஞரிடம் வாய்வார்த்தையாகவே ஆத்திச்சூடி கொன்றைவேந்தனிலிருந்து நளவெண்பா சூடாமணிநிகண்டு வரை பழைய இலக்கியங்களைக் கற்றுக்கொண்டாராம்.முதல் நாள் கற்ற செய்யுளை மறுநாள் அவரிடம் ஒப்புவிக்கவேண்டுமாம் தினம் பத்து செய்யுள் என்று கணக்கு.
ஒருநாள் கவிஞர் சொல்லமுடியாமல் திகைத்தபோது அந்தத்தமிழ்ப் பெரியவர் அவ்வையார் கதையைக்கூறினாராம்.
பிரும்ம ராட்சசன் குடி இருந்த மண்டபத்தில் ஒருநாள் இரவு அவ்வையார் தங்க நேர்ந்ததாம். அப்போது நான்கு யாமங்களிலும் அது வெருட்டியதாம். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாடலைச் சொல்லி அவ்வையார் சமாளித்தாராம்.
அஷ்டாவதனம் வீராச்சாமி ரெட்டியார் எழுதிய வினோதமஞ்சரியில் இந்தக்கதை வெகு விவரமாய்போடப்பட்டிருப்பதாய் என் தந்தை சொல்லுவார்கள்
அதில் ஒருபாடல் இது..
வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப்- பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாள்
எற்றோமற் றெற்றோமற் றெற்று.
வெண்பாவை இருமுறை படித்ததும் மனனமாகிவிட வேண்டுமாம் இல்லாவிடில் பேய்வந்து வெருட்டுமாம் (கடைசி வரிக்குசரியாய் அர்த்தம் புரிபடவில்லை) இந்த அச்சம் என்னை பழைய தமிழ் இலக்கியம் படிக்கவைத்தது என்று திருலோக சீதாராம்
சொல்லியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இப்படி பயமுறுத்தியாவது மரபின்பக்கம் மக்களை இழுக்க முயற்சிக்கலாம்!
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஷைலஜா
ஷைலஜா, இந்த சூழலில் ஔவையார் பாடியதாக நான்கு பாடல்கள் இருப்பதாக நினைவு. மேலும் இந்த பாடல் அவ்வையார் திரைப்படத்திலும் வருகிறது என நினைக்கிறேன்.
எற்றுதல் என்றால் உதைத்தல், அடித்தல், மோதுதல் என்று அகராதி பொருள் சொல்கிறது. இங்கு 'அடி மேலும் அடி மேலும் அடி' என்று அவ்வை அந்தப் பேயிடம் சொல்வதாக பொருள் கொள்ளலாம்.
பெயரிலியாக ஓர் அன்பர் வந்து; பாடம் நடத்துகிறார்.
இதைப் படித்த போது நான் கேள்விப்பட்ட ஒரு கதைதான் ஞாபகம் வந்தது.
ஒரு தமிழ்ப்பண்டிதர்; அவர் எதைப்படித்தாலும் அதிலுள்ள பிழைகளைச் சுட்டி ;காட்டுக்கத்தல் கத்தி ஆர்பாட்டம் செய்பவர்.
அவர் ஒரே மகள் யாரோ! விரும்பிய பையனுடன் கடிதமெழுதிவைத்து விட்டு ஓடிவிட்டாள்.
வீடே அல்லோகல்லப்பட்டது; தமிழ்ப் பண்டிதரும் அவர் பங்குக்குக் கத்தினாராம்.
எப்படி??
அந்த மகள் எழுதிய கடிதத்தில்;சில எழுத்துப் பிழைக்கள் உண்டென.
இதுவும் அப்படிதான் இருக்கிறது. ஆனானப்பட்ட கிவாஜெ;சுஜாதா,கலைஞர் இப்படிப் பலர் தவறிவிடுவதுண்டு, நம் மொழியில்;நானும் அப்பிடியே!
அதுவும் தட்டி,வெட்டி;ஒட்டி கொண்டு வந்து பார்த்தால் ஏதோ தெரிகிறது;இக் கணனியின் பின்புலம் தெரியாத என் போல் கைநாட்டுகள் படும் அவஸ்தை யாருக்கும் தெரியாது.
அதனால் ஐயா பெயரற்றவரே! மன்னித்தருளும்.
இவ்வளவு விசயம் தெரிந்த தாங்கள் தலைமறைவாக வாழும் நோக்கம் அடியேன் ;அறிய ஆவல்.
அடிக்கடி வந்து என் பிழைகளைத் திருத்தவும். ஏனேனில் இன்னும் எனக்குச் சரியாக எழுதத் தெரியாது.அதற்காக எழுதாமல் இருக்கவும் முடியாது.
வரவு கருத்துக்கு நன்றி!
தங்களுக்கும்,தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்
//இக்கவிதையின் கடைசி அடியில் கொஞ்சம் கவிதை இருக்கிறது. //
ஓகை!
இதைத்தான் பற்றாது இன்னும் கூட்டுங்கள் என்கிறேன். எங்களைத் தலை கிறுகிறுக்க வைத்துவிட்டு; இத்ணூண்டு, கவிதை எனக்காட்டிலால் போதுமா??சுனாமிப் பேரலைபோல் வரும் புதுக்கவிதைகளுள்; தூறல் மழைபோல் அப்பப்போ சிறு கவிதைத் தூறல்கள் பற்றாது.இன்னும் தாருங்கள்;என வேண்டுகிறோம். தவறா??,
அதனால் நான் முற்றாக எதுவும் இல்லை எனக் கூறவில்லை. அதை கட்டுரையின் ஓர் வரியில் சொல்லியுள்ளேன்.எனக்கு நேரம் கிடைக்கும் போதோ;தொடர்ந்து பதிவு போடுமெண்ணமும் இருந்தால் கட்டாயம் ,என்னைப் பாதித்த இப் புதுவடிவு பற்றி.எழுதுவேன்.
அடுத்து தங்கள் கவிமரவிலக்கணம் பற்றிய குறிப்புக்கள்;மிகப் பயனுள்ளவை! நான் அவற்றை இந்த அளவுபடிக்கவில்லை. ஓர் இலக்கணப்புத்தகம் வாங்கிப் படித்தபோதும் புரிவது கடினமாக இருந்ததால்;சிரமப்படாமல் அடுத்தவர் எழுதிவைத்ததைப் படிப்போம்; என விட்டுவிட்டேன்.
உங்களுக்குள்ள இந்த அனுபவத்தை வைத்து நல்ல மரபுக்கவிதைகளையும் புனைய வேண்டுமென்பது
என் வேண்டுகோள்.ஏனெனில் புதுசெழுதப் பலர் உண்டு.
வரவு கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி!
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்
“யாப்பில் எழுதிய குப்பைகள் காலவெள்ளத்தில் காணாமல் போயிருக்கலாம்”
சுரேஷ்!
நீங்கள் கூறுவது உண்மை! ஆனாலும் அப்படிப் போய் மிஞ்சியவையே!!படிக்கக் காலம் போதாது.
ஆனால் இந்த புதுவடிவில் மிஞ்சுவவை வெகுசொற்பமாக இருக்கிறதென்பதே!!என் ஆதங்கம்; இதை நீங்கள் புரிவீர்கள் என நம்புகிறேன்.நீங்கள் கூறுவதுபோல் குப்பை கிளறுகிறேன்...கிளறிக் கொண்டேயிருக்கிறேன்...அது பற்றி வசதிபோல் எழுதுவேன்.
அதை விட இதை இவர்கள் எழுதுவதால் எனக்கு எந்த நட்டமும் இல்லை.என்னை ஒரு எதிரிபோல் இவர்கள் கருத வேண்டியதுமில்லை.
தங்கள் வரவு,கருத்துடன் ;பாராட்டுக்கும் மிக்க நன்றி!
யோகன் பாரிஸ்
// மிகச் சிறப்பான என்பதைவிட சிரத்தையான பதிவு இது. மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்ட ஏழுத்தின் வீச்சு படிக்கும்போதே பிரமிக்கவைக்கிறது. //
சைலஷா!
தங்கள் பின்னூட்டம் படித்து விட்டு!!;தங்களைப் பற்றிய குறிப்புக்களைப் பார்த்துவிட்டு உண்மையிலே..எனக்கு மிக மகிழ்ச்சி!!சிலர் பெயரிலியாக வந்து "லொள்ளு" விடுகிறார்கள். இவர்கள் மத்தியில் உங்களைப் போன்ற பலர் பாராட்டியது. மெய்யிலுமே!!நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.
நீங்கள் இரண்டையும் நன்கு ஒப்பு நோக்குகுறீர்கள்; அத்துடன் மாற்றம் வராதா??என ஏங்குகிறீர்கள்
அப்படியான ஏக்கம் உள்ளவனெனும் வகையில் ;உங்கள் உணர்வு புரிந்து கொண்டேன்.
88- 89 ல் கலைமகளில் கிருபானந்த வாரியார் கம்பராமாயணம் பற்றி எழுதும் போது உரையுடன் அப்பப்போ மூலப்பாடலும் போடுவார். ஒரு நாளிரவு "வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திரு மேனி";;அத் தொடரில் வந்தது . ஒரு தடவை தான் வாசித்தேன்; இன்று வரை ஞாபகம் உள்ளது. அதுதான் மரபின் சிறப்பு. இப்பாடலைக் கண்ணதாசன் கூட தன்னைக் கவர்ந்த வர்ணனைகள் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவ்வளவு சிறப்பான கோர்ப்பு...இப்படி ஆயிரமாயிரம்...
//புதுக்கவிதையாவது அவ்வப்போது கற்பனைக்கேற்றபடி புனையும் அவசரக்கோலம். சிலசமயங்களில் நெஞ்சை அள்ளும் பல நேரங்களில் அலங்கோலம். //
// "வா
னில் நட்
சத்திரங்கள்
கண் சிமிட்டுகின்றன"
என
உடைந்து கிடக்கிறது கவிதை..
ஊசி கொண்டு அதைத் தை! //"
இது பினாத்தல் சுரேஷ்! இன்றைய கவிதை பற்றி குத்திக் காட்டியது...
மனம் போன போக்கில் வசனத்தை முறித்து நிறுத்துகிறார்கள். எங்களை ஞானசூனியங்கள் என்று வேறு திட்டுகிறார்கள்."பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாள்" என்பது தங்களை என்பது புரியாமல் காலம் தள்ளுகிறார்கள்.
நீங்கள் கட்டாயம் ஒல்லாந்தில் இருந்து ரவிசங்கர் அவர்கள் எழுதிய (http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post.html) ஆக்கத்தையும் படிக்கும்படி சிபார்சு செய்கிறேன்.
பூனைக்கு மணிமாத்திரமல்ல!!சங்கிலியும் போட்டுக் கட்டும் காலம் நெருங்குகிறது.பல இளைஞர்கள் அதைச் செய்வார்கள் என்பது;பின்னூட்டங்களில் இருந்து நான் புரிந்தது.
தங்கள் வரவுக்கும் ஆணித்தரமான கருத்துக்கும் நன்றி
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்
அன்பு யோகன்,
கவிதைகள், கவிஞர்கள் இரண்டு விஷயங்களையும் தீர அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். ஆனால் இவற்றுள் சிறப்பில்லாத கவிதை என்று சொல்ல லாயக்கற்ற விஷயங்களை மேற்கோள் காட்ட வேண்டாமென்பது என் கருத்து ஏனென்றால் அத்தகைய வரிகளைப் படிக்கையில் சீத்தலைச் சாத்தனாரைப் போல் தலையில் குட்டிக்கொள்ளத் தோன்றுகிறது. படிப்போர் மனது அமைதியாகவே இருக்கட்டுமே.
காளமேகப்புலவரின் பாட்டு நான் படித்த வகையில்,
சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா - சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே, நாயே குரங்கே - உனையொருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்
எனக் கண்டேன்.
மிகவும் பண்டைக்காலக் கவிதையாதலால் இருவேறு வகையில் தொகுத்து எழுதியவர்கள் மாறுபடக் கூறியிருக்கலாம்.
கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் மனதைத் தொடுவதாக அமைந்ததற்கு ஒரு இன்றியமையாத காரணம் அவர் பண்டை இலக்கியங்கள் அனைத்தையும் நன்கு கற்றுணர்ந்து அவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க வார்த்தை அல்லது வரிகள் துவக்கமாகவோ, இடையிலோ அமையும் வண்ணம் எழுதியதாகும்.
உதாரணமாக நீங்கள்,
"கானகத்தைத் தேடியிங்கே போகிறாள் - சுவைக்
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகி"
எனும் பாடலைக் கேட்டிருக்கலாம்.
அருமையான கட்டுரை உமது.
அன்புடன்
ஆகிரா
ஆகிரா அண்ணா!
நீங்கள் பாராட்டியது;எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. நீங்கள் பழந்தமிழ்ப் பாடல்களைச் சுவைப்பவர்
அதனால் அந்தப் பாராட்டுக்கு மதிப்பதிகம்.
சிலர் கல்லெறிந்துள்ள பின்னூட்டங்களும் நீங்கள் படித்திருக்கலாம். அப்பின்னூட்டமிட்டோரை நினைத்து வருத்தப்படுவது தவிர ஏதும் செய்யவில்லை.
உண்மை; இந்தக் கட்டுரைக்குள் அந்தச் சுவையற்ற வரிகளைக் காட்டியிருக்கத் தேவையில்லையே!!
ஆனால்; அதையும் தொட்டுக்காட்டாவிடில் அதை நான் பார்க்கவில்லை;எனக் கருதலாம். என்பதாலே
சேர்த்தேன்.
மேலும் நீங்கள் கூறியுள்ளதே!! காளமேகப் புலவரின் சரியான வடிவமாக இருக்கலாம். நானும் செவிவழி
கேட்டு ஞாபகத்தில் வைத்திருந்தெழுதியதே!!!பழந்தமிழ்ப் பாடல்களில் பல வடிவங்கள் உலா வருவது;
தவிர்க்கமுடியாத தாகிவிட்டது.
கண்ணதாசனின் பாடல்களின் தனிச்சிறப்பே பழந்தமிழிலக்கியத்தை எளிமைப்படித்தியதே!!
அதைப் பல பாடல்களில் காணலாம்.
கட்டுரை படித்துக் கருத்துக் கூறியதற்கு மிக்க நன்றி
பொல்லாத் தமிழின்
பெருமை எதுவெனில்
எல்லாக் கவிதையும்
யாப்பில் அடங்கும்
கல்லாதான் கற்ற கவி
பற்றிச் சொன்னவள்
சொல்லாதது ஒன்று
உண்டோ சொல்
Post a Comment