Saturday, February 03, 2007

எம் தமிழும் இத்தாலிய மத குருவும்.

எம் தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ்ச் சான்றோர் பலர்..இவர்கள் தவிர மேல்நாட்டறிஞர்களும் தமிழின் தொன்மையாலும்;இனிமையாலும் கவரப்பட்டு; இலக்கியப்பணி புரிந்து;தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்கள்.இவர்கள் அனைவர்களிடையேயும் அந்நிய நாட்டில் பிறந்து;வளர்ந்து; படித்து தமிழின் செழுமையைக் கேள்விப்பட்டு,தமிழகம் வந்து தமிழைக் கற்று ;தமிழ்ப் பண்பாட்டை அறிந்து;தமிழராக வாழ்ந்து பெருமை சேர்த்தவர் "வீரமாமுனிவர்" எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI) பாதிரியார் எனும் இத்தாலிய கத்தோலிக்க மதகுரு.

4 நூற்றாண்டுகளுக்கு முன் கிருஸ்தவப் பாதிரியாராக ;தமிழகம் வந்த பெஸ்க்கிப் பாதிரியார்; தமிழ்பால் ஈர்க்கப்பட்டு தமிழுக்கும்;தமிழருக்கும் அரிய சேவையாற்றினார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன் ;இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது; இவர் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இத்தாலியில் உள்ள காஸ்திலியோனே எனும் கிராமத்தில் 1680; நவம்பர் 8 ம் திகதி பிறந்த இவருக்குப் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்ட் பெஸ்கி (BESKI). இளமையிலே மிகுந்த அறிவுடையவரான ;இவர் முறையான பள்ளிக் கல்வியில்லாமலே இத்தாலிய மொழியை தவறின்றிப் பேச எழுதக் கற்றுக்கொண்டார். இவர் திறன் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்.

இளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு
மிக்கவராக இருந்து; 18 வயதில் ஜேசு சபையில் சேர்ந்தார்.உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள்; கிரேக்கம்;லத்தீன்;போத்துக்கீச;பிரன்சிய;ஜேர்மன்;ஆங்கிலம்; ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவராகி அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஜேசு சபையில் இருந்ததால் அபாரமான பேச்சாற்றல் மிக்கவராகவிருந்து; தன் அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதால் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் கடமைபுரிந்து; அதிலும் திருப்தியின்றி 4 ஆண்டுகள் கிருஸ்தவ வேதாகமத்தைக் கற்று மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.

வியாபார நோக்கில் பொன்;மணி; கனி,கிழங்கு தேடிவந்த ஐரோப்பியர்;இந்தியா இவற்றுடன் கலையும்,பண்பும்;அறிவும் மலிந்த தேசம் என்ற கருத்தைப் பரப்பினர். "கலை மலிந்த பாரதமென்பது"இத்தாலியரைக் கவர்ந்தது; குறிப்பாக மொழி; கலை ஆர்வமிக்க பொஸ்கிப் பாதிரியாரைக் கவர்ந்ததால்பாரதம் வந்து இவற்றை அறிய வேண்டுமெனத் தீர்மானித்தார்.

இவர் அறிவு ஐரோப்பியர்களுக்குப் பயன்படவேண்டுமென பெற்றோரும்;மதகுருமாரும் விரும்பிப் பட்டங்கள் பதவிகள் கொடுக்க முற்பட்டபோதும்;அவரோ இந்தியக் கலையார்வத்தால் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 யூனில் கோவா வந்து சேர்ந்தார். அந்த நாட்களில் கோவா வெளிநாட்டு வணிகர்கலுடன்; இந்திய மாநில வணிகர்களும் நிறையுமிடமாக இருந்தது.

சில நாட்கள் கோவாவில் தங்கியவர்;எத்தனையோ விதமான இந்திய மக்கள் மொழி,உடை;உணவு என்பவற்றைக் கவனித்து;அவற்றின் வேறுபாடுகளை உற்று நோக்கி; ஒன்றிலிருந்து மற்றதற்கு உள்ளதொடர்பை பல்மொழிப் புலவரான இவர் இலகுவில் உணர்ந்தார்.திராவிட நாகரீகம் ;கலை; பண்பு என்பவற்றையும் புரிந்துகொண்டு; தமிழ்நாடு செல்ல உத்தேசித்து;கோவாவின் சந்தடி மிக்க வணிகச் சூழலிலிருந்து விடுபட ;கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக "அம்பலக்காடு" ஜேசு ஆலயம் வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

தமிழகம் வந்தவர்; தனக்குச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது போலும்; இம் மண் தெய்வீகம் நிறைந்த மண்ணெனவும் உணர்ந்ததுடன்..;தமிழகம் ஒற்றுமையின்மை;அமைதியின்மை;ஏழைகளுக்குத் தகுந்த கல்வி;சுகாதாரமின்மை போன்ற பல இன்னல்களுடன்; மன்னர்கள் பதவிப்பித்தும்;போட்டி பொறாமையும் கண்டு இவ்வவலங்கள் தீரச் சேவை செய்யத் தீர்மானித்து மொழியைப் பேசப் பழக மக்களோடு மக்களாக வாழவேண்டுமெனத் தீர்மானித்தார்.


அதிஸ்டவசமாக சுப்பிரதீபக் கவிராயரின் நட்பேற்படவே;அதுவே இவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவரிடம் இலக்கண;இலக்கியம் கற்று; கவி புனைந்து; அல்லும் பகலும் தமிழ்நயத்தில் மூழ்கி; இறைவனை எண்ணவும்;வணங்கவும் ஏற்றது தமிழ்;பக்தியும்;கனிவும் தமிழின் சிறப்புக்கள் எனக் கூறினார்.பன்மொழிப் வித்தகர் பெஸ்க்கிப் பாதிரியார்.

இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றவர். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள்;தேவாரம்; திருப்புகழ்;நன்நூல்;ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.தமிழ் கற்க ஏதுவாக தமிழ்- லத்தீன் அகராதியை உருவாக்கினார்.அதில் 1000தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். பிற மொழிகளைக் கற்று தாய் மொழியில்லாத மொழிகளுக்கு உறவுப் பாலமமைத்தவர் இவர்.

சுவடிகளுக்குப் புள்ளி வைக்காமலே முன்னாளில் எழுதுவது வழக்கம்.புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும்.மேலும் குறில்; நெடில் விளக்க (அ:அர, எ:எர) என்று "ர" போடுவது வழக்கம்."ஆ" என எழுத 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது.இந்த நிலையை மாற்றி "ஆ,ஏ" என மாறுதல் செய்தவர்.தமிழ் இலக்கிய; இலக்கணங்கள் பண்டிதநடைக் கவிதையாக இருந்தது. மக்கள் அனுபவிக்க முடியவில்லை என்பதனை அறிந்து வசன நடையாக மாற்றியவர்.

1728 ல் ;பாண்டிச்சேரியில் "பரமார்த்த குரு" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது."அதிவிவேகபூரண குருவுக்கு மட்டி;மடையன்;பேதை;மிலேச்சன்;மூடன் என்ற ஐந்து சீடர்கள், "ஆறு தூங்குகிறதா? விழிக்கிறதா? என்று பார்ப்பதும் "குதிரை முட்டை வாங்கச் செல்வதும்" சிரிப்பூட்டும் கதைகள், இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து இவர் எழுதிய கவிதை இதோ!

"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிளுக்க

பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்

வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம் போம் காதம் வழி"...

இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் ;தெலுங்கு;மலையாளம்;கன்னடம் போன்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது.

1738 ல் "தொன்நூல்" என்ற இலக்கண நூலை எழுதியவர்; இதை லத்தீனிலும் வெளியிட்டார்.தமிழ் இலக்கணம் கற்றதால், பண்டைய "நிகண்டுகளை" வரிசைப்படுத்தி, மேல்நாட்டு முறையை மேற்கொண்டு"சதுரகராதி" இயற்றினார்.கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப்பதங்களுக்கு எளிதான விளக்கம் காணமேல்நாட்டு அகராதித் தொகுப்பே சிறந்ததெனக் கருதிய இவர்.சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். பெயர்; பொருள்; தொகை; தொடை என்ற நான்கு பிரிவு கொண்டுள்ள "சதுரகராதியில்" ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நெடில்;கீழெதுகை;தொடைப்பதம்,அனுபந்த் அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழாராச்சி மகாநாட்டின் சிற்பியும், பல உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்து பண்பாட்டு நெறிகளை அறிந்தவரும், ஈழத்தின் தமிழறியருமான தனிநாயகம் அடிகளார்..."தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாகிய பெஸ்கி முனிவர், தமிழ் அகராதியாக்கியதன் மூலம் தமிழகராதியின் தந்தையாகிவிட்டார்.இவரியற்றிய "சதுரகராதி" தமிழகராதிகளுள் முதன்மையானது. இவரது "தொன்நூல்" இலக்கண நூல்களிலே சிறப்புடையது. "தேம்பாவணி"யைப் படைத்ததன் மூலம் திருத்தக்க தேவர்;கம்பர்;இளங்கோவடிகள் போன்ற கவிச்சக்கரவர்த்திகளின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தேம்பாவணியை மத நோக்குடன் பார்க்காமல் தமிழ் நோக்குடன் பார்த்தால் ,இலக்கிய நயங்களைப் புரிந்து மகிழலாம்.பிற நாட்டு இலக்கியக்கருத்துகளைத் தமிழில், வாசமிகு மலர்களாகக் கோர்த்து, கதம்பமாக இணைத்தளித்துள்ளார்.அந்தக் கருத்துக்களைத் தமிழ்ப்பண்புக்கும், கலையுணர்வுக்கும் நகசு செய்து ஒளியேற்றியிருக்கிறார்." என்றார்.

"தேம்பாவணி" ஜேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய சூசை நாதரின் வரலாற்றை விரித்துரைக்கும் காவியம்; 36 படலங்களாலும்; 3615 விருத்தப் பாக்களாலும் ஆன கிருஸ்தவ வரலாற்று நூலான இது; தமிழ்ப்பண்பாடும், மரபும் கொண்ட காவியமாகத் திகழ்கிறது.ஜேசுவும்; மேரியும்;சூசை நாதரும் ஊரை விட்டே விரட்டப் பட்டபோது மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் காணாது கலங்கும் மக்கள் மனநிலையை வர்ணிக்கும் முனிவர்....

"மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள்

குயில்கள் கிளிகாள் கொடிகாள் உரையீர்!

எயில்காள் வனத்தினை யெஞ்சருநலோர்

வெயில் காள மறைந் தென மே விடமே!"

[மயில்களையும்,பல்வகை வண்டுகளையும்;கிளிகளையும் பார்த்துக் கலங்கும் மக்கள் கேட்கிறார்கள்;மேகத்துள் மறையும் சூரியனைப் போல் மறைந்த மூவர் இருக்குமிடத்தைச் கூற மாட்டீர்களா?]

"வரையீர் புனலே மழையீர் வரையே!

விரையீர் அமநாவிரி பூந்தடமே!

கரையீர் மலர்த் கொட சூழ் பொழிலே!

யுரையீர் உயிரின்னுயிருள்ளொளியே!

[மலையை ஈர்த்து விழும் புனலையும்; மேகத்தையீர்த்து மழையாகத் தரும் மலைகளையும்புன்னை முதல் குளிர் பூமரங்கள் சூழ் சோலையே!எம் உயிரிலும் இனியவர்களாகிய மூவர் இருக்குமிடம்சொல்லமாட்டீர்களா?]

இயற்கையை வர்ணிக்கும் இதுபோல் பல பாடல்கள் "தேம்பாவணி" யின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
காணாமல் போன இயேசு பிரான் காட்சி தருகிறார். அந்த ஆனந்தத்தை வர்ணிக்கும் பாடல்...

"தண்டமிழ் சொல்லுநூலும் சால்பொடு கடந்த வண்ணத்
துண்டமிழ்த் துவப்பினுள்ளத் தோங்குமிவ் விருவர் தம்முட்

பண்டமிழுரைத்ததே போற் பயன்பகர்ந்திளபற்காண

மண்டமிழ் துரும வாவின் மகிழ்வினையுரைப் பாரோ!

[வீணையில் எழும் நாதத்தைப் பார்க்கினும் இனிமை மிக்க தமிழ்ச் சொற்களை உச்சரிக்கக் கேட்கும் போதுஎத்தகைய பேரானந்த முண்டாகுமோ!, அதற்குமதிகமான மகிழ்ச்சியை ஜேசுவைக் கண்டதும் மக்கள் கொண்டனர்.என்பது பாடலின் கருத்து.]

'தேம்பாவணி' மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது.பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த இவரை; தமிழ்ப் புலவர்கள்;"எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி;முப்பதிமூன்று லட்டத்து;முப்பதிமூவாயிரத்து;முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள்; சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள் என்றதும்,சபையில் சிரிப்பொலி எழும்பிப்;பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.
"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு "வீரமா முனிவர்" என்ற பட்டம் அளித்து; ராஜரிஷி என்றும் சிறப்பித்தது.

பின், தஞ்சையில் காவிரிக்கரையில் ஏலாக்குறிஞ்சியில் மாதா கோவிலொன்று நிறுவினார். போர்க் காலத்தில் மக்கள் தஞ்சமடைந்ததால் "அடைக்கல மாதா" எனக் கூறப்பட்டார். அந்த மாதாமேல் "அடைக்கல மாலை" எனும் நூல் புனைந்தார்.மதுரையில் பல காலம் வாழ்ந்த வீரமா முனிவரை; மன்னர்கள் அனைவரும் பெருமைப்படுத்தினார்கள்.

ஒரு தடவை புதுக் கோட்டை போர்க்களமானபோது; சந்தாசாகிப்பின் படைகளைப் பற்றி தளபதியிடமே! நேருக்கு நேர் வாக்குவன்மையுடன் நியாயம் கேட்டபோது;தளபதி சேனாதிபதியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.அந்த இடைவெளியில் உருது மொழி பேசப் பழகி சேனாதிபதியுடன் உருதில் பேசினார். முனிவரது புலமையை மெச்சிய சேனாதிபதி;அந்நாளில் 12;000 ஆண்டு வருமானம் வரும் உக்களூர்;மால்வாய்;அரசூர்;நல்லூர் போன்ற கிராமங்களை முனிவருக்கு மானியமாக வழங்கி "இஸ்மதி சந்நியாசி" என்ற சிறப்புப் பட்டமும் அளித்துக் கௌரவித்தார்.

அத்துடன் சேதமடைந்த ஆலயங்களைத் திருத்த ;வேண்டிய பொருளுதவியும் செய்து, தன் பாட்டனார் பாவித்த தந்தப் பல்லக்கைப் புலவருக்குக் கானிக்கையாக்கினான்.அத்துடன் தன் நாட்டின் கௌரவ திவான் பதவியையும் அளித்து; பல்லக்கில் அரச மரியாதையுடன் உலாவர ஏற்பாடு செய்தான். ஆடம்பரம் விரும்பா முனிவர்; நண்பரின் மகிழ்ச்சிக்காக சில தடவை அப்பல்லக்கில் ஏறினாராம்.

ஆடம்பர வாழ்வில் ஆர்வமற்ற முனிவர், நாளும் ஏழை எளிய மக்களுடன் குடிசைகளில் தங்கி ,எவர் எதைக் கொடுத்தாலும் உண்டு. பனையோலைப் பாயில் படுத்து; மக்களோடு மக்களாக ,வட்டாரம் வட்டாரமாகச் சென்று ,பாரசீகம்;இந்துஸ்தானி மொழிகளைக்கற்று; எங்கே தமிழ் விழா நடந்தாலும் அழைப்பின்றிச் சென்ற தமிழ் யோகி "வீரமா முனிவர்" ,சிவந்த மேனியில் காவியும்;காதில் குண்டலமும்;நெற்றியில் சந்தணப் பொட்டும்,கையில் ராஜ ரிஷிகளின் சின்னமான கோடாரியும்;வெண்தலைப் பாகையும் ,சாந்தி தவளும் முகமாகவும் குடிசையிலே எளிமையாக தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து ,கடைசிக் காலத்தில் அம்பலக்காட்டிலுள்ள தேவாலயத்தில் தங்கி அங்கேயே 04 - 02 - 1743ல் இறையடி எய்தினார்.

தமிழ் மண்ணில்,தமிழ்ப் பெயருடன்;தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து ,தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த "வீரமா முனிவரை" அவர் ,நினைவு நாளான இன்று நினைத்துப் போற்றுவோம்.

***ஆவூர்த் தேவாலயத்திலுள்ள வீரமா முனிவர் சிலை***

36 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சின்னக்குட்டி said...

இவர் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்தவர் .தமிழ். எழுத்துக்களில் குற்று போடும் முறையை அறிமுகபடுத்தினவர் என்று கூறுவோர் உண்டு.

வைசா said...

பல நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு இது. பல அறியாத விடயங்களையும் தெரிந்து கொண்டேன். பரமார்த்த குரு புத்தகம் 1728ல் வெளியானதா?

நன்றி யோகன்.

வைசா

செல்லி said...

உயர் க.பொ.தராதர பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திட்டத்தில் "தேம்பாவணி"
யும் இருந்தது (1980 களில்).
இதில் கமபராமாயண பாடல்கள பலவற்றின் சாயல்களைக் காணலாம்.
நல்லதொரு பதிவு யோகன், நன்றி

சோமி said...

நல்ல பதிவு. இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் வரவேற்க்கத்தக்கது.

வெற்றி said...

யோகன் அண்ணை,
பதிவுக்கு நன்றி. இது சும்மா உள்ளேன் ஐயா பின்னூட்டம். இன்னும் பதிபைப் படிக்கவில்லை. வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

விரிவாக இந்தக் கனமான பதிவைப் படித்தேன். அன்னாரின் நினைவு நாளில் இதனை வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்து விட்டீர்கள். அவ்வப்போது என் வானொலி நிகழ்ச்சிகளிலும் இவரின் நினைவுப் பகிர்வை வழங்கியிருக்கிறேன்.

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகன்.. கொழுவி என்று பதில் போட்டவர் உண்மையான கொழுவியாக இருக்கமாட்டது என்பது ஊகம். எதற்கும் யோகன் கொழுவியிடம் விளக்கம் கேட்கவும்.

இவ்வளவு காலமும் இல்லாத போலி பின்னூட்ட நோய் ஈழத்தவர்களிடையும் வர தொடங்கி விட்டது இது மிகவும் வருந்ததக்க விசயம்.. எனது பதிவிலும் பல இது போல வந்தது நான் பிரசுரிக்க வில்லை

கொழுவி said...

யோகன் அண்ணை..
நான் அவதானித்த வரையில எனது பெயர் ரண்டாவது தடவையாக மனவிகாரம் படைத்த சிலரால் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிடப்பட்ட பின்னூட்டத்தினை நான் இடவில்லை. தயவு செய்து அகற்றவும்..

கொழுவியை நன்கறிந்த உங்கள் நண்பர்களுக்கு உண்மை தெரியும்..

ஆகக் குறைந்தது போடா வாடா என்ற வார்த்தைகளை வைத்தாவது உண்மைத் தன்மையை நீங்கள் உணர்ந்திருக்கவில்லையென்பது கவலையளிக்கிறது.

தனிப்பட்ட ரீதியிலும் கிறிஸ்தவ மதத்தினை இவ்வாறு தூற்றியெழுதும் நிலையிலும் நான் இல்லை. :)

குரங்குச் சேட்டைகளில் ஈடுபடும் அன்பர்கள் நண்பர்கள் பெயரில் நாமும் பின்னூட்டம் இடுவது பெரிய வேலையல்ல என்பதை பாசத்துக்குரிய அன்பர்கள் புரிந்து கொள்ளுதல் நல்லது.

யோகன்.. அந்த பின்னூட்டத்தினை நீக்கி விடுங்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புடன் பிரபாவுக்கு!
"கொளுவி" எனும் பெயரில் ஆரோ கொழுப்பெடுத்தது. அண்ணாந்து கொண்டு துப்புது போல உள்ளது.
இதை பலர் வாசித்து இந்தக் "கொழுவியோ"-"கொழுப்பியோ" தேடட்டுமெனத் தான் போட்டேன்.
சொந்த முகம் காட்ட வக்கிலாத "இதுகளை" -என்ன??செய்வது.
தூ!!
உண்மையில் இதைப் பார்த்து எனக்குச் சிரிப்பைத் தவிர எதுவுமே வரவில்லை.இந்த ஆசாமியை நினைக்கப் பரிதாபமாக இருந்தது.
அங்கோடையில் நல்ல வைத்தியம் செய்ய வேண்டும்.
இதன் பெற்றோர் என்ன? பாவத்தைச் செய்தார்களோ?
மன்னிக்கவும் பிரபா!
ஆனாலும் கட்டாயம் நீங்கள் நீக்க வேண்டுமெனக் கருதினால் ,சொல்லவும்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புடன் பிரபா,சின்னக்குட்டியண்ணர்;கொழுவி!
உங்கள் அனைவரின் அன்பான வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து; அந்த "கக்கலை" எடுத்து விட்டேன். எனினும் அந்த "மிருகத்துக்கு" வரலாற்று விளக்கம் எனக்கு நேரம் கிட்டும் போது; கொடுப்பேன்.
உங்கள் பின்னூட்டங்களுக்கு பின்பு பதிலிடுவேன்.
அப் பின்னூட்டத்தை வெளியே விட்டதற்காக தவறாகக் கொள்ளக் கூடாது.இவர்கள் எம்மைப் பயப்படுத்த அனுமதிக்கேன்.!கடவுளாக இருந்தாலும்!
யோகன் பாரிஸ்

Anonymous said...

யோகன், நல்ல பதிவு. தெரியாத பல விஷயங்களைப் பதிந்திருக்கிறீர்கள். மதம் பரப்பும் நோக்கில் வந்த பலர் இப்படித் தமிழுக்கு நல்ல சேவை புரிந்திருக்கின்றனர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியண்ணர்!
ஆம் ,நீங்கள் கூறிய புள்ளி; சுவடியில் எழுதிய காலத்தில் பிய்ந்து விடுமென்பதால்;தவிர்க்கப்பட்டதாம்; அச்சுக் காலமாகிய இவர் காலத்தில் ,அந்த மாற்றத்தைக் கொண்டுவந்தார். அத்துடன் குறில் ;நெடில் போன்றவற்றிற்கும் மாற்றம் கொண்டுவந்தவர் என்பதனையும் அறிந்தேன். 11ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளேன்.
வரவுக்கும்;கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

யோகன்!

பதிவு இன்னும் வாசிக்கவில்லை. ஆயினும் 'தேம்பாவணி' பாடல்களின் தமிழ்ச்சுவையால் இவர் மீது காதல் கொண்டவன். மதம் என்பதற்கும் அப்பால், பாரப்பதற்கும் பயில்வதற்கும், எல்லாவிடத்திலும் நிறையவே உண்டு. ஆனால் என்ன அவற்றைக் கண்டுகொள்ள முதலில் மனசு வேண்டும்.:)

Unknown said...

நான் எட்டு அல்லது பத்தாவது படிக்கும்போது, புரட்சிக்கவிஞர் என்ற தலைப்பில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலிருந்து தமிழ் பேராசிரியர் ஒருவர் பேசினார். பாரதிதாசன் பற்றி வேறொரு பேராசிரியர் பேசியதால் அவர் வீரமாமுனிவரைப் பற்றியும் தேம்பாவணி பற்றியும் பேசினார்.

தேம்பாவணியில், ஒவ்வொரு நிகழ்விலும், அது நடக்கும்போது ஏற்படக்கூடிய ஒலியை, அப்பாடல் வரிகளைப் படிக்கும் போதே உண்டாவது போன்ற வார்த்தைகளை தேர்ந்தெடுத்து போட்டிருந்த அற்புதத்தை விளக்கி, அவ்வோசை நயத்துடன் படித்துக் காட்டினார்.

உதாரணத்துக்கு தேரின் அச்சு முறிவதாக வரும்போது, கடகட,படபட,மடமட என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களை எடுத்தாண்டிருக்கும் இனிமையை விளக்கினார். நெஞ்சில் நிற்கும் பேச்சு.

அந்த ஒலிக்குறிப்புகளை வார்த்தையில் அடக்கிய வித்தகத்தைப் பற்றி தாங்கள் எதுவும் குறிப்பிடவில்லையே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
நான் தவறுதலாக 1928ல் "பரமார்த்த குரு" அச்சிடப்பட்டதாக எழுதிவிட்டேன். அது 1728 லேயே பாண்டிச்சேரியில் அச்சிடப்பட்டது.அப்போது பிரான்சின் காலனியாக பாண்டிச்சேரி இருந்தது. இப்பிரஞ்சுக் கதை பரவக்காரணமாகவும் இருந்திருக்கலாம்.
தாங்கள் தெரியாத தகவல்கள் கிடைத்ததாயின் மகிழ்வே!!
இப்பதிவு போடும் போது யாருமே படிக்கமாட்டார்கள் என நினைத்தேன். எனினும் அவர் நினைவு நாளுக்குப் போடுவோம் எனப் போட்டேன்.சிலர் படித்துள்ளார்கள்.
படித்துக் கருத்துக் கூறியதற்கு நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
ஈழத்தில் 70 களில்; க பொ த சாதாரணதரத்தில்; கத்தோலிக்க மாணவர்களுக்கு "தேம்பாவணி" பாடத்திட்டத்தில் இருந்தது அறிவேன். இந்துக்களுக்கு கம்பராமாயணமும்; இஸ்லாமியர்களுக்குச் சீறாப்புராணம்.
ஆனால் எல்லோருக்குமே எல்லாவற்றையுமே; அழகு தமிழ் எனும் வகையில் சமயத்துக்கு அப்பால்
கற்பித்திருக்க வேண்டும்.
மேலும் கம்பன்;வள்ளுவனின் சாயலின்றி ;பின்னோர் எழுதுவது முடியுமா??
ஆனாலும் அழகுதான்..;அவர் புலமை மெச்சத்தக்கதே!
இவர் வேறு கவிதைகள் தெரிந்தால் பதிவிடவும்.
வரவும்;கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சோமி!
இது பல வருடங்களுக்கு முன் பாரிஸ் தமிழர் கல்வி நிலைய மலருக்கு எழுதியது. இதைப் முனிவரின் நினைவு நாளில் பதி விடுவோம் என நினைத்து வைத்திருந்தேன். இடும் போது சற்று நீளமாக இருக்கிறதே!! படிப்பார்களா? ஒருவர் இருவர் தான் வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நினைப்புக்கு மாறாகப் பலர் படித்ததும்; தாம் அறியாத பல விடயங்களை அறிந்தோமென்பதும்;
மெய்யாக ; இதைத் தட்டச்ச செலவிட்ட நேரத்துக்கு பயனாக அமைந்தது. மகிழ்வே
இந்த உண்மையான வரலாறுகளை நம்மவர்கள் புரிய வேண்டும். விடம் கக்கும் போக்கும்
மாற வேண்டும்.
இதற்கு உங்களைப் போன்றோர்;உண்மைகளை ஆய்ந்து கூறத் தயங்கக் கூடாது.
வரவுக்கும்;கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

NONO said...

நல்ல பதிவு நன்றி!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
இதைப் பதிவாக இடும் போது; நீங்கள் படிக்க வேண்டுமெனவும்;பாடல்களுக்குக் கருத்திடும் போது; சந்தோசப்படுவீர்கள் எனவும் நினைத்தேன். வழமையா இவற்றைக் கேட்டுப் பெறுபவர்.
பதிவைப் படித்துக் கருத்தைக் கூறவும்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//விரிவாக இந்தக் கனமான பதிவைப் படித்தேன்.//
பிரபா!
உண்மையிலேயே! இதைத் தட்டச்ச வெகுநேரமெடுத்தது. அத்துடன் சுருக்கவும் முடியவில்லை. இந்த விடயங்கள் அவர் பற்றிச் சொல்ல வேண்டியவை!; நீளத்தால் படிக்காமல் போய்விடுவார்களோ? என்ற அச்சமும் இருந்தது. அத்துடன் வந்த முதற் போலிப்பெயர்ப் பின்னூட்டமும்; வரலாற்றில் அண்ணா;கலைஞர்;தனிநாயகம் அடிகள் மற்றும் தமிழறிஞர்கள் பூச்சியங்களா? என்ற சந்தேகம் வேறு தந்தது.
உங்கள் பின்னூட்டங்கள் தெம்பைத் தந்தது. இளஞர்களில் நம்பிக்கையையும் தந்தது.
இந்தப் பாற்கடலிலும் விடங்களும் உண்டென்பதே! வருத்தம்.
வரவு,கருத்து;அத்துடன் தெம்பு தந்ததிற்கு மிக நன்றி!
யோகன் பாரிஸ்

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல இடுகைக்கு நன்றி யோகன்-பாரிஸ். தமிழகத்தில் படித்த எனக்கு, தமிழ்ப்பாடத்தில் இவருடைய பாடல்கள் சில வந்திருக்கின்றன. இலங்கையில் கத்தோலிக்க மாணவர்களுக்கு என்று பிறிம்பாக இவருடைய பாடல்கள் படிக்கக் கொடுக்கப்பட்டது வித்தியாசமாக, வினோதமாக இருக்கிறது. எங்களுக்கு கம்பராமாயணம், தேவார திருவாசக திருவெம்பாவை, திருப்பாவை ஆகியவற்றோடு சீறாப்புராணமும் இயேசுநாதர் காவியம் (என்று நினைக்கிறேன்) பாடத்திட்டத்தில் இருந்தன.

வீரமாமுனிவரின் நினைவு தினத்தன்று பதிந்தது நல்ல விசயம்.

-மதி

மலைநாடான் said...

//இலங்கையில் கத்தோலிக்க மாணவர்களுக்கு என்று பிறிம்பாக இவருடைய பாடல்கள் படிக்கக் கொடுக்கப்பட்டது வித்தியாசமாக, வினோதமாக இருக்கிறது.//

இலங்கையிலும், க.பொ.த உயதரம் பழையபாடத்திட்டத்தில், திருக்குறள், திருவெம்பாவை, திருவம்மானை, தேம்பாவணி, என எல்லாம் இணைந்தே இருந்தன.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கனக சிறி அண்ணா!
ஆம்; மதம் பரப்ப வந்தபோதும்;மருத்துவம்;கல்வி;போக்குவரத்து போன்றவற்றில்; அவர்கள், நமக்கு ஆற்றிய பணியையும்;அற்பணிப்பையும் இலகுவில் மறக்க முடியாது. சிறுவனாக இருந்தபோது மேல்நாட்டுக் கன்னியாஸ்திரிகள்; மழலைத் தமிழில்"டம்பிக்கி நோவாமல் போடுவன்" என ஊசி போட்டு;ஒரு தோடம்பழ இனிப்பும் கையில் தந்தது. இந்த வயதிலும் கண்ணில் நிழலாகத் தெரிகிறது.அப்படி ஒரு அரவணைப்பை எம்மினத் தாதிகள் எவரிடமுமே! காணவில்லை.
//தெரியாத பல விஷயங்களைப் பதிந்திருக்கிறீர்கள்//

உங்களுக்கும்;பல விடயங்கள் இதனால் தெரியக் கிடைத்ததென்பது;எனக்கு மிக மகிழ்ச்சி.
இதைப் போடும் போது யாருமே!படிக்கமாட்டார்கள் எனத்தான் எதிர்பார்த்தேன்.
வராதவர் வந்து கருத்துக்கூறியது சந்தோசமாக இருக்கிறது.
நன்றி!
யோகன் பாரிஸ்

செல்லி said...

யோகன்
//இதில் கமபராமாயண பாடல்கள பலவற்றின் சாயல்களைக் காணலாம்.//
சூரியன் தன்னையும்விட யேசு குழந்தை வீதியில் பெரும் ஒளி பரப்பியபடி வருவதைக் கண்டு முகில்களுக்குள் வெட்கி ஒளிந்து கொண்டனாம்.மிகவும் அழகாக வீரமாமுனிவர் வர்ணிக்கிறார் பாருங்கள்! அதாவது நட்சத்திரங்கள் தம்மிலும்விடப் பிரகாசமான சூரிய ஒளியைக் கண்டு வெட்கி மறைவதைப் போல, பால யேசுவின் பிரகாசத்தைக் கண்டு சூரியன் ஒளிக்கிறானாம். இப்படி ஒரு வர்ணனை கம்பராமாயணத்தில் ராமர் ஒளிப் பிளம்பாக வரக் கண்டு சூரியன் முகிலுக்குள் மறைகிறானாம் என்று வருகிறது.

இவை எந்தப் பாடல்களில் என தெரியவில்லை.கிடைத்தால் தருகிறேன்.
இந்த அர்த்ததில்த்தான் கம்பராமாயண சாயல் என்று சொன்னேனே தவிர, குறையாக சொல்லவில்லை. நான் தேம்பாவணியின் கவிநயத்தை வியந்து, விரும்பிப் படித்தவள்.

//கம்பன்;வள்ளுவனின் சாயலின்றி ;பின்னோர் எழுதுவது முடியுமா??
ஆனாலும் அழகுதான்..;அவர் புலமை மெச்சத்தக்கதே!//

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
மதத்துக்கப்பால் நல்லதை மதிக்கும் மனப்பக்குவம் வரவேண்டும். வந்த பலரால் தான் ;பல இனிமைகளை
இன்று நாம் உணர்கிறோம்.
சேக் சின்ன மௌலானாவின் திருப்புகழுக்கு ஈடான வாசிப்பு;என் வாழ்வில் நான் கேட்டதில்லை.
முன்னாள் நீதிபதி மு.மு.இஸ்மைல் அவர்களின் கம்பராமாயண விளக்க உரைகள்;மெச்சத்தக்கவை
அப்துல் ரகுமான்;;;இலக்கியப் புலமை; ஈழத்தில் இப்படிப் பலர்; தனிநாயகம் அடிகளின் தமிழ் இலக்கியப் புலமை,ஆற்றல் இன்னும் இலை மறை காயாக எத்தனையோ;ஆற்றல் மிக்கோர்.
சமயவேறு பாடின்றி தமிழுக்குப் புகழ் சேர்த்துள்ளனர்.
இவர்களைத் தேடி மதிக்கும் காலம் , இந்த இணையத்தால் கைகூடி; வருங்கால இளைஞர் கையில் உலாவுவது; நல்ல அறிகுறியே!
எனினும் சிலதுகள் நஞ்சு கக்குவது வேதனையே!இவை உங்கள் போல் இளைஞர்களால் மாறும்.
ஒரு வேண்டுகோள்! தங்கள் மகளை இதை இத்தாலியில் எழுதவைத்து ,பாடசாலையில் நண்பர்கள் மத்தியில் வாசிக்க வைக்கவும்.
அவர்கள் நாட்டவரின் திறமையைப் புரிவதுடன்; தமிழின் பெருமையையும் உணர ஏதுவாக இருக்கும்.
என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
தேம்பாவணி எல்லாம் உங்களுக்குப் கற்கக் கிடைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.
வரவு கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

G.Ragavan said...

ஜோசப் காண்ஸ்டண்டைன் பெஸ்கி...பிந்நாளில் வீரமாமுனிவர். இவர் தமிழ் மீது காட்டிய ஆர்வம் அளவிட முடியாயது. வேறொரு நாட்டிலிருந்து மொழியிலிருந்து வந்து எடுத்துக்கொண்ட சிரமம் பாராட்டத்தக்கது. மதம் என்ற போர்வை இருந்தாலும் தமிழைக் கொண்டு அதைக் கடக்க முற்பட்டமை பாராட்டத்தக்கது.

இவரது காலமும் திருமலை மன்னரின் காலமும் ஒன்று என்று நினைக்கிறேன். இன்னமும் சரியாகச் சொல்லப் போனால் குமரகுருபர சுவாமிகள் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றிய பொழுது இவரும் இருந்திருக்க வேண்டும் என்று எங்கோ படித்த நினைவு.

சுப்ரதீபக் கவிராயரும் திருமலையின் காலத்தவரே. திருமலை நாயக்கன் காதல் கதை என்று ஒரு நூலை எழுதிக் கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டதாகக் கூடச் சொல்வார்கள். பிறகு அந்த நூலையே கூளப்ப நாயக்கன் காதல் கதை என்று பெயர் மாற்றி விட்டதாகவும் சொல்வார்கள்.

தேம்பாவணியைக் கூட சுப்ரதீபர் எழுதியிருக்கக் கூடும் என்று கூட ஒரு கருத்து உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. அகத்தியர் குழுமத்தில் இயங்கும் மலேசிய ஜே.பீ ஐயாவிடம் கேட்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும்.

G.Ragavan said...

தேம்பாவணியை ஒரு சிறந்த நூல் என்று ஒப்புக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. "குகை செய் இன்பெழக் கோலமிட்டொத்ததே" என்று கவிச்சுவை ததும்பும் நூல். ஆனால் பரமார்த்த குரு கதைகள் சிரிக்க வைப்பதை விட மதப்பணிக்குப் பெரிதும் உதவும் வகையில் இருந்தன என்பது என்னுடைய கருத்து.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

NONO!
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுல்தான் அண்ணா!
தங்கள்;அனுபவரீதியான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். நான் இவரைப் பற்றிய இதைக் குறிப்பெடுத்த தில் பாடல்கள் என இவை மாத்திரமே இருந்தன. அத்துடன் நான் இவர் பாடல்கள் எதையும் என் பள்ளிக்காலத்தில் கற்கமுடியவில்லை.(நான் ஓர் இலக்கிய மாணவன் அல்ல) இப்போது ஆர்வமாக உள்ளது. இவ்விடம் கிடைக்காது. எனினும்
உங்களுக்கு அப்பாடல் கிடைத்தால் எனக்குக் பொருளுடன் மின்னஞ்சலிடவும். சேர்த்து விடுகிறேன்.
வரவு கருத்து யாவுக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மதி!
இது பலவருடங்களுக்கு முன் பாரிஸ் தமிழர் கல்வி நிலைய ஆண்டு மலருக்கு எழுதியது.இதில் போட படிப்பார்களா?? என்ற ஐயம் இருந்தபோது; ஏதேச்சையாக அவர் நினைவு தினம் ;நாட்காட்டியைத் தட்டும் போது தெரிந்ததும்; படிக்கிறார்களோ? விடுகிறார்களோ? போடுவோம்;எனப் போட்ட போது
அது உங்களைப் போன்றவர்களைக் கூடக் கவர்ந்த விடயம் ஆச்சரியம்.
அடுத்து! 70 களில் க.பொ.த சாதாரண தரத்துக்கு,தமிழிலக்கியத்துக்கு இந்துப் பிள்ளைகளுக்கு "தேம்பாவணி" ;இல்லை. இலக்கியப்புத்தகமாக கம்பராமாயணம்;தேம்பாவணி;சீறாப்புராணம் தனித் தனிப் புத்தகமாகவும் இருந்தது.
அத்துடன் என் வகுப்பில் மொத்தம் 5 கத்தோலிக்கப் பிள்ளைகளுக்கு சமயமும்;இலக்கியமும் "ஸ்ரனிஸ்லஸ்" எனும் ஒரு கத்தோலிக்க ஆசிரியரே!பாடமெடுத்ததும்;அதற்காக இந்தப் பாடநேரம் கத்தோலிக்கப் பிள்ளைகள் வகுப்பு மாறுவதும்; கண்டவன் என்பதால் கூறுகிறேன்.
நான் விஞ்ஞான மாணவனாக இருந்தபோதும்;என் நண்பனின் இலக்கியப் புத்தகம்(கம்பராமாயணம்) வாங்கிப் படித்துள்ளேன்.தேம்பாவணியோ,சீறாப்புராணமோ அந்த வயதில் கிட்டவில்லை. சிந்திக்கவும் இல்லை
ஆனால் மலை நாடரில் கூற்றுப் படி பிற்காலத்தில்; பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டது; புத்தகங்களே!
மாறியது.
என் இளமைக்காலம் உமாவாசகம் 1 - 5; பின் தமிழ்மலர் 6 - 10; இது பிற்காலத்தில் தமிழ் 1 - 10
என மாறியதை நீங்கள் ;அறிந்தீர்களோ? தெரியவில்லை. அக்காலக் கட்டத்தில் இந்த நல்ல நோக்குடைய மாற்றத்தையும் யாரோ அனுமதித்துள்ளார்கள்.
எனினும் இலக்கியத்தையும்; தமிழின் செழுமையையும் மதத்துக்கப்பால் தரிசிக்கும் ,உன்னதத்தை ; எம் சிறார்களுக்கு உணர்த்துவது நன்றே!
தங்கள் வரவு கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்

வசந்தன்(Vasanthan) said...

அருமையான பதிவு.

இவர்தான் இப்போதைய 'ஈ'யன்னாவை அறிமுகப்படுத்தியவர் என்றும் தகவலுண்டு. இ என்பதன் விசிறியில் ஒரு சுழி போட்டுத்தான் நெடில் பயன்பட்டதாகவும் இவர்தான் இந்த வடிவத்துக்கு மாற்றியதாகவும் அத்தகவல் சொல்கிறது. உறுதிப்படுத்த முடியவில்லை. இம்மாற்றம் தமிழுக்குக் கெடுதலாகவும் கருதப்படுகிறது.

நிற்க,
குதிரையைப் பற்றி வரும் பாடல் தென்னாலி இராமனுடைய குதிரையைப் பற்றிய பாடலாகவே அறிந்தேன். அப்படித்தான் பாடசாலையில் சொல்லித்தரப்பட்டதாக ஞாகபம். பாடலிலும் இராமன் பெயர்தான் வருகிறது. தெளிவுபடுத்தவும்.
பரமார்த்த குருவும் தென்னாலி இராமனும் வெவ்வேறு பாத்திரங்கள்தானே?

தமிழுக்குத் தொண்டாற்றியவருள் சுவாமி ஞானப்பிரகாசரும் மிகமிக முக்கியமானவர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
மேலும் புதிய அறியாத் தகவல்கள் தந்துளீர்கள். தேம்பாவணியை ,இவர் பெயரில் வெளியிட ஏதாவது
சிறப்புக் காரணம் உண்டா? ஆனால் மொழிகளைக் கற்க அவர் எடுத்த ஆர்வம்; வேற்று மொழிகளில் அவரின் புலமையைப் பார்க்கும் போது; இவரால் ஏன்? முடியாது எனும் சந்தேகம் வருகிறது.
இவற்றை அறிதியிட்டுக் கூற முடியாத ஊகமெனக் கொண்டு; இவற்றின் அழகையும் ஆழத்தையும் உணர்வோம்.
அறிதியுட்டுக் கூறினால் மறுப்பதற்கில்லை.
ஆம்! பரமாத்த குரு! ஐரோப்பியாவிலே கூட ;நகைச்சுவை நீதிக் கதைகளாகவே!கொள்ளப்படுகின்றன.
எனினும்; குதிரை முட்டை; நெருப்புக்கொள்ளியும் ஆறும்;காகமும் வடையும் மறக்கக் கூடியவையல்ல!
பிரான்சில் சுமார்; 15 வருடங்களுக்கு முன் Jean de la Fontaine சிறப்பு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தபோது; இக் கதைகள் உலகம் பூரா ரசிக்கப்படுவதை அறிந்தேன்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வசந்தன்!
"ஈ" பற்றியது அறியாத் தகவல்; இருக்கலாம்! அப்போது ஒரு நோக்கத்தோடு செய்திருப்பார்கள்; இப்போது பொருத்தமின்மை இருக்கலாம்.
நீங்கள் குறிப்பிடுவது போல் "குதிரை" பற்றிய பாடல்; தென்னாலி ராமனுடையதாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
இந்த ஆக்கத்துக்குக் குறிப்பெடுத்தபோது; இப்படியே இருந்தது. என் பள்ளி நாட்களில் பாடலாகப் படிக்கவில்லை. கதையாகவே படித்தேன்.
பரமார்த்த குரு- ஐரோப்பிய உருவாக்க வடிவம்; தென்னாலி ராமன் - இந்திய உருவாக்க வடிவம்
சந்தேகமில்லை.ஆனால் முனிவர் ;தென்னாலி ராமன் கதையை பாடலாப் புனைந்திருக்கலாம்.
இப்பாடல் பற்றி உங்கள் கருத்துச் சரியானது.(விகட ராமன் எனும் சொல்)ஊகம் சரி!
தமிழுக்குத் அரும் பணியாற்றியவர்களில் "ஞானப்பிரகாசரும்" மிக முக்கியமானவர்.சந்தேகமேன்!
முடிந்தால் பதிவொன்று போடுங்கள்.
வரவு புதிய தகவல்களுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. இந்த நீண்ட கட்டுரையை பல நாட்களுக்கு முன்பே அச்சுப்பிரதி எடுத்துப் படித்துவிட்டேன். நீண்ட கட்டுரை என்றாலும் நன்கு எழுதப்பட்டிருப்பதால் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். மிக நல்ல இடுகை. முன்பு நீங்கள் வலைப்பதிய வருவதற்கு முன்பு ஒரு நல்ல கட்டுரையை எனக்கு அனுப்பி என் பதிவில் நானும் இட்டேனே; அந்த கட்டுரை நினைவிற்கு வந்தது இந்தக் கட்டுரையைப் படித்த போது. தேம்பாவணியில் சில செய்யுள்களைப் பள்ளியில் படித்ததோடு சரி. விரைவில் படிக்க வேண்டும். இப்போது தான் கம்பராமாயணத்தையே கையில் எடுத்திருக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்புக் குமரன்!
நீங்கள் எழுதும் வேகத்துக்கு வாசிக்கவும் நேரம் கிடைப்பது சிரமம். அதுவும் சேந்தனுடன் இதையெல்லாம் கவனிப்பது ஆச்சரியமே!
சில வாழ்க்கைக் குறிப்புக்கள் சுருக்கமாக எழுதும் போது கூட நீண்டுவிடும். ஆர்வலர்கள் படிப்பார்கள்; அந்த வகையினர் ;உங்களைப் போல் படித்து மகிழ்ந்துள்ளார்கள்.
தேம்பாவணியில் கம்பர் தாக்கம் உள்ளதென்பது; பலர் அப்பிராயம். அது தவிர்க்கமுடியாதது.
கம்பராமாயணம்;இணையத்தில் உரையின்றியே உள்ளது.அப்படியும் சில பாடல்களைப் படிப்பேன்.
இதுவும்; உங்கள் பதிவில் வந்த என் முதற் கட்டுரைபோல் ;இங்குள்ள பாடசாலை ஆண்டு மலரில் வந்தது தான்.
வரவுக்கும் ;தங்கள் கருத்துக்கும் நன்றி!